காதலும் காமமும் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதே.. இரண்டையும் உணரும் காலம் தொடங்கி எந்த வயது வரை, காதல் காமத்தோடும்.. காமம் காதலுக்குள் புதைந்தும்.. தெரித்தும் வரும் என்பது குடும்ப உறவுகள், வீட்டின் அமைப்பு, உறவுகளின் புறச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்துமல்லாமல் வயதும் காமத்தை உள்வாங்கிய காதலாக வெளிப்படும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு. இதில் ஆணோ, பெண்ணோ வயதையும், குடும்ப உறவுகளையும் பொருட்படுத்தாமலோ அல்லது வேட்கையின் வழியாகவோ ஒருவர் மீது ஒருவர்  அதிகாரத்தை செலுத்த முற்படும்போது கணவன் மனைவி, குழந்தைகள் உறவில் மனச் சிதைவு ஏற்பட்டு தனிப்பிரிவுக்கு வழிவகுக்கிறது. இது, தாம் பயணப்பட்டு, பழக்கப்பட்டு வந்த பண்பாட்டு, கலாச்சார  சூழலுக்கேற்றவகையில் விருப்பப்பட்டோ, விரட்டியடிக்கப்பட்டோ.. விட்டோடியோ உறவுகளுக்குள் சிதைவினை நிகழ்த்திடும். இவைகள் எல்லாக் காலத்திற்கும்.. எல்லா மனித உயிர்களுக்கும் பொதுவானதே, வயது முதிர்வில் காதலை உள்ளடக்கிய காமம் குடும்ப உறவுகளை மறந்து வெளிப்படும் போது.
இக்குறு நாவலில்,  புலம் பெயர்ந்து கனடாவிற்கு தனியாளாக சென்று ஈழத்தில் இருக்கும் தன் மனைவி மங்களம், இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு மகன் உள்ளிட்ட குடும்பத்தினரின் தேவைகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் சிவப்பிரகாசம் என்கிற; வேலைபார்க்கும் இடத்தின் பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை பொறுத்திக்கொள்ளும்  மனமில்லாத, துணையிருந்தும் தனிமை எனும் ஏக்கத்தில் சிக்கித் தவிக்கும் நடுத்தர வயதுடைய மனிதருக்குள், அவரின் குடும்ப உறவுகளுக்குள் நிகழ்ந்த  அக, புற மாற்றங்களை மையப்படுத்தி இலங்கத் தமிழின் பேச்சு மொழியிலும், உரை நடைத் தமிழிலும் பதிவாக்கி இருக்கிறார் நாவலாசிரியர் தேவகாந்தன். 104 பக்கமிருக்கும் “நதியின் மேல் தனித்தலையும் சிறுபுள்” குறு நாவலை நல்லதொரு முறையில் வடிவமைத்து கொடுத்திருக்கிறார்கள் நற்றிணை பதிப்பகத்தார்.
நதிமேல் தனித்தலையும் சிறுபுள் nadhimal ...
இலங்கையில், தம் குடியிருப்பின் அருகில் இருக்கும் கோவிலுக்கும், திருமண விசேஷங்களுக்கும் கூட தனித்துச் செல்ல யோசிக்கும் தன் மனைவி மங்களம், பெரும்   நடைமுறைப் போராட்டத்திற்கு பிறகு குடும்பத்தோடு கனடாவில் தனிமையில் இருக்கும் தன்னிடம் அழைத்து வந்தபிறகு சொந்த வீடு வாங்கி தன் நினைப்புகளை மட்டும் முன்னிலைப்படுத்தி மங்களத்தோடு யோசிக்கும் வேளையில், பிள்ளைகளின் நலனை முன்னிருத்தி மங்களத்தின் எதிர்வினை,  குடும்பத் தேவைகளையொட்டி மங்களமும் சுயமுடிவெடுத்து வெளியில் வேலைக்கு செல்லுதல், இதனிடையே சிவப்பிரகாசத்தின் தங்கை மகனை கனடா அழைத்துவர ஊருக்கு பணம் அனுப்புவதில் இருவருக்குமான மனவருத்தத்தில் மங்களத்தை சிவப்பிரகாசம் அடித்திட, மூத்தமகள் காவல் நிலையத்தில் புகாரளித்து சிவப்பிரகாசம் கைது செய்யப்படுகிறார்.. காவல் துறை பேச்சுவார்த்தையில் சிவப்பிரகாசம் வீட்டிற்கு வரக்கூடாது என்கிற நிபந்தனையை காவல் துறை முடிவாக்க, ஒரே இரவில் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார் சிவப்பிரகாசம்.
தன்னுடைய குடும்பமே தன்னை வெளியேற்றி விட்டது என நினைப்போடு குடும்பம் இருந்தும் தனியாளாக்கப் படுகிறார். குடும்பத்தின் உறவுகள் அனைத்தையும் வெட்டிவிட்டு செந்நதியோரம் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு குடியேறுகிறார். கொஞ்ச காலத்தில் அதே பகுதியில் சொந்தமாக தனி வீடு வாங்கிக் குடியேறுகிறார். தம்வாழ்க்கை முழுவதுமாக தனது குடும்பத்தினரால் களவாடப்பட்டதாகவே யோசிக்கிறார். புத்தகங்களை வாசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும்பொழுதில் சிவப்பிரகாசத்திற்கு, ஆர்மீனியாவில் தன்னுடையை மகளை தன் அக்காவீட்டில் விட்டுவிட்டு, புலம்பெயர்ந்து தனியாளாக வாழும் கிநாரியின் நட்பு கிடைக்கிறது.
நாட்கள் விரைந்து நகர தனிமை சிவப்பிரகாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக வறுத்தெடுக்க தினசரி ஒன்றில் வந்த விளம்பரத்தை பார்த்து,  தனதின் தொடர் வாழ்க்கைப்பயணத்திற்கு, ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து,  17வயது மகனை உடன் வளர்த்திடும் வின்ஸியை தேர்வு செய்து இணைத்துக் கொள்கிறார். தனது நட்பான கிநாரிக்குகூட சேதி சொல்லாமல் இரவோடு இரவாக வின்ஸியின் வீட்டில் தன்னை முழுவதுமாக கொடுத்துவிடுகிறார். கனடா நாட்டு மக்களின் பழக்கவழக்கங்களோடு தங்களை ஒப்புவித்துக் கொண்டுள்ள வின்ஸியோடு வாழும் அவரால், வின்ஸி  மகனோடு இயந்து வாழ முடியாமல் அங்கும் கைகலப்பு நடக்க, உடனடியாக அங்கிருந்து வெளியேறி தனியாளாக  மீண்டும் தன் பழைய குடியிருப்பிற்கே வருகிறார். அங்கு மீண்டும் அவரின் நண்பி கிநாரி..  அவரோடு தன்னை இணைத்து வாழ யோசிக்கும் சிவப்பிரகாசத்தின் எண்ண ஓட்டத்தை கிநாரியும் அறிகிறார்.
கிநாரிக்கும் அவரின் மகளை ஆர்மீனியாவில் இருந்து கனடா அழைத்து வந்து உடன் வைத்து வளர்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.. இதை சிவப்பிரகாசம் விரும்பவில்லை தன்னை மட்டுமே இணைத்துக் கொள்ள விருப்பப்படுகிறார் என்பதை உணர்கிறார்.  தனக்கும், தன் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தாலும் ஒரு மனிதனால் எப்படி தன் குழந்தைகளைப் பார்க்காமல், பேசாமல் இருக்க முடியும்.. அப்படி இருக்கும் சிவப்பிரகாசம் இப்போது தன் மகள் தன்னோடு வந்து வாழவிருப்பதை எப்படி எதிர் கொள்வார் என யோசித்து அவரின் மன ஓட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்.
குடியிருப்பின் அருகிலோடும் செந்நதியின் கரையோரத்தில் குடியிருந்த முன்னோர்களின் அழிவின் அடையாளமாக தனித்துப் பறந்தலையும் புள்களுக்குள் ஒன்றாக சிவப்பிரகாசம்.
ஒரு குறு நாவலுக்குள் ஆர்மீனியாவின் அராஸ் நதி, அது திபெத்தை சென்றடையும் போது திபெத் நதி, குறித்து அழகாக சொல்லி இருப்பார் ஓரிரு பத்திகளுக்குள். கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தையும், மொன்றில் மாநிலத்தின் அழகினையும் தனக்கே உரிய, வடிவான இலங்கைத் தமிழில் மனசு சொக்கிடும் அளவிற்கு எழுதி இருப்பார் நாவலாசிரியர். அதிலும் இராப்பொழுதில் செந்நதியின் யவ்வணத்தையும்.. பணிபொழிவையும் எழுதிடும் நாவலின் பக்கங்களில்
சிவப்பிரகாசத்தோடும், கிநாரியோடும் நாமும் பேசிக்கொண்டே போவோம். நெஞ்சத்திற்கு இதமானதாக இருக்கும் அவர் காட்சிப்படுத்தி இருக்கும் அத்தனையும் நதிக்கரையோரத்தில்.
DISPASSIONATED DJ: தேவகாந்தனின் 'நதிமேல் ...
நாவலில் வந்திடும் பெண்கள் அனைவரும் குடும்ப உறவுகளை பாதுகாப்பவர்களாக..
அன்பு கொண்டவர்களாக…எதிர்ப்புகளை நேர்கொள்பவர்காளாக.. சூழல் அறிந்து பேசுபவர்களாக.. தாங்கள் பழக்க வழக்கங்களில் இருந்து புது  மாற்றத்திற்காக  தயாரானவர்களாக, தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்பவர்களாக படைத்திருப்பார். இதற்கு நேர் எதிராக சிவப்பிரகாசத்தின் பாத்திரம் படைக்கப் பட்டிருக்கும். காமத்தின் திசை நோக்கியே சென்றவரின் வாழ்வு எத்தகைய சிதைவுக்குள்ளானது என்பதை.
“வாழ்வு எந்தச் சிந்தனையில் ஆதாரம் கொண்டிருக்கிறது என்பதிலிருந்து மனிதர்களின் ஒழுகலாறும் வாழ்முறைகளும் பிறக்கின்றன” என்பதை நாவலுக்குள் இலங்கையின் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்த மங்களம், வின்ஸி, சிவப்பிரகாசத்தின் வழியாகவும்.. முற்றிலுமாக வேறொரு கலாச்சார பழக்கவழக்கங்களுடைய ஆர்மினியாவில் இருந்து வந்த கிநாரி வழியாகவும்
அவர்களின் மன நெகிழ்வுகளை, மகிழ்ச்சிகளை, துயரங்களை, மனச் சிதைவுகளை, சிக்கல்களை பதிவாக்கி இருக்கிறார் நாவலாசிரியர் தேவகாந்தன்.
“நதிமேல் தனித்தலையும் சிறுபுள்” நாவலை வாசித்திடுங்கள்…புதிய அனுபவத்திற்குள் நீங்களும் போய் வரலாம்.
கொரோனா நாட்களின் இலக்கியப் ...
நதிமேல் தனித்தலையும் சிறுபுள்
குறு நாவல்
தேவகாந்தன்
நற்றிணை பதிப்பகம்
கருப்பு அன்பரசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *