நூல் அறிமுகம் : “நாரதர் கதைகள்” – சாந்தி காசிவிஸ்வநாதன்.

நூல் அறிமுகம் : “நாரதர் கதைகள்” – சாந்தி காசிவிஸ்வநாதன்.

எழுத்தாளர் பாலகுமாரனின் அபிமானி நான். காதலும் காமமும் குடும்ப உறவுகள் பற்றியும் எழுதியதை சிலாகித்தவள் நான். அவரின் மற்றொரு பரிணாமம் இந்நூலில் வெளிப்படுகிறது.
எல்லோருக்கும் தெரிந்த, எல்லாப் புராணங்களிலும் வருகிற ஒரு கதாபாத்திரம் நாரதர்.நாராயண மந்திரம் சொல்லிய படியே வருவார் போவார். அவர் கலகம் நன்மையில் தான் முடியும் என்று அறிந்திருக்கிறோம். நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவைப் பாத்திரமாகவே அநேகமாகக் காட்சிப்படுத்தப் பட்டார். படுகிறார். அவர் எதனால் திரையிலும் மேடையிலும் கோமாளியாக சித்தரிக்கப்பட்டார் என்ற வியந்ததினாலோ அல்லது ஆதங்கத்தினாலோ எழுத்துச் சித்தர் அவரைக் கதாநாயகனாக்கி இப்புத்தகத்தைப் படைத்துள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பொதுவாக நாரதர் கையில் தம்பூராவுடன் சித்தரிக்கப் பட்டுள்ளதைக் கண்டுள்ளோம். ஆனால் அவர் கைகளில் ஏந்தியிருப்பது மஹதி என்கின்ற கந்தர்வலோகத்து வீணை என்பதில் துவங்கும் வியப்பு புத்தகம் முடியும் வரை தொடர்கிறது.
நம் அனைவருக்கும் தெரிந்த புராண நிகழ்வுகளில் நாரதரின் பங்களிப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது.
எழுத்துச் சித்தர்  காலமானார் | Noolveli - Tamil Books | Tamil  Novels | Tamil Stories
பாலகுமாரன்
நாரதரின் பிறப்பே ஒரு சாபத்தால் வந்தது. அது மட்டுமல்ல அவரின் மூவுலக சஞ்சாரம், இருப்பிடமற்ற குடும்பம் குழந்தைகளற்ற நிலையும் கூட தட்சனின் சாபத்தால் தான். அந்த சாபமே வானோர்க்கும் மானிடர்க்கும் வரமாக அமைந்தது இறைவனின் திருவுளம் தான்.
அனைவரும் அறிந்த சிவன் பார்வதி திருமணம் முருகனின் திருக்கல்யாணங்கள் திரிபுரம் எரித்தல் அகலிகை சாபம் ராமாயணம் மஹாபாரதம் மேலும் பல புராண சம்பவங்களில் நாரதரின் பங்கு பற்றி அதனதன் தத்துவ விசாரங்களுடன் அனைவருக்கு புரியும் வகையில் தன்பாணியில் கதை சொல்கிறார். துருவனின் நட்சத்திரப் பதவிக்கும் கபிலரின் முக்தி நிலைக்கும் நாரதர் எவ்வாறு காரணமாகிறார் என்று விளக்கியிருக்கிறார்.
புத்தகத்தை முடிக்கும் போது ஐயா அறிந்தது போலவே நாரதரின் சமயோசித புத்திக் கூர்மையை சிறந்த குணநலன்களை ஒழுக்க சீலரை சரணாகதிக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவரை உணரமுடிகிறது.
நாரதரின் ‘கோமாளி’ பிம்பம் சிதறிவிட்டது என்பது நிச்சயம். புத்தகத்தின் அட்டைப் படத்தில்
‘நாரதர் கதைகள்’எனும் தலைப்புக்கு சங்கு சக்கரதாரியின் கரத்தில் வீணையைக் கொடுத்தது ஏனோ?ஏனெனில் நாரதர் மஹாவிஷ்ணுவின் அம்சம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
நூல்: நாரதர் கதைகள்.
எழுதியவர்: பாலகுமாரன்.
பதிப்பகம்:   விசா பப்ளிகேஷன்.
நூல் அறிமுகம் பதிவு:  சாந்தி காசிவிஸ்வநாதன்.
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *