நாஞ்சில் நாடன் (Nanjil Nadan) எழுதி விஜயா பதிப்பகம் வெளியீட்ட ஊருண்டு காணி இல்லேன் (Oorundu Kaani Illen) புத்தகம் - Tamil Book Review

நாஞ்சில் நாடனின் “ஊருண்டு காணி இல்லேன்” – நூல் அறிமுகம்

நாஞ்சில் நாடனின் “ஊருண்டு காணி இல்லேன்” புத்தகம் பற்றி

உள்நின்று உடற்றும் பொருள்
எஸ்.ஜெயஸ்ரீ

நாஞ்சில் நாடன் (Nanjil Nadan) பற்றி புதியதாக எந்த அறிமுகமும் தேவையில்லை. பொதுவாக, நட்பு வட்டாரங்களில், எழுத்திலோ, பேச்சிலோ ஏதாவது விமர்சனமாக சில தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது, உடனே, ‘ பாருப்பா….நக்கீரர் பரம்பரையிலிருந்து வந்துட்டாங்க” என்று கிண்டல் வார்த்தைகள் நம் முன்னால் விழுந்து விடும். அதற்காகவே, சில சமயம் சொல்லாமல் தவிர்த்து விடுவது நலம் எனத் தோன்றி விடும். ஆனால், இந்த சமூகத்தின் அவலங்களை, அரசியல் பிழைகளை தன் எழுத்துகளின் மூலம் தொடர்ந்து சாடி வருபவர் நாஞ்சில் நாடன் (Nanjil Nadan).

தமிழின் பெருமைகளை இவருடைய எழுத்துகள் நமக்கு உணர்த்தியபடியே இருக்கும் இவருடைய எழுத்துகள். நதி மூலம், ரிஷி மூலம் அறிய முடியாது என்ற வார்த்தைகள் நம்மிடையே உண்டு. ஒரு சொல்லின் மூலம் என்னவென்றே தெரியவில்லை என்று நாம் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், நாஞ்சில் நாடனைக் கேட்கலாம் என தானாகவே நமக்குத் தோன்றி விடும். அந்த அளவுக்கு, ஒவ்வொரு சொல்லின் மூலத்தையும், பொருளையும் அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்து, அறிவியலில் மூலக் கூறுகள் ஆராய்ச்சி செய்வது போல ஆராய்ந்து, வெளிக் கொணர்வதில் வல்லவர் அவர்.

இந்தப் புத்தகமும் அப்படி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரைகள் நிரம்பியதாக வந்துள்ளது. இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள், சொல்லாராய்ச்சி, எளிமையான தத்துவ விசாரங்கள், சில புத்தக அறிமுகங்கள் என மூன்று விதமாக அமைந்துள்ளன. தலைப்புக் கட்டுரையான “ ஊருண்டு காணி இல்லேன்” அவருடைய பூர்விகக் கிராமம் பற்றியும், அவர்களுடைய குடும்ப மரம் (FAMILY TREE) பற்றி மிக அழகாக வர்ணிக்கிறது. சமீபத்தில் வெளிவந்து சிறப்பாக ஓடிய திரைப்படம் “ மெய்யழகன்”. அதில் மெய்யழகனாக வரும் பாத்திரம் மூன்று தலைமுறைகளை வரிசையாகச் சொல்லும். நாஞ்சில் நாடன் (Nanjil Nadan) பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால், இன்றோ, இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும், பொதுவாகத் தெரிந்த உறவு முறை என்பதே, “ ஆண்ட்டி, அங்கிள், கசின்” என்ற மூன்று வார்த்தைகளில் அடங்கி விடுகிறது.

நாஞ்சில் நாடன் (Nanjil Nadan), இந்தக் கட்டுரையில், தன் சொந்த ஊர்ப் பெருமை, அந்த ஊரின் முக்கியத்துவம், அதன் ஆதி அமைப்பு, என அனைத்தையும் வர்ணிக்கிறார்., தன்னுடைய மூதாதையர் அந்த ஊரில் எப்படி கால்கொண்டார்கள் என்பதையும் மிகவும் சுவாரசியமாகச் சொல்கிறார். தன்னுடைய ஊரான வீரநாராயணமங்கலம் பற்றிய அவருடைய சொற்களில் அவ்வளவு அழகாக வெளிப்படுகிறது. அந்த ஊரின், திருக்கோவில்கள், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பிறந்த பெருமை பெற்ற ஆளுமைகள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ஜீவா, விவசாய முறை என, ஒரு புவியியல் ஆராய்ச்சியாளர் போன்று எழுதுகிறார். விக்கிப்பீடியா அளவுக்கு, முழுமையான சித்திரத்தை வரைந்திருக்கிறார்.

மதங்கள், மத அடையாளங்கள், சின்னங்கள் எல்லாம் மட்டும் ஒரு மனிதனைத் தீர்மானிக்கப் போதுமானவை என்று மட்டுமே இன்றைய சமூகம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறது. நிறங்களை அரசியலோடு தொடர்புபடுத்திக் கொண்டு திரிவதை கோபமாக சாடுகிறார். நிறம், மணம், அழகு, இசை என்பன இயகையுடன் இயைந்தவை என்றும், ஆன்மா என்பது வெளி அடையாளங்களில் இல்லை என்றும் மிகப் பெரிய தத்துவத்தை தனக்கே உரிய எள்ளல் நடையில் சொல்கிறார். மனத் தடைகளை நீக்க மாட்டாதார்க்கு மதத் தடைகளையும் நீக்கல் அரிது என்று சொல்லி, சிவவாக்கியாரின், “ ஞானமற்ற நெஞ்சகத்தில் நல்லதேதுமில்லையே” என்ற வரிகளைச் சொல்லி முடிக்கும்போது, இந்தக் கட்டுரை, எளிமையாக ஞான வெளிச்சத்தைத் தருகிறது.

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு என்ற த்லைப்புக் கட்டுரையும், ஞானியர் எடுத்துக் கூறும் ஒரு பெரிய தத்துவத்தை எளிமையாக, சுவையானதாக எடுத்துக் கூறுவதாக இருக்கிறது. சுதந்திரம் கிடைத்து எழுபத்தைந்து ஆண்டுகள் நெருங்கிய நிலையில், இன்னும் சுடுகாட்டுக்காவும், சுடுகாட்டு வழிக்காகவும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சாதாரணப் பாடை ஆனாலும், தேர்ப்பாடை ஆனாலும், இராணுவ பீரங்கி வண்டியானாலும், BODY தானே ஐயா! என்றும், எம்மதத்தவராயினும், இறைவன் ஒருவனே இறவாது இருப்பவன் என்று நாஞ்சில், மிக அழகாகச் சொல்கிறார். இவை எல்லாம் ஏற்கனவே, இலக்கியங்களில், தத்துவ விசார நூல்களில் சொல்லப்பட்டவைதான். ஆனால், எளிமையான நடையில், திருக்குறள், மணிமேகலை, திருவாசகம் என பல மேற்கோள்களோடு எடுத்துக் கூறுவது ஒரு நிலையாமைத் தத்துவத்தை எளிமையாக சுவை கூட்டிச் சொல்கிறார்.

பரம் இல்லாதது எவ்விடம் என்று ஒரு கட்டுரை. மிக அழகாக இறை,பரம்பொருள் என்கிற தத்துவத்தை மிகவும் சுவைபட விளக்குகிறார். எல்லோருக்கும் இந்தச் சொற்கள் தெரியாதது ஒன்றுமில்லை. ஆனால், பரம்பொருள் என்பது எங்கும் நிறைந்திருப்பதுதானே எனும் வெளிச்சத்தை மீண்டும் காட்டுகிறார். என் சாமி, என் கடவுள், இப்படி வழிபட வேண்டும், அப்படி வழிபட வேண்டும் என்ற சிதைந்த சிந்தனைகள் ஓங்கி வரும் இன்றைய சூழலில், எப்படி வழிபட்டாலும், எங்கு இருந்தாலும் அது பரம்பொருள்தானே என்பதை விளக்க நாஞ்சில் எடுத்தாளும் பாடல்கள் மிகவும் அழகானவை. சிவ வாக்கியாரின்.

பரம் இலாதது எவ்விடம், பரம் இருப்பது எவ்விடம்
அறம் இலாத பாவிகட்குப் பரம் இலை அது உண்மையே
கரமிருந்தும், பொருள் இருந்தும் அருள் இலாத போதது
பரம் இலாத சூன்யமாகும் பாழ் நரகம் ஆகுமே

பாடலை வாசிக்கும்போது நாஞ்சிலின் ஆதங்கம், கோபம் வாசிப்பவரையும் பற்றுகிறது. கேரளத்தின் ஸ்ரீ நாராயண குருவின், பிரபலமான வாசகம் “ மதம் ஏதாயால் எந்தா? மனுஷ்யரு நன்னாவணும் என்பதாகும். பின்பற்றும் மதம் எதுவாக இருந்தாலும் என்ன, மனிதர் நல்லவராக இருக்க வேண்டும். இந்த வரிகள் எல்லாம் மதம் மதம் என்று பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மிகவும்அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டிய வாசகங்களாக இருக்கின்றன. அதைச் செய்திருக்கும் நாஞ்சில் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்.

ஏதோவொரு பொதுக் காரியத்துக்கு பலரிடம் கையேந்திச் செல்லும்போது, தன் பங்காக ஒரு சிறிய தொகையைத் தருவதற்கு முன்னால் ஒருவர் கேட்கும் கேள்விகள் கணக்கே கிடையாது. ஈத்துவக்கும் இன்பம் என்பதை விட, இதைக் கொடுப்பதால் தனக்கு என்ன பலன் என்றே எண்ணுகிறார்கள். அப்படிப்பட்டவர்க்கு, நாஞ்சிலின் “துய்ப்பேம் எனின் தப்புந பலவே” கட்டுரையை வாசித்துக் காட்ட வேண்டும். புறநானூறு, கம்பராமாயணம், திருக்குறள் என எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள்களை அள்ளி விளம்புகிறார். செல்வத்தின் பயன் ஈகையே என்பதை மனதில் தைக்கும்படிச் சொல்கிறார்.

இன்றைய நாளில் பேச்சு வழக்கில் சாதரணமாகப் புழங்குகிற பொருள் புரியாத வார்த்தைகள் “செம”, “காண்டு”, “மெர்சல்”, “அப்பா டக்கர்”, “டக்கர்” போன்றவை. இந்த வார்த்தைகளை எடுத்துக் கொண்டு, இவை எப்படி புழக்கத்தில் வந்திருக்கும்; இவற்றிற்கான மூல வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்றெல்லாம் இவர் ஆராய்ச்சி செய்து கட்டுரையாக்குவது வாசிப்பதற்கு வேடிக்கையாகவும், சுவையானதாகவும் உள்ளன.

மூத்த எழுத்தாளர் என்ற வகையில், நாஞ்சில் நாடன் (Nanjil Nadan), பல புத்தகங்களுக்கு, அணிந்துரை எழுதிக் கொடித்திருப்பார் இல்லையா? அப்படி அவர் எழுதிக் கொடுத்த புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஒருவருக்கு, அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் அந்தப் புத்தகங்களையும் வாசிக்கத் தோன்றுகிறது. லோகாமாதேவி அவர்களின், “ சாகே – அரிசி மது” எனும் கட்டுரைத் தொகுப்பு,, சூலூர் ஆனந்தி அவர்களின், “ தேனகராதி”, எனும் கொங்கு நாட்டு சொல்லகராதி, கவிஞர் சிந்தா அவர்களின் “ இது விழிகளின் பார்வையல்ல” என்ற கவிதைத் தொகுப்பு, ஏக்நாத் அவர்களின் “ மேப்படியான் புழங்கும் சாலை” எனும் சிறுகதைத் தொகுப்பு, ஓவியர் ஜீவாவின், “ ஒரு பீடியுண்டோ சகாவே” எனும் கட்டுரைத் தொகுப்பு ஆகியவற்றின் சுவையான பகுதிகளை இவர் எடுத்துக் கூறியிருப்பதன் வழியாக, வாசகருக்கு புதிய புத்தகங்கள் அறிமுகம் கிடைத்திருக்கிறது.

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் எல்லாமே வாசிக்க அலுப்புத் தட்டாமல் இருக்கின்றன. காரணம், கட்டுரைகள் நெடுகிலும், சங்கப் பாடல்கள்,
சிலப்பதிகாரப் பாடல்கள், கம்ப இராமயணப் பாடல்கள், திருக்குறள் ஆகியவை இடம் பெற்றிருப்பது; அதோடு, நாஞ்சில் அவரிடம் இருக்கும் பல சொல்லகராதிகளிலிருந்து பொருள் தருவது. ஒரு எளிய வாசகனுக்குத் தான் தெரிந்து வைத்திருக்காத பல செய்திகள் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளை வாசிப்பது சுவையானதாக இருக்கிறது. நாஞ்சில் நாடன் (Nanjil Nadan) அவர்களின் குசும்பும், எள்ளலும் நிறைந்த சொல்லாடல்கள் புன்னகை அரும்ப வாசிக்க வைக்கின்றன

நாஞ்சில் நாடனுக்கும், தொகுப்பை வெளியிட்டிருக்கும் விஜயா பதிப்பகத்தாருக்கும் பாராட்டுகள்.

ஊருண்டு காணி இல்லேன் நூல் அறிமுகம் எழுதியவர்: 
எஸ்.ஜெயஸ்ரீ
கடலூர்

—————————————-.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. E AKILAN

    நல்ல அறிமுகம். நூல் பரவலான கவனம் பெற இம்மாதிரியான தரமான மதிப்புரைகள் வழிவகுக்கும். மனங்கனிந்த பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *