அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் மார்ஸ் 2020 திட்டம் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க் கிரகத்தின் ஜெஸெரோ பள்ளத்தை ஆராய்வதற்காக ஒரு ரோவர் வடிவமைக்கப்பட்டது. இது பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance Rover) என்பதாகும். இது பெர்சி (Percy) எனச் சுருக்கமாக அழைக்கப்பட்டது. இது நாசாவின் நான்காம் தலைமுறை ரோவர் ஆகும்.
இது 2020 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று புளோரிடாவில் உள்ள கேப் கனாவல் தளத்தில் இருந்து அட்லஸ்-வி ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இது 472 மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து செவ்வாய்க் கிரகத்தை அடைந்தது. 203 நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது தரை இறங்கிய இடம் ஜெஸெரோ பள்ளத்தின் (Zezero creater) மேற்கு விளிம்பாகும்.
இது விண்கல் மோதியதால் ஏற்பட்ட மிகப் பழமையான பள்ளமாகும். இந்தப் பள்ளம் 45 கிலோமீட்டர் அகலம் கொண்டது. இது 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நீர் ஓடிய ஒரு ஆற்றுப் படுகையாக இருந்தது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பண்டைய நுண்ணுயிர் வாழ்க்கையின் அறிகுறிகளைத் தேடுதல், கடந்த கால வாழ்விடத்தைத் தேடுதல், மண் மற்றும் பாறை மாதிரிகளைச் சேகரித்தல் ஆகியவை இதன் பணியாகும்.
ஹெலிகாப்டர்
இந்தப் பயணத்தின் போது பெர்சிவரன்ஸ் ரோவரின் அடிப்பகுதியில் ஒரு சிறிய ஹெலிகாப்டர் எடுத்துச் செல்லப்பட்டது. இதன் பெயர் இன்ஜெனுட்டி (Ingenuity) ஹெலிகாப்டர் என்பதாகும். இது 2018 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது.
இது அமெஸ் ஆராய்ச்சி மையம் மற்றும் லாங்கிலி ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகம் (Jet Propulsion Laboratory) வடிவமைத்தது. இது உருவாக்க சுமார் 85 மில்லியன் டாலர் செலவிடப்பட்டது.
பரிசோதனை
இது விமான இயக்கவியல் மற்றும் சுற்றுச்சூழல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஒரு பெரிய வெற்றிட அறையில் செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் ஈர்ப்பு நிலைக்கு ஏற்ற சூழல் அமைக்கப்பட்டது. அதன் உள்ளே 0.60 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு நிரப்பப்பட்டது. இந்த அறையில் காற்றை வழங்குவதற்கு காற்றுச் சுவர் (Wind-wall) நிறுவப்பட்டது. இதன் மூலம் சுமார் 900 கணினி மின்விசிறிகளைக் கொண்டு காற்று வழங்கப்பட்டது.
இந்த அறையில் புவி ஈர்ப்பு விசையும் குறைக்கப்பட்டது. பூமியில் ஒரு ஹெலிகாப்டர் 34,000 மீட்டர் (1,12,000 அடி) உயரத்தில் பறப்பதற்குச் சமமான வளிமண்டலம் இந்த அறையில் இருந்தது. இந்த அறையில் மேற்கொண்ட பரிசோதனையின் போது ஹெலிகாப்டர் பறந்தது. அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெர்சிவரன்ஸ் ரோவரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டது.
வடிவமைப்பு
இது ஒரு ஆளில்லாத சிறிய ஹெலிகாப்டர் ஆகும். அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இது 4 அடி அகலமும், 1 அடி 18 சென்டி மீட்டர் (0.49.மீட்டர்) உயரம் கொண்டது. மேலும் இது குறைந்த எடையிலேயே உருவாக்கி உள்ளனர். இதன் எடை 1.8 கிலோ கிராம் ஆகும்.
இது இரண்டு சுழலிகளைக் கொண்டுள்ளது. இதன் சுழலிகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக செறிவான தண்டின் சுழற்சி அச்சுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் எதிர்த் திசைகளில் முரணாகச் சுழலும். இதன் ஒவ்வொரு சுழலியும் கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட 4 பிளேட்டுகளைக் கொண்டுள்ளது. இது ரோட்டார் பிளேட்டுகள் எனப்படுகிறது. ஆகவே இது ஒரு ரோட்டார் கிராப்ஃட் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டர் காற்றை விட கனமானது. இது இறக்கைகளால் உருவாக்கப்பட்ட லிப்டைப் பயன்படுத்துகிறது. இதன் இறக்கைகள் பூமியில் உள்ள ஹெலிகாப்டரை விட 10 மடங்கு அதிக வேகமாக சுழலுகிறது. இது ஒரு நிமிடத்திற்கு 2,500 முறை சுழலும் அளவுக்கு சக்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது செங்குத்தாகப் புறப்படவும், முன்னோக்கி, பின்னோக்கி மற்றும் செங்குத்தாகத் தரை இறங்கவும் முடியும்.
இந்த ஹெலிகாப்டரை தாங்கி நிற்க 4 கால்கள் உண்டு. இதன் கால்கள் ஒவ்வொன்றும் 3.84 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. சுழலிக்கு மேலே 4 கிராம் எடை கொண்ட சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேட்டரி ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இது 6 லித்தியம் அயன் சோலார் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளால் இயக்கப்படுகிறது. மேலும் ஹெலிகாப்டரின் அடியில் 2 கேமராக்களும் இருந்தது.
பெயர்
இது மார்ஸ் ஹெலிகாப்டர் என அழைக்கப்பட்டது. பிறகு இதற்கு ஒரு புதிய பெயர் வைக்க முடிவு செய்தனர். ஒரு பெயரைத் தேர்வு செய்வதற்காக நாசா ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தியது. 11 ஆம் வகுப்பில் படித்த வனீசா ரூபானி என்ற மாணவி சமர்பித்த கட்டுரையின் அடிப்படையில் இதற்கு இன்ஜெனுட்டி எனப் பெயர் சூட்டினார். ஜின்னி (Ginny) என்பது இதன் புனைப்பெயர் ஆகும்.
பறத்தல்
செவ்வாய்க் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று தரை இயங்கியது. ஏப்ரல் 3 அன்று ரோவரின் அடிப்பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் பாதுகாப்பாக நிலைநிறுத்தப்பட்டது. வேற்றுக் கிரகத்தில் இறங்கிய முதல் ஹெலிகாப்டர் இதுவாகும். பிறகு பாதுகாப்பாக பறக்க 100 மீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டது.
இதன் ரோட்டார் பிளேடுகள் ஏப்ரல் 8 அன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டர் பறப்பதற்கான முயற்சி ஏப்ரல் 11 அன்று மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மென்பொருள் கோளாறு ஏற்பட்டது. ஏப்ரல் 16 அன்று பிரச்சினை சரி செய்யப்பட்டது. ஏப்ரல் 19 அன்று முதல் முறையாக ஹெலிகாப்டர் செவ்வாய்க் கிரகத்தில் பறந்தது. இது 3 மீட்டர் உயரத்துக்கு மேலே எழும்பி, மிதந்து, சுழன்று பிறகு மெல்ல தரையிறங்கியது.
இந்த ஹெலிகாப்டர் சுமார் 30 வினாடிகள் வரை மட்டுமே பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது 40 வினாடிகள் பறந்தது. செவ்வாய்க் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்க முடியாது என்ற பொதுவான நம்பிக்கை இருந்தது. ஆனால் இது பறந்து சாதனைப் படைத்தது. இதன் வெற்றியை நாசா பெரிய அளவில் கொண்டாடியது.
முதன்முதலில் ரைட் சகோதரர்களால் 1903 ஆம் ஆண்டு விமானத்தைப் பறக்க விட்டதைப் போன்ற தருணம் இது என நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர். ரைட் சகோதரர்களின் ஃபிளயர் 1 விமானத்தின் இறக்கையில் இருந்த ஒரு சிறு பகுதியும் இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஜெனுட்டி ஹெலிகாப்டர் (Ingenuity Helicopter) பறந்தபோது அதில் இருந்த கேமராக்கள் புகைப்படம் எடுத்தது. தனது உருவ நிழலை தானே எடுத்து பூமிக்கு அனுப்பியது. மேலும் பெர்சிவரன்ஸ் ரோவரையும் புகைப்படம் எடுத்தது. அதே சமயத்தில் ரோவரில் உள்ள கேமராக்களும் ஹெலிகாப்டரைப் புகைப்படம் பிடித்தது. இந்தப் புகைப்படங்கள் ரேடியோ அலைகள் மூலம் பூமியில் உள்ள ஆய்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஹெலிகாப்டர் பூமியில் உள்ள ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தால் (JPL) இயக்கப்பட்டது. ரேடியோ அலைகள் பூமியிலிருந்து செவ்வாய்க் கிரத்தை அடைவதற்கு 5 முதல் 16 நிமிடங்கள் ஆகும். ஒரு கட்டளை பூமியிலிருந்து அங்கு சென்று சேரவே இவ்வளவு நேரம் ஆகிறது. அதேபோல் அங்கிருந்து தகவல்கள் பூமிக்கு வந்து சேர இதே காலத்தை எடுத்துக் கொள்ளும்.
50 ஆவது பறத்தல்
இந்த இன்ஜெனுட்டி ஹெலிகாப்டர் (Ingenuity Helicopter) 31 நாட்களில் 5 முறை மட்டுமே பறக்க வடிவமைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமாக இயக்கப்பட்டது. இது 2023 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று தனது 49 ஆவது பயணத்தை மேற்கொண்டது. இது வேகத்துடன் உயரமாக பறந்தது. இந்த சிறிய ஹெலிகாப்டர் 16 மீட்டர் உயரத்தில் 282 மீட்டர் தூரம் வரை பறந்தது. இது வினாடிக்கு 6.50 மீட்டர் வேகத்தை எட்டியது. ஜெஸெரோ பள்ளத்தின் பண்டைய நதி டெல்டாவில் பறந்து ஆய்வு செய்தது.
இது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று தனது 50 ஆவது பயணத்தை நிறைவு செய்தது. இது 50 என்ற வெற்றி இலக்கை அடைந்தது. இது வேற்றுக் கிரகத்தில் பறந்து இந்த சாதனையைப் படைத்தது. சிவப்புக் கிரகத்தில் 50 முறை பறந்துள்ளது. இது 146 வினாடிகளில் 1,058 அடி (322.2 மீட்டர்) பயணித்தது. இது 800 மீட்டர் அகலம் கொண்ட “பெல்வா கிரேட்டர்” அருகே இறங்குவதற்கு முன்பு 59 அடி (18 மீட்டர்) என்ற புதிய உயர சாதனையை அடைந்தது.
இது செவ்வாய்க் கிரகத்தில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்தது. இதற்கு முன்பு வரை பறந்த உயரத்தை விட இது அதிகமாக இருந்தது. ஒரு ஹெலிகாப்டர் செவ்வாய்க் கிரகத்தில் 50 முறை பறந்தது என்பது ஒரு சாதனை. இந்த வெற்றியை நாசா விருந்து வைத்துக் கொண்டாடியது.
கடைசி பறத்தல்
ஹெலிகாப்டர் 52 ஆவது முறையாக பறந்த பிறகு 63 நாட்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அதற்குப் பிறகு மீண்டும் தகவல் தொடர்பு கிடைத்தது. அது மீண்டும், மீண்டும் பறக்க விடப்பட்டது. இது 2024 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று 72 ஆவது முறையாக பறந்தது. ஆனால் அதன் தகவல் துண்டிக்கப்பட்டது. பிறகு ஜனவரி 20 அன்று தகவல் தொடர்பு மீண்டும் நிறுவப்பட்டது.
இன்ஜெனுட்டி ஹெலிகாப்டர் (Ingenuity Helicopter) 40 அடி உயரத்தை அடைந்து, 4.5 வினாடிகள் சுற்றியது. இது தரை இறங்கும்போது அதன் ரோட்டார் பிளேடு உடைந்து சேதமடைந்தது. இனிமேல் ஹெலிகாப்டர் பறக்க முடியாது எனக் கண்டறியப்பட்டது. அதன் பிறகு ஹெலிகாப்டரின் வரலாறுப் பயணம் முடிவுக்கு வந்தது.
சாதனை
இன்ஜெனுட்டி ஹெலிகாப்டர் (Ingenuity Helicopter) சோதனைக்காக இறக்கி விடப்பட்ட இடத்தை ரைட் சகோதரர்கள் ஃபீல்டு எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் 3 ஆண்டுகளில் 2 மணி 8 நிமிடங்கள் 48 வினாடிகள் பறந்தது. இது மணிக்கு 36 மீட்டர் வேகத்தில் சென்றது. இது 10 அடி உயரம் மட்டுமே பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது 79 அடி உயரம் வரை பறந்து சென்று சாதனைப் படைத்தது. எதிர்காலத்தில் ஹெலிகாப்டர் மூலம் மனிதனால் செவ்வாய்க் கிரகத்தில் பறக்க முடியும் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
– ஏற்காடு இளங்கோ
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.