நூல் அறிமுகம்: மகிழ் ஆதன் சொன்ன கவிதைகள் *’நான்தான் உலகத்தை வரைந்தேன்’* – மு. இராமனாதன்கவிதைக்கு எது வேண்டும்? உருவம் வேண்டும். உள்ளடக்கம் வேண்டும். கவிதை மொழி பயின்றுவர வேண்டும். இந்த மூன்றுமிருந்தால் அது கவிதையாகும். இதிலிருந்து பெறப்படுவது, கவிதை எழுதுவதற்குக் கல்வியறிவு வேண்டும் என்பதில்லை. ‘ஆரடிச்சார் சொல்லியழு/ அடிச்சாரைச் சொல்லியழு’ என்கிற தாலாட்டை யாத்தவருக்கு ஏட்டறிவு இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அப்படியான தாலாட்டுகளிலும், ஒப்பாரிகளிலும், நாட்டார் பாடல்களிலும் பட்டறிவு மிகுந்திருக்கும். வார்த்தைகளை ஓசை ஒழுங்கோடு அடுக்கும் வன்மை இருக்கும். மகிழ் ஆதனுக்கு இவை இரண்டும் இனிமேல்தான் வாய்க்கப்பெற வேண்டும். அவனுக்கு வாழ்வனுபம் குறைவு. ஏனெனில், அவனுக்கு இப்போது வயது ஒன்பது. அ.முத்துலிங்கம் எழுதிய கதையொன்றில் வரும் குழந்தை, ஒரு புத்தகத்தை எடுத்துவைத்து மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டே இருக்கும். பிறகு, ‘இன்னும் வாசிக்கப் பழகாத சொற்களுக்கு மேல் தலையை வைத்தபடி உறங்கிவிடும்’. மகிழ் ஆதனும் இனிமேல்தான் பல சொற்களை வாசிக்கப் பழக வேண்டும்.

ஆனால் இவை எதுவும் கவிதை சொல்வதற்கு அவனுக்குத் தடையாக இல்லை. நான்கு வயதிலிருந்தே அவனுக்குக் கவிதை பழக்கமாகிவிட்டது. அவன் கவிதை எழுதுவதில்லை. கவிதை சொல்கிறான். மலையாளத்தில் இப்போதும் ‘கவிதை சொல்வார்கள்’. உரக்க வாசிப்பதும் ஓசை நயம் இருப்பதும் கவிதையின் லட்சணங்களாகக் கருதப்படுவதே காரணம். மலையாளக் கவிஞர்கள் கவிதை எழுதுவார்கள்; பிறகு சொல்வார்கள். மகிழ் ஆதனால் இன்னும் வாசிக்கவே பழகாத சொற்களை எப்படி எழுத முடியும்? ஆகவே அவன் நேரடியாகச் சொல்லுகிறான். அதை அவனது அப்பா கவிஞர் ஆசையும் அம்மா சிந்துவும் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வந்திருக்கிறார்கள். அதில் தேர்ந்தெடுத்த 75 கவிதைகளை ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ என்கிற தலைப்பில் இப்போது நூலாகவும் வெளியிட்டிருக்கிறார்கள்.


மகிழ் ஆதனுக்கு ஒரு தம்பியும் இருக்கிறான். பெயர் நீரன். மகிழின் சின்ன உலகில் நீரனுக்கு நிறைய இடம் இருப்பதில் வியப்பில்லை. ‘நீரன் சிரிக்கும் சிரிப்பு/ என் கண்ணில் பட்டு/மழையாகும்’ என்பது தொகுப்பிலுள்ள கவிதைகளில் ஒன்று. நீரனின் சிரிப்பு மகிழிடம் வந்து சேரும்போது அது மழையாகிறது, கவிதையுமாகிறது.

மகிழின் சொல் வங்கியில் இருப்புக் குறைவு. அந்த வயதுக்கான சொற்கள்தான் அவனது கையிருப்பு. ஆனால் அதற்குள் அவனால் கவிதை சொல்லிவிட முடிகிறது. மகிழின் கவிதையொன்று எனக்கு கண்ணதாசனை நினைவூட்டியது. ‘வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்/வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்’ என்கிற வரிகளில் கண்ணதாசன் வண்டாக மாறுகிறார். அவரது கவிதை தேனாக மாறுகிறது.

மகிழுக்கு வண்டும் பறவையும் மலர் மேல் அமர்வது தெரிகிறது. ஆனால் அது தேனை உறிஞ்சுவதற்காக என்பது தெரியவில்லை. அவனது சொல்வங்கியில் பூ இருக்கிறது, பறவையும் இருக்கிறது. அவன் இரண்டையும் இணைத்து ஒரு புதிய சொல்லைப் படைக்கிறான். அதன் மூலம் ஒரு கவிதையையும் படைக்கிறான்.

‘பூக்குத்தும் பறவை/ என் கண்களைப் பூவாக மிதக்க வைக்கும்/ பூக்குத்தும் பறவை/ மீனைப் பூவாக நடக்க வைக்கும்’

இதில் கவிதைக்கான உருவம் இருக்கிறது. உள்ளடக்கம் இருக்கிறது. பிரத்யேக மொழி இருக்கிறது. சொற் சிக்கனம் இருக்கிறது. முக்கியமாகக் கவிதையும் இருக்கிறது.


இன்னொரு கவிதை:

‘என் பட்டத்தில் நான் பறப்பேன்/ நான் பறக்குறதை/ அந்தக் காற்று கண்டுபிடித்து/ என்னைக் கட்டிப் பிடிக்கும்’. இது மகிழ் ஆறு வயதில் சொன்ன கவிதை. ஆனால் அந்த வயதைக் காரணம் காட்டி எந்தச் சலுகையையும் கோராத கவிதை. தனது வலுவாலேயே நிற்கக்கூடிய கவிதை.

‘மந்திரம் கொண்ட அம்மா/ மந்திரம் போட்டு/ என் கவிதைகளை/ நடக்க வைப்பாள்’ என்பது இன்னொரு கவிதை. இப்படியான கவிதைகள் தாமாகவே நடக்கும். யாரும் எந்த மந்திரமும் போட வேண்டாம்.

குழந்தை மேதைகளை ‘ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகள்’ என்று சொல்வார்கள். ஆனால் ஒரு குழந்தை, மேதையாய் இருப்பது சுலபமில்லை. அந்தக் குழந்தைக்குத் தனது மேதமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு சக குழந்தைகளோடு சமதையாய்ப் பழகத் தெரிந்திருக்க வேண்டும். அது மகிழால் முடிகிறது. பெற்றோர், ‘ஆன்டிக்கு ஒரு கவிதை சொல்லு’ என்று கேட்காதவர்களாக இருக்க வேண்டும். மகிழுக்கு அதுவும் வாய்த்திருக்கிறது. இரண்டுக்கும் இந்தத் தொகுப்பே சாட்சியமாய் அமைகிறது.

இந்த நூல் சிறியது. நல்ல அச்சிலும் அமைப்பிலும் வெளியாகியிருக்கிறது. கவிதைப் பக்கங்கள் பிள்ளைகளின் கோடு போட்ட நோட்டுப் புத்தகங்களைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கவிதை உருவான நாளும் குறிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான சிறார் கவிதை நூல், ஒரு வாய்மொழி இலக்கியம், இதற்கு முன்பு தமிழில் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. மகிழ் இன்னும் பல கவிதைகள் சொல்லட்டும். விரைவில் அவன் கவிதையை அவனே எழுதட்டும்.
நூல்: ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ சிறார் கவிதை
ஆசிரியர்: மகிழ் ஆதன்
முதல் பதிப்பு, ஏப்ரல் 2021
88 பக்கம், விலை ரூ.50
வெளியீடு: வானம் பதிப்பகம்
M22, ஆறாவது அவென்யூ
அழகாபுரி நகர், ராமபுரம்
சென்னை-89
+91-91765 49991

(மு இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: [email protected])

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)