நண்பனின் தங்கைகள்
அண்ணன் குளிச்சுட்ருக்கு.உள்ள வந்து உட்காருங்கண்னே.நம் கூச்சத்தை போக்க எதையாவது பேசுகிறார்கள். கேட்ட பாட்டு, கல்லூரி சண்டை என. இந்த வருசமாச்சும் பாஸாகிடுவீங்களாண்ணே என சீண்டுகிறார்கள்.
அண்ணே நான் தவளை வரைஞ்சா முதலை மாதிரி இருக்கு, பயாலஜி ரெக்கார்டு நோட்டுக்கு வரஞ்சு தாங்கணே.
பார்த்து கொண்டிருக்கையிலே சட்டென வளர்ந்து, திடீரென ஒரு நாளில், ஏதோ ஒரு மண்டபத்தில் தாலி கட்டிக்கொண்டு கண்கலங்கி விடை பெறுகிறார்கள்.
பயணிகள் இறங்கிய வெறுமையான ரயில் பெட்டி போலும், மலைக்குகையின் மௌனத்துடனும், பறிக்காது முற்றத்தில் சிதறிக்கிடக்கும் பவழ மல்லியுடனும் நண்பனின் வீடு நம் முன் நிற்கிறது.
*எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது*
{பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது நமக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கும்பலாக அண்ணனோடு வரும், நம் அண்ணனின் நண்பர்கள் சூழ வாழ்ந்த தங்கைகள் பாக்கியசாலிகள்.
தெருவில் நாம் நடந்து போக சம்மதிக்காதவர்கள். எங்கடா பாப்பா போகனும் வாயா, வண்டில உட்காருயா, என வாய்நிறைய அழைக்கும் உடன்பிறவா அண்ணன்கள் கிடைக்கப்பெற்ற தங்கைகள் பாக்கியசாலிகள்.
நம் திருமணத்தன்று, நாள் முழுதும் வேலை செய்து, கடைசி பந்தியில் இருந்ததை மட்டும் சாப்பிட்டு, சீர்வரிசையை வண்டியிலேற்றி, அண்ணனோடு சேர்ந்து கண்கலங்க வழியனுப்பும் அண்ணனின் நண்பர்கள் கிடைக்கப்பெற்ற தங்கைகள் பாக்கியசாலிகள்.
நம் குழந்தைகளை, அவர்கள் தலைக்குமேல் தூக்கி போட்டு விளையாடும் அண்ணனும் அவர்தம் நண்பர்களும் வாய்க்கப்பெற்ற தங்கைகள் பாக்கியசாலிகள்-தமிழ்மதி)
புத்த(க)யா
புத்தகத்தை வாங்க இயலாது கால் வலிக்க நின்று கொண்டே புத்தகம் படித்தது.
மாற்றான் அலமாரி புத்தகத்திற்கு மணம் அதிகம். உரத்த குரலில் ஒரு ரகசியம். நான் படித்த புத்தகங்களில் பாதி ‘அடித்த’ புத்தகங்கள் தான்.  🙂
கரையான்கள் தான் புத்தகங்களை சரியாக விமர்சிக்கின்றன.
கோடு போட்டு படிக்கிறவர்கள் எங்கேயோ இருக்கிம் எழுத்தாளனோடு இங்கிருந்தே கைகுலுக்குகிறார்கள்.
Aana Aavanna
பாட்டி சொல்லாத கதை
புகைப்படம் எடுக்காத தாத்தா, இறந்த பின் அவரது எக்ஸ் ரேயை வைத்து சட்டமிடப்பட்டு மாட்டியதால், நண்பர்களின் கேலிக்குள்ளானது.
செல்லரித்துப்போன அதைப் பார்த்து அப்பாவின் நண்பர் இது என்ன நவீன ஓவியமா எனக் கேட்ட போது தாத்தாவை நினைத்து பாவமாக இருந்தது.
அந்த புகைப்படம் பரணுக்கு போன முந்தைய நாளில் பாட்டி ஓவென்று சத்தமாக கத்தினாள்.
“இந்த எலும்புக்கா இத்தனை ஆட்டம்”.
தம்பியின் நாட்குறிப்பிலிருந்து
அண்ணன் பயன்படுத்திய புத்தகம், ஆடை, புத்தகப்பை, ஷூ, செருப்பு, ஜியாமெட்ரி பாக்ஸ் தானே எல்லா தம்பிகளுக்கும்.
தம்பியாக இருப்பதன் கஷ்டம் தம்பிகளுக்கு தான் தெரியும். 🙁
ஆதிப்பிரசவம்
ஒவ்வொரு புத்தகத்திலும் வைத்த மயிலிறகு குட்டி போட்டதா?
என்ன செய்தது.
கணக்கு புத்தகத்தில் வைத்த மயிலிறகு முட்டை போட்டது. 🙂
அறிவியல் புத்தகத்தில் வைத்த மயிலிறகு கர்ப்பப்பை வேணாமென குடுவைகள் கேட்டது. (க்ளோனிங்?)
ஆங்கில புத்தகத்தில் வைத்த மயிலிறகு, அழகு கெடுமென அபார்சன் செய்து கொண்டது.
வரலாற்று புத்தகத்தில் வைத்த மயிலிறகு, காலச்சக்கரத்தின் பின்னோக்கி சென்று டினோசராகி விட்டது.
புவியியல் புத்தகத்தில் வைத்த மயிலிறகு நிலம், நீர், காற்று நஞ்சானதால் தற்கொலை செய்து கொண்டது.
ஆனால் தமிழ் புத்தகத்தில் வைத்த மயிலிறகுக்கு என்னவாயிற்று என தெரிய வேண்டுமா?
நா.முத்துகுமாரின் அ’னா, ஆவன்னா வாங்கி படியுங்கள்.
45 பக்கங்கள் மட்டுமே
Na. Muthukumar best songs - YouTube
பெண்களுக்காக
ஏன் எல்லா பெண்களுமே தலையணை உறைகளில் ஜோடி வாத்துகளையே எம்பிராய்டரி செய்கிறார்கள்.
வாத்துகள் பேசிக் கொண்டன தமக்குள்.
வாத்துகள் தானே ரெக்கைகள் இருந்தும் அதிக உயரம் பறப்பதில்லை. பிறந்த வீடு, புகுந்த வீடு என பெண்களைப் போலவே தண்ணீருக்கும் தரைக்குமாக அலைபாய்வதே வாத்துகளின் வாழ்க்கை. 🙁
தாயம் ஆடும் பெண்கள்
சமையல், தாயம், சமையல், வெறுமை என நகரும் பெண்களின் வாழ்க்கையை விவரிக்கிறது.
மனம் உணர்தல்
ஒழுங்குபட்டதாய் காட்டிக் கொள்ளும் மனங்களைக் கேள்வி கேட்கிறது
வாழ்ந்து கெட்ட வீடு
ஒரு துன்பியல் நாடகம். 🙁
அன்பின் நா.முத்துகுமார் அவர்களுக்கு,
நீங்கள் அணுசக்தி விஞ்ஞானி ஆகவில்லை ஆதலால் அ’னா ஆவன்னா எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கவிதை சமைத்து இருக்கிறீர்கள்.
நீங்கள் உங்கள் கவிதைகளின் மூலமாக, எத்தனை எத்தனை உள்ளங்களில் வாழ்கிறீர்கள் தெரியுமா. என்ன பெரிய அணுசக்தி விஞ்ஞானி. அழிப்பதை விட ஆக்கம் சிறந்ததல்லவா!! அதுவும் கவிதை!! அங்கே கடவுளுக்கும் கவிதை சொல்லிக் கொண்டு, பட்டாம் பூச்சி பிடித்து விளையாடுங்கள். உங்கள் கவிதைகளை கொண்டாடும் எங்களையும் வேடிக்கை பார்த்து கொண்டே இளைப்பாருங்கள்!!
அன்புடன்
– தமிழ்மதி
புத்தகம்: அ’னா, ஆவன்னா
ஆசிரியர்: நா.முத்துக்குமார்
வெளியீடு: பட்டாம்பூச்சி பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *