கா.கணேசன் எழுதிய நாமும் நாடும் - நூல் அறிமுகம் | Ka.Ganesan - Naamum Naadum book review by Prof. P.Vijayakumar - https://bookday.in/

நாமும் நாடும் – நூல் அறிமுகம்

நாமும் நாடும் – நூல் அறிமுகம்

 

நூலின் தகவல்கள் :

நூல் : நாமும் நாடும்
ஆசிரியர் : கா. கணேசன்
வெளியீடு : மண் மக்கள் மனிதன் வெளியீடு
பவிலை : ரூபாய் 150/-

மீறள்களுக்கு எதிரான அறச்சீற்றத்தின் பெருமூச்சு ‘நாமும் நாடும்’ நூல். மனித உரிமைத் தளத்தில் தீவிரச் செயற்பாட்டாளராகத் திகழும் கா. கணேசன் ’நாமும் நாடும்’ என்ற தலைப்பிலான இந்நூலில் மனித உரிமையின் பல்வேறு பரிமாணங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றதும் மனித உரிமைக் காவலராகச் செயல்படுவதற்கு ஏதுவாக முதலில் பீல் எனும் தன்னார்வக் குழுவில் (PEAL- Peoples Education for Action and Liberation) பயிற்சியைப் பெற்றார். பின்னர் தமிழகம் நன்கறிந்த ’மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பில் இணைந்து மனித உரிமைப் பாதுகாப்புக்கான களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மனித உரிமைத் தளத்தில் கணேசன் பெற்ற இருபதாண்டு கால அனுபவத்தின் சாரமே இந்நூலாகப் பரிணமித்துள்ளது.

நான்கு அத்தியாயங்களில் நூற்று நாற்பது பக்கங்களுடன் விரிந்து செல்லும் இந்நூல் எளிய தமிழில் மனித உரிமை குறித்த அரிய செய்திகளைச் சொல்லிச் செல்கிறது. தமிழ் நாட்டின் மூத்த கல்வியாளரும், சமூகச் செயற்பாட்டாளுருமான பேரா.வே.வசந்திதேவி நூலுக்கான அணிந்துரையில் “உரிமை உலகின் பல தளங்களில் நூல் பயணிக்கிறது. பெண்ணுரிமை, நலிவடைந்தோர் உரிமை, குழந்தை உரிமை, கல்வி உரிமை பற்றியெல்லாம் ஆழமாக விவாதிக்கிறது என்று பாராட்டுகிறார். இந்தியாவில் மனித உரிமை ஆணையங்கள் தேவையான நேரத்தில் தலையிடாமல் கள்ள மௌனம் சாதிப்பதை நூலாசிரியர் ஆவேசத்துடன் குற்றம் சாட்டுவதை மெச்சுகிறார்.

நூலின் முதல் அத்தியாயம் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வின் பல கட்டங்களைக் குறிப்பிடுகிறது. 1948இல் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பிரகடனத்தை இயற்றியது, இருபத்தைந்தாண்டுகள் கழித்து 1993இல் மனித உரிமைகளுக்கான இரண்டாம் உலக மாநாட்டில் மனித உரிமைச் செயல்பாடுகளுக்கான ’பாரிஸ் கோட்பாடு’ உருவாக்கப்பட்டது. 1994இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது; இதனடிப்படையில் மனித உரிமை ஆணையம் நியமிக்கப்பட்ட வரலாற்றை நூல் விளக்குகிறது. தேசிய மனித உரிமை ஆணையமும், பிற ஆணையங்களும் சுதந்திரமாகவும், அதிகாரமிக்கதாகவும், அரசியல் குறிக்கீடு இல்லாமலும் செயல்பட வேண்டும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்துகிறார்.

குழந்தை உரிமை குறித்த இராண்டாவது அத்தியாயம் அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான வன்முறைகளிலிருந்து குழந்தைகளை எவ்வாறு காப்பது என்பதை விளக்குகிறது. பள்ளிகளில் குழந்தைகளை உடலளவிலும், மனதளவிலும் புண்படுத்துவது குழந்தை உரிமை மீறலாகும் என்கிறார். தேசிய கல்விக் கொள்கை ஆலோசனையின்படி குழந்தைகளுக்கு ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளில் தேசிய அளவில் தேர்வுகள் நடுத்துவது குழந்தைகள் மீதான வன்முறையே என்கிறார். பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிப்பது தவறானது என்பதை கலீல் ஜிப்ரனின் “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்”, என்ற அழகிய கவிதை மூலம் விளக்குகிறார்.

 தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு மாணவியின் தற்கொலை குறித்து மாநில குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் சரியான முறையில் தலையிட்டு விசாரணையைத் நடத்திவரும் நிலையில் தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் தலையிடுவது வரம்பு மீறிய செயலாகும் என்பதைச் சரியாகக் குறிப்பிடுகிறார். இத்தலையீட்டில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் உள்நோக்கம் தெளிவாகிறது, பாஜக அரசின் வெறுப்பு அரசியல் அம்பலமாகிறது.  C:\Users\USER\Downloads\1722787513839.jpg

நலிவடைந்தோர் உரிமைகள் பற்றிப் பேசும் மூன்றாவது அத்தியாயம் கொரோனா காலத்தில் ஒன்றிய அரசு முன்னெச்சரிக்கை செய்திடாமல் அறிவித்த ஊரடங்கு புலம் பெயர் தொழிலாளிகள் மீது இழைக்கப்பட்ட அநீதி என்கிறார். உணவுக்கான உரிமை  வாழ்வதற்கான உரிமையில் அடங்கும். உலக வங்கி வறுமைக் கோட்டை கணக்கீடு செய்துள்ளதின் அரசியலை நூலாசிரியர் கண்டிக்கிறார். 2018 ஆம் ஆண்டு வறுமைக் கோட்டை வரைந்த உலகவங்கி நாளொன்றுக்கு 1.9 அமெரிக்க  டாலருக்கும் குறைவான வருமானம் ஈட்டுபவரையே வறுமைக் கோடுக்கு கீழ் இருப்பவர் என்று அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பொருதார நிபுனர் வெங்கடேஷ் ஆத்ரேயா இது வறுமைக் கோடு அல்ல. ’சாகாக் கோடு’ என்று குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் இவ்வளவு குறைந்த வருமானத்தில் சாகாமல் இருக்கலாம். நிச்சயம் நலமான வாழ்வு வாழ்வு வாழ முடியாது. அகதிகள் பிரச்சனை இன்று உலகெங்கிலும் வியாபித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் மட்டும் 3.9 லட்சம் குழந்தைகள் அகதிகளாகப் பிறந்துள்ளனர் எனும் செய்தி நம்மைப் பதறச் செய்கிறது. உலகில் 8.7 கோடிப் பேர் அகதிகளாக உள்ளனர் என்பது மனித நேயம் தாழ்ந்துள்ளதைக் காட்டுகிறது.

கல்வி உரிமை குறித்த நான்காவது அத்தியாயம் பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்புகளைச் சொல்கிறது. அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு அச்சாணியாக இருப்பது பள்ளி மேலாண்மைக் குழுக்களே என்று உறுதியுடன் கூறுகிறார் கணேசன். ”உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு/ அச்சாணி அன்னார் உடைத்து”. எனும் குறளுக்கு இணங்க பள்ளி மேலாண்மைக் குழு எனும் இந்த அச்சாணியை வலுப்படுத்த வேண்டும். தமிழ்நாடு கல்வித்துறையின் அயராத முயற்சியால் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பெரும்பான்மையான பள்ளிகள் திறம்படச் செயல்படுவதைப் பாராட்டுகிறார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கும், பொறுப்பில் இருக்கும் கல்வித்துறை அலுவலகர்களுக்கும் தொடர் பயிற்சிகள் நடத்துப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மாதாந்திரக் கூட்டம் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை முறையாக நடப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். இக்குழுக்கூட்ட நடவடிக்கைகளை நேர்த்தியாகப் பதிவு செய்யும் பொருட்டு சிறப்பானதொரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது பயனுள்ளதாக இருக்கிறது. 2022-2023 ஆண்டுக் காலத்தில் மூன்று லட்சம் அடிப்படைத் தேவைகள் தீர்மானங்களாக இக்குழுக் கூட்டங்களில் இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் சில தேவைகள் அரசால் நிறைவேற்றப்பட்டும் உள்ளன. இது தமிழக கல்வித்துறையின் வரலாற்றில் ஒரு மைல்கல் என்று பெருமிதம் கொள்கிறார்.

தமிழகத்தில் முதல் முறையாக மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக்கான மாநாடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இம்முயற்சி மற்ற மாவட்டங்களுக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. சிறப்பாகச் செயல்படும் மேலாண்மைக் குழுத் தலைவர்களை அடையாளங் கண்டு அங்கீகரித்துப் பாராட்டிட கல்வித்துறை முன்வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவராகப் பணியாற்றுவது பொதுநலமாகும் என்பதறிவோம். “ஒருவன் தனக்காக உழைக்கும்போது மனிதனாகிறான். சமூகத்திற்காக உழைக்கும்போது மாமனிதனாகிறான்” என்கிறார் கார்ல் மார்க்ஸ். இம்மண்ணில் மாமனிதர்கள் நிறைந்து கிடக்கிறார்கள் அவர்களைத் தேடிக் கண்டடைவோம். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைமைப் பொறுப்பை ஏற்கச் செய்வோம். அதிலும் இப்பொறுப்புக்கு பெண்கள் முன்வருவது சாலப் பொருந்தும் என்கிறார் கணேசன். பெண்களின் ஆளுமையில் அரசுப் பள்ளிகள் பரிணமிக்கும் என்பது நூலாசிரியரின் நம்பிக்கை.

நூலின் கடைசிப் பகுதியில் மாணவர்களின் மருத்துவக் கல்வி சேர்க்கைக்காக தேசிய அளவில் நடக்கும் நீட் தேர்வு குறித்த நீண்ட விவாதம் இடம் பெற்றுள்ளது. இத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு கல்விப் பாதுகாப்பு கூட்டமைப்பு பல இயக்கங்களையும் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக மக்களைச் சந்தித்து ஆய்வு நடத்தி அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பியது. இப்பொறுப்பில் இருந்த கணேசன் நீட் தேர்வின் கொடூரங்களை நன்கறிந்தவர்; ஆழமான புரிதல் கொண்டிருந்தவர். இதோ! நீட் வேண்டாம் என்பதற்கான காரணங்களை கணேசன் பட்டியலிடுவதைப் பார்ப்போம். நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானது, மொழி உரிமைக்கு எதிரானது, கல்வி உரிமைக்கு எதிரானது, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைப் பறிப்பது, சமூகநீதிக்கு எதிரானது, கோச்சிங் மையங்களின் கொள்ளைக்கு வழிவகுப்பது, நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு எதிரானது என்று ஆய்வில் கண்ட உண்மைகளை உணர்ச்சிப் பூர்வமாகச் சொல்கிறார்.

நம் சமூகத்தில் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லை என்பதறிவோம். கணேசன் போன்ற மனித உரிமைப் போராளிகள் தங்கள் அனுபவங்களை இத்தகு நூல்கள் வழி பகிர்ந்து கொள்வது ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும். கணேசன் தன்னுடைய கள அனுபவங்களைத் தொடர்ந்து எழுதி மனித உரிமைக் காவலர்களாகச் செயல்படுவதற்கு இளைஞர்களை உற்சாகப்படுத்தி அழைத்து வருவார் என்று நம்புவோம். நூலினை ‘மண், மக்கள், மனிதம்’ வெளியீடு பொருத்தமான படங்களுடன் பாங்குடன் கொண்டுந்துள்ளது.

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பேரா.பெ.விஜயகுமார்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *