“நான் செய்த பிழையா” சிறுகதை – கி.கரோ ரெஜிஸ்
வண்டியில் தான் பணிபுரியும் இடம் நோக்கி சென்றாள் இனியாள்.
அவள் வயது 25. கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறாள். எல்லோரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்டவள். அவள் அழகை விட, அவளின் குணமே எல்லோரையும் கவரும் என்றே கூறலாம்.
வெளியே சிரித்து பேசினாலும், அவளுள் புதைந்து கிடக்கும் சொல்ல முடியாத சில வலிகளை பற்றி யாருக்கும் தெரியாது.
அவள் கல்லூரிக்கு வந்தவுடன் அங்கு சத்யா வந்தாள்.
“இனியா நாளைக்கு என்னுடைய வீட்டுக்கு வரணும் அது நினைவு இருக்கா? என்று வினவ,
“இருக்கு ஆனால்” என்று தயங்க,
“என்ன ஆனால்? நாளைக்கு நீ வருகிறாய் அவ்வளவு தான்” என்று கண்டிப்பாக கூற,
“சரி” என்று சம்மதித்தாள்.
சத்யாவும், இனியாளும் தோழிகள்.
நாளை அவளின் தங்கை மதுமிதாவிற்கு பிறந்தநாள் அதற்கு தான் இந்த அழைப்பு.
விழாவுக்காக ஆகாய நீல நிறத்தில், பரதநாட்டியம் ஆடும் பாவையின் சித்திரங்கள் அங்குமிங்கும் வரைந்து இருந்த சேலையை அணிந்து கொண்டாள்.
எளிமையான அலங்காரத்தில் தன் அறையை விட்டு வெளியே வர, ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர்கள் கண் இமைக்காமல் அவளையே பார்த்தனர்.
அப்படி ஆச்சரியமாக பார்த்தவர்கள் வேறு யாரும் இல்லை அவளின் தந்தை மாணிக்கம், தாய் ஜானகி மற்றும் அண்ணன் பசுபதி தான்.
அவர்களின் பார்வைக்கு என்ன சொல்வது என்று புரியாது நின்றாள்.
ஜானகி அவள் அருகே வந்து, “அழகாக இருக்கிறாய் டா” என்று தலையை வருட,
“நான் சத்யா வீட்டுக்கு போயிட்டு வரேன் மா” என்று கூற,
“சரி டா. பூ வைத்துக்கொண்டு போ” என்றவுடன் அவர் மருமகள் காஞ்சனா, “என்ன அத்தை சொன்னீங்க? பூவா” என்று சற்று உரக்க வினவ,
அங்கு இருந்தவர்களின் முகமும், மனமும் ஒருசேர வாடின.
பசுபதிக்கு மனைவியின் பேச்சால் கோபம் தலைக்கு ஏறியது.
“காஞ்சனா உள்ளே போ” என்று அடக்கப்பட்ட ஆத்திரத்தில் கூற,
இதற்குமேல் நாம் எதாவது பேசினால், கணவனின் கை தான் பேசும் என்பதை உணர்ந்து அறைக்கு சென்றாள்.
அனிச்ச மலரை போல் வாடி போய் நின்ற மகளிடம், “இனியா சிரித்த முகமாக கிளம்பு மா” என்று கூறி வழி அனுப்பினார்.
‘சரி’ என்று தலையை அசைத்து விட்டு கிளம்பினாள்.
சத்யா வீட்டில் எல்லோரும் அவளை இன்முகத்துடன் வரவேற்றனர்.
மதுமிதா “அக்கா ” என்று ஓடிவந்து அணைத்து கொண்டாள்.
அவளுக்கு இனியாளை ரொம்ப பிடிக்கும். அவள் வீட்டுக்கு வரும்போது எல்லாம் அவளோடு தான் சுற்றுவாள்.
பிறந்தநாள் விழாவும் சிறப்பாக முடிய, அவள் புறப்பட்டாள்.
வண்டியில் செல்லும் போது ஒரு கார் தீடிரென இடிக்க , “அம்மா” என்று அலறியவாறு கீழே விழுந்தாள்.
‘அய்யோ’ என்று பதறியவாறு காரை விட்டு வெளியே வந்தவன் விஜய மாறன். அவன் ஒரு மருத்துவன்.
கீழே விழுந்ததால் லேசாக கையில் அடிப்பட்டு இரத்தம் வந்தது.
அவள் அருகே வந்தவன், “சாரிங்க தெரியாமல் இடித்து விட்டேன்” என்று மன்னிப்பு வேண்ட,
“பரவாயில்லை” என்று கூறி விட்டு எழுந்தாள்.
“இரத்தம் வருது. நான் முதலுதவி செய்கிறேன்” என்று முன்வர,
அவளோ சந்தேகமாக பார்க்க,
அதை உணர்ந்து சின்ன சிரிப்புடன், “நான் ஒரு டாக்டர்” என்று கூற,
‘இவரே இடித்து விட்டு மருந்து போடுகிறேன் என்கிறாரே’ என்று மனதில் நினைக்க,
அவள் மனதை சரியாக படித்தவன், “என்ன டா? இவனே இடித்துவிட்டு மருந்து போடுகிறேன் என்கிறானே என்று தானே உங்கள் மனதில் ஓடுது” என்று சரியாக அவன் சொல்ல,
அவளோ திருதிருவென முழித்தாள்.
“சரி எழுந்து வாங்க” என்று அவளை கார் பக்கம் அழைத்து சென்றான்.
பொறுமையாக அவள் கையில் படிந்து இருந்த இரத்தத்தை துடைத்து சுத்தப்படுத்தி, அவளுக்கு வலிக்காத மாதிரி இதமாக மருந்து தடவி கட்டு போட்டுவிட்டான்.
“திரும்பவும் சொல்றேன் சாரி”
“விடுங்க சார்” என்றவளிடம்,
“என்னுடைய பெயர் விஜய்மாறன்” என்று கூறி அவளின் பெயரை அறிய விரும்ப,
“இனியாள்” என்று சொல்லிவிட்டு “நான் கிளம்புகிறேன்” என்று கூறி விடை பெற்றாள்.
செல்லும் அவளையே பார்த்தவனின் மனதில் ‘இனியாள் நல்ல பெயர் தான்’ என்று ரசிக்க,
‘ச்சே என்ன ஆனது எனக்கு’ என்று தலையை தட்டி விட்டு காரில் ஏறினான்.
அவள் வீட்டுக்கு வந்தவுடன் காயத்தை பார்த்து பதறியவர்களிடம் சின்ன அடி தான் என்று கூறி சமாளித்தாள்.
இப்படியே நாட்கள் நகர,
இனியாள் விஜய்மாறனை சந்திக்கும் சூழ்நிலையும் விரைவில் அமைந்தது.
அன்று வியாழக்கிழமை சாய்பாபா கோவிலுக்கு செல்ல, அவனும் அங்கே இருந்தான்.
முதலில் புன்னகையோடு தயங்கி தயங்கி பேச ஆரம்பித்தவர்கள், அதன்பின் மனம்விட்டு பேச தொடங்கினர்.
விஜய்மாறனின் இதமான குணம் இனியாளை அவன் பக்கம் சாய்த்தது.
அதே நிலை தான் அவனுக்கும், முதல் சந்திப்பிலே அவனுள் அவள் நுழைந்துவிட்டாள்.
அப்படி ஒருநாள் இவர்களின் சந்திப்பின்போது,
“உங்களுக்கு என்னை பிடித்து இருக்கு என்று எனக்கு தெரியும் விஜய் ஆனால்” என்ன தயங்க,
“ஆனால் என்ன டா? எதுவாக இருந்தாலும் சொல்லு” என்று கூற,
இனியாள் தன் வாழ்வில் மறைந்து இருந்த கறுப்பு பக்கத்தை அவனிடம் கூறலானாள்.
இனியாள் கல்லூரியில் வேலைக்கு சேரும் முன் ஒரு வரன் அமைந்தது.
அப்படி வந்தவன் தான் தீபன்.
பார்பதற்கு சற்று அடாவடியான குணத்தோடு இருக்க, இவளுக்கு சம்மதமே இல்லை என்றாலும் பெற்றோரின் முகத்துக்காக தலையை ஆட்டினாள்.
இனியாவிடம் எப்போதும் ஒருவித அதிகாரத்தோடு தான் பேசுவான், அதனாலே அவனிடம் ரொம்ப அளவாக தான் பேசுவாள்.
நிச்சயம் நாளை என்றால் அதற்கு முந்தைய நாள் நண்பர்களோடு வெளியே சென்றான்.
இவளோ “இப்போது எதற்கு போறீங்க? வேண்டாம்” என்று மறுப்பு சொல்ல,
“ஏய்!! நான் எங்கே வேண்டுமானலும் போவேன் அதை தடுக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை” என்று சத்தம் போட்டான்.
இவனை தேர்வு செய்தது தவறோ என்று கூட அவளுக்கு தோன்றியது.
நீச்சல் சரியாக தெரியாமல் கடலில் தைரியமாக இறங்க, வேகமாக வந்த அலையில் என்ன செய்வது என்று அவன் யோசிக்கும் முன் கடல் அவனை தன்னை நோக்கி அழைத்து சென்றுவிட்டது.
ஆமாம் அவன் நீரில் மூழ்கி தன் உயிரை விட்டான்.
இந்த செய்தியை கேட்டவுடன் மொத்த குடும்பமும் உடைந்து போனது என்றால்,
வைதேகி வாய் கூசாமல் பொய் கூறினார்.
“இவள் ராசியால் தான் இப்படி” என்று கூறி தன் மகனின் செயலை நியாயப்படுத்தினார்.
இனியாளால் இந்த ராசி இல்லாதவள் என்ற பட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தாள்.
தீபன் செய்த செயலுக்கு சமூகத்தின் முன்னால் இவள் தவறு செய்தது போல் சித்தரிக்கப்பட்டது.
மணமுடிக்க இருந்தவன் இறந்தால், இவள் எதிர்காலம் கேள்விக்குறி ஆனது.
கூடவே காஞ்சனாவும் சில நேரங்களில் ‘அதுக்குள்ள பூ வைக்கிறாய்’ என்று ஒரு சமயம் கூற, அன்று முதல் பூ பக்கமே செல்லவில்லை.
மனதை திசை திருப்ப தான் உடனே வேலையில் சேர்ந்தாள்.
அனைத்தையும் கூறி முடித்துவிட்டு விஜய் முகத்தை காண, “இதில் நீ என்ன தவறு செய்தாய்?” என்று வினவ,
“விஜய்” என்று கண்கள் கலங்க அழைக்க,
“நான் ஒரு டாக்டர். ஒருநாளைக்கு எத்தனையோ பிறப்புகள் மற்றும் இறப்புகளை பார்க்கிறேன். சிலது எதிர்பாராத விதமாக நடக்கும், சிலது அவங்களே விரும்பி அந்த முடிவை ஏற்று கொள்வாங்க. அதேபோல் தான் இங்கேயும் , தீபன் அவரோட முடிவை அவரே தீர்மானித்து விட்டார் அவ்வளவு தான்” என்று எளிதாக அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க,
“ஆனால் விஜய் உங்கள் வீட்டில் இதை எப்படி சொல்வது”
“நான் பார்த்து கொள்கிறேன்” என்று கூறி அவள் கரம் பற்றினான்.
அவளிடம் கூறியபடியே தாயிடம் எதுவும் கூறாமல் அனைத்து ஏற்பாடுகளையும் பார்க்க தொடங்கினான்.
பெண் பார்க்க அனைவரும் அவள் வீட்டில் அமர்ந்து இருந்தனர்.
அப்போது அங்கே வந்த வைதேகி,
“உனக்கு மூளை ஏதும் குழம்பி விட்டதா?” என்று தன் தோழியிடம் கத்த,
“அம்மா அமைதியாக இருங்கள்” என்று கையை பிடித்த மகளின் கையை உதறினார்.
அங்கே கண்ணீரோடு நின்று கொண்டு இருந்த இனியாளை சுட்டி காட்டி, “இவளால் தான் என் மகனை இழந்தேன். எல்லாத்துக்கும் காரணமே இவள் தான் ராசி இல்லாதவள்” என்று சத்தமாக கூற,
விஜய்மாறன் வருத்ததோடு அவள் முகம் நோக்கினான்.
‘பார்த்தாயா!! இதற்கு தான் அப்போதே தயங்கினேன். இப்போது என் நிலையை பாரு’ என்று கண்களால் குற்றம் சாட்டினாள்.
விமலாவுக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது.
“வைதேகி நீ என்ன சொல்கிறாய்?” என்று அதிர்ச்சியோடு கேட்க,
“ஒ!!! குடும்பமே உன்னிடம் இதைப்பற்றி சொல்லாமல் மூடி மறைத்து விட்டாங்களா? நான் சொல்கிறேன் ” என்று அனைத்தையும் கூறி முடித்தார்.
இனியாளை தன் மகன் தீபனுக்கு பெண் பார்த்தது, நிச்சயத்திற்கு முதல் நாள் அவன் இறந்தது வரை கூறிவிட்டார்.
“நீங்கள் யாரும் எதுவுமே சொல்லவில்லையே” என்று பெண் வீட்டாரிடம் வினவ,
“அது எப்படி சொல்வாங்க? இவள் ராசியால் தான் இப்படி எல்லாம் நடந்தது என்று”
அதற்குமேல் பொறுக்காமல் விஜய் தாயிடம்,”எனக்கு இந்த விஷயம் தெரியும் மா” என்று சொல்ல,
“உனக்கு தெரிந்தும், நீ எப்படி இதற்கு சம்மதித்தாய்?” என்று கோபத்தோடு கேட்க,
“நீங்களும் இப்படி பேசலாமா? இதில் இனியா தவறு என்ன?” என்று பதிலுக்கு வினவ,
“நீ என்ன பேசினாலும், நான் இதற்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்” என்று உறுதியாக கூறியவர்.
“இனி பேச எதுவும் இல்லை. இந்த கல்யாணம் நடக்காது” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
“அம்மா” என்ற விஜய்யின் அழைப்பு காற்றில் கரைந்தது.
அவனுக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை, “சரி நான் வருகிறேன்” என்று அவனும் சென்றான்.
அனைத்தையும் செய்துவிட்டு, “நானும் வரேன்” என்று வைதேகி புறப்பட்டார்.
கண்களை கண்ணீர் மறைக்க தன் அறைக்கு சென்ற இனியாள் கதவை அடைத்து கொண்டாள்.
“என்னுடைய பெண்ணுக்கு ஏன் இப்படி நடக்குது” என்று ஜானகி அழுதார்.
இரண்டு நாட்கள் அந்த வீட்டில் அமைதி என்ற ஓசை மட்டுமே நிரம்பி இருந்தது.
அப்போது அங்கு விஜய்மாறன் வந்தான்.
“அங்கேயே நில்லுங்கள்” என்ற இனியாள் குரலில் எல்லோரும் திரும்பி பார்த்தனர்.
“இனியா” என்று அழைக்க,
“வேண்டாம். எதுவும் பேச வேண்டாம்”
“மாப்பிள்ளை சொல்வதை கேளு மா” என்ற தாயிடம்,
“மாப்பிள்ளையா?” என்று அதிசயிக்க,
“உன்னுடைய கோபம் எனக்கு புரிது. தப்பு தான். நீ சொன்னதை நான் கேட்டு இருக்க வேண்டும், அம்மா இப்போது கோபமா இருக்காங்க அது தணிந்தவுடன்” என்று அவன் கூறும்போதே,
“போதும். இனி உங்களுக்கும் எனக்கும் எதுவும் இல்லை. நீங்கள் இங்கே வருவது, இதுவே கடைசியாக இருக்கட்டும். திரும்பவும் வந்தால் நான் உயிரோடு இருக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு செல்ல,
மனம் முழுவதும் பரவிய வலியோடு வெளியே சென்றான்.
இனியாளின் பேச்சு எல்லோரையும் தாக்கியது.
அவளை யாரும் தொந்தரவு செய்யாமல், அவள் போக்கில் விட்டனர்.
விஜய்மாறன் அதன்பின் அங்கு வருவதில்லை.
தோழியை பார்க்க செல்லும் போது, ரோட்டில் ஒரு வயதான பெண்மணி மயங்கி விழுவதைக் கண்டு வேகமாக ஓடி போய் பிடித்தாள்.
அப்போது தான் தெரிந்தது அவர் விஜய்மாறனின் தாய் விமலா என்று…
மயக்கத்தில் கண்களை மூடும் போது, “இனியா” என்று அழைத்து விட்டே மயங்கினார்.
“அம்மா அம்மா” என்று கன்னம் தட்ட, அவரிடம் எந்த அசைவும் இல்லை.
சுற்றி இருப்பவர்களின் உதவியோடு மருத்துவமனையில் சேர்த்தாள்.
விஜய்மாறனுக்கு அழைக்க ,போனை எடுத்தவுடன்,
‘உனக்கு இவ்வளவு நாளா என்கிட்ட பேச கூட நேரமில்லையா?’
‘இப்போது தான் என் நினைவு வந்ததா?’
‘ஏன் அப்படி சொன்னாய்?’
‘எனக்கு எப்படி வலித்தது தெரியுமா?’
என்று சின்ன குழந்தை ஒன்று கோபமாக தன்னை திட்டிய தாயிடம் எப்படி புகார் கூறுமோ அதை போல் அவன் கூற,
இவள் தலையில் அடித்து கொண்டாள்.
அவசரத்திற்கு போன் செய்தால் இவரை என்று பல்லை கடித்து கொண்டு “விஜய்” என்று அழுத்தமாக அழைக்க,
“என்ன டா” என்று பாசமாக கேட்க,
“இங்க உங்களுடைய அம்மாவை ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறேன்” என்று கூற,
“அம்மாக்கு என்ன ஆச்சு” என்று அவன் பதற,
“பயப்பட எதுவும் இல்லை. சாதாரண மயக்கம் தான்”
“சரி நான் வரேன்” என்றவன் அடுத்த பத்து நிமிடத்தில் அங்கே இருந்தான்.
சிறிது நேரத்தில் விமலா கண்விழித்தார்.
முதலில் அவர் கண்கள் இனியாளை தான் தேடியது.
“இனியா” என்று அவள் கரத்தை பிடிக்க,
“இப்போ பரவாயில்லையா மா”என்று அக்கறையாக அவள் கேட்க,
அவள் அன்பில் கண்கள் கலங்க “என்னை மன்னித்து விடு மா” என்றார்.
“என்ன மா? நீங்கள் போய் இப்படி எல்லாம் சொல்றீங்க”
“கோபத்தில் நீ வேண்டாம் என்றேன், ஆனால் நீ எனக்கு உதவி செய்து இருக்கிறாய்”
“இதில் என்ன மா இருக்கு” என்றவள்
“நான் கிளம்புகிறேன் மா. உங்கள் உடம்பை பார்த்து கொள்ளுங்கள்” என்று கிளம்பியவளிடம்,
அவளையே பார்த்து கொண்டு இருந்த விஜயின் முகம் நொடியில் வாடியது.
“ஒரு நிமிஷம்” என்று அவர் தடுக்க,
‘என்ன’ என்பதுபோல் திரும்பி பார்த்தாள்.
மகனின் முகத்தை பார்த்து கொண்டே, “வரும் வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு அப்போவே நிச்சயம் வைத்து கொள்ளலாம். அதுக்கான ஏற்பாடுகளை உன்னுடைய வீட்டில் பார்க்க சொல்லு” என்று கூற,
“அம்மா” என்று விஜய்மாறன் சந்தோஷத்தில் கத்த,
கண்களை அகல விரித்து அவரை பார்க்க ‘நான் கூறியது உண்மை தான்’ என்பதுபோல் அவள் கரம் பிடித்து அழுத்தினார்.
உடனே விஜய்மாறன் தன் தாயை கட்டிப்பிடித்து முத்தம் ஒன்று கொடுத்து, ” ரொம்ப தேங்க்ஸ் மா” என்று முகம் கொள்ள புன்னகையோடு கூற,
இத்தனை நாட்கள் மகனின் முகத்தில் இருந்த வாட்டம், இன்று சுவடே இல்லாமல் மறைந்து போனதை அந்த தாய் உணர்நதார்.
“உன்னுடைய இந்த சிரிப்பை ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்போது தான் நான் பார்க்கிறேன்” என்று கூறியவர்.
இனியாவை அருகே அழைத்து அவளின் கையை விஜயின் கையோடு சேர்த்து வைத்தார்.
விஜய் இனியாவை காதலோடு ஒரு காந்த பார்வை பார்க்க, அந்த பார்வையில் பாவையானவள் நாணத்தோடு மயங்கினாள்.
அதன்பின் திருமண வேலைகள் எல்லாம் வேகமாக நடந்தது.
அடுத்து வந்த முகூர்த்தத்தில் அவள் திருமதி. இனியாள் விஜய்மாறன் ஆனாள்.
அன்று இரவு தனிமையில் இருவரும் சந்திக்கும் போது இனியாவின் முகம் நாணம் என்ற அலங்காரத்தை பூசிக்கொண்டது.
அவளின் முகத்தை பார்த்துக்கொண்டே வந்த விஜய், “என்ன மேடம்” என்று வினவ,
நொடியில் கண்கள் கலங்க, “நீங்கள் மட்டும் என்னுடைய வாழ்க்கையில் வராமல் இருந்து இருந்தால், நான் ” என்று மேலும் ஏதோ கூற வந்தவளை அவன் தடுத்தான்.
“இனியா மா போதும் . முடிந்து போனதை பற்றி நினைத்து நீ எப்போதும் கலங்க கூடாது. உனக்கு எல்லாமுமாக நான் இருக்கிறேன், இனியும் இருப்பேன்” என்றவன் அவளின் நெற்றியில் காதலோடு முத்தம் கொடுத்தான்.
நான் என்ன பிழை செய்தேன் என்று தவித்தவளிடம், நீ எதுவும் செய்யவில்லை விதி செய்த பிழையால் தான், நீ எனக்கு கிடைத்தாய் என்று அவளின் துணைவன் கூறினான்.
எழுதியவர் :
✍🏻 – கி.கரோ ரெஜிஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

