தமிழில் பழங்குடிகள் தொடர்பாகவும் தமிழகப் பழங்குடிகள் தொடர்பாகவும் அதிகம் இல்லையென்றாலும், சில நூல்கள் வந்துள்ளன. பழங்குடிகளை, காடுகளை அவர்கள் பார்க்கும் விதத்தை, இயற்கையை அவர்கள் அணுகும் விதத்தை ஒரு சமவெளி மனிதர்-வெளியாளுக்கு உணர்த்தும்படியான நூல்கள் மிகக் குறைவு. இந்த இடைவெளியை காடர்களை அடிப்படையாக வைத்து ஒரு சில தப்படிகள் குறைத்திருக்கிறது தாரா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘நாங்கள் நடந்து அறிந்த காடு’ நூல்.

இளம் இயற்கை ஆய்வாளர்கள் மாதுரி ரமேஷும் மணிஷ் சாண்டியும் ஆங்கிலத்தில் எழுதிய இந்த நூலை தமிழில் தந்திருக்கிறார் பிரபல மொழிபெயர்ப்பாளர் வ. கீதா. காடு, காடர்கள், இயற்கை குறித்த நம் அணுகுமுறையை எழுத்து வழியாக இந்த நூல் அசைத்துப்பார்க்கிறது. அதற்கு முக்கியக் காரணம், திறந்த மனப்பான்மையுடன் காடர்களை ஆசிரியர்கள் அணுகியவிதம் முதன்மையானது என்றால், அதன் வழியாகக் கிடைத்த அனுபவத்தை எழுத்தாக உருமாற்றும் ரசவாதத்தை அவர்கள் சிறப்பாகச் செய்தியிருக்கிறார்கள். இதற்கு நியாயம் செய்வதுபோல் வரையப்பட்டுள்ள மாத்யு ஃபிரேமின் ஓவியங்கள், நம் மனப்புனைவுகளுக்கு புது வண்ணம் கூட்டுகின்றன.

இயற்கையுடன் பழங்குடிகள் கொண்டுள்ள ஒத்திசைவான உறவு, இயற்கை சார்ந்து பழங்குடிகள் பேணும் அறம், பழங்குடிகளின் அபூர்வ மரபறிவு ஆகியவையே இந்த நூலில் இருந்து நமக்குக் கிடைக்கும் பெறுமதிகள். இந்த நூலின் முக்கியக் கதாபாத்திரம் மதியப்பன். இவர் கற்பனை மனிதரல்ல, நிதர்சனத்தில் வாழ்பவர். காடர்களின் முதன்மைப் பிரதிநிதியாக அவருடைய குரலே இந்த நூலில் அதிகம் ஒலிக்கிறது.

இந்த நூலின் சில முக்கியப் பகுதிகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்:

காட்டின் பாதைகள்

Image

சீழ்க்கையடிக்கும் முதியர் பறவை எங்கள் முன்னோர். காட்டில் நான் தனியாகவே இருப்பதில்லை. காட்டுக்குள் செல்வதற்குமுன் அது பறக்கும் அல்லது காட்டுக்குள் சென்ற கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அது கண்ணில் படும். அதேபோல, நடந்து நடந்துதான் பழகாத பாதையை நடப்பதற்கு ஏற்றதாக மாற்ற முடியும் – மதியப்பன்

காட்டில் நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு திசைகளை அறிய முடியாது. பனிபொழியும் வேளையில் ஒரு விதம்; மழை பெய்யும்போது ஒரு விதம்; கோடையில் ஒரு விதம் என்றிருக்கும். கோடையில் காட்டுத்தீ பற்றும்போது பழகிய பாதைகூட தெரியாத ஒன்றாக மாறிவிடும். மழைக் காலத்தில் மரம் விழுந்து பாதையை அடைக்கும், மசமசவென்று புல் வளர்ந்து பாதை உருமாறியிருக்கும்.

மழைக் காலத்தில் பாதை மாறி காட்டில் தொலைந்துபோனவர்கள் ஏராளம்.
காட்டின் தரையை வாசிக்க முடியும். காட்டின் தரை ஒரு கண்ணாடி. மண் மீது நடக்கும் அத்தனை விஷயங்களையும் காட்டின் தரை பிரதிபலிக்கும். இலைக்குவியல்களுக்கு ஒரு வாடை, மழையில் நனைந்திருக்கும்போது ஒரு வாடை, வெயிலில் காய்ந்து மக்கிப் போகும்போது வேறு வாடை, காளான்கள் மண்வாசனையுடையவை.

காட்டுக்குப் பழகினவர்களின் கால்களுக்குக் காட்டுப் பாதைகளின் குணம் தெரியும். உயிரினங்கள் மோப்பம் பிடிப்பதுபோல், சுற்றும்முற்றும் நோட்டம்விட்ட பிறகே நடக்கத் தொடங்குவோம். பாதையை உன்னிப்பாக கவனித்து, நடந்து நடந்து பாதையின் தன்மையைத் தெரிந்து கொள்ளும்போது அந்த அனுபவம் வரைபடம்போல் மனதில் தங்கிவிடும். கால்கள் அறிந்ததை மனதில் நிலைநிறுத்திக்கொள்ளும் நினைவாற்றல் வேண்டும்.  நாங்களும் ஓங்கல்களைப் (இருவாச்சி) போலத்தான்.

தினமும் கூடிப்பேசியே ஆக வேண்டும். மாலையில் வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவுடன் பலா மரத்தடியில் கூடுவோம். காடு எங்கள் வீடு என்றால், எருமைப்பாறை அந்த வீட்டின் தாழ்வாரம் போன்றது.

ஒரு புதிய பாதையில் சென்றிருந்தால், அதை மற்ற காடர்களிடம் பகிர்ந்துகொள்வோம். அதேபோல் ஒவ்வொருவருக்கும் பிடித்த மரம், ஓடை, பாதை, பாறை என்று ஏதேனும் ஒன்று இருக்கும். அவ்வப்போது காட்டின் வரைபடத்தைப் புதுப்பித்துக்கொள்வோம். காடு பற்றி புதிய தகவல் கிடைத்தால், அது குறித்து மேலும் அறிய ஆவலுடன் இருப்போம். ஆபத்தான நேரத்தில் பழகிய பாதையில் நடந்து வீடு போய்ச் சேர முடியாது. அந்த மாதிரியான வேளைகளி்ல் பாதை பற்றிய அறிவு கைகொடுக்கும்.

காட்டை உணர்தல்

Image

வீட்டைச் சுற்றி காடு இருந்தால்தான் வீடு வீடாக இருக்க முடியும்.
உங்களுக்கு உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறையும் நன்கு தெரிந்திருப்பதைப் போல், எங்களுக்கு இந்தக் காட்டின் ஒவ்வொரு குன்றும் ஓடையும் தெரியும். காடுதான் எங்கள் வீடு. – சாந்தி

நீங்கள் கண்கள் காணும் காட்சியைக் கொண்டு மட்டுமே காட்டு விஷயங்களை அடையாளம் காண்கிறீர்கள். எங்களில் பலருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஐம்புலன்கள் மூலம், சொல்லப் போனால் மொத்த உடலைக்கொண்டு காட்டை நாங்கள் உணர்கிறோம். காட்டின் ரகசியங்களை, அது சொல்லும் கதைகளைப் புரிந்துகொள்ள எங்கள் உடல்களை, எங்களைப் பழக்கியிருக்கிறோம்.
பல தலைமுறைகளாக இந்தக் காட்டை நம்பியே நாங்கள் வாழ்ந்துவந்துள்ளோம். இங்குள்ள விலங்குகளுக்கு எங்கள் வாசம் தெரியும்.

அவர்கள் எங்களை அண்ட மாட்டார்கள். விலங்குகளால் எங்களுக்குப் பெரிய ஆபத்து ஏதும் கிடையாது. யார் காட்டுக்கானவர், யார் வெளியாள் என்று விலங்குகளுக்குத் தெரியும். நாங்கள் காட்டாறுகளில் குளிக்கும்போது ஆற்று மணலை சோப்புபோல் தேய்த்துக் குளிப்போம். ஆற்றங்கரையில் வளர்ந்திருக்கும் கிழங்குகளைப் பறித்துத் தின்போம். ஓடை நீரைப் பருகுவோம். இப்படிச் செயவதால் எங்களது உடல்களுக்குத் தனியொரு வாசம் இருக்க வேண்டும். காட்டுமணமிக்க எங்களைக் கண்டு விலங்குகள் பயப்படுவதில்லை. சலனப்படுவதுமில்லை. – மதியப்பன்

காட்டுக்குள் போவோர் நல்ல மனம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்று எங்களுடைய முன்னோர் கருதினார்கள். நல்ல எண்ணங்களோடு சென்றால், நல்லவையே கண்களுக்குத் தென்படும் என்று நினைக்கிறேன். – மதியப்பன்.

நாங்கள் மீண்டும் மீண்டும் காட்டைத் தேடிச் செல்வதற்குக் காரணம், வயிற்றை நிரப்பிக்கொள்ள மட்டுமல்ல. எங்களுடைய மனங்களை நிரப்பிக்கொள்ளவும்தான். காட்டில் இருக்கும்போது ஒரு நாள்போல இன்னொரு நாள் இருக்காது. ஓர் அரிய பறவையை, உயிரினத்தைக் கண்டால் உள்ளம் நிறையும். எங்கள் மூதாதையர்கள் அறிந்த பழைய மரங்களைக் கடந்து செல்லும்போது, எங்களை அறியாமல் மனம் குதூகலிக்கும்.

ஒவ்வொரு முறையும் காட்டுக்குள் நுழைந்தவுடன் மதியப்பன் கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொள்வது வழக்கம். “காட்டுக்குப் போகும் போதும் சரி, காட்டைவிட்டு நீங்கும் போதும் சரி, என்னைப் போன்ற பழைய ஆட்கள் காட்டுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தான் எங்களுடைய பயணத்தைத் தொடங்குவோம். காட்டை விட்டு நீங்குகையில் முதியர் பறவைக்கு நன்றி தெரிவிப்போம்.

எங்கள் மூதாதையராக இருந்து எங்களைப் பாதுகாத்துக் கூட்டி வந்ததற்காக, எங்களுக்கு உணவளித்ததற்காகக் காட்டுக்கு நன்றி சொல்வோம். எங்களை ஒன்றும் செய்யாமல், எங்கள் பாதையில் குறுக்கிடாமல் இருந்ததற்காக கரடி, யானை, காட்டெருது, புலி, பாம்பு, தேள் ஆகியவற்றுக்கு நன்றி சொல்லிக்கொள்வோம். எங்களுக்கும் காட்டுவாசிகள் அல்லாதவர்களுக்கும் இதுதான் வித்தியாசம்.

எந்த உயிரினமும் எங்கள் பாதையில் குறுக்கிடக் கூடாது என்று நாங்கள் வேண்டிக்கொள்வோம். ஆனால், வெளியிலிருந்து வருபவர்களோ எல்லாமும் அவர்கள் முன் தோன்றிக் காட்சியளிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதிலுள்ள அபாயங்களை அவர்கள் உணர்வதில்லை.

காட்டுப் பறவைகள் வெளியாட்களைப் போலத்தான் காட்டில் நடக்கும். திடீரென்று குதித்தோடும், குரல் எழுப்பும். இதனால் இலைக்குவியல்களிலிருந்து சொரபுரா என்று சத்தம் வரும். எது யானை, எது பாறை, எது கானகத்து நிழல் என்று தெரியாதபடி காட்டுக்குள் யானை இருக்கும். காட்டெருது, கரடி, புனுகுப் பூனை போன்றவற்றின் வாடையை, மோப்பம் பிடித்தே அறிய முடியும்.
கண்ணுக்குத் தென்படுவதைக் காட்டிலும் காதுகளுக்கு எட்டும் விஷயங்களே காட்டில் அதிகம்.

பறவைகளும் குரங்குகளும்கூட நேர்த்தியாகத் தமது உருவங்களை மறைத்துக்கொள்ளும். ஆனால், அவற்றால் மூச்சுவிடாமல் இருக்க முடியாது. இதனால்தான் நம்முடைய கண்களுக்கு இமைகளைக் கொடுத்த கடவுள் காதுகளுக்கு மூடி எதையும் கொடுக்கவில்லை.
காட்டிலிருந்து எதை, எந்தப் பருவகாலத்தில், எந்தப் பகுதியிலிருந்து யார் கொண்டு செல்லலாம் என்பன குறித்தெல்லாம், அந்தக் காலத்தில் திட்டவட்டமான விதிகள் இருந்தன. இதனால்தான் பறவைகளுக்கும் விலங்குகளுக்குமானவை எல்லாம் அப்படியே இருந்தன. இதனால் காடும் செழித்தது.

சாம்பிராணிப் பிசின்கட்டி, மஞ்சள், தேன் போன்றவை காடர்களுக்கு கடவுள் கொடுத்த சொத்து. தேன்கூடு முழுவதையும் வெட்டிவிடக் கூடாது. முட்டாள்கள்தான் அவ்வாறு செய்வார்கள். தேனீக்கள் குழுமி வாழும் பகுதியை வெட்டாமல் விட்டுவிட்டால், வெட்டப்பட்ட பகுதியை அவை மீண்டும் அழகாகக் கட்டிவிடும். அடுத்த முறை தேன் எடுக்கச் செல்லும்போது புதிய தேன்கூடுகளை தேடிச் செல்ல வேண்டியதில்லை. – கிருஷ்ணன்

கரடிகளுக்காகவும் கொஞ்சம் தேனை நாங்கள் எப்போதும் விட்டுவைப்போம். எவ்வளவு சிறிய தேன்கூடாக இருந்தாலும் இதைச் செய்வோம். ஆதிகாலத்தில் மனிதர்களும் கரடிகளும் அண்ணன், தம்பிகளாக இருந்தார்கள். பின்னர்தான் சண்டையிட்டுப் பிரிந்தார்கள் என்கிற ரீதியில் எங்களிடம் நிறைய கதைகள் உண்டு.

நாங்கள் செத்த பிறகும் இதோ, இந்தக் கருநிற முதியர் பறவைகளாகப் பிறப்பெடுத்து எங்களது சந்ததிகளைப் பாதுகாக்க, இதே காட்டில் குடியேறி வசிப்போம். – மதியப்பன்.

பெட்டிச் செய்தி
பழங்குடிகளின் பாதைகள்

– காடர்கள் போகுமிடம் அறி்ந்து கம்பீரமாக நடந்து செல்பவர்கள். அவர்கள் நடக்கும் பாதைகள் அகலமானவை
– மலைமலசர்கள் தயங்கித் தயங்கி நடப்பவர்கள், அவர்கள் செல்லும் பாதைகள் காட்டுப் பறவைகள் கடப்பதைப் போலக் குறுகாலனவை, புல் வளர்ந்தவை.
அவர்கள் சதுப்புநிலம், ஆறுகளைக் கடந்து செல்வார்கள். அவர்களைப் பின்தொடர முடியாது.
– சமவெளி மலசர்களான யானைப் பாகர்கள் செல்லும் பாதை, தார்ச்சாலையைப் போல் அகலமானதாக இருக்கும். அவர்கள் செல்லும்போது மரங்களில் இருந்து இலைகளை உருவிக்கொண்டே போவார்கள். அந்தப் பாதையில் உயிரினங்கள், பறவைகள் அரிதாகவே இருக்கும்.

One thought on “நூல் அறிமுகம்: நாங்கள் நடந்து அறிந்த காடு – அமிதா”
  1. மிக முக்கியமான பல தரவுகளைக் கொண்ட நூல் பற்றிய அறிமுகம். அருமையான உழைப்பைப் பற்றிய சில வியர்வைத் துளிகளின் வாசம். நாடு மனிதர்களுக்கானது. காடு பறவைகளுக்கானது, விலங்குகளுக்கானது, இயற்கை வளங்களுக்கானது. மனிதர்களுக்குமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறத.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *