நூல் அறிமுகம்: *நாளை காணாமல் போகிறவர்* கவிதைத் தொகுப்பு ~விபீஷணன். 

நூல் அறிமுகம்: *நாளை காணாமல் போகிறவர்* கவிதைத் தொகுப்பு ~விபீஷணன். 



நூல்:- நாளை காணாமல் போகிறவர்
ஆசிரியர்: இரா. கவியரசு
வெளியீடு: தேநீர் பதிப்பகம்
கவிதை பேசுகிறது
முதல் கவிதையான அலகிலா துவைத்தலில்  துவங்கியே அதீத கனவின் வெளிப்பாடுகளும் இன்றி அதே நேரத்தில் வறண்ட தன்மையும் இன்றி நிதர்சனங்களுடன் சற்று கற்பனை கலந்த சீரான கவிதைகள் இடம்பெற்றிருப்பது  இத்தொகுப்பின் சிறப்பு.
பல கவிதைகள் இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் மெல்லிய கோடு வரைந்து இணைக்கின்றன. எதிர்காலம் என்பது நிகழ்காலமாகவே வரும் என்கிற முதிர்ச்சி கவிதைகளில் காணப்படுகின்றன. முதல் கவிதையே அம்மா துவைப்பதையும் வாஷிங் மிஷினையும் வெறும் ஒரு ஒப்பீடு அளவின்றி உணர்வு ரீதியிலாக இணைக்கிறது.
 காடாக மாறும் ஊர் என்ற கவிதை
“ஊருக்கு அடிக்கடி வராதவன்
நினைவின் தண்டவாளத்தில்
தினமும் ஊரை ஓட்டுகிறவன்” 
என்ற வரிகள்  இடத்தையும் காலம் கடந்த தன்வயப்படுத்தலின் வெளிப்பாடாக இருக்கிறது.
கவிதைகளின் இயங்குதளங்கள் பெரும்பாலும் கிராமங்களுக்கும் பெருநகரங்களுக்கும் நடுவில் இருக்கும் நகராட்சி நிலை இடங்களை அதிகமாகக் கண்களுக்கு முன் விரிக்கின்றன.
கவிதைகளில் பல மனிதரின் கருத்தியல் மற்றும் உணர்ச்சி சார்ந்த பார்வைகள் சரியான முறையில் கையாளப்பட்டிருக்கிறது.
மாடலிங் மனிதன் என்ற கவிதையில் மாடலிங் செய்யும் இளைஞனின் உணர்ச்சிகளையும் அவனுடன் இருக்கும் பிற மனிதரின் சிந்தனைகளும் சமநிலை பெறுகிறது.  திரும்பி அமர்ந்திருப்பவள் என்ற கவிதையில் இந்தக் கையாளுதலைக் காணலாம்.

உறவுகள் பெரும்பாலான கவிதைகளில் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. சிலவற்றில் அவை மெதுவாகக் கடந்து செல்கின்றன.
விளையாட்டுத் திடல் என்ற கவிதையில் சில வரிகள்
” இருபுறம் ஒதுங்கும் மண்ணை
முத்தமிடுகிறார்கள் சகோதரர்கள்
குத்திட்டு அமர்ந்திருக்கும்
தந்தையின் கால்களுக்கு இடையில்
பிளந்து நிற்கிறது பூமி
குழிகளில்
கற்களை புதைப்பதற்காக
சகோதரர்கள் விரையும் போது 
வளைந்து வளைந்து ஓடும் தந்தை
முள்வேலி கட்டியபிறகு
இறகுப்பந்தாக மாறுகிறார்”
வரிகள் எளிமையாக இருப்பினும்
பொருள் அழுத்தமாக இருக்கிறது.
முழுமையாக வாழ்ந்துவிட்ட நாள் என்ற கவிதையிலும் இதைக் காண முடிகிறது.
சிறந்த கவிதைகளில் முதன்மையானதாக மற்றும்  நெருடும் கவிதையாக பியானோவைத் தழுவுதல் இருக்கிறது. அதில் ஒரு மத்தியஸ்தனின் வாழ்வு சொல்லப்படுகிறது.
” வீட்டில் சிலிண்டர்கள் தீர்ந்து விட்டதாக
அழைப்பு வந்தது
அன்று மதியம் ஆகாயத்தில்
நூறு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின
செல்ல மகளுக்கு
தோசை மிகவும் பிடிக்கும்” 
..
..
..
“ஒரு பியானோவை பற்ற வைத்து
எரியும் அதன் மடியில்
முகம் புதைத்து தூங்க ஆரம்பித்தேன்
எனது வீட்டில்
தோசைக்காக 
என்னைத் தேடிக்கொண்டிருந்தார்கள்”. 
இந்தத் தொகுப்பில் கவிதைகள் எதுவும் பகட்டை அணிந்து கொள்ளவில்லை யாசகப் பாத்திரத்தையும் ஏந்தவில்லை. எளிமையான இயல்பான நடுத்தரப் பொருளியல் சூழல்களைத் தன்னுள் அடக்கிக் கொள்கிறது. இது கவிதைக்கும் வாசகருக்குமான சார்பு நிலையை அதிகரிக்க வைக்கும் சிறப்பு.


மழை விற்பவன் என்கிற கவிதையில் சில வரிகள்
“மழையை விற்கலாம் என்று
புதிதாகக் கடையைத் திறப்பவன்
எந்தப் புள்ளியிலிருந்து 
மழையை அறுப்பதெனத் தெரியாமல்
அதன் பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறான்” 
மழையைக் குறித்து பல கவிஞர்கள் பல கவிதைகளை எழுதினாலும் புதுமையைக் கையாள வைப்பதில் தமிழிலக்கியத்தின் தெம்பு வியப்பு தான்.
மீன்கள் நீந்தும் பாதைகளை நோக்கிச் செல்பவன்…….. மீனை மறந்து பறந்து கொண்டிருந்தான் என்பது இயற்கையை ஆய்வு செய்வதை விடவும் அதை பொருள்சார் பயன்பாட்டிற்காக மாற்றுவதை விடவும் ஒன்றிணைந்து அனுபவித்தலே மகிழ்ச்சி என்பதை மென்மையாக அறைந்து சொல்கிறது.
வெடித்து அழுதல் என்னும் கவிதையில்
வரும் சுவர் ஒரு குறியீடு என்பதை வாசிக்கும் போது உணரலாம்.
நாளை காணாமல் போகிறவர் என்ற கவிதை  வருபவர் இவ்வுலகத்தின் ஒவ்வொரு மனிதரும் தான் என்பதைச் சொல்கிறது.
காற்றை நோக்கி செல்லும் பூ என்ற கவிதை காதலின் படிநிலைகளாகத் தோன்றுகிறது.
மாயையைத் தோலுரித்து காட்டும் கவிதைகளாக நல்ல பையன் மற்றும் புரட்சியாளர்கள் என்னும் கவிதைகள்.
சுவரொட்டி, சிவப்பு பிடிக்காத நகரம், நித்தியத்தின் வாயில், எறும்புகள் விசேஷமானவை இவ்வாறாக செல்லும் கவிதைகள் நிச்சயமாக வாசகர்களுக்கு வாழ்வியல் அனுபவங்களைக் கைகளில் சேர்க்கும்.
நாளை காணாமல் போகிறவர்  தெளிந்த நீரோடை.
~விபீஷணன்.
நன்றி.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *