நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ் (Nanbargalin Paarvaiyil Marx) – நூல் அறிமுகம்
மொழிபெயர்த்து எழுதியவர் ச. சுப்பாராவ் அவர்கள்.சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளை பெற்றுள்ளார். ” நிகழ்ந்த போதே எழுதப்பட்ட வரலாறு ” இந்திய பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” உள்ளிட்ட பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
23 ஆண்டுகாலம் நூலகத்திலேயே வாழ்க்கையை கழித்து, நாற்பதாயிரம் புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்து, தான் புகைத்துப்போடும் போடும் சுருட்டுக்குக்கூட தான் எழுதும் புத்ககத்தின் வருவாய் போதாது எனத் தெரிந்தும் மூலதனம் என்னும் நூலை உலக மக்களுக்குத் தந்த காரல் மார்க்ஸ்.
உறவுகளை நிர்ணயிப்பதே பொருளாதாரம்தான் என்று சொன்னவர்.
வாழ்நாள் முழுக்க பொருளாதாரச் சிக்கலில் தவித்தாலும் மனிதகுல சமூக மாற்றத்திற்கு புதியதொரு விடியலுக்காக இறுதிவரை சிந்தித்த மாமனிதனின் வாழ்க்கை அம்சங்களை அவருடன் பயணித்த இரு நண்பர்களின் வாக்குமூலம்தான் இந்நூல் .
ஒருவர் ஜெர்மன் சோஷலிஸ்டும் ஜெர்மன் சோசலிஸ்டு டெமாக்ரஸி கட்சித் தலைவருமான கார்ல் லீப்னெஸ்ட். மற்றொருவர் பிரெஞ்ச் புரட்சியாளரும் மார்க்சின் இரண்டாவது மகளை மணந்தவருமான பால் லஃபார்கே.
இருவரது நினைவலைகளில் ஏராளமான செய்திகள் அறிய முடிகின்றன. மார்க்ஸ் என்ற அற்புத மனிதரை , பொருளாதார மேதையை , உலகத்திற்கே மார்க்சிய தத்துவத்தை போதித்த அறிஞரின் குழந்தைத்தனமான செய்கைகளை, இன்புற்று மகிழ்ந்த தருணங்களை, அல்லல்படும் துயரங்களை, விளையாட்டுகளை நண்பர்களிடம் கழித்த பொழுதுபோக்குகளை, விவாதங்களை , நூலக தேடல்களை, என பல சம்பவங்கள் விவரித்துக் கொண்டே செல்வதை வாசிக்க பெருமூச்சு கிளம்புவது நிச்சயம்.
கார்ல் லீப்னெஸ்ட், மார்க்ஸைப்பற்றி கூறும்போது அடிக்கடி “மார்க்ஸ் பாணி” என்று ஒன்றைக்குறிப்பிடுகிறார்.
// மார்க்ஸ் ஒரு கருத்தாக்கத்தை சாத்தியப்படும் அளவு சுருக்கமாக உருவாக்கிக் கொள்வார்.அதை தொழிலாளர்களால் புரிந்து கொள்ளப்படாத வார்த்தைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்று மிகக் கவனத்தோடு சொற்களைத் தேர்ந்தெடுத்து விரிவாக விளக்குவார். பிறகு பார்வையாளர்களை கேள்விகேட்கச் சொல்லுவார்.யாரும் கேள்வி கேட்கவில்லை என்றால் பார்வையாளர்கள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது , புரிதலில் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது என்பதற்காக பார்வையாளர்களை கேள்வி கேட்டு பரிசோதித்துக்கொள்வார்.//
உரையாடும் போது கரும்பலகையைப் பயன்படுத்துவதும் அதில் பல சூத்திரங்கள் எழுதுவதுமான செயல்பாடுகளை மார்க்ஸ் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார் என்கிற தகவல் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
” மார்க்ஸ் மற்றும் அவரைச்சேர்ந்தவர்களை ” கொள்ளைக்காரர்கள் ” என்றும் “மனித இனத்தின் சக்கைகள் ” என்றும் பிறரால் அழைக்கப்பட்டதை
நகைச்சுவையாக விளக்கி, தாங்கள் ஏன் அடிக்கடி நூல்கம் சென்று அங்கேயே இருந்து வாசிப்பில் ஈடுபட்டோம் என்பதையும் அழகுற கூறுகிறார் .
// சில சமயங்களில் எங்களுக்கு சாப்பிட ஒரு பருக்கைக்கூட இருக்காது . ஆனால் அதற்காக நாங்கள் பிரிட்டீஷ் மியூசியம் போகாமல் இருக்கமாட்டோம். ஏனெனில் அங்கு வசதியான நாற்காலிகள் இருக்கும். குளிருக்கு கதகதப்பாக, வசதியாக இருக்கும்.அது வீட்டைவிட வசதியானது. அதாவது வீடு இருந்தவர்களின் வீட்டைவிட.//
மார்க்ஸ் வீட்டில் ஏழ்மை மட்டும் தங்கியிருக்கவில்லை.பல்வேறு ஆளுமைகள் தங்கி கற்றுச்செல்லும் பள்ளியாகவும் திகழ்ந்திருக்கிறது.இரவு முழுக்க விவாதம் ,நடைமுறை தந்திரங்கள் பிற நாடுகளின் அரசியல் பண்பாட்டு நிலைமைகள் என பல்வேறு விஷயங்களில் உரையாடல்கள் அமையுமாம்.
மார்க்ஸ் தன் குழந்தைகளிடம் காட்டும் அன்பு அபாரமானது.குழந்தைகளோடு ஓடி விளையாடுவார்.அவர்களின் குழந்தைத்தனமான விளையாட்டுகளில் குழந்தையாக பங்கேற்பார்.
மார்க்சின் ஆண்குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துபோனார்கள்.
பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைப்போலவே படு சேட்டைகளுடன் இருப்பார்களாம்.
மார்க்சின் மகன் இறந்தபோது அதன் சூழ்நிலையை இப்படி விவாதிக்கிறார்.
// அந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. இறந்த தன் குழந்தை அருகே குனிந்து அந்தத் தாய் மௌனமாக அழுது கொண்டிருந்தாள்.லென்சன் நின்றபடி அழ மார்க்ஸ் சமாதானம் சொல்வோர் மீது கடுமையாக கோபமிட்டபடி தாங்க முடியாத துக்கத்தில் இருக்க, இருபெண் குழந்தைகளும் சத்தமில்லாமல் அழுதபடி அம்மாவிடம் ஓட்டிக்கொண்டிருந்தன. அவர்களை விட்டால் மரணம் பிடித்துக்கொண்டு போய்விடுமோ என்பதுபோல் அந்தத் தாய் குழந்தைகள் இருவரையும் இறுக்கி அணைத்திருந்தார்.//
செஸ் விளையாட்டில் மார்க்ஸ் காட்டிய ஈடுபாடு குறித்து இவ்வாறு கூறுகிறார்.
// மார்க்ஸ் செஸ் விளையாட்டில் இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டால் எரிச்சலடைவார்.தோற்றுப்போனால் கடுப்பாகி விடுவார்.புதுப்புது உத்திகளோடு களமிறங்குவார் .வெற்றிபெற்றால் அறையே எதிரொலிக்கும் அளவிற்கு சத்தமிட்டு சிரிப்பார் //
பால் லஃபார்கே வின் நினைவலைகள் இன்னும் பல செய்திகளைக் கூறுகிறது.
நான் இந்த உலகத்தின் குடிமகன் என அடிக்கடி கூறிக் கொள்வாராம்.பிரான்ஸ் , பெல்ஜியம்,இங்கிலார்ந்து என எந்த நாட்டிற்கு துரத்தப்பட்டாலும் அந்நாட்டில் உருவாகிக் கொண்டிருந்த புரட்சிகர இயக்கத்திற்கு இவரே காரணமாக இருப்பாராம்.
தான் மார்கஸூடன் வேலைபார்த்து வந்ததாகவும் அவரது படைப்புகளை எழுதும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றவன் என்றும் அதே சமயத்தில் அது கடினமான பணி என்றும் பால் லஃபார்கே கூறுகிறார்.
நூலக அறையில் புத்தகங்கள் தாறுமாறாக சிதறிக் கிடைக்குமாம். யாரையும் சரிசெய்ய அனுமதிக்கமாட்டாராம். அந்தந்த புத்தகத்தை அதனதன் இடத்திலேயே அமர்ந்து படிப்பாராம்.அவருடைய சொந்த உறுப்புகளைப்போல் பாதுகாப்பாராம்.
விஞ்ஞானம் ஒரு சுயநலமான இன்பமாக இருக்கக்கூடாது . மனித சமூக தேவைக்கு தங்களின் விஞ்ஞான அறிவை பயன்படுத்துவதில் விஞ்ஞானிகள் முன்னிற்கவேண்டும் . விஞ்ஞானம் பற்றிய மார்க்சின் ஜனநாயகப் பூர்வமான கருத்தாக லஃபார்க் கூறுகிறார்.
சாதாரண மனிதனின் வாழ்க்கையைத்தான் மார்க்ஸ் வாழ்ந்துள்ளார். இன்பம் துன்பம் வரவு செலவு இழப்புகள் பொருளாதார சிக்கல்கள் கையறுநிலைமைகள் என அத்தனை அம்சங்களும் நம் வாழ்வைப்போலவே அவர் வாழ்விலும் கடந்து சென்றிருக்கின்றன.
ஆனால் அவர் அப்படியே மாய்ந்துவிடவில்லை.நிலையான வீடு மட்டுமல்ல நிலையான நாடே இல்லாமல் அகதியாய் உலகை சுற்றினாலும் இந்த உலகத்திற்கான பொன்னுலகம் மின்னிக்கொண்டிருப்பதை மக்களுக்கு காட்டியவர்.
இரு நண்பர்களின் பார்வையில் என்ன தெரிந்துகொண்டோம்.?
அசாதாரண நிலையிலும் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கைக்கான உயரிய தத்துவத்தை வரையறுப்பதிலும் நடைமுறைபடுத்துவதிலும் செலவிட்டார் என்பதே.
ச.சுப்பாராவ் அவர்களுடைய மொழிபெயர்ப்பு , மொழிபெயர்ப்பு போலவே தெரியவில்லை.விறுவிறுவென , எளிமையாக , புரியும் நடையில் வாசிப்பு நகர்கிறது .மிக அற்புதமான பணி.
பாரதி புத்தகாலயம் இப்புத்தகத்தை நல்ல அட்டையில், நல்ல தாளில், நல்லமுறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர் : நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்
மொழிபெயர்ப்பு : ச.சுப்பாராவ்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை ரூ : 70/
நூலிப் பெற : https://thamizhbooks.com/product/nanbargalin-parvaiyil-marx/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சகுவரதன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.