இலக்கியம் என்பது அழகியல் அரசியல் என்ற இரண்டு முக்கிய அம்சங்களை உள்ளடக்கி அதன் வேர்களில் கிளைத்துப் பரவுவது. அதிலும் புனைவுகள் இன்னும் அதிகமாக பலதரப்பட்ட வாசகர்களையும் அதன் பன்முகத் தன்மையால் தன் வசம் ஈர்க்கக்கூடியது. அதனாலையே புனைவுகள் வழியாக சொல்லக்கூடிய எல்லா விஷயங்களும் மக்களிடம் எளிதாகச் சென்றடைகின்றன. பிரேம் அவர்களுடைய “நந்தன் நடந்த நான்காம் பாதை” என்ற சிறுகதைத் தொகுப்பில் ஐந்தாவதாக அமைந்திருப்பதுதான் “தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை” என்ற சிறுகதை. எத்தனையோ கதைகள் அல்லது புனைவுகள் நம்மை வந்தடைந்தாலும் நாம் அவற்றை வாசித்தாலும் எல்லாக் கதைகளும் அல்லது புனைவுகளும் நம் மனதிற்கு நெருக்கமானதாக இருப்பதில்லை. அது போல சில கதைகள் அல்லது புனைவுகள் அவ்வளவு சீக்கிரம் அல்லது அவ்வளவு எளிதாக நம் மனதை விட்டுப் போவதில்லை. இந்த இரண்டாவது வகையில் சேர்ந்ததுதான் இந்தச் சிறுகதையும். கடந்த ஒரு மாதமாக என் மண்டைக்குள் இருந்து கொண்டு குடைந்து கொண்டிருப்பது. 

“அந்தக் கதையைக் கேட்டாலும் புரிந்து கொள்ள பித்தநாடி வேண்டும். அதைப் புரிந்து கொண்டாலும் நம்ப ஒரு மனப்பிரமை வேண்டும். நம்பினாலும் அதைப் பிறருக்குச் சொல்வதற்கு இரட்டை ஆவி கொண்ட உடல் வேண்டும்” எனக் கதையில் வரக்கூடிய வாக்கியம் போல இந்தக் கதையையும் புரிந்து கொள்வதற்கு ஒரு பித்தநாடித் தேவைப்படுகிறது. இதுவரை ஏழெட்டு முறை இந்தக் கதையை வாசித்திருப்பேன். இன்னும் அதன் உள்ளே எங்கோ ஒழிந்து கொண்டிருக்கின்ற மையச் சரடை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தக் கதையில் எது என்னை வசியப்படுத்தியது எனத் தெரியவில்லை. அந்தக் குழப்பத்துடன்தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன். கதையைத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ள முயல்கிறேன்.

தண்டியா, “இந்திய மொழிகளில் இராமாயணம்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் “ஆதிவாசி சமூகத்தைச்” சேர்ந்த ஒரு ஆய்வு மாணவி. அவளுடைய புரொஃபசர் அவளை டெல்லி இராம் லீலா மைதானத்தில் கூடியிருக்கும் ஆதிவாசிகளை இராமாயணம் குறித்து நேர்காணல் செய்ய அனுப்புகிறார். இது அவருடைய “இந்திய ஆழ்மனமும் இராமாயணமும்” என்ற பிராஜெக்ட்க்கும் தண்டியாவின் ஆய்விற்கும் உதவியாக இருக்கும் என எண்ணுகிறார். ஆனால் அந்த ஆதிவாசிகளைப் பார்த்து, அவர்களிடம் பேசிய பின் தண்டியா வேறு ஒருவளாக மாறுகிறாள். அவள் அவர்களை வெறுமனே கூடியிருக்கும் மக்களாகப் பார்க்கவில்லை. அவளுக்குத் தெரிந்தது, அவர்களின் போராட்டமும் அவர்களுடைய ஆதிவாசிப் பாடல்களில் உள்ள உண்மையும் அதன் வலியும். அந்த ஆதிவாசிகள் அனைவரும் சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒடிசா, ஆந்திரா, மகாராஷ்டிரா, வங்காளம், தண்டேவாடா போன்ற பகுதிகளிலிருந்து தங்கள் நிலம் அழிக்கப்படுவதை, தங்கள் காடுகள் சுரண்டப்படுவதை, தங்களின் நிலத்திலிருந்து தங்களை அப்புறப்படுத்துவதை எதிர்த்து தங்களின் பாடல்களை வழியெங்கும் பாடியபடி டெல்லி நோக்கி பயணித்து இராம் லீலா மைதானத்தில் குழுமுயிருக்கிறார்கள். 

நந்தன் நடந்த நான்காம் பாதை- பிரேம் | பன்மெய்

எந்தவொரு துறையிலும் ஆய்வு என்பது உண்மையைக் கண்டறிவதற்காக செய்யப்படுவது அல்லது ஏற்கனவே அந்தத் துறையில் நம்பப்பட்டு வருகின்ற ஒரு கோட்பாட்டை மறுத்து புதிதாக ஒன்றை நிறுவுவது. தண்டியா, அவள் சந்தித்த ஆதிவாசிகளிடமிருந்து அவர்களின் பாடல்களிலிருந்து சில உண்மைகளைக் கண்டறிந்து இராமாயணம் குறித்த இங்கு ஏற்கனவே இருக்கக்கூடிய சில பிம்பங்களை உடைக்க முயல்கிறாள்.   

தான் சந்தித்த ஆதிவாசிகளிடமிருந்து தான் சேகரித்த செய்திகளை, அவர்களிடம் எடுத்த நேர்காணல் வீடியோக்களை தன் புரொஃபசரிடம் காட்டுகிறாள். அது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதில் எங்கேயும் இராமாயணம் குறித்தப் பேச்சுகளோ கேள்விகளோ இல்லை. அவர்களின் போராட்டம் சம்மந்தப்பட்ட கேள்விகளே அதிகம் இருக்கின்றன. அவர் தன் புருவத்தை உயர்த்தி, ‘இதில் எங்கே உன் ஆய்வு சம்பந்தமான கேள்வி உள்ளது? இதற்கும் நாம் தேடிக் கொண்டிற்கும் இராமாயணத்திற்கும் என்ன சம்பந்தம்? என்கிறார்.

தண்டியா அசராமல், “இருக்கிறது புரொஃபசர் சாப். அவர்களின் பாடல்களில் இருக்கிறது, இராமாயணம்” என, ஆதிவாசிகள் அந்தப் போராட்டத்தில் பாடிய பாடலை எழுதிக் காட்டுகிறாள். 

“இந்த நிலம் முழுக்க அப்போ காடாக இருந்தது.

காடுங்களெல்லாம் எங்க வீடாக இருந்தது”.

எனத் தொடங்கும் நீளமான பாடல். 

E:\Book reviews\Thandakarunyam\20200906_104246.jpg

அதிலுள்ள காடு, வீடு, கானகம், ஆரண்யம் எல்லாமே இராமாயணம்தான். அவை இராம சேனைகளின் படையெடுப்பையும் சுரங்கங்கள் தோண்டும் இயந்திரங்கள் பற்றியும் பாலம் பாலமாக பிளந்து கிடக்கும் நிலங்கள் பற்றியும் சுரங்கங்கள் தோண்டி அவர்கள் கவர்ந்து சென்ற சீதாவைப் பற்றியும் கூறுகின்றன என வாதிடுகிறாள். 

சொல்லப்போனால், இந்த மாதிரியான ஒரு எதிர்க் கதையைத்தான் அவளது புரொஃபசரும் தேடிக் கொண்டிருப்பது. அதை உலகிற்கு எடுத்துச் சொல்ல அல்ல. அந்தக் கதை மேலும் பரவாமல் தடுப்பதற்கு. அவை மொத்தமாக இந்த உலகிலிருந்து மறைந்து போவதற்கு.

அவர் உடனே பதறிப்போய், இராம் லீலா மைதானத்தில் நடந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆதிவாசிகள் பங்கு கொண்ட போராட்டத்தை மீடியாவில் வராமல் பார்த்துக் கொண்ட குழுவைச் சார்ந்த தாமோதர் என்பவருக்கு அழைப்பு விடுக்கிறார். இந்த தாமோதர் என்பவர் ஆளும் வர்க்கம் நிழல் மறைவில் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறது என்பதன் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளார்.

தான் கண்டறிந்த அந்த இராமயணத்திற்கான எதிர்க் கதையை ப்ரொஃபசர் தாமோதரிடம் கொடுத்து, “நான் அதைக் கண்டறிந்து விட்டேன். இனி அதைப் பரவாமல் நீங்கள் தான் தடுக்க வேண்டும் எனக் கூறி” ஒரு மூத்த ஆதிவாசி முண்டாவின் புகைப்படத்தைத் தருகிறார்.

இந்த எதிர்க் கதை தெரிந்த கடைசி ஆதிவாசி இனம் இவர்கள்தான். பின்பு சில நாட்கள் கழித்து, “தீவிரவாத கும்பலைச் சேர்ந்த ஒரு மாணவியும் அவளுக்கு அடைக்கலம் கொடுத்த ஆதிவாசியும் அங்கு நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்” என்று ஒரு செய்தி வருகிறது.

தாமோதருக்குக் கொடுக்கப்பட்ட புதிய அசைன்மெண்டில், தண்டியாவின் பையிலிருந்த புகைப்படங்கள் சிலவற்றில் உள்ள அனைத்து இளைஞர்களையும் கண்காணித்து கைது செய்யுமாறு உத்தரவு வருகிறது. அந்த புகைப்படங்களை தாமோதர், புரொஃபசரிடம் காட்டுகிறார். அதை வாங்கிப் பார்த்த புரொஃபசரின் கை நடுங்குகிறது. அந்த புகைப்படத்தில் தண்டியாவுடன், அவளை கட்டியணைத்தவாறு அந்த புரொஃபசரின் மகனும் மகளும் விரல் மடக்கி முட்டி உயர்த்திக் காட்டுகின்றனர். (அந்த புரொஃபசரின் மகளும் மகனும் டெங்கு காய்ச்சல் வந்து படுத்தபோது தண்டியாதான் 20 நாட்களாக கூடவே இருந்து பார்த்துக் கொண்டாள். அந்தப் புகைப்படம் அப்போது எடுத்தது.)

மொத்தம் 19 பக்கக் கதைதான். ஆனால் மிகவும் உயிரோட்டமான செறிவான வலி மிகுந்த உண்மைக்கும் புனைவிற்குமிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் கதை. காடுகளை அழிப்பது அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு மட்டுமல்ல, அதை அழிக்கத் துடிக்கும் அனைவரையும் அவர்களின் தலைமுறைகளையும் பாதிக்கக்கூடியது என்ற உண்மையைக் கூறும் கதை. கதையில் தண்டியாவிற்கும் அவளது புரொஃபசருக்குமிடையே நடக்கக்கூடிய உரையாடல்கள், விவாதங்கள் எல்லாம் புனைவு என்று நம்ப முடியாத அளவிற்கு இயல்பானவை. கதையில் கூறப்பட்டிருப்பது போல உண்மையிலே ஆதிவாசிகளிடம் இந்த எதிர்க் கதை இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் சமீபத்தில் இப்போது புதிதாக காடுகள் அழிப்பதில் அரசாங்கம் காட்டும் வேகம் அதிர்ச்சியளிக்கிறது.

E:\Book reviews\Thandakarunyam\5568.jpg

நன்றி: தி கார்டியன்

2019, பிப்ரவரி 13-ல் சுமார் ஒரு மில்லியன் ஆதிவாசிகளை அவர்களின் காடுகளை விட்டு வெளியேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தீஷ்கரில், ஹஸ்டியோ அராண்ட் அடர் காடுகளில் புதிதாக 40 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க தனியார் கம்பெனிகளை ஏலம் எடுக்க வருமாறு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது (அங்கு ஏற்கனவே பல நிலக்கரி சுரங்கங்களால் மக்களும் காடுகளும் பல்லுயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்). 2010-ல் எடுத்தக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கங்கள் இருக்கக்கூடிய காடுகளில், “யாரும் உள்ளே செல்லக் கூடாத” பகுதிகளாக 30% பகுதிகள் இருந்தன. ஆனால் 2014-ல், 30% என்பது 5% மாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை, சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக கேள்வி கேட்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை என்கிறது.

E:\Book reviews\Thandakarunyam\4720.jpg

நன்றி: தி கார்டியன்

இந்தியக் காடுகளில் இருக்கக்கூடிய வளங்களெல்லாம் கனிமங்கள் அல்ல. அந்த நிலங்களின் கர்ப்பம். அவை சுமந்து கொண்டிருக்கும் கரு. பழங்குடி ஆதிவாசிகளின் விஷயத்தைப் பொறுத்தவரை, அவர்களை அவர்கள் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துவது என்பது இரண்டு விதங்களில் அறமற்ற செயலாக மாறுகிறது. ஒன்று, அந்த மக்களுக்கும் அவர்களின் நிலத்திற்குமான பிணைப்பை அறுத்தெறிவது. இரண்டாவது, சூழல் மாசுபாடு அல்லது பேரழிவு என்ற பேராபத்து. 

“நிலக்கரி சுரங்கமானது எங்கள் மரணமாக இருக்கும். அது இயற்கை எங்களுக்கு கொடுத்த எல்லா வளங்களையும் அழித்துவிடும். அதற்காக நீங்கள் கொடுக்கக்கூடிய இழப்பீடானது எந்த வகையிலும் எங்களுக்கு ஈடாகாது. பணத்தை விட, நாங்கள் வாழ்வதற்கு எங்கள் இயற்கையே எங்களுடன் இருக்க வேண்டும்.” – பால் சிங், சத்தீஸ்கர் மாநில ஆதிவாசி.

“ஒருவேளை நம் அரசாங்கம், “நாங்கள் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதை நிறுத்திவிடுகிறோம். அதற்கு பதிலாக நீங்கள் உங்கள் வாழ்க்கையை தருவீர்களா?” என்று என்னிடம் கேட்டால் நான் தயங்காமல் அடுத்த வினாடியே அதற்கு ஒப்புக் கொள்வேன்.” -அம்ரா, சத்தீஸ்கர் மாநில ஆதிவாசி. (இந்த இரண்டு ஆதிவாசிகளின் பேட்டியும் “தி கார்டியன்” இதழிலிருந்து எடுக்கப்பட்டது.)

அரசாங்கம், சாம்ராஜ்யம் எல்லாம் வரும் போகும். காடு எப்பொழுதும் இருக்கும். எத்தனை தேவ கணங்கள் வந்து அழிக்க நினைத்தக் காடு! அது என்ன அழிஞ்சா போச்சு? எத்தனை இராம சேனைகள் வந்து அடக்க நினைத்த வனாந்திரம்! அது என்ன மறஞ்சா போச்சு? எல்லாம் அழிந்து போகும். காடு மட்டும் மிச்சம் இருக்கும். – ஒரு மூத்த முண்டா, கதையிலிருந்து.

E:\Book reviews\Thandakarunyam\wire.jpeg

நன்றி: தி வயர்.

மனித உடலின் உழைப்பு சுரண்டப்படுவதற்கு, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதற்கு, உலகின் வளங்களையெல்லாம் ஒரு சில நிறுவனங்கள் தன் வயப்படுத்த முயல்வதற்கு, வளர்ச்சி என்ற பெயரை முன் வைத்து உயிரினங்களின் இயல்பு சிதைக்கப்படுவதற்கெல்லாம் காரணம் லாபம் என்ற பேராசை தான். அதன் மூலமாக அதிகாரத்தின் உதவியுடன் மீண்டும் எல்லாவற்றையும் சுரண்டுவது. காடுகளை அழிப்பதை நிறுத்த வேண்டும், அதை சுரண்டுபவர்களிடமிருந்தும் அவர்களுக்கு நெருக்கமான அரசாங்கத்திடமிருந்தும் காடுகளைக் காக்க வேண்டுமென்றால், யானிஸ் வருஃபாகிஸ் கூறுவது போல, எல்லா இயற்கை வளங்களையும் ஜனநாயகப் படுத்த வேண்டும். மக்கள் அதிகார வர்க்கங்கள் பழக்கிய எந்திர வாழ்விற்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும். 

இப்போது மீண்டும் யோசித்துப் பார்க்க முயல்கிறேன். இந்தக் கதையில் எது என்னை வசியப்படுத்தியது? தண்டியாவா? அவளின் ஆய்வு முறையா? தன் புரொஃபசரிடம் அவள் நிகழ்த்திய எதிர் வாதமா? தண்டகாருண்யமா? ஆதிவாசிகளா? ஆரண்யமா? இராமாயணத்திற்கான எதிர்க் கதையா? காடுகள் எப்போதும் அழியாது என்ற நம்பிக்கையா? தெரியவில்லை… 

-பிரபாகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *