நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள் (Nannambikaiku Aadharangal) – அறிவியலின் சமூகவியல் பார்வையில் விடைதேடி…
AI தொழில் நுட்ப வருகையால் வேலைவாய்ப்பு பாதிக்குமா ? சமூகத்தில் எம்மாதிரி விளைவுகள் உருவாக்கும் ? மனித வாழ்விலும் உளவியலிலும் பண்பாட்டிலும் எம்மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் ? இப்படி எழும் கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறோம் . இச்சூழலில் இந்நூல் மிகுந்த கவனிப்புக்கு உரியது .
சோவியத் பதிப்பகமான ‘மீர்’ பதிப்பகத்தால் 1979 ல் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூலே “நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்” (Nannambikaiku Aadharangal). [வெளியிடப்பட்ட ஆண்டை மனதிற் கொள்ளுங்கள்] பாரதி புத்தகாலயம் மறுவெளியீடு செய்திருக்கிறது. இந்நூல் பல்வேறு ஆழமான சிந்தனைகளை “அறிவியலின் சமூகவியல்” சார்ந்து விதைக்கிறது .
இறுதியில் விஞ்ஞானம் மனித குலத்திற்கு ஆசிர்வாதமாக அமையுமா ? சாபத்தீட்டாக அமையுமா ? இக்கேள்வி இன்று முன்பைவிட வலுவாக ஓர் புறம் – எழுப்பப்படுகிறது ; மறுபுறம் அறிவியல் கண்டுபிடிப்புகளின் வேகம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது.
இக்கேள்விக்கான விடையை சோவியத் அனுபவத்தோடும், ஜப்பானிய, அமெரிக்க அனுபவத்தோடும், அறிவியல் வரலாற்றோடும் பிசைந்து மார்க்சிய வெளிச்சத்தில் விளக்கம் தருகிறது இந்நூல் .
இந்த முக்கியமான நூலை ஒருவர் வாசித்து உள்வாங்க இதன் மொழியாக்கம் முழுத்தடையாக இருக்கிறது . சில இடங்கள் மட்டுமே பட்டென புரியும்படி இருக்கிறது. நான் முழுதாக வாசித்துவிட்டேன்; முழுதாக உள்வாங்கினேன் எனச் சொல்ல முடியாது. அன்றைய மாஸ்கோ மொழிபெயர்ப்பை இன்றைக்கு சீர் செய்யாமல் வெளியிட்டிருப்பது விரும்பிய பயன் தராது.
இப்படிப்பட்ட குறைபாடுகள் இருப்பினும் இந்நூல் காத்திரமானது என்பதில் ஐயமில்லை. 12 அத்தியாயங்களில் அறிவியல் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் மனித குலம் எழுப்பிய கேள்விகள்; அதற்கான விடை தேடல் என விரிந்திருக்கிறது. அறிவியலால் மனித குலம் பெற்றுள்ள மகத்தான முன்னேற்றத்தை மிகச்சரியாக இனம் காட்டுகிறது.
“மனிதனது வாழ்க்கையைப் போன்றே மனித குலத்தின் வாழ்க்கையும் தியாகங்கள் இன்றி எண்ணிப் பார்க்க முடியாது. ஆனால் தியாகங்களின் முரண்பாடு என்னவெனில், அவற்றைவிடச் சிறந்த ஒன்றிற்காக அவை செய்யப்படுகிறன. லாபம் நஷ்டத்தை ஈடு செய்து விடுகிறது. ”இப்படி சமாதானம் அடைய முடியுமா ?
செயற்கை மூளை, இயந்திர மனிதன் வருகை எல்லோருக்கும் எல்லாவற்றையும் பெற்றுத்தரும் எனும் ஒரு சார்பு சமூகவியலாளர் பகற்கனவு கனவு காணும் போதே,”தானியங்கி உற்பத்தி முறையானது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதோடு; பிரச்சனைகளை தோற்றுவிக்கவும் செய்யும்” அல்லவா ?
‘அறிவு மரம்’ எத்தகையது ? எத்தனைக் கிளைகளைக் கொண்டது ? அது மேலும் மேலும் கிளைத்துக் கொண்டே போவதின் தேவை என்ன ? அறிவு என்பது சந்தைச் சரக்கா ? வெறும் தகவல் சேகர குவிப்பா ? சமூக பொறுப்பா ? இப்படி பல்வேறு கேள்விகளுக்கான விடை தேடலுக்கு இந்நூல் ஆதாரமாகும்.
வரலாற்று பொருள் முதல்வாத கண்ணோட்டத்தோடு சமூக மாற்றங்களும் அறிவியல் வளர்ச்சி பின்னிப் பிணைந்திருப்பதை இந்நூலில் மிகச் சரியாக பகுப்பாய்வாக சொல்லப்பட்டிருக்கிறது . உற்பத்திகருவிகளாகட்டும் , அறிவியல் தொழில் நுட்பம் ஆகட்டும் யார் கையில் ? லாபப்பிசாசுகள் கையிலா ? சமூகநலன் சார்ந்தோர் கையிலா ? இதுவே அடிப்படைக் கேள்வி. சமூகமாற்றத்தையும் அறிவியல் முன்னேற்றத்தையும் நம்பிக்கையுடன் பார்க்க இந்நூல் வழிகாட்டுகிறது.
இந்த நூலில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ள ,நன்கு நமக்கு புரியும் ஒரு செய்தியை மட்டும் சுட்ட விளைகிறேன்.
“ விஞ்ஞான, தொழில்நுணுக்க புரட்சி, பெருவெள்ளம் போன்ற போன்ற தகவல் ஞானப் பெருக்கால் புதிய பிரச்சனைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் போதிக்கப்படும் அறிவு சுமார் பத்து ஆண்டுகளில் காலங்கடந்துவிடுகிறது [ஒரு காலத்தில் அது மானிட ஆயுட் காலம் வரை போதுமானதாக இருந்தது] என்று விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். காலத்திற்கு பின்தங்கிவிடாமலிருப்பதற்காக ஒவ்வொரு நிபுணரும் விற்பன்னரும் இன்று இடைவிடாது படிப்பதோடு தனது பாடத்தை திரும்பவும் கற்றாக வேண்டி இருக்கிறது; நாளைக்கு இது எவ்வாறு இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா ?”
மேலே உள்ள பத்தியை நிறைவு செய்யும் போது , “வாழு !படி!” என இரண்டே சொல்லில் தேவையை சொல்லிவிடுகிறது
1979 ல் இந்நூல் வெளிவந்தது . சுமார் 45 ஆண்டுகள் கடந்துவிட்டன . சோவியத் யூனியன் தகர்ந்து விட்டது. இப்போது AI அச்சுறுத்துகிறது. இச்சூழலில் இந்நூலை அப்படியே மொழி பெயர்க்காமல் இதனை அடியொற்றி புதுப்பிக்கப்பட்ட நூலொன்று யாத்துத் தருவோர் தமிழ் சமூகத்துக்கு தொண்டு செய்தவர் ஆவார்.
நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள் (Nannambikaiku Aadharangal),
ஆசிரியர் : லி.வி.பாப்ரோவ்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,
E mail : [email protected] / www.thamizhbooks.com
பக்கங்கள் : 280,
விலை : ரூ.300 /
நூல் அறிமுகம் எழுதியவர்:
சு.பொ.அகத்தியலிங்கம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.