ஜன்னல்களின்
கண்ணாடிக் கதவுகள்
அவசரகதியில் கீழிறங்கின
வாசலருகில் நின்றவர்கள்
நடுப்பக்கத்தில்
பதுங்கத் தொடங்கினர்
அமர்ந்திருந்தவர்கள்
முன்னும் பின்னும்
இடமும் வலமுமாக
இடம் பெயர்ந்தனர்
அடித்துப் பிடித்து
இடத்தை ஆக்கிரமித்த பலர்
இருக்கையை விட்டுக் கொடுத்தனர்
சில தலைகளுக்கு
கவசமானது
கைக்குட்டை
சில குழந்தைகளை
மூடி மறைத்தது
முந்தானை
அலைபேசிகள்
கைப்பைகளிலும்
கைக்கடிகாரங்கள் சட்டைப்பைகளிலும்
தஞ்சம் அடைந்தன
எதையும் கண்டு கொள்ளாமல்
நகரப் பேருந்தின்
இரகசிய துவாரங்களில் நுழைந்து
எட்டப்பன் பணியை
சிறப்பாக செய்துக் கொண்டிருந்தது
திடீரென்று பெய்த அழகான மழை
சிலர் ” உச் ” கொட்டினர்
சிலர் ஆட்சியாளர்களை
கிழித்துக் கொண்டிருந்தனர்
சிலர் வீடு சேரும் வழிதெரியாமல்
விழி பிதுங்கி நின்றனர்
இயல்பு நிலைக்கு மாறாக
அளவற்ற மகிழ்ச்சியில்
நனைந்து கொண்டிருந்தது
எனது மனம்
நான் நட்டு வளர்க்க
நீரின்றி கருகி வரும்
காய்கறிச் செடிகளின்
ஆணிவேர்களை
இந்த மழை தொட்டுவிடும்
எனும்
நம்பிக்கையின் ஈரத்தால்…

