“குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயரைச் சூட்டுங்கள்” உலகத் தாய்மொழி தினவிழாவில் கோரிக்கை

“குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயரைச் சூட்டுங்கள்” உலகத் தாய்மொழி தினவிழாவில் கோரிக்கை



வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலக தாய்மொழி தின விழா வந்தவாசி ஆசியன் இரத்த பரிசோதனை மைய வளாகத்தில்
நேற்று (பிப்-21) நடைபெற்றது.

இந்த விழாவிற்கு வந்தை கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தார். சங்க உறுப்பினர் ம.பெ.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். கவிஞர் வங்கை சு.அகிலன் தமிழ் மொழி பற்றிய இசைப்பாடலைப் பாடினார்.

விழாவில், கவிஞர் மு.முருகேஷ், செயலாளர் பா.சீனிவாசன், வயலாமூர் வீ.கிருஷ்ணன், தமிழாசிரியர் வீரராகவலு, க.புனிதவதி ஆகியோர் தாய்மொழி தினத்தின் சிறப்புகளை விளக்கிப் பேசினர்.

Image

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட திருவண்ணாமலை புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்ற மாநில துணைச் செயலாளர் பாவலர் வையவன் பேசியதாவது: “தாய்மொழியாம் நம் தமிழ்மொழியை அனைவரும் நேசிக்க வேண்டும். மொழி நம் அடையாளம். நம் குழந்தைகளுக்கு தமிழ் மொழியிலேயே பெயர் சூட்டப்பட வேண்டும். தமிழில் பிறையின்றி எழுதுகிற, பேசுகிற வழக்கம் இளைய தலைமுறை இளைஞர்களிடம் வளர வேண்டும். நம் குடும்ப விழாக்களில் எல்லாம் திருக்குறளைச் சொல்லும் வழக்கம் பரவ வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இவ்விழாவில், உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயரைச் சூட்ட வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது. விழாவில், கவிஞர்கள் மு. அப்துல்லா, தமிழ்ராசா, ல.செல்வராஜ், சா.ரஷீனா, ஷமீமா ஆகியோர் ‘தமிழை நேசிப்போம்’ என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர்.

Image

மேலும், வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மாணவி ஆ.தர்ஷினி 1330 திருக்குறளை ஒப்பித்ததைப் பாராட்டி, பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக, தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் கு.சதானந்தன் நன்றி கூறினார்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *