இந்தக் கிணற்றிலா நிலவு முகம் பார்த்துக் கொள்கிறது? – நா.வே.அருள்



இந்தக் கிணற்றிலா

நிலவு முகம் பார்த்துக் கொள்கிறது?

******************************************

இயற்கைக்கு விரோதமான எந்த விஷயமும் மேலானதல்ல

இயற்கையின் விதிகள்

சுயநலச் சட்டத்தின் சுருணையானதில்

பூமியின் நோக்காடு கொஞ்ச நஞ்சமல்ல.

 

கொலையும் அப்படித்தான்

ஒரு உயிரை நீக்குவதற்கான அவசியம்

அடிப்படையில் அவமானகரமானது.

 

மனிதச் செடியில் மலர்ந்திருக்கும் இதய மலர்

எவ்வளவு சுகந்தமானது

குருதி வீச்சம் தாங்க முடியாதது.

 

பீடிக்குக் கூட ஒரு கொலை நடந்துவிடுகிற சமூகத்தை

என்ன செய்யலாம்

குற்றங்களின் வலைப்பின்னல்

செங்கோலின்மேல் ஒரு சிலந்திவலையைக் கட்டுகிறது.

 

கொலையைச் செய்வதைவிட துரோகத்தின் உச்சமானது

கொலையை நடத்துவது

கொலையை நடத்துகிற குற்றத்திற்காக

அவளது மகனை

அவள் பிள்ளையேயில்லை என்று மறுதலிக்கிறார்கள்

வரலாற்றின் மூதாட்டியை

அந்தத் தள்ளாத வயதிலும்

மீண்டும் கருவுறச் செய்கிறார்கள்.

 

ஒரு கொலையை நடத்துவதற்கான வரலாற்றின் குறுக்குவழி

இதுதான்.

கொலையை வெறுக்கிற நேர்வழியை மறந்ததினால்

மனிதன்

குற்றங்களின் கிணற்றில்

தவளையைப்போலக் கத்திக் கொண்டிருக்கிறான்!

 

நா.வே.அருள்