நூல் மதிப்புரை : கோ.ஜனார்த்தனன் நேர்காணல். நடுநிலையாளன் என்பது மோசடி – பெரணமல்லூர் சேகரன்
நூல்: நடுநிலையாளன் என்பது மோசடி
நேர்காணல் நூல்
பக்கங்கள்: 32
விலை: ₹30
பாரதி புத்தகாலயம்
7 இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை 600 018
044 24332424 ,044 24334924 ,

முற்போக்கு எழுத்தின் தடம்
“பகுத்தறியாதவன் பிடிவாதக்காரன்
பகுத்தறிய முடியாதவன் அறிவிலி
பகுத்தறியத் துணியாதவன் அடிமை”

எச்.டி.ரூமாண்ட்
பிடிவாதக்காரனாகவும், அறிவிலியாகவும், அடிமையாகவும்

வாழாமல் பகுத்தறிவாளனாக வாழ்வது மேலானது. அதற்கு கற்றல் இன்றியமையாதது. ‘கற்றலின் கேட்டலே நன்று’  என்பர். அத்தகைய ‘கேள்வி’ குறித்து ஓர் அதிகாரத்தையே படைத்துள்ளார் திருவள்ளுவர்.

ஒருவரது கேள்வி ஞானம் அவரது பேச்சாலும் எழுத்தாலும் பளிச்செனத் தெரிந்துவிடும். அவ்வாறுதான் எழுத்தாளர் ப. ஜீவகாருண்யனும். அவரது எழுத்தின் வழி அவர் எத்தகையவர் என்பதை உணர்ந்துள்ள தமிழ் கூறும் நல்லுலகம் அவரது நேர்காணல் வழி அவரது அகப்புற தோற்றம் குறித்து அழுத்தம் தரும். அவ்வகையில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ‘அறம்’ கிளை எடுத்துள்ள எழுத்தாளுமைகளின் நேர்காணல் என்னும் நல்ல முயற்சியின் ஒரு பகுதியாக எழுத்தாளர் ப. ஜீவகாருண்யனின் நேர்காணல் அமைந்துள்ளது.

இச்சிறு நூலில் எழுத்தாளரிடம் கேட்கப்பட்ட 50 கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் இடம் பெற்றுள்ளன.

எழுத்தாளரின் பெயரிலிருந்து துவங்குகிறது கேள்வி. எழுத்தாளரின் குடும்பப் பின்னணியில் அவரது தந்தை ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ எனும் வள்ளலாரின் சிந்தனை வயப்பட்டவர் என்பதும் அவர் தமிழ் ஆர்வலர் என்பதும் புலனாகிறது. இது இயல்பாகவே எழுத்தாளராகப் பரிணமிக்க ஜீவகாருண்யன் அவர்களுக்கு உந்துவிசையாக இருந்துள்ளது.

சைவ அசைவ உணவு குறித்த பார்வையில் எழுத்தாளர் சரியான பதிலையே தந்துள்ளார். ‘சைவம் – அசைவம் என்பது மனிதர்களின் விருப்பம் சார்ந்தது’ என்றும் ‘புரதச்சத்து மிகுந்த விலையுயர்ந்த தானியங்கள் போன்றவற்றை எளிதில் வாங்கிப் பயன்படுத்த முடியாத ஏழை-எளியவர்களுக்கு ‘குறைந்த விலையில் நிறைந்த புரதம்’ என்னும் வகையில் மாட்டிறைச்சி போன்றவை மிகவும் அவசியம் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாக முன் நிற்கிறது’ என்பது அர்த்த அடர்த்தி மிக்கது. அதே நேரத்தில் கடந்த ராம நவமியன்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு உண்ட மாணவர்கள் மீது வன்முறையைத் கட்டவிழ்த்து விட்ட மதவெறி மாணவர்கள் கண்முன் வந்து நிற்கின்றனர். உண்ணும் உணவு, உடுத்தும் உடை போன்றவற்றில் மூக்கை நுழைத்து வன்முறையில் இறங்குவோர்க்கு ஒன்றிய அரசின் ஆதரவும், வெறுப்பு அரசியலும் நெருஞ்சி முள்ளாய் குத்தத்தான் செய்கிறது.

நேர்காணலில் தமது சிறு வயதிலிருந்தே வாசிக்கும் வழக்கம் கைகூடியதைக் குறிப்பிடும் எழுத்தாளர் ப. ஜீவகாருண்யன், இத்தகைய வாசிப்பு அனுபவம் பிற்காலத்தில் தான் எழுத்தாளனாவதற்கு அடிகோலியதாக எண்ணுகிறார். ஆனால் இன்றைய இளைஞர்கள் கைபேசியில் செயலி, சமூக வலைதளங்கள் என தொலைந்து போவதை வேதனையுடன் குறிப்பிடுகிறார். உண்மையில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைக் கட்டுப்படுத்த இயலாமல் கையறு நிலையில் உள்ளது இளைய தலைமுறைக்குக் கேடு விளைவிக்கும் எனின் மிகையன்று. இதனால் இளைஞர்களின் உடல் நலமும் உள்ள நலமும் நம் கண்முன் கெடுவதைப் பார்க்கும் அவலம் அணி வகுக்கிறது.

எழுத்தாளரை எழுதத் தூண்டியதும் எழுத்தார்வத்தை வளர்த்ததும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் அவ்வமைப்பு சார்ந்த இலக்கிய ஆளுமைகளும் எனக் கூறியிருப்பதிலிருந்து அவரது இலக்கியப் பயணம் சரியான பாதையில் பயணித்தது என்பதையும் அதன் பலனாக இதுவரை சிறுகதை, கவிதைகள், நாவல், மொழிபெயர்ப்பு என 28 நூல்களை வெளியிடவும் பல நூல்கள் தமிழக அரசு மற்றும் பல அமைப்புகள் வழி விருதுகள், பரிசுகள் என இவருக்குக் குவிந்தன என்பதையும் உணர முடிகிறது.

‘மாற்றுக் கருத்தை மறுத்து இலக்கியம் படைப்பதற்கு மாற்றுக் கருத்து குறித்த நூல்களை ஆழ்ந்து பயில வேண்டும்’ என்னும் கருத்துடன் இளம் வயதிலிருந்து இன்றுவரை பல துறை நூல்களையும் படிப்பவராகத் திகழ்கிறார் ப. ஜீவகாருண்யன்.

பழந்தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியங்களின் வழி ஆதித் தமிழர் வாழ்வியலை அடையாளம் காண முடிவதைக் கூறும் எழுத்தாளர், சங்க இலக்கியங்கள் குறித்து பிற மொழிகளில் நூல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தமது வேட்கையையும் தெரிவிக்கிறார்.

எழுத்தாளரின் ‘கிருஷ்ணன் என்றொரு மானிடன்’ என்ற நூல் அவருக்கு மட்டுமல்ல நான் உட்பட பலர் ரசித்துப் படித்திருப்பர் என்பதில் ஐயமில்லை. அந்தளவுக்கு அந்நூலில் அழகியலும், வர்ணனைகளும், புராண இதிகாசமெனும் மகாபாரதக் கதைகளின் மீதான குறுக்கு விசாரணைகளும் மற்றும் அதற்கான பதில்களும் பொதிந்து கிடக்கின்றன.

பெண் சமத்துவம் குறித்து மட்டுமல்லாமல் ‘மனிதர் யாவரும் சமம்’ என்னும் கருதுகோளை மையப்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடும் எழுத்தாளர், அதற்கான அரசியல் விழிப்புணர்வு மக்களிடையே தேவைப்படுவது குறித்தும் அழுத்தம் கொடுத்திருப்பது சிறப்பு

சாதி, மதம், கடவுள் எனும் வலைப் பின்னலில் ஏழை எளியோரும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களும் சிக்குண்டுச் சீரழிவை மதங்களின் வெற்றியாகச் சித்தரிக்கிறார் எழுத்தாளர்.

ப. ஜீவகாருண்யன், இந்திய இலக்கியங்கள் மட்டுமல்லாது பிற நாட்டு இலக்கியங்களையும் படித்துப் பரவசமடைந்த நிலையில் அவை போன்ற நூல்கள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்னும் வேட்கையைத் தணிக்க அவரும் அவரையொத்த சிந்தனையுடைய தமிழ் எழுத்தாளர்களும் முன்வர வேண்டும்.

வாழ்க்கை சவால் மிக்கது. இன்றைய நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சமூக அமைப்பில் வாழும் அனைவரும், குறிப்பாக கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ப. ஜீவகாருண்யனும் எதிர்கொண்டுப் போராடி முன்னேறி வந்துள்ளார் என்பதை நேர்காணலில் உணர முடிகிறது.

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லாமல் ஊருக்கு உபதேசிக்கும் இலக்கியவாதிகளே அதிகம் நிறைந்துள்ள இக்காலத்தில் எழுத்தின் வழி வாழ்க்கை என்பதை வரித்துக் கொண்ட எழுத்தாளர் ப. ஜீவகாருண்யனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். புதுமனை புகுவிழாவில் புரோகிதத்தைப் புறக்கணித்தது பாராட்டத்தக்கது. பின்பற்றத் தக்கது.

அரசியலே அனைத்தையும் தீர்மானிக்கிறது எனும் நிலையில்,’நான் நடுநிலையாளன்’ என்பது ஏமாற்று மோசடி என சாட்டையைச் சுழற்றுகிறார் எழுத்தாளர். முதியோர் இல்லங்கள் பெருகி வர ஆண்களை விட பெண்களே அதிக காரணகர்த்தாக்களாக உள்ளனர் என்ற எழுத்தாளரின் கூற்றை முழுமையாக ஏற்க இயலவில்லை. இக்கால நுகர்வு கலாச்சாரம், மேல் நாட்டு நாகரிகம்,  உட்பட பல காரணிகள் முதியோர் இல்லங்கள் பெருகக் காரண கர்த்தாக்களாகின்றன.

‘தன்னைப் போல் பிறரை நேசிப்பவர் ஆரோக்கியமான மனிதர்’ என்பது உள்ள ஆரோக்கியத்தை வைத்து எழுத்தாளர் கூறியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. தமது 42வது வயதில் புற்றுநோயின் கொடும்பிடியில் சிக்கி மீண்டபோது இடதுசாரிக் கட்சியும், இலக்கிய அமைப்பும் தொழிற்சங்கமும் உற்ற தோழனாய் இருந்ததை நினைவு கூர்ந்துள்ளார் எழுத்தாளர். அதை போன்று எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு அவரது ‘மாதொரு பாகன்’ நூல் மூலம் ஏற்பட்ட மிகப் பெரும் அச்சுறுத்தலின் போது தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மட்டுமே அவரை அரவணைத்துக் கொண்டதைப் பதிவு செய்திருப்பது பாராட்டத் தக்கது.

இன்றைய ஒன்றிய அரசும், அதனால் வரலாறும் பாட நூல்களும் திருத்தப்படுவதும் ஆபத்தானவை என்பதை உணர்ந்த எழுத்தாளர் ஒரு படி மேலே போய் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லும் ‘புதிய கல்விக் கொள்கை’ நாடு முழுவதும் நடைமுறையாக்கப்பட வேண்டும் என தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருப்பது எழுத்தாளரின் துணிச்சலான தெளிவான அணுகுமுறை.

‘பொதுத்துறை நிறுவனங்கள் தேசத்தின் ஆலயங்கள்’ என்ற ஜவகர்லால் நேருவின் வாக்குப் பொய்யாய் பழங்கதையாய் ஆகுமளவிற்கு இன்றைய ஆட்சியாளர்கள் பொதுத் துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். மனித அறம், சமூக அறம், இயற்கை அறம் குறித்த ஜீவகாருண்யனின் விளக்கம் அருமை. இறுதியாக மரணம் குறித்து ‘இயன்ற வரையில் அர்த்தமுள்ளதோர் வாழ்க்கை வாழ்ந்து மரணத்தை எதிர்கொள்ள வேண்டும்’ என்னும் எழுத்தாளர் ஜீவகாருண்யனின் பதிலுடன் நேர்காணலை முடித்துள்ளார் கோ.ஜனார்த்தனன்.

இந்நூல், வடிவில் சிறியதாக இருந்தாலும் உட்பொருளில் பெரிதாகவே இருக்கிறது. இந்நூலை வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டியது அவசியம்.

..பெரணமல்லூர் சேகரன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.