தகவல் தொழில் நுட்பம் வளர்ந்தோங்கிய இன்றைய காலமதில்..நுட்பத்தை உள்ளிழுத்து வேலை செய்ய மறந்தது கவனக் குறைவா..,?. நம்மை புதுப்பிக்க.. அப்டேட் செய்ய தவறியது எங்கிருந்து என்பதை முழு மனசுத்தியோடு பரிசீலனைசெய்திட வேண்டிய இடத்தில் நிறுத்தப் பட்டிருக்கிறோம் இன்று. நம்மை ஸ்கேன் செய்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திடனும் என உணர வேண்டிய  தருணமிது.மனபூர்வமாக உணர்ந்து நடிப்பதை கைவிட வேண்டிய நிர்பந்தத்தை நமக்கு நாமே அணிந்திட வேண்டிய இடத்தில் இருக்கிறோம் தற்போது.
         20 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர் என்பதை உரத்தச்  சொல்லிச் சென்றது கொரோனா.. அதே போல் இன்றைக்கு பல லட்சக் கணக்காண தொழிலாளர்கள் ஐ.டி. துறையில் வேலை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக தனது அடையாளத்தை, பெற்ற உறவுகளை, உடமைகளை தொடர்ந்து இழந்து வருகிறார்கள்.
       முதலாமவர்கள் கடைகோடியில் இருந்திடும் உடல் உழைப்பாளி மக்கள்.. இரண்டாமவர் அறிவுத்தளத்தின் மொத்தத்தையும் ஒருவருக்கொருவர் சளைக்காமல்
மானசீகமாக தாங்கள் வேலை செய்யும் நிர்வாகத்திற்கு டாலரின் வழியாக இந்திய ரூபாயின்  பசபசப்பிற்கு தம்மை அடிமைப்படுத்திக் கொண்டு நிம்மதியான வசதியானதொரு வாழ்வை வாழ்வதாக நினைத்து வாழ்வின் உறவுமுறை, அன்பின் அணுக்கம், சிதைவிற்குள் சிக்கி, உழன்று இழந்து கொண்டிருப்பவர்கள்..தொலைத்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.
       கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தங்களை முழுமையாக ஒப்புவித்துக் கொண்ட இரு மாபெரும் சமூகம் உருவாகிக் கிடக்கிறது நம் கண்ணெதிரிலேயே..நுண்ணறிவுசார் தளத்திலும், உடலுழைப்புத் தளத்திலும் உழைத்துக் கொண்டிருக்கும் இரு பெரும் சமூகத்தை நமது பார்வைக்குள் இருந்து, நமது சிந்திக்கும் ஆற்றலுக்குள் இருந்து யோசிக்கவே முடியாத ஒரு வலைப்பின்னலை சட்டதிட்டங்களின் வழியாக பினைத்து..இணைத்து ஏறி நின்று ஒன்றுமறியாத அப்பாவிகளாக…. கார்பரேட்டுகள்; நம்முடையை ஒத்துழைப்பைவேண்டி நிற்கும் கொடூரம்தான்,சால்ஜாப் நிறைந்த, பிரமிப்பேற்றி ஜொலிக்கும், வசியப்படுத்தி போதையேற்றும் வண்ண விளக்குகளுக்குள் மறைந்து கிடக்கிறதென்பதை “நகரவாசிகள்” நாவலுக்குள் அதன் ஆசிரியர் “கார்த்திக் பாலசுப்பிரமணியன்” வலியோடு பதிவு செய்திருக்கிறார்.
       தான் கண்டுணர்ந்த நிஜ மனிதர்களின் வாழ்வியலோடு.  நாவலின் துவக்கமதில் வாசகனை இழுத்துப் போவதில் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொண்டாலும் அத்தியாயம் கூடக்கூட வேகத்தையும் ஈர்ப்பையும் நாவலின் மொழி நடைக்குள் கொண்டு வந்திருக்கிறார். முதல் நாவல் இது கார்த்திக் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு. சமூகக் கொடுமைகள், அவலங்களுக்குள், வரலாற்று திரிபுகளால் மறந்து போனவர்கள், மறைக்கப் பட்டவர்கள் இப்படி நிறைய தளமதில் நாவல்கள், உண்மைகளை உள்வாங்கிய புனைவுகளாக வெளிவந்திருக்கிறது. ஆனால் நாம் வாழும் காலத்தில் நம் கண்ணெதிரே அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம் என்கிற பெயரால்  கார்ப்பரேட்களின் லாபவெறிக்காக இந்தியக் கல்வித்தளத்தில் 15 வருடங்களுக்குள் கட்டமைக்கப்பட்ட இளைய சமூகம்  நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் தள்ளப்பட்ட உளவியலுக்குள் சிக்கி சிதைந்து மனச்சிதைவுக்கு ஆளாகிவரும் வேதனையான வாழ்வினை.. எதிர்கொள்ளத் தெரியாத.. தெரிந்தாலும் தொட முடியாத, தொடர முடியாத சிக்கல்கள் மிகுந்த பின்னலுக்குள் கிடந்து நொந்து சாகும் நிஜங்களை நாவலாக மாற்றி இருப்பது இதுவாகவே எனதளவில் தெரிகிறது. தகவல் தொழில் நுட்பத்தின் திறமை, மேன்மை தாங்கிய கதைகளோ.. குறு நாவல்களோ வந்திருக்கலாம்..
           தான் கண்டுபிடித்த, வடிவமைத்த தொழில் நுட்பமே தன் சுயத்தை, சுதந்திரத்தை வேவு பார்க்கும் என்பதை அறிந்தே வாழும் மனிதர்கள் உலாவிடும் உலகத்தை நம் சமூகத்திற்கு காட்சிப்படுத்தி இருக்கிறார். அவர்களின் இயலாமை உணர்விலிருந்து.
“நட்சித்திரவாசிகள்” பயணப்படும் நிலவரைவியலென்பது 1980களில் சென்னையில் தொழிற்பேட்டையின் அடையாளமாக விளங்கிய திருவான்மியூர் வி.எஸ்.ஐ. எஸ்டேட், பெருங்குடி, கந்தன்சாவடி, காரப்பாக்கம், சோழிங்க நல்லூர் சிறுசேரி வரையிலான பகுதிகளாகும்.. பழைய மகாபலிபுரம் சாலையை ஒட்டிய பகுதிகளில் இயங்கிய சிறு குறு தொழிற்சாலைகள் அனைத்தும் கடந்த 15 ஆண்டுகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து, மூடப்பட்டு இடிந்து போய் நிற்க; அதே காலகட்டத்தில் புதிது புதிதாக பிரமாண்டமான தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்கள் அறிவியல் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு இடிந்து கிடந்த பழைய தொழிற்சாலைகளின்  மண்மேட்டில் கிடுகிடுவென மேலெழுந்தது. கரியழுக்கேறிய, வியர்வை வாசம் மிகுந்த  சீருடையணிந்த ஆண் பெண் தொழிலார்கள் எதிர்காலமிழந்து வீதியில் தள்ளப்பட , அதே பழைய மகபலிபுரம் சாலையில் கலர் கலர் பேருந்துகளில், இரு சக்கர வாகனங்களில் கழுத்தில் டை கட்டிய இளைய சமூகமது கம்ப்யூட்டர்களில், லேப்டாப்களில் நாளின் 24 மணி நேரத்தையும் தங்கள் திறமையை வேலையாக்கி முகம் பார்க்கமுடியாத கார்பரேட் முதலாளிகள் பயன்படுத்தி வீசி எறியும் “Use and Throw”வின் ஏதோ ஒன்றாக மாறி “Yardely perfume”, பூசி அலையும் காட்சிகள்,  நிஜத்தில் பார்த்ததின் சாட்சியாக நான் தரமணியில் குடியிருந்த காலமது கண்ணெதிரே வந்து கொண்டு இருக்கிறது. நகரமயமாக்கலின் நாகரீகம் மென்று விழுங்கியது அப்பகுதியில் வசித்திட்ட இயல்பான மனிதர்களின் வசந்தமான வாழ்வினை.
Karthik Balasubramanyan
        நட்சத்திரவாசிகள் நாவலுக்குள் பாத்திரமாக்கப்பட்ட அனைவருமே கார்ப்பரேட் கரங்களுக்குள் சிக்கி எப்படி சிதைக்கபபடுகிறார்கள், சாரெடுக்கப்பட்ட
கருப்பஞ்சக்கையாக வெளியே வீசப்படும் கொடூரத்தை நாவலுக்குள் காத்திரமாகப் பதிவாக்கி இருக்கிறார் நாவலாசிரியர். பெற்றோர்களின் கவனப்படுத்தலால் மீரா-நகுலன் திருமணம் நடை பெற்று முடிகிறது. மீரா நகர்புற சூழலில் வளர்ந்தவள், நகுலன் கிராமப்புற சூழலில் வளர்ந்து நகர்புறத்தின் தகவல் தொழில்நுட்ப துறையில் தன்னை இணைத்துக் கொண்டவன். பணிச் சூழல், தான் வளர்ந்த முறை எல்லாமும் மீராவுக்கு இந்தியா முழுவதிலும் நண்பர்களை உருவாக்கிட; மீரா-நகுலன் திருமண தேனிலவில் இருந்து தொடங்குகிறது இருவரும் கடந்தகால வாழ்வியல் நிலைகளில் இருந்தாலான விவாதங்களும் புரிதல்களுக்கான பிரச்சனைகளும். இருவருமே தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிவதால் இருவரின் வேலை நேரமும் சூழல் மாற்றிப் போட, ஒரே வீட்டில் இருந்தாலும் சந்திப்பதும், பேசுவதுமே சிக்கலாகி, ஒருவருக்கு ஒருவரின் தேவைகளும், பேசுதல்களும் வாட்ஸ் அப் வழியாகவே நடைபெறுகிறது.
திருமணப் பேச்சுவார்த்தை தொடங்கிய பொழுதுகளில் வாட்ஸ் அப் மெசேஜ் வந்து சேர்ந்த அடையாளத்தின் ரம்மியமான சத்தத்திற்காக காத்திருந்த காதுகளில், தற்போது அந்தச் சந்தம் நாராசமாய் மாறிப்போனதெப்படி என இருவரின் வழியாக பதிவாக்கி இருக்கிறார் ஆசிரியர். புரிய வைப்பதிலும்..ஒருவருக்கு ஒருவர் புரிந்து இணைவதிலும் புரிந்து கொள்வதிலுமான நுட்பமான உணர்வை வேதனையோடு பகிர்ந்திருப்பார் கார்த்திக் பாலசுப்பிரமணியன். ஒருவர் மீது ஒருவரின் தனித்த அடையாளங்கள் தீண்டப்படும்போதோ, சுமத்தப்படும்போதோ.. கேள்விக்குள்ளாக்கப்படும் போதோ இருவருக்குள்ளும் நிகழ்ந்திடும் மனச் சிதைதை நகுலனுக்கு மீரா அனுப்பிய கடைசி மெயில் வழியாக பதிவாக்கி இருக்கிறார் ஆசிரியர். அதே நேரத்தில் நல்லதொரு புரிதலோடு.. வாழ்வினை நேசிக்கும் பூஜா- சாஜூம் வாழ்வினை.. ஒருவரின் வாழ்வை மற்றொருவர் அழகாக்கிடும் வனப்பினை, போராட்டம் மிக்க நேரத்தில் பூஜாவின் வழிகாட்டல்களை அப்படியே ஏற்று வழிநடத்தும் சாஜூம்.. தங்களின் இரு வீட்டாரும் புறக்கணித்த காதல் வாழ்வினை எப்படி ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பதை தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் இவ்விருவரின்
வழியாக பதிவாக்கி இருப்பார் ஆசிரியர்.
        வாழ்வினை மாற்றிடும் பல் வேறு நல்ல முடிவுக்குப் பின்பாகா பூஜாவின் ஆளுமையை முழுவதுமாக உணர்ந்தவனகா சாஜூம். அழகாகத் தெரிகிறான் தேவையின்.. எதிர்ப்பின் அடையாளமாக தன் வேலையை ராஜினாமா செய்திடும் போதினில்  பூஜாவும்தான் அழகு பெண்ணாக தன் செயல்களால். நிர்வாகம் பணித்திடும் அனைத்து வேலைகளையும் செய்தும் தனது நியாயம் பொதிந்த வேண்டுகோள் நிராகரிக்கப் பட்டபோது; அழகிய தேவதையாக வலம் வந்த பார்கவி மன நிலைபிறழ்ந்தவளாக மாறிய சூழலில்கம்பெனியின் வேன் டிரைவர் ஒருவரால்
பிடரியில் அடிக்கப்பட்டு வேனுக்குள் ஏற்றிடும் சூழலின் வலியினை அப்படியே சொல்லி இருப்பார் நாவலாசிரியர். மனப்பிறழ்சியடைந்த பார்கவி தாக்கப்பட, அவளோடு பணிபுரிந்த அனைவரும் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்திடும் அவலத்தை, கார்ப்பரேட் நிர்வாகம் தனது ஊழியர்கள் அனைவரையும் கவிச்சை நாற்றம் வீசும் மனித தோல்களால் செய்யப்பட்ட சாட்டைக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கும் கொடூரத்தை காண்பித்து இருக்கிறார் ஆசிரியர்.
      தனது தகவல் தொழில் நுட்பக் கம்பெனிக்கு தேவையான அடிமைகளை, அவர்களை உற்பத்தி செய்திடும் கல்லூரிக்குள் சென்றே நேரிடையாக பிடித்து வந்த நிர்வாகம் தற்போது எத்தனை குயுக்தியோடு +2முடித்திட்ட மாணவர்களை நேரிடையாக வரவழைத்து  அவர்களை குறைந்த பட்ச ஊயத்திற்கு பணியில் அமர்த்தி அவர்களுக்கான பயிற்சி வழங்கி கூடவே ஏதேனும் ஒரு பல்கலைக் கழக்தில் அவர்களை பட்டப்படிப்பை முடிக்க நிர்பந்தம் செய்து குறந்த பட்ச ஊதியத்திலான புதிய இளம் அடிமைகளை வசியப்படுத்தி நிற்கிறது கார்ப்பரேட் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
       தகவல் தொழில் நுட்பத் துறை ஊழியர்களின் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளிலான கொண்டாட்ட நிகழ்வுகளைப் பற்றி மட்டுமே அறிந்த பொதுச் சமூகத்திற்கு, அந்தக் கொண்டாட்டங்கள் அனைத்திற்கும் பின்னால் இருக்கும் கார்ப்பரேட்களின் விஷம் தோய்ந்த கொடுக்ககளை அப்படியே கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர் தனது நட்சத்திரவாசிகளுக்குள்.
        ஒவ்வொரு ஊழியரும் இன்னொரு சக ஊழியருக்கு, எதிராக கம்பெனி நிர்வாகத்தால் திட்டமிட்டே கூர்திட்டப் பட்டு வருகிறார்கள், ஊழியர்களும் எப்படி இயல்பாகவே மாறிப் போய் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறார்கள் என்பதையும்; லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தாலும் லட்சம் பேரும் ஒருவரை அழித்து ஒருவர் உயிர்வாழ நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள், பணிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை, கார்பரேட்டுகளின் சூட்சுமத்தை நாவலுக்குள் தெளிவாகப் பதிவாக்கி இருப்பார். எத்தனை காலம் உழைத்தாலும் தனக்கு தேவை இல்லை என நினைக்கும்போது வெளியே அனுப்பிட கிஞ்சிற்றும் தயங்காததுதான் கார்ப்பரேட் லாபவெறி என்பதை வெளிநாட்டு டெய்சியும், இந்தியாவின் வேணும் நமக்குச் சொல்கிறார்கள் நாவலுக்குள்.
         ஒட்டு மொத்த நாவலின் போக்கையும்..இத்துறைச் சார்ந்த மனிதர்களின் உளவியலையும்  அலக்ஸா என்கிற பேசும் கடிகாரத்தோடு சாஜூம் நடத்திடும் உரையாடல் வழியாக மென்மையாக..நிஜமான, துயரம் பொதிந்த அர்த்தம் மிகுந்த சேதிகளை பகிர்ந்திருக்கிறார் நாவலாசிரியர் கார்த்திக் பாலசுப்பிரமணியன்.
         நட்சித்திரவாசிகளின் வலிகொண்ட சோகத்தை.. அவர்களின் பேசப்படாத வாழ்வியலை…உளவியலை நாவலுக்குள் பதிவாக்கி இருக்கும் கார்த்திக் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பேரன்பும். நாவலை வெளிக் கொணர்ந்திருக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கு நன்றியும்..அன்பும்.
       இப்பொது மீண்டும் வருவோம் நாவலுக்கு வெளியே.. தகவல் தொழில் நுட்பத் துறை ஊழியர்களை அமைப்பாக அணி திரட்டுவதில் தமிழ் தேசியம் பேசக் கூடியவர்களால் மட்டுமே நிகழ்த்த முடிகிறது என்பதை ஜல்லிக் கட்டுப் போராட்டத்திலும்.. தானாக திரண்ட அல்லது திரட்டப்பட்ட ஊழலுக்கு எதிரான ஹசாரேவின் போராட்டங்களிலும் நம்மால் பார்க்க முடிந்தது.. மாதமானால் பெரும் வருவாய் பார்க்கக் கூடிய ஊழியர்கள் அடங்கிய துறை இது. ஊழியர்களுக்கான சிறிய உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வளர்ந்து வரும் துறை இது. இதற்குள் இத்தனை காலமாகியும் நம்மால் உட்புக முடியாமல் திணறுவதற்கான காரணத்தை நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. தமிழ் தேசியம் பேசக் கூடியவர்களின் பின்னால் அணி திரளும் ஊழியர்கள் சமூக மாற்றத்திற்காக போராடிவரும் இடதுசாரிகளை ஏன் அவர்கள் தங்கள் தோழனாக பார்க்க மறுக்கிறார்கள். பிரச்சனையின் மூல வேரில் எந்தப் பக்கம் சிதைந்திருக்கிறது.. அதற்கான மருத்துவம் என்னவென நாம் யோசித்திடும் கட்டாயத்தில் நம்மை இருத்திக் கொள்ள வேண்டும்..
       அதேதான் உடலுழைப்பு தொழிலாளர்களாக  இருந்து வரும் பல லட்சக்கணக்கானவர்கள். இந்த இரு பெரும் சமூகமும்  கார்ப்பரேட் நிர்வாகத்தின் குரூர லாபவெறியினால் உருவாக்கப் பட்டிருக்கிறது.. என்ன செய்யப் போகிறோம் நாம்.. இந்த கேள்வியோடு விடை தேடுவோம் நட்சத்திரவாசிகளிடத்தில்.!
நட்சத்திரவாசிகள்
கார்த்திக் பாலசுப்பிரமணியன்
காலச்சுவடு
கருப்பு அன்பரசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *