சிறுகதை: நாதியற்றவள் – சு. பாண்டிச்செல்வி

Nathiyatraval Shortstory by Su. Pandiselvi. This Story About Women Centric. Book day website is Branch of Bharathi Puthakalayamநடுச்சாமம் ஆகியும் இன்னும் வீடுவந்து சேரல புருஷன்காரன், நிறமாச கர்ப்பிணி சிவனம்மா ஒரு வித பயத்துடன் வீட்டிலிருந்து வெளியே வந்தவள் தெருவில் திரும்புகிற முனையில் சாத்திக் கிடந்த பெட்டிக் கடை ஓரமா நின்னு வெறிச்சோடிக் கிடந்த தெருவை பார்த்திக்கிட்டு இருந்தவள கடையின் ஓரத்தில் தேங்கி கிடந்த சாக்கடையிலிருந்து கொசுக்கள் ஆய்ந்தன. அவளின் தெருவில் சுத்தும் நாயொன்று சிவனம்மாவை பார்த்துவிட்டு வாலாட்டிக் கொண்டு அவள் அருகாமையில் நின்றது. ஒருநாள் அவள் வைத்த மீதி சோற்றை சாப்பிட்ட பாவத்துக்கு! நின்றுகொண்டிருந்த நாய் அப்படியே அவளது காலருகில் படுத்துக்கொண்டதில் அவளுக்கு சிறு ஆறுதலாக இருந்தது.

அவள் நிற்கின்ற கடையின் எதிர்த் தெருவில் இன்னொரு நாயின் ஊளையிடும் சத்தம் கேட்டமாத்திரத்தில் இவளருகில் இருந்த நாய் சரட்டெனெ அந்த திசைப்பக்கம் குரைத்துக்கொண்டே ஓடத்தொடங்கியது. ஏற்கனவே புருஷன் வராத கவலையில் பயத்தோடு இருந்தவள் மேலும் பதட்டமானாள். மார்கழி பனியிலும் வெக்கை சூழ்ந்தது சோளக்காட்டு பொம்மைக்குச் சேலை சுற்றியவளாய் இருந்தவளுக்கு.

ஒரு மாதிரி திட்டுமுட்டு அடித்து கொண்டு செய்வதறியாது தன் வாயல் புடவையின் முந்தானையால் முகத்தை ஒத்திக்கொண்டவள் மெல்லமாக சாக்கடையைத் தாண்டி வீட்டு வாசல் படியில் உட்கார்ந்தாள். தலைச்சங் குழந்தை என்பதால் அவளுக்கு வயிற்றுக்குள் குழந்தை முண்டுவது தெரியாமல் உடம்பு உலுங்குவது போல் உணர்ந்தாள், அவளால் குத்த வச்சும் உட்கார முடியவில்லை, சடக்கென்று எழுந்திருக்கவும் இயலவில்லை, வீட்டுக்குள்ளார போய் தனியாப் படுப்பதற்கும் ஒரு வித பீதியைக் கெளப்பி விட்டாள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வேலுத்தாயி.

காலையில தண்ணி எடுக்கும் போது பேச்சுவாக்குல, “செவனு இப்பதான் குடிவந்திருக்க… விவரம் தெரியாது ஒனக்கு‌. சின்னப்பொண்ணு வயித்துபுள்ளக்காரியா வேற இருக்கே. அக்கறையிலதான் சொல்றேன் . உச்சிப்பொழுதில, சாம ஏமத்துல கக்கூஸ் போறேன், தண்ணி எடுக்க வாரேன்னு சந்துப் பக்கம் வந்துராதே” என்று சொல்லிவிட்டாள்.

“ஏங்க்கா இப்படி சொல்ற என்னவாம்?” என்று பதட்டத்துடன் செவனு கேட்க,

“அட பெரியவுக சொன்னா சரினு கேட்டுக்கோ. அடுப்படி சன்னலகூட திறந்திறாதே ஆமாம் சொல்லிப்புட்டேன்”.

இவளால் மீறி எதுவும் கேட்க முடியாமல் தண்ணீ குடத்தை தூக்கி கொண்டு அடுப்படி திட்டில் வைத்தவளுக்கு சன்னல் வழியாகப் பேச்சு சத்தம் கேட்டதை கவனித்தால் பரமு, ‘ஏன் வேலு, புள்ளத்தாச்சிய பயமுடுத்திறனு’ கேட்டவளிடம்,

“சந்துல முனி பாய்ச்சல் இருக்குனு ஒனக்கு தெரியும்தானே ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிருச்சுனா, கவனமா இருக்கத்தான் சொன்னேன். இதிலென்ன பயமுறுத்த வேண்டிக் கிடக்கு . க்கும் நல்லது சொன்னா கூட பொல்லாப்பு வந்து சேருது”

என்று விருட்டென சருவத்தை தூக்கிச் சென்றாள்.

அதிலிருந்து அந்த நெனப்பு வேறு மனசுல ஒரு பக்குட்டு ஓடிக்கிட்டு கிடக்கு . சன்னலும் திறந்துகெடக்கு .., அதனாலேயே இன்னைக்கு வெளியிலேயே உட்கார்ந்துக் கிட்டு புருஷன எதிர்பார்த்து இருக்கா செவனு.

எப்பவுமே தண்ணியடிச்சுட்டு இரவைக்கு பதினொரு, பன்னென்டு மணி விடிய காலையில கூட வீட்டுக்கு வருவான். வர்றவன் வந்து கம்முனு படுக்க மாட்டேன்னு இவளோட மல்லுக்கட்டுவான். புள்ளத்தாச்சினு பார்க்க மாட்டான். அதானலே இவன் எப்ப வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி பெரிசா ஒண்ணும் கண்டுக்கமாட்டா.
இவனை கலியாணம் பண்ணி இந்த ஒரு வருடத்தில் இதோடு அஞ்சு வீடு மாத்தியாச்சு. அந்த அளவுக்கு தண்ணியடிச்சுட்டு கண்ணு மண்ணு தெரியாமா கேவலமா நடக்கறது. இதுக்கு மொத இருந்த வீட்டில் வீட்டுக்காரம்மா மகளை கைபிடிச்சு இழுத்து ஒரே சண்டை. கேட்டதற்கு எம்பொண்டாட்டினு நினைச்சேன்னு அளந்து விட்டான். அசிங்கமும் அவமானமும் இவனால. இவனுக்கு சப்போர்ட் பண்ண அந்த சாக்னா கடைக்காரி என் அம்மாவோட சக்களத்தி வந்துட்டா. பஞ்சாயத்து வைக்க வந்தவகிட்ட வீட்டுக்காரம்மா நல்லா நாலு கேள்வி நறுக்குனு கேட்டுச்சு. ஏம்மா குடிச்சா எதுவும் செய்வானோ, எங்க தட்டுல பீய அள்ளி வைக்கிறேன், உன் தொம்பிகாரன திங்கச் சொல்லு பார்ப்போம். வந்துட்டா பெரிசா பேச கொடுத்த அட்வான்ஸ் வாங்கிட்டு வீட்டை மருவாதயா நாளைக்கே காலி பண்ணுன்னு கட்டன் ரைட்டா சொல்லிருச்சு வீட்டுக்காரம்மா.

“ஒடனே காலிபண்ணச் சொன்னா எங்க போறதுமா?” என செவனு கேட்க, “உம் மூஞ்சிக்காக இரண்டொருநாள் சேர்த்துத் தாரேன்னு” மூக்க சிந்தியவாறு போயிருச்சு.

குடிச்சுப்புட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிற நாய்க்கு யார் வீடு தரப்போறா? புலம்பி கண்ணீர் சிந்திய செவனுவிடம், ‘யேன் தம்பிக்கு உன்னை கட்டிவச்சு உனக்கு வாழ்க்கை கொடுத்தவ நானு. ஒரு வீடு பார்க்க முடியாதா என்னமோ இவதான் ஊருக்குள்ள வீடு வச்சுருக்க மாதிரி பெரிசா ஆட்டிட்டுப் போறா’ன்னு வீராப்பா பேசி இப்படி கருமாந்திரம் புடிச்ச சந்து பொந்துக்குள் கொண்டு வந்து ஒக்கார வச்சுட்டா எமபாதகி.

செவனம்மா என்ன ஆசைப்பட்டா கல்யாணம் முடிச்சா, இந்த அழகு சம்பாத்தியகார புருஷன! என்னமோ அவ நேரம் எல்லாமே போதையில் நடந்து முடிந்தது.
அம்மா இல்லாத செவனு. அப்பா ஒரு மொடாக் குடியன். அப்பாவின் குடியால்தான் அம்மா செத்தே போனாள். அதைக் கண் கூடா பார்த்தவள் செவனு.
செவனு அம்மா ஈருக்குச்சியாட்டம் இருப்பா. அவதான் நாலு வீட்டல வேலைசெய்து பிள்ளைகள வளர்க்கிறா. அன்று காலையில் அஞ்சு மணிக்கே செவனுவை எழுப்பி, ‘வேலை செய்யும் வீட்டில் பந்தகாலு ஊன்றாங்க. நான் போயிட்டு நீ பள்ளியொடம் போறதுக்குள்ள கேசரி பொங்கல் கொண்டுக்கு வாரேன். வாசல் தெளிச்சுட்டேன். செத்த கோலத்தமட்டும் போட்டுறும்மானு’ சொல்லிட்டு கிளம்பிட்டாள்.

அப்பா எழுந்திரிச்சு ஒழுங்கா கைலியை கூட கட்டாம, ‘எங்க ஒங்க ஆத்தா, டீ வாங்க போயிருக்காளா’ என்றார். ‘இல்லப்பா அம்மா வேல செய்யிற வீட்ல ஏதோ விஷேமா அங்க போயிருக்கு’ என்றாள் செவனு.

“காலங்காத்தால என்ன வெட்டிமுறிக்கப்போறா, டீயும் ,பீடியும் வாங்கிக்கொடுத்துட்டு போய் தொலைக்க வேண்டியது தானே?” என்று கத்திக் கொண்டே பத்து ரூபா குடுனு செவனுவிடம் கேட்க, அவ இல்லையினு சொல்ல, மகனிடம் கேட்டார். அவன், ‘எனக்கு சட்டை தேய்க்க காசு கேட்டேன் அம்மா காசு குடுக்காமா போயிருச்சு நீங்க இருந்தா கொடுங்க’னு கேட்க ச்சையினு சட்டையும் போடாமா துண்டை தோலில் போட்டுகொண்டு வெளியே போனவர்தான்.

திரும்ப எட்டு மணியிருக்கும். ‘ஒங்க ஆத்தா வந்துட்டாளா’ என்று கேட்டுகிட்டே உள்ளே வந்தார். ‘இன்னும் வரலப்பா, அம்மா நான் பள்ளிகொடம் போறதுக்குள்ள டிபனு கொண்டு வர்றேன்னுச்சு இன்னும் காணாம் அம்மா வந்தா சொல்லுங்க நான் மத்தியானம் வந்து சாப்பிட்டுக்கிறேனு’ அப்பனப் பார்த்தவ ‘என்னப்பா உங்க கை நடுங்குதுனு’ கேட்க, ‘அது ஒண்ணுமில்ல ஒங்க ஆத்தா கிட்ட காசு வாங்கத் தான் போ,போ’வென விரட்டினார் அப்பா.

அன்று காலையில் பதினொரு மணியிருக்கும் பள்ளிக்கூடத்திலேலேயே வயசுக்கு வந்துட்ட செவனு கூட இரண்டு புள்ளகள துணைக்கு அனுப்பி வீட்டில் விடச் சொன்னாங்க டீச்சரம்மா.

கூட வந்தவர்களில் ஒரு அக்கா பத்தாம் வகுப்பு படிக்கிறாங்க. இன்னொருத்தி செவனு வகுப்பு தோழி, அவள் சொன்னாள், ‘அக்கா செவனு முகத்தைப் பார்த்தீங்களா எவ்வளவு பளபளனு இருக்கு. கன்னத்துல பருவு வெடிச்சிருக்கு. நான் நேத்தே கவனிச்சேன்க்கா’.

கூட வந்த அந்த அக்காவும், ‘இனிமேல் மாதம் மாதம் வரும் தேதிய ஞாபகம் வச்சுக்க அம்மா சொல்றாங்கனு துணியெல்லாம் யூஸ் பண்ணாதே பேடு தான் பயன்படுத்தணும்’ என்றாள். ‘போங்கக்கா இதெல்லாம் போய் எப்படி பேசுறதாம்?’ என வெட்கி சிரித்தாள் செவனு.

அந்த சிரிப்பில் அவளின் மொகம் ஜொலித்தது ! அதுவே அவள் சிரித்த கடைசி சிரிப்பு ! ‘யேய் என்ன சிரிக்கிற நானே அம்மாகிட்ட சொல்றேன்’ என்பதற்குள் வீடு வந்துருச்சு.

வீட்டுக்குள் அப்பாவும், அம்மாவும் பயங்கர சண்டை போடறதைப் பார்த்து தயங்கி வெளியிலே நின்னுக்கொண்டிருந்தனர். அம்மாவின் தாலிக் கயிறைப் பிடித்து இழுக்க நிலை தடுமாறி விழுந்தவள் இவர்களைக் கண்டு சுதாரித்து கொண்டு, ‘வாங்க கண்ணுகளா’ என்று தலையை அள்ளி முடிந்தவாறு உள்ளே கூப்பிட்டாள். அதற்குள் அப்பா “எங்கடி தாலியக் காணாம், வெறும் கயிறு தான் கிடக்கு” என்று திட்டிக்கொண்டே ஓங்கி அடிக்க வந்தார்.

அவரின் கோபத்தை பார்த்து பயந்து போய் கூட வந்த இருவரும் ஓடிவிட்டனர்….கூனிக் கூசி நின்றாள் செவனு. எதையும் கண்டுகொள்ளாத அப்பா அம்மாவிடம் சண்டைபோடுவதிலே குறியாய் இருந்தார். ‘தாலி எங்கேனு கேக்குறேன் பதில் சொல்லுலா’

“இந்தாயா ஒனக்கு குடிக்க காசு வேணும். அதான் இந்த பாடுபடுத்திற” என்று முந்தியின் முடிச்சை அவுத்து, நான்கா மடிச்ச நூறு ரூபா தாள விட்டெறிஞ்சு,’போயி தொல’ என்று கடுப்பாக சொன்னாள். ‘என்னலா ஓவரா சீன் போடுற, நான் கட்டுண தாலிய கேட்டா நூறு ஓவாய கொடுத்து வெளியேத்தப் பாக்குற, எவனுக்கு வித்து கொடுத்த? தெனம் வீட்டு வேலைக்கு போறேன்னு எங்க போய் மேஞ்சுட்டு வர்ற” என்று இரைந்தார்.

“இந்த பாருய்ய, ஒனக்கு அவ்வளவுதான் மரியாத, சொல்லிபுட்டேன். பெத்த புள்ள முன்னாடி என்ன பேச்சு பேசுற? கஞ்சி ஊத்த துப்பில்ல, வீட்டு செலவுக்கு காலணா கொடுக்க வக்கில்ல, இதுல தாலி வேணுமாம்ல தாலி. இந்தா நீ கட்டின தாலி” என கயிறை கழட்டி மூஞ்சியில் எறிந்தாள்.
அப்பனுக்கு வேக்காளம் கூடி அம்மாவின் தலைமுடியை கையால் ஒரு சுழட்டு சுழட்டி செவுத்துல மோத வைத்தார்.

இதைப் பார்த்த செவனு ‘அய்யோ, அய்யோ’வென கத்தி, விடுங்கப்பா என்று விலக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள். அம்மாவிற்கு இரத்தம் பொத பொதவென்று கொட்டியது … இவளுக்கு கால்வழியா உதிரம் வடிந்தது…

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் யாராலும் தடுக்க முடியவில்லை. குடிகாரங்கிட்ட எந்த நாயத்தைப் பேசறது. பேசுறவங்களும் அசிங்கப் படணும். வேடிக்கை பார்த்தவர்களில் ஒரு சிலர் அம்மாவை ஆசுபத்திரியில் சேர்க்க ஒதவி செய்தார்கள் .. ஏற்கனவே ஈருகுச்சியாட்டம் இருந்தவ படுத்த படுக்கையாகிவிட்டாள்.

பள்ளிக்கூடத்திலிருந்து பாதியிலே வந்ததை கேசரியும் பொங்கலும் திங்க வந்ததாக நினைத்துக் கொண்டாளோ என்னவோ அம்மா அதைப்பற்றி கேட்கக் கூட சொரணையின்றி கிடந்தாள். அவளும் அம்மாவிடம் வயசுக்கு வந்ததை சொல்ல முடியாமலே போனது. ஒரு வாரம் கூட அம்மா தாக்கு பிடிக்கல. ஆசுபத்திரிலே உயிர்போனது. !

அம்மாவின் இறப்பு அப்பாவிற்கு கொண்டாட்டம். உங்க அம்மா நிம்மதியா போய் சேர்ந்துட்டா கவலையவிடுங்க நான் பாத்துக்கிறேனு சொன்னவர் குடிச்சுட்டு மல்லாந்துட்டார். கொஞ்சம் நாள் அமைதியா இருந்தவர் திடீரென சாக்னாக் கடையில் சிக்கன் வறுத்துக் கொடுத்தவள, வீட்டுக்கு கூட்டி வந்துட்டார்.
அண்ணனுக்கு பிடிக்காம அப்பாவை எதுத்து கேட்டான். ‘எனக்கு வயசான காலத்துல தொணைக்கு நல்லது கெட்டதுக்கு ஆள் வேணாமா இஷ்டம்னா இரு இல்லாவிட்டால் போ’ என்றவுடன் வீட்டைவிட்டு போனவன் தான். கூடப் பொறந்த பொறப்பு இருப்பதக்கூட நினைக்கல. அப்பன் செய்யற அட்டுழியத்தை கண்டும் காணாமா கம்மாயில் மீன் அழுவது போல இவள் அழுது அழுது மனம் நொந்து பதினேழு வயசுலேயே காஞ்சுபோன கருவாடாட்டம் ஆகிட்டா.

சாக்னாக்கடைக்காரியின் தம்பினு சொல்லிகிட்டு ஒரு வினைகாரன் வீட்டுக்கு வருவான். அப்பப்ப அப்பாவோடு சேர்ந்து தண்ணியடிப்பான். ஒரு நாளு இந்த மனுசன் எம் பொட்ட புள்ளய எப்படி கரைசேர்க்க போறேனு பொலம்ப, ஒடனே இந்த மாப்பிள்ளை நான் இருக்கேன் மாமானு ஃபுல் பாட்டிலோடு சம்பந்தம் பேசி செவனுக்கு சம்பவம் நடத்தினார்கள் இருவரும் போதையில்.

அம்மா இருந்திருந்தால் எனக்கு இப்படியொரு நெலம வந்திருக்குமா ?

தாயற்ற அன்றே சீர் அத்து போச்சு. அவளையறியாமல் விழிகளில் பொலபொலவென கண்ணீர் கொட்டுது . கழிவிரக்கம் அவளைத் தொற்றிக் கொள்ள தேம்புகிறாள் செவனம்மா. அவளின் கண்ணீர் உஷ்ணத்தில் பனி கரைந்தோடுது.

அடிவயிற்றைப் புரட்டி ஒரு வலி ஏற்படுவது அவளுக்கு மெல்லமா நிலையை பிடித்து எழ முயலுகிறாள். அந்த தெருவுல தலைப்பா கட்டிக்கிட்டு பீடி இழுத்தவாறு ஓங்குதாங்கா சரட்.சரட்னு ஒரு ஆளு நடந்துவரும் நிழலைப் பார்த்தவள் கண்களை இறுக மூடிகொண்டவள் ஒரு விநாடி மூர்ச்சையாகிப்போனாள் செவனு .
வந்த ஆளு இவள பார்த்துட்டு, ‘என்ன புள்ள இன்னேரம் இப்படி நிக்கறவ’ என்ற குரலைக் கேட்டவுடன் மீண்டும் உசுரு திரும்புச்சு.
“பால்கார கணேசன் அய்யாவா?” பெருமூச்சுடன், “மணி எத்தனை?” என கேட்கிறாள்.

அவளின் பேச்சுத் தடுமாற்றத்தை உணர்ந்தவர், ‘அந்தத் தறுதல பய வீட்டில இல்லையா?’ எனக் கேட்டவாறு, ‘மூணாகப் போகுதுமா பிரசவலி கண்டுறுச்சா, ஆசுபத்திரிக்கு போலாமா’ எனக்கேட்க, ‘இல்லங்கய்யா விடியட்டும்’ எனச் சொல்லிக் கொண்டே வாசல் படியில் ஒரு காலை எடுத்து வைக்க முயற்சித்தாள்.
அவர்,”சரிம்மா, நான் போய் சரசுவ அனுப்பி வைக்கிறேன். இப்படி வயித்துபுள்ளக்காரிய விட்டுப்புட்டு எங்க தண்ணியடிச்சு விழுந்து கெடக்குறானோ ஏன் இந்த சாக்னாக்காரியாவது தொனைக்கு இருக்க கூடாதா ? எல்லாம் உன் தலையெழுத்து இவய்ங்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிற.. நீ வேணா பாரு சிங்கக்குட்டி பொறந்து இரண்டு பேரு மொகரட்டையில மூத்திரத்தை அடிக்கப் போகுது” என பேசிக்கொண்டே பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு போனார்.

அந்த நிமிஷம் நினைக்கிறா செவனு, ‘இது மட்டும் ஆம்பளபுள்ளயா பொறந்துச்சு அப்படியே கழுத்தைத் திருகிப் போட்ருவேன்’ என யோசிச்சுகிட்டே வீட்டுக்குள்ள போக இன்னொரு கால எடுத்து வைக்கு முன் சேலையெல்லாம் தொப்பலாகி படியெல்லாம் வாசல் தெளித்தது போல் ஆகின. இடுப்பைப் பிடித்து யாரோ பிடித்துத் திருகுவதுபோல வலியால் அலறினாள் செவனம்மா. பேசிக்கொண்டே போன கணேசன் பத்து எட்டு தான் வைத்திருப்பார். இவள் அலறலைக்கேட்டு ஓடி வருகிறார், பீடித் துண்டை கீழே போட்டவாறு.

காலையில பதினோரு மணியிருக்கும் பிரசவ வார்டு ஒரே கலகலனு இருந்துச்சு. ஒவ்வொரு பெட் அருகிலும் உள்ள தொட்டி பூந்தொட்டியாய் காட்சியளித்தது. அந்தந்தத் தொட்டில் அருகில் சொந்த பந்தங்கள் சீனித் தண்ணீய சேனை தொட்டு வைக்க மகிழ்ச்சி சிரிப்பில் திளைத்தது அந்த வார்டு.
அந்த வார்டில்தான் செவனம்மாவும் யாருமற்றவளாய்க் கிடந்தாள். மயக்கம் தெளிஞ்சிருச்சானு பார்க்க வந்த நர்ஸ், ‘இந்த பெட்டுக்கு யாருமா துணைக்கு இருப்பது?’ என சத்தமாகக் கேட்க அந்த சத்தத்தில் வார்டில் ஒரு நிமிடம் மெளனம் காத்து யாரும் இருக்கற மாதிரி தெரியலையேனு ஒருவருக்கொருவர் சொல்லி அவரவர் இயல்புக்கு சென்றனர்.

நர்ஸம்மா செவனுவை கன்னத்தில் ஒரு தட்டு தட்டி, ‘இந்தாம்மா கூட யாரும் இல்லையா?’ என்று பேசிக்கொண்டே அவள் இடுப்பில் ஊசியைப் போட்டுவிட்டு, ‘குழந்தைக்கு ஊசிபோடணும், யாரையாவது தூக்கிவரச் சொல்லு, ரொட்டி பாலுக்கு சீட்டு எழுதணும், சீனி தண்ணியெல்லாம் கொடுக்கக்கூடாது. குழந்தை இரண்டரைக் கிலோவிற்கும் கம்மிதான். தாய்பால்தான் கொடுக்கணும். கவனமா பார்த்துக்கணும்’ என சொன்னவளிடம், ‘என்ன குழந்தை’ என்று கேட்குமுன் சாக்னாக்காரி பெரும் கூச்சல் அழுகையுடன், ‘என்னா நேரத்தில் பொறந்துச்சோ, யே தம்பிய காவு வாங்கிருச்சே, அய்யயோ’ வெனத் தலையில் அடித்து கொண்டு அலறியவளை வார்டே வேடிக்கை பார்த்தது.

யாரு எந்தக் குழந்தையினு ஒருவருக்கொருவர் சலசலப்பு கூட நர்ஸம்மா சத்தம்போட்டு ‘யாரு இந்த அம்மாவ உள்ளே விட்ட’தென வெளியே விரட்டினார்.
‘தண்ணியடிச்சுட்டு ரோட்டில் நடந்து வரும்போது பாலம் திரும்புகிற இடத்தில் லாரிக்காரன் அடிச்சுப்போட்டு போயிட்டானாம். போஸ்ட்மார்ட்டம் ரூம்ல கிடக்கறானாம்ல இவ புருஷன்’ என பக்கத்தில் பேசிகொண்டது செவனு காதில் விழுந்தது. அவள் இரண்டு கண்களிலும் குறுக்குவாக்கில் கண்ணீர் வழிந்தோடியது !
ஆனாலும், அடுத்த நொடி அவளறியாமல் இடது கை அந்தக் கண்ணீரைத் துடைத்து விட்டது. பல்லைக் கடித்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

*********

சு. பாண்டிச்செல்வி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.