நூல் : நான் மலாலா
(பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை)
ஆசிரியர் : மலாலா யூசுஃப்ஸை
இணைந்து எழுதியவர் : கிறிஸ்டினா லாம்ப்
தமிழில் : பத்மஜா நாராயணன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு : முதல் பதிப்பு 2014 ஏழாம் பதிப்பு பிப்ரவரி 2022
விலை : ரூ375
எந்தவொரு குழந்தையும் தன் முதல் ஆசிரியராக தனது பெற்றோர்களையே கொண்டிருப்பர். அவ்வாசிரியர்களின் வழிகாட்டல்கள் அமையும் விதம் வாழ்க்கையின் முதல் பிடிமானமாய் அமையும். முதல் ஆசிரியராகிய பெற்றோர் குழந்தை வளர்ப்பில் எவ்வித வளமும் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் முதல் ஆசிரியரே. அந்த வகையில் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம் மலாலா என்னும் இளவயது பேராளுமையையும், அவரது பெற்றோர்களின் சிந்தனைகளையும்.
2012 அக்டோபரில் மலாலா உலக மக்களின் கண்ணில் பட்டார். உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமயத்தில் கிட்டத்தட்ட உலக மக்கள் அனைவருமே அறிந்த சிறுமி தான் இவர்.
பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து களத்தில் நின்ற மலாலா என்னும் சிறுமியை ஸ்வாட் பள்ளத்தாக்கில் 2012ல் தாலிபான் பிற்போக்குவாதிகளால் தலையில் சுடப்பட்டு, நீண்ட போராட்டத்திற்கு பின் மீண்டெழுந்து உலக குழந்தைகள் கல்வி பயில, தொடர்ந்து போராடி வரும் கல்விப்போராளி தான் மலாலா யூசுஃப்ஸை.
மலாலாவை ஆழ்ந்து வாசித்தவர்கள் தங்களின் குழந்தைகளுக்கும் அவருடைய பெயரை வைத்திருப்பர். கண்ணுக்குத் தெரிந்து உளுந்தூர்பேட்டை நண்பர் Karunakaran Vai அவர்கள் தனது குழந்தைக்கு மலாலாவின் பெயரை சூட்டியுள்ளார். அவர் ஒரு பள்ளி ஆசிரியர். ஆழ்ந்த வாசிப்பாளர். ஆசிரியர் என்பவர் வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்கான உதாரணம் அவர். அதுதான் ஸ்வாட் பள்ளத்தாக்கில் எங்கோ ஒரு மூளையில் தனது, சக பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடிய போராளியை தனது வீட்டுக் குழந்தையின் பெயரின் மூலம் பார்த்து வருகிறார் தோழர் #கருணாகரன்வை
என்ன நடந்தது ஸ்வாட்டில். பாகிஸ்தானை பொருத்தவரை அது அந்நாட்டிற்குள் இருக்கும் பள்ளத்தாக்கு. ஆனால் எவ்வித வசதியும் கிடைக்கப்பெறாத கவனிப்பாரற்ற பகுதி. ஆனால் ஆப்கன் தாலிபான்களுக்கு புகலிடம் ஸ்வாட். தாலிபான்கள் இருப்பதோ சிறு பகுதி. அவர்களை சுற்றிவளைக்க முடியாத பாகிஸ்தான் அரசு. அமெரிக்கா தாலிபான்களை ஒடுக்குகிறேன் என்று அடிக்கடி பாவ்லா காட்டும் வேலையை மட்டும் செய்யும். அதுவும் அடுத்த நாட்டில் மூக்கை நுழைத்து. அதுபோகட்டும் அதற்கு ஆயுத வியாபாரத்தில் குறி. இன்று இஸ்ரேலுடன் 8 பில்லியன் டாலருக்கு ஆயுத ஒப்பந்தம் போட்ட கழுகாச்சே. நாம் தாலிபானுக்கு வருவோம். ஆரம்பத்தில் தாலிபான் பாகிஸ்தான் ஸ்வாட்டில் நுழைந்தபோது வாலை சுருட்டிக்கொண்டு தான் அடங்கி ஒடுங்கி இருந்தனர். நாட்கள் செல்லச் செல்ல பள்ளத்தாக்கு மக்களின் நாடித்துடிப்பை பிடிக்க ஆரம்பித்து அவர்களின் கருத்துக்களை அறிவதாகக் கூறி மெல்ல மெல்ல தங்களின் பிற்போக்கியலை திணித்து சிறுபான்மையாக இருந்த தாலிபான்களின் சிந்தனை பெரும்பான்மையாக மாற ஆரம்பித்தது. அதுவரை ஸ்வாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர் இயற்கை வளங்களை பாதுகாத்து. கல்வியும் வளர்ந்து வந்தது. அப்போதும் பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்கிற சிறு பிற்போக்கு கூட்டம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் அது அதிக எதிர்ப்பு காட்டவில்லை. தாலிபான்களின் கட்டப்பஞ்சாயத்து ஆரம்பமானவுடன் அப்பள்ளத்தாக்கில் இருந்த பள்ளிக்கூடங்கள் தகர்க்கப்பட்டன. பர்தா அணியாத பெண்களும், மீறி ஒன்றிரண்டு பள்ளிக்குச் சென்ற பெண்குழந்தைகளும் தாலிபான்களின் தண்டனையில் சிக்கினர். தண்டனையாக பெண்ணை கவிழ்த்து படுக்க வைத்து கைகளையும், கால்களையும் இருவர் பிடித்துக்கொள்ள பிட்டத்திலே கடும் தாக்குதல் நடக்கும். இப்படி ஆரம்பித்த தண்டனை நாளடைவில் சுட்டுக் கொள்வதில் முடிந்தது. அப்படித்தான் மலாலாவும் சுடப்பட்டார். காரணம் மலாலா தாலிபான்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் கல்வி கற்று வந்தது மட்டுமல்ல ஸ்வாட்டை விட்டு பாகிஸ்தான் நகரத்திற்கும் சென்று கல்வித்தள செயல்பாடுகளுக்கு குரல் கொடுத்தார். வீட்டை விட்டு வெளியே சென்றதே முதல் குற்றம். பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்தது இரண்டாவது குற்றம். சொந்தமாக பள்ளி நடத்திய தனது தந்தை ஜியாவுதின் பள்ளியை மூடாதது ஒரு குற்றம். பெண் தலை நிமிர்ந்தால் குற்றம், ஆணைப் பார்த்தால் குற்றம், உடல் முழுவதையும் மறைக்காமல் ஆடை அணிந்தால் குற்றம், சிரித்தால் குற்றம், தனது சகோதரன் இல்லாமல் பெண் வெளியே சென்றால் குற்றம், வீட்டில் தொலைக்காட்சி பார்த்தால், வைத்திருந்தால், சிடி வைத்திருந்தால் குற்றம். இவ்வளவு குற்றங்களையும் செய்த பெண்கள் தாலிபான்களால் தண்டிக்கப்பட்டார்கள். அதிலிருந்து மீண்டு இன்று உலக பெண் குழுந்தைகளின் கல்விக்காக மலாலா எப்படி போராடி வருகிறார் என்பதே இந்நூலின் உள்ளடக்கம்.
ஆரம்பத்தில் கூறினேன் தன் முதல் ஆசிரியர் தனது பெற்றோரே என்று. ஆம் மலாலாவின் ஆகச்சிறந்த முதல் ஆசிரியர்களாக அவருடைய பெற்றோர் விளங்கினர். குறிப்பாக தந்தையாரின் முற்போக்குச் சிந்தனை தனது குழந்தை மலாலாவை எவ்வித பிற்போக்கும் அண்ட விடாமல் பார்த்துக்கொண்டார். தாய் அவ்வப்போது பதற்றமட்ந்தாலும் அவரும் மலாலாவுக்கு உந்து சக்தியாகவே திகழ்ந்தார். மலாலா சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதைய காட்சிகள், சுடப்பட்டதால் வெளிநாடு செல்லும் சூழல் ஏற்பட்டு அதனால் விரிவடைந்த அவரின் கல்வித்தாகம் இப்படி எல்லாவற்றையும் நமக்கு அவர் வழங்கியிருப்பார். இந்நூலை அனைவரும் வாசிக்க வேண்டும். மலாலா மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டியவர்.
இன்று இந்தியாவில் தேசிய கல்விக்கொள்கை-2020 பின்னோக்கிய கல்வியற்ற காலத்தை மீண்டும் கொண்டுவரத் துடிக்கும் நிலையில் மலாலா இப்போது அதிகம் தேவைப்படுகிறார்.
எதிர்கால சமத்துவ உலகம் அமைய குழந்தைகளின் கல்வியை பாதுகாப்போம்!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.