*நடை* சிறுகதை – உதயசங்கர்

Nadai (நடை) Short Story by Writer Udhaya Sankar (உதயசங்கர்). Book Day And Bharathi TV Are Branch of Bharathi Puthakalayam.யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நாட்டு மக்கள் உடலை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். கண்ணுக்குப் புலப்படாத எதிரியை வீழ்த்த உடலுறுதி வேண்டும். இரண்டு உலக யுத்தங்களை விட மிக மோசமானதாக மூன்றாம் உலக யுத்தம் இருக்கும். எப்போதும் எதற்கும் தயாராக இருக்க வேண்டுமென்று எங்கள் நாட்டு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள். உடலைப் பேணுங்களென்று தொலைக்காட்சிகள் அறிவித்துக் கொண்டேயிருந்தார்கள். எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மக்கள் வீட்டுக்குள்ளேயே மரண பயத்துடன் தின்று கொண்டேயிருந்தார்கள். பாடிக்கொண்டேயிருந்தார்கள். ஆடிக்கொண்டேயிருந்தார்கள். பேசிக்கொண்டேயிருந்தார்கள். சண்டை போட்டுக்கொண்டேயிருந்தார்கள். புணர்ந்து கொண்டேயிருந்தார்கள். ஓடிக் கொண்டேயிருந்தார்கள். குற்றோட்டம் ஓடினார்கள். குறுநடை நடந்தார்கள். பெருநடை நடந்தார்கள். 

எல்லாம் வீட்டுக்குள்ளேயும், மொட்டை மாடியிலும் நடந்தது.

வழக்கத்துக்கு மாறாக இதுவரை குண்டாகாதவர்கள் உருண்டு திரண்டார்கள். ஒருபோதும் சதை வைக்காது என்று சபிக்கப்பட்டவர்களெல்லாம் சதைக்கோளமாக மாறினார்கள். அதைக் கண்ணாடியில் பார்த்தவர்கள் மேலும் நடந்தார்கள். நடந்து முடிந்ததும் தின்றார்கள். தின்று முடித்து விட்டு நடந்தார்கள்.

உலகம் ஒரு விசித்திரமான அபத்தநாடகமேடையாக மாறியிருந்தது.

நானும் என் வீட்டு மொட்டை மாடியில் நடந்தேன். முதலில் காலை, மாலை நடந்தேன். பின்னர் காலை, மதியம், மாலை, இரவு, நடந்தேன். அப்புறம் தோன்றும்போதெல்லாம் நடந்தேன். நடப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. உறங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் நடந்து கொண்டேயிருந்தேன். தூங்கும் போதுகூட நான் கால்களை அசைத்துக் கொண்டேயிருப்பதாக மனைவி கூறினார். நடை என்னுடைய இதயத்துடிப்பைப் போல மாறிவிட்டது. எங்கு இடமிருந்தாலும் நடந்தேன். இரண்டடி அகலமே இருந்த என் வீட்டுப்பாத்ரூமுக்குள்ளும் நடந்தேன். நடப்பதினால் மட்டுமே மூன்றாவது உலகயுத்தத்தைத் தடுக்கமுடியுமென்று நினைத்தது போல நடந்து கொண்டிருந்தேன்.

மின்னம்பலம்:நடைப்பயிற்சி: ஆர்வலர்களின் குழப்பமும் வல்லுநர்கள் விளக்கமும்

ஒருநாள் நள்ளிரவு நான் மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தபோது அப்படியே மொட்டைமாடியை விட்டு வெளியே காற்றில் நடக்க ஆரம்பித்தேன். காற்று நின்றபோது அப்படியே மிதந்திறங்கி தெருவில் நடக்க ஆரம்பித்தேன். தெருவிலிருந்து சாலையில் நடக்க ஆரம்பித்தேன். சாலையிலிருந்து பெருஞ்சாலையில் நடக்க ஆரம்பித்தேன். பெருஞ்சாலையிலிருந்து நெடுஞ்சாலையில் நடக்க ஆரம்பித்தேன். திரும்பிப்பார்த்தால் என்னுடன் சேர்ந்து லட்சக்கணக்கானவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். 

அவர்கள் தங்களுடைய உடல் பருமனைக் குறைப்பதற்காக நடக்கவில்லை. காய்ந்து சருகாகி உலர்ந்த அவர்கள் ஒருவேளை உணவுக்காக நடந்து கொண்டிருந்தார்கள். ஒருவாய்த்தண்ணீருக்காக நடந்தார்கள். தங்களுடைய உறவுகளைத் தேடி நடந்தார்கள். ஒரு ஆறுதல் சொல்லுக்காக நடந்தார்கள். தங்களுடைய வேர்களைத் தேடி நடந்தார்கள். இறுதிமூச்சை தங்களுடைய சொந்த மண்ணில் விடவேண்டுமென்ற வைராக்கியத்துக்காக நடந்தார்கள். அவர்களுடன் நானும் நடந்தேன்.

நாங்கள் நடந்து நடந்து பூமியின் விளிம்பிற்கே போய்ச் சேர்ந்தோம். நிமிர்ந்து பார்த்தபோது பூமி விளிம்பிற்கே வந்து விட்டோம். 

பூமி எதிர்த்திசையில் சுற்ற ஆரம்பித்தது.

மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். சூரியனின் சிவந்த ஒளி எங்கள் பாதங்களில் வீழ்ந்தது.

உதயசங்கர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.