தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 9 | ‘நோ லோகோ’ (No Logo)
மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு
அ. குமரேசன்
“என்னை வாட்டிக்கொண்டிருப்பது உண்மையில் நேரடியாக இங்கே ஒரு வெளி இல்லை என்பதல்ல, மாறாக இவற்றை உருவகப்படுத்துவதற்கான வெளி இல்லையே என்ற ஏக்கம்தான்: விடுதலை, தப்பித்தல், ஒரு வகையான திறந்த சுதந்திரம்.” – இவ்வாறு பொருளாதார ஆய்வாளரும் களச்செயல்பாட்டாளருமான கனடா நாட்டு எழுத்தாளர் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) தமது ‘நோ லோகோ’ (No Logo: Taking Aim at the Brand Bullies – வேண்டாம் இலச்சினை) என்ற நூலில் குறிப்பிடுகிறார். 1999இல் வெளியான அந்தப் புத்தகத்தைத் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் வரிசையில் சேர்க்க முடியாது முடியாது – ஏனெனில் நேரடியாக அது எந்த நாட்டின் அரசாங்கத்தாலும் தடை செய்யப்படவில்லை. ஆனால் தடை செய்ய வேண்டும் என்ற அழுத்தத்துடன் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகித் தப்பிப் பிழைத்தது. யார் அவ்வாறு தாக்கினார்கள் என்றால் உலகளாவிய கார்ப்பரேட் சக்திகளும் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரச் சிந்தனையாளர்களும்.
“வேண்டாம் இலச்சினை” என்று நூலாசிரியர் கூறுவது கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக இலச்சினைகளைத்தான். மக்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் என்பதற்கு மாறாக, குறிப்பிட்ட நிறுவனங்களின் விற்பனைச் சரக்குகள் மீது ஒரு விசுவாசத்தனமான மோகத்தை ஏற்படுத்துவதற்கு அந்த இலச்சினைகள் மூளைக்குள் பதிய வைக்கப்படுவதை அவர் அம்பலப்படுத்துகிறார். தி ஷாக் டாக்ட்ரைன் (The Shock Doctrine – அதிர்ச்சிக் கோட்பாடு), திஸ் சேஞ்ஜஸ் எவ்ரிதிங் (This Changes Everything – இது எல்லாவற்றையும் மாற்றுகிறது) என்ற புத்தகங்களையும் எழுதியுள்ள நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பருவநிலை நீதித்துறைப் பேராசிரியருமாவார்.
இந்த நூல் பற்றித் தெரியவந்தபோது செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அடிப்படையான புரிதலுக்கு உதவுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளை விற்பது என்பதைத் தாண்டி, மக்களுக்கான வாழ்க்கை முறைகளையே விற்பனை செய்கின்றன. நுகர்வோர் கலாச்சாரத்தில் ஊடுருவி, பல்வேறு தயாரிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்காமல் குறிப்பிட்ட வணிகப் பெயர்கள் (பிராண்டுகள்) மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதற்குத் தங்களை ஒப்படைத்துக்கொள்ள வைக்கின்றன. உலகமயமாக்கலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நாடுகளில் கிளை பரப்பியிருந்தாலும், அவர்களின் லாபம் பெருகிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் பெருகிடவில்லை, மாறாக வேலையிழப்புகள்தான் அன்றாடச் செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. இதன் தாக்கங்கள் பலவகையான போராட்டங்களில் வெளிப்படுகின்றன.
புத்தகம் எதைப்பேசுகிறது?

இந்தச் செய்திகளைத்தான் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein). இது நாவலோ தனித்தனிக் கட்டுரைகளின் தொகுப்போ அல்ல. வணிக இலச்சினையை மையமாக வைத்து உலகளாவிய கார்ப்பரேட் சுரண்டலின் பரிமாணங்களை விளக்குகிற பொருளாதார–அரசியல்–சமூக ஆய்வு நூல் என்று கூறலாம்.
வெளி இல்லை (No Space), தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில்லை (No Choice), வேலைகள் இல்லை (No Jobs), இலச்சினை இல்லை (No Logo) என்ற நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொருள்களின் தரம் என்பதை இலச்சினைகளோடு தொடர்புபடுத்துவது முதல், நிறுவனங்களில் பல்வேறு வேலைகள் வெளி ஒப்பந்ததாரர்களிடம் விடப்படுவது (outsourcing), மலிவான கூலிக்குத் தொழிலாளர்கள் கிடைக்கக்கூடிய நாடுகளில் தயாரிப்பு ஆலைகளை நிறுவுவது வரையில் புத்தகம் அலசுகிறது. நமது நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளோடு ஆலைகள் அமைக்க வழி செய்யப்பட்டதையும், மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த ஊதியத்தில் இங்கே தொழிலாளர்களை நியமிக்க முடியும் என்பதால் பல நிறுவனங்கள் வந்ததையும் சாட்சியங்களாகக் கொண்டுவரலாம். சாம்சங் தொழிலாளர் போராட்டம் உள்பட எத்தனை சான்றுகள்!
வணிகத்தோடும் வருமானத்தோடும் நின்றுவிடாமல் மக்களின் வாழ்க்கை முறை, நுகர்பொருள்களின் தேர்வு ஆகியவற்றில் கார்ப்பரேட் ஆதிக்கம் மேலோங்குவது பற்றியும் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) விவாதிக்கிறார். வியர்வைக் கொட்டகைகளாக இருக்கும் இயந்திரக் கூடங்கள், கார்ப்பரேட் பாணி தணிக்கைகள், கருத்துகளை வெளியிடுவதற்கான பொதுவெளி அரிக்கப்படும் நிலைமைகள் ஆகியவை தொடர்பான அவதானிப்புகளையும் பகிர்ந்திருக்கிறார். உலக சமுதாயத்தின் வேர்மட்டத்தில் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு, உழைப்பாளி வர்க்கத்தின் எழுச்சி, அதில் தொழிலாளர் சங்கங்களின் பங்களிப்பு ஆகியவற்றை விவரிக்கிறார். அந்தப் போராட்டங்களோடு சமூகநீதி, சமத்துவ இலட்சியங்களும் இணைந்திருப்பதைக் காட்டுகிறார். அந்த இலட்சியங்களை நோக்கிச் செல்கையில் இந்த இலச்சினைகள் இனி இல்லை என்ற நிலை ஏற்படும் என்ற தன் கனவைப் பகிர்ந்துகொள்கிறார்.
தகவல்களையும் கருத்துகளையும் சொல்வதோடு, இத்தகைய மாற்றங்களுக்காகச் செயல்படவும், அவ்வாறு செயல்படுவோருக்கு ஆதரவாக இருக்கவும் வாசகர்களைத் தூண்டுகிறது என்று புத்தகம் பற்றிய பதிவுகள் தெரிவிக்கின்றன.
வெளிகள் ஆக்கிரமிப்பு
சுதந்திரமான விவாதங்களுக்கான பொதுவெளிகள் விளம்பரங்களால் ஆக்கிரமிக்கப்படுவது, தங்களுடைய பிராண்டுகள் சந்தையில் முந்தியிருக்கச் செய்வதற்காக நிறுவனங்கள் கையாளும் மூர்க்கத்தனமான வழிமுறைகள், அதில் பலியிடப்படும் சுதந்திரமான கருத்து வெளிப்பாடுகள், அடிமைப்படுத்தப்படும் படைப்பாக்கத் திறன்கள், மறக்கடிக்கப்படும் வட்டாரப் பண்பாடுகள் ஆகியவற்றையும் புத்தகம் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.
உலகமயமாக்கல் சூழலில் தன்னாளுமை உரிமைகளை மீட்பதற்கு ஒவ்வொரு தனிமனிதரும் முன்வர வேண்டுகோள் விடுக்கிறார் நூலாசிரியர்.
உலக மயமாக்கலின் ஆக்கப்பூர்வமான விளைவுகளை நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) பார்க்கத் தவறுகிறார், உலகப் பரப்பு இன்று எவரும் எளிதில் சென்றுவரக்கூடியதாக மாறியிருப்பதை, இதனால் தனிமனித வாழ்க்கையிலும் சமூகச் சூழல்களிலும் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றங்களை க்ளெய்ன் நிராகரிக்கிறார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஏற்கெனவே கூறியது போல கார்ப்பரேட்டுகள் தரப்பிலிருந்தும் கார்ப்பரேட் ஆதரவுச் சிந்தனையாளர்களிடமிருந்தும் இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. சிலர், உலகமயமாக்கலால் நன்மைகளே ஏற்படவில்லையா என்று கேட்கிறார்கள்.

அந்தக் கேள்விக்குப் புத்தகத்தில் பதில் இருக்கிறதா என்று தெரியவில்லை. உலகமயமாக்கலின் பல்வேறு நன்மைகளை மறுப்பதற்கில்லைதான். உலகின் சில பகுதிகளில் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வறுமைக்கோடு அளவு உயர்ந்திருக்கிறது. வட்டாரத்திற்குள் சுருங்கியிருந்த வாழ்க்கை பரந்த எல்லைகளுக்கு விரிவடைந்திருக்கிறது. குடியிருப்பு வசதிகள், நவீன வாகனங்கள் என்ற விளைச்சல்களையும், பாலின சமத்துவச் சிந்தனைகள் முன்னுக்கு வந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
என்ன விளக்கம்?
ஆனால், உலகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வெளியேற்றப்படுவதற்கும், அதனால் அவர்களது குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படும் சிக்கல்களுக்கும் எப்படி விளக்கம் அளிப்பது? எடுத்துக்காட்டாக, தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி செக்டார்) சார்ந்த ஊழியர்கள் நல்ல ஊதியம் பெறுகிறார்கள் என்ற தோற்றம் ஒரு புறமிருக்க, எல்லா ஐடி நிறுவனங்களிலும் அந்த நிலைமை இல்லை என்பது இன்னொருபுறமிருக்க, எந்த நேரத்திலும் வீட்டுக்கு அனுப்பப்படலாம் என்ற உறுதியற்ற நிலையில் தினமும் காலையில் கண்விழித்துக்கொண்டிருக்கிறார்களே – அதை எப்படி இல்லை என்று கூறுவது? அந்த நிறுவனங்களின் தேவைகளை ஏற்று, பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் செய்துகொள்கிற சமரசங்கள், சட்டத் திருத்தங்கள் போன்றவற்றை எப்படி நியாயப்படுத்துவது? வறுமையின் அளவு மாறியிருக்கிறதா என்று ஆய்வாளர்கள் சொல்லட்டும், ஆனால் வறுமையின் கொடுமைகளும் துயரங்களும் தற்கொலை உள்ளிட்ட அவலங்களும் மாறவில்லையே? பாலின சமத்துவத்தில் முன்னேற்றம் என்ற தோற்றத்திற்குப் பின்னால், பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான சுரண்டல்கள் அதிகரித்திருக்கின்றனவே? வேலையிழக்கும் ஆண்களால் அவர்களின் வீடுகளில் பெண்கள் தாக்கப்படுவது செய்தியாகிக்கொண்டிருக்கிறதே? முற்போக்கான மாற்றங்கள்தான் இனி நிகழும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, மதவாத. சாதியவாத வன்மங்கள் தாண்டவமாடுகின்றனவே? இயற்கை வளங்களும் பசுமைப் பரப்புகளும் சூறையாடப்படுகின்றனவே? கட்டுப்பாடற்ற கரிம வெளியேற்றத்தால் சுற்றுச் சூழலுக்குப் பேராபத்து ஏற்படுத்தப்படுகிறதே?
சமுதாய வளர்ச்சியின் இறுதிக்கட்டம் முதலாளித்துவம் அல்ல, உலகமய கார்ப்பரேட் யுகம் அல்ல என்று மேலும் மேலும் தெளிவாகப் புலப்பட்டு வருகிறது. அதன் வளர்ச்சியின் பின்னால் இருப்பது மூலதனக்காரர்களின் “தொழில் திறமை” மட்டுமல்ல, அரசாங்கங்களின் பங்களிப்பு, வலதுசாரி அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு, மதம், இனம், சாதி சார்ந்த சமுதாயத் தலைவர்களின் கைகோர்ப்பு ஆகியவை இருக்கின்றன.
பொருளாதார அடியாள் போல

2004ஆம் ஆண்டில் வந்த ‘கன்ஃபெஸ்ஸன்ஸ் ஆஃப் அன் எகனாமிக் ஹிட் மேன்’ (Confessions Of An Economic Hit Man) என்ற புத்தகம் வந்தது. அமெரிக்கரான ஜான் பெர்க்கின்ஸ் என்ற வணிக ஆலோசகர் எழுதிய அந்தப் புத்தகத்தை அதற்கடுத்த ஆண்டிலேயே, இரா. முருகவேல் மொழிபெயர்ப்பில் தமிழில் கொண்டுவந்தது பாரதி புத்தகாலயம். உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசாங்கங்களைக் கைக்குள் போட்டுக்கொள்வதற்காக ஊழல் உட்பட மோசமான குற்றங்கள் எதையும் செய்யத் தயாராக இருப்பதை அந்தப் புத்தகம் கூண்டில் நிறுத்தியது. அப்படிப்பட்ட “அடியாள்” வேலைகளில் ஈடுபட்டு, பின்னர் மனசாட்சியோடு அதிலேயிருந்து வெளியேறி, வேட்டையாடப்பட்ட, ஆயினும் துணிந்து நின்றவர் ஜான் பெர்க்கின்ஸ். அவரே தன் கதையைச் சொல்வதாக எழுதப்பட்ட அந்தப் புத்தகம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கார்ப்பரேட் சுரண்டல் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு கையேடாகியிருக்கிறது.
அதே போல், உலகக் கார்ப்பரேட்டுகளின் வணிகச்சூது உலகத்தை சந்திக்குக் கொண்டுவரும் புத்தகம்தான் இது என புரிந்துகொள்ள முடிகிறது. “வேறுபட்ட கலாச்சாரங்கள் இருந்தபோதிலும், உலகம் முழுவதும் நடுத்தர வர்க்க இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை வேறு ஏதோவொரு நிகர்நிலை உலகத்தில் வாழ்வது போலத் தோன்றுகிறது. அவர்கள் காலையில் எழுகிறார்கள், தங்கள் லெவிஸ் ஆடைகளையும் நைக் காலணிகளையும் அணிகிறார்கள், தொப்பிகளையும் முதுகுப் பைகளையும் சோனி பெர்சனல் சிடி பிளேயர்களையும் எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார்கள்.” –உலகமய கார்ப்பரேட் யுகம் எப்படி வளரும் தலைமுறைகளை ஒரு மாதிரியாக வார்த்து வைத்திருக்கிறது என்று தன் மனக்குமுறலை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein).
தமிழிலும் உலகின் அனைத்து மொழிகளிலும் வரவேண்டிய புத்தகம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. அந்த முயற்சியில் ஈடுபடக்கூடியவர்களை கைகுலுக்கி வரவேற்கலாம், வாழ்த்தலாம்.
எழுதியவர் :

அ. குமரேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

