கவிதை: சிரிப்பை அழுகாச்சியாக்கும் கடவுள் – நந்தன்கனகராஜ்,சிரிப்பை அழுகாச்சியாக்கும்
கடவுள்
——————————————————–
இறுகப் பற்றியிருக்கும்
கயிற்றின் பிடி
நழுவிக் கொண்டிருக்கிறது
கொடுங்கனவின் வசனத்தை
யார் யாரோ
உதிர்த்தளிக்கிறார்கள்
மேலும்
ஒரு பிரம்படியை
கடவுள்
எல்லோர் முதுகிற்கும்
பிரயோகம் செய்கிறார்
நீலவெளி கடல்
பரந்து விரிந்த ஆகாயம்
அடுக்குத் தொடர் மலைகள்
ஜீவ விவசாயம்
சின்னஞ்சிறு ஆசைகள்
பகுத்தறியும் மூளைகளைப்
படையல் கேட்டு வரும்
பஜனைச் சத்தம்
நித்தம் நித்தமொலிக்கிறது
களவாடப்பட்டுக்
கொண்டிருக்கும் தேசத்தில்
குழுமிக்கொண்டிருப்பது
குற்றச் சட்டமாகிறது
புராணக் கதைகளை
புது பிரிண்டில்
ஒளிபரப்ப அரசவையின்
ஆவணக் குறிப்பு
ஆயத்தமாயுள்ளது
இன்றைய நேரலையில்
கடவுள் வரவிருக்கிறார்
பற்றிப் பிடித்திருக்கும்
கயிற்றில் அரசுக்கிருக்கும்
பங்கின் விலக்கலை
அவர் அறிவிக்கக்கூடும்
பதட்டமடைய வேண்டாம்
யாரும்……
உங்களுக்கெல்லாம்
பாரத் மாதா கீ ஜே!
சொல்ல வரும் தானே!!
நந்தன்கனகராஜ்,
111,குறிஞ்சி நகர்,
இராசபாளையம் 6261117
விருதுநகர் மாவட்டம்.