மொழிபெயர்ப்புக் கவிதைகள்
ஷெல்லி – பகுதி 1
தமிழில் – தங்கேஸ்
ஷெல்லி (1792-1882) ஆங்கிலக் கவிஞர்
ஒரு நூற்றாண்டு உதடுகளால் உச்சரிக்கப்பட்ட பெயர் புரட்சிக்கவிஞன் ஷெல்லியினுடையது. முப்பது ஆண்டுகளே உயிர்த்திருந்த அந்த கவிஞனின்
படைப்புகள் மூவாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வளரக்கூடியது .
ஏனெனில் அவன் குரல் கலகக்காரனின் குரலாயிருந்தது.எந்தத் துன்பத்திலும்
எத்துணைப் பேரிடர்களிலும் மானிடத்தின் மீது நம்பிக்கையிழக்காத குரல் அது.
நம்பிக்கையை மட்டுமே சிறகுகளாகக் கொண்டு ஒரு புதிய வானத்தை
மீட்டெடுக்கப் புறப்பட்ட குரல் அது. சுதந்திரத்தின் மீது தீராவேட்கை கொண்ட குரல் அது. எந்த நாட்டிலும் எந்தவித ஒடுக்கு முறைக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்த ஒரு கலகக்காரனின் குரல் அது மானிடத்திற்கே எதிர்காலம் என்று கனவு கண்டகுரல்அது.
இந்த சுதந்திரக்குரலின் மகத்துவம் கண்டே நம் மகாகவி பாரதி தன்னை
ஷெல்லி தாசன் என்று கம்பீரமாகக் கூவினார். ஐந்து மிகப்பெரிய ஆங்கில ரொமான்டிக் கவிஞர்களில் ஷெல்லி பைரனுக்கு அடுத்ததாகவும் ஜான் கீட்ஸிற்கு முந்தைய இடத்திலும் வருகிறார். ஆனால் ரொமான்டிக் கவிஞர்களிலேயே மிகப்பெரிய வசீகரமும் என்றென்றும் மரிக்காத மகா கவிதைகளையும் விட்டுச்சென்ற மகா கவிஞர் அவர்.
எந்தக் கவிதை வடிவத்திற்கும் தன் கவிதைகளை மாற்றிக்கொள்ளாமல்
தன் கவிதையின் ஆளுமைக்கு தகுந்தாற்போல் கவிதையின் வடிவத்தை மாற்றிக்கொண்ட மகாகலைஞன் அவன். ஓட்ஸ் ,லிரிக்ஸ் மரபுக்கவிதை ரொமான்டிக் கவிதை இரங்கற்பா எதுவாயினும் சரி அதில் ஷெல்லியின் ஆளுமையே நிறைந்திருக்கிறது.
ஷெல்லியைப்பற்றி ஒரு கட்டுரை எழுதுவது என்பது கடலையும் காற்றையும் கைகளில் அள்ளி முடித்துவிட்டேன் என்றுபாவனை செய்வதாகும்…
இப்படிப்பட்ட மகா கவிஞர்களுக்கு வாழ்க்கை ஏன் கசப்பில் எழுதப்படுகிறது என்பது என்றும் புரியாதபுதிர்தான்….
ஷெல்லி இளம் வயதிலிருந்தே கலகக்காரனாக புயல்வீசும் மனம் கொண்டவராகஇருந்தார். எதில் ஒன்றிலும் கட்டுப்படாத புயலைப்போல அவர் மனம் எப்பொழுதும் கொந்தளிக்கும் புயல் சூழ்ந்த கடலாயிருந்தது
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே **நாத்திகத்தின்அவசியம்** என்ற புத்தகம் வெளியிட்டு அதனால் பல்கலைக்கழகத்திலிருந்து விரட்டப்பட்டார். பிறகு செல்லும் இடங்களிலெல்லாம் விரட்டபட்டார்.
முதல் காதலிலும் துரதிர்ஷ்டம்.முழுமை பெறாத காதல் அது. திருமணத்தில் முடிந்து பின்பு அவர் காதலியின் (ஹெரியட்வெஸ்ட்ப்ரூக்) மரணத்தில் முடிந்தது
இரண்டாவது திருமணம் மேரியோடு இலக்கியத்திலும் அறிவுத்துறையிலும் சரிசமமாகப் பங்கு எடுக்கக்கூடிய பெண்மேரி
ஆனாலும் அதுவும்கூட நீட்டிக்கவில்லை…இம்முறை மரணம் வந்து தழுவிக் கொண்டது ஷெல்லியை… இங்கிலாந்திலிருந்து இத்தாலிக்கு சென்ற இடத்தில் ஒரு படகு விபத்தில் அது நடந்து முடிந்தது
(ஓட் டூ வெஸ்ட்விண்ட், மேற்கு காற்றுக்கு இரங்கற்பா) என்ற கவிதையில் நான்ரசித்த வரிகள்
வசந்தம் வராமலா போகும்?
**************************************
ஓ!
கட்டுக்கடங்காத காற்றே!
இலையுதிர்காலத்தின் மூச்சே!
உன் உருவமற்ற இருப்பினை
நான்இவ்வெளியெங்கும் உணர்கிறேன்
ஒரு மந்திரவாதியின் கைகளுக்குக் கட்டுப்பட்டு ஓடும்
பேயுருவங்கள் என
இந்தஉதிர்ந்த இலைகள்
உன்மூச்சொன்றினாலேயே மாயமாகின்றன,,,,,
நிலங்களில் புதைக்கப்பட்ட
சிறகு முளைத்த விதைகளோ
பிணமென மூச்சுப் பேச்சின்றி கிடக்கின்றன
வெப்பத்தை கொண்டு வரும் உன் சகோதரியாம்
வசந்தத்தின் வருகையை எதிர்பார்த்து….
ஓ கட்டுக்கடங்காத காற்றே!
வாழ்க்கையென்னும் முள்ளில் விழுந்து
இரத்தம்சொட்டிக் கொண்டிருக்கிறேன் நான்….
நானொரு உதிர்ந்த இலையாய் இருந்தால்
நானொரு நகரும் மேகமாய் இருந்தால்
உன்னோடு விண் வீதியெங்கும் வலம் வருவேன்
எந்தக் கட்டுப்பாடும்அற்று
காலத்தைக் கடந்தும் அதன் முடிவிலும்
என்னை ஒரு அலையாய்
ஒரு இலையாய்
ஒரு மேகமாய் மாற்றி
உன்னோடு அழைத்துச் செல்லாயோ?
ஓ! என் ரணத்தின் வசந்தமே
உன்னை நான் கேட்கிறேன்
இது இலையுதிர்காலம் என்றால் தான் என்ன
நாளை வசந்தம் வராமலா போகும் ?