ஆர். நூருல்லா (R.Noorullah) எழுதிய நடிகர்களின் அரசியல் அரிதாரம் (Nadigarkalin Arasiyil Aritharam) | Politics Books - https://bookday.in/

நடிகர்களின் அரசியல் அரிதாரம் – நூல் அறிமுகம்

நடிகர்களின் அரசியல் அரிதாரம் – நூல் அறிமுகம்

நாளிதழ்ச் செய்திக் களத்தில் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாகத் தலைமைச் செய்தியாளராகப் புழங்கிய இந்த நூலின் ஆசிரியர் நூருல்லா (R.Noorullah)  தன் பணிக் காலத்தில் பெற்ற அனுபவங்கள் ஏராளமானவை.அவற்றின் சுவாரஸ்யமான சம்பவங்களை வளமான வார்த்தைகளால் வடித்தெடுத்துப் பதிப்பிக்க வேண்டும் என்ற அவரின் எண்ணம் பாராட்டுக்குரியது.

மூத்த பத்திரிகையாளர்களின் ஒவ்வொரு இதழியல் சார்ந்த அனுபவமும் அடுத்த தலைமுறைச் செய்தியாளர்களுக்குப் பாடமாகவும் தொழில்முறை வழிகாட்டுதலாகவும் அமையும். அத்தகைய நடைமுறைத் தகவல்களின் உரைகள் வரலாற்று பெட்டகமாய்த் திகழும்.தமிழக அரசியல் நிகழ்வுகளில் பல கட்டங்கள் இருள் மண்டிக் கிடக்கின்றன. அவற்றின் மீது ஒளியைப் பாய்ச்சக் கூடிய வல்லமை ஓர் அனுபவமிக்க செய்தியாளரின் சிந்தைக்கு மட்டுமே உண்டு.

தினம் தினம் செய்தியாகிக் கொண்டிருப்பவர்கள் செய்தியாளர்களோடு பேசும்போது, செய்திக்கு அல்ல தங்கள் சிந்தைக்கு என்று கூறிப் பல தகவல்களைப் பேசுவார்கள். அவைதான் அரசியல் களத்தின் அடிப்படைக் கூறுகள். சர்ச்சைக்குரிய அந்த காலகட்டம் கடந்த பிறகு, அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது, அந்த கால வரலாற்றை முழுமையாக புரிந்து கொள்வதற்குப் உதவியாக அமையும்.அந்த வகையில், நூருல்லாவின் “நடிகர்களின் அரசியல் அரிதாரம்” என்ற நூல் எண்ணிய நோக்கை எண்ணியாங்கு எய்துகிறது.

இந்த நூலின் உட்கிடக்கைகள் தேடித் திரட்டிய பொழிவுகள் அல்ல. இவை அனைத்துமே அனுபவப் பகிர்வுகள் என்று ஆசிரியர் தன் முன்னுரையில் வெளிப்படுத்தி இருப்பது, அவரின் விரிந்து பரந்த ஆளுமைத் தொடர்புகளின் அடையாளத்தை காட்டுகிறது.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த், ஜெயலலிதா, பாக்யராஜ், சோ, லதா மங்கேஷ்கர், இளையராஜா, கமலஹாசன், ஜெய்சங்கர், ஹேமமாலினி, விஜய் என்றவாறு ரசிகர்களின் இதயங்களை வென்றெடுத்து உயர்ந்த திரை நட்சத்திரங்கள் அரசியலில் நுழைந்த ருசிகரத் தகவல்களை அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கும் வகையில் நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு படைப்புமே இதுவரை எங்கும் படிக்காததும், கேட்காததும், அறியாததுமான தகவல்களாகவே இருப்பதால், படிக்கப் படிக்க சுவாரஸ்யம் கூடுகிறது. நடிகர் விஜய் களமாடத் தொடங்கிய அரசியல், எந்த கோணத்தில் அடித்தளத்தை அமைத்தது என்று ஆசிரியர் வடித்திருக்கும் வாசகங்கள் வியக்க வைக்கின்றன.

படைப்புகள் பலவற்றுக்கு அணி சேர்க்கும் வகையில் படங்களும் பவனி வருவது வாசகருக்கு பரவசத்தை ஏற்படுத்துகின்றன. அரசியலில் ஆளுமையாக மாறுவதற்கு திரைப்பட உலகத்தின் செல்வாக்கு எத்தகைய ஆழமான அடித்தளத்தை அமைத்துத் தருகிறது என்பதற்கான அழகு மிகு அர்த்தங்கள் இந்த நூலில் பொதிந்து ததும்புகின்றன.

நடிகர்களின் அரசியல் அரிதாரம் நுால் வெளியீடு

200 பக்கங்களில் இந்த நூல் அமைந்துள்ளது.என்றாலும்,நூல் முழுவதும் 2000 தகவல்கள் விரவிக் கிடப்பதாகவே தோன்றுகிறது. வெற்றி முகத்தோரின் தேசிய கவனத்தைப் பற்றிப் பிடித்தவர் என்ற காரணத்தால், இந்தியாவைப் பற்றிய தகவல்கள் கூடுதலாக இருக்க காண்கிறோம். எம்ஜிஆர் மறைந்து பல தலைமுறைகள் தாண்டி இருந்தாலும், இன்னும் அவரின் பெயர் மற்றும் புகழ் மக்கள் மத்தியில் மங்காமல் பொங்கி வருவதற்குக் காரணமான தகவல்கள், இந்த நூலில் நவரசம் நடமாடும் வகையில் நவிலப் பட்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தொழில் போட்டியாளர்கள் என்று மட்டுமே ரசிகர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கிடையில் இருந்த சகோதர பாசத்தின் உருக்கமான நெருக்கம் இந்த நூலின் மூலமாகப் பட்டவர்த்தனமாக பறை சாற்றப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வராகி அகில இந்திய அரசியலையே கலக்கி எடுத்தவர் என்.டி. ராமராவ். அவரே கூட, “சினிமாவிலும் சரி… அரசியலிலும் சரி, அண்ணன் எம்.ஜி.ஆர்.தான் என் குருநாதர்” என்று பகிரங்கப் பிரகடனம் செய்திருப்பதன் மூலமாக எம்.ஜி.ஆரின் ஆளுமை உச்சம் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெளிவு பெறுகிறது. “விஜய்க்கு யவ்வன கர்வ நோய்” என்று குறிப்பிட்ட ஆசிரியர் நூருல்லா, அதனை விளக்குவதற்குக் கையாண்ட பாணி நூலைப் படிக்கும் எல்லோருக்குமே பிடிக்கும் வகையில் உள்ளது.

சினிமா மற்றும் அரசியல் என்பதுடன் நின்று விடாமல், அதனை ஒட்டிய இதழியல் பின்புலங்களின் புதிய தகவல்களும் இந்த நூலில் வரிசை கட்டி நின்று வளமான வார்த்தைகள் மிடுக்கான உடுக்கைகளாய்த் தென்படுகின்றன.

தி.மு.க.வில் எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சியால், சிவாஜி காங்கிரசுக்குச் சென்றார். மூப்பனாருடன் கூடுதல் நெருக்கத்தால் ரஜினிகாந்த் உச்சத்தை தொட்டதால், விஜயகாந்த் தனிக்கட்சியில் பயணிக்க வேண்டி இருந்தது என்பவை எல்லாம் தமிழக அரசியலை உண்டிப்பாக கவனித்த அரசியல் விமர்சகரின் பாணியில் செய்தியாளர் நூருல்லா சுட்டிக்காட்டி இருக்கிறார்.

கற்பனைக் கருத்துக்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்ற எழுத்தாளர்களுக்கு மத்தியில், அரசியல் வரலாற்றின் இருண்ட பக்கங்களுக்கு ஒளி வெள்ளம் பாய்ச்சும் வகையில், நம்பிக்கைச் சம்பவங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

சினிமா ஸ்டுடியோக்கள்தான் திரைப்படங்களின் தாயகம்.அங்குதான் திரைப்படங்கள் பிறப்பெடுகின்றன. இவ்வாறாக 136 படங்களைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவானது, நொடிந்து, மடிந்து போன வரலாற்றை ஆசிரியர் பிழிந்து பொழிந்து இருக்கிறார். வரலாற்றுத் தலங்களின் சிறப்பைப் புரிந்து கொள்ளாதவர்கள் கையில் இத்தகைய இடங்கள் கைமாறி விடுவது காலத்தின் கோலமா? சோக அலங்கோலமா? என்று எண்ணத் தோன்றுகிறது. அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று இருந்தால் அந்த இடத்தில் ஒரு அருங்காட்சியகம் அமைந்திருக்கும். அந்தோ…! அந்த இடம் தற்போது இயற்கை உபாதைகளுக்கான புகலிடமாக மாறிவிட்டது. இதை ஆசிரியர் கண்ணீர்த் துளிகளைக் கலக்கி எடுத்து எழுதியது போல் தெரிகிறது.

எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய எஸ்.வி.சேகர் சபாநாயகரை நோக்கிச் சென்றபோது, அடுத்தடுத்து நடந்த அதிரடி நிகழ்வுகள் அப்பட்டமாக வருணிக்கப்பட்டுள்ளன. நேரடி அனுபவம் மட்டுமே இத்தகைய தகவல்களுக்கு கருவாக இருக்க முடியும். சோ பற்றிய சஸ்பென்ஸ் படிப்போரை பதறப் வைத்திருக்கிறது. ஒற்றை எழுத்தே கற்றை கலக்கங்களுக்கு ஊற்றாகி இருப்பது உணரலாகிறது.

எம்.ஜிஆருக்கும் கருணாநிதிக்கும் இடையே அரசியல் ரீதியாக கடும் மோதல் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவர்களுக்கிடையே இருந்த பாசப் பரிவர்த்தனகளின் அர்த்தமிகு அடையாளங்கள் இந்த நூலில் காணக் கிடைக்கின்றன.

மொத்தத்தில் வாசகர் ஒருவர் இந்த நூலை படிப்பதற்கு முற்பட்டால், முழுவதையும் படிக்காமல் ஓயமாட்டார் என்பதே அனுபவம் அளிக்கும் உண்மையாகும்

நூலின் தகவல்கள் : 

நூல் : நடிகர்களின் அரசியல் அரிதாரம்
ஆசிரியர் : ஆர்.நூருல்லா
விலை : ரூ 280/-
பக்கம் :  204

நூல் அறிமுகம் எழுதியவர் :

 

முனைவர் என். பத்ரி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *