என் வீட்டிற்குள் பல புத்தகங்கள் குவிந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான சுவையை எனக்கு கடத்துகிறது, கடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு எழுத்தாளரின் புத்தகம் மட்டும் என் நாவுக்கு எப்போதும் கசப்பையே கடத்துகிறது. என் சமூகம் கசப்பாக இருப்பதால் தான் அது நிகழ்கிறது. இந்த சமூகத்தின் அவல முகத்தையும், சமூக நீதி இல்லாத முரணான கட்டமைப்பையும் எப்போதும் தன் படைப்புகளில் முன்வைத்து ஒரு விவாதத்தை உருவாக்கும் எழுத்தாளர் இமையத்தின் ஆறாவது சிறுகதைத் தொகுப்புதான் “நன்மாறன் கோட்டை கதை.”
உரையாடலாய் சில கதைகள்
மாடு ஜெயிக்கிறதுக்கும் மனுசன் சாவதற்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வியோடு “நன்மாறன் கோட்டை கதை” என்ற முதல் கதை தொடங்குகிணுறது. மனிதர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த சாதிய முறை மனிதனுக்கும் மனிதனுக்கும் மட்டுமல்லாமல், இன்றைய நூற்றாண்டில் விலங்குகளின் வாழ்க்கையிலும் கூட நுழைக்கப்படடுள்ளது. இக்கதையில் மாடுகளுக்காக நடத்தப்படும் ஒருவகையான ஓட்டபபந்தையப் போட்டியில் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவரின் மாடு வெற்றி பெற்றுவிடுகிறது. இந்த வெற்றி என்பது ஆதிக்க சாதியை சேர்ந்த தனக்கு இழுக்கு என கருதி, சுளுக்கியால் அந்த மாட்டையும் அதன் செந்தக்காரறையும் குத்திக்கொல்வதை கதை சொல்கிறது. மேலும் இக்ககைதயின் ஒரு பகுதியில் சட்டதிட்டங்கள் எல்லாம் “ஐ.ஏ.ஸ், ஐ.பி.எஸ், நீதிபதி” ஆகிய அதிகார வர்க்கத்திற்கு மட்டுமே வளைந்து கொடுக்கும், பாமர மக்களின் உயிரை காப்பாற்ற அது எப்பொழுதும் வளைந்து கொடுக்காது என்பதை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்.
காவல்துறை உங்கள் நண்பன், காவல்துறை அனைவருக்கும் பொதுவானவர்கள், எந்த ஒரு வகுப்பையும் சாராதது என்று நாமக்கு சொல்லப்பட்டாலும், அதற்குள்ளேயே இருக்கும் சாதிய மனப்பான்மை ஒரு வேலையை துறக்கும் அளவுக்கு தள்ளுகிறது என்பதை நிகழ்கால போக்கோடு “போலீஸ்காரன்” கதையில் பதிவு செய்துள்ளார். இமயத்தின் மிகப்பெரிய வெற்றி என்பது உரையாடலின் மூலம் கதையை நகர்த்தி, அந்த கதாபாத்திரங்களின் முரண்கள் நிறைந்த உள்மனநிலையை வாசகனுக்கு கடத்துவதேயாகும். இன்றைய மனிதர்களின் அடிப்படையான உரையாடல்களில் எவ்வளவு முரண்கள், எவ்வளவு வன்மங்கள் நிறைந்துள்ளன என்பதை இக்கதைகள் பேசுகிறது.

“நம்மஆளு” எனும் கதையில், ஒரே கட்சியாக இருப்பினும் தன் கட்சியின் வெற்றியை விட தன்னுடைய சாதியும் அதிகாரமும் தான் முக்கியம் என்று கருதி தன் சுய கட்சிக்காரனின் வெற்றியை தடுக்க முயலும் சிந்தனைகளை இந்த கதையின் மூலம் பதிவு செய்கிறார்.
“சாந்தாவும் தலைக் கடனும்” எனும் கதையில், இரு பெண் கதாபாத்திரங்களின் மூலம் என்றுமே வெளிவர முடியாமல், இந்த ஆணாதிக்க சமூக அமைப்பில் தவிக்கும் பெண்களின் இன்றைய நிலையினை மிகவும் எதார்த்தமாக விளக்குகிறார். “இமயம் எப்பொழுதும் தன் கதைகளில் பெண் கதாபாத்திரங்களை புரட்சிகரமாகவோ, பெண்ணியம் பேசுபவர்களாகவோ படைப்பதில்லை” என்று எனது ஆசிரியர் சுடர்விழி கூறுவார். இதன் நிதர்சனத்தை இக்கதைகள் புலப்படுத்துகின்றன. “பொறக்கும் போது யாரும் புருஷனோட பொறக்கல” என்று தலைக்கடன் கதையில் வரும் ஒரு வரி ஆணாதிக்க சமூகத்தின் முகத்திரையை கிழிக்கும் ஒரு சவுக்கடியாக நான் கருதுகிறேன்.
அவலங்கள் தொடரும் வரை
சமூகப் பிரச்சினைகளை பேசும் இமையத்தின் எழுத்துக்களை தலித் எழுத்தாளர் என்று மட்டும் முத்திரை குத்துவது பலரின் வாடிக்கை. இங்கு காதலையும், காமத்தையும், சிரித்து சந்தோஷப்படுத்தும் காமெடி கதைகளையும் எழுத எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவைகள் எல்லாம் எவ்வளவு காலம் உயிர்ப்போடு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இமயத்தின் கதைகளின் ஆயுட்காலத்தை நிச்சயம் சொல்லிவிடலாம். இச்சமூகத்தின் அவல நிலை தொடரும் வரை மத, இன, சாதி, பாலின பாகுபாடு ஆகிய அவல தன்மைகள் இச்சமூகத்தில் நீடிக்கும் வரை இமயத்தின் கதைகள் உயிர்ப்போடே இருக்கும்.

சமூக நீதி இல்லாத நம் சமூக அவலத்தை ஒவ்வொரு பக்கங்களிலும் முட்களாக அடுக்கி வைத்து இமயத்தின் எழுத்துக்கள் உங்களை துன்புறுத்திக் கொண்டே இறுக்கும. இந்த துன்புறுத்தல் நிச்சயம் அவசியமான, அனைவருக்கும் தேவையான ஒன்றே. இதன் மூலம்தான் இந்த சமூகத்தினுள் இருக்கும் அசிங்கங்களை வெளியேற்றும் ஆற்றலை பெறமுடியும். இமயத்திற்கு விருதுகள் மறுக்கப்படலாம், பிற்போக்கு கூட்டத்தால் அவர் நிராகரிக்கப்படலாம். யார் என்ன சொன்னாலும் யாருக்காகவும் சமரசம் செய்யாமல், தன் பேனாவின் முனையின் மூலம் உங்கள் நாட்டிற்குள், மாநிலத்திற்குள், மாவட்டத்திற்குள் ஏன் உங்கள் கிராமத்திற்குள்ளும், வீட்டிற்குள்ளும் நடக்கும் அசிங்கங்களை புள்ளி வைத்து காட்டுகிறார். அவை இங்கு நிலவும் அசிங்கங்களுக்கான விடை அல்ல! வினா?
“நன்மாறன் கோட்டை கதை” சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் அனைத்து கதைகளையும் நான் இங்கு பேசவில்லை. எனது நோக்கம். புத்தகத்தில் உள்ள கசப்புச் சுவையை உங்கள் நாவிலும் கடத்திட வேண்டும் என்பது மட்டுமே.
ஆசிரியர் : இமையம்
நூலின் பெயர் : நன்மாறன் கோட்டை கதை
பதிப்பகம் : க்ரியா
விலை : ரூபாய் 225/-
பக்கங்கள் : 216
– அ. சொக்கலிங்கம்
இந்திய மாணவர் சங்கம்.
Leave a Reply
View Comments