Nandan Kanagaraj in Agaalathil Karaiyum Kakkai Poetry Collection Book Review by Selva Kumar. Book Day is Branch of Bharathi Puthakalayam.



கவிஞர் நந்தன் கனகராஜ் எழுதிய அகாலத்தில் கரையும் காக்கை கவிதை நூலை வாசித்து கடந்து செல்ல இயலவில்லை. வாழ்வில் நாம் கண்டும் காணாமல் கடந்து சென்றவைகளை கவிதையாக்கி நமை உணரச்செய்துள்ளார். ஒரு நூலை வாசிக்கும்போது அந்நூலை மூடிவைத்துவிட்டு, அக்காட்சியை கண் முன் கொண்டுவந்து அதைப்பற்றி யோசிக்க வைத்து நமை உருக வைக்க வேண்டுமென்பதைப்போல், இக்கவிதை நூலை நான் வாசிக்கும்போது உணர்ந்தேன். “பூமி எப்போதும் பிழைத்திருக்கும், மனித இனமே மிகவும் நொய்மையானது,” நமது புவிக்கோளம் மிகச்சிறியது, ஒரு மாபெரும் வாழும் அமைப்பால் ஒருசேர வைக்கப்பட்டிருக்கிறது.

ஆப்பிரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ ஒரு பெருங்கடல் பாதிப்புற்றால், உலகெங்கிலுமுள்ள மக்களைப்பாதிக்கும். நாம் எவ்வளவு பலவீனர்கள் என்பதை உணர்ந்திருக்கவில்லை. இயற்கையை நாம் இப்படியே நடத்திவந்தால், என்ன நிகழக்கூடும் என்பதன் ஒரு துளியையே கொரோனா பெருந்தொற்று நமக்கு எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கிறது என்கிறார் ஆப்பிரிக்க கடல் வளத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள கிராய்க் ஃபாஸ்டர் என அணிந்துரையில் சாகித்ய அகாதெமி விருதாளர் சா. தேவதாஸ் கூறும்போதே, அதே பின்புலத்தில் நந்தன் கனகராஜின் கவிதைகள் நினைவூட்டுவதாக கூறியதைப் படிக்கும்போது

கொரோனா காலத்தைப்பற்றிய கவிஞர் எழுதிய “ஆதாரத்திற்கு கொஞ்சமாக சிரியுங்கள் போதும் “என்ற கவிதை நம் கண் முன்னே வந்துசெல்கிறது.

உலகம் குறைந்துகொண்டே வருவதாக எல்லோருக்குள்ளும்
மிகுந்த வருத்தமும் இருக்கிறது

சமாதானத்தின்

வெள்ளை வண்ணத்தை
பெற்றுக்கொண்ட வணிகர்கள்
கடைகளின்முன் வட்டக்குறிகளை
இட்டுக்காட்டுகிறார்கள்

தொற்றாளர் என்பது
அரசாங்கத்தின் புதிய சர்டிபிகேட்

என வாசிப்பவர்களை
புல்லட் ரயிலையா கேட்கிறீர்கள் அதைப்
புலம்பெயர் தொழிலாளர்கள் ஓட்டிச்சென்று போனார்களே தொலைக்காட்சி நேரலையில் பார்க்கலையா என நகைச்சுவையோடு
அட வாங்க பாஸ்

ஒரு மூலிகை டீ குடிக்கலாம்
என முடித்திருப்பார் எதிர்மறை சிந்தனையை நேர்மறையாக்கி.



தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் படி தூய்மைத் திட்ட இராஜபாளையம் பணியில் தன்னார்வலராக ஈடுபடும்போது நான் உணர்ந்த நிலையின் விளைவாக தூய்மைப்பணியாளர்கள் வணங்குவதற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். அவர்களை பிரசன்னம் கவிதை மூலம் கடவுளாக்கிவிட்டார். ஒவ்வொரு வீட்டினரும் மாதம் முதல் தேதியில் ரூ.10/-யை தூய்மைப்பணியாளருக்கு வழங்கிவிட்டு, தினமும் பார்க்கும்போதெல்லாம் ரூபாய் மட்டும் வாங்கத்தெரியுது குப்பையை ஒழுங்கா அள்ளத்தெரியாதோ என்பதைக்காதுபடக் கேட்டுச்செல்வோம், அதையும் கண்டுணர்ந்து எழுதியுள்ளார்.

குப்பை வண்டிக்கு விநோத ஒலி
வீடுகளில்
வீதிகளில்
வாரிக் கொண்டு நிறைக்கிறது

மக்கும் குப்பை
மக்காத குப்பைக்காக
பிரித்துத் தர இறைஞ்சுபவனிடம்
சென்ற பண்டிகைக்கு உவந்த
பத்து ரூபாயை
முந்நூற்றி இருபதாம் முறையாகச் சொல்லி
சலிப்படைந்து கொள்கிறார்கள்

அடையாள அட்டையின்
பூரிப்போடு வரும்
ஒப்பந்த ஊதிய பணிப்பெண்
தூய்மைப் பணியை
அலைபேசிக்குப் பதிவேற்றி
நகராட்சி ஆய்வாளருக்கு
ஃபார்வேடு செய்தளிக்கிறாள்

எதையும் மீறாதிருந்து
ஒழுங்கு செய்யும்
வீதி ஆலயத்தின்
நித்தப்பாடல்
மின்மேளத்தின் பின்னொட்டுக்கு
தொடர்கிறது

பாதசாரிகள் குனிந்து
கன்னத்திலிட்டும்
இருசக்கர ஓட்டிகள்
ஆக்சிலேட்டரை விடுத்த
ஒற்றைக் கையிலுமாகப்
பவ்யம் காட்டிக் கடக்கிறார்கள்

கடவுளுக்கு நேரமில்லை
வாரிச் சுருட்டிய

வண்டிக் குப்பைக்கு
வலையிட்டு விட்டு
தொங்கிக்கொண்டே போகிறார்..
என எழுதி நமது செவிட்டில் அறைந்துள்ளார்.

அவசரயுகத்தில் அவசரகோலத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என கடந்துசெல்லும் இக்காலத்தில் நாம் கண்டும் காணாததை கவிதை மூலம் பாய்ச்சியுள்ளார் நங்கூரமாக..

கைபிடித்து நடந்தும் மிதிவண்டியிலும் நாம் சிறுவயதில் தந்தையோடு நாம்

வசித்து வந்த ஊரினை வலம் வந்திருப்போம், பிரதி வாழ்வில்

என் மகன்
மில்லினியத்தின் கேட்ஜட் குழந்தை
திருவாளர் கூகுளிடமிருந்து
பாதைகளை
விரவிக்கொண்டுள்ளான்
என முடித்திருப்பார்.




மழைப் பேச்சு கவிதை மூலம் புறச்சூழலை எண்ணி கண்ணீர் சிந்தும் தன் அகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்,

அரைகுறையாய் மங்கிப்
புலர்கிறது
மழைக் காலை

மாட்டுக் குளம்படிகளின்
வரிசைத் தடங்களுக்கு
செம்மண்ணாகச் சிறுகுளங்கள்

நனைந்துலர்ந்து
நெகிழியின் நீலத்தில்
உடல் மறைத்த இரவுக் காவலாளி
மிதிவண்டியின் பெல்லை
மனக்குரலின் பாடலுக்கு
அடித்துக்கொண்டு போகிறான்

டிராக்சூட்டில் போர்டிகோவை
நீளவாக்கில் நடையிடுபவருக்கு
குறுஞ்செய்திகள்

வந்த வண்ணமுள்ளன

என உயிர்வாழ்வதற்காக உடலை வருத்தி உழைப்பவனையும் எடையைக் குறைத்து நீண்ட நாள் வாழ போர்டிகோவில் நடப்பவனையும் காட்சிப்படுத்தி நெகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.



பிரசாதம் கிடைத்தவுடன், செம டேஸ்ட் அய்யர் கொடுத்த சக்கரைப்பொங்கல் என மகிழ்ந்த தருணத்தை
நாளை என்ற கவிதையை

வாசித்தவுடன் நினைவுக்கு வந்தது
சக்கரை வழி வந்த
மூத்திரக்கரிப்பு,

நாளை
பிரசாத இலைகளில் இருக்கலாம்…

விளையாடிவிட்டுப் போன
சிறுவர்களின்
மூத்திரக்கரிப்பு!

அனைத்து கவிதைகளையும் கூறிவிடுவேன்போல, சமகாலத்தை

சமரசமின்றி
சரியான சவுக்கடி
கொடுத்துள்ள இக்கவிதை நூல் அனைவராலும் பேசப்படும், நீங்களும் வாசித்து மகிழுங்கள்,
மேலும் சில கவிதையைக் கூறி முடித்துக்கொள்கிறேன்.

நெடுந்தொலைவுக்கு
ஒளியுண்டு
குணப்பித்தத்தில்
பாதைகள்
மங்குகின்றன

அமாவாசை நாளின்
மதிய உணவு
பிடிபடாமல்

வந்துவிட்ட இரவை
அகாலத்தில் கரைந்து தருகிறது
காக்கை…

ஆம்
கார்ப்பரேட் காலத்தில்
காலன்
கண்டுகொள்ளப்போவதில்லை
கஷ்டப்படும் மக்களை
இருண்ட நாடாகப்போகும்
அபாயத்தை மறைமுகமாக
உணர்த்தும்விதமாக
அகால நேரத்தில்
கரைந்துணர்த்துகிறார்
காக்கையாக மாறி

நந்தன் கனகராஜ்….



கவிதை நூல்
அகாலத்தில் கரையும் காக்கை

ஆசிரியர்
கவிஞர் நந்தன் கனகராஜ்

பதிப்பகம்
கடற்காகம் வெளியீடு
எஸ். ஆலங்குளம்
மதுரை.

முதற்பதிப்பு – டிசம்பர் 2020
விலை₹100.

நூல் விமர்சனம் – செல்வக்குமார்
இராஜபாளையம்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *