நா.வே.அருள் எழுதிய “கிராம்சி புரண்டு படுக்கிறார் (அரசியல் கவிதைகள்)” புத்தகம் | Na.Ve.Arul's Gramsci Purandu Padukkirar Tamil Book Review | www.bookday.in

நா.வே.அருள் எழுதிய “கிராம்சி புரண்டு படுக்கிறார் (அரசியல் கவிதைகள்)” – நூல் அறிமுகம்

கவிஞர் நா.வே.அருள் எழுதிய “கிராம்சி புரண்டு படுக்கிறார்” எனும் அரசியல் கவிதைகள் தொகுப்பு நூலுக்குள் நுழையும் முன்பாகவே ஜியார்ஜியா நாட்டுப் பெண் கவிஞரின் மேற்கோள் இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடியும். அதன் உட்பொருள் அவலங்களைக் கண்டு விரக்தியின் விளிம்பில் நின்று வீழ்ந்து விடாமல் இருத்தலுக்கான போராட்டத்தை நடத்த வாழ்வது அவசியம் என்பதாகும். ஆம். அந்த நம்பிக்கையில்தான் மனிதகுலம் வாழ்ந்து வருகிறது.

“எல்லாவற்றிற்குப் பின்னும் ஒரு வர்க்க நலன் இருப்பதை வெளிப்படுத்த பல்வேறு சமூக நிகழ்வுகளைப் பாடுபொருளாகக் கொண்டு கவிதைகளாக்கி உள்ளார்” என அணிந்துரையில் அபுதாபி ஜமாலன் கூறியுள்ளது பொருத்தமானதே.

இந்நூலில் இடம் பெற்றுள்ள 47 தலைப்பிலான கவிதைகளும் நேர்த்தியாக படைக்கப்பட்டுள்ளன.
கவிதைக்கான சொற்களுக்காக சிரமப்படாமல் சரளமாக வந்து விழுகின்றன தேவையான சொற்கள். அதே சமயம் தேவையற்ற சொற்கள் என்று எதையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் அதே நேரத்தில் சில கவிதைகளை சாதாரண வாசகர்களால் புரிந்து கொள்ள முடியுமா என்ற ஐயம் எழத்தான் செய்கிறது. அன்றாட அரசியல் சமூக நிகழ்வுகளை அக்கறையுடன் உள்வாங்காதவர்களால் இந்நூலின் கவிதைகளை உள்வாங்கிப் புரிந்து கொள்வது கடினமே.

கவிஞரின் எழுத்துத் தவம் குறித்த கவிதையின் முடிவு

“உழவனின் தோளில் கலப்பையாய்
பாட்டாளி கையில் ஸ்பேனராய்
தொட்டுத் தொட்டு எழுத இதயமே மைக்கூடாய்
எழுத்துகள் காதலர்களின் கண்களால்
கடையக் கடைய கவிதாமிர்தம் தரும்
ஆழ்கடலாய்
அப்படியான ஓர் எழதுகோலுக்காகத்தான் தவமிருக்கிறேன்”

இவ்வாறாக இருப்பதில் இருந்தே கவிஞரின் ஆழ்மனதைப் புரிந்து கொள்ள முடியும்.

சர்வாதிகாரம் எவ்வாறு இருக்கிறது என்பதை உள்ளுறை உவமமாக கீழ்க்கண்டவாறு கவித்துப்படுத்துகிறார் கவிஞர் அருள்.

“சர்வாதிகாரத்தின் சமையலறையில்
சிறையிலடைக்கப்பட்ட சிலைகள்
இடிக்கப்பட்ட மடாலயங்கள்
எரிக்கப்பட்ட புத்தகங்கள்
அம்பேத்கரின் பிணக்கூராய்வுகள்
பல்குச்சிகளாய் உடைக்கப்பட்ட
பெரியாரின் கைத்தடிகள்
உச்சி வெயிலில்
நன்கு உலர்த்தப்பட்ட இதய உப்பு மீன்கள்”

சர்வாதிகாரத்தின் கசாப்புக் கடை எனும் கவிதை துப்பாக்கி வடிவில் சுடுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘சர்வாதிகாரத்தின் சவக்கிடங்கு’ எனும் தலைப்பிலான கவிதையில்,

“காந்தியின்
குரங்குப் பொம்மைகளுக்கெதிரில்
கருகிய
நாற்பத்து நாலு
மரண மரப்பாச்சிகள்”

எனக் குறிப்பிடுவதை அறிந்து கொள்வது ஆழ்ந்த அரசியல் ஞானமில்லாமல் முடியாது. நிலப்பிரபுத்துவ சர்வாதிகாரத்தால் கீழ்வெண்மணியில் எரிக்கப்பட்ட 44 வெண்மணியின் கண்மணிகள் குறித்த ஞானம் இன்றளவிலும் எவ்வளவு பேருக்கு உள்ளது என்பது கசப்பான உண்மை.

இன்றைய தேசம் மரணத்தின் விளிம்பில் உள்ளதை,

“கமண்டலத்தில்
வாரணாசியில் கங்காஜலம்
கட்டைவிரல் ஆலைகளில்
துரோணர்களுக்குத் தொழிற்பயிற்சி
ஆரஞ்சு நிற ஒத்திகையில்
கறுப்பு,சிவப்பு,பச்சை,நீலத்தின்
சாயம் கரைக்கும் விஷச் சலவை.
ஜன்னலில்
தேசத்தின் மரணம் ஒரு பூனையைப் போல
எட்டிப் பார்க்கும்”

எனக் குறிப்பிடுவதை எப்படி எளிதாகக் கடந்து போக முடியும்?

கடவுள் சிறையில் சிக்குண்டு அதன் நீட்சியாக பகுத்தறிவின்றி அரசியல் சமூக பொருளாதார பிற்போக்கு வலைப்பின்னலில் உள்ள மனிதனைப் படம் பிடித்து, எல்லாவற்றுக்கும் காரணமான கடவுள் சிறையைக் குறிப்பிட்டு “சிறையிலிருந்து விடுவி” என கடவுளிடமே வேண்டுகோள் வைப்பது நகை முரண்.

“மென்று தின்னப்பட்ட சவ்வு மிட்டாய்களுக்கு
என்ன சுய வரலாறு?”

“யானையின் கால்களால்
முத்தமிடுப்பட்டு
இறந்த எறும்புகள்”

இப்படி சாதாரண காட்சிகளைக் காத்திரமான கவிதைகளாக்கிய பெருமை கவிஞர் அருளையே சாரும்.

சட்டங்களின் ஓட்டைகளிலிருந்து தப்பிக்கும் கொடுங்குற்றவாளிகளை எலிகளாக்கி,

“சட்டங்களின் துவாரங்களை
எலிகள் அறிந்திருந்ததால்
சட்டப் புத்தகங்களில்
அரண்மனை கட்டி அரசாளுகின்றன” என்கிறார் கவிஞர் நா.வே.அருள்.

“அநீதியைக் கண்டு எது கிளர்ச்சி செய்கிறதோ அதுவே ஜீவன். மற்றவை ஜடம்” என்பார் சுவாமி விவேகானந்தர். ஆனால் ஆள்வோர்,

“திரும்பத் திரும்ப பேரம் பேசுகிறார்கள்
அமைதிக்கு
மலிவான விலை குறிக்கிறார்கள்”

என்பது அர்த்த அடர்த்தி மிக்கது. எனவேதான்,

“அமைதியின் விலை
கட்டாயப்படுத்தப்பட்ட
மௌனம்”
என்கிறார் நூலாசிரியர்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பெருமைக்குரிய நாம் வேங்கை வயலில் சிறுமைப் பட்டுப் போனோம். அது திண்ணியத்தையும் நினைவுகூரச் செய்கிறது. அதற்கான கவிதையின் முடிவு வித்தியாசமானது.

“இறுதி மரியாதை செலுத்தும்
நாள் – 21.12.2022 – இடம் வேங்கைவயல்
வழி – திண்ணியம்
பேருந்து நிறுத்தம் – சநாதனம்”

தொடரும் ஆணவக் கொலைக்கான கவிதையில்
“முகங்களில்
பயத்தின் லிபியில் எழுதியிருந்தது
துரத்துபவர்களின் வேட்டை வெறி”
எனும் வரிகள் வாசிப்போரை சஞ்சலப் படுத்தும் என்பதில் ஐயமில்லை.

கவிதைகளுக்கு உவமைகள் அழகு சேர்ப்பன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல,

“உலையில் சிவந்த இரும்புத் துண்டு
தண்ணீருக்குள் இடுவதைப் போல
இதயத்திற்குள் ஒலியெழுப்பி
இறுகும்”
என்பதைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

நூலின் தலைப்பு ஆங்காங்கே சில கவிதைகளில் எட்டிப் பார்க்கின்றன. இருப்பினும் “கிராம்சி புரண்டு படுக்கிறார்” எனும் தலைப்பிலான கவிதைகளைத் தனியே உலவ விடுகிறார் கவிஞர் அருள்.

“அந்தோணியா கிராம்சி
தன் கல்லறையில்
புரண்டு படுக்கையில்
உலக மூலையில்
ஒரு கலகம்”

என்பதற்கான ஆதாரங்கள் தான்

“கிராம்சியின் கல்லறையில்
கணக்கற்றுச் சுழலும்
கவிதைச் சூரியன்கள்”

நூலாசிரியரின் கவிதைச் சூரியன்களும் அவற்றுள் சுழன்று வருகின்றன மாற்றத்துக்கான வேட்கையுடன்.

இக்கவிதை நூலைச் சிறப்பாகப் பதிப்பித்துள்ள பாரதி புத்தகாலயத்திற்குப் பாராட்டுக்கள்.
இந்நூலை வாங்கிப் படிக்க வேண்டியதும் பாதுகாக்க வேண்டியதும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவசியம்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“கிராம்சி புரண்டு படுக்கிறார் (அரசியல் கவிதைகள்)”
ஆசிரியர்:நா.வே.அருள்
வெளியீடு:
 பாரதி புத்தகாலயம்
விலை:₹.160
அறிமுகம் எழுதியவர்:  
✍🏻 பெரணமல்லூர் சேகரன்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *