நூல் அறிமுகம்: ஊரோடும் நெஞ்சில் என்றும் தேரோடும் … – கமலாலயன்நூல்: ‘நான் கண்ட பெங்களூரு’
ஆசிரியர்: பாவண்ணன் 
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை: ₹300

சொந்த ஊரின் நினைவுகள் எந்த ஒரு மனிதரின் நெஞ்சிலும் அழியாத ஓர் இடத்தைப் பெற்றுவிடுகின்றன. சொந்த ஊரைப்போன்றே, பிழைப்புக்காகச் சென்று தங்கி நீண்டகாலம் வாழ நேர்ந்த ஊரின் ஞாபகங்களும் நிலைத்து நின்று விடும் தன்மையுடையவை. சாதாரண மனிதர்களுக்கே இது அடிப்படையான ஓர் இயல்பு. அப்படியிருக்க, படைப்பாளிகளான எழுத்தாளர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மாதிரியான ஓர் ஊரின் நினைவுகள் அலைமோதிக்கொண்டிருந்த ஒரு நெஞ்சம் அந்த நினைவுகளை எழுத்தில் பதிவு செய்திருக்கும் புத்தகம்தான் ‘ நான் கண்ட பெங்களூரு…’ எழுதியிருப்பவர் பாவண்ணன்.

ஏப்ரல்-23 அன்று உலகப்புத்தக நாள். அன்றைய தினம் கையில் கிடைத்த இந்தப் புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். மொத்தம் நாற்பது கட்டுரைகள். இரண்டே நாள்களில் (23, 24- 04-2021), முன்னூறு பக்கங்களில் விரிந்து செல்லும் இந்தக்கட்டுரைகளை எவ்வித அயற்சியோ, சோர்வோ, அலுப்போ இல்லாமல் படிக்க முடிந்தது. அதற்கான மனநிலை அமைந்தது ஒரு காரணம் எனினும், இவ்வளவு தொடர்ச்சியாகப் படிக்க முடிகிற மாதிரியான வசீகர, வண்ணங்கள் நிறைந்த நடை பாவண்ணனுடையது. குடும்பத்தினரின் பங்கேற்பையும் மறக்காமல் இவற்றில் பதிவு செய்திருப்பதற்காக அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
’இரண்டு தரிசனங்கள்’ என்றொரு கட்டுரை இதில் இருக்கிறது. நானூறு தரிசனங்களை நமக்குக் கிடைக்கச் செய்யும் தொகுப்பு இது என்று சொன்னால் அது மிகையானதில்லை. அல்சூர் ஏரிக்கரைப் பகுதியையொட்டி பாவண்ணன் வருடக்கணக்கில் வாழ்ந்த அனுபவங்கள் புத்தகம் பூராவிலும் இழையோடுகின்றன. அதேவேளையில், அந்த ஏரிக்கரையில் ஓர் அதிகாலை சூரியோதயக்காட்சியைக் காணத்தவறி விட்டோமே என அவர் வருந்த நேர்கிறது நண்பர் ஒருவர் எடுத்த புகைப்படங்களின் வழியே கிடைத்த ஒரு தரிசனம், பாவண்ணனின் கலைமனத்தைப் புரட்டிப்போடுகிறது. அடுத்த சில தினங்களில் ஒரு வைகறைப்பொழுதில் தனக்குக் கிடைத்த நேரடி தரிசனத்தை அப்படியே மாற்றுக்குறையாமல் வாசகருக்குக் கடத்துகிறார் ஆசிரியர் : “கருனீல வானத்தின் அடர்த்தி ஒரே கணத்தில் கரைந்து வெண்ணீலமானது. தொடர்ந்து அதில் ஆரஞ்சு நிறம் படிந்தது. பார்த்துக் கொண்டிருந்தபோதே சிவந்து சுடர்விட்டது.பிறகு செம்மை பெருகியது. சட்டென ஒரு தங்கத்தகடு போல சூரியன் தலை நிமிர்ந்து வந்தது. அதன் பிம்பம் தண்ணீரில் ஒரு கோடு இழுத்தது போல பளீரென இருந்தது. ஏரி முழுக்க பால் குழம்பாக ஒரு கணம் தோற்றம் காட்டியது. பரவசத்தோடு அதைப்பார்த்துக் கொண்டிருக்கும்போதே எங்கெங்கும் வெளிச்சம் பரவியது…”

இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. காலவெள்ளத்தில் கரைந்து மறைந்து போய்விட்ட பலரை அவர்களோடு தொடர்புடைய, அல்லது அவர்களைப் பற்றி அறிந்திருந்த பலரின் ஞாபக அடுக்குகளில் இருந்து மீளவும் உயிர்ப்பித்துக் கொண்டு வந்து நமக்கு அறிமுகம் செய்கிறார் பாவண்ணன். ஒரு வகையில் வரலாற்று ஆய்வாளர்கள் செய்யும் வேலை இது. இந்தக் கட்டுரைகள் நினைவுச் சித்திரங்கள் தாம்; ஆனால், வரலாற்றின் கீற்றுகளைத் தம்முள் கரைத்துக் கொண்டு படிக்கப் படிக்க பரவசம் ஊட்டும் செய்திகளின் தோரணங்கள். பாவண்ணனின் புத்தகத்தைப் படிக்கப்படிக்க, பெங்களூருவின் ஒவ்வொரு பகுதியும், தெருக்களும், நூலகங்களும், வீடுகளும், குடும்பங்களின் வாழ்க்கை நிலைமைகளும், அலுவலகப் பணிகள் சார்ந்த அனுபவங்களும் கண்களின் முன்னால் உயிரோவியங்களாகக் காட்சியளித்தன. தனது முப்பதாம் வயதில், 1989 ஆம் ஆண்டு பெங்களூருக்கு தொலைபேசித்துறையில் பணியிட மாறுதலின் நிமித்தம் வந்திருக்கிறார் பாவண்ணன். அதற்கு முன்பே அவர் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் களப்பணியாக முகாம்களில் தங்கி பணி செய்து கொண்டிருந்தவர். தற்செயலாக துறை இயக்குனர் நேரில் வந்து பணிகளைப் பார்வையிடும் ஒரு சமயத்தில், இவரின் இடமாறுதல் விண்ணப்பத்திற்கான காரணத்தைக் கேட்கிறார் அதிகாரி. தொடர்ந்து ஆறேழு ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அலைந்து திரிந்து பணி செய்தவருக்கு, அந்தச் சமயத்தில் குடும்பத்துடன் ஒரே ஊரில் தங்கியிருந்து பணி செய்தால் பரவாயில்லை என்ற ஓர் ஏக்கம் மேலோங்கியிருந்தது. இயக்குனர், இவரின் பணி அனுபவம், ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை முன்னரே தொடர்ந்து கவனித்து வந்திருப்பவர். எனவே, பெங்களூருவில் தலைமை அலுவலகத்திலேயே உதவிப் பொறியாளராகப் பணி செய்ய வருமாறு கேட்டுக்கொள்கிறார். எதிர்பாராத திருப்பம் என்ற முதல்கட்டுரையில், தான் பெங்களூருக்கு வந்த இந்த நிகழ்வை மிக சுவாரசியமாக விவரிக்கிறார் பாவண்ணன்.பணி ஓய்வு பெற்ற பின், பொதுவாக தமது சொந்த ஊருக்குப் போய் ‘செட்டில்’ ஆகும் முனைப்பே பெரும்பான்மையோருக்கு இருக்கும். அந்த வகையில், பாவண்ணனிடம் “ரிட்டையரான பிறகு சொந்த ஊருக்கே போய் நிம்மதியா இருக்கலாமே சார் “ என்று ஒரு பழைய நண்பர் கேட்கிறார். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று படித்த பின், எந்த ஊராக இருந்தால் என்ன சார்’ என்பது பாவண்ணனின் பதில். ”அப்பிடி என்னா சார் அதிசயம் இந்த ஊருல இருக்கு ?” என்று மீண்டும் கேட்கிற அந்த நண்பரின் வினா, இவரின் எண்ணங்களைக் கிளறி விட்டு விடுகிறது. விளைவு- நாம் இப்போது ‘னான் கண்ட பெங்களூரூ’ நூலை வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி கேட்ட நண்பருக்குப் பதிலாக மனதில் அலைபுரண்ட தனது நினைவுகளைத் தொகுத்திருக்கிறார் பாவண்ணன். அவருக்கு எப்படியோ, இவரைப் பொருத்தவரை எல்லாமே அதிசயங்கள்தாம் : பெங்களூரு நகரின் ஏரிகள், பூங்காக்கள், மரங்கள், கலைச்சின்னங்கள்,கோட்டைகள், குன்றுகள், வரலாற்றுச் சின்னங்கள், நாடகங்கள், யட்சகானங்கள், இசை விழாக்கள், கோவில்கள், புத்தகக்கடைகள் – ஒவ்வொன்றும் இவருக்கு அதிசயமே. எனவே அன்று இரவே முதல் அத்தியாயத்தை எழுதுகிறார். ஒரு தருணம், அந்தத் தருணத்தில் கண்ட மனிதர்களின் முகங்கள், சொற்கள், சூழல்கள், உணர்ச்சிகள், உரையாடல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்தையும் அழகான கோட்டோவியங்களாகத் தீட்டித் தந்திருக்கிறார் பாவண்ணன்.

இந்த நிகழ்ச்சிகளில் சித்தரிக்கப்படும் பல இடங்கள் இன்று இல்லை. பேகம் மகால், சீனா மணி, லிபர்ட்டி, எல்ஜின், நடராஜா, சென்ட்ரல் என பல திரையரங்குகள், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்த பின்னி மில், ப்ரீமியர் புக் ஷாப், திருக்குறள் மன்ற நூலகம் இவையனைத்தும் இன்று இல்லை. ஆயினும் இவையனைத்தும் பாவண்ணனின் நினைவடுக்குகளில் பாதுகாப்பாக இருந்திருக்கின்றன. அவை இந்த நூலில் உயிர்பெற்று எழுந்து காட்சி தருகின்றன.
மைசூர் சமஸ்தானத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது துணைக்கமிஷனராக இருந்தவர் கப்பன். அவர் பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பியபின், அடுத்துப் பணியிலிருந்த சாங்கே என்ற முதன்மைப் பொறியாளர் உருவாக்கிய இருநூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்த பூங்காதான் இன்று கப்பன் பார்க் என நிலை கொண்டிருக்கிறது. இமயமலை வட்டாரத்தில் வளரும் பைன் மரம் உட்பட, இந்தியாவிலுள்ள எல்லா வகையான மரங்களிலும் ஒரு மரம் இந்தப் பூங்காவில் வளர்க்கப்பட்டிருக்கிறது. சாங்கேவுக்குப் பின் வந்த ஜான் மீட் என்பவரின் பெயரை அதிகாரிகள் இந்தப் பூங்காவுக்கு வைத்த போது, இலண்டனில் இருந்து கண்டிப்பான உத்தரவு வருகிறது :’கப்பன் பெயர் தான் வைக்கப்பட வேண்டும்’. பிற்பாடு ஐம்பது அறுபது ஆண்டுகள் கழித்து, இது பொதுப்பூங்காவாக மாறிய பிறகு, சாமராஜேந்திர பார்க் எனப் பெயர் மாற்றப்பட்டாலும் கூட மக்கள் நாவில் புழங்குவது கப்பன் பார்க் என்பதே. இந்த வரலாற்றைப் பூங்காவுக்குப் போன அனுபவத்துடன் சேர்த்துத் தந்திருக்கிறார் பாவண்ணன்.

பெங்களூருவின் புராதனமான புகழ் பெற்ற கட்டிடங்களைப் பற்றிய செய்திகளையும், அவற்றின் பின்னாலுள்ள வரலாற்று உண்மைகளையும் பொருத்தமான இடங்களில் தேவையான அளவுக்கு ஆங்காங்கே தருகிறார். மைசூரையும், மடிகேரியையும் இணைக்கும் கேபிள் பாதையைத் தீர்மானிக்கும் பணி தொடர்பான ஒரு பயணம், குஷால் நகரில் மதிய உணவின் போது அந்தக்கடைக்காரர் மூலம் லால்பாக் பற்றி அறிவதற்கான வாய்ப்பாக அமைகிறது. பிற்பாடு பெங்களூருவில் லால்பாக் பூங்கா, ஏரி, பறவைகள், கல் உறைந்த குன்று என அனைத்தையும் பார்த்து மகிழ பாவண்ணனால் முடிகிறது. இந்த நூலின் பெரும்பான்மையான கட்டுரைகளில் இந்த அம்சத்தைக் காணலாம். இயற்கையை, ஏரிகளை, மலைகளை, கோட்டைகளை, கோவில்களை, அருங்காட்சி சாலைகளை, வெள்ளம் பெருகியோடும் நதிகளை, அருவிகளைப் பார்ப்பதற்கென்றே தனியாக ஒரு பயணத்தைத் தீர்மானித்து நாள் ஒதுக்கி, வண்டி வசதி தேடி போய்ப் பார்ப்பது எல்லாராலும் செய்ய முடியும் காரியமல்ல. அந்த முறையில் போக முடிந்தவர்கள் போகலாம். அத்தகைய வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் தமது பணிகளின் நிமித்தம் பயணங்களை மேற்கொள்ளும் போதே எங்கெல்லாம் தங்க வேண்டி வருகிறதோ அங்கெல்லாம் கொஞ்சம் மனம் வைத்து முயன்றால் இவை அனைத்தையும் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவுக்குக் கண்டு மகிழலாம். அவ்வாறு பணிகளையும், பார்வையிட வேண்டிய இடங்களையும் ஒன்றிணைத்துக் கொண்டே வாழ்நாள் முழுக்க இயற்கையுடன் இயைந்த ஒரு வாழ்வை நம்மால் வாழ முடியும் என்பதற்கு இந்தக்கட்டுரைகளில் பலவும் சான்றுகளாக அமைகின்றன.நான்கு கோபுரங்கள், உமது அரசு வருக, கலையும் மனிதனும், பெரிய ஆசான், சக்கரத்தைத் தேடி, காவல் தெய்வம், கண்ணீரால் காத்த பயிர், கலையும் மனிதனும் …என இந்த வகையான இன்னும் பல கட்டுரைகளைக் கூற முடியும். பணிகளோடும், அலுவலக நண்பர்களோடும் ஊடாடும் பொழுதே, சக ஊழியர்களோடும் வழிகளில் எதிர்ப்படும் சக மனிதர்களோடும் நிகழ்த்தும் உரையாடல்கள் மூலமும், அவர்கள் விவரிக்கும் சம்பவங்கள், சொல்லும் கதைகள், அனுபவங்கள் வாயிலாகவும் பாவண்ணன் கட்டியெழுப்பும் பெங்களூரு நகரம் மலைக்க வைக்கும் மானகராகி விடுகிறது.

திருக்குறள் மன்ற நூலகம், ப்ரீமியர் புக் ஷாப், செலெக்ட் புக் ஷாப் போன்ற சில இடங்கள் பற்றிய விவரணைகள் நம்மை வேறோர் உலகுக்கு இட்டுச் செல்கின்றன. ஷான்பாக், என்ற மனிதரை நீங்களோ, நானோ கண்டதுண்டா? பார்த்திருக்கலாம்; அல்லது சந்திக்க வாய்ப்பிலாமல் போயிருக்கவும் கூடும். ஆனால், பாவண்ணனின் பேனா வழியே அந்த மனிதர் புத்தகங்களை எப்படி நேசித்திருப்பார் என்ற உண்மையின் ஒளியைக் காண்கையில் அதன் பிரகாசம் தாங்க முடியாத பேருணர்வை வழங்குகிறது.

’ஓலக்குரல்கள்’ கட்டுரை பெங்களூருவில் நடந்த ஒரு விமான விபத்து பற்றியது. நொறுங்கிக் கிடந்த விமான பாகங்களையும், அதனிடையே சிக்கி உருக்குலைந்த மனிதர்களையும் நேரில் போய்ப் பார்க்கும் இவரும், இவரின் இயக்குனரும் அடையும் மனத்துயரம் நம்மை உறைந்து போகச் செய்கிறது. மீண்டும் ஒரு முறை அந்த இடத்தைப் பார்க்கப்போகும் பாவண்ணனைத் துரத்திக் கொண்டு வந்த ஓலக்குரல்கள் பற்றி படிக்கையில் ஏற்படும் அவல உணர்வு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. தொகுப்பில் இந்த ஒரு கட்டுரையின் சோகம் ஒட்டுமொத்த மனித சமூகத் துயரங்களுக்கு ஒரு வகைமாதிரிப் பதிவாக அமைகிறது.
வாசிப்பும், நம்மைச் சூழ்ந்திருக்கும் இடங்களை, மனிதர்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்ளும் அவதானிப்பும் எத்தகைய இரசவாதத்தை விளைவிக்கவல்லவை என்பதற்கு பாவண்ணனின் கட்டுரைகள் உயிர்ப்புமிக்க எடுத்துக்காட்டுகள். ஒருவர் மனத்திரையில் அழகொழுக எழுதிப்பார்த்திருந்த உயிரோவியங்கள்… ஊரோடும் அந்த நெஞ்சில் ஓடிய தேரோட்டக் காட்சிகள்…

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)