பள்ளத்தாக்குகளும் செங்குத்து மலைகளும், காடுகளும், சமவெளிகளும் தொடர்ந்து அதிர்ந்து கொண்டே.. எங்கோ பீரங்கிக்குண்டுகள் வெடித்தெழும் ஓசையும்..துப்பாக்கி குண்டுகள் துளைத்தெழும் ஒலிகளும்.. மக்களின் ஓலங்களும் அலறல்களும்  விட்டுவிட்டும் தொடர்ச்சியாக எதிரொளித்துக் கொண்டும்..
வாழ்ந்த காலங்கள் அனைத்திலும் தனக்கு எவர் உதவியும் தேவையில்லை, தான் மற்றவர்களுக்காகவே  என்ற இலட்சியத்தோடு பயணித்த அந்த மனிதன் தன் மன நிலையின்
உறுதிக் கேற்ற வகையில்  தன் உடல் முழு ஒத்துழைப்பு எல்லா நிலைகளிலும் நல்கும் என்பதைக்கொண்டே,  தன்னை ஆள் தூக்கியில் ஏற்ற நினைத்த வீரர்களின் தோள்களைத் தள்ளிவிட்டு, தன் சக்தி முழுதும் திரட்டி பழுப்பு நிறக் குதிரையின் மீதமர்ந்தார்.. கோவேறுக் கழுதைகள் சூழ வீரர்களோடு அந்தக் குழு கிளம்பிய சிறிது நேரத்தில், குதிரையின் முதுகில் தலை தொங்கிய அந்த மனிதனின் கரங்களில் இருந்து சேனமும் நழுவுகிறது.. கூடவே அவரின் தொங்கும் கை தரையில் தேய்ந்து கொண்டே..
வானில் தொங்கிடும் நட்சத்திரங்கள் அனைத்தையும் ஆள் தூக்கியில் முனுகிக் கொண்டே வரும் மாமனிதனுக்கு பறித்திடும் வேகத்தில் மலையின் உச்சி நோக்கி வேகவேகமாக சென்று கொண்டிருக்கிறது அந்த வீரர்களின் குழு. தூக்கிக் கொண்டுவந்த அந்த மனிதரால் குழுவாக வந்து கொண்டிருந்தவர்களும், தற்போது கீழே வளைந்து வளைந்து நெளிந்து போய் கொண்டிருக்கும் பாதை சந்தித்திடும் மஞ்சள் கல் கிராமத்திற்கு, செம்படையின் தளம் அமைந்திருக்கும் அத்தனை சீன கிராமங்களிலும் இவரை அறிந்திராத, இவரால் உயிர் வாழும் மனிதர்கள் அற்றதோர் இடங்களிருக்காது. எட்டவது எண் கொண்ட செம்படை பயணித்த கிராங்கள் அனைத்திலும் இந்த மனிதனின் மூச்சுக்காற்று அலைந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கும் ஏதேனுமொரு அடையாளமாக.
Norman Bethune | MY HERO
36 வயதில் தன் நுரையீரல் முழுவதும் சளி ஆழப் புதைந்த கிடக்க இருமல் ஒவ்வொன்றிலும் அடிவயிற்றிலிருந்தும் தொண்டக் குழியிலிருந்தும் ரத்தத்தை வெளியேற்றிக் கொண்டு மூச்சுவிட சித்திரவதைக்கு ஆளானவன்.. மருத்துவ அறிக்கையால் நாள் குறிக்கப்பட்டு சாவோடு ஒவ்வொரு விநாடியும் பேசிக் கொண்டும்..
“இனிசாவுதான்
உன் தேவதைகளிலேயே கருணை மிகுந்தவள்
உன் மிருதுவான கரங்களில், கடைசியாக, நான் வீழட்டும்
பளபளப்பான நட்சத்திரங்கள் போயாகிவிட்டனமையான
எரிக்கும் சூரியன் மறைந்து விட்டது
எனது சிறிய அங்கம் முடிந்தது
இந்த அதிர்ச்சியூட்டும் நாடகம் ஓய்ந்தது”
மரண தேவதையிடம் தன்னை ஒப்புவித்த
அந்த மகா கலைஞன்.. மருத்துவன்..
ஓவியன்.. நடிகன்..
“கலைஞன் ஒவ்வொன்றிற்குள்ளும் உள்ளே சென்று கண்டு, சந்தோஷமாகவும், கடுமையாகவும், களிப்பு நிறைந்தவனாகவும் இருப்பான். வாழ்கையின் மீதான அவனது பசி ஏராளமானதாய் இருக்கும். அவன் ஆர்வத்துடன் மனிதனின் வாழ்க்கைக்குள் நுழைவான், ஆமாம் அனைத்து மனிதரின் வாழ்வுக்குள்ளும் போய், அவன் தனக்குள்ளயே அனைத்து மனிதராகவும் வாழ்ந்து பார்த்து விடுவான்.”
அவனே கலைஞன் என்றார் அந்த மக்கள் கலைஞன்.
தற்போது இரண்டாவது முறையாக 1939ம் வருடத்தின் நவம்பர் மாதத்தில் அந்த மஞ்சள் கிராமத்தின் மக்கள் திரளுக்கு மத்தியில் அந்த மனிதர் கிடத்தப் பட்டிருக்கிறார்.. மொத்த சீனமும் அவரின் மூச்சுக் காற்றுக்காய் ஏங்கிக் கிடக்கிறது.. அவருக்கு ஏதேனுமென்றால் சீனாவில் மட்டுமல்ல இந்த மொத்த உலகத்திலும் அவருக்காக கண்ணீர் சிந்த போதுமானதாக இல்லை.. அந்த மனிதர்தான் “பாய் சூன்” என்று சீன மக்களால் அன்பொழுக அழைக்கப் பட்ட டாக்டர் நார்மென் பெத்யூன்.
Dr. Norman Bethune - A leading figure in transfusion medicine ...
சவுத் விஷன் வெளியீடான டாக்டர் நார்மென் பெத்யூன் கதை நூலினை வாசித்து ஒரு வாரமாக அந்த பிரின்சின் பெத்யூன் காதல் சுகமும்.. ஸ்பெயினில் உழைக்கும் எளியவர்கள் மருத்துவத்திற்கும்.. சுகாதாரத்திற்கும் ஏங்கிடும் அவலமும்.. இரண்டாம் உலகப் போரின் போது சீனாவில் நடைபெற்ற ஜப்பானின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடைபெற்ற ரத்தம் தோய்ந்த சீன மக்களின் தியாகமும்.. அங்கே பெத்யூன் என்கிற போராளியின் உயிர்ப்பும் அர்ப்பணிப்பும் மனசை ஏதோ செய்து கொண்டே இருந்தது. ஒரு வாரமாக சுகமும்..சோகமும்,வலியும், மன உறுதியுமாக அசைப்போட்டபடியே பெத்யூன் எனக்குள்.
உலகின் 19 மொழிகளில் வந்திருக்கும் இந்த நூல் மூன்று கண்டங்களிம் பல பதிப்புகளாக வெளி வந்திருக்கிறது.. இப்போதும் தொடர்கிறது. ஸ்பெயினில் யுத்தம் நடைபெற்றபோது பங்கேற்று அதனின் அனுபவத்தில் இருந்து சீன ஜப்பான் யுத்தத்தில் ஒரு நடமாடும் அறுவை சிகிச்சை குழுவை அமைத்து ராணுவ வீரர்கள் பலரின் உயிரை மீட்டுக் கொண்டு வந்து மீண்டும் காயம் பட்ட வீரர்களை  போராட்டக் களத்திற்கு அனுப்பி வைத்ததில் பெத்யூனின் பங்களிப்பு அளப்பரிய தியாகம் நிறைந்தது.. தொடர்ந்து 24 மணி நேரமும் கண்மூடாது 40க்கும் மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த நாட்கள் நிறையவே.
சுகாதாரமும், மருத்துவமும் ஏழைகளுக்கும்.. நாட்டு மக்கள் அனைவருக்கும் எத்தனை முக்கியமானது.. அதை ஆள்பவர்கள் கொடுத்திட தவறும் பட்சத்தில் அந்த நாடு எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை காத்திரமாக எடுத்துரைப்பது; இன்று இந்தியா உள்ளிட்ட உலக முதலாளித்துவ நாடுகள் கொரோனாவுக்கு எதிரான வெத்து வேட்டு திட்டங்களை; ஆராவர ஆர்ப்பாட்டங்களை கைத்தட்டியும், விளக்கேற்றியும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அயோக்கியத்தனத்தை கண்கூடாகப் பார்க்கிறோம்.
“பொது ஆரோக்கியத்தை பாதுகாப்பதென்பது,தனது குடிமக்களுக்கு செய்யும் முதல் கடமை என்றும் பணி என்றும் அரசு முதலில் நினைக்க வேண்டும்.” என்பதை பல இடங்களில் பல ஆதாரங்களோடு நிறுவிக் காட்டி இருப்பார் பெத்யூன்.
In praise of Norman Bethune | National Post
ஒரு முறை வாசியுங்கள் அந்தப் போராளியின் அனுபவத்தையும்.. வாழ்க்கையையும்.
எவர் எழுதினாலும் பிரின்சிஸ் பெத்யூனின் காதலை மட்டும் தவிர்த்தே வந்திருக்கிறார்கள்.. காரணம் எதுவாகட்டும். தனக்கும் பிரின்சிஸ்க்குமான காதல் எத்தனை முரண்பாடுகளை சந்தித்தாலும்.. எந்த நாளிலும் அறுதெறிய முடியாத உணர்வுகளால் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவரின் அத்தனை மன உளச்சல் போராட்டக் காலங்கள் அனைத்திலும் ஒரு மின்னலைப்போல மின்னிக் கொண்டுருக்கும் தேவதையான பிரின்சஸின் அரவணைப்பும் முத்தங்களும்.
ஆண்கள் பெண்களின் வாழ்முறையை எப்படிக் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான் என்பதை  ” பெண்களின் மனதைக் குறித்து  விளக்க முயலும் முட்டாள்கள் குறித்து  யோசித்து நான் ஏற்கனவே களைப்படைந்து விட்டேன்.  பெண்கள் மனதும் மனித மனம்தான். மனிதத் தன்மையற்ற தருணங்களில், அது காயப்படுகிறது பெண்கள் மனதைப் பற்றி உருவாக்கியிருக்கிற அத்தனை புனைவுகளும், அவர்களை கூண்டுக்குள் அடைத்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, ஆண்களால்தான் உயிரோடு காப்பாற்றப் பட்டு வருகிறது.” என்பதை தன்னில் இருந்து பேசி இருப்பார் பெத்யூன்.
எல்லோருக்குள்ளும் ஒரு தேவதை; அவரின் மரணம் மட்டும் வாழ்ந்து கொண்டே இருப்பாள்.. மின்னலைப் போல் பளிச் பளிச் என உயிரோடே..
Vintage Chinese Propaganda MAO'S MEETING WITH COMRADE DR. NORMAN ...
தேவதைகளை கொண்டாடுவோம். பிரின்சிஸ்களை கொண்டாடும் பெத்யூன்கள் நிறைய மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அருகருகே நமது நண்பர்களாக.. தோழர்களாக.
நம் வாழ்நாளில் ஒரு முறையாவது பெத்யூனாக வாழ்ந்திடத் தேவையில்லை.. அவனின் வாழ்க்கையையாவது வாசித்து நம்மை பெருமைப் படுத்திக் கொள்வோம்.
“ஒரு மனிதனின் செயற்திறன் மகத்தானதாய் இருக்கலாம் அல்லது சின்னதாக இருக்கலாம். ஆனால் அவனுக்கு இந்தத் தன்னலமற்ற தன்மை மட்டும் இருந்தால், அவன் ஏற்கனவே சிறந்த கண்ணியமான மன நிலையையும், சுத்தத்தையும், மிகச் சிறந்த அறவியலையும், அனைத்துவித மோசமான சுய நலத்திற்கும் அப்பாற்பட்டவனாகவும் ஆகிவிடுகிறான்; அப்படிப் பட்டவர்கள்தான் மக்களிடம் பெரும் மதிப்பு மிக்கவர்களாய்த் திகழ்கிறார்கள்.” இது  பெத்யூனுக்கு மா சே துங் எழுதிய கடிதம். போர்க்காலமானதால் அவரின் மரணம் வரை அவரின் கைகளுக்கு போய்ச்சேரவேயில்லை.. அந்த மாமனிதான் போய்க் கொண்டே இருந்தான். போராளிகளோடு போராளியாகவே அறுவைசிகிச்சை மருத்துவத் துறையில்.
வாசியுங்கள்
டாக்டர் நார்மென் பெத்யூன் வாழ்கையை.
காதலை.. அர்பணிப்பை.
டாக்டர் நார்மன் பெத்யூன் கதை
சிட்னி கார்டன், டெட் ஆலன்
செளத் விஷன் வெளியீடு
தமிழில் சொ.பிரபாகரன்.
கருப்பு அன்பரசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *