மிக அழகாக சீவப்பட்ட தலைமுடியும், நன்கு வெட்டப்பட்டு நீளமாக, வெண்மையாக இருக்கின்ற தாடியும் நரேந்திர மோடியிடம் வளர்ந்து கொண்டே இருப்பதை கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியர்கள் பார்த்து வந்திருக்கிறார்கள். பிரதமர்களுக்கான பிம்பத்திடமிருந்து எவராலும் தப்ப இயலாது என்பதால், மோடியிடம் ஏற்படுகின்ற மாற்றத்தை எவரொருவரும் தவற விடுவதற்கான வாய்ப்பே இல்லை. ரிப்பன்களை வெட்டுபவர், தன்னைத் துதிக்கும் கூட்டத்தை நோக்கி கையசைப்பவர், அன்னிய ஆட்சியாளர்களுடன் சண்டையிடுபவர்  என்று தொலைக்காட்சிகளிலும், மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குபவர், ஹிந்து புனித தள யாத்திரைகளுக்கு உற்சாகமூட்டுபவர் என்று சுவரொட்டிகளிலும், மிக சமீபத்தில் ‘இணைந்திருக்கும் இந்தியா கோவிட்-19ஐத் தோற்கடிக்கும்’ என்ற வாசகத்திற்கு அடுத்து அப்பாவியாக தடுப்பூசி சான்றிதழ்களிலும் இடம் பெற்றிருப்பவராக எங்கும் நீக்கமற அனைத்து இடங்களிலும் அவர் இருந்து வருகிறார்.

இருந்தாலும் அவர் மீது கொண்டிருந்த காதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது. ஏப்ரல் மாத நடுவில் அந்தப் பாதிப்பு மிகவும் அதிகரித்திருந்த நிலையில் அதுவரையிலும் எங்கும் நிறைந்தவராகக் காணப்பட்ட மோடி செஷயர் பூனையைப் போல மறைந்து போகத் தொடங்கினார். ஒரு மாதம் கழிந்திருக்கும் நிலையில் அவர் மீதான பிம்பம் எதுவுமில்லாமல் அவர் கலந்து கொள்கின்ற உயர்மட்டக் கூட்டங்களைப் பற்றி செய்தியறிக்கைகள் வெளியாகின்றன. அவ்வப்போது வருகின்ற அவரது உரைகளும் அடங்கிய குரலில் மேலோட்டமானவையாகவே இருக்கின்றன. பொதுமுடக்க காலத்தில் பழைய விளம்பரங்களின் மீது வேறொன்றை ஒட்டுவதற்கு யாரும் இல்லாததால் அவர் இன்னும் அந்த விளம்பரப் பலகைகளில் இருந்து கொண்டிருக்கிறார். அரசாங்கம் போதுமான அளவிலே தடுப்பூசிகளைப் பெறத் தவறி விட்டதன் விளைவாக மக்க மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதால் இப்போது அவரது படம் இடம் பெற்ற தடுப்பூசி சான்றிதழ்களும் மிகக் குறைவாக அளவிலேயே இருக்கின்றன.

பேரழிவுகரமான இரண்டாவது அலை தாக்கியிருக்கும் நிலையில் தங்களுடைய பிரதமர் நாட்டை தொற்று நோய்க்கு எதிராக அணிதிரட்டுவார் என்று இந்தியர்கள் எதிர்பார்த்திருக்கலாம். அவர் வெறுமனே பிரபலமானவராக, ஆற்றல் மிக்க தலைவராக மட்டுமே இருக்காமல் பிரகாசமான ஆடையணிந்து, கவர்ச்சியான வார்த்தைகளுடன் திறமையான பேச்சாளராக, மிகவும் பிரபலமான வேடிக்கை மனிதராக எப்போதும் தயாராக இருப்பவராகவே இருந்திருக்கிறார்.  மிகவும் சக்தி வாய்ந்த கட்சி இயந்திரம் உதவி செய்திட, கேமராக்களைத் தன்வசப்படுத்திக் கொள்கின்ற அவரது தனிப்பட்ட திறமை புகழ்ந்து தள்ளுகின்ற ஊடகங்கள் மூலம் மேலும் வலுப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. வைரஸுக்கு எதிரான போராட்டம் பிரச்சனைகளின்றி சென்று கொண்டிருந்த போது மோடி மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தார். ஆனால் இப்போது ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் பலருக்கு தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற்றுக் கொள்ளவோ அல்லது தங்கள் அன்புக்குரியவர்களின் கண்ணியமான இறுதி சடங்கைக் கடைப்பிடிக்கவோ முடியவில்லை. தங்களிடம் சொல்வதற்கு அவரிடம் இப்போது எதுவுமில்லை என்பதை இந்தியர்கள் கண்டறிந்து கொண்டனர். தாடியுடன் இப்போது எப்போதாவது தோன்றுகின்ற அவர் ஆறுதல், நம்பிக்கைக்கான சமிக்ஞைகளைத் தருவதற்குப் பதிலாக தொடர்ந்து சலிப்பூட்டும் உரைகளை நிகழ்த்தி தன்னுடைய அரசின் சாதனைகள் குறித்து தற்பெருமை பேசிக் கொள்கிறார். ‘போர்வீரன் எங்களுக்குத் தேவைப்படுகின்ற போது, அதற்குப் பதிலாக இமயமலை முனிவர் ஒருவரை நாங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கின்றோம்’ என்று இந்தியத் தொலைக்காட்சி நேர்காணல்களில் மிகவும் அனுபவமுள்ளவரான கரண் தாப்பர் தனக்குள்ளாக நினைத்திருக்கக் கூடும்.

ஒரு நெருக்கடியின் மத்தியில் மோடி காணாமல் போவது இது முதல் முறை அல்ல. கொந்தளிப்பான மற்ற காலங்களிலும் முன்னேறிச் செல்வதற்குப் பதிலாக மோடி இதுபோன்று பின்வாங்கும் செயல்பாட்டையே தனக்கென்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். எப்போதுமே அவர் பிரச்சனைகளை கீழ்நிலை அதிகாரிகள் சமாளித்துக் கொள்ளட்டும், செய்து முடிக்க முடியவில்லையென்றால் தாக்குதலையும் அவர்களே எதிர்கொள்ளட்டும் என்று ஒதுங்கிக் கொள்வார். குஜராத் மாநில முதல்வரான சிறிது காலத்திலேயே முஸ்லீம்களுக்கு எதிராக 2002ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அந்த மாநிலத்தையே உலுக்கிக் கொண்டிருந்த நிலையில், அப்போது நடைபெற்ற உயர்மட்ட கூட்டங்களில் கலந்து கொள்ளாது மோடி காணாமல் போயிருந்தார். பிரபல அரசியல்வாதியான எஹ்சன் ஜாஃப்ரி அறுபத்தெட்டு முஸ்லீம்கள் தஞ்சமடைந்திருந்த அவருடைய வீட்டில் அவரை உயிரோடு எரிப்பதற்கு முன்பாக வன்முறைக் கும்பல் ஐந்து மணி நேரமாக அவருடைய வீட்டை முற்றுகையிட்டிருந்தது. முதல்வரிடம் உதவி கேட்டு  ஜாஃப்ரி பலமுறை விடுத்த தொலைபேசி அழைப்பை மோடி ஏற்றுக் கொள்ளவே இல்லை. ஜாஃப்ரியின் முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போயின.மாடுகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் கொலைகாரக் கும்பல்கள் ஆத்திரமடைந்திருந்த வேளையில் பிரதமராக இருந்த மோடி பல மாதங்கள் காணாமல் போயிருந்தார். 2019ஆம் ஆண்டில் புதிய குடியுரிமைச் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தபோது, சில மாதங்களுக்குப் பிறகு தில்லியில் வகுப்புவாதக் கலவரங்கள் வெடித்தபோது, கடந்த இலையுதிர்க் காலத்தில் புதிய விவசாயச் சட்டங்கள் தொடர்பாக தில்லியில் மீண்டும் பெரிய போராட்டங்கள் வெடித்த போது பிரதமர் மோடியை எங்கும் காண முடியவில்லை.

உண்மையாகப் பார்த்தால் மோசமான செய்திகளைத் தவிர்த்து விடுகின்ற இந்தப் போக்கு மோடிக்கு மட்டுமானதாக இல்லாமல் அவருடைய அரசாங்கத்திற்கான அடையாளமாகவே மாறியிருக்கிறது. இதுவரையிலும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றைக்கூட பிரதமர் மோடி தானாக நடத்தியதில்லை. பொதுவாக தன்னிடம் அடிபணிகின்ற பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அவர் நேர்காணல்களை ஒதுக்கித் தருகிறார். காலப்போக்கில் மோடி தலைமையிலான அரசில் உள்ள சிறிய அமைச்சர்களும்கூட யாராலும் அணுக முடியாதவர்களாக, கேள்வி கேட்க முடியாதவர்களாக மாறி விட்டனர். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்தின் முகமாக வெறுமனே எண்களை உருவாக்கித் தருகின்ற, வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அனுப்பப்படுகின்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவே இருந்து வருகிறது. அந்த அதிகாரிகள் சோகத்தின் அலை அதிகரித்துள்ள இந்த நிலையில் நெருக்கடியைத் திறமையாகக் கையாள்வதற்குப் பதிலாக விமர்சகர்களைத் தாக்குவது, அரசாங்கத்தின் முயற்சிகளைக் குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கும் தனியார் முன்னெடுப்புகளை இழிவுபடுத்துவது போன்ற செயல்பாடுகளுக்கே தங்களுடைய ஆற்றலைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒரு காட்சி முடியும் போது மேடையில் அடுத்த காட்சியில் வேறு நடிகர்கள் தோன்றுவார்கள். மோடியால் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வரைகலைப் பணியில் இருப்பவர்கள் இப்போது பல வண்ண ஜாக்கெட்டுகள் இருக்கின்ற தனியறைக்குள் பிரதமர் மோடி தன்னை மறைத்துக் கொண்டிருப்பதாகவோ அல்லது எரிந்து கொண்டிருக்கின்ற சிதைகள் சூழ்ந்திருக்க வயலின் வாசித்துக் கொண்டிருப்பவராகவோ மோடியை கற்பனை செய்து அவரைத் தாக்குகின்ற நிலைக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர்.

மிக மோசமான தொற்றுநோய்க்கு மத்தியில் 260 கோடி டாலர் மதிப்பில்  மத்திய தில்லியில் உள்ள அரசாங்க வளாகத்தை தன்னுடைய தற்பெருமைக்காக மறுசீரமைப்பதைத் தொடரப் போவதாக மோடி அரசாங்கம் சப்தமின்றி அடம்பிடித்து வருவதை பலரும் தாக்கியுள்ளனர். இந்திய புதிய பாராளுமன்றக் கட்டிடம்  சவப்பெட்டி போன்ற வடிவமைப்புடன் இருப்பதாக மற்றவர்கள் கேலி செய்வதைச் சுட்டிக்காட்டுகின்ற கார்ட்டூன் கலைஞர் தேசிய அளவிலான நெருக்கடியிலிருந்து மறைந்து கொள்ளக்கூடிய ரகசிய பதுங்கு குழி அங்கே இருப்பதாக குறிப்பிட்டுக் காட்டுகிறார். தடுப்பூசி போடுவதன் குறிக்கோளை விளக்குவதாக இருக்கின்ற மற்றொரு கார்ட்டூனில் பாம்புகள் மற்றும் ஏணிகளைக் கொண்ட பலகையில் நீண்ட வெள்ளைத் தாடி பாம்புகளாக இருக்கின்றது. அந்த பலகையில் தாடி இருக்கின்ற மோசமான இடத்தில் நிற்பவர் – அரசாங்கத்திடம் தடுப்பூசி இல்லாத நிலையில்  – அந்த நீண்ட தாடி வழியாக மேலிருந்து நழுவி கீழே வந்து விடுவார்.

மோடிக்கு மிகவும் நெருக்கமானவரும், அனைவரும் கண்டு அஞ்சுகின்றவருமான உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் காணாமல் போய் விட்டதாக இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மாணவர் சங்கம் மே 12 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  தொற்றுநோய் மிக மோசமான கட்டத்தில் இந்தியாவில் இருக்கும் நிலையில் பல வாரங்களாக அவர்  காணப்படவில்லை.அதேநேரத்தில் இந்தியாவில் குழந்தைகளுக்குப் போதுமான அளவு பாதுகாப்பை வழங்குவதற்கு முன்னதாகவே கோடிக்கணக்கான டோஸ் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த அரசின் முடிவைக் கேள்விக்குட்படுத்தி தில்லியைச் சுற்றிலும் சுவரொட்டிகள் தோன்றத் தொடங்கின. அந்த சுவரொட்டிகளை ஒட்டுபவர்களை அமித் ஷா தலைமையிலான காவல்துறையினர் கைது செய்யத் தொடங்கினர். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி உட்பட ஆயிரக்கணக்கானோர் அந்த சுவரொட்டியை ‘என்னையும் கைது செய்யுங்கள்’ என்ற வாசகத்துடன் இணைத்து சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் அவரால் எதிர்பார்க்கப்பட்டிராத ஓரிடத்திலிருந்தே மோடியின் பிம்பத்தின் மீதான மிகப்பெரிய அடி விழுந்தது. இல்லத்தரசியாக இருந்து வருகின்ற கவிஞரும், பிரதமரின் தாய்மொழியான குஜராத்தியில் எழுதி வருபவருமான பாருல் காக்கரின் கவிதைகள் பிரதமரின் ஹிந்து தேசியவாத வட்டாரங்களில் மிகவும் போற்றப்படுபவையாக இருக்கின்றன. அரசர் ஒருவரை நோக்கிப் பேசுகின்ற சிறிய கவிதை ஒன்றை அண்மையில் அவர் எழுதியிருந்தார்.

உங்களுடைய ராம ராஜ்ஜியம் அல்லது உங்களால் வாக்குறுதியளிக்கப்பட்ட திவ்விய தேசம் சடலங்களைச் சுமந்து செல்கின்ற வாகனமாக புனிதமான கங்கையை மாற்றி அமைத்திருக்கிறது என்று பாருல் காக்கர் அந்தக் கவிதையை எழுதியிருந்தார். அந்த அரசர் நிர்வாணமாக இருப்பதை மக்கள் இப்போது பார்த்துக் கொண்டிருப்பதாக அந்தக் கவிதை இருந்தது.

இருபத்தைந்தாயிரத்திற்கும் மேல் மிகமோசமான எதிர்வினைகள் வந்த பிறகு, தனது முகநூல் பக்கத்தை பாருல் காக்கர் மூடி வைக்க வேண்டியதாயிற்று.

ஆனால் கோபமும் கசப்புமாய் வெளிப்பட்ட அவருடைய கவிதை அதற்குள் – வேறு பொருத்தமான  வார்த்தை இல்லை – வைரலாகிப் போயிருந்தது.

எக்கனாமிஸ்ட்

2021 மே 17

https://amp.economist.com/asia/2021/05/17/as-a-second-wave-devastates-india-narendra-modi-vanishesLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *