#BookDay
நன்மைகளின் கரூவூலம் – நூல் அறிமுகம்
நூல் : நன்மைகளின் கரூவூலம்
ஆசிரியர்கள் : பிரியசகி & ஜோசப் ஜெயராஜ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
“இந்த உலகின் மிகச்சிறந்த வளங்கள் – குழந்தைகளே… அவர்களே வளமான எதிர்காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்” என்கிறார் ஜான் எஃப்.கென்னடி.
ஒரு குடும்பத்தின் எதிர்காலம் மட்டுமல்ல ஒரு நாட்டின் எதிர்காலமும் குழந்தைகளையே அடிப்படையாக கொண்டுள்ளது. அதனாலேயே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதீத அன்பையும் அக்கறையையும் கொண்டுள்ளனர். அத்தகைய அன்பும் அக்கறையும் கூட அளவாக இருத்தல் அவசியம் என்கிறது “நன்மைகளின் கருவூலம்” எனும் இந்நூல்.
குழந்தைகளை சரியாக வளர்ப்பது எப்படி, நாம் பின்பற்றும் முறை சரியானது தானா என நமக்குள் எழும் பல சந்தேகங்களுக்கு விடையாக மலர்ந்துள்ளது “நன்மைகளின் கருவூலம்”. குழந்தை வளர்ப்பின் இரகசியங்களை கட்டவிழ்க்கும் இந்நூல் பெயருக்கேற்றாற்போல் நன்மைகளின் கருவூலமாகவே திகழ்கிறது.
குழந்தை வளர்ப்புக்கான வழிகாட்டல் என்ற பெயரில் தொடர் போதனைகளாக இல்லாமல், ஒவ்வொரு கட்டுரையையும் ஒரு கவிதையோடு தொடங்கி, சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, பெற்றோர் சந்திக்கும் சவால்களை சம்பவங்களாக கதை வடிவில் தந்து அதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன? பின்பற்ற வேண்டிய வழிமுறை என்னென்ன என விளக்கியிருப்பது நூலின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. நோய் தீர்க்கும் மருந்தை இனிப்போடு வழங்குவது போல் இனிய இந்த வழிமுறையால் நூலை வாசிப்பதும் இனிமையாகவே அமைகிறது.
ஒரு குழந்தையின் வளர்ப்பில் தாயின் பங்கு எந்த அளவு உள்ளதோ அதே அளவு பங்கு தந்தைக்கும் உண்டு. தந்தையின் அரவணைப்பே இந்த உலகத்தை குழந்தைக்கு அறிமுகப்படுத்தும். எனவே தாய் தந்தை இருவருக்குமே குழந்தை வளர்ப்பில் சம அளவு பங்குண்டு என தெளிவுப்படுத்துகிறது “மாற்றம் நம்மிடமே தேவை” எனும் கட்டுரை.
பெற்றோர் குழந்தைகளிடம் பேச வேண்டும். அவர்களோடு நேரத்தை செலவிட வேண்டும். ஏனெனில் “அடிப்பது திட்டுவதைவிடப் பெற்றோரால் உதாசீனப்படுத்தப்படுவது என்பது ஒரு குழந்தைக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தாம்சொல்வதைக் கேட்கவோ தம்மை பாராட்டவோ, வீட்டில் யாருமில்லை எனத் தனிமையை உணரும் பிள்ளைகள், அந்த வெற்றிடத்தை நிரப்ப வெளியே நண்பர்களை நாடிச் செல்கின்றனர். அந்த நண்பர்காளின் இயல்பைப் பொறுத்துப் பிள்ளைகளின் வாழ்வே திசைமாறிப் போகலாம்”என வழிகாட்டல் மட்டுமின்றி பிரச்சனைகளின் மூலங்கள் குறித்தும் உணரவைக்கின்றது “குழந்தைகள் அக்கினிக் குஞ்சுகள்”எனும் கட்டுரை.
உறவுகளே வாழ்வின் ஆகச்சிறந்த பலம். உறவுகளோடு கூடிக்கழித்திருக்கும் பிள்ளைகள் பெரியவர்களிடமிருந்து வாழ்க்கைக்கான பாடங்களை எளிமையாக கற்கின்றனர். தனிக்குடும்பங்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் உறவுகளிடையே சமநிலையை உருவாக்குவது குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்குக் கட்டாயமாகிறது. இத்தகைய சமநிலையை மேம்படுத்த நாம்செய்ய வேண்டியது என்ன என்பதை அழகாக வழிகாட்டுகிறது “செயல்நிலையும் சமநிலையும் குடும்பத்தின் இரு படிநிலைகள்” என்ற கட்டுரை.
செல்போன் போன்ற மின்னனு சாதனங்களுக்கு குழந்தைகள் அடிமைகளாக்கிவிட்டனர் என்பது இன்றைய பெரும்பான்மையான பெற்றோரின் கவலை. இத்தகைய கவலையை போக்கி பிரச்சனையை தீர்க்க எளிதே வழிகாட்டுகிறது இந்நூல். “சந்தோசமென்பது டிவி, செல்போன், டேப்லெட், லாப்டாப் போன்ற கருவிகளில் இல்லை. இயற்கையை நேசிப்பதிலும் வெளியுலகில் மனிதர்களுடன் பழகுவதிலும், தேவைப்படுபவர்களுக்கு இயன்ற உதவி செய்வதிலும் கூட மகிழ்ச்சி கிடைக்கும்” என்று நாளைய தலைமுறைக்கு மகிழ்ச்சியின் உண்மை முகத்தை அடையாளம் காட்டுகிறது இந்நூல்.
பணத்தை தேடி பெற்றோர் ஒரு புறமும் மதிப்பெண்ணை தேடி குழந்தைகள் ஒரு புறமும் செல்லாமல் நிலையான செல்வமான நல்மதிப்பீடுகளை நோக்கி பெற்றோர் செல்வதே பிள்ளைகளையும் அந்த வழியில் செல்ல வழிவகுக்கும் என்று குழந்தைகளிடையே நன்மதிப்புகளை வளர்க்க வழிகாட்டுகிறது “எனக்குக் கிடைக்காவிடில்” எனும் கட்டுரை.
இப்படி இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விஷயத்தை மிகத்தெளிவாக விளக்குகிறது. பிரச்சனைகளுக்கான மூலக்காரணம் எது, அதை தீர்ப்பது எப்படி என்பன போன்ற பல கேள்விகளுக்கு சுயமதிப்பீடு செய்து கொள்ள தேர்ந்த வல்லுநரின் வழிகாட்டல் போல் இந்நூல் இனிதே வழிகாட்டுகிறது.
“இந்நூலில் உள்ள 26 கட்டுரைகளில் ஒவ்வொரு கட்டுரையுமே பெற்றோரும் இளையோரும் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் பற்றி பேசுவதோடு உளவியல் ரீதியிலான ஆலோசனைகளையும் முன் வைக்கின்றன. இவற்றைப் பின்பற்றினாலே சமூகத்தில் குற்றங்கள் பெருமளவு குறைந்துவிடும் என்பதை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாகிய என்னால் உறுதியாக கூற முடியும்” என முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி அவர்கள் நூலின் அணிந்துரையில் கூறியிருக்கும் வார்த்தைகளை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் மெய்ப்பிக்கின்றன.
குழந்தைகளை நன்முறையில் வளர்க்க வேண்டும் என விரும்பும் பெற்றோருக்கு நன்மைகளின் கருவூலமாக திகழும் இந்நூல் வரப்பிரசாதமாகவே திகழ்கிறது. குழந்தையை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பெற்றோரைப்போல் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க விரும்பும் பெற்றோர்களுக்கு இனிதே மென்மையாக வழிகாட்டுகிறது இந்நூல்.
நூலாய்வு
கவிஞர் ச.கோபிநாத், சேலம்