நாம் எதிர்காலக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது கட்டுரை – விஜய் பிரசாத் (தமிழில் : கி.ரமேஷ்)

நாம் எதிர்காலக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது கட்டுரை – விஜய் பிரசாத் (தமிழில் : கி.ரமேஷ்)




அன்பு நண்பர்களே,

சமூக ஆய்வு நிறுவனம் ட்ரைகாண்டினெண்டலின் சார்பில் வாழ்த்துகள்.

2022, ஏப்ரலில் ஐ. நா. வானது உலக நெருக்கடி எதிர்ப்புக் குழுவை உணவு, சக்தி, நிதிக்காக உருவாக்கியது. இந்தக் குழுவானது உணவுப் பணவீக்கம், எரிபொருள் பணவீக்கம், நிதித் துன்பம் (financial distress) ஆகிய மூன்று பெரும் நெருக்கடிகளைப் பின் தொடர்வதற்காக அமைக்கப்பட்டது.  2022 ஜூன் 8 அன்று வெளியிடப்பட்ட இரண்டாவது அறிக்கையானது, கோவிட் 19 பெருந்தொற்றுத் தாக்கிய இரண்டாண்டுகளுக்குப் பிந்தைய நிலையைக் குறிப்பிட்டது:

உலகப் பொருளாதாரம் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்று 60 சதவிகிதத் தொழிலாளர்கள் பெருந்தொற்றுக்கு முன்னால் வாங்கிய உண்மை ஊதியத்தை விடக் குறைவாகப் பெறுகிறார்கள்; ஏழை நாடுகளில் 60 சதம் மிகவும் தீவீரமான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளன அல்லது அதைப் பெறும் உச்சகட்ட ஆபத்தில் உள்ளன; வளரும் நாடுகளுக்கு தமது சமூகப் பாதுகாப்பு இடைவெளியை இட்டு நிரப்ப ஆண்டுக்கு 1.2 ட்ரில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது; நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைய முன்பு இல்லாத அளவுக்கு ஒரு வருடத்துக்கு 4.3 டிரில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது.

இது துன்பத்திலிருக்கும் உலக நிலைமை குறித்துத் துல்லியமான ஏற்கக்கூடிய விளக்கம்.  நிலைமை இன்னும் மோசமாகவே போகப் போகிறது.

உலக நெருக்கடி எதிர்ப்புக் குழுவின்படி, பெருந்தொற்றின் போது அளித்த நிவாரண நிதியை ஏற்கனவே பெரும்பாலான முதலாளித்துவ நாடுகள் திரும்பப் பெற்று விட்டன.  ‘சமூகப் பாதுகாப்பு அமைப்புகளும், பாதுகாப்பு வலைகளும் போதுமான அளவு விரிவுபடுத்தப்படாவிட்டால் பட்டினியை எதிர்நோக்கும் வளரும் நாடுகளின் ஏழைக் குடும்பங்கள் ஆரோக்கியம் தொடர்பான செலவைக் குறைக்கக் கூடும்; பெருந்தொற்றின் போது தற்காலிகமாகப் பள்ளிகளை விட்டு வெளியேறிய குழந்தைகள் இப்போது நிரந்தரமாக வெளியேறும்; அதிகமான மின்சாரக் கட்டணங்களால் சிறு, குறு தொழில்முனைவோர் தமது தொழில்களை மூடி விடக் கூடும்’.

 

ரெனாட்டோ குட்டுசோ, லா உக்கிரியா, 1974.

2024 இறுதிவரை உணவு, எரிபொருள் விலைகள் உச்சத்திலேயே இருக்குமென்று உலக வங்கி கூறுகிறது. கோதுமை, எண்ணை வித்துக்களின் விலைகள் உயர்ந்து விட்டதால், முன்னேறிய நாடுகள் உட்பட,  தொழிலாளர் குடும்பங்கள் தமது உணவைத் தவிர்க்கத் டங்கி விட்டதாக உலகம் முழுவதிலிருந்தும் செய்திகள் வருகின்றன. இந்தப் பதற்றமான உணவு நிலைமையானது, ஐ.நா. பொதுச்செயலாளரின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நிதியின் சிறப்புத் தூதரான நெதர்லாண்டைச் சேர்ந்த குவீன் மாக்சிமாவை, ‘உலகில் இன்னும் அதிகமான நிலையின்மை வருவதற்கான மூலமாக இருக்கும்’ என்று கணிக்க வைத்துள்ளது. அடமான கடன்கள் (mortgage payments) மீது அதிகரிக்கும் வட்டி விகிதங்கள், பற்றாக்குறை ஊதியங்களின் தாக்கத்தைக் கணக்கில் கொண்டால் நாம் இப்போது ‘ஒரு சரியான புயலில்’ மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்று உலகப் பொருளாதார அமைப்பு மேலும் கூறுகிறது. சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிரிஸ்டலினா ஜார்ஜிவா கினோவா கடந்த மாதம் ’வானம் இருண்டு விட்டதெனக்’ கூறினார்.

 

இந்த மதிப்பீடுகளெல்லாம் வலுமிக்க உலக நிறுவனங்களான சர்வதேச நிதியம், உலக வங்கி, உலகப் பொருளாதார அமைப்பு, ஐ.நா. (ராணியிடமிருந்து கூட) ஆகியவற்றிடமிருந்து வருகின்றன.  அவர்களெல்லாம் நெருக்கடியின் கட்டமைப்பு இயல்பைப் புரிந்து கொண்டாலும் கூட, அவர்கள் அதன் அடிப்படையில் இருக்கும் பொருளாதார நிகழ்வுகள் பற்றியோ அல்லது நிலைமைக்கு போதுமானபடி பெயர் வைப்பதிலோ கூட நேர்மையாக இருப்பதற்குத் தயங்குகிறார்கள். உலக முதலீட்டு நிறுவனமான கார்லைல் குழுமத்தின் தலைவர் டேவிட்.எம்.ரூபன்ஸ்டீன் அவர் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது, அவர்களது பணவீக்க ஆலோசகர் ஆல்பிரட் கான் அவர்களை மக்களை பயமுறுத்தும் ‘ஆர்’ (Recession – மந்தநிலை) என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் இருக்குமாறும், அதற்குப் பதிலாக ‘வாழைப்பழம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.  அந்த வழியில், ரூபன்ஸ்டீன் தற்போதைய நிலையில், ‘ நாம் வாழைப்பழ நிலையில் இருக்கிறோம் என்று கூற விரும்பவில்லை, ஆனால் நாம் இன்றிருக்கும் நிலையில்  அந்த நிலை தொலைவில் இல்லை என்று மட்டும் கூற முடியும்’ என்றார்.

வாழைப்பழம் என்பது போன்ற இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் மார்க்சியப் பொருளாதார நிபுணர் மைக்கேல் ராபர்ட்ஸ் ஒளிந்து கொள்வதில்லை. மூலதனத்தின் மீது உலக சராசரி இலாப விகிதம் 1997லிலிருந்து சிறு பின்வாங்கல்கள் தவிர வீழ்ச்சி அடைந்து வருவதாக அவர் ஆய்வில் தெரிவிக்கிறார்.  இந்தப் போக்கு 2007-08 உலகளாவிய நிதி நெருக்கடியால் மேலும் அதிகரித்து 2008இல் பெரும் மந்தநிலைக்கு இட்டுச் சென்றது.  அதிலிருந்து உலகப் பொருளாதாரம் ஒரு ‘நீண்ட மந்தநிலையின்’ பிடியிலிருக்கிறது, (பெருந்தொற்றுக்கு சற்று முன்னால்) 2019இல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இலாபம் மிகவும் குறைவாக இருந்தது என்று அவர் வாதிடுகிறார்.

 

யில்டிஸ் மொரான் (துருக்கி), மதர், 1956

‘முதலாளித்துவத்தில் இலாபம்தான் முதலீட்டை ஊக்குவிக்கிறது’ என்று எழுதுகிறார் ராபர்ட்ஸ். ‘எனவே, வீழ்ச்சியடையும், குறைந்த இலாபமீட்டல் என்பது பலன் தரும் முதலீடு குறைந்த அளவில் அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றது’.  உற்பத்தி செயல்பாட்டில் முதலீடு செய்வதற்கு பதிலாக முதலாளித்துவ நிறுவனங்கள் பங்கு மற்றும் பிணைச் சந்தைகள், கிரிப்டோ கரன்சிகளின் கற்பனை உலகத்துக்குள் சென்று விட்டன என்று ராபர்ட்ஸ் கூறுகிறார்.  இந்த ஆண்டு கிரிப்டோ கரன்சி சந்தை 60% சரிந்து விட்டது.  வடக்குலகில் இலாபம் சரிந்து வருவதால் முதலாளிகள் தெற்குலகில் இலாபத்தைத் தேடவும், அவர்களது நிதி, அரசியல் மேலாதிக்கத்துக்கு மிரட்டலாக இருக்கும் எந்த நாட்டையும் (குறிப்பாக சீனா, ரஷ்யா) அடித்துத் தள்ளவும், தேவையானால் இராணுவத்தைப் பயன்படுத்தி அதைச் செய்யவும் இட்டுச் சென்றுள்ளது.  

பணவீக்கம் செல்லும் பாதை மிகவும் கொடுமையானது.  ஆனால் பணவீக்கம் என்பது ஒரு ஆழமான பிரச்சனையின் அடையாளம்தானே தவிர அது காரணமல்ல.பிரச்சனை என்பது வெறும் உக்ரைன் போரோ, பெருந்தொற்றோ அல்ல, மாறாக புள்ளிவிவரங்களால் நிரூபிக்கபட்டதும் ஆனால் பத்திரிகை சந்திப்புகளில் மறுக்கப்படுவதுமாகும்:
நீண்டகால மந்தநிலையில் மூழ்கியிருக்கும் முதலாளித்துவ முறையால் தன்னை சரிசெய்து கொள்ள முடியாது.  இந்த ஆண்டு ட்ரைகாண்டினண்டால் வெளியிடப்பட்ட, மார்க்சிய பொருளாதார நிபுணர்கள் சுங்குர் சவ்ரானும் இ. அஹ்மத் டொனாக்கும் எழுதிய ‘நெருக்கடியின் கோட்பாடு’ இந்த விஷயங்களைத் தெளிவாக நிறுவும்.

இப்போதைக்கு முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாடானது பணவீக்க நெருக்கடி போன்று எந்தப் பொருளாதார நெருக்கடியையும் சரிப்படுத்தும் எந்த முயற்சியும் 1923இல் ஜான் மேனார்ட் கீன்ஸ் எழுதியது போல், ‘முதலீட்டாளரை ஏமாற்றமடைய வைக்கக்கூடாது’.  செல்வந்தர்களான பணப்பத்திரம் வைத்திருப்பவர்களும் பெரும் முதலாளித்துவ நிறுவனங்களும் வடக்குலகின் கொள்கைச் சாய்மானத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களது பண மதிப்பு- சிறுபான்மை வைத்திருக்கும் பல ட்ரில்லியன் டாலர் பணம் – பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.  கீன்ஸ் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதியதைப் போல அவர்கள் ஏமாற்றமடைய முடியாது.  

அமெரிக்காவும் ஐரோப்பிய மண்டலமும் எடுக்கும் பணவீக்கத்துக்கு எதிரான கொள்கைகள் அவர்களது நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தின் சுமைகளைக் குறைக்க முடியாது, நிச்சயமாகக் கடன் சுமையால் தத்தளிக்கும் தெற்குலகின் சுமையைக் குறைக்க முடியாது.  அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பொவெல் தமது நிதிக் கொள்கை ‘சற்று வலியைக் கொடுக்கும்’, ஆனால் ஒட்டுமொத்த மக்களுக்கும் கொடுக்காது என்று ஒப்புக் கொண்டார்.  அமேசானின் ஜெஃப் பெசோஸ் ‘பணவீக்கம் என்பது குறைந்த செல்வமுடையவர்களை பெரிதும் பாதிக்கும் ஒரு பிற்போக்கு வரி’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார்.  வடக்கு அட்லாண்டிக்கில் உயரும் வட்டி விகிதங்கள் அப்பிரதேசத்தில் இருக்கும் சாதாரண மக்களுக்குப் பணத்தை மேலும் செலவுமிக்கதாக ஆக்குவது மட்டுமல்ல, அது தெற்குலகு தமது தேசியக் கடன்களைத் திரும்பச் செலுத்த டாலர்களைக் கடன் வாங்குவதை முற்றிலும் இயலாததாக்குகிறது.  உயரும் வட்டி விகிதங்களும், தொழிலாளர் சந்தையை இறுக்குவதும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் வளரும் நாடுகளின் மீதும் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல்கள்.

வடக்குலகின் அரசுகளின் வர்க்க நலன் குறித்துத் தவிர்க்க முடியாதது எதுவும் கிடையாது.  வேறு கொள்கைகளுக்கு வாய்ப்புண்டு; அவற்றில் சிலவற்றைக் கீழே கொடுக்கிறோம்:

* உலகப் பணக்காரர்களுக்கு வரி விதிக்கவும்.  உலகில் 2,668 பில்லியனர்கள் இருக்கிறார்கள், அவர்களது சொத்து மதிப்பு $12.7 ட்ரில்லியன்கள்; அவர்கள் சட்டவிரோத வரிப் பாதுகாப்பிடங்களில் குவித்து வைத்திருக்கும் சொத்தைச் சேர்த்தல் அது $40 ட்ரில்லியன்.  இந்தச் சொத்தைப் பயன்மிக்க சமூகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.  ஆக்ஸ்ஃபாம் குறிப்பிடுவது போல மிகவும் பணக்காரரான முதல் பத்துப் பேரிடம் உலகின் மக்கட்தொகையில் 140% அளவுள்ள 3.1 பில்லியன் மக்களிடம் இருப்பதை விட அதிகமான சொத்து உள்ளது.

* கற்பனையையும் தாண்டி உயர்ந்திருக்கும் பெரும் கார்ப்பரேஷன்களின் மீது வரி  விதிக்க வேண்டும்.  அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் இலாபங்கள் பணவீக்கத்தையும், நிவாரண அதிகரிப்புகளையும் தாண்டி 37% அதிகரித்துள்ளன.  முன்னணி நிதி நிறுவனமான மார்கன் ஸ்டான்லியின் தலைமை அமெரிக்கப் பொருளாதார நிபுணரான எலன் செண்ட்னர், “அமெரிக்க உழைக்கும் வர்க்கம் ஈட்டிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ‘முன்னெப்போதும் இராத அளவுக்கு” நீண்ட மந்தநிலையின் போது சரிவு இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.  மேலும் அதிகமான இலாபம் – ஊதிய சமநிலையை அவர் கோருகிறார்.

* இந்த சமூகச் செல்வத்தை பட்டினியையும், கல்வியின்மையையும் ஒழித்தல், சுகாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்குதல், பொதுப் போக்குவரத்தில் கார்பன் இல்லாத வடிவங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் செலவழிக்க வேண்டும்.

* பணவீக்கத்தை அதிகரிக்கும் உணவு, உரம், எரிபொருள், மருந்துகள் போன்ற பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும்.


பார்படோசைச் சேர்ந்த பெரும் எழுத்தாளர் ஜார்ஜ் லாமிங் (1927-2022) சமீபத்தில் நம்மிடமிருந்து மறைந்தார்.  அவரது 1966 கட்டுரையான ‘மேற்கிந்திய மக்கள்’ என்ற கட்டுரையில் அவர் சொல்கிறார், “நமது எதிர்காலத்தின் வடிவமைப்பு முடிவுறாமல் இருப்பது மட்டுமல்ல; அதற்கான சாரக்கட்டுக் கூட எழுப்பப்படவில்லை.’  இது ஒரு வலிமையான தொலைநோக்குப் பார்வை கொண்டவரின் வலிமையான உணர்வு.  அவர் மேற்கிந்தியத் தீவுகளில் கரீபியனில் இருக்கும் அவரது தாய்மண் அவரது மக்களை பெரும் பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கக் கூடிய உயர்தன்னாட்சி பெற்ற பிரதேசமாக உருவாக்கப்படும் என்று நம்பினார்.  அவ்வாறு நடக்கவில்லை.  வினோதமாக, அந்தப் பிரதேசம் சர்வதேச நிதியத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்த சர்வதேச நிதியத்தின் ஜார்ஜீவா கினோவா இந்த வாக்கியத்தைத் தனது சமீபத்தியக் கட்டுரையில் மேற்கோள் காட்டினார்.  ஜார்ஜிவோ கினோவாவும் அவரது ஊழியர்களும் லாமிங்கின் உரையை முழுமையாகப் படிக்கவில்லை என்று தோன்றுகிறது.  அந்தப் பத்தி 1966இல் எவ்வளவு விளக்கமாக இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது:இந்த அரங்கில் வலிமையான பொருளாதார நிபுணர்களின் குழு இருக்கிறது என நான் நம்புகிறேன்.  அவர்கள் பிழைப்புக்காக புள்ளியியலைக் கற்பிக்கின்றனர்.  அவர்கள் சுதந்திரத்துக்கு ஒப்பீட்டு விலையை எதிர்பார்த்து எச்சரிக்கின்றனர் . . . (நான்) ஒரு சாதாரண பார்பாடியன் தொழிலாளியின் கதையை நீங்கள் மனதில் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். அவர் கடந்த பத்தாண்டுகளாக யாரைப் பார்க்கவில்லை என்று, ‘விஷயங்கள் எப்படி இருக்கின்றன’ என்றும் இன்னொரு மேற்கிந்தியரால் கேட்கப்பட்ட போது,  அவர் பதிலளித்தார்: ‘புல்வெளி பசுமையாக இருக்கிறது, ஆனால் அவர்கள் என்னை ஒரு சிறிய கயிற்றால் கட்டிப் போட்டு விட்டார்கள்’.

விஜய பிரசாத்
தமிழில் : கி.ரமேஷ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *