"நாடு" - சினிமா விமர்சனம் { Naadu movie review }

சக்ரா & ராஜ் இணைந்து தயாரித்து எம் சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், நடித்து நவம்பர் 2023இல் வெளிவந்த திரைப்படம் “நாடு”. தற்போது ஓடிடி தளத்தில் பார்க்கலாம். எங்கேயும் எப்போதும்’, ‘ இவன் வேற மாதிரி’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் சரவணன்.. இத் திரைப்படத்தில் சிங்கம்புலி, ஆர் எஸ் சிவாஜி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கொல்லிமலையில் உள்ள தேவநாடு என்ற ஒரு சிறு மலைவாழ் கிராமத்தில் மருத்துவமனை இருந்தும் மருத்துவர்கள் யாரும் வராத காரணத்தால் நிறைய உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இதனால் கிராம மக்கள் போராடி ஒரு மருத்துவரை வர வைக்கின்றனர். மருத்துவராக வந்த மகிமா நம்பியார் அந்த ஊர் மக்கள் சிலரது உயிரை காப்பாற்றுகிறார். இதனால் அந்த ஊர் மக்கள் அவரை தெய்வமாய் பார்க்கின்றனர். அவரும் அவர்களது அன்பைப் புரிந்து கொள்கிறார். ஆனால் தனக்கு திருமணமாகிவிட்டால் தான் கணவரின் ஊருக்கு செல்லவேண்டியதிருக்கும் என்கிறார். அவரை இந்த ஊரை விட்டு அனுப்பக் கூடாது என்று அந்த கிராமத்து மலைவாழ் மக்கள் முடிவு செய்து பலவாறு திட்டமிடுகின்றனர். ஆனாலும் இறுதியில் அவர் செல்லவேண்டியதாகிறது. இதுதான் கதை.

இப்படியும் சில மலை கிராமங்கள் உள்ளது என்று நம் கண் முன் காட்டி கண் கலங்க வைத்துள்ளார் இயக்குனர் எம் சரவணன். ஒரு நாட்டுக்கு மருத்துவர் எவ்வளவு முக்கியம் என்பதை நாடு திரைப்படம் மூலம் பேசியுள்ளார். தேவநாடு மலை வாழ் கிராமத்தை தன் கேமரா கண்களால் அழகாக நம் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் சக்திவேல். இது வெப் துனியா எனும் வலைத்தளப் பதிவு.(“நாடு” திரை விமர்சனம்! – Nadu movie review | Webdunia Tamil)

இனி நம்முடய பார்வையில் சில கருத்துகளை சொல்லலாம். நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஒரு மாணவி தற்கொலை செய்துகொள்ளும் காட்சியுடன் தொடங்கும் படம் அதற்குப் பிறகு சாதாரணக் கதையாகிப் போனது ஒரு சோகம்.

ஒரு ஆவணப்படமாக இல்லாமலும் அதே சமயம் நாயக நாயகி மய்யப்படுத்தப்பட்ட வழக்கமான பாதையில் செல்லாமலும் இருப்பதற்கு பாராட்டலாம். ஊர்ப் பெரியவர் ராமன் இருக்கும்வரை தான் அந்த ஊரைவிட்டு போகமாட்டேன் என்று மருத்துவர் கூறுகிறார். பெரியவர் இறந்து விடுகிறார். அதை மறைத்து அவரைப் போலவே இருக்கும் அவரது தம்பியை தேடிப் பிடித்து கொண்டு வருவது; மருத்துவருக்கு திருமணமானால் ஊரை விட்டு போக வேண்டியதிருக்கும் என்பதால் அவரை யாராவது காதலித்து திருமணம் செய்து அங்கேயே தங்க வைக்கலாம்; போன்ற சில அபத்தமான காட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் அவையெல்லாம் நடைபெறாமல் வாழ்க்கையின் எதார்த்தம் மேல்கை எடுப்பதால் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிடலாம். பல இடங்களில் வழக்கமான தமிழ்ப் பட பாணியில் போகும் அபாயம் இருந்தும் இயக்குனர் அதையெல்லாம் தவிர்த்து விடுகிறார். எடுத்துக் காட்டாக நாயகனாக வரும் ஊர்த்தலைவனின் மகனுக்கும் மருத்துவருக்கும் காதல் மலரும்; அல்லது ஒரு தலைக் காதலாவது காட்டுவார்கள். மாவட்ட ஆட்சியரின் வீட்டில் நடக்கும் விருந்தில் அவன் அவமானப்படுத்தப்படுவான். கதாநாயகி வந்து அவன் சார்பாக பேசுவாள். அல்லது அவன் அத்தனை பேரையும் அடித்துப் போடுவான். இந்த திரைப்படத்தில் இதெல்லாம் நடக்கவில்லை.

மாவட்ட ஆட்சியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு பாத்திரத்தை படைத்துள்ளார். ஆனால் அவரது நல்லெண்ணமோ கிராம மக்களின் வெள்ளந்தியான அன்போ பிரச்சினையை தீர்க்கவில்லை. அதோடு கதை நின்று விடுகிறது.அதற்கு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது இப்போதுள்ள மக்களுக்கு தெரியும். அதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

எழுதியவர் 

ரமணன்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *