தேனி மாவட்டம் கம்பத்தில் சேர்ந்த அக்குபங்சர் மருத்துவரும், கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சரின் ஆசிரியர்களில் ஒருவரான, தோழர் அராபத் உமரின் முதல் சிறுகதைத் தொகுப்புதான் நசீபு.

குறைந்த வாசிப்பனுபவமேயிருந்தாலும், தமுஎகச-அறம் வழிகாட்டலால், எழுத்துலகில் நுழைந்த இந்நூலாசிரியரின் கதை சொல்லும் திறன், எழுத்து நடை கூடுதல் சிறப்பு.

இத்தொகுப்பின் ஏழு கதைகளுமே, இஸ்லாமிய சமூக பெண்களின் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், துயரங்கள், அவர்களுக்கெதிரான சமூக பழக்கங்கள் என பேசினாலும், நான்கு கதைகளிலும், மரணத்தை மையப்படுத்தி, குடும்பத்திலுள்ளவர்களின் உளவியல் சிக்கல்களைப் பதிவு செய்திருக்கிறது.

‘ பொண்ணுகளுக்குப் பதினஞ்சுல கல்யாணத்த முடுச்சுறனும். அதுக்கு மேல அவுகளுக்கு (பெற்றோர்களுக்கு) வச்சு பாதுகாக்க முடியாதாம். ‘ என்ற வரிகளை கியாமத் கதையில் வாசித்ததும், பெற்றோர்கள் தன் மகளைக் கடமைக்காக வளர்ப்பது போலவும், மகளின் சம்மதமின்றி தான் பார்த்து வைத்திருக்கும் ஆணை திருமணம் செய்து வைப்பது இந்த நூற்றாண்டிலுமா என வியக்க வைக்கிறது.

‘ பணம் மட்டும் வாழ்க்க இல்லடா. இன்னு நிறைய இருக்கு. பணத்த மட்டு தேட ஆரம்பிச்ச அத தொலச்சுருவ. திரும்ப தேடிவரும்போது அது இருக்காது ‘ என்று தந்தை தன் மகனிடம் கூறிய இந்த உண்மையை மகன் தன் தந்தையின் இறப்பிற்குப் பிறகு தான் உணர்கிறான்.

“எந்த ஒன்றும் நம்மிடம் இருக்கும்போது அதனுடைய அருமை தெரியாது ; இல்லாத போதுதான் தெரியும் ” என்று பலரும் கூறுவது உண்மைதானோ⁉️ என்று ஆழ்ந்து உணர்வு பூர்வமாக சிந்திக்க வைக்கிறது ‘வெம்மை’ கதை.

“பொண்டாட்டியா இருந்தா இதெல்லா செய்யனும். கணவருக்குன்னுச் செய்ய வேண்டிய கடமன்னு இருக்குல. வெள்ள சேல கட்டி இருந்தாதாவுல கணவருக்கு கபுருல (மண்ணறை) வெளிச்சம் கெடைக்கும்”, இந்த வரிகளை முழுமையாக வாசித்து முடிக்கும் முன்பே மனம் அதிர்ச்சி நிலைக்குச் சென்றுவிட்டது.

ஒருபுறம், கணவன் இறந்த பிறகு பெண்கள் – இறப்பின் வலியையும் சேர்த்து பல கொடுமைகளையும் அனுபவிப்பதை உணர்த்துகிறது ‘இத்தா’ கதை.

மறுபுறம், மனைவி இறந்த பின், ‘ஏவே மொகொ வாடிக் கெடக்கு, அவள நெனச்சு கவலப்பட்றீயாக்கு. ஒனக்கு வேற பொண்ண நா பாத்து கட்டி வக்கிறன்’ என்று அந்த ஆணிற்கு உடனே வேறு ஒரு பெண்ணிற்குத் திருமணம் முடிக்க முடிவு செய்யும் அந்த தாயின் வார்த்தைகள் கியாமத் கதையில் படித்ததை நினைவுப்படுத்தி, மனித உணர்வுகள் பொதுவானது என்றில்லாமல், ஆண், பெண்ணுக்குமான முரணைப் பளிச்சென காட்சிபடுத்துகிறது.

நசீபு என்னும் கதையில், “என் கணவர் சாக போகைல கூடவா எம்மேல பாசோ வரலன்னுதாவே எனக்கு வருத்தம். எந்த தப்புஞ்செய்யாம நா ஏ மன்னிப்புக் கேட்டேன்னு நெரையா நாளு வேதன பட்ருக்கன்’ என்று பாட்டி தன் மனதில் தேக்கி வைத்துள்ள வேதனையைப் பேத்தியிடம் கூறுகிறார்.

சிறு வயதிலிருந்தே அந்த பாட்டி தன் விருப்பப்படி வாழ முடியாமல் ஆண்களின் அடிமையாகவே வாழ்ந்தது; தன் தந்தையும் – தான் விரும்பிய உடையைக்கூட அணிய அனுமதிக்காதது;

தன் கணவரும் – தன் விருப்பத்தைக் கூறியதற்கே அடித்துவிட்டது;
தன் மகனும் – தனக்கு பிடித்த சலாத்துன்னாரியா, பதுரியத்து இவற்றை ஓத கூடாது என்று கூறியது; மன்னிப்பு கேட்பது என்பது எந்த விதத்தில் நியாயமானது⁉️

ஒரு சமூகத்தில் பேசப்படும் புதிய வார்த்தைகளைப் பொருளோடு அறிந்து கொண்டதால் மகிழ்ச்சி. நன்றி!

 

நூல்: நசீபு
ஆசிரியர்: மு. அராபத் உமர்
பக்கம்:  103
விலை: ரூபா 120/
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

பா.கெ.கௌசல்யா,
சென்னை – 19.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *