'தமிழ் ஒரு சூழலியல் மொழி' நூலின் அட்டைப்படம் மற்றும் ஆசிரியர் நக்கீரனை மையப்படுத்திய நூல் அறிமுக விளக்கப்படம்.

நக்கீரன் எழுதிய “தமிழ் ஒரு சூழலியல் மொழி” – நூல் அறிமுகம்

“தமிழ் ஒரு சூழலியல் மொழி” – நூல் அறிமுகம்

தியடோர் பாஸ்கரனின் நூல்களே சூழலியல் சொற்களை எனக்கு அறிமுகம் செய்தவை. மிகுந்த வியப்புக்காட்படுத்தியவை. தமிழில் இத்தனை சொற்கள் கானுயிர்களுக்கும் காட்டு மரங்களுக்கும் செடிகளுக்கும் உள்ளதா என்று ஆச்சரியப்படுத்தியவை. அதன்பின்னர் அந்த வரிசையில் சமீபத்தில் வாசித்த நக்கீரனின் காடோடி புதினம் அதே அளவு வியப்பேற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று முயற்சித்து வாங்கிப் படித்த நூல்தான் ‘தமிழ் ஒரு சூழலியல் மொழி’ ஆகும்.

முன்னுரையில் நக்கீரன் கூற்றான – ‘தமிழ் இயல்பாகவே இயற்கை சார்ந்த மொழி. ஆகவே, பழந்தமிழ் இலக்கியம் ஆன்மிக எல்லைக்குள் நுழையாது, தம் திணை நிலத்திலேயே கால் பதித்து நின்றது. பிற்காலத்தில் சமணத் தமிழ், பவுத்தத் தமிழ், சைவத் தமிழ், வைணவத் தமிழ் என வரிசையாக அதன்மீது பூசப்பட்ட சமயச் சாயங்களும் ஒட்டாமல் உதிர்ந்து போயின. உறுதியான பகுத்தறிவு சார்ந்த நேர்க்காட்சிவாதப் பார்வை, தமிழ்மொழியில் இயங்குவதே அதற்கு அடிப்படைக் காரணமாகும். இது இயற்கை அறிவியல் சார்ந்த பார்வையாகும்’ என்பதற்கான விளக்கக் கையேடே இந்நூல்.

தொல்காப்பியத்தையும் அதன் திணைக் கோட்பாட்டையும், பொருளதிகாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ் ஒரு சூழலியல் மொழி என்பதை நிறுவுகிறதோடு, திணை கோட்பாட்டின் தற்காலப் பொருத்தப்பாடு, தொல்காப்பிய பொருளதிகாரத்தின் மீது காலசூழலுக்கேற்ப வைக்க வேண்டிய கேள்விகள் என்று விமர்சன ரீதியாகவும் சில முக்கிய கேள்விகளையும் முன்னெடுக்கிறது இப்பிரதி. மேலும் நூலின் முக்கியமான தன்மையானது வெற்றுப் பெருமிதம் பேசும் வகையில் அல்லாது, அறிவியல் ரீதியாக வரலாறு, பண்பாட்டு வளர்ச்சி என்ற அடிப்படையில் தரவுகளின் மூலம் தமிழ் ஒரு சூழலியல் மொழி என்று நிறுவிச் செல்கிறது.

திணைக் கோட்பாடானது நிலம், பொழுது என்ற முதற் பொருளை அடிப்படையாகக் கொண்டது. அதற்கான உணர்வு நிலைதான் உரிப்பொருள். முதலையும் உரிப்பொருளையும் இணைக்கும் கூறுகளே கருப்பொருள் என்று எளிமையாகவும் நுட்பமாகவும் எடுத்துக்கூறுகிறார் முதல் பகுதியில். முதல் என்பதே நிலமும் பொழுதும் என்பதை தொல்காப்பியத்தின் வழி எடுத்தியம்பும் ஆசிரியர் அது முதல் என்பது கடவுள் அல்லது ஒரு சக்தி என்ற வைதீகக் கருத்துக்கு எதிராக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்தப் பொருளதிகாரச் சிந்தனையை உடைக்கத் தொடர் முயற்சிகள் நடைபெற்றதன் விளைவாகவே ‘இறையனார் அகப்பொருள்’ என்ற நூல் உருவாகி திணை மரபை முடித்து வைதீக மரபை தமிழில் தொடங்கியதாகவும் பல மேற்கோள்களுடனும் துணை நூற்களுடனும் நிறுவுகிறார். பின்னாளில் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்துக்குள் அந்தணர் வைசியர் என்ற வருணத்தை நுழைத்த தகிடுதத்தமும் நிகழ்ந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியாக இருக்கிறது.

மேலும் அரசுகளின் உருவாக்கம் வளர்ச்சி என்ற பெயரில் சூழலியல் சீரழிவிற்கு எப்படி வழி வகுத்தது என்பதையும் அதில் தமிழ் அரசர்களும் விதிவிலக்கல்ல அதுவும் மூவேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் அது உச்சநிலையில் இருந்ததையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அதன் நீட்சியாகவே இப்போது வரை வளர்ச்சி என்பது சூழலியல் சிதைவு வளர்ச்சியின் பெயரால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

2ம் பகுதியில் தற்கால இலக்கியங்களில் எவ்வாறு பெயர்பெற்ற எழுத்தாளர்களிடமும் சூழலியல் அறிவு வறட்சி உள்ளது என்பதை போட்டுடைக்கிறார். இலக்கியமானது நாம் வாழும் சூழலின் அடிப்படையிலிருந்து எழும்போதே அது உயிர்ப்புள்ளதாக்கும் என்று எடுத்துரைக்கிறார். புழுங்கும் வேனிலான வசந்த காலத்தை (spring) தமிழ்நாட்டின் வெப்பமண்டல சூழல் வரவேற்காது. இங்கு கார்காலமும் பனிக்காலமுமே வரவேற்புக்கு உகந்த காலங்கள். அதுவறியாமல் மேற்கத்திய சாயலிலான இலக்கியங்கள் சொல்லாக்கங்கள் மொழியை வளப்படுத்தாது.

கபிலர் ஏன் மருத நிலத்தைப் பாடவில்லை என்றும் பாலை பாடிய பெருங்கடுக்கோ ஏன் நெய்தலை பாடவில்லை என்றால் தமக்கு அன்னியமான பொருளில் பாடினால் படைப்பில் உயிர் இருக்காது என்பதாலேயே.

மூன்றாம் பகுதியில் சமஸ்கிருதம் எவ்வாறு சூழலியல் மொழியாக இல்லை என்றும் அதன் குழந்தையான இந்தி மொழி இந்துஸ்தானி – பாரசீக மொழிகளுக்கு இடையே நிகழ்ந்த மத அரசியல் முரண்களால் உருதுவைப் புறக்கணிக்க முன்னெடுக்கப்பட்ட பிற்கால மொழி என்றும் நிறுவுகிறார். ‘சமஸ்கிருதம் ஒரு மொழியாக இயங்குவதில் நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் ஆதிக்க மொழியாக மாறுவதுதான் சிக்கல். சமஸ்கிருதம் தேவமொழி என்றால், அப்படியே ஆகட்டும். வானிலிருந்து வந்த மொழி என்றாலும், வானுறையும் தெய்வத்துடன் வாழ்வாங்கு வாழட்டும், நமக்குக் கவலையில்லை என்று கூறும் ஆசிரியர், தமிழ் நிலத்தில் புழங்கும் மொழி, அது கால்களில் புழுதித் தோய தெருவில் நடை பயில்கிறது. தூசி படிந்தால் துடைத்துக் கொள்கிறது. அழுக்கு ஒட்டினால் குளித்துக் கொள்கிறது. தமிழ் என்பது மண்ணின் மொழி’ என்று எடுத்தியம்புகிறார்.

நான்காம் பகுதியில் தாய்மொழிக் கல்வியின் அவசியம், இந்தியை எதிர்ப்பதற்கு உறுதுணையாகப் பயன்பட்ட ஆங்கிலம் எவ்வாறு உறுத்தும் துணையாகிப் போனது, மும்முனை தாக்குதல்களான பண்பாட்டு மேலாதிக்க முனைப்பில் சமஸ்கிருதம், அரசியல் மேலாதிக்க முனைப்பில் இந்தி, பொருளாதார மேலாதிக்க முனைப்பில் ஆங்கிலம் ஆகியவற்றில் இருந்து எவ்வாறு தப்பி இயற்கை சூழ் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பது அதற்கு மலேசிய சிங்கப்பூர் தமிழர்களின் முறைமையைக் கைக்கொள்ளுதல் போன்ற கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

ஐந்தாம் பகுதியில் மிக முக்கியமான ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்ற புதிய வகை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது எப்படி என்று எடுத்துரைக்கிறார். சூழலில் பல்லுயிரியம் பேணப்படுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பன்முகப் பண்பாடுகளும் மொழிப் பன்மயமும் பாதுகாக்கப்படுவது என்கிறார். மேலும் இப்பகுதியில் ‘தொல்காப்பியம் ஒரு மூடிய பிரதியில்லை, பிற்காலத் தலைமுறையினர் பொருள் விரிவு செய்து கொள்ளும் வாய்ப்புகளுக்கு அது மறுக்காமல் இடமளித்துள்ளது’ என்ற அய்யப்பபணிக்கரின் கருதுகோள்களைக் கொண்டு விமர்சனபூர்வமாக தொல்காப்பியத்தை அணுகுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்கிறது நூல்.

பரிணாம (நக்கீரனது மொழியில் படிமலர்ச்சி) வளர்ச்சியில் தகுதி பெற்ற உயிரிகள் மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்ற கூற்றுப்படி தன்னை சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் தமிழும் ஓர் படிமலர்ச்சி உயிரியே என்பதை இயற்கைத் தேர்வின் மூன்று வகையான (திடப்படுத்தும் தேர்வு (stabilizing selection), ஒருமுகப்படுத்தும் தேர்வு(directional selection) மற்றும் திரிபு ஏற்படுத்தும் தேர்வு(disruptive selection) ஆகிய நிலைகள் மூலமும் கூடுதலாக சடுதிமாற்றம் (Mutation), மாறுபட்ட இனப்புணர்ச்சி (Non Random Mating), சிறிய விலங்கினத் தொகுதியும் மரபணுக்களின் திரிவும் (Small Population and genetic drift) போன்றவை வழி தமிழும் தன்னை எப்படி தகவமைத்து படிமலர்ச்சி பெற்று தற்போது வரை உயிர்ப்புடன் விளங்குகிறது என்பதை எளிமையாக விளக்குகிறார் ஆசிரியர்.

நூல் நெடுக பல்வேறு சூழலியல் சொற்கள் நமக்குக் காணக் கிடைப்பதோடு அவை உருவாகிய விதம், தற்போது அவை புழக்கத்தில் உள்ள இடங்களின் விபரங்கள் போன்றவை வியப்பில் ஆழ்த்துகின்றன. நூலில் காணப்படும் அவ்வாறான புதிய சொற்களின் சிறு பட்டியல் கீழே:

டால்பின் – ஓங்கில்
முகத்துவாரம் (நதியும் கடலும் கலக்கும் இடம்) – பொழி
கைக்கெட்டாத தொலைவு – கடைக்கே
தனித்திருப்பவர் – ஓரி
மஞ்சு, எழிலி, கொண்டல் – மேகம்
முடக்கத்தான் – உழிஞை
இட்லிப்பூ – வெட்சி
பூவரசு – வஞ்சி
மொள்ள மாறி (ஒரு வசைச் சொல்) (தன்மை மாறுபவர்) – முல்லை மாறி
நோஸ்டால்ஜியா – நினைவேக்கம்
பெலிகன் – கூழைக்கடா
ஐஸ்கட்டி – ஆலி
விர்ச்சுவல் வாட்டர் – மறைநீர்
வைரஸ் – நச்சில்
மவுஸ் டீர் (சருகுமான்) – கூரன்பன்றி
பரிணாம வளர்ச்சி – படிமலர்ச்சி

நெறித்துணைத் தரவுகள் (உசாத்துணை நூற்பட்டியல்) மற்றும் இணையதளங்கள் விபரங்களையும் அளித்து மூல நூட்களை தேடுவோருக்கு பணியை எளிதாக்கியுள்ளார்.

தமிழ் மொழி மீதும் சூழலியல் மீதும் தமிழர் வாழ்வியல் குறித்தும் அக்கறை உள்ளோர் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய தமிழின் தவிர்க்கவியலா நூற்களில் ஒன்று.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:தமிழ் ஒரு சூழலியல் மொழி
ஆசிரியர்:நக்கீரன்
வெளியீடு:
காடோடி பதிப்பகம்
விலை:
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *