ம(வு)னச் சித்திரம்
—————————— —-
ஈரச் சுவரில்
மழைப் பச்சை
வரைபடத்தைப்
படர்த்தி வைத்திருக்கிறது
காரை உதிர்ந்த
சிறு சுவர்
உறிஞ்சி சேர்த்த கசிவை
ரத்த வண்ணத்திற்கு
சிவப்பிட்டுள்ளது
செங்கல் வரிசை
முன்புற அழகென
அப்பிக்கிடக்கும்
பாதிப் பூச்சு
ஒடுங்கிய வாழ்வின்
உப்புத் தடத்தை
மீன் செதில்களாக
அரிந்து கொண்டு உதிர்கிறது
சபிக்கப்பட்ட நாளின்
சிறுகவள அரிசி
இன்றைய பொழுதுக்கு
நுரை கூடி
மூடி தள்ள வேண்டும்
அடுப்பங்கரையின்
சுள்ளி விறகை
ஊதுங்குழலுக்கு
குரலென ஏதுமில்லை
உஸ்…உஸ்..சென
பற்றப் போகும் தீயை
எங்ஙனம்
பிறப்பிக்கச் செய்வது?
சிவந்து சரிந்து கிடக்கும்
வானத்தின் தீக்கங்குகள்
அகாலத்தைக்
கள்ளமாகப்
பாடிக் கொண்டுள்ளன
பொய்மையின் ஊற்றைச்
சிருஷ்டிக்கும்
நம் கடவுளோ
எரிபொருள் நிலையங்களின்
பதாகைகளில்
மானியங்களின் சிரிப்பைத்
தந்து கொண்டிருக்கிறார்.
வட்டத்துக்குச் சுழலும்
பால்ரஸ் குண்டுகள்
—————————— ————-
முன்நகர்ந்து கொண்டேயிருக்கும்
கடிகார முட்களின் நகர்வு
காலத்தைக்
கழித்து அளிக்கிறது
குழந்தைகளை
மகிழ்வித்துக் கொண்டு
பூக்களைச் சரணடைகின்றன
விடுதலையாகும்
பட்டாம்பூச்சிகள்
வெளிறிக் கறுத்த
தாலிக்கயிற்றில் பஞ்சுதிரண்டு
பாசி மணிகளாக
உருண்டிருப்பது
அறிந்துதான்
பணியாளர் பேருந்துக்கு
நிற்கிறாள்
வயிறொட்டிய அபலை
நப்பாசையின்
கடைசி வாய்ப்பையும் தந்து
சக்கைகளைத்
திணித்துப் பார்க்கிறான்
கரும்பு ஜூஸ்காரன்
புண்பட்டுக் கொண்டால்
மருந்திட்டுப் புதுத்தோல் மூட
சில கவனிப்புகள்
தேவையாயிருக்கின்றன
மாற்றம் ஒன்றே
மாறாத தென்னும்
உலக நியதியின் கீழ்
மழைக்காளான்கள் எல்லாம்
சும்மாதான்.
வடிவெழில்
———————–
தன்னைத் தொட்டு
உயிர்ப்பித்துக் கொள்ளும்
வெய்யிலை
தலைவாசல் கோலத்தில்
இட்டுப் போயிருந்தவள்
ஏனோ
திகைத்துத் திரும்பி வந்தாள்
எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தையிடம்
அங்கேயே விட்டு வரச்சொல்லி
அதட்டிக் கொண்டிருந்தாள்
ஒரு அம்மா.
நந்தன்கனகராஜ்
111,குறிஞ்சி நகர்,
இராசபாளையம் 626117
விருதுநகர் மாவட்டம்.
பேச :9788157892 / 9487410270