நூல் அறிமுகம்: வரலாறு – கலை – பொக்கிஷம் நான் கண்ட பெங்களூரு – எஸ். ஜெயஸ்ரீநூல்: ‘நான் கண்ட பெங்களூரு’
ஆசிரியர்: பாவண்ணன் 
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை: ₹300

நகைச் சுவைக்காக, ஒரு ஜோக் சொல்வதுண்டு. பெரிய நகரத்தில் இருக்கும் ஒரு குழந்தையிடம் பால் எங்கிருந்து கிடைக்கிறது என்றால், அந்தக் குழந்தை, பால் பூத்திலிருந்து என்று பதில் சொல்லும். அது போல, மற்றொரு குழந்தையிடம், பசுவின் பால் வெள்ளை நிறமாக இருக்கிறது,; எருமையின் பால் என்ன நிறத்தில் இருக்கும் என்று கேட்டதற்கு, கறுப்பாக இருக்கும் என்று பதில் கூறியதாம். அது போல, இன்று நம்மில் பல பேர் பெங்களூரு என்ற நகரம், மென் பொருள் நிறுவனங்களுக்கும், நகரங்களூக்கே உரிய நவ நாகரீகங்களூக்கும் மட்டுமே பெயர் போனது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும், தற்கால பிரம்மாண்டம் என்பது பெரிய பெரிய நாகரீக வணிக வளாகங்களாகவும், பெரிய பெரிய கட்டிடங்களாகவும் உயர்ந்து நிற்பதைத்தான் காட்டுகிறது. ஆனால், பெங்களூர் என்ற நகரத்தில் என்னென்ன முக்கியமான இடங்கள், அந்த இடங்களின் முக்கியத்துவத்திற்கு காரணம் என்ன, அதன் சரித்திரப் பின்னணி என்ன என்பவற்றையெல்லாம், பாவண்ணன் அழகாக எளிய, சிறிய கட்டுரைகளாக, ஒரு கதை போன்று வர்ணித்துச் சொல்லும் 40 கட்டுரைகள் அடங்கிய தொகுப்புதான், சமீபத்தில் வெளி வந்துள்ள “நான் கண்ட பெங்களூரு” புத்தகம்.

பாவண்ணன், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூருவை தன் வசிப்பிடமாகக் கொண்டவர். இந்தப் புத்தகத்தில், அவர் 1989 முதல் 1992 வரையிலான மூன்று வருடங்களில், தான் காண நேர்ந்த இடங்கள் பற்றியும், தான் பழகிய மனிதர்கள் வாயிலாக கேட்க நேர்ந்த தகவல்களையும் இணைத்து அழகான காட்டுரைகளாக செய்திருக்கிறார். இந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவர் வசித்த அல்சூர், அவர் பணி புரிந்த சேஷாத்ரிபுரம், அவர் நடந்த எம்.ஜி. ரோடு, இவை பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டுள்ளார். எனவே, இந்தப் புத்தகம் பெங்களூருவின் ஒரு சிறிய பகுதியையே காண்பிக்கிறது. அடுத்தடுத்த புத்தகங்கள் ஒரு வேளை இன்னும் பல இடங்களை நமக்கு அறிமுகப்படுத்தலாம்.

அவர் காண்பிக்கின்ற பல இடங்கள் இன்று இல்லை என்பதையும் அவரே சொல்கிறார். இருக்கின்ற இடங்களையாவது அவற்றின் வரலாற்றுப் பின்னணியோடு இணைத்துப் பார்க்க வேண்டும் என்று இந்த புத்தகத்தை வாசித்த பிறகு தோன்றுகிறது. அந்த இடத்தை நாம் பார்க்கத் தவற விட்டதை நினைத்து வருந்தி, இன்னொரு முறை போகும்போது அதைப் பார்த்து விட வேண்டும் என்று குறித்துக் கொள்ள முடிகிறது. பெங்களூரு என்றாலே, உடனே எல்லோர்க்கும் ஞாபகம் வருவது லால் பாக், கப்பன் பார்க் மற்றும் விதன் சௌதா இவைகள்தாம். அந்த பார்க்குகளுக்கு அப்படி பெயர் வரக் காரணம் என்ற தகவலை, பாவண்ணன் மிகவும் சுவையாக வர்ணிக்கிறார். இந்த வர்ண்ணைகள் மூலம், ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் வரலாற்று முக்கியத்துவத்தையும் நமக்கு விளக்கி விடுகிறார். குழந்தைகள் இந்த இடத்திற்கு ஏன் அப்படிப் பெயர் வந்தது என்று கேட்டால், சில சமயம் தடுமாறி நிற்பவர்கள் நம்மில் பலர். பாவண்ணன், குழந்தைகளுக்குச் சொல்வது போல, வாசகருக்கு அந்த இடங்கள் பற்றிச் சொல்கிறார். லால் பாக், எப்படி உருவானது என்று பாவண்ணன் சொல்வது, ஒரு தந்தை உருவாக்கி வைத்த ஒரு வரலாற்றுப் பெருமையை, தனயனும் எப்படி வளர்த்தெடுத்திருக்கிறார் என்றும் நமக்குப் புரிகிறது. ஹைதர் அலி முதலில் நாற்பத்தைந்து ஏக்கர் பரப்பில் உருவாக்கி வைத்ததை, அவர் திப்பு சுல்தான், இருநூறு ஏக்கர் பரப்பாக விரிவுபடுத்தி, ஏரி வெட்டி, வெளிநாட்டிலிருந்து மரக் கன்றுகள் வரவழைத்து நட்டு வைத்து, மக்கள் பார்த்து மகிழ்வதற்காக, ஆபத்தில்லா விலங்குகளைக் கொண்டு வந்து வைத்து, என்று பொது மக்களுக்கான ஒரு பொழுது போக்கு இடமாகவும், அதே சமயத்தில் தன் ஆட்சியின் வரலாற்றுச் சின்னமாகவும் எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதை மிக அழகாக கதை போல விளக்குகிறார்.மர்பி டவுன் , நாக்ஸ்பேட்டை, குஜ்ரி மார்க்கெட் என்பன போன்ற இடங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இடங்கள் பற்றி மட்டும் விளக்குவதாக இல்லாமல், அவர் வரலாற்றுப் பின்னணி, அது வளர்ந்த காலத்தின் கலாச்சாரம், வழக்கங்கள் முதலியவற்றையும் பாவண்ணன் விவரிக்கிறார். இடங்கள் பற்றி மட்டுமல்லாமல், அவர் சந்தித்த மனிதர்கள் பற்றியும், அவர்கள் வாயிலாக அவர் தெரிந்து கொண்டதை அந்தப் பாத்திரங்கள் வாயிலாகவே நமக்கு விவரிக்கிறார். அவரது அலுவலக குற்றேவல் பணியாளர் ( இந்த குற்றேவல் பணீயாளர் என்ற பாவண்ணனின் சொற்பிரயோகம் மிகவும் அழகு) ஒருவரின் புது மனை புகு விழாவிற்குச் சென்ற இடத்தில், அவரது தந்தை வாயிலாக, பின்னி மில் பெங்களுருவில் இருந்தது பற்றிய தகவலைக் கேட்டறிகிறார்.

காந்தியின் வருகை பெங்களூர் பகுதிக்கு எப்படி நிகழ்ந்தது என்பதையும், எப்படி அந்தக் காலத்தில் காந்தியால் ஈர்க்கப்பட்டவர்கள் எந்த தேசம், எந்த மாநிலம், எந்த மொழி என்றில்லாமல், அவரது கொள்கைகளை சிறப்பாக கைக் கொண்டு வளர்த்தெதெடுத்தார்கள் என்பதை ஒரு கட்டுரை விவரிக்கிறது. வாசிக்கும்போது நமக்கு சிலிர்க்கிறது. அந்தப் பெரியவர், காந்தியின் வழியில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளைப் பற்றிச் சொல்கிறார். குருகுலம் நடத்தி வந்ததைச் சொன்ன பெரியவர், காந்தி வந்திருந்தபோது, சாதி பாகுபாடு இல்லாமல். அனைவரும் தண்ணீர் எடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட கிணறு பற்றியும், அதில் காந்தி முதலில் ஒரு வாளி தண்ணீர் இறைத்தெடுத்துத் துவக்கி வைத்ததையும் விவரிக்கிறார். அந்தக் கிணற்றிற்கு “காந்தி கிணறு” அவர் சொன்னதை மனதில் குறித்துக் கொண்டு, பாவண்ணன் அல்சூரிலிருந்து அந்த கிராமம் நோக்கிப் பயணிக்கிறார். கெங்கேரி என்ற அந்த கிராமத்திற்கு இரண்டு பேருந்துகள் மாறிப் போய் அந்தக் கிராமத்தை அடைகிறார். அங்கு விசாரித்தாலும் யாருக்கும் சட்டென பதில் சொல்லத் தெரியவில்லை. ஒருவர் மட்டும் சரியாகச் சொன்னதை வைத்துக் கொண்டு, அந்த இடத்திற்க்குச் சென்று, புதர் மண்டிக் கிடக்கும் அந்த இடத்தில் புதர்களை விலக்கி, நாற்றமெடுக்கும் அந்தப் புதர்களுக்கு நடுவே, அந்தக் கிணற்றைத் தரிசனம் செய்கிறார்.

ஆற்காடு நாராயணசாமி முதலியார் வியாபாரத்திற்காக பெங்களூரு வந்தவர், ஒரு பள்ளி ஆரம்பித்ததையும், பெண்களுக்குத் தனியாக பள்ளி ஆரம்பித்ததையும் எல்லாம் விவரிக்கும் அத்தியாயம் சிறப்பானது. அந்தக் காலத்து மனிதர்கள் எவ்வளவு நல்ல உள்ளம் படைத்தவர்களாக இருந்திருக்கிறனர் என்பதை அறிய முடிகிறது.

பாவண்ணன், தான் புழங்க நேர்ந்த தெருக்கள் முதற்கொண்டு, அவர் வீட்டினிதெரியிலேயே இருக்கும் பேக்கரி, கிருஷ்ணன் கோவில் முதலியவற்றைக் கூட விவரிக்கிறார். ‘ மண்ணளந்த பாதம் “ என அவர் புழங்கிய இடங்கள் அனைவற்றையும் பற்றி ஒரு துளியும் விடாமல் வர்ணித்துச் சொல்கிறார்.
இடங்கள் பற்றி மட்டுமல்லாமல், பெங்களூருவில் சிறப்பு வாய்ந்த நூலகங்கள் பற்றியும், அந்த நூலகர்களின் புத்தகங்கள் பற்றிய அறிவையும், தேடலையும், வாடிக்கையாளர்களுக்காகத் தேடித் தேடித் தருவதையும், அந்த நூலகங்கள் எப்படி காலங்காலமாக வாசிப்புத் தேடல் உள்ளவர்களின் தாகத்தைத் தீர்த்து வைக்கிறது என்பதையும் விவரிக்கிறது. செலக்ட் புக் ஷாப், ப்ரீமியர் புக் ஷாப் என ஹிக்கின் பாதாம்ஸ் போன்ற பெரிய பெரிய புத்தகக் கடைகளுக்கு சற்றும் குறைவில்லாமல், பல புத்தகங்களின் புத்தகச் சுரங்கமாக இருந்திருப்பதை விவரிக்கிறார்.ஒரு நகரத்தின் நாகரீகத்தின் வளர்ச்சி, அந்த இடத்தின் திருவிழாகக்கள், கோவில்கள் இவற்றையெல்லாம் விவரிக்கிறார் பாவண்ணன். திரௌபதி அம்மன் தீ மிதித் திருவிழா, சிவன் கோவில்களில் தேரோட்டம், பல்லக்குத் திருவிழா, அமாவாசை அன்று நடைபெறும் மயனக் கொள்ளைத் திருவிழா, கடலகெ திருவிழா என்று பல திருவிழாக்களை விவரிக்கிறார். அவற்றை விவரிக்கையில், அதன் புராணச் செய்தியையும் சொல்கிறார். இதன் மூலம், மாநிலங்கள் வேறானாலும், மக்களின் நம்பிக்கையும், கொண்டாட்டங்களும் ஒரே மாதிரி இருப்பதை நம்மால் உணர முடிகிறது மேளும், சிவன் கோவில்கள் சோழர் காலத்திலும், பல்லவ காலத்திலும் கட்டப்பட்டிருப்பதைக் கூறும்போது, அந்தக் கால ராஜாக்கள், தம் கலைச் சின்னத்தை எங்கெங்கும் நிலை நாட்டியிருப்பதும் நமக்குத் தெரிகிறது. அதே போலவே, நாம் தமிழ் நாட்டில், சித்திரைத்திருநாள் அன்று, வேப்பம்பூ பச்சடியும்,இனிப்புகளும் செய்து கொண்டாடுவது போலவே, கன்னடியர்கள், யுகாதிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இப்படி, பண்பாட்டு ஒற்றுமையையும் நம்மால் உணர முடிகிறது.

இன்னொரு புறம், கர்நாடக மாநிலத்தில், நாடகங்கள், யட்ச கானம் எனும் கலை வடிவம் எல்லாம் சிறப்புற்று மேலோங்கி இருந்ததையும் பாவண்ணனின் கட்டுரைகள் நமக்குத் தெரிவிக்கின்றன., அதிலும், குறிப்பாக, கிரீஷ் கர்னாட் அவர்களின் நாடகப் பங்களிப்பு குறித்து அருமையாகப் பதிவு செய்திருக்கிறார் பாவண்ணன். அது போல, கன்னடத்தின் மிகப் பெரிய எழுத்தாளரான சிவராமகாரந்த் அவர்களை அறிமுகப் படுத்துகிறார். பல புத்தகங்களின் பெயர்களை,அவர் கட்டுரையின் போக்கில் சொல்வது நாம் படிப்பதற்கான புத்தகங்களாக குறித்துக் கொள்ள முடிகிறது.

இப்படி பாவண்ணன், “ நான் கண்ட பெங்களூரு” புத்தகத்தை, வெறும் கட்டுரைத் தொகுதி என்று வாசகர்கள் ஒதுக்கி வைத்து விட முடியாதபடி, பெங்களூருவின் சுற்றுலா கையேடு போன்றே மிகச் சிறப்பாகப் படைத்திருக்கிறார். வாசிக்கும் எவரையும், எளிதில் உள் வாங்கிக் கொள்ளுவதாக மிகச் சிறப்பாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இப்படியான பதிவுகள்தான் அடுத்த தலைமுறையினருக்கு நம் தேசம் பற்றிய வரலாற்றினைச் சொல்லும். அதற்காக இந்த தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் கடமைப் பட்டிருக்கிறது. பாவண்ணன் மிகுந்த பாராட்டுக்குரியவர். மிக அழகான முறையில் அச்சிட்டு வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.