நதிக்கரை அரசியல் – நூல் அறிமுகம்
– பேரா. வ.பொன்னுராஜ்
நூலின் தகவல்கள் :
நூல் : நதிக்கரை அரசியல்
ஆசிரியர் :கே. ஜி. பாஸ்கரன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ .117
நூலைப் பெற : thamizhbooks.com
மனிதகுல வரலாற்றில் நதிகளுக்கும் நதி தீரங்களுக்கும் மிகப் பெரிய பங்கிருக்கிறது. கிடைத்ததைத் தின்று நாடோடியாகத் திரிந்த நம் முன்னோர்கள் நதிக்கரைகளைக் கண்டதும்அங்கே வசிக்கத் தொடங்கினர் (settlement) என்று வரலாறு சொல்கிறது. ஓரிடத்தில் மனிதன்வசிக்கத் தொடங்கியதும் காட்டு விலங்காக இருந்துவந்த மனிதனை நாகரீகம் பற்றிக்கொண்டது. சிந்து சமவெளி நாகரீகம், நைல் நதி நாகரீகம், சீன நாகரீகம் என்று அனைத்துநாகரீகங்களும் நதிக்கரைக்களில்தான் பிறந்துள்ளன. எனவேதான் நதி தீரங்களை நாகரீகத்தின் தொட்டில் என்று அழைக்கிறோம். நதிக்கரைகள் நாகரீகங்களுக்கு மட்டும்சாட்சியாகத் திகழவில்லை. பல அரசியல் நிகழ்வுகளும் நதிகரைகளில்தான் அரங்கேறியுள்ளன. இளம் எழுத்தாளர் கே.ஜி.பாஸ்கரனின் ‘நதிக்கரை அரசியல்’ என்ற கட்டுரைத் தொகுப்பும்அப்படிபட்ட சில அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பேசுகிறது.
மார்க்சீய அழகோடு…….
இது, தோழர். கே.ஜி.பாஸ்கரனின் இரண்டாவது புத்தகம். “மஞ்சள் பையும் மோப்பநாயும்” என்ற அவரின் முதல் புத்தகம் ஒரு சிறு கதைத் தொகுப்பு. எந்த ஒரு படைப்பாளியும்தான் சந்திக்கும் மனிதர்களை கதை நாயகர்களாகவும், மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைக்கருப்பொருளாகவும் கொண்டு, தன் கற்பனையை வண்ணங்களாக்கி, எழுத்தோவியம்தீட்டுகிறான். அத்தகைய படைப்புக்கள் மிகச்சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களால்உருவாகிற போது அவ்வோயிங்களில் சில, வாசகனோடு பேசும்; வேறு சில, வாசகனைப் பேசவைக்கும், அழ வைக்கும், சினங்கொள்ள வைக்கும், சீற்றம் கொள்ள வைக்கும். அந்தஎழுத்தாற்றல் ஓர் இடதுசாரி எழுத்தாளனுக்குக் கூடிவரும் போது அவனது படைப்புக்கள்மார்க்சீய அழகில் மெருகேறும். கே.ஜி.பாஸ்கரனின் எழுத்தில் கற்பனைத் திறனும், மார்க்சீயஅழகும், சமூக யதார்த்தமும் கொட்டிக் கிடைப்பதைக் காண முடியும். சிலருக்கு அழகாக கதைஎழுத வரும்; சிலருக்கு உணர்ச்சிப் பூர்வமான கட்டுரை எழுத வரும். ஒரு சிலரால் மட்டுமேபொருள் பொதிந்த கட்டுரைகளும், உள்ளத்தைத் தொடும் கதைகளும் எழுத வரும். கே.ஜி.பாஸ்கரன் மூன்றாவது வகையைச் சார்ந்தவர். “மஞ்சள் பையும் மோப்ப நாயும்” என்றகதைத் தொகுப்பில் காணப்படும் துள்ளல் நடையும், சமூக அவலம் குறித்த நையாண்டியும், சமூக அக்கறையையும் அவரின் கட்டுரைத் தொகுப்பிலும் தடம் பதிக்கின்றன.
2018, 2019, 2020, 2012 – இந்நான்காண்டுகளில் தோழர்.பாஸ்கரன், தாமிரபரணிநதிக்ககரையில் பார்த்த சில நிகழ்வுகள், சந்தித்த சில மனிதர்கள், அவருக்கேற்பட்ட சிலஅனுபவங்கள், “நதிக்கரை அரசியல்” என்ற கட்டுரைகளின் தொகுப்பாக உருமாறி உள்ளன. அது அரசியல் கட்டுரைகளின் தொகுப்புதான், ஆனால் கட்டுரை எதுவும் கட்சி அரசியலைப்பேசவில்லை. ஒரு கட்டுரை சிலை இடிப்பு அரசியலைப் பேசுகிறது; மற்றொன்று மக்களைப்பாதித்த பொருளாதார அரசியலைப் பேசுகிறது; வேறொன்று சாதி வெறி அரசியலையும்இன்னொன்று கந்துவட்டி அரசியலையும் பேசுகிறது என்றால் பிரிதொன்று இந்தியபாரம்பரியமான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை எடுத்துச் சொல்கிறது; நதி நீரையேஅரசியலாக்கும் மதவெறி அரசியல் பற்றி இரு கட்டுரைகள் அலசுகின்றன. ஒவ்வொருகட்டுரையும் கதையாகத் தொடங்கி, மெல்லிய நீரோடையாக ஓடி, உணர்ச்சிக் கொப்பளமாக, ஆவேச குரலாக, தத்துவார்த்த வரிகளாக, சுடும் உண்மையாக, அறிவார்ந்த தகவல்களாகஉருமாறி உருமாறி முற்றுப் பெறுகின்றன. ஆக, எந்த கட்டுரையும் வரட்டுத்தனமான கட்டுரைஅல்ல என்பதில்தான் பாஸ்கரன் என்ற படைப்பாளியின் வெற்றி அடங்கியிருக்கிறது.
லெனின் சிலை எழுந்த கதை
சிலை இடிப்பு அரசியல் என்பது எப்போதும் வெறுப்பு அரசியலின் வெளிப்பாடகவேஇருந்திருக்கிறது. சோவியத் யூனியன் சிதறுண்டபோது கம்யூனிச எதிர்ப்பாளர்கள் லெனின்சிலையை இடித்துத் தங்கள் வெற்றியைக் கொண்டாடினார்கள். உண்மையில் அது வெற்றிக்கொண்டாட்டமல்ல, மார்க்சீயத் தத்துவத்தை, தத்துவத்தால் எதிர்க்க முடியாத வெறுப்பின்வெளிப்பாடு. அந்நிகழ்வால் லெனின் பெருமை களங்கப்படவில்லை, மாறாக லெனின்பால்மேலும் ஆயிரக்கணக்கானோர் ஈர்க்கப்பட்டனர். தமிழகத்தில் பெரியார் சிலை நாசம்செய்யப்பட்டது. அதனால் பெரியாரின் பெருமை மாசடைந்திடவில்லை. மாறாக,மீண்டும்மீண்டும் பெரியார் குறித்துப் பேசிப்பேசி தமிழகம் பெருமைப்பட்டது. அது போல திரிபுராவில்லெனின் சிலை இடியுண்டபோது எழுந்த அதிர்வலைகள் குறித்த ஓர் உரையாடலோடுதொடங்குகிறது, முதல்கட்டுரை. அந்த உரையாடலில், ‘திருநெல்வேலியில் லெனினுக்கு ஏன்ஒரு சிலை எழுப்பக்கூடாது?’ என்ற பொறி தெறிக்கிறது. அப்போது தெறித்த பொறி எப்படிதிருநெல்வேலி கட்சி அலுவலகத்தில் நெடிதுயர்ந்த உயிர்ப்பு மிக்க லெனின் சிலையாகஎழுந்தது என்பதை , ‘ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடிக்கிற போது அது பெளதீகசக்தியாகிறது’ என்ற காரல் மார்க்சின் மேற்கோளைக் காட்டி, உணர்ச்சிப் பெருக்கோடுசொல்லி முடிகிறது கட்டுரை.
அப்பா வேலைக்குப் போகவில்லை
கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த கட்டுமான தொழிலாளியின் மகள் ஒருத்திகடனுக்குச் சாமான் வாங்க ஒரு மளிகைக்கடை முன்பு காத்து நிற்கும் கதையைச் சொல்லும் வரிகளோடு தொடங்குகிறது ‘அப்பா வேலைக்குப் போகவில்லை’என்ற கட்டுரை. சிறுகுறுவணிகர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என்று தொடர்ந்து சீரழியும்இந்திய பொருளாதாரத்தால் தாக்குண்ட மக்கள் திரள் பற்றிப் உணர்ச்சிப் பொங்க பேசுகிறஇக்கட்டுரை “கழனிகளில், செங்கற்சூளைகளில், வானுயர்ந்து நிற்கும் கட்டிடச் சாரங்களில், பீடி சுற்றும் முற்றங்களில், தேயிலைத் தோட்டங்களில், சவாரியின்றி நிற்கும் ஆட்டோக்களில்இந்திய ஆன்மாவின் அழுகுரலைக் கேட்டோம். அழுகுரலை இனி போர்க்குரலாக மாற்றுவோம்” என்று ஆவேசமாக முடிவது அழகு.
அப்பாவைக் காணோம்…..
கந்துவட்டி அரசியலுக்குப் பலியான கோபி என்ற ஏழை ஆட்டோ ஓட்டுநரின் கதையைஅழகாக, அழுத்தமாக விவரிக்கிற கட்டுரை கோபியின் கதை. அப்பா, அம்மா, மனைவி, இருமகள்கள் மற்றும் அநாதைகளாகிப் போன அக்காவின் இரு மகள்கள் என்று பெரியகுடும்பத்தைச் சுமக்கிற கோபி குடும்பச் சுமை தாங்க கந்துவட்டிக்குக் கடன் வாங்கி கடன்சுழலில் சிக்கிக் கொள்கிறான். அதே சமயம் தான் வாழும் தாம்பிரபரணி நதிக்கரையில்அமைந்த கைலாசபுரம் பகுதி மக்கள் பிரச்சனைகளிலும் தலைமையேற்றுப் போராட்டக் களம்காண்கிறான். இதனால் சமூக விரோதிகளாலும் கந்துவட்டிக் கும்பலாலும் வன்முறைமிரட்டலுக்கு ஆளாகும் கோபி இறுதியில் கந்துவட்டிக் கும்பலால் கொடூரமாகக்கொல்லப்படுகிறான். நீதி கேட்டு, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மறியல்போராட்டத்தில் பங்கு பெற்ற கோபியின் மனைவி மூத்த மகள் உள்ளிட்டநூற்றுக்கணக்கானோரை காவல் துறை கைது செய்கிறது. இச்செய்தி மறுநாள்செய்தித்தாள்களில் படத்துடன் வெளிவருகிறது. வழக்கமாக செய்தித்தாள்களில் வரும்போராட்டப் படங்களில் அப்பாவின் படத்தைப் பார்த்துப் பழகிப்போன இளைய மகள், கோபியின் கொலைக்கு நீதி கேட்கும் போராட்டப் படத்தில் அப்பாவைத் தேடிவிட்டு‘அப்பாவை எங்கே காணோம்?’ என்று கேட்கிறாள். இந்த உண்மை கதையைப் – கட்டுரையை – படித்து முடிக்கிற போது தன் கன்னத்தில் வழியும் கண்ணீரை எந்த ஒரு வாசகராலும் தடுக்கமுடியாது.
நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்……
சாதி வெறிக்குப் பலியான கல்லூரி மாணவன் அசோக்கின் கதை (கட்டுரை) ‘நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்’ என்ற வரிகளோடு தொடங்குகிறது. அசோக் ஒரு கல்லூரி மாணவன். தாமிரபரணி கரையோரமுள்ள ‘கரையிருப்பு’ பகுதியில் வாழும் தலித் குடும்பத்தைச் சேர்ந்தஅவன் இடதுசாரி சிந்தனை கொண்ட சமூக செயல் வீரனாகவும் இருக்கிறான். சாதிவெறிக்கும்பல் அவனை வெட்டிச்சாய்க்கத் துரத்தும் போது அவன் ஓடிக்கொண்டே தன்னைப்பற்றி, சமூகம் பற்றி, சாதிய பாகுபாடுபற்றி, தான் சார்ந்துள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கப் பணிகுறித்து பேசுவது போல அமைந்துள்ள மொழி நடை கட்டுரைக்கு உயிர்ப்பும் துடிப்பும்அளிக்கிறது. “எனக்கு 4 வயது இருக்கும் போது எங்கள் ஊர் கொளுத்தப்பட்டது. நெருப்பின்நாக்குகள் கக்கிய வெம்மை இங்கு யாவரும் சமமல்ல’ என்பதை எனக்கு உணர்த்தியது “……… “கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை/ சாதிக் கொடுமைகள் வேண்டாம்/ அன்புதன்னில் செழுத்திடும் இவ்வையம் என்ற பாரதி வரிகளை என்னைக் கொலைவெறியோடுதுரத்துபவர்கள் படிக்கவில்லையா” …….. போன்ற கட்டுரை வரிகள் படிப்பவரை நெகிழவைக்கும்.
நதிநீர் அரசியல்
நதிக்கரையில் அரங்கேறும் கட்டுரைகளுக்கிடையில் நதிநீரில் நடந்தேறும் வணிகஅரசியலையும் மதவெறி அரசியலையும் அம்பலப்படுத்தும் இரு கட்டுரைகள் உள்ளன. மக்களின்தாகம் தீர்ககும் தாமிரபரணி நதிநீர், பல்லாயிரக் கணக்கான விளைநிலங்களுக்கு நீராதாரமானதாமிரபரணி தண்ணீர் கார்ப்ரேட்டுகளின் கைவண்ணத்தில் கடைச்சரக்காவதை ஆவேசமாகச்சொல்லுகிற கதை, பல அதிர வைக்கும் புள்ளிவிவரங்களைப் பட்டியலிடுகிறது. ‘ஒரு லிட்டர்தண்ணீரை 20 ரூபாய்க்கு விற்கிற பெப்சி மற்றும் கோலா நிறுவனங்களுக்கு தமிழக அரசு 10 லிட்டர் தண்ணீரை வெறும் 37 பைசா விலைக்கு விற்கிறது. இந்த கொள்ளை போதாதென்று 70 ஏக்கர் நிலத்தைஆண்டொன்றிற்கு ஒரு ரூபாய் வீதம் 98 வருடத்திற்கு குத்தகைக்குவிட்டுள்ளது.’ இதன் பின்னணியிலுள்ள சர்வ தேச வணிக அரசியலையும் இக்கட்டுரைவிளக்குகிறது. எரி பொருள் எண்ணெய்க்கு ஈடாக லாபம் தரும் சரக்காக ஆற்று நீரை மாற்றும்வணிகத்தில் ஒன்றல்ல இரண்டல்ல பல பன்னாட்டு நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இவர்களின்லாபவெறி உலகெங்கும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் பூமியை மலடாக்கி வருகிறதுஎன்பதையும் இந்தியாவில் 127 தண்ணீர் ATM இயந்திரங்கள் நடைமுறைப் பயன்பாட்டிற்குவந்தவிட்டதையும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
பன்னாட்டு வணிக வேட்டை ஒருபுறம் என்றால் மறுபுறம் மதவெறிக் கும்பலின்கீழ்த்தரமான அரசியல் அன்னை தாமிரபரணியை சீரழிக்கிறது. நதியை வழிபடுவது என்பதுபழந்தமிழர் பண்பாடு. ஆடிப் பெருக்கு வேளாண் சமூக வழிபாடுகளில் சிறப்பு மிக்க ஒன்று. ஆனால் மகாபுஷ்கரம் என்பது உள்நோக்கத்தோடுத் திட்டமிட்டு மக்கள் மீது திணிக்கப்பட்டவிழா என்பதை ஆதாரங்களோடு கட்டுரை விளக்குகிறது. வான் பொய்ப்பினும் தான் பொய்யாபொருநை என்று புகழ்பட்ட தாமிரபரணி இந்து இஸ்லாம் என்று அனைத்து மக்களையும்அரவணைக்கிற போது அதற்கு மதச்சாயம் பூசி அரசியல் ஆதாயம் தேட முனையும் மதவெறிக்கும்பலின் முகத்திரையைக் கிழிக்கிற வாதங்களைக் கட்டுரையில் காண முடிகிறது. திருநெல்வேலி மாநகரத்தை அடுத்துள்ள முறப்பநாடு என்ற கிராமத்து ஆற்றுப்படுகையில்மட்டும் மகாபுஷ்கர நிகழ்வை ஒட்டி 6 லட்சம் மக்கள் நீராடி உள்ளனர் என்ற காவல்துறைகணிப்பைச் சுட்டிக்காட்டி மதவெறி அரசியலின் ஆபத்து குறித்து கட்டுரை எச்சரிக்கிறது.
ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலே மூச்சாய்…….
செக்கிழுத்த செம்மல் வ உ சி யின் பலர் அறியாத தொழிற்சங்கப் பணி குறித்த, உலகறிந்தகம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான டிமிட்ரோவின் வாழ்வும் பணியும் குறித்த, தமிழககம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெருமைமிகு பங்களித்த ஏ.நல்லசிவன் குறித்த கட்டுரைகள் மனநிறைவைத் தருகின்றன. ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை தன் உயிர் மூச்சாகக்கொண்டிருந்த இம்மூன்று மாமனிதர்களைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்டிருப்பதுஇந்நூலின் மற்றொரு சிறப்பு.
நிறைவாக…
தோழர். கே.ஜி.பாஸ்கரனின் சிறுகதைத் தொகுப்பு மற்றும் நதிக்கரை அரசியல் என்றகட்டுரைத் தொகுப்பு இரண்டிற்கும் இடையில் ஒற்றுமையும் உண்டு வேறுபாடும் உண்டு. சிறுகதை தொகுப்பு அவரின் கற்பனை வளத்தைக் காட்டுகிறது. கட்டுரைத் தொகுப்புசெய்திகளைச் சுவைபடச் சொல்லும் திறனைக் காட்டுகிறது. முன்னது சமூக அவலத்தைப் படம்பிடிக்கிற போது பின்னது இந்த சமூகத்தில் நிலவும் பல்வகை அரசியலின் வடம் பிடிக்கிறது. கதையோ கட்டுரையோ வாசகனைத் தன்னோடு பயணம் செய்ய வைப்பதில் ஆசிரியர் வெற்றிபெருகிறார் என்பதில் ஐயமில்லை. மொத்தத்தில் இரண்டும் கட்டியம் கூறும் ஒரே செய்திஇதுதான்: தாமிரபரணி மற்றொரு சிறந்த எழுத்தாளனைத் தந்திருக்கிறது.
நூல் அறிமுகம் எழுதியவர் :
– பேரா. வ.பொன்னுராஜ்
Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.