நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன – நூல் அறிமுகம்
“மீனுக்கு காய்ச்சல் வராதா….”
குழந்தைகளுக்காக பெரியவர்கள் எழுதும் எழுத்துக்கள் நிறைய வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் எண்ணங்களை, குழந்தைகளின் மொழியை அப்படியே கொஞ்சமும் மாறாமல், அச்சு அசலாக எழுதியுள்ளார் நூலாசிரியர் தேனி சுந்தர்.
இந்த சமூகம் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் குழந்தைகள் தலையில் திணிக்கிறது. குறிப்பாக மனிதர்கள் தங்கள் தங்களின் நம்பிக்கையை திணித்து இருப்பார்கள். குறிப்பாக கடவுள், மதம், சாதி, சடங்கு, சம்பிரதாயம் மற்றும் மூட பழக்கங்கள் இவை எல்லாம் அடங்கும்.
குழந்தைகளுக்கு விடை தெரியாத, தெரிந்து கொள்ள தவிக்கும் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதனை தெளிவு செய்து கொள்ளும் குழந்தைகள் தயாராகின்றனர்.
குழந்தைகள் தான், பார்க்கும், கேட்கும், அறிந்து கொள்ளும் அனைத்தையும் வெளிப்படுத்தவும், பேசவும், செயல்படவும் துடிக்கிறார்கள். நாம் குழந்தைகளை கட்டி போடாமல் இருந்தால் போதும்.
அவர்களை சிறந்தவர்களாக ஆக்க ஒரே வழி, எந்தவித கட்டுப்பாடும் விதிக்காமல் மகிழ்ச்சியாக வைத்திருந்தாலே போதும்.
குழந்தைகளின் தேவைகள் மிகவும் எளிமையானவை. குழந்தைகளுக்கு தேவையானவை எல்லாம், அவர்களின் விருப்பத்தை உணர்ந்து அவர்களை வீட்டிலும், வெளியிலும் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதித்தால் போதும். அவர்கள் பேசுவதை, நடந்து கொள்வதை நாம் விருப்பத்துடன் கேட்டாலே போதும். குழந்தைகள் மிக அபாரமான அறிவாற்றல் கொண்டவர்கள் அவர்களது உலகம் எது என்று நாம் புரிந்து கொள்வது வரை நமக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் அவர்கள் உலகம் என்ன என்பதை புரிந்து கொண்டால் அவர்களது எண்ணங்கள் செயல்பாடுகள் மிக உயர்ந்தவைகளாக இருக்கும் என்பதை உண்மை.
குழந்தைகள் இந்த உலகை, இயற்கையை, புழுவை, பூச்சியை, எறும்பை, மனிதர்களை அவர்களுக்கு உள்ள மொழியில் கற்று அறிந்து கொள்கிறார்கள்.
இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ளாமல் அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் மட்டுமே ஈடுபடுகிறோம்.
இதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சி பெரும் அளவில் தடைபடுகிறது என்று மிக அருமையாக இந்த நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் தேனி சுந்தர்.
நூலாசிரியர் நிறைய நூல்கள் எழுதியுள்ளார். ஆனால் குழந்தைகளிடம் கற்றுக்கொண்ட விஷயங்களை கவிதை வடிவில் குழந்தை கவிதை நூல் படைத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியதாகும். ஒவ்வொரு கவிதையும் ஒரு பாடத்தை கற்பிக்கிறது.
பள்ளியில் கற்றுக் கொண்டதை வீட்டில் தான் ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் பெற்றோர்களுக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் ஆசிரியர்களாக மாறி கற்றுக் கொடுக்கத் தொடங்கி விடுகிறார்கள்.
இதுபோன்று சிறு சிறு சம்பவங்கள் பெரும் கவிதையாகி உள்ளது.
ஏடிஎம்மில் பணம் எடுத்து விட்டு திரும்பும் அப்பாவை பார்த்து குழந்தை கேட்கிறது.
“களவாண்ட்டு வந்துட்டியாப்பா”
“இத.. இத..
இதல்லாம் எழுதிட்டு வந்துருங்க ஈசியா சொல்லிறாங்கப்பா…!
ஆனா எழுதும்போது எங்களுக்குதான கை எல்லாம் வலிக்குது!”
இப்படி கவலையோடு தெரிவிக்கிற கவிதையும் உண்டு.
வீட்டில் தண்ணீரிலோ அல்லது மழை பெய்யும் போது குழந்தை விளையாடும் போது நாம் கண்டிக்கிறோம்….
மீன் தண்ணீருக்குள்ளே நீந்துவதை பார்த்து குழந்தை கேட்கிறது
“ஏம்ப்பா மீனுக்கு மட்டும் காய்ச்சல் வராதா? சொல்லுப்பா.. மீனுக்கு மட்டும் காய்ச்சல் வராதா?”
இப்படி குழந்தை மனதில் உள்ள பல்வேறு விஷயங்களை இந்த நூல் எளிமையாக நமக்கு கடத்திச் செல்கிறது.
தொடக்கம் முதல் கடைசிவரை கையில் எடுத்த புத்தகத்தை வாசித்து முடிக்காமல் வைக்க முடியவே இல்லை….
நாமும் குழந்தைகளாக மாறிக் கொள்ளலாமோ என்ற ஆசையும் ஏற்படுகிறது….
சின்ன சின்ன கவிதைகள் இடையே குழந்தைகள் மனதை நமக்கு எடுத்துச் செல்கிறார் நூலாசிரியர் குழந்தைகள் எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதை அவர்கள் மொழியிலேயே நமக்கு படைத்திருப்பது தான் சிறப்புக்குரிய விஷயமாகும்.
நூலாசிரியர் இது போன்ற நிறைய நூல்கள் கொண்டு வர வேண்டும்.
நூலை வாங்குவோம், வாசிப்போம், மகிழ்வோம், பகிர்வோம்.
நூல் அறிமுகம் :
நூல் : “நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன”
நூலாசிரியர் : தேனி சுந்தர்
விலை : ரூபாய் 60/-
வெளியீடு : புக் ஃபார் சில்ட்ரன்
சென்னை-600018.
தொடர்பு எண்: 04424332424.
நூல் அறிமுகம் எழுதியவர் :
MJ. பிரபாகர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

