நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன (Natchathirangal Eatti Paarkinrana) – நூல் அறிமுகம்
குழந்த்தமை உரையாடலின் கலைச்சித்திரம்
கலைத்தாட்டியம் மிக்க வாழ்க்கையின் மறுபதிப்புதான் இலக்கியம் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. அது உண்மையும் கூட. நாரை என்ற பறவை மூலம் தன் மனைவிக்குத் தூது விடுகிறான் ஒரு தமிழ்ப் புலவன். “கையது கொண்டு மெய்யது பொத்தி, காலது கொண்டு மேலது தழுவி” குளிரும் பசியும் தாங்க முடியாமல் நான் இங்கு சுருண்டு கிடக்கிறேன் என்று போய்ச்சொல் என்கிறான்.
செம்மண்ணில் மழைநீர் கலந்து விட்டால் எப்படிப் பிரிக்க முடியாதோ (செம்புலப் பெயல் நீர் போல) அன்பு கலந்த காதல் நெஞ்சங்களைப் பிரிக்க முடியாது என்று காதலுக்குப் புது விளக்கம் அளிக்கிறது தமிழ்ப் புலவனின் ஆய்வு மனம். அதாவது வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவத்தை அப்படியே சொல்லாமல் ஆய்வு செய்து, அதே நேரத்தில் வாழ்க்கை மற்றும் உளவியல் இயக்கக் கூறுகள் சிதைந்து விடாமல் மொழியின் வழியாக வெளிப்பாடு செய்வதே இலக்கியம் என்று சொல்லலாம்.
குழந்தையுடனான உரையாடல் என்பது குழந்தைகளின் இயல்பான பேச்சை உள்வாங்கி, அதற்குள் படிந்து கிடக்கும் நுட்பக் கோடுகளை வரிவடிவம் ஆக்கும் திறன் ஒருசில படைப்பாலிகளுக்கு மட்டுமே கைவரக் கூடியது. அவர்களில் மிகவும் முக்கியமானவர் தேனி சுந்தர். இவர் எழுதியுள்ள எட்டு நூல்களும் குழந்தைகளுடனான உரையாடல்கள்தான். பெரும்பாலானவை பள்ளிக்குழந்தைகளுடன் நிகழ்பவை. “நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன” என்ற இந்த நூல் குடும்பக் குழந்தையுயுடனானது.
இந்த நூலின் நாயகி புகழ்மதி. அம்மா, அப்பா, அப்பத்தா, அம்மாச்சி, தாத்தா, டார்வின் எல்லாம் துணைப் பாத்திரங்கள். இந்த நூல் குழந்தமை ததும்பும் காவியம், இந்தக் காலமொழியில் சொல்வதென்றால் ”குழந்தமை நாவல்” என்று சொல்லலாம். தமிழுக்கு இது ஒரு புதுமையான இலக்கிய வடிவம்
மூன்று முத்தான முன்னுரைகள் இந்நூலின் வாயில் தோரணங்களாய் அமைந்திருக்கின்றன. நூல் சொல்லும் வாழ்வியல் அம்சங்களின் ஆழமும் ஆற்றலும் அவற்றில் பதிவாகியிருக்கின்|றன. ஒன்றிரண்டு அம்சங்களை நானும் தொட்டுக் காட்ட விரும்புகிறேன்.
புகழ்மதியும் அப்பாவும் வெக்கையைத் தணிக்கும் விதமாக மாடிக்குப் போகிறார்கள்.
”புகழ்மதி சொன்னாங்க;
வானத்துல பாருப்பா;
எத்தன நட்சத்திரம் இருக்குன்னு.”
நான் சொன்னேன்;
சரி பாப்பா; எண்ணிச் சொல்லு
எத்தனை இருக்குன்னு.”
பத்து, பதினாறு,
எட்டு, அஞ்சு, பத்தொம்பது.”
இப்படியாக எண்ணுகிறாள் புகழ்மதி. இது தப்புக் கணக்கு என்று எல்லாருக்கும் தெரியும். உண்மையில் இது பொய்க் கணக்கா? இல்லை; நிச்சயம் இல்லை. இது குழந்தமைக்கணக்கு; அதாவது பெரியவர்களுக்கு உண்மையற்றது; குழந்தைகளுக்கு உண்மை. இதை வெளிக் கொணரும் நூலாசிரியரின் ஆற்றல் மிக்க புனைவுப் பதிவு. பொய் என்று புலனாகும் அதே நேரத்தில் பொய் இல்லை. என நிறுவப்படும் கலையாற்றல் என்று சொல்லலாம்.
உலகின் மகத்தான தலைவர்களில் ஒருவரான காந்தித் தாத்தாவின் பிம்பத்தைப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொண்டு செல்லும் முக்கிய ஊடகம் பள்ளிக் கூடம்; வீட்டிலும் காந்தித் தாத்தா பற்றிய உரையாடல் வருகிறது. எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றளவும் குழந்தைகளால் நினைவுகூரப்படுபவர் காந்தி (தாத்தா.) காந்தியும் லெனினும் உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள்; ஆனால் உடலால் அவர்கள் அழகானவர்கள் இல்லை என்கிறது ஒரு ரஷ்யப் பதிவு.. (அழகின் உள்ளார்ந்த ஆற்றல் என்பது வேறு; உடல் அழகு மட்டும்தான் இங்கு குறிப்பிடப் படுகிறது.)
”ப்பா.
காந்தித்தாத்தா வீட்டுல
யார் யார் இருக்காங்க
தெரியுமா?”
அதெல்லாம்
ஒனக்குத் தெரியுமா பாப்பா;
அப்பாவுக்கே தெரியல.”
அந்த வீட்டில் பாட்டி, தாத்தா, அருகில் ஒரு மரம், குட்டிச்செடி, குருவிக்கூடு என ஒவ்வொன்றாய்ச் சொல்கிறாள் புகழ்மதி. அப்போது அந்தவீடு அடையாளமாகிறது. ஆண்டித்தாத்தா வீடு என அடையாளப் படுத்துகிறார் அப்பா. குழந்தை மனசில் காந்தி ஆழமாய்ப் படிந்திருக்கும் படிமம்தான் ஆண்டித்தாத்தாவின் உருவம். இலக்கியப் பனுவலுக்குரிய ஓர் கலைச் சித்திரம் இது. ஆண்டித் தாத்தாவின் உருவமாய் வெளிப்படுகிறது. காந்தியைப் போல் இருக்கிறது என்று சொல்லிவிட்டுச் செல்வது எளிது; அதை அழகியல் கூறுகொண்ட கலைச் சித்திரமாய் மாற்றுவது படைப்பாளியின் திறமை. இன்னொரு விதத்தில் சொல்வதென்றால் குழந்தையின் உரையாடலை, யதார்த்தம் குலையாமல் மறு உருவாக்கம் செய்திருக்கிறார் ஆசிரியர். “யதார்த்தம் சிதையாமல் வாழ்க்கைப் பதிவை மறு உருவாக்கம் செய்வதுதான் கலையும் இலக்கியமும்” என்கிறார் ஆய்வாளர் அருணன். அந்த இலக்கணத்துக்குக் கச்சிதமான முறையில் இந்த நூலில் இலக்கிய வடிவம் தந்திருக்கிறார் தேனி சுந்தர்.
பூமிக்குள் புதைந்த புதையலாய் இந்த நூலில் நிறைய இருக்கின்றன. வாசிக்க எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. பள்ளிக்கூட உரையாடலைத் தாண்டி குடும்ப உரையாடலை நிகழ்த்தியிருக்கிறத நூலாசிரியரை எத்தனை பாராட்டினாலும் தகும். குழந்தைகளை முன்னிறுத்தும் சைக்காலஜிக்கல் படைப்பு என்று இதைச் சொல்லலாம். அவர் மேலும் இதுபோல் எழுத வேண்டும் என்று விரும்பி வாழ்த்துகிறேன்.
நூலின் தகவல்கள் :
நூல் : நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கின்றன
ஆசிரியர் : தேனி சுந்தர்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கம் : 72
விலை : 60/
நூல் அறிமுகம் எழுதியவர் :
தேனிசீருடையான்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமை…நூலாசிரியருக்கு
வாழ்த்துக்கள்