“தோழர் சு.பாலவிநாயகம்: பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ ஆசான்” – நூல் அறிமுகம்
திருச்சியில் ரயில்வேத் துறையில் பணியாற்றி வந்த தோழர் பாலவிநாயகம் வேலையை உதறியெறிந்துவிட்டு கட்சியில் இணைந்தவர் என்றறிய எங்கள் குழுத் தோழர்களுக்கு வியப்பு கலந்த மரியாதை ஏற்பட்டிருந்தது.
சில நேரங்களில் அதை அவரே நினைவுபடுத்துவதுமுண்டு.
“ Had I continued in Railways , I would have got such and such salary and emoluments.. and whatnot..”
அக்காலங்களில் கட்சிக் கிளைகள் குறிப்பாக அலுவலகம் செல்லும் ஊழியர்கள் இருக்கும் கட்சிக் கிளைகள் இரவு நேரத்தில் கூடும். அதற்கு ரிப்போர்ட் செய்ய வரும் சு பா வி போன்ற தலைவர்கள் கூட்டம் முடிந்து ஊர்திரும்ப தனது இல்லம் திரும்ப அதிகாலையாகி விடும் .
அதனைக் குறிப்பிடும் தோழர்
சு பா வி இப்படிக் கூறுவார் : “ We are fighting against nature “
கோவில்பட்டி மத்தியதரவர்க்கத் தோழர்கள் மீது அவருக்கு அலாதியான பிரியமும் நம்பிக்கையையும் வைத்திருந்தார் .
1977 செப்டம்பரில் மகராஜநகர் மின்வாரிய ஊழியர் கட்டிடத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் தோழர் வி பி சிந்தன் சிறப்புரையாற்ற வந்திருந்தார் .
அவரிடம் பால்வண்ணம் ,
ஆர் எஸ் மணி , ஜவகர் , பாலு உள்ளிட்ட தோழர்களை அறிமுகம் செய்த சு பா வி “ இந்த இளம் தோழர்களைப் போல தமிழகத்தில் எங்குமே நீங்க பார்க்க முடியாது.
அற்புதமாக பம்பரமாக பணியாற்றும் தோழர்கள் ..” என்றார் . எங்களுக்கு கூச்சமாக இருந்தது. சிநேக புன்னகை சிந்த தோழர் சிந்தன் தட்டிக்கொடுத்தார் ஒவ்வொருவரையும்.
வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு அது.
சிறைக்குள் மார்க்சின் மூலதனத்தை மொழி பெயர்த்தவர் சு பா வி . அதற்கு உறுதுணையாக நின்றவர் தோழர் ஐ மா பா அவர்கள் .
“ஜெயில்ல கோடு போட்ட நோட்டைக் கொடுத்து கேபிடலை மொழி பெயர்க்கணும்னு என் மொளியைப் பெயர்த்துட்டார் நம்ம பாலவிநாயகம் தோழர் “ என்று கை விரல்களைக் காண்பித்தார் எங்களிடம் ஒருமுறை.
ஐ மா பா அவர்களின் மணிமணியான எழுத்துக்களில் பத்துக்கு மேற்பட்ட நோட்டுகளைத் தந்து எங்களை சரிபார்க்கும் பணியைத் தந்தார் சு பா வி .
நாங்களும் விடுமுறை நாட்களிலும் ஞாயிறன்றும் அப்பணியில் ஈடுபட்டோம் .
சு பா வி யும் உடல் நலம் குன்றிப் படுத்ததாலும் தியாகு போன்ற தோழர்கள் மொழிபெயர்ப்பு வரத் துவங்கியதாலும் அச்சில் வராமலேப் போயின சுபாவி & ஐ மா பா உழைப்பில் பிறந்த மொழியாக்கம் .
மொழியாக்கம் எழுத்தில் மட்டுமல்ல , தலைவர்கள் உரைகளை மேடையில் மொழி பெயர்ப்பதில் வல்லவர் அவர்.
தேர்தல் காலங்களில் தோழர் இ எம் எஸ் உரைகளை மொழிபெயர்த்ததைப் பார்த்திருக்கிறேன் .
1977 ஆம் ஆண்டில் அவசரநிலைக்குப் பிந்திய காலத்தில் நெல்லையில் வைகோ ஆலடி அருணா ஆகியோர் பங்கேற்ற ISSS கூட்டத்தில் தோழர் பி டி ரணதிவே அவர்களின் உரையை தனது உடல்நலம் குன்றிய நிலையிலும் சிறப்பாக மொழிபெயர்த்தார் .
சில நேரங்களில் அவர் விரக்தியாக இப்படிக் கூறுவதுண்டு:
“பெரும்பாலும் தோழர்கள் Numbers ஆக இருக்கிறார்கள் ; Members ஆக இருப்பதில்லை.
Our party needs members not numbers”!
சிறப்பாக செயலாற்றும் தோழர்களைப் பாராட்டத் தயங்குவதே கிடையாது.
தோழர் சங்கரலிங்கம் பொது இன்சூரன்ஸ் துறையில் பெரிய அதிகாரி. சிவகாசி தொண்டர் துரைசாமி அவர்களால் இடதுசாரி இயக்கத்துக்கு வந்தவர் . ஸ்டேட் வங்கி அதிகாரி நெப்போலியனின் சகலர் .
அவரது கோவில்பட்டி அலுவலக மாடியில் அவசரநிலை காலத்தில் சுபாவி அரசியல் ரிப்போர்ட் செய்துள்ளார் .
சங்கரலிங்கத்தின் தைரியத்தை மிகவும் பாராட்டி மகிழ்ந்தார் .
கடலையூர் சாலையிலுள்ள அவரது இல்லத்தில் இரு முறை கிளைக் கூட்டங்களை நடத்தியுள்ளோம் . கூட்டம் முடிந்ததும் சுபாவி சொன்னது நினைவிலிருக்கிறது: “ தலைமறைவுக்காலத்திற்குப் பொருத்தமான இடமாக உங்கள் வீடு இருக்கிறது தோழர் “
இன்று சுபாவி அவர்களும் நம்மிடையே இல்லை; தோழர் சங்கரலிங்கம் அவர்களும் தான்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | |
| ஆசிரியர்: | இரா. நாறும்பூநாதன் |
| வெளியீடு: | |
| விலை: | 10% சலுகை விலையில் ₹100.00 மட்டுமே |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 சுப்ரமணியன் ராமகிருஷ்ணன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

