நக்கீரன் (Nakkeeran) எழுதி காடோடி பதிப்பகம் வெளியீட்ட 'எறும்புகள் ஆறுகால் மனிதர்கள்' (Erumbukal Aarukaal Manithargal) புத்தகம் (Book)

நக்கீரன் எழுதிய “எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள்” – நூல் அறிமுகம்

எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள் நூலிலிருந்து….

உங்கள் கையில் ஒரு தராசு இருக்கிறது . அதில் ஒருபுறம் ஒரு மனிதனை அமர வைக்கிறோம். மற்றொருபுறம் ஒரு எறும்பை அமர வைக்கிறோம் . தராசு எந்த பக்கம் அதிகமான எடை கொண்டதாக இருக்கும் என்பதை இந்த பதிவின் முடிவில் நீங்கள் கூற வேண்டும்…

உலகில் ஒரு கொடூரமான நோய் பரவியது . அந்த காலகட்டத்தில் மனிதர்களாகிய நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருட்களை நம் வீட்டில் சேமித்து வைத்துக் கொண்டோம். பிறருக்கு நாம் பகிர்ந்தது கூட நம் தேவைக்கு எஞ்சியதை தான் பகிர்ந்திருப்போம். ஆனால் இங்கே ஒரு உயிர் தனக்கு பசிக்கிறது என்று ஒலி எழுப்புகிறது. அதற்கு வேறு ஒரு இனத்தைச் சேர்ந்த மற்றொரு உயிர் தேவையான உணவைத் தந்து உதவுகிறது. இதற்கு கைமாறாக உதவி பெறப்பட்ட இனம் நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் , மீண்டும் தன் கடனை திரும்பச் செலுத்துகிறது. வாசிக்கும் போதே எவ்வளவு அருமையாக இருக்கிறது அல்லவா . யார் யாரென நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ..? வாருங்கள் என்னுடன்.

ஒரு தினைக்குருவி மழைக்காலத்தில் தனக்கு உணவில்லை என்று ஒரு எறும்பிடம் ஒலி எழுப்பி கேட்கிறது. அந்த எறும்பானது புற்றுக்குள் தான் சேமித்து வைத்திருக்கும் உணவை அதற்கு இரையாகக் கொடுக்கிறது. பின்னர் அறுவடை காலத்தில் தினைக்குருவி பெற்ற உதவிக்கு கைமாறாக, பயிர்களில் இருந்து தானியங்களை உருவி கீழே போட, எறும்பினம் அதனை பொறுக்கிக் கொண்டு வந்து தன் புற்றுக்குள் சேமித்துக் கொள்கிறது. எப்படி போகிறது கதை…!!

சரி அது போகட்டும்.
ஒரு மணல் திட்டை, தனி ஒரு மனிதனால் காடாக்க முடியுமா ..?

அதுவும் சாத்தியமாகிருக்கிறது வெறும் 16 வயதுடைய சிறுவனால். பிரம்மபுத்திராவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு மணல் திட்டில் பல நாகங்கள் இறந்து கிடக்கின்றன. அவற்றை கண்ட தொல்குடி சிறுவன் ஒருவன் அதற்கான காரணத்தை யோசிக்கின்றான். காரணம் வேறு ஒன்றும் இல்லை அங்கு மரங்கள் இல்லை என்பது தான். எனவே அந்த இடத்தில் மரங்களை உருவாக்க வழி தேடுகிறான், ஆலோசனை கேட்கின்றான், இறுதியில் அவனே முடிவையும் எடுக்கின்றான். அவன் எடுத்த முடிவு தான் இங்கு நம்மை அவரைக் கொண்டாட வைத்திருக்கிறது . அவர்தான் “ஜாதவ் பாயேங்”.

1979 ஆம் ஆண்டு வரை மணல் திட்டாக இருந்த ஒரு இடத்தை ‘மொலாய் காடுகளாக ‘மாற்றிய மாபெரும் படிப்பறிவு இல்லா பேரறிஞர் அவர். இதனை சாத்தியமாக்க அவருக்கு உதவியது சிவப்பெறும்புகள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?. பழங்குடிகளும் , தொல்குடிகளும் எறும்புகளை இயற்கையோடு ஒன்றாகவே பாவித்து இருக்கிறார்கள். நாகரீக மனிதன் தான் அதனை இல்லாமல் ஆக்குவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வாழ்கிறாம்.

மனிதர்களுக்கு முன் வேளாண்மை செய்து வாழ்ந்த உயிரினம் என்றால் அவை எறும்புகள் தான். காற்றையும் , நுண் சத்துக்களையும் மண்ணுக்குள் செலுத்தி பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது மட்டுமல்லாமல் , இலை வெட்டி எறும்புகள் எனும் ஒருவகை எறும்பு இலையைக் கத்தரித்துச் சென்று அதனை பக்குவமான இடத்தில் மட்க வைத்து , பதப்படுத்தி காளான் வளர்த்து உணவாக்கி வேளாண்மைக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது என்றால் எத்தனை ஆச்சரியமாக இருக்கிறது நமக்கு.

வேளாண்மைக்கு மட்டும்தான் முன்னோடி என்று பார்த்தால், நெசவுத் தொழிலுக்கும் முன்னோடியாக எறும்புகள் இருக்கிறது என்றால் கண்கள் வியப்பின் உச்சத்துக்கே செல்கிறது. குரங்குக்கும் மனிதனுக்கும் தான் பொதுவான சில இயல்புகள் இருக்கிறது என்று இதுவரை நாம் கண்டிருப்போம். ஆனால் குரங்கைக் காட்டிலும் எறும்புகளுக்கும் மனிதனுக்கும் தான் பல ஒற்றுமைகள் இருப்பதை நம்மால் இந்த புத்தகத்தை வாசிப்பதில் இருந்து பெற முடிகிறது.

நம் அடுக்களையில் எறும்புகள் மொய்க்கிறது என்றால் நம் வீட்டில் சுத்தமில்லை என்று பொருள். சுத்தமான இடங்களில் கண்டிப்பாக எறும்புகள் இருக்காதாம். இதை வாசித்த பின்னர் என் வீட்டிற்கு எறும்பு வந்து எத்தனை நாள் ஆகிறது என்று நான் சிந்தித்துப் பார்த்தேன். ஒரு சாக்பீஸ் கட்டி வாங்கி பல வருடமாக பாதுகாத்து வைத்ததை இந்த புத்தகம் வாசிக்க ஆரம்பித்த அன்றே தூக்கி வீசினேன்.

மேலும் எறும்புகள் நல்ல பொறியாளர்களும் கூட. கழிவறை கட்டிக்கொண்டு சுகாதாரமாக வாழ்வது மனித இனம் ஒன்றுதான் என்று இதுவரை உங்கள் மனதில் ஒரு எண்ணம் இருந்தால் அதனையும் அழித்து விடுங்கள். எறும்புகள், தான் வாழும் இடங்களில் கழிவறைக்கென்று தனி இடம் ஒதுக்கி இருப்பதை காண்கையில், எவ்வளவு சாதாரணமாக எறும்பினத்தை நாம் மதிப்பிட்டு இருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி தான் வந்தது. அதேபோல ஒரு வீணாக்கப்பட்ட உணவுத் துகள்களை கூட எறும்பின் இருப்பிடத்தில் பார்க்க முடியாதாம்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது , இந்த உலகில் வாழ்வதற்கு தகுதியற்ற ஒரு இனம் இருக்கிறது என்றால் அது மனித இனம் மட்டும் தான் என்பது எனக்குப் புலனாகிறது. நமக்கு எறும்புகளில் பிள்ளையார் எறும்பு , சிவப்பெறும்பு , கட்டெறும்பு , முசுரு தெரியும். ஆனால் இதில் 12000 வகை எறும்புகள் இருக்கின்றன. கொடிய தன்மை கொண்ட எறும்புகள் மிகச் சிலவே. பிற எறும்புகள் கடித்தால் நம் உடலுக்கு கேடு ஒன்றும் இல்லை. ஆனாலும் எறும்புகள் மொய்க்கும் இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தூவி கொன்று விடுகிறோம்.

நீரின் ஓட்டம் எங்கே அதிகமாக இருக்கிறது என்பதை அறிவதற்கு எறும்பினங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். கோலம் போடும் சாக்கில் அரிசி மாவு சேர்த்து எறும்புகளுக்கு வாசலில் உணவிட்டு இருக்கின்றனர். இன்று ஸ்டிக்கர் கோலங்களும், சாக்பீஸ் கோலங்களும் எறும்புகளுக்கு உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த, அவை நம் இல்லங்களுக்குள் தஞ்சம் புகுகிறது.

தாவரவியல் பாடம் படித்தவர்களுக்கு பிட்சர் (pitcher) தாவரம் நன்றாக நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அது தன் இலைப்பரப்பின் மீது வரும் பூச்சிகளை உட்கொண்டு உயிர் வாழ்கிறது. ஆனால் அந்த பிட்சர் தாவரம் கூட எறும்புகளை கொள்ளாதாம். என்ன ஒரு மனிதம் அந்த பிட்சர் தாவரத்திடம். இன்னும் இது போல பல அறிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகமாக இந்த புத்தகம் இருக்கிறது. கண்டிப்பாக வாசித்து பாருங்கள்.

மறந்துவிட்டேன் பாருங்கள். ஆரம்பத்தில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன் அல்லவா, இப்போது அதற்கு விடையை மட்டும் கூறிச் சென்று விடுங்கள். தராசின் எந்த பக்கம் எடை அதிகமாக இருக்கும் என்று…???

அன்புக்கரத்தை எறும்புகளிடம் நீட்டி கொஞ்சம் கடியும் வாங்கி மகிழ்வோம் . 🐜🐜

நூலின் விவரம்:

புத்தகத்தின் பெயர் : எறும்புகள்: ஆறுகால் மனிதர்கள் (Erumbukal: Aarukaal Manithargal)
ஆசிரியர் : நக்கீரன் (Nakkeeran)
விலை : 40
தலைப்பு : சூழலியல்
பக்கங்கள்: 30
பதிப்பகம் : காடோடி

நூல் அறிமுகம் எழுதியவர்: 

பா விமலா தேவி
பட்டுக்கோட்டை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *