“விட்டு விடுதலை ஆவாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே” – பாரதியார்
அந்த நாள் ஒரு சாதாரண நாள்தான். சூரியன் வழக்கம்போல் உதித்தது. கடிகாரம் வழக்கம்போல் ஓடியது.
உலகம் எதையும் அறியாமல் தன் வேலையில் இருந்தது. ஆனால் என் உள்ளத்தில் மட்டும் சொல்ல முடியாத ஓர் அமைதி இல்லாத உணர்வு இருந்தது.
நான் தினமும் வாழ்ந்து வந்த வாழ்க்கை சரிதானா என்ற கேள்வி, மெதுவாக என் மனதில் எழுந்தது. பல வருடங்களாக நான் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக வாழ்ந்து வந்தேன். நான் என்ன நினைக்கிறேன் என்பதைவிட, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதே முக்கியமாக இருந்தது.
என் கனவுகளை மௌனமாக ஒதுக்கி வைத்து, என் உணர்ச்சிகளை மறைத்து வைத்து, “எல்லாம் சரியா இருக்கணும்” என்பதற்காக என்னையே மறந்தேன். அந்த நேரத்தில் நான் வலிமை என நினைத்தது, உண்மையில் சோர்வுதான் என்பதை உணரவில்லை.
அந்த நாளில் ஒரு பெரிய சம்பவம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் என் உள்ளத்தில் ஒரு பெரிய உண்மை வெளிச்சம் பார்த்தது. நான் மிகவும் சோர்ந்து போயிருந்தேன். எப்போதும் மற்றவர்களுக்காகச் சரி செய்ய முயற்சி செய்து, எனக்குள் மட்டும் குழப்பத்தை வளர்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் நான் முதன்முறையாக என்னிடம் கேட்டேன் — “என்னைப் பற்றி யாராவது யோசிச்சாங்களா? நானாவது என்னைப் பற்றி யோசிச்சிருக்கேனா?”
நான் என்னைத் தேர்ந்தெடுத்தது எளிதல்ல.
பயமாக இருந்தது — மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்வார்கள் என்ற பயம்; நம்பிக்கை வைத்த சிலரை ஏமாற்றிவிடுவேன் என்ற பயம், தனியாக நின்றுவிடுவேனோ என்ற பயம்.
ஆனால் அந்த பயத்தைவிட பெரியது ஒரு உண்மை — நான் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், நான் என்னை இழந்துவிடுவேன்.
அந்த நாளிலிருந்து நான் மெதுவாக மாறத் தொடங்கினேன். குற்ற உணர்வு இல்லாமல் ஓய்வு எடுத்தேன். நடுங்கும் குரலில்கூட உண்மையை பேசினேன். எல்லோருக்கும் இடம் கொடுத்த மனதில், எல்லை வைத்தேன். சிலர் என்னை விட்டு விலகினார்கள். அது வலித்தது. ஆனால் அதே நேரத்தில், அது என்னை குணமாக்கியது. எல்லாரும் போனால் இழப்பு இல்லை, எல்லாரும் இருப்பது தேவையுமில்லை என்பதையும் கற்றுக்கொண்டேன்.
நான் என்னை மதிப்பது, மற்றவர்களின் பாராட்டுகளால் அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். என் குறைகளையும் ஏற்றுக்கொண்டேன். மற்றவர்களைப் போல ஓடாமல் என் வேகத்தில் வளர அனுமதித்தேன். அப்போதுதான் என் மனமும், எண்ணங்களும், வாழ்க்கையும் ஒரே திசையில் நகரத் தொடங்கின.
நான் என்னைத் தேர்ந்தெடுத்த நாளில் எல்லாப் பிரச்சனைகளுக்கும் முடிவு ஏற்பட்டுவிடவில்லை. ஆனால் அதுதான் எனது உண்மையான வாழ்க்கையின் ஆரம்பம். சுய சந்தேகத்தை விட சுய மரியாதையைத் தேர்ந்தெடுத்த நாள். வலியைவிட குணமடைவதைத் தேர்ந்தெடுத்த நாள். மற்றவர்களுக்காக வாழ்வதை விட, எனக்காகவும் வாழ முடியும் என்பதை உணர்ந்த நாள்.
நான் நானாக இருப்பதை உணர்ந்த நாள் அது. ஒரு புதிய உணர்வு அன்று என் மனதில், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நிம்மதி, ஒரு அமைதி தோன்றியது. அன்று தான் நான் என்னை ரசித்தேன், அருகே இருந்த மரத்தில் ஒரு குருவி தனியாகச் சுற்றித் திரிவதைக் கண்டேன். அப்போது தான் நான் இவ்வளவு காலம் என்னை நானே கூண்டில் அடைத்து வைத்திருந்தேன் என்பதைப் புரிந்துகொண்டேன்.
நான் மாறியது மற்றவர்களைக் காயப்படுத்துவதற்கு அல்ல என்னைக் காயப்படாமல் பாதுகாத்துக் கொள்ளுவதற்காக.
அன்று உலகம் மாறவில்லை.
நான் மாறினேன் எனக்காக.
அன்றிலிருந்து நான் உண்மையாக, மகிழ்ச்சியாக, சுதந்திரமாக வாழத் தொடங்கினேன் அந்தக் குருவியைப் போன்று…..
“தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே – ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே” – வள்ளலார்
📚 எழுதியவர்:
ச.சஞ்சனா
முதலாமாண்டு மாணவி
கலசலிங்கம் பல்கலைக்கழகம்
கிருஷ்ணன்கோவில்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


👏🏻keep it up sanjana 💐
Nice ..உண்மையில் நானும் இந்த பதிவில் வரும் குருவியாக தான் இருந்தேன் இவ்வளவு காலம் ஒரு கூண்டினுள் இந்த பதிவை படித்த பின் அந்த கூண்டை விட்டு வெளியேறுகிறேன் நன்றி… வாழ்த்துகள்