குமாஸ்தாவின் பெயர் நசீர் – மு இராமனாதன்

 

திலீப்குமார் ‘தீர்வு’ என்கிற சிறுகதையை 1977இல் எழுதினார். அது ‘இலக்கியச் சிந்தனை’யின் விருது பெற்றது. அப்போதிலிருந்து தமிழில் எழுதி வருகிறார். ஆனால் அவரது கதைகளின் எண்ணிக்கையைக் கூட்டினால், அவை சராசரியாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்று என்கிற கணக்கில்கூட தேறுவதில்லை. அதனால் என்ன? எண்ணிக்கைக்கும் தரத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ன? 2002இல் திலீப்குமார் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’யை எழுதினார். ஞாநி ஆசிரியராக இருந்த ‘தீம்தரிகிட’ இதழில் வெளியானது. ‘ரமாவும் உமாவும்’ (க்ரியா பதிப்பகம், 2011) என்கிற தொகுப்பு நூலில் இடம் பெற்றிருக்கிறது. 2012இல் பத்மா நாராயணன் இந்தச் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘காரவன்’ இதழில் வெளியானது. அப்படியாக கோவை ராஜ வீதித் துணிக்கடை ஒன்றின் எளிய குமாஸ்தா, தமிழகத்திற்கு வெளியேயுள்ள சில காத்திரமான வாசகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பல்வேறு இந்திய மொழிகளிலும் பிரெஞ்சு, செக் மொழிகளிலும் கதை வெளியானது. இப்போது இந்தக் கதையைத் தழுவி அருண் கார்த்திக் படம் எடுத்திருக்கிறார். படத்தின் பெயர்- ‘நசீர்’.

நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழா கலாபூர்வமான படைப்புகளைத் தேர்வு செய்கிறது. இவ்வாண்டுத் துவக்கத்தில் நடைபெற்ற விழா இந்தியாவிற்கும், மேலதிகமாகத் தமிழகத்திற்கும் முக்கியமானது. ஏனெனில், இந்த விழாவில்தான் சிறந்த ஆசியப் படத்திற்கான நெட்பெக் விருதைப் பெற்றது நசீர்.

kodanki on Twitter: "பரியேறும் பெருமாள் ...

இம்மாதத் துவக்கத்தில் நிகழ்ந்த ஜியோ மாமி மும்பை திரைப்பட விழாவில் பல சர்வதேசப் படங்கள் அணிவகுத்தன. உலகின் பிரசித்தி பெற்ற திரைப்பட விழாக்களான பெர்லின், லண்டன், ரோட்டர்டாம், கேன்ஸ், நியூயார்க், டொரொண்டோ, வெனிஸ் முதலானவற்றில் விருது பெற்ற சுமார் 100 படங்கள் மும்பை விழாவிற்குத் தெரிவாயின. உலகின் தலை சிறந்த படங்களை மும்பை ரசிகர்களுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதுதான் இந்த விழாவின் நோக்கம். (2017ஆம் ஆண்டு இந்த விழாவில் அரங்கேறியத் தமிழ்ப்படம் அம்ஷன் குமார் இயக்கிய ‘மனுசங்கடா’). இவ்வாண்டு மே 29 முதல் ஜூன் 7 வரை, 10 தினங்கள் இந்த விழாவிற்கு நாள் குறிக்கப்பட்டது. இது கொரோனாக் காலமாதலால் படங்களை அரங்குகளில் திரையிட முடியவில்லை. மாறாகப் படங்கள் குறிப்பிட்ட நாட்களில் யூடியூபில் திரையிடப்பட்டன. ஆகவே மும்பை ரசிகர்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களால் படங்களைப் பார்க்க முடிந்தது. துவக்க விழாத் திரையிடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு படங்களில் ஒன்று ‘நசீர்’.

நசீரின் கதை ஒரு நாளின் காலையில் தொடங்கி மாலையில் முடிந்து விடுகிறது. சிறுகதையும் படமும் ஒரே இடத்தில்தான் தொடங்குகிறது. நசீர் கேள்விக்குறியைப் போல் பாயில் படுத்துக்கிடக்கிறான். பின்னணியில் காலைத் தொழுகைக்கான பாங்கு ஒலிக்கிறது. அது மக்கள் செறிந்து வாழும் பகுதி. குறுகலான தெருவில் ஒரு குச்சு வீடு. கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் அடையாளம் வீடெங்கும் பரவியிருக்கிறது. நசீருக்கு நடு வயது. சோம்பல் முறித்தபடி எழுகிறான். மனைவியோடு சிருங்கரிக்கிறான். மனநலம் குன்றிய வளர்ப்பு மகன் இக்பாலைக் கொஞ்சுகிறான். வீட்டில் சீக்காளி அம்மாவும் இருக்கிறாள். நசீர் பல் துலக்குகிறான். தண்ணீர் பிடிக்கிறான். ‘பனி விழும் மலர்வனம்’ கேட்கிறான். தாய் வீட்டிற்கு போகிற மனைவியை வழியனுப்புகிறான். அவன் வேலை பார்க்கும் துணிக்கடையைத் திறந்து வைக்கிறான். துப்பரவாக்குகிறான். கடவுள் படங்களுக்கு மாலையிடுகிறான். பணியாளர்கள் ஒவ்வொருவராக வருகிறார்கள். கடைக்கு வருகிறவர்களில் எளிய பெண் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொள்கிறான். அவர்களோடு நசீரால் இயல்பாய்ப் பேச முடிகிறது. முடிகிறபோது மதியத் தொழுகைக்குப் போகிற வழக்கம் நசீருக்கு உண்டு. அன்று பள்ளிவாசலுக்குப் போகிறான். மதியம் வீட்டில் சாப்பிடுகிறான். இக்பால் வரைந்திருக்கும் படங்களை சிலாகிக்கிறான். கடைக்குத் திரும்புகிறான். கதையில் எந்தத் திடீர் திருப்பமும் நிகழ்வதில்லை. ஆனால் கடைசிக் காட்சி எல்லாவற்றையும் மாற்றிப் போட்டுவிடுகிறது.

திலீப்குமார் : திலீப்குமார் என்ற ...
எழுத்தாளர் திலீப்குமார்

நசீருக்கு எந்தப் பக்கச் சார்பும் இல்லை. மௌலவியின் பிரசங்கமும் விநாயகர் சதுர்த்திப் பிரச்சாரமும் அடுத்தடுத்த தெருக்களில் ஒலிக்கின்றன. இரண்டிற்கும் நசீர் எதிர்வினை ஆற்றுவதில்லை. ஆனால் அவனைச் சுற்றி நடக்கும் மதம் சார்ந்த அரசியல் அந்தக் கடைசிக் காட்சியில் அவனை உள்ளே இழுத்துப் போட்டு விடுகிறது. மொத்தக் கதையும் அந்தக் கடைசிக் காட்சியை நோக்கித்தான் நகருகிறது. பென்சிலைச் சீவிச் சீவிக் கூராக்குவது போல.

திலீப்குமாரின் வேறு கதைகளிலிருந்தும் சில கீற்றுகளை உருவி இந்தக் கதையில் பொருத்தமாகச் சேர்த்திருக்கிறார் அருண் கார்த்திக். ‘மூங்கில் குருத்து’ சிறுகதை அதில் ஒன்று. ‘கடவு’ (க்ரியா பதிப்பகம், 2000) சிறுகதைத் தொகுப்பு நூலில் இடம் பெற்றிருக்கும் கதை. ஒரு குஜராத்தி இளைஞன். கோவையில் ஒரு மராத்திக்காரரின் தையல் கடையில் வேலை பார்ப்பான். வாரச் சம்பளம். அந்தச் சனிக்கிழமை முதலாளிக்கும் முடை. அடுத்த வாரம் தருகிறேன் என்று சொல்லி விடுகிறார். அடுத்த நாள் இவனது அப்பாவுக்கு திவசம். ரேஷன் வாங்க வேண்டும். முதலாளி ஒரு உபாயம் சொல்கிறார். ஒரு கல்லூரியில் மாணவர்களுக்குக் கோட் தைத்து கொடுக்கும் ஒப்பந்தம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. சில மாணவர்கள் உள் துணியை மாற்றச் சொல்வார்கள். அதற்கு அவர்கள் தனியே காசு கொடுக்க வேண்டும். முதலாளி அப்படியான கோட்டுகளை மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, கூடுதல் காசை வசூலித்து இவன் சம்பளத்தை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். இவன் கல்லூரி விடுதிக்குப் போகிறான். மாணவர்களிடமும் காசில்லை. எரிந்து விழுகிறார்கள்.

இந்தக் குருத்தை எடுத்து நசீரின் கதையில் சொருகி விடுகிறார் இயக்குநர். ஒரு வித்தியாசம்: குஜராத்தி இளைஞன் சிகரெட் பிடிப்பான். நசீர் பீடி குடிப்பான். ஆனால் இரண்டு பேரையும் காவல்காரர் கடிந்துகொள்வார்.

‘நா காக்க அல்லது ஆசையும் தோசையும்’ திலீப்குமாரின் இன்னொரு கதை. (‘ரமாவும் உமாவும்’ தொகுப்பு). அதில் வருகிற மிட்டு மாமா சுவாரஸ்யமான மனிதர். அவர் கதை சொல்லி இளைஞனிடம், ‘டேய், ப்ளே பாய் பத்திரிகை பார்த்து ரொம்ப காலமாகிவிட்டது. சைனா பஜார் பக்கம் போனால் ஏதாவது இஷ்யூ கிடைக்கிறதா பார்’ என்பார்.

‘குமாஸ்தாவின் கதை’யில் வருகிற நாயகன் சம்பளப் பற்றாக்குறை காரணமாக ஒரு உலர் சலவையகத்தில் பீஸ் ரேட்டில் இஸ்திரி போடுவான். நசீர் அப்படிச் செய்வதில்லை. மாறாக மதிய இடைவேளையில் ஒரு வசதியான வீட்டுப் பையனுக்கு அவனது வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்துக் கொண்டுபோய் பள்ளியில் கொடுப்பான். அந்த வீட்டில் ஒரு பெரியவர் இருப்பார். அவர் மிட்டு மாமா பேசுகிற வசனத்தைப் பேசுவார். நா காக்க கதையில் வருகிற இளைஞனைப் போலவே நசீரும் சிரித்துக் கொள்வான்.

இந்த மிட்டு மாமா ‘மென்மையான இட்லிகளிலும், நெய்யொழுகும் பொங்கலிலும், முறுகல் தோசைகளிலும், பொன்னிறமான மொரமொரப்பான உளுந்து வடைகளிலும்’ மனதைப் பறிகொடுத்தவர். யாரவது எங்கே டிபன் நன்றாக இருக்கும் என்று கேட்டுவிட்டால் ‘தன் ஹோட்டல் ஞானப்பெருவெளியிலிருந்து விவரங்களைத் தாறுமாறாக அள்ளி வீசுவார்’. இந்தக் குருத்தை அருண் கார்திகேயன் லாவகமாக உருவிக் கொண்டிருக்கிறார். எங்கே டிபன் நன்றாக இருக்கும், என்று கடைக்கு வரும் நண்பர் கேட்கிறார். கடை முதலாளி மிட்டு மாமாவாகிவிடுகிறார். எந்தெந்த ஹோட்டலில் என்னென்ன நன்றாக இருக்கும் என்று ரசனையோடு பட்டியலிடுகிறார். ஒரு வித்தியாசம் இருக்கிறது. சிறுகதையில் வருபவை வடசென்னை ஹோட்டல்கள். படத்தில் வருபவை கோவை ஹோட்டல்கள்.

தமிழ் சிறுகதைகள்

திலீப்குமாரின் ஒரு கதையிலிருந்து ஒரு குருத்தை எடுத்து இன்னொரு கதையில் சொருகிவிட முடிகிறது. ஏனெனில் இந்தக் கதைகள் எல்லாம் எளிய மனிதர்களின் கதைகள்.  இந்துவாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும், தமிழனாகவோ குஜராத்தியாகவோ மராத்தியாகவோ இருந்தாலும் பிரச்சனைகளும் சின்னச் சின்ன சந்தோஷங்களும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவைதான். ‘மூங்கில் குருத்து’ குஜராத்தி இளைஞனைப் போலவே நசீரும் வறுமையோடு துவந்த யுத்தம் செய்கிறான். ஆனால் இரண்டு பேருமே கண்ணியமானவர்கள்.

நசீருக்கு எப்போதும் பற்றாக்குறைதான். இக்பாலைச் சிறப்புப் பள்ளியில் சேர்க்க வேண்டும். அம்மாவுக்குக் கருப்பையில் புற்றுநோய் இருக்கலாம் என்கிறார்கள். வலி தாளாமல் படுத்துவிடுகிறாள். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும் அவன் மேன்மையானவனாகத்தான் இருக்கிறான். நசீர் ஒரு கவிஞனுங்கூட. அவன் சொல்கிற கவிதை இப்படி ஆரம்பிக்கும்: “வாழ்க்கையில் பிடிப்பேதுமில்லை எனக்கு/ இல்லை ஏதும் புகாரும் கூட/ நான் அசடும் அல்ல அதை வெறுக்கும் அளவுக்கு”.

‘ஒரு குமாஸ்தாவின் கதை’ அதன் உள்ளடக்கத்தால் மட்டுமல்ல, அதன் உருவத்தாலும் சிறப்பானது. பொதுவாகக் கதைகள் படர்க்கையில் சொல்லப்படும். அதாவது கதாசிரியர் கதைக்கு வெளியே நின்று கொண்டு கதை சொல்வார். என்றாலும் சில கதைகள் வாசகனை உள்ளே இழுத்துக் கொள்ளும். வல்லவரையன் வந்தியத்தேவனுடன் புரவியேறிப் பயணித்தவர்கள் பலர். ‘குறிஞ்சி மலர்’ படித்துவிட்டுத் தங்களையே அரவிந்தனாக பாவித்துக் கொண்டவர்கள் உண்டு, தங்கள் பிள்ளைகளுக்கு அரவிந்தன் என்று பெயர் சூட்டியவர்கள் உண்டு. இது முதல் வகை. இரண்டாவது வகை தன்னிலைக் கதைகள். கதை சொல்லியே கதை சொல்லுவார். “நான் கிழக்குக் கோபுர வாசல் திண்ணையில், ‘முருகா’ என்ற கொட்டாவியுடன் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு சாய்ந்தேன்” என்று தொடங்குகிற புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’ இந்த இரண்டாம் வகைக்கு ஓர் எடுத்துக்காட்டு. ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ மூன்றாம் வகை. முன்னிலையில் சொல்லப்படுகிறது. ‘நீங்கள் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்’ என்றுதான் கதை ஆரம்பிக்கும். கதையில் நசீர் செய்வதையெல்லாம் ‘நீங்கள்’தான் செய்கிறீர்கள். நீங்கள்தான் மனைவியோடு சிருங்கரிக்கிறீர்கள். நீங்கள்தான் மங்களூர் பீடி குடிக்கிறீர்கள். நீங்கள்தான் கடையில் விற்பனை செய்கிறீர்கள். நீங்கள்தான் கவிதை சொல்கிறீர்கள். நீங்கள்தான் அம்மாவின் அறுவை சிகிச்சைக்காகக் கவலைப்படுகிறீர்கள்.

இந்த வடிவத்தால் வாசகனே பாத்திரமாக மாறிவிடுகிறான். கதைக்கு முழுமையாகத் தன்னை ஒப்புக் கொடுத்து விடுகிறான். ஆனால் இந்த வடிவம் சிரமமானது. இதற்கு முன்னும் இதற்குப் பின்னும் இப்படியொரு வடிவத்தைப் பின்பற்றி வேறு யாரும் கதை எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. இப்படி ஒரு வடிவத்தை தெரிவு செய்ததன் மூலம் திலீப்குமார் தனக்குத்தானே ஒரு சவாலை விதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கயிற்றின் மேல் சாகசமாக நடந்து அந்தச் சவாலை வெற்றி கொண்டுவிடுகிறார்.

Nasir | IFFR

ப்ளூம்ஸ்பர்க் நிறுவனம் படைப்பிலக்கிய மாணவர்களுக்கு ஒரு பாடநூல் வெளியிட்டிருக்கிறது. அதில் உலகெங்கிலுமிருந்தும் தலை சிறந்த 24 கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ அவற்றுள் ஒன்று. திலீப்குமாரின் புலமையை வியந்து வெளிநாட்டோர்

வணக்கம் செய்ததாக நாம் இதை எடுத்துக் கொள்ளலாம்.

இந்தக் கதையைப் படமாக்கத் தேர்ந்துகொண்டதன் மூலம் அருண் கார்த்திகேயனும் ஒரு சவாலைத் தெரிந்தே எதிர்கொண்டிருக்கிறார். கதையைப் போல் படத்தில் ‘நீங்கள்’ என்று சொல்ல முடியாது. ஆனால் அவரால் நசீரைப் பார்வையாளனின் நெஞ்சுக்கு நெருக்கமாகக் கொண்டு வர முடிகிறது. நசீரின் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் பார்வையாளனுக்குக் கடத்திவிட முடிகிறது. உலகத் தரமான ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் இதற்கு ஒத்துழைக்கின்றன.

இந்தப்படம் கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் திரையரங்குகளுக்கு வரும். ஓ.டி.டி.யில் வீடுகளுக்கும் வரும். அப்போது நசீர் இன்னும் பலருக்கு நெருக்கமாவான். நசீரை நேசிப்பதன் மூலம் நாம் சக மனிதர்களை நேசிக்கிறோம்.

இந்தப் படத்தின் மூலம் ‘நசீர்’  ‘குமாஸ்தா’விற்கு நியாயம் செய்திருக்கிறான். நாம் நமது சக மனிதர்களுக்கு நியாயம் செய்யக் கடவோம். ஆமென்!

(மு இராமனாதன் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்,

தொடர்புக்கு: [email protected])