Naravettai நரவேட்டை

சக்தி சூர்யாவின் “நரவேட்டை”

 

உழைப்பு நம்பி வாழும் உலகில், நாலுபேரு நாலுவிதம் என்ற கருத்தில் சமரசமில்லாத காட்டு மனிதர்களின் உண்மை கதை தான் நரவேட்டை. ஆதி மனிதனின் வேட்டை பழக்கத்தில் இருந்து மாறிய வேளாண் சமூக தான், நில உடைமையை தாங்கி பிடித்து, சாதிய படிநிலையின், நாகரீக சாதி ஆணவ படுகொலையை வளர்த்து வைத்துள்ளது. அதில் பண்பாடு, பழக்கவழக்கம், இனம் வரலாறு என உருப்படாத ஒற்றை கருத்தை சமூகத்தின் மீது தினித்து சுகம் கண்டது. நரவேட்டை நாவலில் இருந்து சில துளிகள்.

நலம் தானே. நான் இங்கு நலமாகத்தான் இருக்கிறேன். இப்போது இமாச்சலுக்கு மாற்றி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் பனி, பனி, பனி தான். குளிர் ரொம்ப ஜாஸ்தி. இருந்தாலும் நான் சமாளித்துக்கொள்வேன். என்னுடன் இருப்பவர்களும் மனிதர்கள் தானே?. நல்லவேளை, இங்கே என்னைத் தெரிந்த மதராசிகள் யாரும் இல்லை. அதுவே எனக்கு ரொம்ப சந்தோசம்.

யாராவது தமிழன் இருந்தால், எந்த ஏரியா என்று கேட்டுவிட்டு அடுத்த கேள்வி நீங்க என்னாளுகன்னு கேட்டு விடுவானோ? என்று அச்சமாக இருக்கும். நான் பயிற்சியில் இருக்கும்போது அப்படிக்கேட்டவர்கள் உண்டு. மற்ற மாநிலத்தவர்க்கு சாதிப்பேர் சொன்னாலும் கோட்டாவா என்று கேட்பார்கள். இல்லை என்று சொல்லிவிட்டால் வேலை முடிந்தது. நான் இதையெல்லாம் சொல்லக் காரணம், நாம் யார் என்பதை மறக்காமல் இருந்தால்தான் நமக்குப் படிப்பு மேல் வெறி வரும். இங்கே படித்தால்தான் ஜெயிக்க முடியும்.

நான், டிகிரி வரை படித்திருந்தால் கூட பதினெட்டு வருடம் சர்வீஸ் முடிந்தாலும், ஆபீசர் கேடராக உயரப்போகலாம். இப்போது வாய்ப்பில்லை. மீண்டும் அங்கே வந்து அந்த நரகத்தில் தான் வாழவேண்டும். எனவே நீ நன்றாகப்படிக்க வேண்டும். நல்ல மார்க் வாங்கிவிடு. அடுத்த ஆண்டில் நல்ல காலேஜாகப் பார்த்து சேர்க்கலாம். நீ காலேஜ் முடித்து, உனக்கு வேலை கிடைக்கும் வரை அண்ணன் கலியாணம் முடிக்க மாட்டேன். உடம்பை நன்றாக் கவனித்துக்கொள்.

நான் தவறாமல் மணியார்டர் அனுப்பி வைக்கிறேன். அப்பா, அம்மாவைக் கேட்தாகச்சொல், தெருவில் எல்லாரிடமும் நலம் விசாரித்தேன் எனச்சொல் என்னைப்பற்றிக் கவலைப்படாதே. நான் எப்படியும் மூன்று மாதம் அல்லது ஆறு மாதம் கழித்து ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வர முயற்சிக்கிறேன். நீ நன்றாகப்படி கண்ணா, உடம்பை பார்த்துக்கொள் பட்டித்தேவன் பட்டிக்கோ, குளத்தூருக்கோ போகாதே!. நம்மவர்களில் படித்தவனைக் கண்டால் அவர்களுக்கு பிடிக்காது. அதனால்தான் சொல்கிறேன், அந்தப்பக்கம் போகாதே! என்றும் உன் நலம் நாடும் உனது அன்பு அண்ணன், செந்தில்,

கண்ணன் கட்டியிருந்த கைலியில் கண்ணீர்ச் சொட்டுகள் உதிர்ந்து கொண்டிருந்தன. அவன் குனிந்து படித்துக்கொண்டிருந்ததால், அவன் கண்கள் கசிந்ததை யாரும் பார்க்கவில்லை. கடிதத்தை மடித்து, பெட்டியின் அடியில் வைத்துவிட்டு, கைலியில் கண்ணீரைத் துடைத்துவிட்டு எழுந்தான். விடுதிக்கு வெளியே வந்து, வழக்கம்போல் வேப்பங்குச்சி ஒடித்துப் பல்லில் வைத்துக் கடித்துக்கொண்டே கொஞ்ச தூரம் நடந்தான்.

அண்ணன் சொல்வதில் தவறு இல்லை. விடுதியிலும் பல ஊர்க்கார பையன்கள் குடியானவர்களைப் பற்றி அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கண்ணனுமே, எட்டாம் வகுப்பு பட்டித்தேவன் பட்டியில் படித்து முடித்ததும் அதன் பின் அவ்வளவாக அங்கு போனதில்லை. அவனுக்கு விடுதி தங்கல் தான் தேவை என அவளது அண்ணன் வலியுறுத்தியதுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்தான். அண்ணன் படித்த காலத்தில், ரொம்பவே அவர்களிடம் அவமானப் பட்டிருக்கிறான். சாவுக்குக் குமி தோண்டப்போகிறவர்களிடம் எங்கே அந்த கலெக்ட அவரெல்லாம் குழி தோண்ட வரமட்டாராமா? என்று கேட்டிருக்கிறார்கள். ஊர்க்கஞ்சி வாங்க போகும் அம்மாவிடம் எங்க ஒன்னோட கலெக்டர் பையன? கஞ்சி எடுக்கக் கூட்டி வரலியா? என்று சில பெண்களே கேட்பது உண்டு என் கேள்விப்பட்டிருக்கிறான்.

நாவல் தொடக்கத்தில் பண்பாட்டையும், மண்ணை பற்றி தொடங்குகிறது. சமூகத்தின் அவல நிலையை தனியொருவனாய் போராட மனதில் குமறிக்கு ‘ கொண்டிருக்கும் முருகன் அமைப்பு ரீதியாக நீதிமன்ற வாயிலாகவும், போராட்ட முன்னெடுப்புகள், நாவலில் எனக்கு நடந்து போலவே இருக்கிறது. இதில் வரும் கதாபாத்திரங்கள், அப்படியே செதுக்கி வைத்திருக்கிறார் எழுத்தாளர்.

அசுரன் படத்தில் வரும் உருண்டை வீசும் வெடி குண்டு காட்சி இந்த நாவலிலும் உள்ளது. ஏதோ காகத்திற்கு சோறு வைப்பது போல எத்த பதற்றமும் இல்லாமல் வெடிகுண்டை வீசி பின்பு அறுவாள் ரத்தம் சொட்ட வரிகள் மிரள வைக்கிறது. கண்ணனும், பொன்னியின் காதல் இன்னும் பல இளவட்டங்கள் காதில் ஒழித்தாலும், அவரகளது படுகொலை கல்வியை முக்கியத்துவ படுத்தும், அது தான் நிரந்தர தீர்வு. முதல் நாவல் எதிர்பார்த்ததைவிட பிரம்மாண்டமாக உள்ளது. குறிப்பு அந்த முருகன் வேறு யாரும் இல்லை சூர்யா  தோழர் தான் என்பதை படிக்கும் போதே உணர்த்துகிறது.

அன்பு வாழ்த்துகளுடன் மீண்டும் அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறேன்..

            நூலின் தகவல் 

நூல்                    : “நரவேட்டை” [நாவல்]

ஆசிரியர்        : சக்தி சூர்யா

வெளியீடு       :  பாரதி புத்தகாலயம் 

தொடர்புக்கு : : 44 2433 2924  https://thamizhbooks.com/product/naravettai/

விலை               : ரூ. 280/

 

             எழுதியவர்

                 தீபன் 

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *