அனைவருக்கும் வணக்கம், இந்த கோப்பில் இருப்பது மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 -வின் தமிழ் வடிவம். இது அதிகார்வப்பூர்வ மொழிபெயர்ப்பு அல்ல. அரசு இதனை அதிகார்வப்பூர்வமான மொழிமாற்றம் செய்து வெளியிடும். அது எப்போது வரும் என்று தெரியாததால் தேசிய கல்விக்கொள்கை பற்றிய உரையாடல்கள் ஏற்கனவே நடந்துகொண்டிருப்பதாலும் கொள்கை தமிழில் இருந்தால் இன்னும் பரவலான உரையாடலுக்கு வித்திடும் என்பதாலும் இந்த இடைக்கால கோப்பு. நண்பர்கள் சுமார் 50 நபர்கள் ஒன்றிணைத்து ஒரு வார இறுதியில் முடித்த மொழிமாற்றம். எண்ணம் தோன்றிய 75 மணி நேரத்திற்குள் இதனை முடித்திருக்கின்றோம். நிச்சயம் மிகச்சரியான கலைச்சொற்களை பயன்படுத்தாமல் போயிருக்கலாம். வரி வரியாக இரண்டுக்கு மூன்று நபர்கள் திருத்தம் செய்தே இணையத்தில் வெளியிடுகின்றோம். வாணி பிழை திருத்திக்கும் நன்றி. இரவு பகல் பாராமல் மொழி பெயர்ப்பில் துணை நின்ற அத்துனை நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
வாசிப்போம். உரையாடுவோம்.
MHRD – Approved NEP 2020 in English
அனைவரின் சார்பாக,
விழியன்
ஆகஸ்ட் 03,2020
உள்ளடக்கம்
இயல் | தலைப்பு | பக்க எண் |
முன்னுரை | 4 | |
பகுதி I. பள்ளிக் கல்வி | ||
1 | ஆரம்பக்கால குழந்தைப்பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE) : கற்றலின் அடித்தளம் | 10 |
2 | அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும்: கற்றலுக்குத் தேவையான அவசர மற்றும் அவசியமான முன்நிபந்தனைகள் | 13 |
3 | இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல் மற்றும் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்தல் | 15 |
4 | பள்ளிகளில் உள்ள பாடத்திட்டமும் கற்பித்தலும்: முழுமை வாய்ந்த, ஒருங்கிணைந்த, சுவாரஸ்யமான மற்றும் ஈடுபாட்டைத் தூண்டும் கற்றலாக இருத்தல் | 17 |
5 | ஆசிரியர்கள் | 32 |
6 | சமமான, அனைவரையும் உள்ளடக்கிய கல்வி : அனைவருக்குமான கற்றல் | 39 |
7 | பள்ளி வளாகங்களின் / குழுக்களின் மூலம் திறமையான வளங்களைத் திரட்டுதல் மற்றும் செயலூக்கத்துடன் நிர்வகித்தல் | 45 |
8 | பள்ளிக் கல்விக்கான தரத்தை அமைத்தல் மற்றும் அங்கீகரித்தல். | 49 |
பகுதி – 2 உயர் கல்வி | ||
9 | தரமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்: இந்திய உயர் கல்வி அமைப்பிற்கான ஒரு புதிய மற்றும் முற்போக்கு பார்வை | 54 |
10 | உயர்கல்வி நிலையங்களின் மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு | 56 |
11 | மிகவும் முழுமை வாய்ந்த பல்துறை சார்ந்த கல்வியை நோக்கி | 59 |
12 | மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழல்களும் உறுதுணையும் | 63 |
13 | செயல் நோக்கமுள்ள, ஆற்றலுள்ள, திறனுள்ள ஆசிரியர் குழு | 66 |
14 | உயர் கல்வியில் சமத்துவமும் அனைவரையும் உள்ளடக்குதலும் | 68 |
15 | ஆசிரியர் கல்வி | 70 |
16 | தொழிற்கல்வியை மறுவடிவமைத்தல்
| 72 |
17 | அனைத்துத் துறைகளிலும் தரமான கல்விசார் ஆராய்ச்சியை ஊக்குவிக்க ஒரு புதிய தேசிய ஆராய்ச்சி நிறுவனம் | 74 |
18 | உயர்கல்விக்கான ஒழுங்குமுறை விதிகளை மாற்றி அமைத்தல்
| 77 |
19 | உயர்கல்வி நிறுவனங்களுக்கான திறமையான ஆளுகையும் தலைமைத்துவமும் | 80 |
பகுதி – 3 கூடுதல் முக்கிய கவனப் பகுதிகள் | ||
20 | தொழிற்கல்வி | 82 |
21 | வயதுவந்தோர் கல்வி மற்றும் வாழ்நாள் முழுமைக்குமான கற்றல் | 84 |
22 | இந்திய மொழிகளுக்கு, கலைகள் மற்றும் கலாச்சாரத்திற்கு ஊக்கமளித்தல் | 87 |
23 | தொழில்நுட்பத்தை பயன்படுத்துதலும் ஒருங்கிணைத்தலும் | 93 |
24 | இணைய மற்றும் டிஜிட்டல் கல்வி: தொழில்நுட்பத்தின் சமமான பயன்பாட்டினை உறுதி செய்தல். | 96 |
பகுதி 4. செயல்முறைப்படுத்தல் | ||
25 | மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுவை (CABE) வலுப்படுத்தல் | 100 |
26 | கல்விக்கான நிதியளிப்பு : அனைவருக்கும் மலிவான மற்றும் தரமான கல்வி | 100 |
27 | செயல்படுத்துதல் | 102 |
28 | பயன்படுத்தப்பட்ட சுருக்கங்களின் பட்டியல் | 104 |
முன்னுரை
நிறைவான மனித ஆற்றலை அடையவும், சமத்துவ பொதுச் சமுதாயத்தை மேம்படுத்தவும், நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கவும் கல்வியே அடிப்படையாகும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வது இந்தியாவின் தொடர் வளர்ச்சிக்கும், உலக அரங்கில் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சமத்துவம், அறிவியல் மேம்பாடு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார பாதுகாப்பு ஆகியவற்றில் தலைமை வகிக்கவும் இன்றியமையாததாகும். அனைவருக்கும் உயர்தரக் கல்வி என்பதே நமது நாட்டின் வளமான திறமைகள் மற்றும் வள ஆதாரம் ஆகியவற்றை மேம்படுத்தவும், மிகுதியாக்கவும் சிறந்த வழியாகும். இது தனிநபருக்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், உலகிற்கும் நன்மை பயக்கும். அடுத்த பத்தாண்டுகளில், உலகின் அதிக இளையோர் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். அவர்களுக்கு உயர்தரக் கல்வி வாய்ப்புகளை வழங்கும் நமது திறனே நமது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் – 2030ன் இலக்கு-4 (SDG4)ன்படி உலகளாவிய கல்வி மேம்பாட்டுச் செயல்திட்டத்தை இந்தியா 2015 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. அதன்படி 2030ஆம் ஆண்டிற்குள் ”அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ தரமான கல்வி வழங்குவது மற்றும் வாழ்நாள் முழுமைக்குமான கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துவது ஆகியவற்றை உறுதிசெய்தல்” என்பதனை பிரதிபலிக்கிறது. அத்தகைய உயர்ந்த குறிக்கோளை அடைய, கற்றலுக்குப் பக்கபலமாகவும், உறுதுணையாகவும், ஒட்டுமொத்தக் கல்வி முறையும் மறுசீரமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் நிலையான வளர்ச்சிக்கான செயல்திட்டம்–2030க்குத் தேவையான முக்கியமான இலக்குகளையும் குறிக்கோள்களையும் அடைய முடியும்.
அறிவுசார் தளங்களில், உலகம் மிக விரைவான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. பெருந்தரவு (big data), இயந்திரவழிக் கற்றல் (machine learning) மற்றும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) போன்ற பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சியின் காரணமாக உலகமெங்கும், தனித்திறன் தேவையில்லாத பல்வேறு பணிகள் இயந்திரங்களால் செய்யக்கூடியவையாக மாறிவிடும். அதே சமயம், தனித்திறன் தேவைப்படும் பணிகள் குறிப்பாக, அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் சார்ந்த துறைகளோடு கணிதம், கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் (data science) ஆகியவற்றின் பல்துறைக் கூட்டுத் திறன் கொண்ட பணியாட்களுக்கான தேவை மிக அதிக அளவில் ஏற்படும். பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் தூய்மைக் கேடு, குறையும் இயற்கை வளங்கள் ஆகியவற்றின் காரணமாக உலகுக்கான ஆற்றலை, நீரை, உணவை, துப்புரவுத் தேவைகளை நாம் எவ்வாறு நிர்வகிக்கப்போகிறோம் என்பதில் குறிப்பிடத்தக்கக் கேள்விகள் இருக்கின்றன. அதன் விளைவாகவும் உயிரியல், வேதியியல், இயற்பியல், விவசாயம், பருவநிலை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றில் புதிய தனித்திறன் பணிகளுக்கான வாய்ப்புகள் ஏற்படும். அதிகரித்து வரும் கொள்ளை நோய்களும், பெரும்பரவல் தொற்று நோய்களும் தொற்று நோய் மேலாண்மை மற்றும் தடுப்பூசிகள் கண்டுபிடித்தல் தொடர்பான கூட்டு ஆராய்ச்சிக்கானத் தேவையை ஏற்படுத்தியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் மூலமாக உள்ள சமூகப் பிரச்சனைகள், பல்துறைக் கற்றலுக்கான தேவையை அதிகரித்திருக்கின்றன. வளர்ச்சியடைந்த நாடு மற்றும் உலகின் மூன்று மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்று என்ற நிலையை நோக்கி இந்தியா நகர்வதால், மானுடவியல் மற்றும் கலை சார்ந்த துறைகளிலும் தேவைகள் அதிகரிக்கும்.
உண்மையில், விரைவாக மாறிவரும் தொழில் சூழல் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்களினால், குழந்தைகள் கற்பதோடு மட்டுமல்லாமல், எப்படிக் கற்பது என்பதையும் முடிவு செய்ய வேண்டிய சிக்கலான நிலை நீடிக்கிறது. எனவே கல்வியானது குறைவான உள்ளடக்கத்தையும், கற்றல் அதிகமாகவும் இருக்கும் வகையில், திறனாய்வு சார்ந்து சிந்தித்தல், புதிர்களுக்குத் தீர்வு காணுதல், ஆக்கப்பூர்வமாகப் பல்துறைத் திறனுடன் இருத்தல், நவீன மற்றும் மாறிவரும் தளங்களில் புதிய பொருள்திறனைக் கண்டுணர்தல், அதற்குத் தன்னைப் பொருத்திக்கொள்ளுதல், அதனைக் உள்வாங்கிக் கொள்ளுதல் ஆகியவை நோக்கி நகர வேண்டும். கற்பிக்கும் முறையானது, கல்வியை அதிகச் செயல்முறை தன்மை கொண்ட, முழுமையான, ஒருங்கிணைந்த, தகவல் அறிவை தூண்டிவிடக் கூடிய, வெளிப்பாடு நோக்கிய, கற்பவரை மையமாகக் கொண்ட, கலந்துரையாடல் சார்ந்த, இணக்கமுள்ள அதே சமயம் மகிழ்ச்சிகரமான ஒன்றாக விரிவுபடுத்தப்பட வேண்டும். பாடத்திட்டமானது அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவற்றோடு அடிப்படை கலை, கைத்திறம், மானுடவியல், விளையாட்டுகள், போட்டிகள் மற்றும் உடலுறுதி, மொழிகள், இலக்கியம், பண்பாடு மற்றும் பண்புகள் ஆகியவையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இது கற்பவரின் அனைத்துத் தன்மைகளையும் திறமைகளையும் மேம்படுத்துவதாகவும், இக்கல்வி முறை முழுமையானதாகவும், பயனுள்ளதாகவும், நிறைவானதாகவும் அமையும். கல்வியானது உயர்ந்த பண்புகளை உருவாக்குவதோடு, கற்பவரை நெறியுள்ளவராகவும், பகுத்தறிவாளராகவும், கருணையுள்ளவராகவும், அக்கறையுள்ளவராகவும் அதே சமயம் பலன்மிக்க, நிறைவான வேலைவாய்ப்புக்கு ஏற்றவராகவும் தயார்ப்படுத்துகிறது.
கற்றல் விளைவுகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத் தேவை ஆகியவற்றிற்கு நடுவிலுள்ள இடைவெளியைப் பெரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் நிரப்ப வேண்டும். அவை குழந்தைப் பருவ பராமரிப்பில் துவங்கி உயர்கல்வி வரையான வகைமுறைகளில் சிறந்த தரம், சமத்துவம், ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணுவதாக அமைய வேண்டும்.
2040ம் ஆண்டில் இந்தியாவின் கல்வி அமைப்பானது, எந்நாட்டுக்கும் குறைவற்றதாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். சமூக, பொருளாதாரப் பின்புலங்களின் பாகுபாடின்றி, கற்பவர் அனைவருக்குமான உயர்தரக் கல்வி பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும்.
இந்த தேசியக் கல்விக் கொள்கை 2020 ஆனது 21ம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையாகும். இது நம் நாட்டின் தவிர்க்கவியலாத பல வளர்ச்சி முறைகளை விரிவாக விளக்க முயல்கிறது. இக்கொள்கையானது, கல்வி அமைப்பின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய அனைத்து அம்சங்களையும் ஆராயவும், புதுப்பிக்கவும் பரிந்துரை செய்கிறது. அதோடு, இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பண்பு நலன்களின் மீது இக்கொள்கை கட்டமைக்கப்படுவதோடு, SDG4 உள்ளிட்ட 21ம் நூற்றாண்டுக் கல்வியின் விளைவு நோக்கங்களோடு ஒழுங்குபடுகின்ற புதிய அமைப்பையும் உருவாக்கப் பரிந்துரைக்கிறது. தேசியக் கல்விக் கொள்கை தனிநபரின் படைப்பூக்கத் திறனை மேம்படுத்துவதில் பிரத்தியேக முக்கியத்துவம் அளிக்கிறது. இக்கொள்கை, கல்வி என்பது ‘அடிப்படை செய்தகுதிகளான’ எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் ’உயர்நிலை செய்தகுதிகளான’ திறனாய்வு சார்ந்து சிந்தித்தல் மற்றும் புதிர்களுக்குத் தீர்வு காணுதல் ஆகிய புரிதல் திறன்களை மேம்படுத்துவது மட்டுமின்றி சமூக, தார்மீக மற்றும் உணர்வுப்பூர்வமான செய்திறன்களையும் மனநிலையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.
பழமையான, நிரந்தரமான இந்திய ஞானம் மற்றும் சிந்தனை ஆகியவற்றின் வளமான பாரம்பரியமே, இந்தக் கொள்கை உருவாவதற்கான வழிகாட்டும் விளக்காக இருக்கிறது. இந்தியச் சிந்தனை மற்றும் தத்துவத்தில் அறிவின் நாட்டம் (ஞான்), ஞானம் (ப்ரக்யா) மற்றும் உண்மை (சத்ய) ஆகியவையே எப்போதும் உயர்ந்த மனித நோக்கமாகக் கருதப்பட்டு வருகிறது. பண்டைய இந்தியாவில் கல்வியின் நோக்கமானது இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையான அறிவுக் கொள்முதலோ அல்லது பள்ளிக்கல்விக்குப் பிறகான வாழ்க்கைக்குத் தேவையான விஷயமோ மட்டுமல்ல, மாறாக முழுமையாகத் தன்னை உணர்தலும், சுய விடுதலையுமே ஆகும். பண்டைய இந்தியாவின் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிலையங்களான தக்ஷசீலா, நாளந்தா, விக்ரம்ஷிலா, வல்லபி போன்றவை பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு மிகச்சிறந்த படிநிலைகளைக் கட்டமைத்தன. அவை பலதரப்பட்ட பின்புலங்கள் மற்றும் தேசங்களைச் சார்ந்த கல்விமான்களையும் மாணவர்களையும் ஏற்றுக்கொண்டன. இந்தியக் கல்வி அமைப்பு மிகச் சிறந்த கற்றறிவாளர்களான சரகா, சுஸ்ருதா, ஆர்யபட்டா, வராகமிஹிரா, பாஸ்கராச்சார்யா, பிரம்மகுப்தா, சாணக்யா, சக்ரபாணி தத்தா, மாதவா, பாணினி, பதஞ்சலி, நாகார்ஜுனா, கௌதமா, பிங்கலா, சங்கர்தேவ், மைத்ரேயி, கார்கி, திருவள்ளுவர் மற்றும் எண்ணற்ற பலரை உருவாக்கி இருக்கிறது. அவர்கள் கணிதம், வானியல், உலோகவியல், மருத்துவ அறிவியல் மற்றும் அறுவை சிகிச்சை, கட்டடப் பொறியியல், கட்டிடக் கலை, கப்பல் கட்டுமானம் மற்றும் கடலோடல், யோகாசனம், நுண்கலை, சதுரங்கம் மற்றும் பலதரப்பட்ட துறைகளில் உலக ஞானத்துக்கான ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை ஆற்றினர். இந்தியப் பண்பாடும் தத்துவமும் உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. உலகப் பாரம்பரியத்திற்கு இந்தியா அளித்த இந்த வளமான மரபுகள் நமது புதிய கல்வித் திட்டத்தின் மூலம் வருங்காலச் சந்ததியினருக்காகப் பேணிப் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமின்றி, அவை ஆராயப்பட்டும், மேம்படுத்தப்பட்டும் புதிய பயன்பாட்டிற்கு வர வேண்டும்.
ஆசிரியரை முதன்மைப்படுத்தி கல்வித்திட்டத்தின் அடிப்படை மாற்றங்கள் அமையும். அடுத்த தலைமுறைக் குடிமக்களை உருவாக்கும் பணியில் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிப்பதால், புதிய கல்விக்கொள்கையானது ஆசிரியர்களை நமது சமூகத்தில் முன்னிறுத்தி அவர்களுக்கான மதிப்பை உயர்த்தி மறுஉருவாக்கம் செய்து சிறப்புறச் செய்யும். மேலும், ஆசிரியர்களின் பணி மேம்படுவதற்கான அனைத்துக் காரணிகளையும் உருவாக்கி அவர்களுக்குத் தேவையான அதிகாரத்தையும் வழங்கும். புதிய கல்விக்கொள்கையானது, ஆசிரியர்களின் வாழ்வாதாரம், நன்மதிப்பு, கண்ணியம், சுய முடிவு இவற்றுக்கான உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம் மிகச் சிறந்த, திறன் வாய்ந்த அறிவார்ந்த ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தும், அதே நேரத்தில் திட்டத்தின் அடிப்படைச் செயலாக்கங்கள், தரக்கட்டுப்பாடு, பொறுப்பேற்றல், இவற்றை வலியுறுத்தும்.
எங்கு வசிப்பவராக இருப்பினும், புதிய கல்விக்கொள்கை அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் தரமான கல்வித் திட்டத்தை வழங்கும், குறிப்பாக காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட, பிரதிநிதித்துவப் படுத்தப்படாத குழுக்களைக் கவனத்தில் கொள்ளும். கல்வி மட்டுமே பொருளாதார முன்னேற்றம், சமூகப் புழக்கம், பங்கேற்றல், சமத்துவம் இவற்றைப் பெறுவதற்கு உதவும் காரணி. அதனால், மேற்சொன்ன குழுக்களிலிருந்து வருகின்ற மாணவர்கள் அனைத்துத் தடைகளையும் கடந்து வாய்ப்புகளைப் பெற்று கல்வித் திட்டத்தில் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
உள்நாட்டுத் தேவைகளையும் அயல் நாட்டுத் தேவைகளையும் கருத்தில் கொண்டும், நாட்டின் பன்முகத் தன்மையையும் மாறுபட்ட கலாச்சாரங்களையும் கவனத்தில் கொண்டும் திட்டத்தின் கூறுகள் வடிவமைக்கப்படும். இந்தியாவின் மாறுபட்ட சமூக, கலாச்சார, தொழில்நுட்பத் தேவை, கலைத்திறன், மொழி, அறிவார்ந்த பாரம்பரியம், வளமான தார்மீக அடிப்படை ஆகிய அனைத்தும் இளையவர் மனதில் நாட்டின் பெருமிதத்தை வளர்க்கும் வண்ணமும், தன்னம்பிக்கையையும், தன்னறிவையும், ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்கும்படியாக அமையும்.
முந்தைய கொள்கைகள்
முந்தைய கொள்கைகளின் நடைமுறையாக்கம் பெருவாரியாகக் கல்வி அனைவரையும் சென்றடைவதையும் கற்பதற்குச் சமவாய்ப்புகளை உருவாக்குவதையும் கவனத்தில் கொண்டன. தேசியக் கல்விக் கொள்கை 1986, திருத்தம் 1992 (NPE 1986/92)ல் நிறைவேற்றப்படாத கூறுகள் இத்திட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த கொள்கை 1986/92ற்குப் பிறகு குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 நிறைவேற்றப்பட்டு, அது அனைவருக்கும் தொடக்க கல்வியை சட்டபூரவமாக்கிட அடித்தளம் அமைத்தது
கொள்கையின் அடிப்படை
இக்கல்விக்கொள்கையின் நோக்கங்களாவன, நன்கு சிந்திக்கும் திறனும் செயலாற்றும் திறனும் கொண்ட நல்ல மனிதர்களை உருவாக்குவதும், இரக்கச் சிந்தனையும் , கருணையும், தைரியமும், மீள் திறனும், அறிவியல் நோக்கும், கற்பனைத் திறனும், தார்மீகச் சிந்தனையும், உள்ளவர்களாக அவர்களை விளங்கச் செய்வதுமாகும். நமது நாட்டின் அரசியல் அமைப்பின் அடிப்படை நோக்கில் பன்முகச் சமூகத்தில் செயல்பட்டு, திறனுடன், சமநிலையான சமுதாயத்தை உருவாக்கும் குடிமக்களை வளர்த்தெடுப்பதும் அதன் குறிக்கோள்.
அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றதாகவும், அவர்களைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்வதும், பாதுகாப்பை உறுதி செய்வதும், கற்பதைத் தூண்டும் சூழல் கொண்டதும், பலவகைப்பட்ட கற்றல் அனுபவங்களைத் தருவதும், நல்ல உள்கட்டமைப்பைக் கொண்டதும், தரமான வளங்களைக் கொண்டதும்தான் நல்ல கல்வி நிறுவனமாகக் கொள்ளப்படும். இந்தத் தகுதிகளைக் கொள்வதே ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். அதனுடன், கல்வி நிறுவனங்களுக்கிடையே கற்றலின் அனைத்துப் படிநிலைகளிலும் ஒருங்கிணைப்பும், தொடர் உரையாடலும் இயல்பாக இருப்பது அவசியம்.
கீழ்க்காணும் அடிப்படைக் கொள்கைகள் பெருமளவில் கல்வித் திட்டத்தையும், அதனுடன் கல்வி நிறுவனங்களையும் வழி நடத்தும்:
- கல்வித்திட்டத்தின் அடிப்படையிலும் கல்வித்திட்டத்துக்கு வெளியிலும் ஒவ்வொரு மாணவரும் முழுமையான வளர்ச்சியை அடையப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் அர்ப்பணிப்பை வழங்கவேண்டும். அங்கீகரித்தல், அடையாளம் காணல், ஒவ்வொரு மாணவரின் தனித்திறனையும் கவனித்தல் ஆகியவற்றில் ஆசிரியர்களும் பெற்றோரும் இணைந்து செயல்படவேண்டும்.
- மூன்றாம் வகுப்புக்கு வரும்போது வாசித்தலிலும் கணிதத்திலும் அடிப்படைத் திறனை முழுமையாக எட்டியிருக்கவேண்டும்.
- மாணவர்கள் அவரவர் விருப்பம், திறன், ஆர்வம் ஆகியவற்றிற்கேற்ப தங்களுடைய கற்கும் வேகத்தையும் கல்விப் பாதையையும் தேர்ந்தெடுக்கும் விதமாக இசைந்து கொடுக்கும் வகையில் இருக்கவேண்டும்.
- கலை, அறிவியல் ஆகியவற்றுக்கிடையே நிலையான பாகுபாடுகள் இல்லாத வகையிலும், பாடத்திட்டம், பாடத்திட்டத்துடன் இணைந்த மற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கிடையில் பாகுபாடுகள் இல்லாமலும், தொழிற்கல்வி, கல்வி ஆகியவற்றுக்கிடையே பாகுபாடுகள் இல்லாமலும், இருத்தல் அவசியம். இது வெவ்வேறு கூட்டமைப்புகளின் இடையே கற்றலில் இருக்கும் வேறுபாட்டைக் களைய உதவும்.
- அறிவியல், சமூகவியல், கலை, மனித நேயம், விளையாட்டு போன்ற துறைகளில் பன்முனை, முழுமையான கல்வியை அளிக்கவேண்டும். பன்முனையில் இயங்கும் உலகில் அனைத்து நோக்கிலும் கல்வியை இணைப்பது அவசியம்.
- தேர்வுக்காகப் படிக்காமல், புரிந்துகொள்வதற்காகப் படிப்பதன் முக்கியத்துவம்;
- கற்பனைத் திறன், கூர்ந்த அறிவுத்திறன், ஏராளமாகச் சிந்தித்துமுடிவெடுத்தல், புதிதாகக் கண்டுபிடித்தல்;
- அறநெறி, மனிதம் மற்றும் அரசியலமைப்பு கூறுகளான, கருணை, மற்றவர்களை மதித்தல், சுத்தம், பணிவு, ஜனநாயகத் தன்மை, சேவை மனப்பான்மை, பொதுச் சொத்துகளை மதித்தல், அறிவியல் அணுகுமுறை, உரிமை, பொறுப்புணர்வு, பன்முகத் தன்மை, சமநிலை, நீதி;
- பன்மொழியை ஆதரித்தல், கற்றல் கற்பித்தலில் மொழியின் ஆதிக்கம்;
- அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான தொடர் உரையாடல், ஒற்றுமை, கூட்டாகச் செயல்படல், மீள் திறன்;
- இன்றைய பயிற்சி வகுப்புகளின் மொத்த மதிப்பீடாக அல்லாமல், முழுமையான படிநிலை மதிப்பீடுகளில் கவனம் செலுத்துதல்;
- கற்றலிலும் கற்பிப்பதிலும் தொழில் நுட்பத்தை அதிகமாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது, மொழித்தடைகளை விலக்குவது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகளைச் செய்தல், கல்வித் திட்டங்கள், கல்வி மேலாண்மை;
- பன்முகத்தன்மை, பிராந்திய அணுகுமுறை, கற்பிக்கும் தன்மை, கொள்கை இவற்றைக் கருத்தில்கொண்டு, கல்வி என்பது அனைத்துடனும் தொடர்புடையது என்பதை முதன்மைப்படுத்தல்.
- அனைத்து மாணவர்களும் கல்வித் திட்டத்தால் பயன்பெறும் விதமாக முடிவுகளை முன்வைத்தல்.
- ஒன்றுக்கொன்று உதவிடும் வகையில் மழலையர் வகுப்பு முதல் பள்ளி, மேனிலை வகுப்புகள் வரையில் அனைத்து நிலையிலும் பாடத்திட்டங்களை அமைத்தல்;
- ஆசிரியர்களும், கல்விசார் பணியாளார்களும், கற்பித்தலின் மையப்புள்ளியாதலால், அவர்களைப் பணியில் அமர்த்தல், தொழில் முறைப் பயிற்சிகள் அளித்தல், பணிச் சூழல் வாய்ப்பு, சேவைச் சூழல் இவற்றை நல்ல முறையில் அமைத்தல்;
- நட்பான ஆனால் கண்டிப்பான வரையறை, நம்பிக்கை, வெளிப்படைத்திறன், இவற்றைக் கொண்ட கல்வித் திட்ட ஆய்வுகள், ஆய்வுகளைப் பொதுவில் வைப்பதன் மூலம் நல்ல நிர்வாகம், அதனுடன் அதிகாரப் பங்களிப்பைத் தருதல். மாற்றி யோசிக்கத் தூண்டுதல்;
- கல்வியில் மேம்பட்ட முன்னேற்றத்திற்காக மேம்பட்ட ஆய்வுகள்;
- தொடர்ந்து முன்னேற்றங்களை, கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்து மதிப்பிடச் செய்தல்;
- வேர்விட்டிருக்கும் இந்தியப் பெருமிதத்தை, அதன் செழிப்பை, பன்முகத் தன்மையை, தொன்மையை, புதுமையை, கல்வி அமைப்புகளை, கலாச்சாரத்தை மையப்படுத்தல்;
- கல்வி என்பது பொது சேவை; நல்ல கல்வியை அடைவது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை;
- நிலையான பொதுக் கல்வித் திட்டத்தில் அதிகமான முதலீடும், அதே நேரத்தில் தன்னார்வத் தனியார்களின் சமூகப் பங்களிப்பும்;
கொள்கையின் நோக்கம்
பாரதத்தை இவ்வுலகில் அறிவுசார் வல்லரசாக்கும் நோக்கத்துடன், இக்கொள்கை கல்வித் திட்டத்தை முன்வைக்கிறது. அது, அனைவருக்கும் சிறந்த தரமான கல்வியைத் தருவதுடன், இந்திய மதிப்பீடுகளை, பெருமையை நிலைநாட்டி சமமான அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும். மாணவர்களிடையே அடிப்படைக் கடமைகள், அரசியல் சட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றின்பால் ஆழ்ந்த மதிப்பையும், நாட்டுப்பற்றையும், விழிப்புணர்வையும், இவ்வுலகை நல்ல முறையில் மாற்றவேண்டிய கடமையுணர்வையும் உண்டாக்க வேண்டும் எனும் குறிக்கோளை இக்கொள்கை கொண்டுள்ளது. இதன் நோக்கம் இந்தியப் பெருமிதத்தை நினைவில் மட்டுமல்லாமல் ஆழ்மனத்தில், உரத்த சிந்தனையில், நற்செயல்களில் ஈடுபட ஆர்வம் நிலைத்திருக்க உணர்த்துவதும், அறிவை வளர்ப்பதும், மனித உரிமைக்காகச் செயல்படும் திறன், மதிப்பீடு, உதவி செய்யும் மனப்பக்குவம், பொறுப்பு ஆகியவற்றை உண்டாக்குவதும், வளர்ச்சிப் பாதை, வாழ்வியல் மதிப்பீடு ஆகியவற்றில் உயர்ந்து நல்ல உலகக் குடிமகனாக வாழ உதவுவதும் ஆகும்.
பகுதி 1 பள்ளிக் கல்வி
இந்தக் கொள்கையானது, தற்போது பள்ளிக் கல்வியில் உள்ள 10+2 கட்டமைப்பை மாற்றி, புதிய கற்றல் முறை மற்றும் 5+3+3+4 பாடத்திட்டமாக மறுகட்டமைத்து, 3-18 வயதான குழந்தைகளுக்கு வழங்க விழைகிறது. இது இங்கே படமாகச் சித்தரிக்கப்பட்டு, பின்னர் இயல் 4இல் விரிவாக விளக்கப்பட்டும் உள்ளது..
தற்போதுள்ள 10+2 கட்டமைப்பில், ஒன்றாம் வகுப்பு 6 வயது முதல் தொடங்குவதால், 3-6 வயதுள்ள குழந்தைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. புதிய 5+3+3+4 கட்டமைப்பானது, 3 வயதிலிருந்தே ஆரம்பகால குழந்தைப்பருவப் பராமரிப்பு மற்றும் கல்வியை (ECCE – Early Childhood Care and Education) இணைப்பதின் மூலம் தரமான அடித்தளம் அமைத்து, ஒட்டுமொத்தக் கற்றல், வளர்ச்சி மற்றும் நல்வாழ்வு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1.ஆரம்பக்கால குழந்தைப்பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE) : கற்றலின் அடித்தளம்
1.1 ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த மூளை வளர்ச்சியில் 85 சதவீதத்துக்கு மேல் 6 வயதிற்கு முன்பே நிகழ்கிறது. இதன் மூலம் சரியான கவனிப்பு மற்றும் மூளையைத் தூண்டுதலின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான மூளை வளர்ச்சியை ஆரம்பப் பருவத்தில் இது உறுதி செய்யும். தற்போது, கோடிக்கணக்கான இளம் குழந்தைகளுக்கு, குறிப்பாக சமூக–பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குழந்தைகளுக்குத் தரமான பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE) கிடைப்பதில்லை. ஆரம்பக்காலக் குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கு (ECCE) வலுவான முதலீடு கிடைத்தால், அனைத்துக் குழந்தைகளும் நமது கல்விச் சூழலில் சிறப்பான பங்களிப்பைத் தந்து செழிப்பான வளர்ச்சியைப் பெற முடியும். 2030க்குள் தரமான ஆரம்பக்காலக் குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்கிட வேண்டும். இதன்மூலம் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு வரும் போது பள்ளிக்குத் தயாராக இருப்பார்கள்.
1.2. எளிதில் மாற்றியமைக்கக்கூடிய , பன்முக, பலநிலை, விளையாட்டு அடிப்படையிலான, செயல்பாடு சார்ந்த மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான கற்றலைக் கொண்டுள்ளது ஆரம்பக்காலக் குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE). இதனுள் எழுத்துகள், மொழிகள், எண்கள், எண்ணும் திறன், வண்ணங்கள், வடிவங்கள், உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு, புதிர்கள் மற்றும் தர்க்கரீதியான சிந்தனை, சிக்கலைத் தீர்த்தல், வரைதல், ஓவியம் மற்றும் பிற காட்சி கலை, கைவினை, நாடகம் மற்றும் பொம்மலாட்டம், இசை மற்றும் அசைவு ஆகியவை அடக்கம். சமூகத் திறன்கள், உணர்திறன், நல்ல நடத்தை, மரியாதை, நெறிமுறைகள், தனிப்பட்ட மற்றும் பொதுத் தூய்மை, குழுப்பணி மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்ப்பதில் இது கவனம் செலுத்துகிறது. ECCE இன் ஒட்டுமொத்த நோக்கம் பின்வரும் தளங்களில் சரியான முறையில் வெளிப்பாடு அடைவதில் தான் உள்ளது – உடற்திறன் சார்ந்த திறமைகளில் வளர்ச்சி, அறிவுத்திறன் சார்ந்த திறமைகளில் வளர்ச்சி, சமூக-உணர்வுத் திறன்-நீதிநெறிசார் வளர்ச்சி, கலாச்சாரம்/கலைசார் வளர்ச்சி, ஆரம்பகால மொழியிலும் தகவல்தொடர்பிலும் வளர்ச்சி மற்றும் எழுத்தறிவு எண்ணறிவு சார் வளர்ச்சி.
1.3 எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான (NCPFECCE) ஆரம்பக்காலக் குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்ட மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை இரண்டு பகுதிகளாக NCERT உருவாக்கும். அது, 0-3 வயதுடையவர்களுக்கான மற்றும் 3-8 வயதுடையவர்களுக்கான கட்டமைப்பு. இது மேலே உள்ள வழிகாட்டுதலின்படி, ECCE பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி, தேசிய மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் உருவாக்கப்படும். கலை, கதைகள், கவிதை, விளையாட்டுகள், பாடல்கள் மற்றும் பலவற்றின் மூலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்த இந்தியாவின் ஏராளமான செழிப்பான உள்ளூர் மரபுகளும் ECCEவில் பொருத்தமாக இணைக்கப்படும். இந்தக் கட்டமைப்பானது பெற்றோருக்கும் குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வழிகாட்டியாகச் செயல்படும்.
1.4 நாடு முழுவதும் உயர்தர ECCE-ஐ அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒவ்வொரு கட்டமாகக் கொண்டுபோய் சேர்த்தல் மிகப் பெரிய குறிக்கோளாக இருக்கும். சமூக–பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாவட்டங்களுக்கு சிறப்புக் கவனம் மற்றும் முன்னுரிமை வழங்கப்படும். பின்வரும் விரிவாக்கப்பட்ட மற்றும் பலப்படுத்தப்பட்ட ஆரம்பக்காலக் குழந்தைப் பருவக் கல்வி நிறுவனங்களின் மூலமாக ECCE வழங்கப்படும்
- தனியாகச் செயல்படும் அங்கன்வாடி
2.ஆரம்பப் பள்ளிகளுடன் இணைந்து அமைந்துள்ள அங்கன்வாடி
- மழலையர் பள்ளிகள் / குறைந்தது 5 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளை தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளுடன் இணைந்து அமைந்துள்ளவை
- தனியாகச் செயல்படும் மழலையர் பள்ளிகள்
இவை அனைத்திலும் ECCE-இன் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தலுக்கான சிறப்பாகப் பயிற்சி பெற்ற பணியாட்கள் /ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்
1.5 ECCE-ஐ அனைவரும் பயன்படுத்த, அங்கன்வாடி மையங்கள் உயர்தர உள்கட்டமைப்பு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நன்கு பயிற்சிப் பெற்ற அங்கன்வாடி வேலையாட்கள் / ஆசிரியர்களுடன் பலப்படுத்தப்படும். ஒவ்வொரு அங்கன்வாடியிலும் நன்கு காற்றோட்டமான, வடிவமைக்கப்பட்ட, குழந்தைகளுக் க்கேற்ப வளமான கற்றல் சூழலுடன் நன்கு கட்டப்பட்ட கட்டிடம் அமைக்கப்படும். அங்கன்வாடி மையங்களில் இருக்கும் குழந்தைகள், செயல்பாடுகள் நிறைந்த சுற்றுப்பயணங்கள் மற்றும் பக்கத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இது அங்கன்வாடி மையங்களிலிருந்து ஆரம்பப் பள்ளிகளுக்கு மாறுவதை மென்மையான அனுபவமாக மாற்றும். அங்கன்வாடி அனைத்தும் பள்ளி வளாகங்களுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும். மேலும் அங்கன்வாடி குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆரம்ப பள்ளிகள் மற்றும் பள்ளி வளாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள். அதேபோல் அங்கன்வாடி நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பப் பள்ளி வளாகத்தின் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அழைக்கப்படுவார்கள்.
1.6 5 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையும் ECCE-தகுதி வாய்ந்த ஆசிரியரைக் கொண்ட “ஆயத்தமாகிற வகுப்பு” – Balavatika (அதாவது 1 ஆம் வகுப்புக்கு முன்பு) க்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயத்தமாகிற வகுப்பு விளையாட்டு மூலமாகக் கற்றலை முதன்மையாகக் கொண்டிருக்கும். இதன் மூலம் அறிவாற்றல், உளவியல் தசை இயக்கத் திறன்கள் மற்றும் ஆரம்பக்கால எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு வளர்ப்பதில் கவனம் செலுத்தப்படும். ஆரம்பப் பள்ளிகளில் நடைபெறும் ஆயத்தமாகிற வகுப்புகளுக்கும் மதிய உணவுத்திட்டம் விரிவாக்கப்படும். அங்கன்வாடி அமைப்பில் கிடைக்கக்கூடிய சுகாதாரச் சோதனைகள் மற்றும் வளர்ச்சி கண்காணிப்பு ஆகியவை அங்கன்வாடியின் ஆயத்தமாகிற வகுப்பு மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கும்.
1.7 அங்கன்வாடிக்கான உயர்தர ECCE ஆசிரியர்களை தயார்ப்படுத்த, தற்போதைய அங்கன்வாடி பணியாட்கள்/ஆசிரியர்களுக்கு NCERT உருவாக்கிய பாடத்திட்ட / கற்பித்தல் கட்டமைப்பிற்கு ஏற்ப முறையான பயிற்சி அளிக்கப்படும். 10 + 2 மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதிகள் கொண்ட அங்கன்வாடி வேலையாட்கள் / ஆசிரியர்களுக்கு ECCE பற்றி 6 மாதப் பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் குறைந்த கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு ஒரு வருடப் பட்டப் படிப்பு மூலம் ஆரம்பக்கால எழுத்தறிவு , எண்ணறிவு மற்றும் இதர ECCE யின் அம்சங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சிகள் DTH சேனல்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் / தொலைதூரக் கல்வி முறையில் இயக்கப்படலாம், இதனால் ஆசிரியர்கள் ECCE க்கான தகுதிகளை அவர்களின் தற்போதைய பணிக்கு மிகக் குறைந்த இடையூறுடன் பெறலாம். அங்கன்வாடி வேலையாட்கள் / ஆசிரியர்களின் ECCE பயிற்சி என்பது பள்ளிக் கல்வித் துறையின் குழு வள மையங்களால் (Cluster Resource Centre ) வழிநடத்தப்படும். தொடர்ச்சியான மதிப்பீட்டிற்குக் குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது தொடர்பு வகுப்பு நடத்தப்படும். எதிர்காலத்தில், ஆரம்பக்காலக் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக்காக, தகுதி வாய்ந்த கல்வியாளர்களை உருவாக்க மாநில அரசுகள், படிநிலைக்கேற்ப முறையான பயிற்சி , வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பதவி உயர்வுக்கான பாதையமைத்தல் ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தும். இந்தக் கல்வியாளர்களின் தொழிற்பயிற்சி மற்றும் அவர்களின் தொடர்ச்சியான மேம்பாட்டுக்கு (CPD Continuous Professional Development ) தேவையான வசதிகளும் உருவாக்கப்படும்.
1.8 பழங்குடியினர் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள ஆசிரமசாலைகள் (Ashramshalas) மற்றும் மாற்றுப் பள்ளிப்படிப்பின் அனைத்து வடிவங்களிலும் ஒவ்வொரு கட்டமாக ECCE அறிமுகப்படுத்தப்படும். ஆசிரமசாலைகள் (Ashramshalas) மற்றும் மாற்றுப் பள்ளிப்படிப்புகளில் ECCEஐ ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான முறை மேலே விவரிக்கப்பட்டதைப் போலவே இருக்கும்.
1.9 ECCE யின் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றின் பொறுப்பு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உள்ளது. இதன் மூலம் மழலையர் பள்ளியிலிருந்து ஆரம்பப்பள்ளி வரையுள்ள தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும், கல்வியின் அடித்தள அம்சங்களுக்கு உரிய கவனம் செலுத்துவதற்கும் உறுதுணையாக இருக்கும். ஆரம்பக்காலக் குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி பாடத்திட்டத்தின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் மனிதவள மேம்பாட்டுத் துறை (MHRD), பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு (WCD), நலவாழ்வு மற்றும் குடும்ப நலன் (HFW) மற்றும் பழங்குடியினர் அலுவல் ஆகியன கூட்டாகச் சேர்ந்து மேற்கொள்ளும். ஆரம்பக்காலக் குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வியை (ECCE) பள்ளிக் கல்வியில் சீராக ஒருங்கிணைப்பதற்குத் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்காக ஒரு சிறப்புக் கூட்டுப் பணிக்குழு அமைக்கப்படும்.
2. அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும் : கற்றலுக்குத் தேவையான அவசர மற்றும் அவசியமான முன்நிபந்தனைகள்.
2.1 வாசித்தல், எழுதுதல் மற்றும் எண்களின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்யும் திறன் பெறுதல் என்பது எதிர்காலப் பள்ளிக்கல்வி மற்றும் வாழ்நாள் கற்றலுக்கு அவசியமான அடிப்படையும் தவிர்க்க முடியாததுமாகும். இருப்பினும் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா கணக்கெடுப்புகள் நாம் தற்போது கற்றல் நெருக்கடிக்குள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன; தற்சமயம் தொடக்க வகுப்புகளில் இருக்கும் ஐந்து கோடிக்கும் மேலான மாணாக்கர்களில் பெரும்பகுதியானவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை அடையாதவர்களாக இருக்கிறார்கள். அதாவது, வாசிக்க மற்றும் பேசுவதைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் இந்திய எண்களில் அடிப்படை கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளைச் செய்தல் ஆகிய திறன்களை அடைந்திருக்கவில்லை.
2.2. எனவே அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை அனைத்துக் குழந்தைகளும் பெறுதல் என்பது பல்வேறு முனைப்புகளுடன் மற்றும் தெளிவான குறிக்கோளுடன் குறுகிய காலத்தில் அடைய மிகவும் அவசரமான ஒரு தேசிய இயக்கமாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது (ஒவ்வொரு மாணவனும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை மூன்றாம் வகுப்பிற்குள் அடைவதை இணைத்துக் கொள்ளல்). கல்வி அமைப்பில் உச்சபட்ச முக்கியத்துவமாகத் தொடக்கப்பள்ளியில் 2025ல் அனைவரும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை அடைதல். இந்தக் கொள்கையில் வரும் இதரப் பகுதிகள் மாணவர்களின் அடிப்படையான கற்றல் தேவையை (வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதம்) அடைந்தால் மட்டுமே அவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். இதன் முடிவாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலமாக அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவிற்கான தேசிய இயக்கம் உருவாக்க முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி தொடக்கப் பள்ளியில் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை 2025க்குள் அடைவதற்கான, படிநிலை வாரியான இலக்குகளையும் குறிக்கோள்களையும் அடையாளம் கண்டு மற்றும் அதன் முன்னேற்றத்தை நெருக்கமாகத் தடம் பின்பற்ற மற்றும் கண்காணிக்கச் செயல் வடிவத்தை அனைத்து மாநில/யூனியன் பிரதேச அரசுகளும் உடனடியாக தயாரிக்கவேண்டும்.
2.3 முதலில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைவாக நேரத்திற்குள் நிரப்புதல், குறிப்பாக வாய்ப்பு மறுக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ஆசிரியர் மாணவர் விகிதம் அதிகமாக உள்ள பகுதிகள் அல்லது எழுத்தறிவின்மை அதிக எண்ணிக்கையில் உள்ள பகுதிகளில் உள்ளூர் ஆசிரியர்கள் அல்லது உள்ளூர் மொழியில் பரிச்சயம் உள்ளவர்களைப் பணியமர்த்தச் சிறப்புக் கவனம் செலுத்தப்படும். ஆசிரியர் மாணவர் விகிதம் 30:1 க்கு கீழே ஒவ்வொரு பள்ளி அளவிலும் இருப்பது உறுதி செய்யப்படும்; சமூக பொருளாதாரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதிகளில் 25:1 க்கு குறைவான ஆசிரியர் மாணவர் விகிதம் (PTR Pupil-Teacher Ratio) என இலக்கு வைக்கப்படும். அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை வழங்க ஆசிரியர்களுக்குத் தொடர் தொழில் மேம்பாட்டுப் பயிற்சி, ஊக்கம் மற்றும் உறுதுணை அளிக்கப்படும்.
2.4 கலைத்திட்டத்தில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் பொதுவாக வாசித்தல் ,எழுதுதல், பேசுதல் , எண் கணிதம் , கணிதச் சிந்தனை ஆகியவை, தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வி கலைத்திட்டத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் தொடர் வளர்ச்சி மற்றும் தகவமைப்பு மதிப்பீடு என வலுவான வகைமுறையுடன் தனித்தனியாக கற்றலை உறுதி செய்யக் கவனம் அதிகப்படுத்தப்படும். குழந்தைகளை உற்சாகப்படுத்தவும், ஆர்வமூட்டவும் இந்தப் பாடங்களை உள்ளடக்கிய செயல்பாடுகளுக்கு தினமும் மற்றும் தொடர் நிகழ்வாகவும் குறிப்பிட்ட மணி நேரங்கள் ஆண்டு முழுவதும் அர்ப்பணிக்கப்படும்.
2.5 தற்போது, அனைவருக்குமான ECCE கிடைக்கப் பெறாததால் முதல் வகுப்பின் முதல் சில வாரங்களிலேயே பெரும்பகுதியான குழந்தைகள் பின் தங்குகிறார்கள். எனவே எல்லா மாணவர்களும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய எல்லா முதல்வகுப்புக் குழந்தைகளுக்கும் விளையாட்டு அடிப்படையிலான, மூன்று மாதகால ஆயத்தமாதல் பாடத்திட்டம் தயாரிக்கப்படும். இதற்கான எழுத்துகள், மொழிகள், சொற்கள், வடிவங்கள் மற்றும் எண்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய செயல்பாடுகள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் இணைந்து NCERT மற்றும் SCERT ஆல் தயாரிக்கப்படும்.
2.6. அறிவை பகிர்ந்து கொள்ள (DIKSHA – Digital Infrastructure for Knowledge Sharing) அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவிற்காக மின்மய உட்கட்டமைப்பில் உயர்வகை வளங்கள் கொண்ட தேசிய அளவிலான களஞ்சியம் உருவாக்கப்படும்.
2.7 தற்போதைய கற்றல் நெருக்கடி அளவீட்டில் அனைவருக்குமான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு இயக்கத்தில் ஆசிரியர்களுக்குத் துணைபுரியும் அனைத்துச் சாத்தியமான கற்பித்தல் முறைகளும் கண்டுபிடிக்கப்படும். ஒருவருக்கு ஒருவர் என்ற சக மாணவர்கள் கற்றலானது கற்பவருக்கு மட்டுமல்லாது கற்பிப்பவருக்கும் சிறந்த அணுகுமுறையாக உள்ளது என உலகெங்கிலும் உள்ள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் மேற்பார்வையில் சக மாணவர் கற்பித்தலை தன்னார்வம் மற்றும் மகிழ்ச்சியான செயல்பாடாக மேற்கொள்ளலாம். கூடுதலாக இந்தப் பெரிய அளவிலான இயக்கத்தில் உள்ளூர் சமூகம் மற்றும் பிறரும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும் பங்கேற்க நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். சமூகத்தின் ஒவ்வொரு படித்த உறுப்பினரும் ஒரு மாணவர் அல்லது நபரை எவ்வாறு படிப்பது எனச் சொல்லிக் கொடுக்க ஒப்புக்கொள்வார் எனில் அது மிக விரைவாக நாட்டின் அமைப்பையே மாற்றிடும். இவ்வாறாக தேசிய அளவிலான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு இயக்கத்தை ஊக்குவிக்க சக மாணவர் பயிற்றுவித்தல் மற்றும் தன்னார்வலர் செயல்பாடுகளோடு கற்பவர்களுக்குத் துணைபுரியும் இதர திட்டங்களை புதிய மாதிரிகளை உருவாக்க கருத்தில் கொள்ளலாம்.
2.8. சுவாரஸ்யம் மற்றும் உத்வேகம் அளிக்கக் கூடிய நூல்கள், உள்ளூர் மற்றும் இந்திய மொழிகளில் உயர்வகை மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள் உட்பட எல்லா நிலைகளிலும் நூல்கள் உருவாக்கப்பட்டு பள்ளி மற்றும் பொது நூலகங்களில் கிடைக்கச் செய்யப்படும். வாசிக்கும் கலாச்சாரத்தை கட்டமைக்க பொது மற்றும் பள்ளி நூலகங்கள் நாடெங்கிலும் விரிவாக்கம் செய்யப்படும். மின்னணு நூலகங்களும் நிறுவப்படும். பள்ளி நூலகங்கள், குறிப்பாக கிராமத்தில், பள்ளி அல்லாத நேரங்களில் சமூகத்திற்கு சேவையாற்றும் வகையில் அமைக்கப்படும். மேலும், பரவலாக்கப்பட்ட வாசிப்பை வழங்கும் மற்றும் ஊக்குவிக்கும் விதமாக நூல் சங்கம் சந்திப்பு, பொது மற்றும் பள்ளி நூலகங்களில் நடைபெறலாம். தேசிய நூல் ஊக்குவிக்கும் கொள்கை உருவாக்கப்படும். நிலம்சார்ந்த, மொழிகள், நிலைகள் மற்றும் வகைகளில் புத்தகங்கள் கிடைக்கும் தன்மை, அணுகல், தரம் மற்றும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
2.9. ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடல்நலமின்மையால் குழந்தைகள் உகந்த முறையில் கற்க இயலாது. எனவே சுகாதாரமான உணவு மற்றும் பயிற்சி பெற்ற சமூக சேவையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் சமூகத்தை பள்ளிக்கல்வியில் ஈடுபடுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை (மனநலன் உட்பட) அடைய முடியும். காலை வேளைகளில் ஊட்டச்சத்து மிக்க காலை உணவு அறிவாற்றலை தூண்டி கற்பதற்குத் தேவையான பயனை அளிக்கிறது. மேலும் ஆராய்ச்சியின் வழியாக, அறிவுசார் திறனை அதிகமாகக் கோரும் பாடங்களைப் படிப்பதற்கு ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவுக்கு பின்னான நேரம் மிகவும் ஆற்றல்மிக்கதாக இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். எனவே, மதிய உணவுடன் எளிய ஆனால் ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவை வழங்குவதின் மூலம் காலை வேளைகளில் பயன்பெறலாம். சூடான உணவைக் கொடுக்க முடியாத இடங்களில் எளிய ஊட்டச்சத்து மிக்க உணவை ,உதாரணமாக வெல்லம் சேர்க்கப்பட்ட நிலக்கடலை / கொண்டைக்கடலை அல்லது உள்ளூர் பழங்களைக் கொடுக்கலாம். எல்லாப் பள்ளிக் குழந்தைகளும் முறையான சுகாதாரச் சோதனைகளை மேற்கொண்டு, குறிப்பாக 100% நோயெதிர்ப்புச் சக்தியைப் பெறுவது சுகாதார அட்டையின் மூலம் கண்காணிக்கப்படும்.
3. இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல் மற்றும் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்தல்
3.1 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவது மற்றும் வருகை புரிவதை உறுதி செய்வது தான் பள்ளி முறையின் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாக இருக்க வேண்டும். சர்வ ஷிக் ஷா அபியான் (தற்போது சமகர ஷிக் ஷா அபியான்) மற்றும் கல்வி உரிமைச் சட்டம் போன்ற முயற்சிகள் மூலம் ஆரம்பக் கல்வி சேர்க்கையில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கிறது. இருப்பினும், பிந்தைய வகுப்புகளில் குழந்தைகளைப் பள்ளியில் தக்க வைப்பதில் சில கடுமையான சிக்கல்கள் இருப்பதாகத் தகவல்கள் சுட்டிக்காட்டுகிறது. 6-8 வகுப்புகளுக்கான GER – மொத்த சேர்க்கை அளவீட்டை(Gross Enrollment ratio) 90.9% ஆகும், அதே நேரத்தில் 9-10 மற்றும் 11-12 வகுப்புகளுக்கானது முறையே 79.3% மற்றும் 56.5% மட்டுமே – அதாவது 5 ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பிற்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட மாணவர்களில் குறிப்பிடத்தக்க விகிதத்தினர் இடைநிற்கின்றனர். 2017-18ஆம் ஆண்டில் NSSO வின் 75வது வீட்டுடைமைக் கணக்கெடுப்பின்படி, 6 முதல் 17 வயது வரை உள்ள பள்ளியை விட்டு விலகி உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 3.22 கோடி ஆகும். இந்தக் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கல்வியின் எல்லைக்குள் விரைவில் கொண்டு வர முன்னுரிமையும் மேலும் மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்கவும், 2030ஆம் ஆண்டுக்குள் முன்பருவப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளிவரை 100% மொத்த மாணவர் சேர்க்கை இலக்கை அடைந்திட உயர் முன்னுரிமை அளிக்கப்படும். கல்வியில் அனைவரும் பங்கேற்பதை உறுதிப்படுத்தவும், நாட்டின் அனைத்துக் குழந்தைகளும் தரமான மற்றும் முழுமையான கல்வி பெற வாய்ப்பை ஏற்படுத்தவும் முன் பள்ளி முதல் 12 ஆம் வகுப்புவரை தொழில் கல்வி வழங்குவதையும் உள்ளடக்கி ஒத்திசைவான முயற்சி மேற்கொள்ளப்படும்.
3.3 இரண்டாவதாக கற்றல்நிலையையும், மாணவர்களையும் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் (அ) பள்ளியும் சேர்ந்து தொடர்ச்சியாக வருகை புரிவதையும் (ஆ) ஒருவேளை அவர்கள் பின் தங்கியோ, இடைநின்றோ இருப்பின் மீண்டும் பள்ளிக்குள் நுழையவும், மற்றவர்களுடன் இணைந்து பயிலவும், வாய்ப்புகள் பெறுவதையும், உறுதி செய்து அவர்களின் ஒருமித்த பங்கேற்பை அடைவது ஆகும். அடித்தள நிலை முதல் 12ம் வகுப்பு வரை 18 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான தரமான கல்வி வழங்கப் பொருத்தமான வசதிகள் ஏற்படுத்தப்படும். பள்ளி மற்றும் பள்ளித் தொகுதிகள் தொடர்புடைய ஆலோசகர்கள் அல்லது நன்கு பயிற்சி பெற்ற சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் தொடர்ந்து வேலை புரிவதுடன், சமூகத்துடன் இணைந்து பயணித்து, அனைத்துப் பள்ளி வயதுக் குழந்தைகள் பள்ளியில் கற்பதை உறுதி செய்வர். பயிற்சி பெற்ற மற்றும் தகுதிவாய்ந்த சமூக சேவகர்கள், பொது சமூக அமைப்புகள் மற்றும் சமூகநீதி மற்றும் அதிகாரத்துறை, மாநில மற்றும் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்தும் அரசு சார்ந்த செயல்பாட்டாளர்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முக்கியமான பணிகளைச் செய்வதற்கு இணைக்க முடியும்.
3.4 உள்கட்டமைப்பு மற்றும் பங்கேற்பு உறுதியானவுடன் தரத்தை உறுதி செய்வதே மாணவர்களை (குறிப்பாக, பெண் குழந்தைகள் மற்றும் இதர சமூக–பொருளாதார பின்தங்கிய மாணவர்கள்) பள்ளிக்கு மீண்டும் வரவழைப்பதுடன் ஆர்வத்தை இழக்காமல் தக்க வைக்கவும் முக்கிய வழியாக இருக்கும். இதை மேலும் பயனுள்ளதாக்க, இடைநிற்றல் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ளூர் மொழி அறிவுடன் கூடிய ஆசிரியரை நியமிக்க ஊக்கத்தொகை வழங்கும் முறையும், பாடத்திட்ட மாறுதலும் தேவை.
3.5 அனைத்து மாணவர்களுக்கும் கற்றலை எளிதாக்குவதற்கு சமூக பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குழுக்களுக்கு (SEDGs -Socio-Economically Disadvantaged Groups) முக்கியத்துவம் அளிக்க முறைசார் மற்றும் முறைசாரா கல்வி முறைகள் எனப் பல வழிகளில் கற்றலை எளிதாக்கும் வகையில் பள்ளிக் கல்வியை விரிவாக்குவதும் அவசியம். பள்ளி செல்ல இயலா இந்திய இளைஞர்களின் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி வழங்கும் தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனம் (NIOS) மற்றும் மாநில திறந்தவெளி பள்ளிகள் விரிவுபடுத்தப்பட்டு, NIOS மற்றும் மாநில திறந்தவெளி பள்ளிகள் தற்போது வழங்கிக்கொண்டிருக்கும் பாடத்திற்கும் கூடுதலாகக் கீழ்க்காணும் பாடத்தினையும் வழங்கும். முறைசார் பள்ளியின் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குச் சமமான A, B, மற்றும் C நிலைகள்; 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குச் சமமான மேல்நிலைக் கல்வித் திட்டங்கள்; தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மற்றும் திட்டங்கள்; வயது வந்தோர் கல்வி மற்றும் வாழ்க்கை செறிவூட்டல் திட்டங்கள்; ஏற்கனவே உள்ள SIOS ஐ வலுவூட்டவும் புதிதாக SIOS களை மேற்கண்ட பரிந்துரைகளின் படி பிராந்திய மொழிகளில் விரிவுபடுத்தவும் மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.
3.6 அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் எளிதில் பள்ளிகளைக் கட்டி, மாறுபட்ட சமுகம், கலாச்சாரம், நிலப்பரப்பு சார்ந்த மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளூர் மாறுபாடுகளை ஊக்குவிக்க, மற்றும் கல்வியின் மாற்று மாதிரிகளை அனுமதிக்க, பள்ளிகளுக்கான கட்டுப்பாடுகள் குறைக்கப்படும். உள்ளீட்டிற்குக் குறைந்த முக்கியத்துவம் மற்றும் வெளியீட்டு ஆற்றலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தேவையான கற்றல் விளைவுகளை வெளிக்கொணரும். உள்ளீடுகள் குறித்த விதிமுறைகள் இயல் 8 இல் குறிப்பிடப்பட்டுள்ளது போல சில பகுதிகளுக்கானது. பள்ளிகளுக்கான பிற மாதிரிகள் பொதுத்தொண்டு நிறுவனங்களுடன் கூட்டாக இயக்கப்படும்.
3.7 கற்றல் என்பது முழுமையான, ஒருங்கிணைந்த,மகிழ்வான,ஈடுபாட்டுடன் அமைவதாக இருக்க வேண்டும் கற்றலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தன்னார்வச் சமூகம் மற்றும் முன்னாள் மாணவர்களைப் பள்ளிகளில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்: ஒருவருக்கொருவர் கற்பித்துக்கொள்ளுதல்; இலக்கியம் கற்பித்தலில் கூடுதல் அமர்வுகளை நடத்துதல்; பயிற்றுநர்களுக்குப் பயிற்றுவித்தலில் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்; மாணவர்களுக்கு துறை ரீதியான வழி காட்டுதல்; இதற்காக ஆரோக்கியமான பழைய மாணவர்கள் உள்ளூர் சமூக உறுப்பினர்கள் போன்றவர்கள் தகுந்த முறையில் ஒன்றிணைக்கப் படுவார்கள். படித்த தன்னார்வலர்கள் ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள், அரசு மற்றும் பகுதி அரசு ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்களின் தரவுத்தளம் இந்த நோக்கத்தை நிறைவு செய்ய உருவாக்கப்படும்.
4. பள்ளிகளில் உள்ள பாடத்திட்டமும் கற்பித்தலும் : முழுமை வாய்ந்த, ஒருங்கிணைந்த, சுவாரஸ்யமான மற்றும் ஈடுபாட்டைத் தூண்டும் கற்றலாக இருத்தல்
பள்ளிப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் சார் அமைப்பை 5+3+3+4 என்ற வடிவ அடிப்படையில் மறு சீரமைப்பு செய்தல்
4.1. பள்ளிக்கல்வியின் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறையானது வளர்ச்சிக்கான தேவைகளை உள்ளடக்கியதாக மற்றும் கற்போரின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும். 3-8, 8-11, 11-14, 14-18 ஆகிய பல்வேறு நிலைகளின் வரிசைப்படி மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். எனவே இம்மறுகட்டமைப்பு வடிவமானது 5+3+3+4 என்ற வடிவில், அடித்தள கட்டத்தை உள்ளடக்கியது (இரண்டு பகுதிகளாக, அதாவது அங்கன்வாடியின் 3 ஆண்டுகள் / முன்பள்ளி + 2 ஆம் வகுப்புகளில் ஆரம்பப் பள்ளியில் 2 ஆண்டுகள்; இரண்டுமே ஒன்றாக 3-8 வயதுடையவர்கள்), துவக்க நிலை (தரங்கள் 3-5, 8-11 வயதுடையவர்கள்), நடுத்தர நிலை (6-8 தரங்கள், 11-14 வயதுடையவர்கள்), மற்றும் இரண்டாம் நிலை (9-12 தரங்கள் இரண்டு கட்டங்களாக 9 மற்றும் 10 என முதல் கட்டங்களில் மற்றும் இரண்டாவது 11 மற்றும் 12, 14-18 வயது ஆகியவற்றை உள்ளடக்கியது).
4.2 அடித்தளநிலை ஐந்து ஆண்டுகள் நெகிழ்வான, பன்னிலை, நாடகம் / செயல்பாடு சார்ந்த கற்றல் மற்றும் பத்தி 1.2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி ECCE இன் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அடித்தளக்கட்டத்தில் நாடகம், கண்டுபிடிப்பு மற்றும் செயல்பாடு சார்ந்த கல்வி மற்றும் பாடத்திட்டப் பணி குறித்த மூன்று ஆண்டு காலக் கல்விக் கட்டமைப்பைத் துவக்க நிலை உள்ளடக்கும். இது சில எளிய உரைப் புத்தகங்களையும், மேலும் முறையான அம்சங்களையும் இணைக்கும் வாசிப்பு, எழுதுவது, பேசுவது, உடற்கல்வி, கலை, மொழிகள், அறிவியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் உறுதியான அடித்தளத்தை அமைப்பதற்காக ஊடாடும் வகுப்பறைக் கற்றல் ஊக்குவிக்கப்படும்.. மத்திய நிலை மூன்று ஆண்டு காலக் கல்வியை உள்ளடக்கியது, இது தனித்தனிப் பாட ஆசிரியர்களின் அறிமுகத்துடன் ஆயத்தக் கட்டத்தின் கல்வி மற்றும் பாடத்திட்ட பாணியை உருவாக்குகிறது. அறிவியல், கணிதம், கலை, சமூக அறிவியல், மானுடவியல் போன்ற ஒவ்வொரு பாடங்களிலும் மிகவும் சுருக்கமான கருத்துகளைப் பற்றிய கற்றல் மற்றும் கலந்துரையாடல் ஊக்குவிக்கப்படும். இரண்டாம் நிலை நான்கு ஆண்டு பன்முக ஆய்வுகளை உள்ளடக்கியது, நடுத்தரக் கட்டத்தின் பாடம் சார்ந்த கல்வி மற்றும் பாடத்திட்டப் பாணியை அதிகத் திறனாய்வு சிந்தனையோடும், வாழ்க்கை விருப்பங்களில் அதிகக் கவனம் செலுத்துதல் மற்றும் அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் மாணவரே பாடங்களைத் தேர்வு செய்யும் முறைகளையும் கொண்டிருக்கும். குறிப்பாக மாணவர்கள் 10 ஆம் வகுப்புக்குப் பிறகு வெளியேறுவதற்கும், அடுத்த கட்டத்தில் மீண்டும் நுழைவதற்கும் 11-12 ஆம் வகுப்புகளில் தொழிற்கல்வி அல்லது வேறு ஏதேனும் படிப்புகளைத் தொடர விருப்பம் இருக்கும். மேலும் மாணவர்கள் விரும்பினால் கூடுதல் சிறப்புப் பள்ளிகளிலும் சேரலாம்
4.3 மேலே கூறப்பட்ட நிலைகள் யாவும் குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியின் அடிப்படையில், மாணவர்களுக்குப் பாடத்திட்ட மற்றும் கற்பித்தல் அமைப்பு முறையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு நிலையிலும் தேசிய மற்றும் மாநில பாடத்திட்டங்கள், கற்றல் – கற்பித்தல் உத்திகள் போன்றவை அவர்களுக்குத் தெரிவிக்கப்படும், ஆனால் அதற்கேற்ப உள்ட்டமைப்பு வசதிகளை மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கற்பவர்களின் முழுமையான வளர்ச்சி
4.4. அனைத்து நிலைகளிலும் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் சீர்திருத்தத்தின் முக்கிய ஒட்டுமொத்த உந்துதல் கல்வி முறையை உண்மையான புரிதலை நோக்கி நகர்த்துவதையும் கற்றுக்கொள்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதையும் – மற்றும் இன்று பெரும்பாலும் காணப்படுவது போல சொற்பொழிவு முறையில் கற்கும் கலாச்சாரத்திலிருந்து விலகிச் செல்வதாகும். கல்வியின் நோக்கம் அறிவாற்றல் வளர்ச்சி மட்டுமல்ல, ஒட்டு மொத்த குணநலன்களை வளர்ப்பதும், 21 ஆம் நூற்றாண்டின் முக்கிய திறன்களைக் கொண்ட முழுமையான மனிதர்களை உருவாக்குவதும் ஆகும். இறுதியில், அறிவு என்பது ஒரு ஆழமான புதையல் மற்றும் கல்வி ஏற்கனவே ஒரு தனிநபருக்குள் இருக்கும் முழுமையை வெளிப்படுத்த உதவுகிறது. இந்த முக்கியமான குறிக்கோள்களை அடைவதற்கு பாடத்திட்டம் மற்றும் கற்பிதத்தின் அனைத்து அம்சங்களும் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்படும். துவக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை கற்றலின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒருங்கிணைப்பதற்காக களங்களில் உள்ள குறிப்பிட்ட திறன்கள் மற்றும் மதிப்புகள் அடையாளம் காணப்படும். கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளில் ஈடுபடுவதன் மூலம் இந்தத் திறன்களும் மதிப்புகளும் ஊக்கமளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பாடத்திட்டக் கட்டமைப்புகள் மற்றும் பரிவர்த்தனை வழிமுறைகள் உருவாக்கப்படும். இந்தத் தேவையான திறன் தொகுப்புகளை என்.சி.இ.ஆர்.டி(NCERT) அடையாளம் காணும், மேலும் குழந்தைப் பருவ மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்ட கட்டமைப்பில் அவற்றின் பரிவர்த்தனைக்கான வழிமுறைகளையும் உள்ளடக்கும்.
பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தைக் குறைப்பதின் மூலம் அத்தியாவசிய கற்றலையும் திறனாய்வு சிந்தனையையும் மேம்படுத்துதல்:
4.5. அதிமுழுமையான, விசாரித்து, கண்டறிந்து, கலந்துரையாடி, பகுப்பாய்ந்து கற்றலுக்கு அடித்தளம் மற்றும் திறனாய்வுச் சிந்தனைக்கு இடமளிக்கும் பொருட்டு ஒவ்வொரு பாடத்திலும் அத்தியாவசியங்களுக்கு ஏற்ப பாடத்திட்ட உள்ளடக்கம் குறைக்கப்படும். அத்தியாவசிய உள்ளடக்கங்கள் என்பவை முக்கிய கருத்துக்கள், அம்சங்கள், பயன்பாடுகள் மற்றும் பிரச்சனையைத் தீர்த்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். கற்றல் கற்பித்தல் என்பது அதிக உரையாடல்களுடன் அமைக்கப்படும்; கேள்வி கேட்பது ஊக்குவிக்கப்படும்; மாணவர்களுக்கு ஆழ்ந்த அனுபவக் கற்றலை வழங்கும் வகையில் வகுப்பறை அமர்வுகள் என்பவை எப்பொழுதும் அதிகக் குதூகலம், படைப்பாற்றல், கூட்டுமுயற்சி, ஆய்வு செயல்பாடுகளுடன் நிறைந்ததாக இருக்கும்.
அனுபவத்தின் வழிக் கற்றல்
4.6. அனைத்து நிலைகளிலும் செய்முறைப் பயிற்சியின் மூலம் கற்றல், கலை மற்றும் விளையாட்டு ஒருங்கிணைந்த கல்வி, கதைகூறல் மூலம் கற்பித்தல், பல்வேறு பாடங்களுக்கு இடையிலான தொடர்புகளின் ஆய்வு ஆகியன உள்ளடக்கிய அனுபவக் கல்வி ஏற்றுக்கொள்ளப்படும். கற்றல் பயன்களை எட்டுதலில் ஏற்படும் இடைவெளிகளை நிரப்ப, வகுப்பறை நடவடிக்கைத் திறன் அடிப்படையிலான கற்றல் மற்றும் கல்வியாக மாற்றப்படும். மதிப்பீட்டுக் கருவிகளும் (கற்றலுக்காக, கற்றல், கற்றலாக மதிப்பீடும் உள்ளடங்கியது) ஒரு வகுப்பின் ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல் விளைவுகள், செயல் தகுதி, மனச் சமநிலை ஆகியவற்றுடன் சீரமைக்கப்படும்.
4.7. கலையின் ஒருங்கிணைப்பு என்பது பாடங்களின் கருத்துக்களைக் கற்க, கலை மற்றும் கலாசாரத்தின் பல்வேறு வடிவங்களையும், அணுகுமுறைகளையும் பயன்படுத்தும் கலவையானபாடத்திட்டக் கற்பித்தல் அணுகுமுறை ஆகும். ஒவ்வொரு மட்டத்திலும், அனுபவக்கல்வியின் உந்துதலின் ஒரு பகுதியாக, கலை–ஒருங்கிணைவு கல்வி என்பது மகிழ்வான வகுப்பறை உருவாக்கத்திற்கு மட்டுமன்றி, இந்தியக் கலை மற்றும் கலாசாரத்தை கற்றல் கற்பித்தல் நடைமுறையில் ஒருங்கிணைத்து ஈர்த்துக்கொள்வதும் ஆகும். இப்படியான கலை ஒருங்கிணைந்த அணுகுமுறையானது கல்வி மற்றும் கலாசாரத் தொடர்புகளைப் பலப்படுத்த உதவும்.
4.8. விளையாட்டு ஒருங்கிணைந்த கல்வி என்பது மற்றொரு கலவைப் பாடத்திட்டக் கற்பித்தல் அணுகுமுறை ஆகும். உள்நாட்டு விளையாட்டுகள் போன்றவை உள்ளடக்கிய உடல் செயல்பாடுகள் ஒத்துழைப்பு, சுயமுன்முயற்சி, சுயக்கட்டுப்பாடு, சுயச்சிந்தனை, குழுவேலைகள், பொறுப்பு, நற்குடிமக்கள் போன்ற திறன்களை வளர்க்க உதவும் கற்பித்தல் பயிற்சிகளுக்கு இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. உடலுறுதி பெறுவதை நீண்டகால மனப்பான்மையாகவும், ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தில் (Fit India Movement) வழங்கப்படும் உடல் உறுதிப் படிநிலைகள் தொடர்புடைய வாழ்க்கைத் திறன்களுடன் அடையவும் விளையாட்டு ஒருங்கிணைந்த கல்வி வகுப்பறை நடவடிக்கையில் மேற்கொள்ளப்படும். கல்வியில் விளையாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் உடல் மற்றும் உளநலனுடன் அறிவாற்றல் திறனையும் மேம்படுத்துவதோடு முழுமையான வளர்ச்சியும் தருவதாக அறியப்பட்டுக் கடைப்பிடிக்கப்படுகிறது.
பாடப்பிரிவு தேர்வின் நெகிழ்வுத்தன்மையின் மூலம் மாணவர்களை மேம்படுத்துதல்
4.9. மாணவர்களுக்கு படிப்பிற்கான பாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மை வழங்கப்படும், குறிப்பாக மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, கலை மற்றும் கைத்தொழில், தொழிற்திறன்கள் போன்றவை படிப்பு மற்றும் வாழ்க்கை திட்டங்களை அவர்களே வடிவமைத்துக் கொள்ளும் வகையில் வழங்கப்படும். முழுமையான வளர்ச்சி மற்றும் ஆண்டுதோறும் பாடங்கள் மற்றும் படிப்புகளின் பரவலான தேர்வு இடைநிலைப் பள்ளிக் கல்வியின் புதிய தனித்துவமான அம்சமாக இருக்கும்.. கலை, மானுடவியல், அறிவியல், தொழில் மற்றும் கல்வி ஆகிய பாடங்களுக்குள் பாடத்திட்டம், பாடத்திட்டம் சாராத செயல்பாடுகள், பாட இணை செயல்பாடுகள் எனப் பெரிய அளவிலான வேறுபாடுகள் இருக்காது. ஒவ்வொரு வயதிலும் எது ஆர்வமும் பயனும் தரக்கூடியது என்பதைக் கருத்தில் கொண்டு அறிவியல், வாழ்வியல், கணிதம் ஆகிய பாடங்களுடன் உடற்கல்வி, கலை, கைத்தொழில் மற்றும் தொழில் திறன் பாடங்களும் பள்ளிப் பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும்.
4.10. பலதரப்பட்ட பாட அனுபவங்களையும், நெகிழ்வுத்தன்மையும் உள்ளமைக்கும் பொருட்டு பள்ளிக்கல்வியின் நான்கு நிலைகளும் ஒன்றுவிட்டு ஒரு நாட்களில் கற்பிக்கப்படும். பாடப்பிரிவுகளின் வேறுபட்ட பகுதிகளில், எவையெல்லாம் சாத்தியமாகுமோ அவற்றையெல்லாம் பருவமுறை அல்லது குறுகிய தொகுதிகளை உள்ளடக்கும் வகையில் வேற்று முறைகளும் உருவாக்கப்படும். கலை, அறிவியல், மானுடவியல், மொழிகள், விளையாட்டு மற்றும் தொழில்சார் பாடங்கள் உட்பட பரந்த அளவிலான பாடங்களை அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றின் ரசிக்கத்தக்க நோக்கங்களை அடைவதற்கு மாநிலங்கள் புதுமையான வழிமுறைகளைக் காணலாம்.
பன்மொழி வழக்கும் மொழித்திறனும்
4.11 சிறு குழந்தைகள் தங்கள் வீட்டு மொழி / தாய்மொழியில் குறிப்பிடத்தக்க கருத்துக்களை மிக விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்பது நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது. வீட்டு மொழி பொதுவாகத் தாய்மொழி அல்லது உள்ளூர் சமூகங்களால் பேசப்படும் அதே மொழியாகத்தான் இருக்கும். இருப்பினும், பல மொழி பேசும் குடும்பங்களில் சில சமயங்களில், பிற குடும்ப உறுப்பினர்களால் பேசப்படும் வீட்டு மொழி, சில சமயங்களில் தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியிலிருந்து வேறுபடலாம். சாத்தியமான இடங்களில், குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு வரை, வாய்ப்பு இருந்தால் 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு அப்பால் கற்பிக்கும் மொழி வீட்டு மொழி / தாய்மொழி / உள்ளூர் மொழி / பிராந்திய மொழியாக இருக்கலாம். அதன்பிறகு, வீட்டு / உள்ளூர் மொழி சாத்தியமான இடங்களில் மொழிப் பாடமாகத் தொடர்ந்து கற்பிக்கப்படலாம். இந்த முறை அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள் இரண்டிலும் கடைப்பிடிக்கப்படும். அறிவியல் உட்பட அனைத்துப் பாடத்திற்கும் உயர்தரப் புத்தகங்கள் வீட்டு மொழியில்/ தாய்மொழியில் கிடைக்கும். குழந்தை பேசும் மொழிக்கும் கற்பித்தல் முறைக்கும் இடையில் இருக்கும் இடைவெளிகளைக் கட்டுப்படுத்துவதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும். வீட்டு மொழி/தாய்மொழியில் புத்தகங்கள் படிப்பு சாதனங்கள் இல்லாத பட்சத்தில் வாய்ப்புள்ள இடங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையில் பரிமாற்றத்திற்கான மொழியாக வீட்டு மொழி/தாய்மொழி பயன்படுத்தப்படும். மாணவர்களின் வீட்டு மொழிக்கும் கற்பித்தல் மொழிக்கும் வேறுபாடு இருக்கும் பட்சத்தில் ஆசிரியர்கள் இருமொழி கற்பித்தல் முறை மற்றும் கற்பித்தல் கற்றுக்கொள்ளுதல் சாதனங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப் படுவார்கள். அனைத்து மொழிகளும் உயர்தரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கப்படும். ஒரு மொழி கற்பிக்கப்படுவதற்கும் நன்றாகக் கற்கப்படுவதற்கும் அது கற்பித்தல் மொழியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை.
4.12 ஆய்வு முடிவுகள் நமக்குத் தெளிவாகக் காண்பிப்பது என்னவென்றால் குழந்தைகள் 2 முதல் 8 வயது வரை மொழிகளை மிக விரைவாக கற்றுக் கொள்கிறார்கள். ஆகவே பன்மொழித் தன்மை இளம் மாணவர்கள் மத்தியில் சிறந்த அறிவாற்றல் நன்மைகளைக் கொண்டுள்ளது, அடித்தள நிலையிலிருந்து தொடங்கி குழந்தைகளுக்கு வெவ்வேறு மொழிகள் அறிமுகப்படுத்தப்படும் (ஆனால் தாய்மொழிக்கு ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் இருக்கும்), அனைத்து மொழிகளும் சுவாரஸ்யமான மற்றும் கலந்துரையாடும் பாணியில் கற்பிக்கப்படும், நிறையக் கலந்துரையாடல்கள் உள்ளடக்கியதாகவும் இருக்கும், துவக்க காலங்களில் தாய்மொழியில் ஆரம்ப வாசிப்பு மற்றும் எழுதுதல் இருக்கும். மூன்றாம் வகுப்பிலிருந்து அதற்கு மேல் பிறமொழிகளில் எழுதுதல் மற்றும் வாசித்தல் திறன்கள் வளர்க்கப்படும். நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பிராந்திய மொழி கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்க அதீத முயற்சிகள் மற்றும் முதலீடுகள் செய்யப்படும், குறிப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளுக்கும் இது பொருந்தும். மாநிலங்கள் குறிப்பாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாநிலங்கள் ஒருவருக்கொருவர் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க, அந்தந்த மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையைப் பூர்த்திசெய்ய இருதரப்பு ஒப்பந்தங்களில் நுழையலாம், அதுமட்டுமில்லாமல் இந்திய மொழிகளை நாடு முழுவதும் கற்றுக் கொள்வதற்காக ஊக்குவிக்கலாம். பலதரப்பட்ட மொழிகளை கற்பிக்கவும் கற்றுக் கொள்வதற்கும, மொழி கற்றலைப் பிரபலமடையச் செய்வதற்கும் தனித்துவமான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
4.13. மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது தொடரும். அரசியலமைப்பு, மக்கள், மண்டலம், கூட்டரசு இவற்றின் விருப்பம் மற்றும் பன்மொழிக் கற்றலின் அவசியம், தேசிய ஒற்றுமையை ஊக்குவித்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மும்மொழிக் கொள்கை செயல்படுத்துவது தொடரும். எனினும் மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதில் மிகுந்த நெகிழ்வுத் தன்மை கடைப்பிடிக்கப்படும். எந்த ஒரு மொழியும் மாநிலத்தின் மேல் திணிக்கப்படாது. மும்மொழி கற்றல் என்பது மாநிலம், மண்டலம் மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப மொழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எனினும், மூன்றில் இரண்டு மொழி இந்திய மொழியாக இருத்தல் நல்லது. குறிப்பாக, மாணவர்கள் தான் கற்கும் மொழியில் ஒன்று அல்லது மேற்பட்ட மொழிகளை மாற்றிக்கொள்ள நினைக்கும் பட்சத்தில் 6ஆம் அல்லது 7ஆம் வகுப்பில் மாற்றிக்கொள்ளலாம். மேல்நிலைப்பள்ளிக் கல்வியை முடிக்கும் முன் மூன்று மொழிகளிலும் (ஏதேனும் ஒரு இந்திய மொழியில் இலக்கியம்) அடிப்படை செயல்முறையில் தேர்ச்சி பெறுதல் அவசியம்.
4.14. அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களைப்பற்றி மாணவர்கள் தம் தாய்மொழியிலும் ஆங்கிலத்திலும் சிந்திப்பதற்கும் பேசுவதற்கு ஏதுவாக இருமொழிகளிலமைந்த (bilingual) உயர்தரப் பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல்–கற்பித்தல் உபகரணங்கள் தயாரிப்பில் எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
4.15. உலகம் முழுவதிலும் பல வளர்ந்த நாடுகள் நிரூபித்திருப்பது போல, ஒருவர் தமது சொந்த மொழியில், கலாச்சாரத்தில், பாரம்பரியத்தில் நன்கு கல்வி கற்றவராக இருப்பதென்பது கல்விசார்ந்த, சமூக, தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு அதிக பயனளிப்பதாக உள்ளது மாறாகத் தடையாக இருப்பதில்லை. இந்திய மொழிகளனைத்தும் செழுமையானதும், அறிவியல் பூர்வமானதும், அழகியல் நிறைந்ததும், அதிகமாகப் பேசப்படுபவையாகவும் உள்ளன. மேலும், மிகவும் அதிக எண்ணிக்கையிலான தொன்மையான மற்றும் நவீன இலக்கியங்கள் (செய்யுள் மற்றும் உரைநடை), திரைப்படங்கள், இசை உள்ளிட்டவை இயற்றப்பட்ட மொழிகளாக உள்ள இம்மொழிகள் இந்தியாவின் தேசிய அடையாளத்தையும், செழிப்பையும் அமைத்திட உதவுகின்றன. அனைத்து இளம் இந்தியர்களும் கலாச்சாரச் செறிவிற்கும் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் நோக்கத்தில் தங்கள் நாட்டின் செழுமை நிறைந்ததும், பரந்த எண்ணிக்கையிலமைந்ததுமான மொழிகள் மற்றும் அவற்றின் இலக்கியங்கள் கொண்டுள்ள பொக்கிஷங்களை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.
4.16 எனவே நாட்டிலுள்ள ஒவ்வொரு மாணவ மாணவியும், சில நேரங்களில் 6-8 ஆம் வகுப்புக்களில் ” ஒரே இந்தியா வளமான இந்தியா” என்னும் முன்னெடுப்பின் கீழ் ஒரு உற்சாகமூட்டும் செயல் வழிக் கற்றல் திட்டம் அல்லது செயல்பாட்டுப் பாடத்தில் (project / activity) பங்கெடுப்பர். இந்தச் நடைமுறை பாடத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் பெரும்பான்மையான முக்கிய மொழிகளுக்கிடையேயான குறிப்பிடத்தக்க / பிரமிக்கத்தக்க (Remarkable) ஒற்றுமையைப் பற்றிக் கற்றுக் கொள்வார்கள்.
உதாரணத்திற்கு ஒரே மாதிரியான உச்சரிப்பு, அறிவியல் பூர்வமாக, வரிசைப்படுத்தப்பட்ட எழுத்துக்கள், வார்த்தைகளின் மூலம் (origin/Source) சமஸ்கிருதம் அல்லது இதரச் செவ்வியல் (Classical) மொழிகளில் ஒன்றாயிருத்தல் (Same Source), ஒரு மொழியின் மீதான மற்றொரு மொழியின் தாக்கம்/ (rich inter-influence) மிக அழுத்தமான நேர்மறை பாதிப்புகள் / ஆழமான தாக்கம் (rich influence) மற்றும் வேறுபாடுகள் போன்றவற்றை இந்தச் செயல்வழிக் கற்றல் முன்னெடுப்பின் மூலம் கற்பர். மேலும் எந்தப் பகுதியில் என்ன மொழி பேசப்படுகிறது என்பதையும் பழங்குடி மக்கள் பேசக்கூடிய மொழிகளின் தன்மை, அவற்றின் கட்டமைப்பு, இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளின், மக்களால் வழக்கமாகப் பேச்சு மொழியில் பயன்படுத்தப்படக் கூடிய சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களோடு அந்த ஒவ்வொரு மொழியின் உன்னதமான மனித மனங்களை மேம்படுத்தக் கூடிய இலக்கியத்தின் ஒரு சிறுபகுதியையும் (தேவைப்பட்டால் மொழிபெயர்ப்புகளின் மூலம்) நமது மாணவ மாணவியர் கற்பர். இப்படிப்பட்டதொரு செயல்வழிக் கற்றல் நமது மாணவர்களுக்கு இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தையும், பன்முகத்தன்மையையும், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தத்துவத்தைப் புரியவைப்பதோடு, வாழ்க்கை முழுவதும் நாட்டின் எப்பகுதியிலிருக்கும் இந்தியரோடும் முதல் முறை சந்திக்கும் பொழுது எந்த விதத் தயக்கமுமின்றி உரையாடலைத் தொடங்குவதற்குத் தேவையான பயிற்சியையும் அளிக்கும். இந்தச் செயல்வழிக் கற்றல் மாணவர்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய ஒரு பாடமாக மட்டுமே இருக்கும். இந்தப் பாடத் திட்டம் எந்த ஒரு முறையிலும் மதிப்பிடப்படாத, தேர்வு பாடத் திட்டத்தின் கீழ் வராத ஒரு செயல் திட்டம்.
4.17 இந்தியச் செவ்வியல் / செம்மொழிகளின் முக்கியத்துவம், தொடர்பு மற்றும் அழகியல் போன்ற காரணிகள் புறந்தள்ளப் பட்டுவிடக் கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது வரைவில் குறிப்பிடப் பட்டுள்ளதும் மற்றுமொரு முக்கியமான நவீன மொழியுமான சமஸ்கிருதம், ஒன்றுகூட்டப்பட்ட கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளின் இலக்கியங்களைக் காட்டிலும் செறிவு மிக்கதாகவும், கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டிடக் கலை, உலோகவியல், நாடகம், கவிதை, கதை சொல்லல் மற்றும் பிற (சமஸ்கிருத ஞான மரபு என்றறியப்பட்ட) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாலும், மதச் சார்பற்றவர்களாலும், வாழ்வின் பலதரப்பட்ட சமூகப் பொருளாதார மற்றும் வாழ்வியல் முறைகளைச் சார்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ஏராளமான செல்வங்களையும் உள்ளடக்கியுள்ளது. எனவே சமஸ்கிருதம், மும்மொழிப் பாடத்திட்டத்தின் ஒரு மொழியாகப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கியமான வளமூட்டக் கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும். இந்த மொழிச் சுவையுடனும், அனுபவப் பூர்வமாகவும் மட்டுமல்லாமல் தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் சமஸ்கிருத ஞான மரபுகளின் வழியில் முக்கியமாக ஒலிப்பு மற்றும் உச்சரிப்பு முறைகளின் மூலமாகக் கற்பிக்கப்படும். ஆரம்ப மற்றும் இடைநிலை சமஸ்கிருதப் பாடப் புத்தகங்கள் எளிய தரமான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு, மாணவர்கள் உண்மையிலேயே அனுபவித்துக் கற்கும் வண்ணம் சமஸ்க்ரித மொழியின் மூலமே கற்பிக்கப்படும்.
4.18 இந்தியாவின் மற்ற செவ்வியல் / செம்மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியாவிலும் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகள் உள்ளன. இவற்றோடு பாலி, பாரசீகம், மற்றும் பிராகிருதம் போன்ற தொன்மையான மொழிகளின் இலக்கியங்களும் கூட அவற்றின் சிறப்பிற்காகவும், இனிமையான வாசிப்பனுபவத்திற்காகவும் வருங்காலத் தலைமுறையின் மேம்பாட்டிற்காகவும் பாதுகாக்கப் படவேண்டும். இந்தியா ஒரு முற்றிலும் வளர்ச்சியடைந்த நாடாக உருமாறிக்கொண்டிருப்பதால் அடுத்த தலைமுறையினர் ஒரு பரந்துபட்ட மற்றும் அழகிய செவ்வியல் இலக்கியங்களைக் கற்கவும் அவற்றால் மேம்படவும் விரும்புவர். சமஸ்கிருதத்தோடு இந்தியாவின் செவ்வியல் இலக்கியங்களைக் கொண்டுள்ள இதர மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் ஒரிய, பாலி, பாரசீக மற்றும் பிராகிருத மொழிப்பாடங்களும் பரவலாக நிறையப் பள்ளிகளில் விருப்பப்பாடங்களாக இணைய வழியில் வழங்கப்படுவதற்குண்டான சாத்தியங்கள் உருவாக்கப்படும். இந்தப் புதுமையான பரீட்சார்த்த முயற்சிகள் இந்த மொழிகள் உயிர்ப்புடனும், துடிப்புடனும் இருப்பதை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்றன. இதே போன்ற முயற்சிகள் சிறந்த வளமான பேச்சு மற்றும் எழுத்திலக்கியங்களையும், கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஞான மரபுகளை உள்ளடக்கிய பிற மொழிகளைப் பாதுகாக்கவும் எடுக்கப்படும்.
4.19 குழந்தைகளின் மேம்பாட்டிற்காகவும், இந்த வளமான மொழிகளும் அவற்றின் கலைப் பொக்கிஷங்களும் பாதுகாக்கப் படவேண்டும் என்பதற்காகவும் அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குக் குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது இந்தியாவின் ஏதாவது ஒரு செவ்வியல் மொழியையும் அதனோடு தொடர்புடைய இலக்கியத்தையும் பரீட்சார்த்த மற்றும் புதுமையான முறைகளில் தொழில் நுட்ப உத்திகளையும் புகுத்தி 6 – 12 வகுப்புகளில் இடைநிலைப் பள்ளியிலிருந்து, மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் கற்பிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
4.20 மிகச்சிறந்த இந்திய மொழிப் பாடத் திட்டங்களோடு ஆங்கிலம் மற்றும் அயல் நாட்டு மொழிகளான கொரியா, ஜப்பானிய. ஸ்பானிய, போர்ச்சுக்கீசியர் மற்றும் ரஷ்ய மொழிகளும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும். இது மாணவர்களுக்கு உலகின் பிற கலாச்சாரங்களை பற்றிக் கற்றுக் கொண்டு தங்களது உலக அறிவையும், உலக நாடுகளுக்குப் புலம் பெயரும் திறன்களையும் அவரவர் விருப்பத்திற்கும் , குறிக்கோள்களுக்கும் ஏற்ப மேம்படுத்திக் கொள்ளப்பயன்படும்.
4.21 அனைத்து மொழிகளைப் பயிற்றுவித்தல், மொழிகளின் கலாச்சாரக் கூறுகளோடு (திரைப்படம், நாடகம், கதை சொல்லல், கவிதை மற்றும் இசை போன்றவற்றையும் அவற்றோடு தொடர்புடைய பல்வேறு பாடங்களையும், உண்மையான வாழ்வனுபவங்களையும்) ஒன்றிணைக்கப்பட்டும் விளையாட்டுப் பூர்வமாக (gamification and apps), மாற்றப்பட்டும், செயலிகள் மூலமாகவும் புதுமையான பரீட்சார்த்த முறையில் மேம்படுத்தப்படும்.
4.22 இந்தியச் சைகை மொழி (ISL – Indian Sign Language) நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியாக வரையறுக்கப்பட்டுக் கேட்கும் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான தேசிய மற்றும் மாநில பாடத் திட்டங்களுக்குத் தேவையான உபகரணங்கள் (materials) உருவாக்கப் படும். எங்கு முடியுமோ, எங்கெல்லாம் தேவையிருக்கிறதோ அங்கெல்லாம் பிராந்தியச் சைகை மொழிகள் (Local Sign Language) மதிக்கப் படவும், கற்றுக் கொடுக்கப் படவும் வேண்டும்.
அத்தியாவசியப் பாடங்கள், திறன்கள் மற்றும் திறன்களின் பாடத்திட்ட ஒருங்கிணைப்பு
4.23 மாணவர்களுக்குத் தங்களுடைய விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்வதில் பெரும் வாய்ப்புகளும் இலகுத் தன்மையும் இருக்க வேண்டியது அவசியம் என்ற போதிலும் இன்றைய வேகமாக மாறிவரும் உலகத்தில் நல்ல, வெற்றிகரமான, புதுமையான முயற்சிகளை முன்னெடுக்கக்கூடிய, மாற்றங்களுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளக்கூடிய, உற்பத்தித் திறன் மிகுந்த மனிதர்களாகத் தங்களை வளர்த்தெடுத்துக் கொள்வதற்கு சில முக்கிய பாடங்களையும், திறன்களையும், மற்றும் திறமைகளையும் / தகுதிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். மொழித்திறன்களோடு சேர்த்துப் பின்வரும் திறன்களையும் மாணவர்கள் பெற்றிருத்தல் வேண்டும். அறிவியல் நுட்பமும் (Scientific Temper ) சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையையும் கற்பனைத் திறன், புத்துருவாக்கம் (Innovativeness), அழகியல், கலை, வாய்மொழி மற்றும் எழுத்து மொழித் தொடர்புத் திறன்கள், உடல் நலம் மற்றும் ஊட்டச் சத்து, உடற்கல்வி, உடற்பயிற்சி, உடல்நலம் மற்றும் விளையாட்டு, கூட்டு முயற்சி மற்றும் குழுமுயற்சித் திறன்கள், சிக்கல்களைத் தீர்த்தல் மற்றும் தர்க்க ரீதியான பகுத்தறிவு, அறவழியிலான மற்றும் தார்மீகத்தின் அடிப்படையிலான பகுத்தறிவு, மனித மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் பற்றிய அறிவுப் பயிற்சியும், தொழில் அனுபவம் மற்றும் திறன்கள், எண்முறைக் கல்வியறிவு (டிஜிட்டல்), குறியீட்டுத் திறன் (கோடிங் ஸ்கில்ஸ்), கணக்கீட்டுச் சிந்தனைத் திறன் (computational Thinking Skills ), பாலின உணர்திறன் (Gender Sensitivity ), தார்மீகக் கடமைகள், குடிமகனுக்குரிய திறன்களும், விழுமியங்களும், இந்தியாவைப் பற்றிய அறிவு, நீர் மற்றும் பிற ஆதாரங்களைச் சேமிப்பது உள்ளிட்ட சுற்றுப் புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வு, சுத்தம் மற்றும் சுகாதாரம், சமகாலத்திய விவகாரங்கள், நிகழ்வுகள், உள்ளூர், மாநில, தேசிய மற்றும் உலகளாவிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றிய அறிவு.
4.24 தகுந்த நேரங்களில் எல்லா நிலைகளிலும் பயிலும் மாணவர்களின் பல்வேறுபட்ட திறன்களை வளர்ப்பதற்காகச் சமகாலப் பாடங்களான செயற்கை நுண்ணறிவு, வடிவமைப்புச் சிந்தனை, முழுமையான ஆரோக்கியம், கரிம வாழ்க்கை, இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை, சுற்றுப்புற சூழல் கல்வி, உலகளாவிய குடியுரிமைக் கல்வி போன்றவை பொருத்தமான கட்டங்களில் அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்ட மற்றும் கல்வி முயற்சிகள் இந்த பல்வேறு முக்கியமான திறன்களை வளர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும்.
4.25 கணிதமும் கணிதச் சிந்தனையும், இந்தியாவிற்கும், இந்தியாவின் எதிர்காலத்திற்கும் செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழிக்கற்றல் (Machine Learning) மற்றும் தரவு அறிவியல் (Data Science) போன்ற பல்வேறுபட்ட வளர்ந்துவரும் துறைகளிலும் தொழில்களிலும், இந்தியாவின் தலைமைப் பொறுப்புகளுக்கும் மிகவும் அவசியம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே அடித்தளக் கல்விநிலையிலிருந்து பள்ளிக்கல்வி முழுமையடையும் வரையில் கணிதச் சிந்தனையை மேலும் ரசிக்கத் தக்கதாகவும், ஈடுபாடு செலுத்தக் கூடியதாகவும், பல்வேறு புதிர்களையும் விளையாட்டுக்களையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தக் கூடிய முறைகளைப் பயன்படுத்தி கணித மற்றும் கணக்கீட்டுத் திறன்களை வளர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் படும். குறியீட்டியலை (coding) உள்ளடக்கிய செயல் வழிக்கற்றல் பாடத் திட்டங்கள் இடை நிலை கல்வித் திட்டத்திலிருந்து அறிமுகப் படுத்தப்படும்.
4.26 ஆறு முதல் எட்டு வகுப்பு வரையிலான மாணவர்கள் உள்ளூரின் திறன் தேவைகளுக்கேற்ப மாநிலங்களாலும், உள்ளூர்ச் சமூகங்களாலும் குறித்துக் கொடுக்கப்பட்ட கைவினைத் தொழில்களான, தச்சு வேலை, மின்வேலை, உலோக வேலை, தோட்ட வேலை, மட்பாண்டங்கள் செய்தல், நுண் கலைகள் / கைவினைக் கலைகள் மற்றும் இன்னபிற தொழில் தேவைகள் பற்றிய சுவாரஸ்யமான கணக்கெடுப்புகள் மற்றும் அனுபவப் பயிற்சி பாடங்களாகக் கற்றுக் கொள்வார்கள். NCFSE 2020 -2021ஐத் தயாரிக்கும் பொழுது NCERT 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்குத் தோதான ஒரு பயிற்சியை அடிப்படையாகக் கொண்டதொரு பாடத் திட்டத்தை வடிவமைக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் அனைத்து மாணவர்களும் உள்ளூர்த் தச்சு, தோட்ட வேலை மற்றும் மட்பாண்டம் செய்யும் கைவினைக் கலைஞர்களிடம் பத்து நாட்கள் புத்தகப் பையற்ற தொழிற்பயிற்சி பெறுவர். ஆறு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இதே போன்ற தொழிற்பயிற்சிக் கல்வி கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். இந்தக் கற்றல் வாய்ப்புகள் விடுமுறைக் காலங்களிலும் கூட வழங்கப்படும் . இணைய வழியிலான தொழிற் கல்வியும் கூட வழங்கப்படும். நுண்கலைகள், புதிர்கள் மற்றும் விளையாட்டுத் தொழிற் பயிற்சிகளை உள்ளடக்கிய திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஆண்டு முழுதும் இப்படிப்பட்ட புத்தகப் பைகளற்ற கல்வி அட்டவணைகளைத் தயாரிப்பது ஊக்குவிக்கப்படும். குறிப்பிட்ட இடைவெளிகளில் குழந்தைகள் அவர்களது பள்ளிகளுக்கு வெளியேயுள்ள வரலாற்று , பண்பாட்டு மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் உள்ள இடங்களுக்கும் நினைவுச்சின்னங்களைச் சுற்றிப்பார்ப்பதற்கும் உள்ளூர்க் கலைஞர்களையும் , கைவினைஞர்களையும் சந்திப்பதற்கும் , உள்ளூரில்/தாலுகாவில்/மாவட்டத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களைப் பார்ப்பதற்கும் அழைத்துச் செல்லப்படுவர் .
4.27 இந்தியாவைப் பற்றிய அறிவு என்பது பண்டைய இந்தியாவைப் பற்றிய அறிவாகவும், நவீன இந்தியாவிற்கு, பண்டைய இந்தியா அளித்த பங்களிப்புகளை பற்றியதாகவும், அதன் பங்களிப்புகள், போராட்டங்கள், கல்வி பற்றிய எதிர்காலக் கனவுகள் மற்றும் இன்ன பிற காரணிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எங்கெல்லாம் தேவைப் படுகிறதோ அங்கெல்லாம் இந்தக் காரணிகள் துல்லியமாகவும் அறிவியல் பூர்வமாகவும், பள்ளிக் கல்வித் திட்டம் முழுவதிலும் உள்ளிடப்படும். குறிப்பாகக் கணிதம் வானியல், தத்துவம், யோகம், கட்டிடக் கலை, மருத்துவம், விவசாயம், பொறியியல். மொழியியல், இலக்கியம், தனிநபர் மற்றும் குழு விளையாட்டுகள் / உடல் மற்றும் மனத்திறன் தனிநபர் விளையாட்டுகள் / குழு விளையாட்டுகள் (Sports & Games ), நிர்வாகம், அரசியல், இயற்கைப் பாதுகாப்பு உள்ளிட்ட பாடங்களை உள்ளடக்கிய இந்திய ஞான மரபு, பழங்குடி அறிவு, மரபு சார்ந்த அறிவு மற்றும் பாரம்பரியக் கற்றல் முறைகள் மூலம் கற்பிக்கப் படும். பழங்குடி இன–மருத்துவ நடைமுறைகள், வன மேலாண்மை, பாரம்பரிய (கரிம) பயிர் சாகுபடி, இயற்கை வேளாண்மை போன்ற குறிப்பிட்ட படிப்புகளும் கிடைக்கப் பெறும். இந்திய அறிவு முறைகள் குறித்த ஈடுபாட்டுடன் கூடிய பாடநெறி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ஒரு தேர்வாக கிடைக்கும். வேடிக்கை மற்றும் சுதேசி விளையாட்டுகளின் மூலம் பல்வேறு தலைப்புகள் மற்றும் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காக பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்படலாம். அகவெளிச்சத்தைத் தூண்டக்கூடிய நவீன மற்றும் பண்டைய இந்தியாவின் அறிவியலிலும் அதனைத் தாண்டியும் சாதனை புரிந்த விடிவெள்ளிகளை பற்றிய ஆவணக் காணொளிகள் பள்ளிக்கல்வித் திட்டமெங்கும் குறிப்பிடத்தக்கத் தருணங்களில் காட்டப்படும். கலாசாரப் பரிமாற்ற திட்டங்களின் ஒரு பகுதியாக மாணவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்ல ஊக்குவிக்கப்படுவார்கள்.
.4.28 மாணவர்களுக்கு மிகச்சிறிய வயதிலேயே “சரியானவற்றைச் செய்ய வேண்டியதன்” முக்கியத்துவமும், நெறிமுறை பிறழாத முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான தர்க்க ரீதியான கட்டமைப்புகளும் கற்றுக் கொடுக்கப்படும். பின்னாட்களில் குழந்தைகள் தங்கள் வாழ்வியல் தார்மீக நெறிமுறை தவறாத விழுமியங்களை மூச்சுக்காற்றென அரவணைத்து, அறம் சார்ந்த பிரச்சினைகளில் பல்வேறு கோணங்களிலிருந்து கூர்ந்து நோக்கித் தீர்க்க ஆராய்ந்து உருவாக்கிய நிலையை / வாதத்தை தங்கள் வாழ்வின் அனைத்து வேலைகளிலும் நெறி தவறாது பயன்படுத்தும் வண்ணம் விரிவுப்படுத்தப்பட வேண்டிய நோக்கத்தோடு மேற்குறிப்பிடப்பட்ட பாடத்திட்டங்கள், ஏமாற்றுதல், வன்முறை, கருத்துத் திருட்டு, குப்பை போடுதல், சகிப்புத் தன்மை, சமத்துவம், பச்சாதாபம் மற்றும் இன்னபிற தலைப்புகளையொட்டி விரிவுபடுத்தப்படும். இப்படிப் பட்ட நெறிமுறைகள் சார்ந்த பகுத்தறிவு புகுத்தப் படுவதால் அனைத்து மாணவர்களிடத்திலும் பாரம்பரிய இந்திய விழுமியங்களும் மற்றும் அனைத்து அடிப்படை மனித மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களும் வளர்த்தெடுக்கப்படும். (உதாரணத்திற்கு சேவை அகிம்சை, தூய்மை, சாந்தம், சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை, பன்மைத்துவம், நெறிபிறழா நடத்தை, பாலின உணர்திறன், பெரியோருக்கு மரியாதை, அனைவருக்கும் மரியாதை மற்றும் அவர்களது பின்புலத்திற்கப்பாற்பட்ட உள்ளார்ந்த திறமைகள், சுற்றுச் சூழலுக்கு மரியாதை, உதவி மனப்பான்மை, மரியாதை, பொறுமை, மன்னிப்பு, பச்சாதாபம், இரக்கம், தேசப்பற்று, ஜனநாயகப் பார்வை, நேர்மை, கடமையுணர்ச்சி, நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்) குழந்தைகள் அசலான அதாவது கலப்படமற்ற தூய உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பக் கூடிய இந்தியப் பாரம்பரியத்திலிருந்து வந்த பஞ்சத்தந்திர, ஜாதகா மற்றும் நீதிக்கதைகளைப் படிப்பதற்கும் கற்றுக் கொள்வதற்குமான வாய்ப்பு கிடைப்பதோடு இந்தக் கதைகள் உலக இலக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் அவர்கள் கற்றுக் கொள்ள முடியும். அனைத்து மாணவர்களும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சில பகுதிகளைப் படிக்க வேண்டும் என்பது அவசியமெனக் கருதப்படும். உடல் நலம், தடுப்பு ஆரோக்கியம், மனநலம், நல்ல ஊட்டச்சத்து, தனிமனித மற்றும் பொதுச் சுகாதாரம், பேரிடர் வினையாக்கம் மற்றும் முதலுதவி போன்ற தலைப்புகளும் பாடத் திட்டத்தில் சேர்க்கப் படுவதோடு, மது, புகையிலை மற்றும் இதரப் போதை வஸ்துக்களால் உடல் நலத்திற்கு ஏற்படும் கேடுகளும், தீங்குகளும் அறிவியல் பூர்வமாக விளக்கப்படும்.
4.29 அடிக்கட்டமைப்பு நிலையிலிருந்து அனைத்துக் கற்பித்தல் மற்றும் பாடத் திட்டங்களும் இந்திய மரபில் ஆழமாக வேரூன்றியிருக்கக் கூடிய மண் சார்ந்த சூழலும் பண்பாட்டு நெறிமுறைகளும், பாரம்பரியங்களும், மரபுகளும், மொழியும், தத்துவமும், புவியியலும், பண்டைய மற்றும் சமகாலத்திய அறிவும், சமூக மற்றும் அறிவியல் தேவைகளும், மரபு சார்ந்த மற்றும் பாரம்பரியக் கற்றல் வழிமுறைகளும் இன்னபிற காரணிகளின் அடிப்படையில் கல்வி மாணவர்களது வாழ்வின் தன்மையோடு பொருந்திப் போவதை உச்சநிலைக்குக் கொண்டு செல்லவும் இன்றைய வாழ்வியலோடு தொடர்புடையதாகவும், சுவையானதாகவும், அவர்களது செயல்திறனை அதிகரிக்கும் படியும் முற்றிலுமாக மாற்றிக் கட்டமைக்கப் படவேண்டும். கதைகள், கலை, தனி நபர் மற்றும் குழு / மன / உடல் விளையாட்டு, உதாரணங்கள், கணக்குகள் மற்றும் இன்ன பிற பாடங்கள் முடிந்தளவுக்கு இந்திய மற்றும் பிராந்திய நிலப்பரப்பின் சூழல் சார்ந்து இருக்க வேண்டும். இப்படிக் கற்றல் வேர்களிலிருந்து நிகழும் போது மட்டுமே இயற்கையிலேயே கருத்துக்களும, கற்பனைவளமும், சிந்தனைகளும் சிறப்பாக முளைவிடும்.
பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் (NCFSE):
4.30 தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ அடிப்படையாக வைத்து, முதன்மை பாடத்திட்டத்திற்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு, மாநில அரசுகள், அமைச்சகங்கள் தொடர்புடைய மத்திய மாநில அரசின் துறைகள், மற்றும் பல வல்லுநர்களுடன் விவாதித்து, பள்ளிக்கல்விக்கு புதிய மற்றும் விரிவான தேசியப் பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குதல் போன்றவற்றை NCERT மேற்கொள்ளும்; இது அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் கிடைக்கும். ஆவணத்தின் இந்தப் பகுதி (NCFSE) இனி ஒவ்வொரு 5-10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பார்வையிடப்பட்டுப் புதுப்பிக்கப்படும்.
தேசியப் பாடநூல்களில் உள்ளூர் சார்ந்த சுவை பொதிந்த உள்ளடக்கம்
4.31. பாடத்தின் உள்ளடக்க குறைப்பு மற்றும் பாடத்திட்டத்தின் அதிகரித்த நெகிழ்வுத்தன்மை, மேலும் மனன வழிக்கற்றல் இல்லாமல், புதுப்பிக்கப்பட்ட ஆக்கச் செயல் வழிக்கற்றல் திறனுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் மாற்றங்களுடன் இருக்க வேண்டும். அனைத்துப் பாடப்புத்தகங்களும் தேசிய மட்டத்தில் முக்கியமானதாகக் கருதப்படும் அத்தியாவசிய முக்கிய பொருள்களை (கலந்துரையாடல், பகுப்பாய்வு, எடுத்துக்காட்டுகள் மற்றும் பயன்பாடுகளுடன் சேர்த்து) கொண்டிருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும், ஆனால் அதே நேரத்தில் உள்ளூர்ச் சூழல்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப விரும்பிய நுணுக்கங்கள் மற்றும் துணைப் பொருட்கள் இருக்கும்.
சாத்தியமான இடங்களில், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் தாங்கள் பயன்படுத்தும் பாடப்புத்தகங்களிலும் தேர்வுகள் இருக்கும் – தேவையான தேசிய மற்றும் உள்ளூர் பொருள்களைக் கொண்ட பாடப்புத்தகங்களின் தொகுப்பிலிருந்து – அவர்கள் கற்பிப்பதற்காக அவர்களின் சொந்த கற்பித்தல் பாணிகளுக்கும் அவர்களின் மாணவர்கள் மற்றும் சமூகங்களின் தேவைகளுக்கும் மிகவும் பொருத்தமான வகையில் இருக்கும்.
4.32. மாணவர்கள் மற்றும் கல்வி முறை மீது பாடநூல் விலைகளின் சுமையைக் குறைக்கும் பொருட்டு, அத்தகைய தரமான பாடப்புத்தகங்களை மிகக் குறைந்த செலவில் – அதாவது உற்பத்தி / அச்சிடும் செலவில் வழங்குவதே இதன் நோக்கம். SCERTகளுடன் இணைந்து NCERT-ஆல் உருவாக்கப்பட்ட உயர்தரப் பாடநூல் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இது நிறைவேற்றப்படலாம். கூடுதல் பாடநூல் பொருட்களுக்கு பொது மற்றும் புரவலர்த்தன்மை கொண்ட தனியார் கூட்டுறவை வளர்ப்பதன் மூலம் நிதியளிக்க முடியும், இது அத்தகைய உயர்தரப் பாடப்புத்தகங்களை மலிவு விலையில் எழுத, நிபுணர்களை ஊக்குவிக்கும். மாநிலங்கள் தங்கள் மாநிலச் சிறப்பியல்புகளை இணைத்து சொந்தப் பாடத்திட்டங்களைத் தயாரித்துக்கொள்ளலாம் (முடிந்தவரை NCFSE அடிப்டையாகக் கொண்ட, NCERT ஆல் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகப் பொருட்களை அடிப்படையாகக்கொண்டு). அவ்வாறு செய்யும்போது, NCERT பாடத்திட்டம் தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் இத்தகைய பாடப்புத்தகங்கள் கிடைப்பது ஒரு முன்னுரிமையாக இருக்கும். இதனால் அனைத்து மாணவர்களுக்கும் உயர்தரக் கற்றல் அனுபவம் கிடைக்கும். பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அனைத்துப் பாடப்புத்தகங்களின் தரவிறக்கம் செய்யக்கூடிய மற்றும் அச்சிடக்கூடிய பதிப்புகளுக்கான அனுமதித்தல் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு NCERT மூலம் உதவப்படும். இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தளவாடச் சுமையைக் குறைக்கவும் உதவும்.
4.33 பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் பொருத்தமான மாற்றங்கள் செய்வதன் மூலம், பள்ளிப் பைகள் மற்றும் பாடப்புத்தகங்களின் எடையைக் கணிசமாகக் குறைக்க, NCERT, SCERT, பள்ளிகள் மற்றும் கல்வியாளர்களால் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மாணவர் மேம்பாட்டிற்கான மதிப்பீட்டை மாற்றியமைத்தல்
4.34 நமது பள்ளிக்கல்வி அமைப்பின் மதிப்பீட்டின் முதன்மை நோக்கமானது, கற்றல் அளவை மற்றும் முதன்மையாக மனப்பாடம் செய்யும் திறன்களைச் சோதிப்பதில் இருந்து, மிகவும் வழக்கமான மற்றும் கற்றலின் விளைவைச் சோதிக்கக்கூடிய ஒன்றாக மாறும். மேலும் இது திறனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இது நமது மாணவர்களுக்குக் கற்றல் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, மேலும் அதிகச் சோதனைகள் பகுப்பாய்வு, விமர்சனச் சிந்தனை மற்றும் கருத்தியல் தெளிவு, ஒழுங்குத்திறன் போன்றவற்றை ஊக்குவிக்கிறது. மதிப்பீட்டின் முதன்மை நோக்கம் உண்மையில் கற்றலுக்காகவே இருக்கும். இது ஆசிரியர் மற்றும் மாணவர் மற்றும் முழு பள்ளி முறைக்கும் உதவும், அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தக் கற்பித்தல்–கற்றல் செயல்முறைகளைத் தொடர்ந்து பண்படுத்துகிறது. கல்வியின் அனைத்து மட்டங்களிலும் மதிப்பீடு செய்வதற்கான அடிப்படைக் கொள்கையாக இது இருக்கும்.
4.35. பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டிற்கான அனைத்து மாணவர்களின் தர மதிப்பீட்டு அட்டை, பள்ளிகளால் பெற்றோருக்குத் தெரிவிக்கப்படுகிறது, இது உத்தேசத் தேசிய மதிப்பீட்டு மையம், NCERT மற்றும் SCERT ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் முழுமையாக மறுவடிவமைக்கப்படும். முன்னேற்ற அட்டை ஒரு முழுமையான, 360 டிகிரி, பல பரிமாண அறிக்கையாக இருக்கும், இது அறிவாற்றல், பாதிப்பு மற்றும் உளவியல் சிந்திப்பு களங்களில் ஒவ்வொரு கற்றவரின் தனித்துவத்தையும் முன்னேற்றத்தையும் விரிவாகப் பிரதிபலிக்கிறது இதில் சுய மதிப்பீடு மற்றும் சக மதிப்பீடு, மற்றும் திட்ட அடிப்படையிலான மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான கற்றல், வினாடி வினாக்கள், பங்கு நாடகங்கள், குழு வேலை, இலாகாக்கள் போன்றவற்றில் குழந்தையின் முன்னேற்றம் மற்றும் ஆசிரியரின் மதிப்பீட்டை உள்ளடக்கியது. முழுமையான தர மதிப்பிட்டு அட்டை (progress card) வீடு மற்றும் பள்ளிக்கு இடையே ஒரு முக்கியமான இணைப்பை உருவாக்கும், மேலும் பெற்றோர்கள்–ஆசிரியர் சந்திப்புகளுடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முழுமையான கல்வி மற்றும் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபடுவார்கள். மதிப்பீட்டு அட்டை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் ஒவ்வொரு மாணவருக்கும் எவ்வாறு ஆதரவளிப்பது (support) என்பது குறித்த மதிப்புமிக்க தகவல்களையும் வழங்கும்.
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மென்பொருளை மாணவர்களுக்காக உருவாக்கி, அவர்களின் பள்ளி ஆண்டுகளில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கற்றல் தரவு மற்றும் ஊடாடும் கேள்வித்தாள்களின் அடிப்படையில் அவர்களின் வளர்ச்சியைக் கண்காணிக்க உதவலாம், மாணவர்களுக்கு அவர்களின் பலங்கள், ஆர்வமுள்ள பகுதிகள் மற்றும் கைவண்ணம் செலுத்த வேண்டிய பகுதிகள் குறித்த மதிப்புமிக்க தகவல்களை வழங்குவதற்காகவும், இதன் மூலம் அவர்களுக்கு உகந்த தொழில் தேர்வுகளை தெரிவு செய்ய உதவலாம்.
4.36. வாரியத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் உள்ளிட்ட இடைநிலைப் பள்ளித் தேர்வுகளின் தற்போதைய தன்மை – மற்றும் இன்றைய பயிற்சி (கோச்சிங்) முறை, குறிப்பாக மேல்நிலைப்பள்ளி மட்டத்தில் மிகவும் தீங்கு விளைவிக்கின்றன, மேலும் இது உண்மையான கற்றலுக்கான மதிப்புமிக்க நேரத்தை அதிகப்படியான தேர்வு பயிற்சி மற்றும் தயாரிப்பிற்கு செலவிடும்படி மாற்றுகின்றன. இந்தத் தேர்வுகள் எதிர்காலக் கல்வி முறைமையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நெகிழ்வுத்தன்மையையும் தேர்வையும் (choices) அனுமதிப்பதை விட, ஒரே துறையில் (stream) மிகக் குறுகிய பொருளைக் கற்றுக்கொள்ள மாணவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன.
4.37. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுகள் தொடரும் அதே வேளையில், உயர்படிப்புக்கான பயிற்சி வகுப்புகளை (coaching) மேற்கொள்வதற்கான தேவையை அகற்றுவதற்காக தற்போதுள்ள பொதுத் தேர்வுகள் (Board exam) மற்றும் நுழைவுத் தேர்வுகள் சீர்திருத்தப்படும். தற்போதைய மதிப்பீட்டு முறையின் இந்தத் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துவதை மாற்றியமைக்க, முழுமையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பொதுத் தேர்வுகள் மறுவடிவமைப்பு செய்யப்படும்; மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களைப் பொறுத்து, பொதுத் தேர்வுகளை எடுக்கும் பல பாடங்களைத் தேர்வு செய்ய முடியும். பல மாதப் பயிற்சி மற்றும் மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் முதன்மையாக முக்கிய திறன்களை / திறன்களைச் சோதிக்கும் வகையில், பொதுத் தேர்வுகள் எளிமைப்படுத்தப்படும். ஒரு பள்ளி வகுப்பில் சென்று ஒரு அடிப்படை முயற்சியை மேற்கொண்டுள்ள எந்தவொரு மாணவரும் கூடுதல் முயற்சி இல்லாமல் தொடர்புடைய பாட பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுச் சிறப்பாகச் செயல்பட முடியும்.
பொதுத் தேர்வுகளின் ‘உயர் பங்குகளை’ மேலும் அகற்ற, அனைத்து மாணவர்களும் எந்தவொரு பள்ளி ஆண்டிலும் இரண்டு சந்தர்ப்பங்களில் பொதுத் தேர்வுகளை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள், விரும்பினால் ஒரு முதன்மை பொதுத்தேர்வு (main exam) மற்றும் ஒரு மதிப்பெண்ணை அதிகப்படுத்துவதற்கான (improvement) தேர்வு ஒன்று.
4.38. அதிக நெகிழ்வுத்தன்மை, மாணவர் தேர்வு மற்றும் இரண்டு சிறந்த முயற்சிகளை (best of two attempts) அறிமுகப்படுத்துவதோடு கூடுதலாக, முதன்மையாக முக்கிய திறன்களைச் சோதிக்கும் மதிப்பீடுகள் (assessments) அனைத்துப் பொதுத் தேர்வுகளுக்கும் உடனடி முக்கிய சீர்திருத்தங்களாக இருக்க வேண்டும்.
வாரியங்கள் அழுத்தம் மற்றும் பயிற்சி கலாச்சாரத்தை (coaching) குறைக்கும் வகையில் பொதுத் தேர்வுகளின் மேலும் சாத்தியமான மாதிரிகளை உருவாக்கலாம். சில சாத்தியக்கூறுகள் பின்வருமாறு: வருடாந்திர / செமஸ்டர் / மாதிரி பொதுத் தேர்வுமுறை உருவாக்கப்படலாம் – ஒவ்வொரு தேர்வையும் மிகக் குறைவான பாடங்களுடன், மற்றும் பள்ளியில் அதனுடன் தொடர்புடைய பாடநெறி எடுக்கப்பட்ட உடனேயே எடுக்கப்படும் – இதனால் தேர்வுகளின் அழுத்தம் வெகுவாக குறைக்கப்படுகிறது. குறைந்த தீவிரம், மற்றும் இரண்டாம் நிலை முழுவதும் குறைந்த பங்களிப்பு சாத்தியமாகிறது; கணிதத்தில் தொடங்கி அனைத்துப் பாடங்களும் தொடர்புடைய மதிப்பீடுகளும் இரண்டு நிலைகளில் வழங்கப்படலாம், மாணவர்கள் தங்கள் பாடங்களில் சிலவற்றை நிலையான மட்டத்திலும் சிலவற்றை உயர் மட்டத்திலும் செய்கிறார்கள்; மற்றும் சில பாடங்களில் வாரியத் தேர்வுகள் இரண்டு பகுதிகளைக் கொண்டதாக மறுவடிவமைக்கப்படலாம் – ஒன்று பலவிடை வினாவாகவோ (objective type with multiple-choice questions ) மற்றும் மற்றொன்று விளக்க வகையாகவோ(descriptive type) இருக்கலாம்.
4.39. மேற்கூறிய அனைத்தையும் பொறுத்தவரை, முக்கிய பங்குதாரர்களான SCERTs, மதிப்பீட்டு வாரியங்கள் (Boards of Assessment – BoAs), முன்மொழியப்பட்ட புதிய தேசிய மதிப்பீட்டு மையம் போன்றவற்றோடு கலந்தாலோசித்து மதிப்பீட்டை (assessment system) மாற்றுவதற்காகவும் 2022-23 கல்வி அமர்வின் மூலம், NCFSE 2020-21 உடன் இணைக்கவும் வழிகாட்டுதல்களை NCERT தயாரிக்கும்.
4.40. பள்ளி ஆண்டுகளில் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் முடிவில் மட்டுமல்லாமல் – மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் மேம்பாடுகளைத் திட்டமிடுவதில் கற்பித்தல்–கற்றல் செயல்முறைகளை மேம்படுத்துவதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் முழுப் பள்ளி முறையின் நலனுக்காக – அனைத்து மாணவர்களும் 3, 5, மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பள்ளித் தேர்வுகளை எதிர்கொள்வார்கள், இத்தேர்வுகள் பொருத்தமான அதிகார மையங்களால் நடத்தப்படும். வெறுமனே மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் இந்தத் தேர்வுகள் தேசிய மற்றும் உள்ளூர் பாடத்திட்டங்களிலிருந்து முக்கிய கருத்துகள் மற்றும் அறிவை மதிப்பீடு செய்வதன் மூலம் அடிப்படை கற்றல் விளைவுகளின் சாதனைகளைச் சோதிக்கும், அதோடு தொடர்புடைய உயர்–வரிசை திறன்கள் மற்றும் நிஜ வாழ்க்கைச் சூழ்நிலைகளில் அறிவைப் பயன்படுத்தவும் உதவும். மூன்றாம் வகுப்புத் தேர்வு, குறிப்பாக, அடிப்படை கல்வியறிவு, எண் மற்றும் பிற அடித்தளத் திறன்களைச் சோதிக்கும். பள்ளி தேர்வுகளின் முடிவுகள் பள்ளிக் கல்வியின் வளர்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்
4.41 21 ஆம் நூற்றாண்டின் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்ய, MHRD இன் கீழ் ஒரு தர நிர்ணய அமைப்பாக PARAKH (செயல்திறன் மதிப்பீடு, மறுஆய்வு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அறிவின் பகுப்பாய்வு) என்றத் தேசிய மதிப்பீட்டு மையத்தை அமைக்க முன்மொழிந்து, இந்தியாவின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளி வாரியங்களுக்கான மதிப்பீடு மற்றும், மாநில சாதனை கணக்கெடுப்புக்கான (எஸ்ஏஎஸ்) வழிகாட்டுதல் மற்றும் தேசியச் சாதனை கணக்கெடுப்பு (என்ஏஎஸ்) ஆகியவற்றை மேற்கொள்வது, நாட்டில் கற்றல் விளைவுகளின் சாதனைகளைக் கண்காணித்தல் மற்றும் பள்ளி வாரியங்களின் மதிப்பீட்டு முறைகளை மாற்ற ஊக்குவித்து உதவுதல், மாணவர்களுக்கான விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அமைப்பதற்கான அடிப்படை நோக்கங்களைப் பூர்த்தி செய்கிறது. இந்த மையம் புதிய மதிப்பீட்டு முறைகள் மற்றும் சமீபத்திய ஆய்வுகள் குறித்து பள்ளி வாரியங்களுக்கு ஆலோசனை வழங்கும், பள்ளி வாரியங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். இது பள்ளி வாரியங்களிடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கருவியாகவும், அனைத்துப் பள்ளி வாரியங்களிலும் கற்பவர்களிடையே கல்வித் தரங்களின் சமநிலையை உறுதிசெய்யவும் உதவும்.
4.42 பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகளின் அடிப்படை நோக்கங்கள் ஒன்றாக இருக்கும். தேசியத் தேர்வு நிறுவனம் (NTA) உயர்தரப் பொதுத் திறனாய்வு தேர்வுகளையும் அத்துடன் சிறப்பு பொதுப் பாடங்களான, அறிவியல், மானுடவியல், மொழிகள், கலைகள் மற்றும் தொழில் பாடங்களில் தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறையாவது நடத்தும். இந்தத் தேர்வுகள் கருத்தியல் புரிதலையும், அறிவைப் பயன்படுத்துவதற்கான திறனையும் சோதிப்பதோடு தேர்வுகளுக்குப் பயிற்சி பெறுவதற்கான தேவையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பாடங்களைத் தேர்வுசெய்ய முடியும், மேலும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்டப் பாட நோக்கங்களின் விளக்கவுரையை கையாள்வதன் மூலம் மாணவர்களின் தனிப்பட்ட ஆர்வங்கள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க முடியும். உயர் கல்வி நிறுவனங்களில் இளங்கலை மற்றும் பட்டதாரி சேர்க்கை மற்றும் பெல்லோஷிப்களுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு ஒரு பிரதான, நிபுணத்துவம் கொண்ட, தன்னாட்சி தேர்வு அமைப்பாக NTA செயல்படும். என்.டி.ஏ (NTA) தேர்வு சேவையானது, நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் தங்களது சொந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துவதை விட, பெரும்பாலான பல்கலைக்கழகங்களுக்கு உயர்தரம், மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட பொதுவான நுழைவுத் தேர்வுகளை நடத்திட உதவும் – இதன் மூலம் மாணவர்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் முழுக்கல்வி முறையின் மீதான சுமை வெகுவாகக் குறைக்கிறது. NTA மதிப்பீடுகளை மாணவச் சேர்க்கைக்குப் பயன்படுத்தத் தனிப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வசம் விடப்படும்.
மீத்திறன் மிக்க / சிறப்புத் திறமைகள் உள்ள மாணவர்களுக்கு ஆதரவு அளித்தல்:
4.43 ஒவ்வொரு மாணவனிடமும் உள்ள உள்ளார்ந்தத் திறமைகளைக் கண்டறிந்து பேணி மேம்படுத்தி வளர்க்க வேண்டும். வேறுபட்ட ஆர்வம் உள்ளார்ந்த பண்புகள் மற்றும் திறன்களின் மூலம் திறமைகள் தாமாகவே வெளிப்படும். கொடுக்கப்பட்ட அறிவுத் தளத்தில் வலுவான ஆர்வத்தை மற்றும் திறனைக் கொண்டுள்ள மாணவர்கள் அந்த அறிவுத் தளத்தைப் பெறுவதற்கு பொதுக்கல்வித் திட்டத்தைத் தாண்டி உற்சாகப்படுத்த வேண்டும். இந்த மாணவர்களின் திறன்கள் மற்றும் ஆர்வத்தை அங்கீகரிக்கும் வகையிலான வழிகள் ஆசிரியர் கல்வியில் உட்படுத்தப்படும். மீத்திற மாணவர்களின் கல்விக்கான வழிமுறைகளை NCERT மற்றும் NCTE உருவாக்கும். மீத்திற மாணவர்களின் கல்விக்கான சிறப்புப் பிரிவு B.Ed. கல்வியில் அனுமதிக்கப்படும்.
4.44. வகுப்பில் ஒத்த ஆர்வம் மற்றும் திறமைகள் உள்ள மாணவர்கள் செறிவூட்டப்பட்ட உபகரணங்களின் துணையுடன் மற்றும் வழிகாட்டுதல் மூலம் ஊக்கப்படுத்தப்படுவதை ஆசிரியர்கள் குறிக்கோளாகக் கொண்டிருத்தல், பள்ளி, பள்ளி வளாகம், மாவட்டம் மற்றும் அதனைத் தாண்டிய தலைப்பு மைய மற்றும் செயல் வழிச் சங்கங்கள் மற்றும் வட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டு உறுதுணை அளிக்கப்படும். உதாரணத்திற்கு அறிவியல் வட்டம், கணித வட்டம், இசை மற்றும் நடன நிகழ்வு வட்டம், சதுரங்க வட்டம், கவிதை வட்டம், மொழி வட்டம், நாடக வட்டம், பட்டிமன்ற வட்டம், விளையாட்டு வட்டம், சூழல் சங்கம், ஆரோக்கியம் மற்றும் மனநலச் சங்கம் /யோகா சங்கம் இன்னும் பிற. இவற்றோடு இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வெவ்வேறு பாடங்களில் உயர்வகை தேசிய உறைவிட கோடைக்கால நிகழ்வுகளைத் திறன் அடிப்படையில் மற்றும் சமத்துவமான முறையில் நாடெங்கிலும் உள்ள சமூகப் பொருளாதாரத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பகுதியினரை உள்ளடக்கிய மிகச்சிறப்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கவரும் வண்ணம் அனுமதி முறையுடன் ஊக்குவிக்கப்படும் .
4.45 தாங்கள் தகுதிபெற்ற நிலைகளில் எல்லா மாணவர்களும் பங்கேற்பதை உறுதி செய்யப் பள்ளியில் இருந்து வட்டாரம் மாநிலத்திலிருந்து தேசிய அளவிலான ஒலிம்பியாட் மற்றும் போட்டிகள் தெளிவான ஒருங்கிணைப்பு மற்றும் முன்னேற்றத்துடன் பல்வேறு பாடங்களில் நாடெங்கிலும் நடத்தப்படும். பரவலான பங்கேற்பை உறுதி செய்ய கிராமப் பகுதிகள் மற்றும் வட்டார மொழிகளில் இவை கிடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இளநிலைக் கல்வியில் அனுமதி பெறுவதற்கு பொது மற்றும் தனியார்ப் பல்கலைக்கழகங்கள் முன்னணி நிறுவனங்களான IIT மற்றும் NIT உட்படத் திறன்அடிப்படையிலான தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பியாட் முடிவுகள் மற்றும் இதரத் தேசிய நிகழ்வுகளின் முடிவுகளைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படும்
4.46. இணையத்துடன் இணைக்கப்பட்ட திறன்பேசி (Smart phones) அல்லது பெரும்திரை திறன்பேசி(Tablet) எல்லா வீடுகளிலும் / அல்லது எல்லாப் பள்ளிகளிலும் கிடைக்க பெற்றதும், மாணவர்களுக்கு வினாடி வினாக்கள், திறனாய்வு போட்டிகள், மதிப்பீடுகள், அறிவு செறிவூட்டல்கள் நடத்தப்படும். இதன் மூலம் இணைய வழித் தொடர்பில் மாணவர் சமூகம் இணைத்திருக்கலாம். மேலும் மேற்கூறிய அனைத்து முயற்சிகளையும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பொருத்தமான மேற்பார்வையுடன் மாணவர்களுக்கான குழு நடவடிக்கைகளாக மேம்படுத்த முடியும். அனைத்துப் பள்ளிகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளில் படிப்படியாக டிஜிட்டல் முறையில் கற்பித்தலை தொடங்குவதற்கும் அதன் மூலம் கற்பித்தல்–கற்றல் செயல்முறையை இணைய வழியிலும் செயல்படுத்த முடியும்.
5. ஆசிரியர்கள்
5.1. ஆசிரியர்கள் உண்மை உணர்வோடு நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள் – அதன் மூலமாக நமது தேசத்தின் எதிர்காலத்தையும் வடிவமைக்கிறார்கள். இந்த ஒப்பற்ற வேலையின் காரணமாகவே இந்தியாவில் ஆசிரியர் சமூகத்தை அனைவரும் மதிப்பவர்களாக இருக்கின்றார்கள். நல்ல பண்புள்ள மனிதர்கள் மற்றும் நிறையக் கற்றுத் தேர்ந்தவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக மாறினர். நமது சமூகம் ஆசிரியர்கள்/குருக்களுக்கு அவர்களின் அறிவு, திறன்கள் மற்றும் ஒழுக்கத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்குத் தேவையானதைச் செய்து கொடுத்தது. ஆசிரியர் படிப்பிற்கான கல்வியின் தரம், அவர்களை பணியமர்த்துதல், கற்பிக்க ஆயத்தப்படுத்துதல், சேவை மனப்பான்மையுடன் செயல்படுதல் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ளுதல்ஆகியன இன்றைய காலகட்டத்தில் உயர்ந்த இடத்தில் இல்லை. இதன் விளைவாக ஆசிரியர்களின் தரமும் அவர்களின் செயல் நோக்கமும் நாம் விரும்பிய உயரத்தை எட்டவில்லை. கற்பித்தல் சேவையில் ஈடுபடச் சிறந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான மதிப்பு மற்றும் கற்பித்தல் சேவையின் தகுதியை உயர்த்த வேண்டும். நமது குழந்தைகளுக்கும் நமது தேசத்துக்கும் சிறந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டுமானால் ஆசிரியர்களின் தரமும் செயல் திறனும் உயர்த்தப்பட வேண்டும்.
பணியமர்த்துதல் மற்றும் நிலை நிறுத்துதல்:
5.2. கல்வியில் சிறந்த மாணவர்கள், கற்பித்தல் சேவையில் நுழைய உறுதி செய்வதற்காக – குறிப்பாகக் கிராமப்புறங்களிலிருந்து வரும் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களுக்காக – அவர்களின் தகுதி அடிப்படையில் உதவித்தொகை அளிக்கப்படும். தரமான 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் படிப்பிற்கான கல்லூரிகள் நாடு முழுவதும் ஏராளமாக ஏற்படுத்தப்படும். கிராமப்புறங்களில், நன்றாகப் படித்து பி.எட் சேருபவர்களுக்குச் சிறப்புத்தகுதி அடிப்படையிலான உதவித்தொகை வழங்கப்படும். அவ்வாறு படித்து பி.எட் படிப்பு வெற்றிகரமாக முடிந்ததும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும். இப்படி உதவித்தொகையால் பயன்பெறும் உள்ளூர் மாணவர்கள், குறிப்பாக மாணவிகளுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். இதனால் இந்த மாணவர்கள் உள்ளூர்ப் பகுதியில் படிக்கும் மற்ற மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும், உள்ளூர் மொழியில் பேசி பயிற்றுவிக்கும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களாகவும் பணியாற்றுகிறார்கள். கிராமப்புறங்களில், குறிப்பாக தற்போது தரமான ஆசிரியர்கள் இல்லாமல் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள கிராமப்புறப் பகுதிகளில் கற்பித்தல் சேவை புரிய முன்வரும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். கிராமப்புறப் பள்ளிகளில் கற்பித்தல் சேவை புரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பள்ளி வளாகத்திற்கு அருகில் வசிக்க ஊக்கத்தொகையோ அல்லது வீட்டு வாடகைப் படி உயர்த்தியோ தரப்படும்.
5.3. அதிகப்படியான ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மாணவர்களின் படிப்பிற்குக் குந்தகம் விளைவிப்பதால் அந்த நடைமுறை நிறுத்தப்படும். இதனால் மாணவர்கள் தாங்கள் முன்மாதிரிகளாய் போற்றும் அதே ஆசிரியரிடமும் மற்றும் பழகிய கல்வி சூழ்நிலையிலும் தொடர்ந்து கல்வி கற்க ஏதுவாக இருக்கும். இடமாற்றங்கள் மிகவும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே நிகழும். அதுவும் இது மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்களால் முறைப்படுத்தப்பட்ட முறையில் மட்டுமே நிகழும். மேலும், இடமாற்றங்கள் வெளிப்படைத்தன்மையோடு கணினி மூலம் நிகழ்நிலையில் நடத்தப்படும்.
5.4. ஆசிரியர் தகுதித் தேர்வை(TET) பலப்படுத்தத் தேர்வின் மூலப்பொருள் மிக நுட்பமாகவும், கற்பித்தல் மற்றும் அதன் உட்பொருள் சிறந்ததாகவும் இருத்தல் வேண்டும். பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் (தொடக்க பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி) ஆசிரியர்களை உள்ளடக்கும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் விரிவுபடுத்தப்படும். பாட ஆசிரியர்களுக்கு, தொடர்புடைய பாடங்களின் TET அல்லது NTA தகுதித் தேர்வு மதிப்பெண்ணும் வேலைவாய்ப்பின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கற்பிப்பதற்கான ஆர்வத்தையும் உந்துதலையும் சோதிக்க, ஒரு வகுப்பறையில் பாடம் எடுக்கச் சொல்லியோ அல்லது நேர்காணல் மூலமோ பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணியமர்த்த வேண்டும். இந்த நேர்காணல்கள் உள்ளூர் மொழியில் கற்பிப்பதில் உள்ள ஆற்றலையும் திறமையையும் மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும். இதனால் ஒவ்வொரு பள்ளி / பள்ளி வளாகத்திலும் குறைந்தபட்சம் சில ஆசிரியர்கள் உள்ளூர் மொழியிலும், பிற பிராந்திய மொழிகளிலும் மாணவர்களிடம் உரையாட முடியும். இதே போன்று தனியார்ப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று செயல்முறையில் பாடம் கற்பித்தல்/ நேர்காணல் மற்றும் உள்ளூர் பிராந்திய மொழிகள் பற்றிய அறிவுடன் கற்பிக்கத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
5.5. அனைத்துப் பாடங்களுக்கும் போதுமான எண்ணிக்கையிலான ஆசிரியர்களை உறுதி செய்வதற்காக – குறிப்பாக கலை, உடற்கல்வி, தொழிற்கல்வி மற்றும் மொழிகள் போன்ற பாடங்களில் – ஆசிரியர்கள் ஒரு பள்ளி/பள்ளி வளாகத்தில் பணியமர்த்தல் செய்யப்படலாம் மற்றும் பள்ளிகளுக்குள் ஆசிரியர்களைப் பகிர்ந்து பாடங்கள் நடத்த மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் வகைப்படுத்தப்பட்ட கல்விமுறையில் பரிசீலிக்கப்படலாம்.
5.6. பாரம்பரிய உள்ளூர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள், தொழில்முறை கைவினைப்பொருட்கள் செய்பவர்கள், உள்ளூர்த் தொழில்முனைவோர்கள், விவசாயிகள் அல்லது உள்ளூரில் நிபுணத்துவம் பெற்ற வேறு எந்த விதத்திலாவது மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் உள்ள மனிதர்களை உள்ளூர் பாடசாலைகளில் ‘மாஸ்டர் பயிற்றுநர்களாக‘ பணியமர்த்தப் பள்ளிகள்/ பள்ளி வளாகங்கள் ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு உள்ளூர் தொழில்கள் பற்றிய அறிவு கிடைப்பதுடன், அந்தத் தொழில்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மாணவர்களால் முடியும்.
5.7. அடுத்த இரண்டு பத்தாண்டுகளில் எதிர்பார்க்கப்படும் பாட வாரியான ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்குத் தொழில்நுட்ப அடிப்படையிலான விரிவான ஆசிரியர்கள் தேவைகளும் தொலைநோக்குப் பார்வையுடனான திட்டமிடலும் அதற்குண்டான பயிற்சியும் ஒவ்வொரு மாநிலத்தாலும் நடத்தப்படும். பணியமர்த்துதல் மற்றும் பணிக்கு ஆயத்தப்படுத்துதல் ஆகியவற்றில் மேலே விவரிக்கப்பட்ட முன்முயற்சிகள் காலப்போக்கில் தேவைக்கேற்ப செயல்படுத்தப்பட்டும், உள்ளூர் ஆசிரியர்கள் உட்படத் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுடன் அனைத்துக் காலியிடங்களையும் நிரப்ப, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி தொழில் மேலாண்மை மற்றும் ஆசிரியர்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு சலுகைகளும் வழங்கப்படும். ஆசிரியர் கல்வித் திட்டங்கள் மற்றும் சலுகைகள் இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ள காலியிடங்களுடன் இணைக்கப்படும்.
சேவை செய்வதற்கான சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம்:
5.8. ஆசிரியர்களின் பணிகளைத் திறம்படசெய்வதற்கும் தத்தம் திறனை அதிகரிப்பதற்கும் பள்ளிகளில் சேவை செய்வதற்குமான சூழல் மற்றும் கலாசாரத்தைச் சீர்படுத்துவதே முதன்மை குறிக்கோள். மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அனைவரின் பொதுவான இலக்கு நமது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதே ஆகும்.
5.9. இந்த முன்னேற்றப் பாதையின் முதல் தேவை பள்ளிகளில் ஒழுக்கமான மற்றும் இனிமையான சேவைகளை உறுதி செய்வதே ஆகும். சுகாதாரமான கழிப்பறைகள், சுத்தமான குடிநீர், சுத்தமான மற்றும் காற்றோட்டமான வகுப்பறைகள், மின்சார வசதிகள், கணினி சாதனங்கள், இணையம், நூலகங்கள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்ட போதுமான மற்றும் பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்படும். மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் மேற்கண்ட வசதிகளோடு பயனுள்ள கற்றல் கற்பித்தல் சூழலையும் பெற்றால், அவர்கள் தத்தமது பள்ளிகளில் கற்பிக்கவும் கற்றுக்கொள்ளவும் வசதியாகவும் ஊக்கத்துடனும் உணருவார்கள். அனைத்து ஆசிரியர்களும் இதனை உணர்ந்து கொண்டிருப்பதை உறுதி செய்வதற்காக, பள்ளிகளில் பணியிடங்களில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பாடங்கள் பயிற்சி வகுப்புகளாக இருத்தல் வேண்டும்.
5.10. மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள் பள்ளி வளாகம், பள்ளிகளை அறிவார்ந்த முறையில் சீரமைக்க, எந்த வகையிலும் மக்கள் வருகையைக் குறைக்காமல், பள்ளி நிர்வாகத்தை மேம்படுத்த, வளப்பகிர்வு மற்றும் சமூகக் கட்டடம் போன்ற புதுமையான விஷயங்களைப் பின்பற்றலாம். பள்ளி வளாகங்களை உருவாக்குவதற்கும், துடிப்பான ஆசிரியர் சமூகங்களை உருவாக்குவதற்கும் நாம் நீண்ட தூரம் செல்லக்கூடும். பள்ளி வளாகங்களுக்கு உள்ளே ஆசிரியர்களை பணியமர்த்துவது பள்ளி வளாகம் முழுவதும் பள்ளிகளிடையேயும் தானாகவே நல்லுறவுகளை உருவாக்கக்கூடும்; இது பாட ஆசிரியர்களின் சிறப்புகளை உறுதிப்படுத்தவும், மேலும் துடிப்பான ஆசிரியர்களின் அறிவுத் தளத்தை மேம்படுத்தவும் உதவும். மிகச் சிறிய பள்ளிகளின் ஆசிரியர்கள் இனி சிறிய பள்ளிகளிலேயே தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். மேலும் பெரிய பள்ளி ஒரு பகுதியாக இணைந்து பணியாற்றலாம். ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த ஒத்துழைப்புடன் பணியாற்றலாம். பள்ளி வளாகங்கள் ஆசிரியர்களை மேலும் ஆதரிப்பதற்கும் பயனுள்ள கற்றல் சூழலை உருவாக்க உதவுவதற்கும் ஆலோசகர்கள், பயிற்சி பெற்ற சமூக சேவையாளர்கள், தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் போன்றவர்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
5.11. பெற்றோர்கள் மற்றும் பிற முக்கிய உள்ளூர்ப் பிரதிநிதிகளுடன் இணைந்து, பள்ளி நிர்வாகக் குழுக்கள் / பள்ளி வளாக மேலாண்மைக் குழுக்களின் உறுப்பினர்கள் உட்படப் பள்ளிகள்/ பள்ளி வளாகங்களின் நிர்வாகத்தில் ஆசிரியர்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.
5.12. கற்பித்தல் அல்லாத செயல்களுக்காக ஆசிரியர்கள் தற்போது அதிக நேரம் செலவிடுவதைத் தடுக்க, ஆசிரியர்கள் கற்பித்தலுடன் நேரடியாகச் சம்பந்தமில்லாத எந்த வேலையிலும் இனி ஈடுபடமாட்டார்கள்; குறிப்பாக, ஆசிரியர்கள் கடுமையான நிர்வாகப் பணிகளில் ஈடுபடமாட்டார்கள் மற்றும் மதிய உணவு தொடர்பான வேலைகளுக்கு நேரம் செலவிடமாட்டார்கள். இதனால் அவர்கள் கற்பித்தல்–கற்றல் கடமைகளில் முழுமையாகக் கவனம் செலுத்தலாம்.
5.13. பள்ளிகள் நேர்மறையான கற்றல் சூழல்களைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளை அக்கறையாகக் கவனித்துக் கொள்வது மற்றும் அனைவரையும் ஒற்றுமையுடன் அரவணைத்துச் செல்வது, பயனுள்ள கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் மற்றும் அனைவரின் நலனுக்கும் உதவும்.
5.14. ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் அம்சங்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிக அதிகாரம் வழங்கப்படும். இதனால் அவர்கள் வகுப்பறைகளில் கற்பிப்பது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆசிரியர்கள் சமூக–உணர்ச்சி குறித்தும் கற்றல் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இதுவே மாணவரின் முழுமையான கற்றல் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் அவசியம். வகுப்பறைகளில் ஆசிரியர்களின் நூதனமான பயிற்றுவிக்கும் முறையும் அதனால் ஏற்படும் நன்மைகளுக்காகவும் அங்கீகரிக்கப்படுவார்கள்.
தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாடு (CPD):
5.15. ஆசிரியர்களுக்கு சுய முன்னேற்றத்திற்கான தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் கல்வி முறைகளில் சமீபத்திய கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் அறிந்து கொள்ள முடியும். உள்ளூர், பிராந்திய, மாநில, தேசிய மற்றும் சர்வதேசப் பணிமனைகள்/பயிற்சிப் பட்டறைகள் மற்றும் இணையவழிப் பயிற்சிகள் மூலமும் ஆசிரியர் தொழில்சார் மேம்பாட்டுப் பயிற்சிச் சட்டகங்கள் உட்படப் பல முறைகளில் வாய்ப்புகள் வழங்கப்படும்.
ஆசிரியர்களின் தொழில்சார் மேம்பாட்டிற்கென தளங்கள் (குறிப்பாக இணையவழி தளங்கள்) உருவாக்கப்படும். இதனால் ஆசிரியர்கள் தங்களின் கருத்துகளையும் சிறந்த கற்பித்தல் அணுகுமுறைகளையும், நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கள் ஆசிரியர் தொழில் மேம்பாட்டுக்காக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 50 மணிநேர சிபிடி(CPT) வாய்ப்புகளில் பங்கேற்பார்கள்.
இத்தகைய தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாட்டு வாய்ப்புகள் கீழுள்ளவற்றை முறையாக உள்ளடக்கும்:
- அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பற்றிய சமீபத்திய கற்பித்தல் முறைகள்
- கற்றல் விளைவுகளின் முறைசாரா மற்றும் தகவமைப்பு மதிப்பீட்டு முறைகள்
- திறன்கள் அடிப்படையினாலான கல்வி முறைகள் மற்றும் அதற்கு தொடர்புடைய கற்பித்தல் முறைகள், எடுத்துக்காட்டாக அனுபவம் சார்ந்த கற்றல், கலைகளை உள்ளடக்கிய, விளையாட்டுக்களை உள்ளடக்கிய, கதை சொல்லலை உள்ளடக்கிய அணுகுமுறைகள் போன்றவை எல்லாம் அதில் அடங்கும்.
5.16. பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளிவளாகத் தலைவர்கள், தங்களுடைய தனிப்பட்ட தலைமைப் பண்புகளையும் மேலாண்மை திறமைகளையும் தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொள்ள ஒரே மாதிரியான கட்டகத்தைக் கொண்ட தலைமைத்துவ / மேலாண்மை பயிற்சிப் பட்டறைகளும், இணையம் வழி முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் மற்றும் தளங்களும் அமைக்கப்படும். இதன் மூலம் அவர்கள் சிறப்பான செயல்முறைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள முடியும். தலைமைத்துவ, மேலாண்மை மற்றும் திறன் சார்ந்த கல்விக்கான கற்பித்தல் திட்டங்களை உருவாக்கவும் செயல்படுத்தவும் தேவையான பாடப்பொருள் உள்ளடக்கத்தையும் கற்றல்-கற்பித்தல் முறைமையையும் உள்ளடக்கிய தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாட்டு கட்டகங்களில் அத்தகைய தலைவர்கள் வருடத்திற்கு 50 மணி நேரங்களோ அதற்கு மேலாகவோ பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும்.
தொழில் மேலாண்மை மற்றும் முன்னேற்றம் (CMP):
5.17. மிகச் சிறப்பான பணிகளைச் செய்யும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள். மேலும் அவர்களுக்குச் சம்பள உயர்வும் வழங்கப்படும்.
அனைத்து ஆசிரியர்களையும் அவர்களின் சிறந்த வேலையைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும். ஆகையால், ஒவ்வொரு ஆசிரியர் அவர்களது செயல்பாடுகள் அவர்களின் பதவிக்காலத்தில் ஒவ்வொரு படிநிலைகளிலும், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியவற்றை வழங்கத் தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையிலான கட்டமைப்பு உருவாக்கப்படும்,
இது சிறந்த ஆசிரியர்களை ஊக்குவிக்கிறது மற்றும் அங்கீகரிக்கிறது. செயல்திறனை முறையாக மதிப்பிடுவதற்கான பல அளவுருக்கள் கொண்ட ஒரு அமைப்பு மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்களால் உருவாக்கப்படும், இது சக ஆசிரியர்களின் மதிப்பாய்வுகள், வருகைப் பதிவு, அர்ப்பணிப்பு, சிபிடியின் பங்கேற்ற மணிநேரம் மற்றும் பள்ளி மற்றும் சமூகத்திற்கான பிற வகையான சேவைகளை அடிப்படையாகக் கொண்டது .
பாரா 5.20 இல் கொடுக்கப்பட்ட NPST. இந்தக் கொள்கையில், தொழில் சூழலில், செயல்திறன் மற்றும் பங்களிப்பு குறித்த சரியான மதிப்பீட்டிற்குப் பிறகு, நிரந்தர வேலைவாய்ப்புக்கான உறுதிப்பாட்டை ‘பதவிக்காலம்’ குறிக்கிறது, அதே நேரத்தில் ‘பதவிக்காலம்’ என்பது பதவிக்காலத்திற்கு முந்தைய தகுதிகாண் பருவத்தை குறிக்கிறது.
5.18. மேலும், தொழில் வளர்ச்சி (பதவிக்காலம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை) ஆசிரியர்களுக்கு ஒரே பள்ளிக் கட்டத்திற்குள் (அதாவது, அடித்தளம், தயாரிப்பு, நடுத்தர அல்லது இரண்டாம் நிலை) ஆசிரியர்களுக்குக் கிடைப்பது உறுதி செய்யப்படும், மேலும் ஆரம்பக் கட்டங்களில் ஆசிரியர்களாக இருந்து பிற்காலக் கட்டங்களுக்குச் செல்வதற்கான தொழில் முன்னேற்றம் தொடர்பான ஊக்கத்தொகை இல்லை (இருந்தபோதிலும் ஆசிரியருக்கு அத்தகைய நடவடிக்கைக்கான விருப்பமும் தகுதியும் இருந்தால் இதுபோன்ற படிநிலை முன்னேற்றம் முழுவதும் அனுமதிக்கப்படும்,).
பள்ளிக்கல்வியின் அனைத்து நிலைகளுக்கும் மிக உயர்ந்த தரமான ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்பதையும், எந்த ஒரு கல்விக் கட்டத்தையும் (அதாவது, அடித்தளம், தயாரிப்பு, நடுத்தர அல்லது இரண்டாம் நிலை) விட எந்தக் கட்டமும் மிக முக்கியமானதாகக் கருதப்படாது என்பதையும் இது உறுதி செய்கிறது
5.19. தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களின் முன்னேற்ற இயக்கத்திறன் மிக முக்கியமானது; தலைமைப்பண்பு மற்றும் மேலாண்மைத் திறன்கொண்ட சிறந்த ஆசிரியர்களுக்குப் பாடசாலைகள், பள்ளி வளாகங்கள், BRC, CRC, PID, DIET மற்றும் தொடர்புடைய அரசாங்கத் துறைகளில் கல்வித் தலைமைப் பதவிகளைப் பெறுவதற்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்படும்.
ஆசிரியர்களுக்கான தொழில்சார் தரநிலைகள்:
5.20. ஆசிரியர்களுக்கான தேசியத் தொழில்முறை தரநிலைகளின் (NPST) ஒரு பொதுவான வழிகாட்டல் தொகுப்பு 2022 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டு , தேசியக் கல்வி கவுன்சில் அதன் மறுசீரமைக்கப்பட்ட புதிய வடிவத்தில் பொதுக் கல்வி கவுன்சிலின் (GCE) கீழ் ஒரு தொழில்முறை தர நிர்ணய அமைப்பாக (PSSB) உருவாக்கப்படும். NCERT, SCERTகள், பிராந்தியங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர்களை உருவாக்கும் மற்றும் வளர்ச்சியில் நிபுணத்துவ அமைப்புகள், தொழிற்கல்வியில் நிபுணத்துவ அமைப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடன் ஆலோசனை. நிபுணத்துவம் / மேடையில் வெவ்வேறு நிலைகளில் ஆசிரியரின் பங்கு பற்றிய எதிர்பார்ப்புகளையும், அந்த நிலைக்குத் தேவையான திறன்களையும் தரநிலைகள் உள்ளடக்கும். ஆசிரியர்களுக்கான தேசியத் தொழில்முறை தர நிர்ணய அமைப்பானது ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பாடத்திட்டத்தை வடிவமைக்கும். இது மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆசிரியர் தொழில் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கலாம், இதில் பதவிக்காலம், தொழில்முறை மேம்பாட்டு முயற்சிகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் பிற அங்கீகாரங்கள் அடங்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு ஆகியவை பதவிக்காலம் அல்லது மூப்புத்தன்மையின் அடிப்படையில் ஏற்படாது, ஆனால் அத்தகைய தர நிர்ணய மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும். தொழில்முறை தரநிலைகள் 2030 ஆம் ஆண்டில் மதிப்பாய்வு செய்யப்பட்டுத் திருத்தப்படும், அதன்பிறகு ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும், அமைப்பின் செயல்திறனைப் பற்றிய விளைவுகள் மற்றும் உரிய பகுப்பாய்வின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும்.
சிறப்புக் கல்வியாளர்கள்:
5.21. பள்ளிக்கல்வியின் சில பகுதிகளுக்குக் கூடுதல் சிறப்புக் கல்வியாளர்களுக்கான தேவை தற்போது அவசியமாக உள்ளது. இத்தகைய நிபுணத்துவத் தேவைகளின் சில எடுத்துக்காட்டுகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் / நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பாடங்களைக் கற்பித்தல், குறிப்பாக கற்றல் குறைபாடுகளுக்கான கற்பித்தல் ஆகியவை இவற்றில் உள்ளடங்கும்.
இத்தகைய ஆசிரியர்களுக்குப் பாடப் பொருள், கற்பித்தல் அறிவு மற்றும் பாடப் பொருள் தொடர்புடைய நோக்கங்களைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், குழந்தைகளின் சிறப்புத் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கான பொருத்தமான திறன்களும் தேவைப்படும். ஆகையால், அத்தகைய பகுதிகள் பாட ஆசிரியர்கள் அல்லது பொது ஆசிரியர்களுக்கான இரண்டாம்நிலை நிபுணத்துவங்களாக உருவாக்கப்படலாம்,
ஆசிரியர் பயிற்சி பெறும் போது அல்லது அதற்குப் பிறகு அவை சான்றிதழ் படிப்புகளாக, பயிற்சி ஆசிரியர் நிலை மற்றும் ஆசிரியர் பயிற்சி பெற்ற பின் இரு முறையில், முழுநேர அல்லது பகுதிநேர / கலப்பு படிப்புகளாக வழங்கப்படும் பல்வகை கல்லூரிப் பிரிவுகளில் அல்லது பல்கலைக்கழகங்களால் சிறப்புக் கல்வியாளர்களுக்கு இத்தகைய சான்றிதழ் வகுப்புகள் வழங்கப்படும் .
தேவையான அளவு சிறப்புக் கல்வியாளர்கள் பாடப்பொருள் கற்பித்தலோடு பயிற்சியை NCTE கலைத்திட்டத்திற்கும் மற்றும் RCI –க்கும் ஏற்றவாறு சிறப்பு மாணவர்களைக் கையாளும் திறனை உடையவர்களாகத் தரமான சிறப்புக் கல்வியாளர்கள் உருவாக்கப்படுவதை உறுதி செய்தல்
ஆசிரியர் கல்விக்கான அணுகுமுறை:
5.22. ஆசிரியர்களுக்கு உயர்தரப் பாட உள்ளடக்கம் மற்றும் கற்பித்தல் அணுகுமுறைகள் ஆகியவற்றில் பயிற்சி தேவைப்படும் என்பதை உணர்ந்து, ஆசிரியர் கல்வி படிப்படியாக 2030க்குள் பலதரப்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றப்படும்.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பன்முகப்பிரிவாக மாறுவதை நோக்கி நகர்வதால், பி.எட்., எம்.எட்., மற்றும் பி.எச்.டி. கல்வியில் பட்டங்களை உயர்தரத்தில் வழங்கும் .
5.23. 2030க்குள், கற்பிப்பதற்கான குறைந்தபட்சப் பட்டப்படிப்பு 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். சிறந்த பாட அறிவாற்றலுடன் மற்றும் கற்பித்தல் அணுகுமுறைகளுடன், உள்ளூர் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் கற்பித்தல் சிறந்த பயிற்சி பெறவேண்டும்.
2 ஆண்டு பி.எட். திட்டமும், 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். வழங்கும் அதே பன்முக நிறுவனங்களால் வழங்கப்படும், மேலும் இது பிற சிறப்புப் பாடங்களில் ஏற்கனவே இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
பி.எட். 1 ஆண்டு திட்டமும், 4 ஆண்டு பல்துறை இளங்கலைப் பட்டங்களுக்குச் சமமானவர்கள் அல்லது ஒரு சிறப்பு முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் அந்த ஒரு குறிப்பிட்ட சிறப்புப்பாடப்பிரிவில் ஆசிரியராக விரும்புபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
அனைத்து பி.எட். திட்டங்களும் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட் வழங்கும் அங்கீகாரம் பெற்ற பலதரப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களால் மட்டுமே பட்டங்கள் வழங்கப்படும்.
4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட் வழங்கும் ODL க்கான அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும் பலதரப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் உயர்தரமுடைய B.Ed. பயிற்சிகளை வழங்கும்.
தொலைதூர அல்லது எளிதில் அணுக இயலாத இடங்களில் உள்ள மாணவர்களுக்கும், அவர்களின் தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும் கற்பித்தல் பயிற்சி மற்றும் மாணவர் கற்பித்தல் பயிற்சி உரிய மாற்று ஏற்பாடுகளுடன் தரமான பொருத்தமான கலப்பு அல்லது ODL முறையில் பயிற்சிகள் வழங்கப்படும்
5.24. அனைத்து பி.எட். பாடத் திட்டங்களில் நேரச் சோதனை மற்றும் புதிய நுணுக்கங்களை அடங்கிய கற்பித்தல் அணுகுமுறைகளைப் பற்றிய கல்வியறிவு மற்றும் எண்கணிதம், பல நிலை கற்பித்தல் மற்றும் மதிப்பீடு, குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்குக் கற்பித்தல், சிறப்பு ஆர்வங்கள் அல்லது திறமைகளைக் கொண்ட குழந்தைகளுக்குக் கற்பித்தல், பயன்பாட்டுக் கல்வி தொழில்நுட்பம், மற்றும் கற்பவரை மையமாகக் கொண்ட மற்றும் ஒத்துழைப்புக் கற்றல் போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும். அனைத்து பி.எட். படிப்புகளும் சிறந்த பயிற்சித் திட்டங்கள் உள்ளூர் பள்ளிகளில் வகுப்பறை கற்பித்தல் வடிவத்தில் செயல்படுத்தும் விதமாக வடிவமைக்கப்படும். அனைத்து பி.எட். படிப்புகளும் எந்தவொரு விஷயத்தையும் கற்பிக்கும் போது அல்லது எந்தவொரு செயலையும் செய்யும்போது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கடமைகளையும் (பிரிவு 51 ஏ) மற்ற அரசியலமைப்பின் திட்டங்களின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் உணர்திறனையும் இது சரியான முறையில் ஒருங்கிணைக்கும், இதனால் சுற்றுச்சூழல் கல்வி பள்ளி பாடத்திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறும்.
5.25. உள்ளூர் தொழில்கள், திறன்கள் அறிவை ஆற்றல் வளங்களை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக, பள்ளிகளிலோ அல்லது பள்ளி வளாகங்களிலோ ‘தலைமை பயிற்றுநர்களாக‘ கற்பிக்க நியமிக்கப்படக்கூடிய சிறந்த உள்ளூர் நபர்களுக்குச் சிறப்பு குறுகிய உள்ளூர் ஆசிரியர் கல்வித் திட்டங்கள் BITE கள், DIET கள் அல்லது பள்ளி வளாகங்களில் கிடைக்கும். எ.கா., உள்ளூர் கலை, இசை, விவசாயம், வணிகம், விளையாட்டு, தச்சு மற்றும் பிற தொழில் கைவினைப்பொருட்கள்.
5.26. குறுகிய B.Ed பிந்தைய. சான்றிதழ் படிப்புகள் பலதரப்பட்ட பிரிவுகளில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சான்றிதழ் படிப்புகள் விரிவுபடுத்தப்படும். குறிப்பிட்டத் துறைகளில் சிறப்பானக் கற்பித்தல் முறைக்கு, கற்கச் செல்ல விரும்பும் ஆசிரியர்களுக்கு எடுத்து காட்டாக குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு கற்பித்தல் அல்லது பள்ளிக்கல்வி அமைப்பில் தலைமைப்பண்பு மற்றும் நிர்வாகப் பதவிகளில் சிறப்புப் பெற்று பணியாற்ற அல்லது அடித்தள, தயாரிப்பு, நடுத்தர மற்றும் இரண்டாம் நிலை நிலைகளுக்கு இடையில் ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்குச் செல்ல இந்தச் சான்றிதழ் படிப்புகள் உதவும் .
5.27. குறிப்பிட்ட பாடங்களைக் கற்பிப்பதற்காகச் சர்வதேச அளவில் பல அங்கீகரிக்கப்பட்ட கற்பித்தல் அணுகுமுறைகள் உள்ளன; NCERT பல்வேறு பாடங்களைக் கற்பிப்பதற்கான மாறுபட்ட சர்வதேசக் கல்வி கற்பித்தல் அணுகுமுறைகளைப் படிப்பது, ஆராய்ச்சி செய்வது, தொகுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் மூலம் பல்வேறு பாடங்களைச் சிறந்த முறையில் கற்பிப்பதற்கு இந்தியாவில் இருந்து நடைமுறையில் உள்ள கல்வி கற்பித்தல் அணுகுமுறைகளில் மிகப்பொருத்தமானதை உட்புகுத்துதல் மற்றும் ஒருங்கிணைக்கக்கூடியவை பற்றிய பரிந்துரைகளை வழங்கும்.
5.28. 2021ஆம் ஆண்டளவில், இந்தத் தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் கொள்கைகளின் அடிப்படையில், NCERTயுடன் கலந்தாலோசித்து, NCTE 2021, ஆசிரியர் கல்விக்கான புதிய மற்றும் விரிவான தேசியப் பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்கும்.
இந்தக் கட்டமைப்பை மாநில அரசுகள், தொடர்புடைய அமைச்சுகள் / மத்திய அரசின் துறைகள் மற்றும் பல்வேறு நிபுணத்துவ அமைப்புகள் போன்ற அனைத்து அமைப்புகளுடன் கலந்துரையாடிய பின்னர் உருவாக்கப்படும் மற்றும் அனைத்துப் பிராந்திய மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.
தொழிற்கல்விக்கான ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தின் தேவைகளுக்கும் NCFTE 2021 காரணியாக இருக்கும். திருத்தப்பட்ட என்.சி.எஃப்–களின் மாற்றங்களையும், ஆசிரியர் கல்வியில் வளர்ந்து வரும் தேவைகளின் அடிப்படையில் 5-10 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்.சி.எஃப்.டி.இ திருத்தப்படும்.
5.29. இறுதியாக, ஆசிரியர் கல்வி முறையின் ஒருமைப்பாட்டை, தரத்தை, முழுமையாக மீட்டெடுப்பதற்காக, நாட்டில் உள்ள தரமற்ற தனித்து செயல்படும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் (TEIகள்) மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; தேவைப்பட்டால் தரமற்றக் கல்வி நிறுவனங்களை மூடுவது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
6. சமமான அனைவரையும் உள்ளடக்கிய கல்வி : அனைவருக்குமான கற்றல்
6.1 சமூக நீதியையும் சமத்துவத்தையும் அடைவதற்கு கல்வி ஒரு மிகப் பெரிய கருவியாகும். நிச்சயமாக இப்படி ஒரு உயர்ந்த நோக்கத்தினை கல்வி தனக்குள் கொண்டிருந்தபோதும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கனவு காணவும், செழித்தோங்கவும், தனது பங்களிப்பை நாட்டிற்கு அளிக்கத்தக்க வகையிலான ஒருங்கிணைந்த நேர்மையான ஒரு சமுதாயத்தை உருவாக்குதல் என்பதும் இன்றியமையாதது. சமூக இனங்களுக்கு இடையே உள்ள வாய்ப்புகள், பங்கேற்பு மற்றும் கற்றல் அடைவுகளில் உள்ள இடைவெளிகளை அகற்றுவதே கல்வி சார்ந்த மேம்பாட்டு திட்டங்களின் முக்கிய இலக்காக இருக்கும் என்பதை இந்தக் கொள்கை மறு உத்திரவாதம் அளிக்கிறது. இந்த அத்தியாயத்தை உயர்கல்வியில் சமவாய்ப்பு மற்றும் உள்ளிணைத்தலில் உள்ள சிக்கல்களை விவாதிக்க உள்ள 14ம் இயலோடு இணைத்து படிக்க வேண்டும்
6.2 இந்தியக் கல்வி முறையும் தொடர்ந்து வந்த அரசுகளின் கொள்கைகள் பள்ளிக்கல்வியில் உள்ள பாலின மற்றும் சமூக பாகுபாடுகளை அகற்றுவதில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டாலும் மேனிலை கல்வியை அடைவதில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை நாம் காண்கிறோம். குறிப்பாக வரலாற்று ரீதியாக சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகம் கல்வியில் பங்கேற்பது மிகவும் குறைவாகவே இருந்து வந்துள்ளது. சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்களை பரந்துப்பட்ட வகைப்படுத்தலில் – பாலின அடையாளங்களாக (குறிப்பாகப் பெண்கள் மற்றும் திருநங்கையர்) சமூகப் பண்பாட்டு அடையாளங்கள் (பட்டியல் வகுப்பினர், பட்டியல் இன, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் சிறுபான்மையினர் போன்றோர்) நிலம் சார்ந்த அடையாளங்கள் (கிராமங்கள், சிறு நகரங்கள் மற்றும் வளர்ச்சிப் பாதையில் உள்ள மாவட்டங்கள் போன்றவை) மாற்றுத்திறனாளிகள் (கற்றல் குறைபாடு உள்ளோர் உட்பட) மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழல்களால் இடம்பெயர் தொழிலாளர் சமூகங்கள், குறைந்த வருவாய் குடும்பங்கள், எளிதில் தீங்கிழைத்தலுக்கு உள்ளாக கூடிய குழந்தைகள், கடத்தலுக்கு இலக்காகும் குழந்தைகள், நகர்ப்புறங்களில் உள்ள ஆதரவற்ற மற்றும் பிச்சை எடுக்கக் கட்டாயப்படுத்தப்படும் குழந்தைகள் மற்றும் நகர்ப்புற ஏழைகள் போன்றோர். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தொடர்ந்து பள்ளி இடைநிற்றல் அதிகமாவதும் அது குறிப்பாக, சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்களில் உள்ள பெண்களில் அதிகமாகவும் உயர் கல்வியில் மேலும் மிக அதிகமாக உள்ளது. சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்களின் பல்வேறு அடையாளங்களின் அடிப்படையில் ஒரு சுருக்கமான நிலை அறிக்கை இங்கே துணை அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
6.2.1. U–DISE 2016-17ன் படி தொடக்கக் கல்வியில் 19.6% என இருக்கும் பட்டியலினக் குழந்தைகளின் பங்கேற்பு, மேனிலை கல்வியில் 17.3% என் குறைகிறது. இந்தப் பள்ளி இடைநிற்றல் பட்டியலினப் பழங்குடியின மாணவர்கள் மத்தியில் (10.6% ல் இருந்து 6.8% ஆகவும்) மாற்றுத் திறனாளி குழந்தைகள் மத்தியில் (1.1% ல் இருந்து 0.25% ஆகவும்) குறைகிறது. இந்தச் சமூகப்பின்னணியில் உள்ள பெண் குழந்தைகளின் நிலை மேலும் பின் தங்கியே இருக்கிறது. இந்த பின்னடைவு உயர்கல்வியில் இன்னமும் அதிகமாக இருக்கிறது.
6.2.2. தரமான பள்ளிகளுக்கான வாய்ப்பின்மை, ஏழ்மை, சமூக கட்டமைப்பு மற்றும் பண்பாட்டுக் கூறுகள் மற்றும் மொழி உள்ளிட்ட பல்வேறு கூறுகள், பட்டியல் இன மக்கள் மத்தியில் பள்ளிச் சேர்கை மற்றும் தக்க வைத்தலில் பெரும் பின்னடைவை உருவாக்கி விட்டது. பட்டியல் இனக் குழந்தைகளுக்குக்கான வாய்ப்பு, பங்கேற்பு மற்றும் கற்றல் அடைவுகளை உறுதி செய்வது ஒரு முக்கியமான இலக்காகும். மேலும் பிற பின்தங்கிய வகுப்பினரில் வரலாற்று ரீதியாக சமூக மற்றும் கல்வியில் பின் தங்கியதற்கான காரணங்கள் கூடுதல் கவனம் தேவைப்படும்.
6.2.3 பழங்குடியின மற்றும் அவர்களின் குழந்தைகள் வரலாற்றுமுறை மற்றும் நிலம்சார்ந்த காரணிகளால் பல்வேறு நிலைகளில் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். பழங்குடியினக் குழந்தைகளுக்கு இன்றைய பள்ளிக் கல்வி அவர்களின் பண்பாட்டு மற்றும் அறிவு தளத்தில் அந்நியப்பட்டதாக இருப்பதாக உணர்கின்றனர். பழங்குடியின குழந்தைகளின் வாழ்வில் ஏற்றத்தை உருவாக்க ஏற்கனவே நிறையத் திட்டம் சார்ந்த செயல்பாடுகள் உள்ள போதும், இக்குழந்தைகள் மேலும் பயன்பெரும் வகையில் சிறப்பு வழிமுறைகள் உருவாக்கிச் செயல்படுத்தப்படும்.
6.2.4. பள்ளி மற்றும் உயர் கல்வியில் சிறுபான்மையினருக்குக் குறைவான பிரதிநிதித்துவமே உள்ளது. அனைத்துச் சிறுபான்மையினர் அதிலும் குறிப்பாகக் கல்வியில் பின்தங்கியுள்ள குழுக்களை அடையாளம் கண்டு அவர்களின் கல்வி நிலையை உயர்த்த முன்முயற்சிகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் கொள்கை அங்கீகரிக்கிறது.
6.2.5 அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் அதே வாய்ப்புகளும் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதை இந்தக் கொள்கை அங்கீகரிக்கிறது.
6.2.6 பின்வரும் துணைப்பிரிவுகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி பள்ளிக் கல்வியில் சமூக இடைவெளிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதற்கென தனி உத்திகள் வகுக்கப்படும்
6.3. இயல்கள் 1–3 ல் விவாதிக்கப்பட்ட முன்பருவக் பள்ளிக் கல்வி (ECCE) அடித்தளக் கல்வியறிவு மற்றும் எண்ணறிவு, வாய்ப்பு, சேர்க்கை மற்றும் வருகை தொடர்பான முக்கியமான சிக்கல்கள் மற்றும் பரிந்துரைகள் குறைவான பிரதிநிதித்துவமுள்ள மற்றும் பின்தங்கிய குழுக்களுக்கு மிகவும் பொருத்தமானவை மற்றும் முக்கியமானவை. ஆகையால், 1–3 அத்தியாயங்களிலிருந்து வரும் நடவடிக்கைகள் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்களுக்கு ஒருங்கிணைந்த வழியில் செயல்படுத்தப்படும்.
6.4 மேலும் சமூக பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு ஊக்கத்தொகை, கல்வி உதவித்தொகை, பள்ளிச் சென்று வருவ்தற்காக மிதிவண்டிகள் எனும் பல்வேறு வெற்றிகரமான திட்டங்களும், கொள்கைகளும் மேற்சொன்ன குழுவினரின் பிள்ளைகள் பள்ளியில் சேர்வதை அதிகப்படுத்தியது. இந்த வெற்றிகரமான கொள்கை மற்றும் திட்டம் இன்னும் நாடு முழுவதும் சென்றடையும்வண்ணம் பலப்படுத்தப்படும்.
6.5 சில நலத்திட்டங்கள் வாயிலாக பிள்ளைகள் பள்ளியில் சேர்வது அதிகமானது என்று வரும் ஆய்வு முடிவுகளை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும், குறிப்பாக சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய சமுதாயத்தில் இது பெரிய தாக்கத்தை உருவாக்கியது. உதாரணமாக குறைந்த தூரத்திலேயே பள்ளிகள் இருந்தாலும் மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்குதல் மற்றும் நடந்து செல்பவர்களுக்கும் சைக்கிள்களில் செல்பவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பான வசதி கிடைப்பதால் பெற்றோர்களும் கவலையின்றி பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவைக்கின்றனர். பெற்றோருக்கும் இந்த மிதிவண்டி வழங்கும் முறை நம்பிக்கையை விதைக்கிறது. தனி ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள், சக மாணவர் மூலம் பயிற்சி, திறந்த நிலைப் பள்ளி, பொருத்தமான உள்கட்டமைப்பு மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான பொருத்தமான தொழில்நுட்பச் செயல்பாடுகள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். தரமான முன் பருவக் கல்வியை வழங்கும் பள்ளிகள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு மிகப் பெரிய மூலதனமாக இருக்கின்றது. இதற்கிடையில், வருகை மற்றும் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்காக மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றும் ஆலோசகர்கள் மற்றும் / அல்லது நன்கு பயிற்சி பெற்ற சமூகப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றுவதால் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஏழைக்குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
6.6 சில மாநிலங்களில், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் சமுதாயங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பெருவாரியாக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கல்வி மேம்பாட்டிற்காகனத் தேவையிருக்கும் மேலும், கல்வியில் பெரும் இலட்சியங்களுடனும் கனவுகளுடனும் இருக்கும் மாவட்டங்களாக சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்டு கல்வியில் பின்தங்கியிருக்கும் மண்டலங்களை ‘சிறப்புக் கல்வி மண்டலங்களாக (SEZs) அறிவிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.
6.7 அனைத்துச் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்களிலும் பாதிக்குப் பாதிப் பெண்கள். மேலும் கவலைத்தரும் வகையில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பு மற்றும் சமத்துவமின்மை இந்தச் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்களில் உள்ள பெண்களுக்கு மட்டுமே பன்மடங்காகிறது. சமூகம் மற்றும் சமூக நலன்களை வடிவமைப்பதில் பெண்கள் வகிக்கும் சிறப்பு மற்றும் முக்கியமான பங்கை இந்தக் கொள்கை கூடுதலாக அங்கீகரிக்கிறது. எனவே, இந்தத் தலைமுறை மட்டுமல்லாது, எதிர்காலத் தலைமுறை பெண் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவது இந்தச் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்களுக்கான கல்வி நிலைகளை அதிகரிப்பதற்கான சிறந்த வழியாகும். சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்களிலிருந்து மாணவர்களை இணைக்க வடிவமைக்கப்படும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் இந்தக் குழுக்களில் உள்ள பெண் குழந்தைகளை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று கொள்கை பரிந்துரைக்கிறது.
6.8 மேலும், அனைத்துப் பெண் குழந்தைகள் மற்றும் திருநங்கைகளுக்கும் சமமான தரமான கல்வியை வழங்குவதற்கான தேசத்தின் திறனை மேம்படுத்த இந்திய அரசு ஒரு ‘பாலின உள்ளடக்கத்திற்கான நிதி’யை ஏற்படுத்தும். பெண் குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கல்விக்கான வாய்ப்பை வழங்குவதில் மத்திய அரசு தீர்மானிக்கும் முன்னுரிமைகளைச் செயல்படுத்த மாநிலங்களுக்கு இந்த நிதி கிடைக்கும் (சுகாதாரம் மற்றும் கழிப்பறைகள், மிதிவண்டிகள், நிபந்தனைக்குட்பட்ட பணப் பரிமாற்றம் போன்றவை); மேலும் பெண் மற்றும் மூன்றாம் பாலின குழந்தைகளுக்கான வாய்ப்பு மற்றும் கல்வியில் பங்கேற்பதற்கான குறிப்பிட்ட உள்ளூர் சூழல் தடைகளைச் சரி செய்யும் பயனுள்ள சமூக அடிப்படையிலான முன்னெடுப்புகளை ஆதரிக்கவும் அளவிடவும் இந்த நிதிகள் உதவும். பிற சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழுக்களுக்கான வாய்ப்புகளை அணுகுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க இதேபோன்ற உள்ளிணைத்தலுக்கான நிதித் திட்டங்களும் உருவாக்கப்படும். ஒட்டுமொத்தத்தில், இந்தக் கொள்கை எந்தவொரு பாலினத்திலிருந்தோ அல்லது பிற சமூக–பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குழுவிலிருந்தோ குழந்தைகளுக்கான கல்விக்கான (தொழிற்கல்வி உட்பட) அனைத்துப் பாகுபாடுகளையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
6.9 சமூக–பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பின்னணியில் உள்ள தொலைதூரத்திலிருந்து வர வேண்டிய மாணவர்களுக்கு, பள்ளிக்கு அருகிலேயே பெண் குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துக் குழந்தைகளின் பாதுகாப்பிற்குப் பொருத்தமான ஏற்பாடுகளுடன், ஜவஹர் நவோதயா வித்தியாலயாவின் தரத்துடன் பொருந்தும் வகையில் கட்டணமில்லா தங்கும் வசதிகள் கட்டப்படும். தரமான பள்ளிகள் மூலம் சமூக பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பின்னணியில் உள்ள பெண் குழந்தைகளின் (12 ஆம் வகுப்பு வரை) பங்கேற்பை அதிகரிக்க கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்கள் பலப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படும். வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள், சிறப்புக் கல்வி மண்டலங்கள் மற்றும் பிற பின்தங்கிய பகுதிகளில் உயர் தரமான கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கக் கூடுதல் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயாக்கள் நாடு முழுவதும் கட்டப்படும். குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வியின் குறைந்தது ஒரு வருடத்தை உள்ளடக்கிய முன்பள்ளி பிரிவுகள், குறிப்பாகப் பின்தங்கிய பகுதிகளில், கேந்திரியா வித்யாலயாக்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்படும்.
6.10 ECCE மற்றும் பள்ளிக்கல்வி முறை ஆகியவற்றில் மாற்றுத்திறனாளி குழந்தைகளைச் சேர்ப்பது மற்றும் சமமாகப் பங்கேற்பதை உறுதி செய்வதில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும். மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடித்தளக் கல்வி முதல் உயர் கல்வி வரை வழக்கமான பள்ளிப்படிப்பு செயல்பாட்டிலேயே முழுமையாகப் பங்கேற்க வழிவகை செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் (RPWD Act) சட்டம் 2016 உள்ளடக்கிய கல்வியை ஒரு ‘கல்வி முறை‘ என்று வரையறுக்கிறது, இதில் மாற்றுத்திறன் உள்ளவர்கள் மற்றும் இல்லாத மாணவர்கள் ஒன்றாகக் கற்றுக்கொள்கிறார்கள். இம்முறையிலான கற்றல் மற்றும் கற்பித்தல் முறை பல்வேறு வகையான மாற்றுத்திறனாளி மாணவர்களின் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்றது. இந்தக் கொள்கை RPWD சட்டம் 2016 இன் விதிமுறைகளுடன் முழுமையாக ஒத்துப்போகும் வகையில் உள்ளது மற்றும் பள்ளிக் கல்வி தொடர்பாக அதன் அனைத்துப் பரிந்துரைகளையும் அங்கீகரிக்கிறது. தேசியப் பாடத்திட்ட கட்டமைப்பைத் தயாரிக்கும் போது, தேசிய நிறுவனங்களான மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை (DEPwD) போன்ற நிபுணத்துவ அமைப்புகளுடன் ஆலோசனைகள் நடைபெறுவதைக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT) உறுதி செய்யும்.
6.11. பள்ளிகள் / பள்ளி வளாகங்கள் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை ஒருங்கிணைப்பதற்கும், CROSS DISABILITY பயிற்சி பெற்ற கல்வியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும், தேவைப்படும் இடங்களில் வள மையங்களை நிறுவுவதற்கும், குறிப்பாகக் கடுமையான அல்லது பலகுறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு வளங்கள் வழங்கும் நோக்கத்திற்காக வழங்கப்படும். RPWD சட்டத்தின் படி குறைபாடுகள் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் தடையில்லாமல் அணுக வழிசெய்யப்படும். வெவ்வேறு குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் தேவைகளும் வேறுபட்டதாக உள்ளது. பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்கள் அனைத்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் தங்குமிடம் மற்றும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வழிமுறைகளை வழங்குவதற்கும், அவர்கள் வகுப்பறையில் ஒருங்கிணைந்த வகையில் முழு பங்கேற்பு செய்வதை உறுதி செய்வதற்கும் துணைபுரியும். குறிப்பாக, உதவி சாதனங்கள் மற்றும் பொருத்தமான தொழில்நுட்பக் கருவிகள், மேலும் போதுமான மொழி, பொருத்தமான கற்பித்தல் – கற்றல் பொருட்கள் (எ.கா. பெரிய அச்சுகள், பிரெயில் போன்ற எளிதில் அணுகக்கூடிய வடிவங்களில் உள்ள பாடப்புத்தகங்கள்) கிடைக்கச் செய்வது குறைபாடுள்ள குழந்தைகளை எளிதாக வகுப்பறையில் ஒருங்கிணைக்கவும்,, தனது ஆசிரியர் மற்றும் சகாக்களுடன் சேர்ந்து கற்றலில் ஈடுபடவும் உதவும். கலை, விளையாட்டு மற்றும் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்வி நடவடிக்கைகளுக்கும் இது பொருந்தும். இந்தியச் சைகை மொழியைக் கற்பிப்பதற்கும், இந்தியச் சைகை மொழியைப் பயன்படுத்திப் பிற அடிப்படை பாடங்களைக் கற்பிப்பதற்கும் உயர் தரமான தொகுதிக்கூறுகளை NIOS உருவாக்கும். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து போதுமான கவனம் செலுத்தப்படும்.
6.12. RPWD சட்டம் 2016ன் படி, குறிப்பிடும்படியான குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு வழக்கமான அல்லது சிறப்புப் பள்ளிப்படிப்பைத் தேர்வு செய்யலாம். கடுமையான அல்லது பல குறைபாடுகள் உள்ள கற்போருக்கு மறுவாழ்வு மற்றும் கல்வித் தேவைகளுக்கான உதவிகளைச் சிறப்புக் கல்வியாளர்களுடன் இணைந்து வள மையங்கள் வழங்கும். மேலும் பெற்றோர்கள் / பாதுகாவலர்கள் உயர்தரமான வீட்டுப் பள்ளிகளை அமைப்பதற்கும், தேவையான குழந்தைகளுக்கு திறனை மேம்படுத்தவும் உதவும். பள்ளிக்குச் செல்ல முடியாத அளவில் கடுமையான மற்றும் ஆழ்ந்த குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு வீட்டு அடிப்படையிலான கல்வி தொடரும். வீட்டு அடிப்படையிலான கல்வி பெறும் குழந்தைகள் பொது அமைப்பில் கல்வி பெரும் குழந்தைகளுக்குச் சமமாகக் கருதப்பட வேண்டும். சமபங்கு மற்றும் சமவாய்ப்பு எனும் கொள்கையின் அடிப்படையில் வீட்டு அடிப்படையிலான கல்வியின் செயல், செயல்திறன் தணிக்கை செய்யப்படும். RPWD சட்டம் 2016க்கு ஏற்ப இந்தத் தணிக்கையின் அடிப்படையில் வீட்டு அடிப்படையிலான கல்விக்கு உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் உருவாக்கப்படும், குறைபாடுகள் உள்ள அனைத்துக் குழந்தைகளின் கல்வியும் மாநில அரசின் பொறுப்பு என்பது தெளிவாகிறது. பெற்றோர்கள் / பராமரிப்பவர்கள் தொழில்நுட்பம் அடிப்படையிலான தீர்வுகளின் அடிப்படையிலான பயிற்சி மற்றும் பரந்த அளவிலான கற்றல் பொருட்கள் கிடைக்கச் செய்வதின் மூலம் பெற்றோர்கள்/பராமரிப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் கற்றல் தேவைகளுக்குத் தீவிரமாக உதவ முன்னுரிமை அளிக்கப்படும்.
6.13 தொடர்ச்சியாக உதவிகள் தேவைப்படும் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் பெரும்பாலான வகுப்பறைகளில் உள்ளனர். எவ்வளவு விரைவாக உதவிகள் கிடைக்கிறதோ அந்த அளவிற்கு முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது என்பது ஆராய்ச்சிகளில் தெளிவாகிறது. இத்தகைய கற்றல் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களின் குறைபாடுகளைக் களையக் குறிப்பாகத் திட்டமிட்டு ஆசிரியர்கள் உதவ வேண்டும். குறிப்பிட்ட செயலில், பொருத்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும், குழந்தைகளை அவர்களின் கற்கும் வேகத்திற்கேற்ப கற்க அனுமதிப்பது, ஒவ்வொரு குழந்தையின் வலிமையை மேம்படுத்துவதற்கான நெகிழ்வான பாடத்திட்டங்களுடன், பொருத்தமான மதிப்பீடு மற்றும் சான்றிதழ் பெற ஒரு சூழல் அமைப்பை உருவாக்குவதும் அடங்கும். கற்றல் குறைபாடுள்ள அனைத்து மாணவர்களுக்கும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய தேசிய மதிப்பீட்டு மையம், PARAKH உள்ளிட்ட மதிப்பீட்டு மற்றும் சான்றிதழ் மையங்கள், சமமான அணுகுமுறை, வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக, அடிப்படைக் கட்டத்திலிருந்து உயர் கல்வி வரை (நுழைவுத் தேர்வுகள் உட்பட) வழிகாட்டுதல்களை வகுத்து, அத்தகைய மதிப்பீட்டை நடத்துவதற்கான பொருத்தமான கருவிகளைப் பரிந்துரைக்கும்.
6.14 குறிப்பிட்ட குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு (கற்றல் குறைபாடுகள் உட்பட) எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்த விழிப்புணர்வு, அறிவு ஆகியவற்றுடன் பாலின உணர்திறன் மற்றும் குறைவான பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட அனைத்துக் குழுக்களிடமும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை மாற்றியமைப்பதற்கான உணர்திறன் ஆகியவைகளும் அனைத்து ஆசிரியர் கல்வித் திட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்.
6.15 மாற்றுப்பள்ளிகள் தங்கள் பண்டைய முறையிலே கற்பிக்க ஊக்குவிக்கப்படும். அதே வேளையில் அப்பள்ளி உயர்நிலை மாணவர்களின் குறைவான பிரதிநிதித்துவத்தை மாற்றும் பொருட்டு அவை சிறிது சிறிதாக NCFSE பரிந்துரைக்கும் கற்றல் முறைக்கு மாறுவதற்கு ஆதரவளிக்கப்படும். குறிப்பாக அறிவியல், கணிதம், சமூக அறிவியல், இந்தி, ஆங்கிலம், மாநில மொழிகள் மற்றும் பள்ளிகள் விரும்பவும் இதரப் பாடத்திட்டங்களுக்கான நிதி உதவி வழங்கப்படும். இது அப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கற்றல் விளைவுகளை ஒன்று முதல் பன்னிரண்டு வகுப்புகளுக்கான வரையறுக்கப்பட்டவற்றுள் கொண்டு வர உதவும். மேலும் அப்பள்ளி மாணவர்கள் மாநில மத்திய அளவில் நடைபெறும் தேர்வுகள் மதிப்பீடுகளில் பங்குபெற ஊக்குவிப்பதுடன் உயர்கல்வி நிறுவனங்களிலும் இடம்பெறவும் உதவும். அறிவியல், கணிதம், சமூக அறிவியல், மொழிகள் கற்பிக்கும் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் புதிய கல்வி நடைமுறைகளுக்கேற்ப மேம்படுத்தப்படும். போதுமான புத்தகங்கள் பத்திரிக்கைகள் இன்ன பிற கற்றல்–கற்பித்தல் பொருட்கள் கொண்டு நூலகங்கள் மற்றும் ஆய்வகங்களில் கிடைக்கும்படியாக ஏற்பாடு செய்யப்படும்.
6.16. SEDG-கு உட்பட்டு மேலே குறிப்பிட்ட கொள்கைகளின் பொருட்டு பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கக் கூடுதல் கவனம் செலுத்தப்படும். பள்ளிக் கல்வியில் பங்கேற்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, வரையறுக்கப்பட்ட பிராந்தியங்களில் சிறப்பு விடுதிகள், கல்வி இடைவெளியைக் குறைக்கும் வகுப்புகள், கட்டணத் தள்ளுபடிகள் மற்றும் உதவித்தொகை ஆகியவை அனைத்து SEDGகளில் இருந்தும் திறமையான மற்றும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குப் பெரிய அளவில் வழங்கப்படும். குறிப்பாகக் கல்வியின் இரண்டாம் நிலையில் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் உயர் கல்வியில் நுழைவதற்கு உதவியாக வழங்கப்படும்.
6.17. பாதுகாப்பு அமைச்சகத்தின் உதவியுடன், மாநில அரசுகள் பழங்குடியினர் அதிகமுள்ள பகுதிகளில் அவர்களின் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் NCC பிரிவுகளை உருவாக்க ஊக்குவிக்கலாம். இது மாணவர்களின் இயல்பான திறமை மற்றும் தனித் திறனைக் கண்டறிந்து பண்படுத்த உதவும், இது பாதுகாப்புப் படைகளில் வெற்றிகரமான வேலைவாய்ப்புகளுக்கு உதவும்.
6.18. SEDGகளில் இருந்து மாணவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து உதவித்தொகைகள் மற்றும் பிற வாய்ப்புகள் மற்றும் திட்டங்கள் ஒரு நிறுவனம் மற்றும் ஒரு வலைத்தளத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு, அனைத்து மாணவர்களும் அறிந்திருப்பதை உறுதி செய்யும் விதத்தில், ‘ஒற்றைச் சாளர அமைப்பில்‘ எளிமையான முறையில் தகுதியின் அடிப்படையில் அறிவிக்கப்படும்..
6.19. மேற்குறிப்பிடப்பட்ட அத்தனை கொள்கைகளும் அளவீடுகளும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முழுமையான மற்றும் சமவாய்ப்பு அளித்திட அவசியமான ஒன்றாகிறது. ஆனால் அவை போதுமானதாக இல்லை. பள்ளிக் கலாச்சாரத்திலும் மாற்றம் தேவை. ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், நிர்வாகிகள், ஆலோசகர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பள்ளிக் கல்வி முறையில் பங்கேற்கும் அனைவரும் மாணவர்களின் தேவைகள், சேர்க்கை மற்றும் சமபங்கு பற்றிய கருத்துக்கள் மற்றும் அனைத்து நபர்களின் மரியாதை, கண்ணியம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றை உணர்ந்து கொள்ளவேண்டும். இத்தகைய கல்வி கலாச்சாரம் தான் மாணவர்கள் அதிகாரம் பெற்ற நபர்களாக மாறுவதற்குச் சிறந்த பாதையை வழங்கும், இதன் விளைவாக சமூகம் அதன் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடிமக்களுக்குப் பொறுப்பான குடிமகனாக மாற்ற உதவும். சேர்த்தல் மற்றும் சமபங்கு ஆசிரியர் கல்வியின் முக்கிய அம்சமாக இருக்கும் (மற்றும் பள்ளிகளில் அனைத்துத் தலைமை, நிர்வாக மற்றும் பிற பதவிகளுக்கான பயிற்சி); அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்மாதிரிகளைக் கொண்டுவருவதற்காக SEDG களில் இருந்து அதிக உயர்தர ஆசிரியர்கள் மற்றும் தலைவர்களை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
6.20. ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற சமூக சேவகர்கள் மற்றும் ஆலோசகர்கள் மூலம் கொண்டுவரப்பட்ட புதிய பள்ளிக் கலாசாரத்தின் மூலமாகவும், புதிய பள்ளிப் பாத்திட்டத்தைக் கொண்டுவருவதற்கான தொடர்புடைய மாற்றங்கள் மூலமாகவும் மாணவர்கள் உணர்வூட்டப்படுவார்கள். பள்ளிப் பாடத்திட்டத்தில், அனைத்து நபர்களுக்கும் மரியாதை, பச்சாத்தாபம், சகிப்புத்தன்மை, மனித உரிமைகள், பாலினச் சமத்துவம், அகிம்சை, உலகளாவிய குடியுரிமை, சேர்த்தல் மற்றும் சமபங்கு போன்ற மனித விழுமியங்கள் குறித்த விஷயங்கள் அடங்கும். பல்வேறு கலாசாரங்கள், மதங்கள், மொழிகள், பாலின அடையாளங்கள் போன்றவற்றைப் பற்றிய விரிவான அறிவும் இதில் அடங்கும். பள்ளிப் பாடத்திட்டத்தில் ஏதேனும் சார்பு மற்றும் ஒரே மாதிரியானவை அகற்றப்பட்டு, அனைத்துச் சமூகங்களுக்கும் பொருந்தக்கூடிய கூடுதல் விஷயங்கள் சேர்க்கப்படும்..
7. பள்ளி வளாகங்களின் / குழுக்களின் மூலம் திறமையான வளங்களைத் திரட்டுதல் மற்றும் செயலூக்கத்துடன் நிர்வகித்தல்
7.1. சர்வ சிக்ஷா அபியான் (SSA) திட்டம் மூலம் நாடு முழுவதும் ஒவ்வொரு வாழ்விடத்திலும் ஆரம்பப் பள்ளிகள் நிறுவப்பட்டது. அத்திட்டம் தற்போது சமாகிரா சிக்ஷா திட்டம் (Samagra Shiksha Scheme) கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மற்றும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் இருந்தே உலகத்தரக் கல்வியைக் கையாளுவதை உறுதி செய்துள்ளது. மேலும் பல சிறிய பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. U-DISE 2016–17 தரவுகளின்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட 28% ஆரம்பப் பள்ளிகளிலும் மற்றும் 14.8% நடுநிலைப்பள்ளிகளிலும் 30க்கும் கீழ் குறைவான மாணவர்களே பயில்கின்றனர். குறிப்பாகத் தொடக்கப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக 14 மாணவர்களும், அதிலும் குறிப்பிடத்தக்க விகிதம் 6க்கும் குறைவாகவே உள்ளது; 2016–17ஆம் ஆண்டில், 1,08,017 ஓராசிரியர் பள்ளியும், அவற்றில் பெரும்பாலானவை (85743) 1–5 வகுப்புக்கு உட்பட்டவையாக இருக்கின்றன.
7.2 சிறிய பள்ளிகள் தங்களுக்குத் தேவையான முக்கிய வளங்கள் மற்றும் பொருளாதார வசதிகள் இல்லாததால் சிறப்பு வாய்ந்த பள்ளிகளாகச் செயல்பட முடியாமல் போகின்றன. ஆசிரியர்கள் பெரும்பாலும் வெவ்வேறு பள்ளிகளாக வகுப்புகளுக்குப் பல பாடங்களைக் கற்பிக்கவேண்டியுள்ளது. அதிலும் அவர்களுக்குப் பின்புலம் இல்லாத பாடங்களும் கற்பிக்கவேண்டியுள்ளது. இவற்றில் முக்கிய பகுதிகளான இசை, கலை மற்றும் விளையாட்டு போன்றவை கற்பிக்கப்படுவதில்லை. அதிலும் பெரும்பாலான பள்ளிகளில் ஆய்வகம், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நூலக புத்தகங்கள் போன்ற இயற்பொருள்கள் பள்ளிகளுக்கிடையே போதுமானதாக இல்லை.
7.3 சிறிய பள்ளிகள் கல்வியிலும் , கற்பித்தல் முறையிலும் எதிர்மறையான விளைவுகளையே கொடுக்கின்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் குழுக்களாகவும், அணிகளாகவும் செயல்படும் போது தான் சிறப்பாக செயல்படுவார்கள். இதைத்தவிர சிறிய பள்ளிகள் நிர்வாகத்திலும் ஆளுகையிலும் சவால்களை எதிர்கொள்கின்றன. இருந்தாலும் சவாலான சூழ்நிலைகளாலும் , நிலப்பரப்பு சார்ந்த சிதறலினாலும் , அதிக எண்ணிக்கையினாலும் அனைவராலும் சமமான பள்ளிகளை அடைவது சவாலாக உள்ளது. “Samagra Shiksha scheme”இன் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்புகளின் மூலமும் பள்ளி எண்ணிக்கையின் அதிகரிப்புகளுடனும் நிர்வாகக் கட்டமைப்புகள் சமமாக சீரமைக்கப்படவில்லை.
7.4 பள்ளிகளை ஒருங்கிணைப்பது என்பது பெரும்பாலும் விவாதிக்கப்படும் என்றாலும், அது மிகவும் நியாயமான முறையில் மற்றும் அணுகுவதில் எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை உறுதிசெய்தால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.ஆயினும்கூட,அத்தகைய நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்ட ஒருங்கிணைப்பை மட்டுமே விளைவிக்கும். மேலும் ஒட்டுமொத்தக் கட்டமைப்பு சிக்கல்களையும் சிறிய எண்ணிக்கையிலான சிறிய பள்ளிகளால் உருவான சிக்கல் மற்றும் சவால்களைத் தீர்க்காது
7.5. 2025க்குள் இந்தச் சவால்கள், மாநில / யூனியன் பிரேதச அரசாங்கங்களால் பள்ளிகளைக் குழுக்களாக ஆக்குவதனாலோ அல்லது பகுப்பாய்வு வழிமுறைகளில் புதுமையானவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் தீர்க்கப்படும். இந்தத் தலையீட்டின் நோக்கமானது பின்வருவனவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் இருப்பதை உறுதி செய்வதாகும்:
(அ) கலை, இசை அறிவியல், விளையாட்டு, மொழிகள், தொழிற்பாடங்கள் உட்பட அனைத்துப் பாடங்களையும் கற்பிப்பதற்காக போதுமான எண்ணிக்கையிலான ஆலோசகர்கள் / பயிற்சி பெற்ற சமூக சேவையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ( பகிரப்பட்டவை அல்லது வேறுவழிகளில்)
(ஆ) ஒரு நூலகம், அறிவியல் ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், திறன் ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வசதிகள் போன்ற போதுமான ஆதாரங்கள் (பகிரப்பட்டவை அல்லது வேறுவழிகளில்)
(இ) கலை மற்றும் அறிவியல் கண்காட்சிகள், விளையாட்டு சந்திப்புகள், வினாடி வினாக்கள் மற்றும் விவாதங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்ற கூட்டுத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், கற்பித்தல்–கற்றல் உள்ளடக்கத்தைப் பகிர்தல், ஆகியவற்றின் மூலம் சமூகத்தின் உணர்வுகளிலிருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் தனிமைப்படுத்தலை சமாளிப்பதற்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
(ஈ) அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள குறைபாடுகள் உடைய குழந்தைகளின் கல்விக்கு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவினை ஏற்படுத்துவது;
(உ) முதல்வர்கள், ஆசிரியர்கள், மற்றும் பள்ளிகளின் ஒவ்வொரு குழுவிலும் உள்ள மற்ற பங்குதாரர்கள் மூலம் சிறந்த முடிவுகளை எடுப்பதன் மூலம் பள்ளிகளின் நிர்வகித்தலை மேம்படுத்த முடியும், மேலும் இது போன்ற குழுக்களைப் பள்ளிகளின் அடிப்படை நிலையிலிருந்து அடுத்தடுத்த நிலைகள் வரைக்கும் ஒருங்கிணைந்த குறைவான அளவில் தன்னாட்சி பெற்ற குழுவாக நடத்துவது.
7.6. மேற்கூறியவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளில் ஒன்று, பள்ளி வளாகம் என்று அழைக்கப்படும் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதாகும், இதில் ஒரு மேல்நிலைப் பள்ளியானது, அதனிடமிருந்து ஐந்து முதல் பத்துக் கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள அதனது அடுத்த நிலைப் பள்ளிகளுடன், குறிப்பாக அங்கன்வாடிகளும் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். இந்தப் பரிந்துரை முதன்முதலில் கல்வி ஆணையத்தால் (1964-66) செய்யப்பட்டது, ஆனால் அது அமல்படுத்தாமல் கைவிடப்பட்டது. இந்தக் கொள்கையானது பள்ளி வளாகம்/குழுக்கள் போன்றவற்றை எங்கெல்லாம் சாத்தியப்படுமோ அங்கெல்லாம் உறுதியாக அங்கீகரிக்கின்றது. இந்தப் பள்ளிவளாகம்/குழுக்களின் நோக்கமானது வளப்பங்கீடு, செயல்பாடு, ஒருங்கிணைப்பு, தலைமை, நிர்வாகம் மற்றும் மேலாண்மை போன்றவற்றில் பள்ளிகளை அதிகச் செயல்திறனுடையதாக, பயன்படுத்தும் வண்ணமாக்கும்.
7.7. பள்ளி வளாகங்கள் / குழுக்களை நிறுவுதல் மற்றும் வளாகங்களின் வளங்களைப் பகிர்வதன் மூலம் தொடர்ச்சியான பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதன் விளைவாகக் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்கு மேம்பட்ட ஆதரவுகள், மேலும் சங்கம் மற்றும் பள்ளி வளாகங்களில் கல்வி / விளையாட்டு / கலை / கைவினை போன்ற நிகழ்வுகள், மற்றும் கலை, இசை, மொழி, தொழிற்கல்வி, உடற்கல்வி மற்றும் பிறபாடங்களில் தகவல் தொடர்பு கருவிகளைப் பயன்படுத்தி மெய்நிகர் வகுப்புகள் ஆகியவற்றில் ஆசிரியர்களைப் பகிர்வது, மாணவர்களுக்குச் சிறந்த ஆதரவு, சேர்க்கை, வருகைப் பதிவேடு மற்றும் செயல்திறன் போன்றவற்றில் ஆலோசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளியின் மேலாண்மை குழுக்களின் (மாறாக வெறுமனே பள்ளி நிர்வாகக் குழுக்களை விட) பகிர்வதன் மூலம் புதுமையான முன்முயற்சிகளாக மட்டுமின்றி மிகவும் உறுதியான மேம்பட்ட நிர்வாகத்திற்காக உள்ளூர் பங்குதாரர்களினால் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் சமூகக்குழுக்கள், பள்ளித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், துணை ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் குடிமக்கள் பங்கேற்கச் செய்வது பள்ளிக்கல்வி முறையை உற்சாகப்படுத்துவதுடன், வளத் திறனுடன் கையாளப்படும்.
7.8 பள்ளிகளின் நிர்வாகம் மேம்பட்டு, பள்ளி வளாகங்கள்/clusterகளுடன் மிகவும் திறன் மிகுந்ததாக இருக்கும். முதன்மையாக, DSE, பள்ளி வளாகம் / clusterக்கு அதிகாரம் வழங்கும். மேலும், இது அரை தன்னாட்சிப் பிரிவாகச் செயல்படும். மாவட்ட கல்வி அலுவலர் (DEO) மற்றும் தொகுதி கல்வி அதிகாரிகள் (BEO), ஒவ்வொரு பள்ளி வளாகத்தையும் ஒரே அலகாகக் கருத்தில் கொண்டு, அதற்குத் தேவையான பணிகளைச் செய்து தருவார்கள். DSE வழங்கிய அதிகாரத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளி வளாகம் பணியைச் செயல்படுத்துவர்.
இந்த வளாகமே DSE ஆல் வழங்கப்பட்ட சில பணிகளைச் செய்யும. மேலும் அதனுள் உள்ள தனிப்பட்ட பள்ளிகளையும் கையாளும். தேசியக் கல்விக் கட்டமைப்பு (NCF) மற்றும் மாநில கல்விக் கட்டமைப்பு (SCF) ஆகியவற்றை கடைப்பிடித்து ஒருங்கிணைந்த கல்வியை வழங்குவதற்கும், கற்பித்தல் முறை, பாடத்திட்டம் போன்றவற்றைப் பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தவும் புதுமைப்படுத்தவும் பள்ளி வளாகம் குழுக்களுக்குக் குறிப்பிடத்தக்கத் தனி உரிமை வழங்கப்படும். இந்தக் குழுமத்தின் கீழ், பள்ளிகளின் திறன் பலப்படும், சுதந்திரத்தைப் பயன்படுத்த இயலும். மேலும் வளாகத்தை புது முயற்சிக்கும், மாற்று முறை கல்விக்கு ஏதுவாக பங்களிக்கும். இது சமயம், DSE அடைய வேண்டிய இலக்கு நிலையையும் ஒட்டுமொத்தச் செயல்திறனை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தும்.
7.9. குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டத்தின் செயல்பாட்டை அத்தகைய வளாகங்கள் கொண்டு உருவாக்கப்படும். பள்ளிகள் தங்களின் எஸ்.எம்.சி களின் (SMCs) ஈடுபாட்டுடன், தங்கள் எஸ்.டி.பி திட்டங்களை (SDPs) உருவாக்கும். இந்தத் திட்டங்களே பள்ளி வளாகம் அல்லது கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டங்களை (SCDPs) உருவாக்குவதற்கான அடிப்படையாக அமையும். எஸ்சிடிபி (SCDP) பள்ளி வளாகத்துடன் தொடர்புடைய பிற கல்வி நிறுவனங்களான தொழிற்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும். மேலும் பள்ளி வளாகத்தின் முதன்மைஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால் எஸ்சிஎம்சியின் (SCMC) செயல்பாட்டுடன் எஸ்சிடிபி (SCDP) உருவாக்கப்பட்டு, அனைவருக்கும் பொதுவானதாக அமையும். இந்தத் திட்டத்தில் மனித வளங்கள், கற்றல் வளங்கள், திட்டத்தின் உடல்கூறுகள் மற்றும் அதனின் உள்கட்டமைப்பு, மேம்பாட்டு முயற்சிகள், நிதி ஆதாரங்கள், பள்ளியின் முயற்சிகள், ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கல்வி முடிவுகள் ஆகியவை அடங்கும். துடிப்பான கற்றல் சமூகங்களை ஏற்படுத்துவதற்குப் பள்ளி வளாகங்களில் உள்ள ஆசிரியர்களையும், மாணவர்களையும் இந்தத் திட்டத்தின் மூலம் மேம்படுத்த முயற்சிக்கும். எஸ்.டி.பி (SDP) மற்றும் எஸ்.சி.டி.பி (SCDP) வழிகாட்டுதலின்படி, டி.எஸ்.இ (DSE) உள்ளடக்கிய பள்ளியின் அனைத்துப் பங்குதாரர்களையும் சீரமைக்கும். எஸ்.எம்.சி (SMC) மற்றும் எஸ்.சி.எம்.சி (SCMC) ஆகியவை எஸ்.டி.பி (SDP) மற்றும் எஸ்.சி.டி.பி (SCDP) உதவியுடன் பள்ளியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும், மற்றும் இந்தக் கூட்டமைப்பு அந்த (மேலே சொன்ன) திட்டங்களைச் செயல்படுத்த உதவும். டி.எஸ்.இ (DSE), அதன் தொடர்புடைய நிர்வாகி மூலம் ex. பி.இ.ஓ (BEO), ஒவ்வொரு பள்ளி வளாகத்தின் எஸ்சிடிபியை (SCDP) ஒப்புதல் அளித்து உறுதிப்படுத்தும். இது (DSE with BEO) எஸ்சிடிபி யின் (SCDP) குறுகிய கால (1 ஆண்டு) மற்றும் நீண்ட காலத்திற்கு (3-5 ஆண்டுகள்) தேவையான நிதி, மனிதவளங்கள், மற்றும் அதனின் கட்டமைப்புக்குத் தேவையான வளங்களை வழங்கும். மேலும் இது (DSE with BEO), கல்வியின் மேம்பாட்டிற்குத் தேவையான அனைத்திற்கும் பள்ளி வளாகங்களுக்கு உதவும். டி.எஸ்.இ (DSE) மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி (SCERT) இருவரும், நிதி, பணியாளர்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி, மற்றும் எஸ்.டி.பி (SDP) மற்றும் எஸ்.சி.டி.பி.யின் (SCDP) வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை அனைத்துப் பள்ளிகளுடனும் தாங்கள் பகிர்ந்து கொள்ளலாம், அதை அவ்வப்போது திருத்தப்படலாம்.
7.10. அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நேர்மறையான புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக, நாடு முழுவதும் ஒரு தனியார்ப் பள்ளியுடன் ஒரு பொதுப் பள்ளியை இணைத்து, அந்த இணைக்கப்பெற்ற இரு பள்ளிகளும் தங்களுக்குள் சந்திக்கலாம் / தொடர்பு கொள்ளலாம், கற்றுக்கொள்ளலாம் மற்றும் முடிந்தால், தங்களிடம் உள்ள வளங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்ளலாம். தனியார்ப் பள்ளிகள் தங்களின் சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்தப்பட்டு, பகிரப்பட்டு, அரசுப் பள்ளிகளில் நிறுவனமயமாக்கலாம். இதைப்போல் பொதுப் பள்ளிகளும் முடிந்தவரை செய்யலாம்..
7.11. ஒவ்வொரு மாநிலமும் ஏற்கனவே உள்ள அங்கன்வாடி(பால பவன்) மையங்களைப் பலப்படுத்த அல்லது புதிதாக நிறுவ ஊக்குவிக்கப்படும், அங்கு எல்லா வயதுக் குழந்தைகளும் வாரத்திற்கு ஒரு முறை (எ.கா., வார இறுதிகளில்) அல்லது ஒரு சிறப்பு பகல்நேர உண்டு உறைவிடப் பள்ளியாக, கலை தொடர்பான, தொழில் தொடர்பான அல்லது விளையாட்டுகள் தொடர்பான பயிற்சிகளில்/ செயல்பாடுகளில் பங்கேற்கலாம். அத்தகைய அங்கன்வாடி மையங்கள்(பால பவன்கள்) முடிந்தால் ஏற்கனவே அருகில் இயங்கி வரும் பள்ளி வளாகம்/ குழுக்களுடன் இணைக்கப்படலாம்..
7.12. பள்ளி என்பது நம் முழுச் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாகவும் நாம் கொண்டாடிப் பேணக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும். பள்ளியின் கண்ணியத்தை மீட்டெடுக்கும் வகையில் பள்ளியின் முக்கியமான நாட்கள் அதாவது பள்ளி தொடங்கிய நாள் ஒரு விழாவாக சமூகத்துடன் சேர்ந்து கொண்டாடப்பட வேண்டும். அந்த நாளில் அப்பள்ளியில் படித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்த முன்னாள் மாணவர்களை அனைவருக்கும் முன் கவுரவிக்கப்பட வேண்டும். மேலும், பள்ளியில் பயன்படுத்தப்படாத கட்டடங்கள், இடங்கள் ஆகியன நம் சமூகத்திற்கான சமூக, அறிவுசார்ந்த விஷயங்களுக்கும் மற்றும் தன்னார்வ நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், கற்பித்தல் அல்லாத சமயங்களில் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படலாம், மேலும் இதை சமூக விழிப்புணர்வு மையமாகவும் (Samajik chethna kendra) பயன்படுத்தலாம்.
8. பள்ளிக் கல்விக்கான தரத்தை அமைத்தல் மற்றும் அங்கீகரித்தல்.
8.1 பள்ளிக் கல்வி ஒழுங்குமுறை அமைப்பின் நோக்கம் கற்றலின் விளைவுகளைத் தொடர்ச்சியாக மேம்படச் செய்வதாக இருக்க வேண்டும்; மாறாக, பள்ளிகளை அதிகப்படியாகக் கட்டுப்படுத்துவதாகவோ, புதிய கண்டுபிடிப்புகளைத் தடுப்பதாகவோ, அல்லது மாணவர்களையோ ஆசிரியர்களையோ முதல்வர்களையோ மனச்சோர்வு அடையச் செய்வதாகவோ இருக்கக் கூடாது. மொத்தமாக, ஒழுங்குமுறைப்படுத்துதலின் குறிக்கோளானது பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிகாரத்தை நம்பி அளிப்பதாகவும், அவர்களது முழுத்திறமையை வெளிக்கொணரவும் சிறப்பாகச் செயல்படவும் ஏதுவாகவும், அதே சமயம் நிதி, நடைமுறைகள் மற்றும் கல்வியின் விளைவுகள் பொதுவில் வெளிப்படைத்தன்மையுடன் அமல்படுத்துவதன் மூலம் கல்வி அமைப்பின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதாகவும் இருக்க வேண்டும்.
8.2 தற்சமயம் பள்ளிக்கல்வி அமைப்பின் நிர்வாகம் சார்ந்த மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த அனைத்து முக்கிய பணிகளையும் – குறிப்பாகப் பொதுக்கல்வி அளித்தல், கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்துதல் மற்றும் திட்டமிடுதல் ஆகியவற்றைப் பள்ளிக் கல்வித்துறை என்ற ஒரே அமைப்பு, அதன் சார்பு அமைப்புகளுடன் சேர்ந்து செய்து வருகின்றது. இதனால் கருத்து வேற்றுமைகளும், அதிகாரச் செறிவும் ஏற்பட்டு பள்ளி முறை நிர்வாகம் சீரற்றதாகி விடுகிறது. பிற பணிகளில், குறிப்பாக ஒழுங்குமுறைப்படுத்துதலில் பள்ளிக் கல்வித்துறையின் கவனம் பதிவதால் தரமான கல்வி அளிப்பதற்கான முயற்சிகள் நீர்த்துப் போய்விடுகிறது.
8.3 இலாப நோக்கத்துடன் இயங்கும் பல தனியார்ப் பள்ளிகளில், கல்வி வணிகமயம் ஆக்கப்படுவதையோ லாபத்திற்காகப் பெற்றோர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதையோ தற்போதைய ஒழுங்குமுறை பரிபாலனத்தால் கட்டுப்படுத்த இயலவில்லை. அதே வேளையில், இது பொது நலத்துடனும் பரோபகாரச் சிந்தனையுடனும் இயங்கும் பள்ளிகளைப் பல சமயங்களில் கவனக்குறைவாக ஊக்கமிழக்க வைப்பதாகவும் உள்ளது. தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தான் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள் இயங்குகின்றன என்றாலும், இந்த இருவகைப் பள்ளிகளின் ஒழுங்குமுறை அணுகுமுறைகளுக்கு இடையில் மிக அதிகமான சமச்சீரற்றத் தன்மை நிலவுகிறது.8.4 ஒரு துடிப்பான ஜனநாயகச் சமூகத்திற்கு அடித்தளம் பொதுக் கல்விமுறையே ஆகும். தேசத்திற்கான உயரிய கற்றல் வெளிப்பாடுகளைச் சாதிக்கும் வகையில் கல்விமுறை நிர்வகிக்கப்படவும் மாற்றியமைக்கப்படவும் ஊக்குவிக்கப்படவும் வேண்டும். அதே சமயத்தில், சமூக அக்கறையுள்ள தனியார்ப் பள்ளிகளை நடத்தும் பிரிவினரை உற்சாகப்படுத்தி, அவர்கள் குறிப்பிடத்தக்க நன்மை பயக்கும் பங்கை ஆற்றிட வழிவகுக்க வேண்டும்.
8.5 மாநில பள்ளி முறை குறித்து இந்தக் கொள்கையின் முக்கிய அம்சங்களும் பரிந்துரைகளும், அம்முறையின் கீழ் இயங்கும் தனிப்பட்ட நபர்களின் கடமைகளும், அதன் ஒழுங்குமுறைக்கான அணுகுமுறைகளும் கீழ் வருமாறு:
அ) பொதுக் கல்வி முறையின் தொடர் முன்னேற்றத்திற்குத் தேவையான கொள்கை முடிவுகளை மற்றும் ஒட்டுமொத்த கண்காணிப்பினை மாநில அளவில் உயர்மட்டக் கல்வி அமைப்பான பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளின் விதிகளிலோ செயற்பாடுகளிலோ அல்லது பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்துவதிலோ பள்ளிக் கல்வித்துறை தலையிடாது. இதனால் கருத்து வேற்றுமைகளை நீக்கவும் அரசுப் பள்ளிகளை முன்னேற்றவும் பள்ளிக் கல்வித்துறையால் சீரான கவனத்தைச் செலுத்த முடியும்.
ஆ) மாநிலம் முழுக்க பொதுக் கல்விக்கான செயல்பாடுகளும் மற்றும் சேவை வழங்குதலும் பள்ளிக் கல்வி இயக்கத்தால் (DEO மற்றும் BEO அலுவலகங்கள் உட்பட) கையாளப்படும். பள்ளிக் கல்வி செயல்பாடுகள் மற்றும் விதிகள் குறித்த கொள்கைகளைச் செயல்படுத்த அது சுயதீனமாக இயங்கும்.
இ) தனியார், அரசு மற்றும் பரோபகாரக் கல்வி நிறுவனங்கள், பாலர் கல்வியில் தொடங்கி கல்வியின் அனைத்து நிலைகளிலும் அத்தியாவசியத் தரமதிப்பீடுகளுடன் இயங்குவதை உறுதி செய்யும் பொருட்டு ஆக்கப்பூர்வமான சுய ஒழுங்கீட்டு அல்லது அங்கீகார முறை ஏற்படுத்தப்படும். அனைத்துப் பள்ளிகளும் குறைந்தபட்ச தொழில்சார் தரத்தினைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் மாநிலப் பள்ளி ஒழுங்குமுறை ஆணையம் (State School Standards Authority – SSSA) தோற்றுவிக்கப்படும். புதிதாகத் தோற்றிவிக்கப்பட்ட மாநிலப் பள்ளி ஒழுங்குமுறை ஆணையம் (SSSA) பள்ளிகளுக்கான பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, பாட வாரியாகன மற்றும் வகுப்பு வாரியாகன ஆசிரியர்களின் எண்ணிக்கை, நிதிக் கொள்கைகள், நிர்வாகத்திற்கான திடமான வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படை அளவீடுகளை அனைத்துப் பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான கட்டமைப்பினை பலதரப்பட்ட பங்குதாரர்களை, குறிப்பாக ஆசிரியர்களையும் பள்ளிகளையும் கலந்தாலோசித்து மாநில பள்ளிக்கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (SCERT) உருவாக்கித் தர வேண்டும்.
மாநிலப் பள்ளி ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரையின்படி அடிப்படை ஒழுங்குபடுத்துதல் பற்றிய தகவல்களை வெளிப்படைத் தன்மையுடன் பொது வெளியில் பொது மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். எத்தகு தகவல்களை எவ்வெவ்வாறு வெளியிட வேண்டும் என்பதை வடிவமைக்கும் போது, சர்வதேச அளவிலான பள்ளிகளுக்கான சிறப்பான செயல்முறைகளைக் கவனத்தில் கொண்டு வடிவமைக்க வேண்டும். இத்தகு தகவல்களை மாநிலப் பள்ளி ஒழுங்குமுறை ஆணையம் பராமரிக்கும் வலைத்தளங்களிலும் பள்ளி வலைத்தளங்களிலும் பதிவு செய்து காலத்திற்கேற்ப புதுப்பித்துப் பராமரிக்க வேண்டும். பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து பங்குதாரர்களிடமிருந்தோ மற்றவர்களிடமிருந்தோ வரும் புகார்களுக்கும் கருத்துக்களுக்கும் மாநிலப் பள்ளி ஒழுங்குமுறை ஆணையம் தீர்ப்பளிக்க வேண்டும். மேலும் மதிப்புமிக்க உள்ளீடாகக் குறிப்பிட்ட இடைவெளியில், பெயர் குறிப்பிடப்படாமல் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களிடமிருந்து பின்னூட்டங்கள் இணையவழியாகக் கோரப்பட வேண்டும். மாநிலப் பள்ளி ஒழுங்குமுறை ஆணையம் திறம்பட வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றத் தேவையான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன் மூலம் ஒழுங்குமுறை ஆணைகளால் பள்ளிகள் மீது தற்சமயம் சுமத்தப்பட்டுள்ள மிகுதியான சுமை வெகுவாகக் குறைக்கப்படும்.
ஈ) மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) அதன் தேசிய அமைப்புடன் சேர்ந்து (NCERT) கலந்தாலோசித்து, மாநிலங்களில் கல்விப் புலம் சார்ந்த விடயங்களான தர நிர்ணயம் வகுத்தல் மற்றும் மாநிலப் பாடத்திட்டங்கள் ஆகியவற்றை வழிநடத்தும். பள்ளி தர மதிப்பீட்டு மற்றும் தர அங்கீகாரக் கட்டமைப்பினை (School Quality Assessment and Accreditation Framework – SQAAF) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைத்துப் பங்குதாரர்களையும் கலந்தாலோசித்து உருவாக்க வேண்டும். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் “மாற்ற மேலாண்மைக்கான செயல்முறைகளை” முன்னெடுத்துச் செல்லும். இதன் மூலம் கல்வி அமைப்புகளான – குறுவள மையம் (CRC), வட்டார வள மையம் (BRC) மற்றும் மாவட்ட ஆசிரியப் பயிற்சி நிறுவனம் (DIET) ஆகியவை மூன்று ஆண்டுகளில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை அளிக்கும் நிறுவனங்களாக பரிணமிக்க முடியும். அதே வேளையில் மாநிலங்களில் பள்ளிக் கல்வி முடித்துச் செல்லும் மாணவர்களுக்குச் சான்றளிக்கும் பொறுப்பினை மாநில தேர்வாணையம்/மதிப்பீட்டுக் குழு ஏற்றுக்கொள்ளும்.
8.6 கலாச்சாரம், கட்டமைப்புகள் மற்றும் அமைப்புமுறைகள் மூலம் பள்ளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சமுதாயத்திற்கும் மற்றும் பிற பங்குதாரர்களுக்கும் அதிகாரத்தை அளித்து, போதுமான வளங்களை அளிப்பதால் இணக்கமான பொறுப்புணர்வு உண்டாகும். ஒவ்வொரு பங்குதாரருக்கும், கல்விமுறையில் பங்கேற்பவருக்கும் மிக உயர்ந்த அளவிலான நேர்மையுடனும் முழு அர்ப்பணிப்புடனும் முன்மாதிரியான பணி நெறி முறைகளுடனும் தங்களுடைய பங்கினை ஆற்றக் கடமையுள்ளது. அமைப்பின் ஒவ்வொரு பங்கிற்கும் வெளிப்படையாகத் தெரியப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகள் வரையறுக்கப்பட வேண்டும். அந்த எதிர்பார்ப்புகளைக் கடுமையான மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த மதிப்பீடானது புறநிலை மற்றும் வளர்ச்சி சார்ந்ததாகவும், அதே சமயத்தில் பொறுப்பினை உறுதி செய்வதாகவும் அமைதல் வேண்டும். இது செயல்பாட்டின் முழுப் பரிணாமமும் வெளிப்படும் வகையில் கருத்துக்களின் மதிப்பீடுகளின் பல ஆதாரங்களின் மூலம் செய்யப்படும். இம்மதிப்பீடானது, மாணவர்களின் கற்றல் அடைவுகள் பல்வேறு காரணிகளின் குறுக்கீடுகளையும் வெளிப்புறத் தாக்கங்களையும் கொண்டிருப்பதை அங்கீகரிக்கிறது. இது கல்விக்கு, குறிப்பாகப் பள்ளிக் கல்விக்குக் கூட்டு முயற்சி தேவை என்பதை அங்கீகரிக்கிறது. இம்மாதிரியான செயல்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் தான் அனைத்து நபர்களின் பதவி உயர்வும் அங்கீகாரமும் பொறுப்புகளும் இருக்கும். இந்த வளர்ச்சி, செயல்திறன் மற்றும் கடப்பாடு அமைப்புமுறை அதிக ஒருமைப்பாட்டுடனும் முறையாக அனைத்துச் செயற்பாட்டாளர்களின் கட்டுப்பாட்டு எல்லைக்குள்ளும் இயங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.
8.7 அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளும் (நடுவண் அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் நீங்கலாக) ஒரே அளவுகோல்கள், வரையறைகள் மற்றும் செயல்முறைகள் மூலம் இணையத்தின் மூலமாகவோ இணையம் இல்லாமலோ பொதுவெளியில் வெளிப்படைத்தன்மையுடன் மதிப்பீடும் அங்கீகாரமும் செய்யப்பட வலியுறுத்தப்படும். இதன்மூலம் பொதுநலத்தில் ஆர்வமுள்ள தனியார்ப் பள்ளிகள் திணறடிக்கப்படாது ஊக்கப்படுத்தப்படுவார்கள். தரமான கல்வியை அளிக்க சமூகச் சிந்தனையுள்ளதனியார்ப் பள்ளிகள் உற்சாகப்படுத்தப்படும். அதே வேளையில் தன்னிச்சையான கல்விக் கட்டணங்களில் இருந்து பெற்றோர்களும் சமூகமும் பேணப்படுவர். அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள், தங்களுடைய பள்ளி மற்றும் மா.ப.ஒ.ஆ. (SSSA) வலைத்தளங்களில் வகுப்பறைகள், மாணவர்கள், ஆசிரியர்கள், போதிக்கப்படும் பாடங்கள், கல்விக் கட்டணம், பல்வேறு மதிப்பீடு தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் அடைவுகள் போன்ற தகவல்களை வெளிப்படையாகத் தெரிவித்திருக்க வேண்டும். அரசால் நிர்வகிக்கப்படும் கல்விக்கான கட்டமைப்பினை மனிதவள மேம்பாட்டுத் துறையினை கலந்தாலோசித்து மத்தியக் கல்வி வாரியம் வெளியிடும். அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒரே தரநிலையில் தணிக்கை செய்யப்பட்டு லாப நோக்கமற்ற நிலையில் வெளிப்படுத்தப்படும். உபரி வருமானம் ஏதேனும் இருந்தால் மீண்டும் கல்வி வளர்ச்சிக்காக அவை முதலீடு செய்யப்படும்.
8.8 கடந்த பத்தாண்டுகளின் அனுபவம் மற்றும் படிப்பினைகளின் அடிப்படையில் பள்ளி ஒழுங்குமுறை அங்கீகாரம் மற்றும் ஆளுகைக்கான தர நிர்ணயக் கட்டமைப்பு பரிசீலனைச் செய்யப்படும். இந்தப் பரிசீலனையானது சமூகத்தின் அனைத்துத் தரப்பு மாணவர்களும், குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவினைச் சார்ந்த மாணவர்களும், குழந்தைப் பருவக் கல்வி (3 வயது முதல்) முதல் மேல்நிலை கல்வி வரை (அதாவது, 12ஆம் வகுப்பு வரை) இலவச மற்றும் உயர்தரமான சமமான கட்டாயக் கல்வி பெற வழிவகை செய்யும். உள்ளீடுகளுக்கு வழங்கப்படும் அதிக முக்கியத்துவம் மற்றும் செயல்பாடுகளில் நிர்ணயிக்கப்பட்ட இயந்திரத்தனமான அணுகுமுறை ஆகியவை மாற்றப்பட்டு, தேவைகள் மற்றும் எதார்த்தத்தை மனதில் கொண்டு குறிப்பாக நிலப்பரப்பு மற்றும் அறைகளின் வடிவம், நகரப்புறங்களில் விளையாட்டு மைதானங்களின் சாத்தியக் கூறுகள் ஆகியவை மாற்றியமைக்கப்படும். இத்தகு ஆணைகள் தளர்த்தப்பட்டு ஒவ்வொரு பள்ளியும் தன் சூழலின் தேவைகளையும் கட்டுப்பாடுகளையும் மனதில் கொண்டு பாதுகாப்பான, இனிமையான மற்றும் ஆக்கப் பூர்வமான கற்றல் வெளியினை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பள்ளிகளின் மதிப்பீட்டின் போது கற்றல் அடைவுகள் மற்றும் நிதி, கல்வி சார் செயல்பாடுகள் குறித்த வெளிப்படைத்தன்மையான பகிர்வினுக்குத் தகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இத்தகு நடைமுறை இந்தியாவின் நிலையான வளர்ச்சி நோக்கமான (Sustainable Developmental Goal 4 – SDG4) அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசச் சரிசமமான தரமான முதல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வியை வழங்கும் இலக்கை நோக்கி நகர்த்தி முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும்.
8.9 பொதுப் பள்ளிக் கல்வி முறையின் நோக்கம் மிகச் சிறந்த தரமான கல்வியை அளிப்பதாக மாற்றியமைக்கப்படுவதினால், வாழ்வின் அனைத்து நிலையில் இருக்கும் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் கல்விக்கான மிகச்சிறந்த தேர்வாக பொதுக் கல்வி முறையை நாடுவார்கள்.
8.10 ஒட்டுமொத்த முறைமையின் குறிப்பிட்ட கால இடைவெளியிலான பரிசோதனையானது, மாணவர்களின் கற்றல் நிலைகளுக்கேற்ப “தேசியச் சாதனை ஆய்வு” (National Achievement Survey – NAS) என்னும் பெயரில் புதிதாக அமையவிருக்கும் தேசிய மதிப்பீடு மையம் – PARAKH மூலம் மற்ற அரசு நிறுவனங்களுடன் – குறிப்பாக NCERTயுடன் சேர்ந்து நடத்தும். NCERT போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மதிப்பீடு வழிமுறைகள் மற்றும் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படும். இந்த மதிப்பீடு அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளிலுள்ள மாணவர்களுக்கும் செய்யப்படும். மாணவர் எண்ணிக்கைக்கேற்ப “மாநில மதிப்பீடு கணக்கெடுப்பு” (State Assessment Survey – SAS) நடத்தப்பட மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்படுவர். இதன் முடிவுகள் வளர்ச்சி நோக்கத்திற்காகவும், பள்ளிக் கல்வி முறையை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும். புதிய தேசிய மதிப்பீடு மையம் அமையும் வரை NCERT தேசிய மதிப்பீடு கணக்கெடுப்பினை (NAS) தொடர்ந்து செய்து வரும்.
8.11 இறுதியாக இந்த முழுமையான முயற்சிகளில் குழந்தைகளையும் பதின்மப் பருவத்தினரையும் மறந்துவிடக்கூடாது; அவர்களுக்காகத்தானே இந்தப் பள்ளி முறைமையே வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின், குறிப்பாகப் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்குத் தகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். பதின்மப் பருவத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்கள், போதைப் பொருள் உபயோகம், அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் குறித்து புகார் அளிக்கத் தெளிவான, பாதுகாப்பான மற்றும் சிறப்பான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அதற்கான கட்டமைப்பு அதிகபட்ச முன்னுரிமையுடன் அனைத்து மாணவர்களும் அறியும் வகையில் காலத்தே ஏற்படுத்துதல் மிக மிக அவசியம் ஆகும்.
பகுதி II. உயர் கல்வி
9. தரமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்: இந்திய உயர் கல்வி அமைப்பிற்கான ஒரு புதிய மற்றும் முற்போக்கு பார்வை
9.1. தனிமனித மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் முன்மொழியப்பட்ட, அனைவருக்குமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கும் ஒரு ஜனநாயகத்தன்மையுள்ள, நியாயமான, சமூக உணர்வுள்ள, பண்பட்ட மற்றும் மனிதநேயமிக்க நாடாக இந்தியாவை வளர்த்தெடுப்பதிலும் உயர்கல்வி, மிக முக்கிய பங்கு வகிக்கிறது
9.1.1. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தேவைகளைக் கவனத்தில் கொண்டு, உயர் கல்வியானது, சிறந்த, சுயசிந்தனையாக்க, முழுமையான ஆளுமை மிக்க மற்றும் புதிய ஆக்கத்திறனுள்ள மனிதர்களை வளர்த்தெடுப்பதை, நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். உயர்கல்வியானது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுக்குக் தேவையான வகையில் ஒரு தனிமனிதரை, அறிவியல், சமூக அறிவியல், கலை, மானுடவியல், மொழிகள் உள்ளிட்ட தொழில்சார், தொழில்நுட்ப மற்றும் திறன்சார் கல்விப்புலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறப்புப்பாடங்களை ஆழமாக கற்றுத்தேர்வதற்கு வாய்ப்பளிப்பதாகவும், கூடவே நற்குணங்கள், அறவுணர்ச்சி, அரசியலமைப்புச் சட்டத்தின்பால் மதிப்பு, அறிவுசார் தேடல், அறிவியல் மனப்பான்மை, புதிய ஆக்கத்திறன், சேவை மனப்பான்மை போன்றவற்றை வளர்த்தெடுத்துக்கொள்ள வாய்ப்பளிப்பதாகவும் இருக்க வேண்டும். தரமான உயர்கல்வியானது, தனிப்பட்ட சாதனைகளையும், அறிவாற்றலையும் மேம்படுத்துவதோடல்லாமல், ஆக்கப்பூர்வமான, பயன்மிக்க பொதுநலச்சேவை மற்றும் சமூகப்பங்களிப்பை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். மேலும், இது மாணவர்களை பல்வேறு பணிகளுக்கு ஆயத்தப்படுத்தி, பொருள் பொதிந்த மற்றும் திருப்திகரமான வாழ்க்கைக்கான பொருளாதாரத் தன்னிறைவையும் வழங்கும் விதமாகவும் இருக்க வேண்டும்.
9.1.2. பள்ளிக்கல்விக்கு முன்பான பாலர்கல்வி முதல் உயர்கல்வி வரை கற்றலின் ஒவ்வொரு கட்டத்திலும் குறிப்பிட்ட திறன்கள் மற்றும் மதிப்பீடுகள் அளிக்கப்பட வேண்டியது, முழுமையான நபர்களை வளர்ப்பதற்கான அடிப்படை நோக்கமாகும்.
9.1.3. சமூக மட்டத்தில், உயர்கல்வியானது தனக்கான சிக்கல்களுக்குத் தானே வலுவான தீர்வுகளைக் கண்டறியும், அறிவார்ந்த, சமூக உணர்வு மிக்க மற்றும் திறமையான தேசத்தை உருவாக்க முனையவேண்டும். உயர்கல்வி, புதிய அறிவுகளை உருவாக்குதல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும், இதன் மூலம் வளர்ந்துவரும் தேசியப் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க வேண்டும். ஆகவே, தரமான உயர்கல்வியின் நோக்கம், தனிப்பட்ட முறையில் வேலைவாய்ப்புக்குத் ஆயத்தமாவதைக் காட்டிலும் மேலானதாக இருக்க வேண்டும். துடிப்புமிக்க, சமூக ஈடுபாடு கொண்ட, ஒருங்கிணைந்த சமுதாயத்தோடு கூடிய, மிகவும் மகிழ்ச்சியான, ஒத்திசைவான, பண்பட்ட, பயன்பாடு மிக்க, புத்தாக்கத்திறனுள்ள, முற்போக்கான மற்றும் வளமான தேசமாக நம் நாட்டை மாற்றுவதற்கான திறவுகோலாக உயர்கல்வி உள்ளது.
9.2. இந்தியாவில் தற்போது உயர்கல்வித் துறை எதிர்கொள்ளும் சில முக்கிய பிரச்சினைகள் பின்வருமாறு:
- மிகக்கடுமையாகப் பிளவுபட்ட உயர்கல்விச் சூழல்;
- அறிவாற்றல் திறன் மற்றும் விளைவு நோக்கிய கற்றலுக்குக் குறைந்த முக்கியத்துவம்;
- மிகுந்த கட்டுப்பாட்டுடன் பிரிக்கப்பட்டுள்ள கல்விப்புலங்கள்; ஆரம்பக்கட்டங்களிலேயே மாணவர்களை ஒரு குறுகிய வட்டத்தில், மிக குறுகிய கல்விப்புலங்களில் சுருக்குதல்;
- உள்ளூர் மொழி வழி கற்பிக்கும் உயிர்கல்வி நிறுவனங்களின் மிகச் சொற்ப எண்ணிக்கையின் காரணமாக, சமூக–பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பகுதிகளில் இருக்கும் குறைவான கல்வி வாய்ப்பு;
- ஆசிரியர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்குமான மிகக்குறைந்த தன்னாட்சி/சுதந்திரம்;
- ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவன முதல்வர்களுக்கு, தகுதி அடிப்படையிலான துறைசார் முன்னேற்றங்களை, மேலாண்மை செய்வதற்கான வழிமுறைகள் போதாமை;
- பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சிக்குக் குறைந்த முக்கியத்துவம் அளிக்கப்படுதல்; அனைத்துக் கல்விப்புலங்களிலும், தகுதியான, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் போதாமை நிலவுதல்;
- உயர்கல்வி நிறுவனங்களின் மேலாண்மை மற்றும் தலைமைத்துவம், தேவைக்கும் குறைவான தரத்தில் இருத்தல்;
- திறனற்ற ஒழுங்குமுறை அமைப்பு; மற்றும்
- இளநிலை பட்டக்கல்வியின் தரத்தினை வெகுவாக பாதிக்கும் நிலையை உருவாக்கும் தேவைக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள்.
9.3. உயர்கல்வி அமைப்பை, முழுமையாகச் சீரமைத்து, புத்துயிர் ஊட்டுவதன் மூலம் மேற்சொன்ன சவால்களைச் சமாளித்து, சமத்துவமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய, உயர்கல்வியை அதியுயர்ந்த தரத்தில் வழங்க இந்தக் கொள்கை விழைகிறது. இக்கொள்கையின் நோக்கமானது, தற்போதைய அமைப்பில் பின்வரும் முக்கிய மாற்றங்களை உள்ளடக்கியதாய் இருக்கும்:
- இந்தியா முழுவதும், உள்ளூர்/இந்திய மொழிகளில் பாடங்களைக் கற்பிக்கும் உயர்கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய, பலதரப்பட்ட இயல்களைக்கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை உள்ளடக்கிய உயர்கல்வி அமைப்புக்கு நகர்தல்; ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது அதன் அருகாமையில், குறைந்தது ஒரு உயர்கல்வி நிறுவனம் இருத்தல்;
- பலதரப்பட்ட இயல் சார் இளநிலைப்பட்டப்படிப்பினை நோக்கி நகர்தல்;
- ஆசிரிய மற்றும் மாணவ சுயாட்சி நோக்கி நகர்தல்;
- மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வி அனுபவத்தை வழங்கும் விதமாக, பாடத்திட்டம், கற்பிக்கும் முறைகள், தேர்வு முறைகள், மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவிகள் ஆகியவற்றைச் சீரமைத்தல்.
- ஆசிரியர் மற்றும் தலைமைப்பொறுப்புகளுக்கான நியமனங்கள் தகுதி அடிப்படையில், நேர்மையாகச் செய்யப்படுவதை உறுதி செய்யும் விதமாக, கற்பித்தல், ஆய்வு மற்றும் சேவையின் அடிப்படையில் துறைசார் பதவி உயர்வுகளை வழங்குதல்;
- மிகச்சிறந்த, மதிப்பாய்வு செய்யப்பட்ட, ஆராய்ச்சித்திட்டங்களுக்கு, நிதியளிப்பதற்கும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தீவிரமான ஆராய்ச்சியை வளர்த்தெடுப்பதற்காகவும், ”தேசிய ஆராய்ச்சி அமைப்பை” நிறுவுதல்;
- மிகவும் தகுதி வாய்ந்த, கல்வி மற்றும் நிர்வாகத்தில் தன்னாட்சி உடைய, சுதந்திரமான அமைப்புகள் மூலமாக உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகித்தல்;
- உயர்கல்வி அமைப்பை ”இலகுவான மற்றும் உறுதியான” முறையில் கட்டுப்படுத்தும் ஒற்றை அமைப்பு உருவாக்குதல்;
- பொதுக்கல்விக்கு அதிகப்படியான வாய்ப்புகள் உருவாக்குதல், புரவலர் தன்மை கொண்ட மற்றும் தனியார்ப் பல்கலைக்கழகங்கள் மூலமாக பின் தங்கிய மற்றும் அடித்தட்டு மாணவர்களுக்காகக் கல்வி உதவித்தொகைகள் வழங்குதல், இணையவழிக் கல்வி, திறந்தவெளி– தொலைதூரக் கல்வி; மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்துவிதமான உள்கட்டுமான அமைப்புகள் போன்ற முன்னெடுப்புகளுடன், அனைவருக்கும் எட்டக்கூடிய, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய, உயர்கல்வி அமைப்பை நோக்கி நகர்தல்.
10. உயர்கல்வி நிலையங்களின் மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு
10.1. உயர்கல்வி தொடர்பான இந்தக் கொள்கை, உயர்கல்வி நிறுவனங்களைப் பலதரப்பட்ட புலங்களைக்கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களாகவும், கல்லூரிகளாகவும் மற்றும் உயர்கல்வி நிறுவன கூட்டமைப்புகளாகவும்/அறிவுசார் மையங்களாகவும் மாற்றுவதன் மூலம், உயர்கல்வி அமைப்புகள் துண்டு துண்டுகளாகப் பிளவுண்டிருக்கும் நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதை, மைய நோக்கமாகக் கொண்டுள்ளது. அப்படியான உயர்கல்வி நிறுவனக் கூட்டமைப்புகள்/ அறிவுசார் மையங்கள் ஒவ்வொன்றும், சுமார் 3000 அல்லது அதற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டிருக்கும். இது, துடிப்பு மிக்க ஒரே தரத்திலான அறிஞர்கள் மற்றும் சகாக்கள் கொண்ட துடிப்பான சமூகங்களை உருவாக்கவும், தீங்கு விளைவிக்கும் காரணிகளை உடைக்கவும் உதவும்; கலை, படைப்பு, பகுப்பாய்வு புலங்களில் நிபுணத்துவம் மற்றும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட முழுமையான திறன்களை உள்ளடக்கிய மாணவர்களை உருவாக்கும்; பல்வேறு அறிவுப்புலங்களிலும், வெவ்வேறு புலங்களுக்கு இடையேயான கூட்டாய்வுகளையும் நிகழ்த்துகிற துடிப்பான ஆராய்ச்சி குழுக்களை உருவாக்கும்; மற்றும் மனித வளங்கள், பொருள் வளங்கள் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் அதிக செயல்திறனுடன் உயர்கல்வி அமைப்பின் முழுமைக்கும் செயல்பட வழிவகுக்கும்.
10.2. உயர் கல்வித்துறையின் கட்டமைப்பைப் பொறுத்தவரையில், மிகப்பெரிய பலதரப்பட்ட புலங்களைக்கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனக் கூட்டமைப்புகள் ஆகியனவற்றை உருவாக்குவதே இக்கொள்கையின் அதிமுக்கியமான பரிந்துரையாகும். பழங்கால இந்தியப்பல்கலைக்கழகங்களான தக்ஷிலா, நாலந்தா, வல்லாபி மற்றும் விக்ரம்சீலா போன்றவற்றில், ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பலதரப்பட்ட புலங்கள் பயிற்றுவிக்கப்பட்ட சூழலானது, மிகப்பெரிய அளவிலான பலதரப்பட்ட புலங்களைக்கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களின் மாபெரும் வெற்றியினை தெளிவாக நிரூபித்துள்ளது. இந்தியா உடனடியாக தனது மதிப்புமிக்க பாரம்பரியத்தை மீள்கொண்டு வருவதன் மூலம், முழுமையாக உருவாக்கப்பட்ட, புத்தாக்கத் திறனுள்ள மாணவர்களை உருவாக்க முடியும்; பிற நாடுகளை கல்வியியல் சார்ந்தும் பொருளாதாரம் சார்ந்தும், முன்னதாகவே இந்தியா உருமாற்றி வருகிறது.
10.3. மிகக்குறிப்பாக, உயர்கல்வி நிறுவனம் என்கிற அமைப்பைக் கட்டமைப்பது எது?; பல்கலைக்கழகமா? அல்லது கல்லூரியா? என்கிற கருத்தியல் புரிதல்/தெளிவு, உயர்கல்வியின் முக்கிய நோக்கமாக உள்ளது. பல்கலைக்கழகம் என்பது, உயர்தர கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சமூகப்பங்களிப்புடன், இளநிலை மற்றும் முதுநிலை என்கிற மட்டங்களில், பலதரப்பட்ட கல்விப்புலங்களில் உயர்கல்வியை அளிக்கக்கூடிய நிறுவனமாகும். பல்கலைக்கழகம் என்ற வரையறைக்குள், கீழ்க்காணும் உயர் கல்வி நிறுவனங்களும் அடங்கும். அவை, கற்பித்தலுக்கும் ஆராய்ச்சிக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கக் கூடிய ஆராய்ச்சி செறிவு பல்கலைக்கழகங்கள்; கற்பித்தலுக்கு மட்டும் அதிகளவிலான முக்கியத்துவம் அளிக்கக்கூடிய அதேசமயம் ஆராய்ச்சியிலும் ஈடுபடக்கூடிய, கற்பித்தல் செறிவு பல்கலைக்கழகங்கள் ஆகியன ஆகும். அதே சமயத்தில், பட்டமளிக்கும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் என்கிற வரையறைக்குள் பலதரப்பட்ட கல்விப்புலங்களில் இளநிலைப் பட்டங்களை அளிக்கக்கூடிய உயர்கல்வி நிறுவனங்களும் நடப்பில் இருக்கும். ஆனால், பல்கலைக்கழகங்களை விட அளவில் சிறியதான இந்தக் கல்வி நிறுவனங்கள், கற்பித்தலோடு மட்டுமான வரம்புக்குள் மட்டும் வைக்கப்படமாட்டாது.
10.4. மிகவும் வெளிப்படையான, பலபடிநிலையிலான தரப்படுத்துதல் மூலமாக, ஏனைய கல்லூரிகளுக்கு படிப்படியாகத் தன்னாட்சி வழங்கப்படுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும். தரப்படுத்தும் அங்கீகாரத்தின் ஒவ்வொரு படிநிலையிலும், குறைந்த பட்ச அளவுகோல்களை எட்டும் முகமாக, இப்படியான கல்லூரிகள் ஊக்குவிக்கப்படும்; வழிநடத்தப்படும் மற்றும் ஊக்கக்காரணிகள் மூலமாக அங்கீகரிக்கப்படும். காலப்போக்கில் இப்படியான கல்லூரிகள், பட்டமளிக்கும் தன்னாட்சி கல்லூரிகளாக அல்லது பல்கலைக்கழகங்களின் உறுப்புக்கல்லூரிகளாக முன்னேற்றப்படும். பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் முழுமையான அங்கமாக அங்கீகரிக்கப்படும். பட்டமளிக்கும் தன்னாட்சி கல்லூரிகள் விரும்பினால், பொருத்தமான தரப்படுத்தும் அங்கீகாரங்கள் மூலமாக, ஆராய்ச்சி செறிவு பல்கலைக்கழகங்களாகவோ அல்லது கற்பித்தல் செறிவு பல்கலைக்கழகங்களாகவோ பரிணமிக்கலாம்.
10.5. இந்த மூன்று விரிந்த வகையிலான கல்வி நிறுவனங்கள், எந்த இயற்கையான வழியிலும், கடுமையான, தனித்துவப்படுத்தப்பட்ட வகைப்பாடுகள் அல்ல. அதனால் இவை தொடர்ச்சியான மாறுதலுக்கு உட்பட்டவை. இக்கல்வி நிறுவனங்கள் தங்களது தொடர்ச்சியான திட்டங்கள், செயல்பாடுகள், மற்றும் அவற்றின் திறன் சார்ந்து, ஒரு வகையிலிருந்து இன்னொரு வகைக்குக் காலப்போக்கில் மாறிக்கொள்ளும் வகையில் சுதந்திரம் அளிக்கப்படும். இந்த நிறுவனங்களுடைய குறிக்கோள்களும், அவற்றுக்கான செயலாற்றலுமே, அவற்றைத் தரப்படுத்தும் மிக முக்கியமான குறியீடுகளாகக் கருதப்படும். தரப்படுத்தலுக்கான அங்கீகார அமைப்பானது, பொருத்தமான அளவில் வித்தியாசமானதாகவும், தொடர்புடையதாகவுமான வழிமுறைகளுடன், இக்கல்வி நிறுவனங்களின் வகைமையைத் தீர்மானிக்கும். இருந்த போதிலும், உயர்தரமான கல்விக்கான கற்பித்தல்–கற்றல் எதிர்பார்ப்புகள் எல்லா வகை கல்வி நிறுவனங்களிலும் ஒன்று போலவே பாவிக்கப்படும்.
10.6. கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பங்களிப்புடன் சேர்த்து, மேலும் சில இன்றியமையாத கடமைகளையும் இந்தக் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளும். பொருத்தமான பிற கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு உதவுதல், சமுதாயத்துடன் தொடர்புப்படுத்திக்கொள்ளுதல் மற்றும் சேவை செய்தல், பல்வேறு நடைமுறைச்செயல்களுக்கு பங்களித்தல், உயர்கல்வி அமைப்பிற்குள்ளாக ஆசிரியர்களை வளப்படுத்துதல் மற்றும் பள்ளிக்கல்விக்கு உதவுதல் போன்றன அந்தக் கடமைகளுள் முக்கியமானவை. இவற்றை நடைமுறைப்படுத்த உதவும் ஆதாரக் கட்டமைப்புகளுடனும், பாராட்டுச் சலுகைகள் மூலமாகவும், முறையான அமைப்புகள் மூலமாகவும் இந்தக் கடமைகள் நிறைவேற்றப்படும்.
10.7. 2040 வாக்கில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பலதரப்பட்ட கல்விப்புலங்களைக் கையாளும் நிறுவனங்களாக மாறுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்க்கையை இலக்காகக் கொள்ள வேண்டும். இது உள்கட்டமைப்பு மற்றும் வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கும், துடிப்பான பலதரப்பட்ட சமூகங்களை உருவாக்குவதற்கும் முன்னுரிமை அளிப்பதாக இருக்கும். இந்தச் செயல்முறை நேரம் எடுக்கும் என்பதால், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் 2030 க்குள் பலதரப்பட்ட கல்விப்புலங்களைக் கையாளும் நிறுவனங்களாக மாற திட்டமிடுவார்கள்; பின்னர் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கையை எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகரிப்பதை நோக்கமாகக் கொள்வார்கள்.
10.8. அனைவருக்கும் எட்டக்கூடிய, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய உயர்கல்வி அமைப்பை உறுதி செய்ய, அதிகம் கண்டுகொள்ளப்படாத பகுதிகளில், அதிகமான எண்ணிக்கையில் உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். அதன் படி, 2030க்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும், அல்லது ஒவ்வொரு மாவட்டத்தின் அருகாமையிலும் ஓர் உயர்கல்வி நிறுவனம் அமைக்கப்படும். உள்ளூர்/இந்திய மொழிகளில் அல்லது இருமொழிகளிலும், கற்பித்தலைக் கொண்டிருக்கும் உயர்தர அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். திறன் சார் தொழிற்கல்வி உட்பட, உயர்கல்விக்கான மொத்தச் சேர்க்கை விகிதத்தை, (GER-Gross Enrollment Ratio) 2018 ஆம் ஆண்டின் அளவான 26.3% இல் இருந்து 2035 ஆம் ஆண்டிற்குள் 50% ஆக உயர்த்துவதற்கு இலக்கு வைக்க வேண்டும். இந்தக் குறிக்கோள்களை அடைவதற்காக, புதிய உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், தற்போதுள்ள உயர்கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலமும், கணிசமாக விரிவாக்குவதன் மூலமும், மேம்படுத்துவதன் மூலமும், அதிக மாணவர் சேர்க்கைக்கான திறனைப் பெருமளவில் பெருக்க முடியும்.
10.9. அதிக எண்ணிக்கையில், தரத்தில் சிறந்த அரசு உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அரசுக் கல்வி நிறுவனங்களில் மட்டும் அல்லாது தனியார்க் கல்வி நிறுவனங்களிலும், வளர்ச்சி உறுதி செய்யப்படும். அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு, அரசின் அதிகப்படியான நிதி ஆதரவைத் தீர்மானிக்க மற்றும் வழங்க, நியாயமான மற்றும் வெளிப்படையான அமைப்பு இருக்கும். இந்த அமைப்பு அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்கள் வளர, சமமான வாய்ப்பை வழங்கும். வெளிப்படையான, தரநிர்ணய அங்கீகார முறையின் அங்கீகார விதிமுறைகளுக்குள் இருந்து, முன்பே அறிவிக்கப்பட்ட அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு, அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும். இதன் மூலமாக, இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மிக உயர்ந்த தரமான கல்வியை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் தமது திறன்களை விரிவாக்கிக்கொள்ள ஊக்கமளிக்கப்படும்.
10.10. முறையான தரநிர்ணய அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள், தமது செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளவும், அனைவருக்கும் கல்வியைப் பரவலாக்கவும், மொத்தச் சேர்க்கை விகிதத்தை உயர்த்தவும், மேலும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் (நீடித்த வளர்ச்சிக்கான குறிக்கோள்-4), அவை திறந்தவெளி தொலைதூரக் கல்வியையும், இணையவழிக் கல்வியையும் வழங்க அனுமதிக்கப்படும். பட்டயப்படிப்பாகவோ, பட்டப்படிப்பாகவோ வழங்கப்படும் அனைத்துத் தொலைநிலைப் படிப்புகளும் அவற்றின் உட்கூறுகளும், உயர்கல்வி நிறுவனங்கள், தங்கள் வளாகங்களில் நடத்தும் மிக உயர்ந்த தரமான படிப்புகளுக்கு இணையான தரம் கொண்டதாக இருக்கும். திறந்தவெளி அங்கீகாரம் பெற்ற சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள், உயர்தர இணையக் கல்வியை உருவாக்க ஊக்குவிக்கப்பட்டு ஆதரிக்கப்படும். இத்தகைய தரமான இணையக்கல்வி, உயர்கல்வி நிறுவனங்களின் வழமையான பாடத்திட்டங்களுடன் பொருத்தமாக ஒருங்கிணைக்கப்பட்டு, கலவையான முறையில் கற்பித்தலுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
10.11. ஒற்றைக் கல்விப்புலத்தைக்கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் காலப்போக்கில் படிப்படியாக அகற்றப்படும். அவை அனைத்துமே துடிப்பான பலதரப்பட்ட கல்விப்புலங்களைக் கையாளும் கல்வி நிறுவனங்களாகத் தரமுயர்த்தப்படும் அல்லது துடிப்பான பலதரப்பட்ட உயர்கல்வி நிறுவனத்தொகுப்பின் துணை அமைப்புகளாக இணைக்கப்படும். இதன் மூலம், இந்தக் கல்வி நிறுவனங்கள், பலதரப்பட்ட கல்விப்புலங்களிலும், துறை கடந்த கல்விப்புலங்களிலும், கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விதமாக ஊக்குவிக்கப்படும். ஒற்றைக் கல்விப்புலத்தைக்கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள், குறிப்பாக, அவர்கள் தற்போது வழங்கிக்கொண்டிருக்கும் ஒற்றைக் கல்விப்புலத்தை பலப்படுத்தும் விதமாக, பல்வேறு புதிய துறைகளை அறிமுகம் செய்ய ஊக்குவிக்கப்படும். ஆனால் அப்படியான நகர்வுக்கு, பொருத்தமான அங்கீகாரங்களை அடைவது முக்கியமாகும். இந்தத் துடிப்பான கலாச்சாரத்தைச் செயல்படுத்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், படிப்படியாகக் கல்வி மற்றும் நிர்வாகத்தில் முழுமையான தன்னாட்சியை நோக்கி நகர்த்தப்படும். அரசு உயர்கல்வி நிறுவனங்களில் தன்னாட்சியைப் பலப்படுத்தும் விதமாக போதுமான பொது நிதி உதவி அளிக்கப்பட்டு அவற்றின் நிலைத்தன்மை உறுதி செய்யப்படும். அரசின் நிறுவனங்களைப் போன்றே, அனைவருக்கும் சமமான உயர்கல்வியை வழங்கும் உற்சாகமும், அர்ப்பணிப்பும் கொண்ட தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் இப்படியாக ஊக்குவிக்கப்படும்.
10.12. இந்தக் கொள்கையால் முன்மொழியப்படும் புதிய ஒழுங்குமுறை அமைப்பு, எதிர்வரும் பதினைந்து வருட காலப்பகுதியில், படிப்படியான தன்னாட்சி என்கிற வழிமுறையைக் கைக்கொள்ளும். இதன்படி, கல்வி நிறுவனங்களின் ‘பல்கலைக்கழக இசைவு பெற்ற கல்லூரிகள்” என்கிற நிலை படிப்படியாக நீக்கிக்கொள்ளப்படும். முழுவதும் தரத்திற்கான போட்டி அடிப்படையில், இந்தத் தன்னாட்சி அமைப்புகள் ஒட்டுமொத்த அதிகாரமளித்தல் மூலமாகத் தரமுயர்த்தப்படும். தற்போதுள்ள ஒவ்வொரு இசைவளிக்கும் பல்கலைக்கழகமும் அதன் இசைவு பெற்ற கல்லூரிகளுக்கு வழிகாட்டும் பொறுப்பை மேற்கொள்ளும். இதன் மூலமாக அந்தக் கல்லூரிகள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்; கல்வி மற்றும் பாடத்திட்ட நடைமுறைகளில் குறைந்தபட்ச வரையறைகளை அடைய முடியும்; கற்பித்தல் மற்றும் மதிப்பீடு; நிர்வாக சீர்திருத்தங்கள்; நிதியாதார சமநிலை; மற்றும் நிர்வாகத் திறன் போன்றவற்றையும் மேம்படுத்திக்கொள்ளலாம். தற்போது ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கல்லூரிகளும் நிர்ணயிக்கப்பட்ட அங்கீகார வரையறைகளை எட்டுவதன் மூலமாக, காலப்போக்கில் தேவையான தர நிர்ணய இலக்குகளை அடைந்து, இறுதியில் பட்டம் வழங்கும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக மாறும். பொருத்தமான வழிகாட்டுதல் மற்றும் அதற்கான அரசாங்க ஆதரவு உள்ளிட்ட ஒருங்கிணைந்த தேசிய முயற்சியின் மூலம் இது சாத்தியப்படுத்தப்படும்.
10.13. ஒட்டுமொத்த உயர் கல்வித் துறையானது, தொழில்முறை மற்றும் திறன் சார் தொழிற்கல்வி உள்ளிட்ட ஒருங்கிணைந்த உயர் கல்வி முறையாக இருக்கும். இந்தக் கொள்கையும் அதன் அணுகுமுறையும், அனைத்துத் தரப்பிலான உயர்கல்வி நிறுவனங்களுக்கும், சமமாகப் பொருந்தும்; இறுதியில் ஓர் ஒத்திசைவான உயர்கல்விச் சூழலை ஒன்றிணைக்கும்.
10.14. உலகளவில், பல்கலைக்கழகம் என்பது, பலதரப்பட்ட கல்விப்புலங்களில், இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிலை உள்ளிட்ட அனைத்துப் பட்டங்களையும் வழங்கக்கூடிய, உயர்தரமான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடிய ஓர் உயர்கல்வி நிறுவனமாகும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள், ‘ஒற்றையாட்சி பல்கலைக்கழகம்’ என்பன போன்ற சிக்கலான பெயர்களால் அறியப்படும் பல்கலைக்கழகங்களின் நிலையானது, விதிமுறைகளின் படி, தரநிர்ணய இலக்குகளைப் பூர்த்தி செய்யும் போது, மிக எளிதாக ”பல்கலைக்கழகம்” என்று மாற்றப்படும்.
11. மிகவும் முழுமை வாய்ந்த பல்துறை சார்ந்த கல்வியை நோக்கி
இந்தியாவின் ஒருங்கிணைந்த பன்முகக் கற்றல் பாரம்பரியமானது, தக்ஷசீலா மற்றும் நாலந்தா போன்ற பல்கலைக்கழகங்களிலிருந்தும், மிகப்பரந்த இந்திய இலக்கியங்களிலிருந்தும், பெறப்பட்ட பல்துறை பாடங்களைக் கொண்டது. பானப்பட்டாவின் காதம்பரி போன்ற பண்டைய இந்திய இலக்கியப் படைப்புகள், நல்ல கல்வியை, 64 கலைகளின் அறிவு என்று விவரித்தன, அந்த 64 கலைகளில் பாடல், ஓவியம் மட்டுமல்லாது, அறிவியல் சார்ந்த துறைகளான வேதியியல்,கணிதம் மற்றும் தொழில் துறைகளான ‘தச்சு‘,’ஆடை தயாரிப்பு‘ மேலும் தொழில்முறை துறைகளான ‘மருத்துவம்‘,’பொறியியல்‘, மென் திறன்களான ‘வெளிப்படுத்தும் திறன் ‘,’கலந்துரையாடல்‘, ‘ விவாதம்‘ போன்றவைவ்யும் உள்ளடக்கியதாக இருந்தது . கணிதம், அறிவியல், தொழில்துறை, தொழில்முறை துறை, மற்றும் மென் திறன்துறை ஆகிய அனைத்துத் துறைகளிலும் மனிதன் படைக்கும் புத்தாக்க முயற்சிகள் அனைத்தும் ‘கலைகள்‘ என்று கருதப்பட வேண்டும். இவை அனைத்தும் இந்தியாவில் தோன்றிய மரபு ஆகும். பல்வேறு கலைகளின் அறிவுசார் கல்வியை 21ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான கல்வியாக, மீண்டும் இந்தியக் கல்வியில் கொண்டுவர வேண்டும்.
11.2. மானுடவியல், கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்றவற்றை உள்ளடக்கிய இளநிலைக் கல்வியில், கல்வி சார் அணுகுமுறைகளின் மதிப்பீடானது, மேம்பட்ட படைப்பூக்கம், புத்தாக்கத்திறன், கூர்மையான சிந்தனை,உயர்மட்டச் சிந்தனைத் திறன்கள், சிக்கல்களைத் தீர்க்கும் அறிவு, குழுப்பணி, பொதுத்தொடர்பு திறன்கள், பல துறைகளில் ஆழமான கற்றல் சமூக மற்றும் தார்மீக விழிப்புணர்வை அதிகரிகரிப்பது உள்ளிட்ட, நேர்மறையான கல்விசார் விளவுகளை உறுதிப்படுத்துகின்றன. மேலும், இம்முறையானது, பொதுவாக அனைத்து துறைகளிலும் மாணவர்கள் ஈடுபடுவதையும் கற்றலை மிகவும் மகிழ்வான அனுபவமாக மாற்றுவதையும் உறுதி செய்கிறது. முழுமையான பல்துறை கல்வியைக் கொண்ட அணுகுமுறை மூலமாக ஆராய்ச்சி வாய்ப்புகளும் அதிகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.
11.3. ஒரு முழுமையான பல்துறை கல்வி மனிதர்களின் அனைத்துத் திறன்களையும் – அறிவுசார், அழகியல், சமூக, உடல், உணர்ச்சி மற்றும் நீதிநெறி ஆகியனவற்றை ஒருங்கிணைந்த முறையில் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. அப்படிப்பட்ட கல்வி 21ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான திறன்களான கலை, மானுடவியல், மொழிகள், அறிவியல், சமூக அறிவியல், தொழில்முறை, தொழில்நுட்ப, மற்றும் தொழில் துறைகளில்; சமூக ஈடுபாடு; தகவல் தொடர்பு, வெளிக்காட்டும் திறன் மற்றும் விவாதம் போன்ற மென்திறன்கள்கொண்டு; மற்றும் தேர்ந்தெடுத்த துறை அல்லது துறைகளில் சிறப்புப் பன்முக வித்தகர்களை உருவாக்க உதவும். இத்தகைய முழுமையான கல்வி நீண்ட கால அடிப்படையில், தொழில், தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறைகளில் உள்ள அனைத்து இளநிலைக்கல்வித் திட்டங்களின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.
11.4. கடந்த காலங்களில் மிக அழகாக விவரிக்கப்பட்ட, முழுமையான பல்துறைசார்ந்த இந்தியாவின் கல்வி முறையானது, 21 ஆம் நூற்றாண்டிலும், நான்காவது தொழிற்புரட்சியிலும் நாட்டை வழிநடத்தத் தேவைப்படுகிறது. ஐ.ஐ.டி போன்ற பொறியியல் நிறுவனங்களும் , கலைமற்றும் மானுடவியல் கல்வியுடன் முழுமையான பல்துறை கல்வியை நோக்கி நகரும். கலை மற்றும் மானுடவியல் பயிலும் மாணவர்கள், கூடுதலாக அறிவியலைக் கற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொள்வர். மேலும் அனைத்துத் கல்விப்பிரிவுகளிலும் தொழில்சார் பாடங்களையும் மென்திறன்களையும் இணைக்க முயற்சி செய்யப்படும்
11.5. கற்பனைத் திறனை மேம்படுத்தும் வகையிலான புத்தாக்க மற்றும் நெகிழ்வான பாடத்திட்டக் கட்டமைப்புகள், சிறந்த கல்விக்கான ஆக்கப்பூர்வமான பாடச்சேர்க்கைகளைத் தேர்வு செய்ய உதவும், மேலும், வெவ்வேறு கட்டங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் சாத்தியங்களை வழங்கும் ,இதனால் தற்போது நிலவும் கடுமையான எல்லைகளை அகற்றி, வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான புதிய சாத்தியங்களை உருவாக்குகிறது. பெரிய பல்துறை பல்கலைக்கழகங்களில், மற்றும் உயர்கல்வி நிறுவங்கள் மூலமாக அளிக்கப்டும், இளைநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்டப்படிப்பு போன்றவை மிகவும் தீர்மானகரமான ஆய்வின் அடிப்படையிலான கல்வி அனுவபத்தை வழங்குவதோடு, கல்விப்புலம், அரசுத்துறைகள் மற்றும் தொஇல்துறைகளைல் பல்வேறு மட்டங்களில் வேலை வாய்ப்புகளை வழங்கும்.
11.6. பெரிய அளவிலான பல்துறை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உயர் தரமான முழுமையான பல்துறைக் கல்வியை வழங்கும். சிறப்பு நிபுணத்துவமான பாடம் அல்லது பாடங்களோடு சேர்ந்து மாணவர்களுக்கு நெகிழ்வு மிக்க மற்றும் விருப்பப்பாடத் திட்டம் வழங்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, பாடத் திட்டங்களை வடிவமைப்பதில் அதிகளவிலான தன்னாட்சி வழங்கப்படும். கல்வி கற்பிக்கும் முறைமைகளில், பொதுத்தொடர்பு, கலந்துரையாடல், விவாதம், ஆராய்ச்சி மற்றும் கல்விப்புலங்களைக் கடந்த பரந்துபட்ட சிந்தனைக்கான வாய்ப்புகள் ஆகியவற்றிற்குஅதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
11.7. இந்தியாவின் கல்வி மற்றும் சூழலை உள்ளடக்கிய வகையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும், மொழி, இலக்கியம், இசை, தத்துவம், வரலாறு, கலாச்சாரம், கலை, நடனம், நாடகம், கல்வி, கணிதம், புள்ளிவிவரம், அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல், சமூகவியல், பொருளாதாரம், விளையாட்டு, மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கமளித்தல் போன்ற துறைகள் தோற்றுவிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படும். இந்தப் பாடங்களுக்கான மதிப்புருக்கள் அனைத்து இளங்கலைப்பட்டப்படிப்புகளிலும் அத்தகைய துறைகளிலிருந்து வழங்கப்படும்; உயர்கல்வி நிறுவனங்களில் அப்படியான சாத்தியம் இல்லாத போது திறந்தவெளி தொலைதூரப் பல்கலைக்கழகங்கள் மூலம் இதற்கான மதிப்புருக்கள் வழங்கப்படும்.
11.8 அத்தகைய முழுமையான மற்றும் பல்துறைக் கல்வியை அடைவதற்காக, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் நெகிழ்வான மற்றும் புதுமையான பாடத்திட்டத்தில் சமூக ஈடுபாடு மற்றும் சேவை, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் மதிப்பு அடிப்படையிலான கல்வி ஆகிய பிரிவுகளில் பாடத்திட்டங்களும், ஆய்வுத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும். சுற்றுச்சூழல் கல்வியியல் என்பது காலநிலை மாற்றம், சூழல் மாசுபாடு, கழிவு மேலாண்மை, சுகாதாரம், பல்லுயிரியத்தன்மையைப் பாதுகாத்தல், உயிரியல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மேலாண்மை, வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி மற்றும் வாழ்க்கை போன்ற பாடங்களை உள்ளடக்கியதாக இருக்கும். மதிப்பு அடிப்படையிலான கல்வியானது மனித நேயம், நன்னெறி, அரசியலமைப்பு, மற்றும் சத்தியத்தின் உலகளாவிய மதிப்பு (சத்தியம்), நீதி நடத்தை (தர்மம்), அமைதி (சாந்தி), அன்பு (ப்ரேமம்), அகிம்சை, அறிவியல் மனநிலை, குடியுரிமை மதிப்புகள், மற்றும் வாழ்க்கை திறன்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கும்; சேவை மற்றும் சமூக சேவை திட்டங்களில் பங்குபெறுதல் ஆகிய பாடங்கள் முழுமையான கல்வியின் ஓர் அங்கமாகக் கருதப்படும். உலகமானது ஒருவரோடொருவர் தொடர்புடையவர்களாயிருப்பது அதிகரித்து வரும் நிலையில், சமகால உலகளாவிய சவால்களுக்கான பதிலான உலகளாவிய குடியுரிமை கல்வி, கற்பவருக்கு உலகளாவிய பிரச்சினைகளை அறிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் அதிகாரம் அளிப்பதற்கும் மேலும் அமைதியான, சகிப்புத்தன்மையுள்ள, அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான செயலூக்க ஊக்குவிப்பாளர்களாக நிலையான சமூகங்களாக மாற்றுவதற்கும் வழங்கப்படும். இறுதியாக, முழுமையான கல்வியின் ஒரு பகுதியாக, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு உள்ளூர் தொழில், வணிகங்கள், கலைஞர்கள், கைவினை நபர்கள் போன்றவர்களுடன் பகுதி நேரப் பணி பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும், அத்துடன் ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் தங்கள் சொந்த அல்லது பிற உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி செய்யவும் வாய்ப்புகள் அளிக்கபடும். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் கற்றலின் நடைமுறையைத் தீவிரப்படுத்தலாம். மேலும் அவர்களின் வேலைவாய்ப்புக்கான சாத்தியக்கூறுகளை மேம்படுத்திக்கொள்ளலாம்.
11.9. பட்டப்படிப்புகளுக்கான கட்டமைப்பும், கால அளவுகளும் அவற்றுக்கேற்றவாறு சரி செய்யப்படும். இளநிலை பட்டப்படிப்பு பட்டம் 3 அல்லது 4 ஆண்டுகளாக இருக்கும். இந்த காலத்திற்குள் பல்வேறு கட்டங்களில் உள்நுழையும் மற்றும் வெளியேறும் விருப்பங்கள், பொருத்தமான சான்றிதழ்களுடன் வழங்கப்படும். எ–கா: தொழில் மற்றும் தொழில்முறை படிப்புகளில் ஓராண்டின் முடிவில் ஒரு சான்றிதழ், அல்லது இரண்டு ஆண்டுகளில் பட்டயச் சான்றிதழ் அல்லது மூன்றாம் ஆண்டின் முடிவில் ஓர் இளநிலைப் பட்டம் ஆகியன வழங்கப்படும். இருந்த போதிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பாடப்பிரிவில் அழுத்தம் கிடைப்பதோடு, பிற சிறு பாடப்பைரிவுகளிலுமாகச் சேர்த்து, முழுமையான பல்துறை சார்ந்த கல்விமுறையைக் கொண்டிருக்கும் நான்கு ஆண்டு பல்துறை இளநிலைப் படப்பிடிப்பு விருப்பமான தேர்வாக முழ்ன்மொழியப்படும். கல்விசார் மதிப்புருக்களுக்கன வங்கி ஒன்று நிறுவப்பட்டு, பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து கல்விசார் ம்திப்புருக்கள் சேமிக்கப்படும். இந்தக் கல்விசார் மதிப்புருக்களுக்கன வங்கி மூலம், கல்வி நிறுவனங்களிலிருந்து வழங்கப்படும் பட்டங்களுக்கான மதிப்புருக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நான்கு ஆண்டு பட்டப்படிப்பை பொறுத்தவரை, உயர் கல்வி நிறுவனங்களால் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மாணவர்கள் தாம் தேர்வுசெய்த முக்கியப் பாடத்தில் ஆராய்ச்சி திட்டத்தைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில், ‘ஆராய்ச்சியுடன்‘ கூடியதான நான்காண்டு இளைநிலைப் பட்டம் வழங்கப்படும்.
11.10. உயர் கல்வி நிறுவனங்களுக்கு, பல்வேறு நிலையிலான, முதுநிலை பாடத் திட்டங்களை வடிவமைக்கும் நெகிழ்வுத்தன்மை அளிக்கப்படும்:
(a) மூன்றாண்டுகள் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்காக, இரு ஆண்டுகள் கூடிய முதுநிலைப் பட்டப்படிப்பு: இதில் இரண்டாம் ஆண்டு முழுவதுமாக ஆராய்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கப்படும்
(b) ‘ஆராய்ச்சியுடன்‘ கூடியதான நான்காண்டு இளைநிலைப் பட்டம் முடித்த மாணவர்களுக்கு, ஒரு ஆண்டு உள்ள முதுநிலைப்பட்டம் இருக்கும்.
(c ) ஒருங்கிணைந்த 5 ஆண்டு இளங்கலை / முதுநிலை திட்டம் இருக்கலாம்.
முனைவர் பட்ட ஆராய்ச்சிப்படிப்புக்கு, முதுநிலைப் பட்டம் அல்லது 4 ஆண்டு ஆராய்ச்சியுடன் கூடிய இளநிலைப்பட்ட்டம் தேவைப்படும். ஆய்வியல் நிறைஞர் படிப்பு (M.Phil). நிறுத்தப்படும்.
11.11. ஐ.ஐ.டி , ஐ.ஐ.எம்மிற்கு இணையான முழுப் பல்துறை கல்விக்கான மாதிரி பொதுப் பல்கலைக்கழகங்கள்., பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் (MERU) தரமான கல்வியில் மிக உயர்ந்த உலகளாவிய தர நிலைகளை அடைவதற்காக அமைக்கப்படும். இந்தியா முழுவதும் பல்துறை கல்விக்கானஉயர்ந்த தரத்துக்கான அளவீடுகளை நிர்ணயிக்க இவை உதவும்.
11.12. புதுத்தொழில் காப்பு மையங்கள், தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள்; முன்னணி ஆராய்ச்சிக்கான மையங்கள், மேம்படுத்தப்பட்ட தொழிலக–கல்வி நிறுவன இணைப்புகள்; மற்றும் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட இணைகல்விப்புல ஆராய்ச்சி மையங்கள் போன்றவற்றை அமைப்பதன் மூலம், உயர்கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும். தொற்று நோய்கள் மற்றும் பெருந்தொற்று நோய்களின் சூழலைக் கருத்தில் கொண்டு, பரவக்கூடிய நோய்கள், தொற்றுநோயியல், நச்சுயிரியல், நோயறிதல், கருவியியல், தடுப்பூசியியல், தடுப்பூசி மற்றும் பிற தொடர்புடைய பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உயர் கல்வி நிறுவனங்கள் முக்கியமாக பங்களிப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். மாணவர் சமூகங்களிடையே புதுமைகளை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் போட்டிகளை உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்கும். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள், மற்றும் பிற ஆராய்ச்சி நிறுவனங்கள் மிகவும் துடிப்பு மிக்க, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கலாச்சாரத்தைச் செயல்படுத்தவும் ஆதரிக்கவும் உதவும்.12. மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழல்களும் உறுதுணையும்
12.1. பயனுள்ள கற்றலுக்கு, பொருத்தமான பாடத்திட்டம், ஈடுபாடான கற்பித்தல் முறை, தொடர்ச்சியான முறையான மதிப்பீடு மற்றும் போதுமான மாணவர் உறுதுணை உள்ளடக்கிய ஒரு பரந்த அணுகுமுறை தேவைப்படுகிறது. பாடத்திட்டமானது சுவாரசியமானதாகவும் பொருத்தமானதாகவும் இருப்பதோடு, சமீபத்திய அறிவுத் தேவைகள் மற்றும் குறிப்பிட்ட கற்றல் விளைவுகள் ஆகியனவற்றை அடைவதற்கு ஏற்றவாறு தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்குப் பாடதிட்டத்தை வெற்றிகரமாக வழங்க உயர்தரக் கல்வி–கற்பித்தல் முறையானது அவசியம்; கல்வி கற்பிக்கும் முறையானது மாணவர்களுக்கான கற்றல் அனுபவங்களை தீர்மானிப்பதனுடன், அதன் விளைவுகளை நேரடியாகப் பாதிக்கிறது. மதிப்பீட்டு முறையானது விஞ்ஞானப் பூர்வமாகவும், தொடர்ந்து கற்றலை மேம்படுத்தும் விதமாகவும், அறிவின் பயன்பாட்டை ஆய்விற்கு உட்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட வேண்டும். இவை மட்டுமல்லாது, மாணவர்களின் வளர்ச்சிக்கான திறன்களை மேம்படுத்தும் உடற்தகுதி, உடல்நலம், உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வு மற்றும் சிறந்த அறநெறி அடிப்படைகள் ஆகியவையும் உயர்தரக் கற்றலுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
பாடத்திட்டம், கற்பித்தல் முறை, தொடர்ச்சியான மதிப்பீடு மற்றும் மாணவர் உறுதுணை ஆகியவை தரமான கற்றலின் ஆதாரத்தூண்கள் ஆகும். கற்றல் சூழலானது, மாணவர்களுக்கு ஈடுபாடும் உறுதுணையும் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தி, அனைத்து மாணவர்களையும் வெற்றி பெறச் செய்யதற்குத்தேவையான, தரமான நூலகங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள், மாணவர் கலந்துரையாடல் தளங்கள் மற்றும் உணவுத் தளங்கள் போன்ற பொருத்தமான வளங்களையும் உட்கட்டமைப்பையும் வழங்குவதோடு, மேலும் பல முன்னெடுப்புகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
12.2. முதலாவதாக, படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்காக, கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம், கற்பித்தல் முறை மற்றும் மதிப்பீடு ஆகியவற்றில், உயர்கல்வித் தகுதிகளின் பரந்த கட்டமைப்பிற்குள்ளாக, சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டு, கல்வி நிறுவனங்கள் மற்றும் நலத்திட்டங்கள் மட்டுமல்லாது திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கற்றல்முறை (ODL – Open and Distance Learning), இணையவழி மற்றும் பாரம்பரிய ‘வகுப்பறை‘ முறைகள் ஆகியவற்றின் இடையேயும் சமநிலை உறுதிசெய்யப்படும். அதன்படி, ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்ட கற்றல் அனுபவத்தை அனைத்து மாணவர்களுக்கும் உறுதிசெய்யும் விதமாக, பாடத்திட்டம் மற்றும் கற்றல் முறை ஆகியனவற்றை, உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் துடிப்பான ஆசிரியர்கள் மூலமாக வடிவமைக்கப்பட்டு, தொடர்ச்சியான, முறையான மதிப்பீட்டின் மூலம் ஒவ்வொரு திட்டத்தின் குறிக்கோளும் மேம்படுத்தப்படும். இறுதிச் சான்றிதழுக்கான மதிப்பீடு முறை உட்பட அனைத்து மதிப்பீடு முறைகளையும் உயர்கல்வி நிறுவனமே (HEI – Higher Education Institution) தீர்மானிக்கும். புதுமை மற்றும் பன்முக வாய்ப்பை மேம்படுத்தும் விதமாக தெரிவு சார்ந்த மதிப்புரு முறை (CBCS – Choice Based Credit System) மாற்றி அமைக்கப்படும். உயர்கல்வி நிறுவன்னத்தின் முன்னெடுப்பானது, ஒவ்வொரு திட்டத்திற்கும், கற்றல் குறிக்கோள்களின் அடிப்படையில் மாணவர்களின் சாதனைகளை மதிப்பிடும் அளவுகோல் அடிப்படையிலான தர நிர்ணய முறையை நோக்கியதாய், தர முறையை மேலும் நியாயமாக்கும் மற்றும் ஒப்பிடப்படக்கூடியதாக்கும் விதமாய் இருக்கும். அதீதத் தாக்கம் கொண்ட தேர்வுகளிலிருந்து விலகி, தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீடுகளை நோக்கியதாய், உயர்கல்வி நிறுவன்னங்களின் முன்னெடுப்புகள் இருக்கும்.
12.3. இரண்டாவதாக, ஒவ்வொரு நிறுவனமும் அதனதன் கல்வித் திட்டங்களை, பாடத்திட்ட மேம்பாடு முதல் வகுப்பறை நிகழ்வுகள் வரை, அதன் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்துடன் (IDP – Institutional Development Plan) ஒருங்கிணைக்கும். ஒவ்வொரு நிறுவனமும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு அர்ப்பணிப்போடு, முறையான வகுப்பறை தொடர்புகளுக்கு உள்ளேயும் வெளியுமான ஒரு வலுவான உள்கட்டமைப்பை உருவாக்கி, பல்வேறு கல்வி மற்றும் சமூகத் தளங்களிலிருந்து ஒன்றிணைந்த குழுக்களின் ஒத்துழைப்புக்கு உறுதியளிக்கும். உதாரணமாக, மாணவச் சங்கங்கள் மற்றும் அறிவியல், கணிதம், கவிதை, மொழி, இலக்கியம், தர்க்கம், இசை, விளையாட்டு சார்ந்த நிகழ்வுகளை, ஆசிரியர் துணையுடனோ அல்லது துறை சார்ந்த நிபுணர்கள் துணையுடனோ, மாணவர்கள் நடத்துவதற்கான விதிகளை முறைப்படுத்தி, வரையறுக்கப்பட்ட சங்கங்களின் நிதி உதவிக்கும் HEI வழி வகை செய்யும். காலப்போக்கில், பொருத்தமான ஆசிரிய நிபுணத்துவம் மற்றும் வளாக மாணவர்களின் தேவை வளர்ந்தவுடன் இதுபோன்ற நடவடிக்கைகள் பாடத்திட்டத்தில் இணைக்கப்படலாம். திறன் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர், மாணவர்களிடம் ஓர் ஆசிரியராக மட்டுமல்லாமல், வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் அணுகலாம்.
12.4. மூன்றாவதாக, சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் தங்களை வெற்றிகரமாகப் பொருத்திக்கொள்ள ஊக்கமும் உறுதுணையும் தேவை. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இவ்வாறான உயர்தர ஆதரவு மையங்களை அமைத்துத் திறம்படச் செயல்படுத்த, போதுமான நிதி மற்றும் கல்வி வளங்கள் வழங்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் முறையான கல்வி மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு, உடல், உளவியல் மற்றும் உணர்வு சார்ந்த நல்வாழ்வை உறுதி செய்வதற்கான ஆலோசகர்களும் இருப்பர்.
12.5. நான்காவதாக, திறந்தநிலை-தொலைதூர மற்றும் இணையவழி கல்வியானது தரமான உயர் கல்விக்கான வாய்ப்பை இயற்கையாகவே வழங்குகின்றது. அதன் திறனை முழுவதுமாக மேம்படுத்திக்கொள்ள, இத்தகு கல்வி அமைப்புகள், தெளிவாகக் கட்டமைக்கப்பட்ட தரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, ஒருங்கிணைந்த மற்றும் சான்றுகள் அடிப்படையிலான முயற்சிகள் மூலம் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்படும். மிகச்சிறந்த வகுப்பறை திட்டங்களுக்கு இணையாக இருப்பதற்கு, இத்தகு திறந்த வெளி தொலைதூரக்கல்வித்திட்டங்கள் முனையும். திறந்த வெளி தொலைதூரக்கல்வித்திட்டங்களுக்கான முறையான வளர்ச்சி, ஒழுங்குமுறை மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றிற்கான விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு, அனைத்து உயர்கல்வி நிறுவங்களும் பரிந்துரைக்கப்பட கூடியவகையில், இவற்றின் கட்டமைப்பு உயர்தரத்தோடு உருவாக்கப்படும்.
12.6. இறுதியாக, அனைத்துத் திட்டங்கள், படிப்புகள், பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் வழிமுறைகள், வகுப்பறை, மாணவர் உறுதுணை, இணையவழி மற்றும் திறந்த வெளி தொலைதூரக்கல்வித்திட்டங்கள் உட்பட, கல்வியின் அனைத்து அம்சங்களும் உலகளாவிய தரத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டிருக்கும்.
பன்னாட்டுமயமாக்கல்
12.7. மேலே குறிப்பிட்டுள்ள பல்வேறு முயற்சிகளின் காரணமாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர்கள் படிக்கவும், மேலும் இந்தியாவில் உள்ள மாணவர்களும் வெளிநாடு சென்று படிக்கவும், நம் கல்விமுறைக்கு வெளிநாட்டிலும் அங்கீகாரம் கிடைக்கவும் அல்லது வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு அதிகச் சுதந்திரத்தையும் இவை வழங்கும். நம் நாட்டின் பாரம்பரியப் படிப்புகளான இந்திய மக்களைப் பற்றிய ஆய்வு (Indology), இந்திய மொழிகள், ஆயுஷ் மருத்துவம், யோகா, கலை, இசை, வரலாறு, கலாச்சாரம் மற்றும் நவீன இந்தியா போன்ற பாடங்களில் பாட நெறிகள் மற்றும் திட்டங்கள், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் அதற்கும் மேலாக பன்னாட்டுஅளவில் பொருத்தமான பாடத்திட்டங்கள், சமூக ஒற்றுமைக்கான அர்த்தமுள்ள வாய்ப்புகள், தரமான குடியிருப்பு வசதிகள் மற்றும் கல்லூரி வளாகத்திலேயே அனைத்து வசதிகள் போன்றவை உலகளாவிய தர நிர்ணயங்களின் இலக்கை அடையவும், அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர்களை ஈர்க்கவும், மற்றும் ‘உள்நாட்டிலே பன்னாட்டுமயமாக்கல்‘ (Globalization at Home) என்ற இலக்கை அடையவும் ஊக்குவிக்கப்படும்.
12.8. அனைவருக்கும் பொருந்துகிற செலவில், உயர்தரமான கல்வியை அளிப்பது, உலகின் கல்வித் தலமாக இந்தியாவை முன்னிறுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் பாரம்பரிய ‘உலக ஆசான்‘ (விஷ்வ குரு) தகுதியை மீட்டெடுக்கவும் உதவும். வெளிநாட்டிலிருந்துவரும் மாணவர்களை வரவேற்பது மற்றும் ஆதரிப்பது தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைக்க ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் ஒரு ‘பன்னாட்டு மாணவர் அலுவலகம்‘ அமைக்கப்படும். உயர்தர வெளிநாட்டு நிறுவனங்களுடன், ஆராய்ச்சி/கற்பித்தல் ஒருங்கிணைப்புகள் மற்றும் ஆசிரிய/மாணவப் பரிமாற்றங்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு, அவை தொடர்பான இருதரப்பு நன்மை பயக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெளிநாடுகளுடன் கையெழுத்திடப்படும். அதிகத் திறன் கொண்ட இந்தியப் பல்கலைக்கழகங்கள் பிறநாடுகளில் தமது அயல் வளாகங்களை அமைக்க ஊக்குவிக்கப்படும், அது போலவே, தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், உதாரணமாக உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை, இந்தியாவில் செயல்பட வசதி செய்து தரப்படும். அத்தகைய நுழைவுக்கு வசதியாக ஒரு சட்டம் இயற்றும் கட்டமைப்பு அமல்படுத்தப்பட்டு, இந்தியாவின் இதரத் தன்னாட்சி நிறுவனங்களுக்கு இணையாகச் செயல்படத் தேவையான ஒழுங்குமுறை, ஆளுகை மற்றும் உள்ளடக்க விதிமுறைகள் அமைக்கப்பட்டு, அத்தகைய பல்கலைக்கழகங்களுக்குச் சிறப்பு உதவிகள் வழங்கப்படும். மேலும், இந்திய நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களுக்கு இடையிலான ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் மாணவர் பரிமாற்றங்கள் போன்றவை தனிப்பட்ட முயற்சிகள் மூலம் ஊக்குவிக்கப்படும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் மதிப்பெண்கள், ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களின் வரையறுக்கப்பட்ட தேவைகளுக்கேற்ப அனுமதிக்கப்பட்டு, பட்டம் வழங்கும்போது கணக்கில் கொள்ளப்படும்..
மாணவர் செயல்பாடு மற்றும் பங்கேற்பு
12.9. கல்வி அமைப்பின் முக்கிய பங்குதாரர்கள் மாணவர்கள் ஆவர். உயர்தரக் கற்பித்தல்–கற்றல் செயல்முறைகளுக்குத் துடிப்பான வளாக வாழ்க்கை இன்றியமையாததாகும். இதன் பொருட்டு விளையாட்டு, கலாச்சாரம்/கலை சங்கங்கள், சூழல் சங்கங்கள், செயல்பாட்டுச் சங்கங்கள், சமூக சேவை திட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்க மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும், மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி மாற்றங்களைக் கையாள்வதற்கான ஆலோசனை அமைப்புகள் நிறுவப்படும். மேலும், கிராமப்புறப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்காக, தேவைக்கேற்ப மாணவர் விடுதி வசதிகளை அதிகரிப்பது போன்றவை திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்படும். அனைத்து உயர்கல்வி நிறுவன்ங்களும் தங்கள் நிறுவனங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தரமான மருத்துவ வசதிகளை உறுதி செய்யும்.
மாணவர்களுக்கான நிதி உதவி
12.10. மாணவர்களுக்கான நிதி உதவி பல்வேறு நடவடிக்கைகள் மூலம் செய்யப்படும். பட்டியலின, பழங்குடி, இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏனைய சமூக பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தகுதியை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உதவித்தொகை பெறும் மாணவர்களின் முன்னேற்றத்தை ஆதரிப்பதற்கும், வளர்ப்பதற்கும், கண்காணிப்பதற்கும் ஏற்றவாறு தேசிய உதவித்தொகை இணையத்தளம் விரிவுபடுத்தப்படும். தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான இலவச உதவிகள் மற்றும் உதவித் தொகைகளை வழங்க ஊக்குவிக்கப்படும்.
13. செயல் நோக்கமுள்ள, ஆற்றலுள்ள, திறனுள்ள ஆசிரியர் குழு
13.1 உயர்கல்வி நிறுவனங்களின் (HEI-Higher Education Institutions) வெற்றிக்கு மிக முக்கியமான காரணம், அங்குள்ள ஆசிரியர்களின் தரம் மற்றும் ஈடுபாடாகும். உயர்கல்வியின் குறிக்கோள்களை அடைவதில் ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, வேலைவாய்ப்பு மற்றும் பணி முன்னேற்றத்தை முறைப்படுத்தவும், ஆசிரியர்களை பணியமர்த்துவதில் பல்வேறு குழுக்களிடமிருந்து சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொது நிறுவனங்களில் உள்ள நிரந்தர ஆசிரியர்களின் ஊதியப் படிநிலைகளும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணி மேம்பாட்டு வாய்ப்புகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கல்வித் தொழிலின் நிலைகளில் இவ்வாறான பல்வேறு முன்னெடுப்புகள் இருந்தபோதிலும், உயர்கல்வி நிறுவனங்களில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சேவை ஆகியவற்றில் ஆசிரியர்களின் ஈடுபாடு எதிர்பார்த்த அளவை விட மிகக் குறைவாகவே உள்ளது. ஆசிரியர்களின் குறைவான ஈடுபாட்டிற்கான காரணிகளைக் கண்டறிந்து, அதைத் தீர்ப்பதன் மூலம் , ஒவ்வொரு ஆசிரியரின் மகிழ்ச்சி, உற்சாகம், ஈடுபாடு உறுதி செய்யப்பட்டு, மாணவர் நலன், நிறுவனம் மற்றும் பணியிடத்தை முன்னேற்றுவதற்காக உற்சாகப்படுத்தப்படுவர். இந்த நோக்கத்திற்காக, உயர்கல்வி நிறுவனங்களில் சிறந்த, துடிப்பான மற்றும் திறமையான ஆசிரியர்களை உருவாக்க பின்வரும் முயற்சிகளை , இந்தக் கொள்கை பரிந்துரைக்கிறது
13.2 முதற்கட்டமாக, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அடிப்படை உள்கட்டமைப்புகளான சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள், கரும்பலகைகள், அலுவலகங்கள், கற்பித்தல் பொருட்கள், நூலகங்கள், ஆய்வகங்கள் மற்றும் இனிமையான வகுப்பறைகள் மற்றும் வளாகங்கள் முதலிய வசதிகள் கட்டமைக்கப்படும். நவீனக் கல்வி தொழில்நுட்பத்தை ஒவ்வொரு வகுப்பிலும் கொண்டு வருவதன் மூலம் , ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறந்த கற்றல் அனுபவங்கள் உறுதிசெய்யப்படும்.
13.3 ஆசிரியருக்குக் கற்பிக்கும் செயல்பாடுகள் கூடுதலாக இல்லாதபடி அமையும். ஆசிரியர் – மாணவர் விகிதாச்சரமும் அதிகாமாக இல்லதபடி உறுதி செய்யப்பாடும். இதன் மூலம், கற்பித்தல் செயல்பாடு இனிமையாகவும், மாணவர்களுடன் ஆசிரியர் உரையாடும் நேரம் அதிகமாகவும், ஆராய்ச்சி மற்றும் பல்கலைக் கழகம் சார்ந்த படிப்புகளுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கக் கூடியதாகவும் அமையும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும், துறை சார்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள். அவர்கள் வேறு எந்தக் கல்வி நிறுவனத்திற்கும் பொதுவாக இட மாற்றம் செய்யப் பட மாட்டார்கள். இதன் மூலம், அவர்கள் தங்களது முழு திறனையும், தாம் சார்ந்து இருக்கக் கூடிய கல்வி நிறுவனங்களுக்கு முழுமையாக அர்ப்பணிக்க முடியும் .
13.4 ஆசிரியர்களுக்கு அவர்களின் பாடத்திட்டத்தை மற்றும் கல்வி அணுகுமுறைகளைச் சொந்தமாக வடிவமைக்கச் சுதந்திரம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டக் கட்டமைப்பிற்குள், மாணாக்கர்களுக்குத் தேவையான ஒரு பாடத்திட்டத்தை , உருவாக்குவதற்கான முழுச் சுதந்திரமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். இதில் பாடநூல் மற்றும் வாசிப்பு சார்ந்த பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, தேர்வுகள் மற்றும் துறை சார்ந்த பணிகளும் அடங்கும். புதுமையான கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சேவையை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்குச் சிறப்புஅதிகாரம் அளிப்பதன் மூலம் , சிறப்பான, ஆக்கப்பூர்வமான பணிகளை ஆசிரியர்கள் செய்வதற்கு ஒரு முக்கிய உந்துதலாகவும் உதவியாகவும் இருக்கும்.
13.5 திறமைகளை மேலும் ஊக்குவிப்பதற்காக, பொருத்தமான வெகுமதிகள், பதவி உயர்வுகள், தலைமைப் பொறுப்பு போன்ற அங்கீகாரங்கள் வழங்கப்படும். இதற்கிடையில், அடிப்படைப் பணிகளைப் பின்பற்றும் கடமையில் விலகாதிருக்க ஆசிரியர்கள் பொறுப்பேற்றுக்கொள்ளப்படுவார்கள்.
13.6 உயர்கல்வி நிறுவன்ங்கள், தெளிவாக வரையறுக்கப்பட்ட, சுயதீனமான மற்றும் வெளிப்படையான செயல்முறைகள் மற்றும் ஆசிரிய ஆட்சேர்ப்புக்கான அளவுகோல்களைக் கொண்டிருக்கும். இதன் மூலம் , தன்னாட்சி நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப ஆசிரிய ஆட்சேர்ப்பு நடைபெறும் . தற்போதைய ஆட்சேர்ப்பு செயல்முறை தொடரும் அதே வேளையில், ஒரு ‘தற்காலிக பதவிக்காலம்’ அதாவது, பணியில் உயர் செயல்திறனை உறுதிப்படுத்தப் பொருத்தமான ”தகுதிகாண்” காலம் வைக்கப்படும். சிறந்த ஆராய்ச்சி மற்றும் செயலாக்கங்களை அங்கீகரிக்கும் வகையில், காலவரம்பிற்குட்பட்ட பதவி உயர்வு முறைகள் நிறுவப்படும். முறையான செயல்திறன் மதிப்பீட்டிற்கான பல அளவுருக்களின் அமைப்பு ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்தாலும் உருவாக்கப்பட்டு, அதன் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் (IDP) தெளிவாக விவரிக்கப்படும். இத்திட்டத்தில், நிரந்தர பதவிக்காலம்” குறித்தம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, அங்கீகாரங்கள் போன்றவற்றைச் செயல்படுத்த, கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய அளவீடுகளான, ‘தற்காலிக பதவிக்கால‘ தகுதிகாண் காலத்திய செயல்பாடுகள், சகஆசிரியர்கள் மற்றும் மாணவர்களது மதிப்புரைகள், கற்பித்தல் மற்றும் கற்பித்தலில் புதுமைகள், தரம் மற்றும் தாக்கம் மிகுந்த ஆராய்ச்சி, தொழில்முறை மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் நிறுவனம் மற்றும் சமூகத்திற்கான பிற வகையான சேவைகள் போன்றவை அனைத்தும் விளக்கப் பட்டிருக்கும் .
13.7 உயர்வான செயல்திறனையும், புதுமையையும் வளர்த்தெடுக்கும் வல்லமை பெற்ற, சிறந்த மற்றும் துடிப்பான நிறுவனத் தலைவர்களே காலத்தின் தேவையாக உள்ளனர். தனித்துவமான சிறந்த நிறுவனத் தலைமையானது, ஒரு நிறுவனம் மற்றும் அதன் ஆசிரியர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். மிகச்சிறந்த கல்விசார் மற்றும் பிற சேவைகளில் சாதித்த, தலைமை மற்றும் மேலாண்மைத் திறன்களைக் ஆதாரப்பூர்வமாக கொண்டிருக்கும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் வெகு விரைவில் அடையாளம் காணப்பட்டு தலைமை பதவிகளில் அமர்த்தப்படுவர். தலைமைத்துவப் பதவிகள்காலியாக இருக்காது, மாறாகத் தலைமைத்துவ மாற்றங்களின் போது , தற்போது பணியில் இருப்பவரைச் சற்று காலம் நீட்டிப்பது, நிறுவனங்களின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்கான விதிமுறையாக இருக்கும். ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களிடமிருந்து, சிறந்த மற்றும் புதுமையான கற்பித்தல், ஆராய்ச்சி, நிறுவன சேவை மற்றும் சமூக மேம்பாட்டு ஊக்குவிப்பு போன்றவை பெறும்படியான ஒரு சிறப்பான பண்பாடு அமையுமாறு, நிறுவனத் தலைவர்களின் செயல்பாடுகள் அமையும்..
14. உயர் கல்வியில் சமத்துவமும் அனைவரையும் உள்ளடக்குதலும்
14.1. தரமான உயர்கல்வியில் நுழைவது என்பது தனிநபர் மற்றும் சமூகங்களைச் சாதகமற்ற சுழற்சிகளிலிருந்து வெளியேற்றக்கூடிய பரந்த சாத்தியக்கூறுகளை உருவாக்கும். இந்த காரணத்திற்காக, தரமான உயர்கல்வி வாய்ப்புகளை அனைத்துத் தனிநபர்களுக்கும் கிடைக்கச் செய்வது என்பது முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்விக்கான சமமான அணுகலை உறுதி செய்வதை இந்தக் கொள்கை வகுக்கிறது, கூடுதலாக சமூக–பொருளாதாரத்தில் பின்தங்கியவர்(SEDG)களுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது.
14.2. சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பள்ளி மற்றும் உயர் கல்வித் துறைகளிலிருந்து விலக்கப்படுவதற்குப் பல காரணங்கள் பொதுவானவை. எனவே, பள்ளி மற்றும் உயர் கல்வி இரண்டிலும் அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ அணுகுமுறை என்பது பொதுவானதாக இருக்க வேண்டும். மேலும், பல்வேறு நிலைகளில் நீடிக்கத்தக்க வளர்ச்சியை உறுதிசெய்யும் வண்ணம் தொடர்ச்சியான அணுகுமுறை வேண்டும். எனவே, உயர்கல்வியில் அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவம் என்ற இலக்கை அடையத் தேவையான கொள்கை முயற்சிகள் பள்ளிக் கல்வியில் மேற்கொள்ளும் முயற்சிகளோடு இணைத்துப் பார்க்கவேண்டும்
14.3. உயர்கல்வியில் குறிப்பாக அல்லது கணிசமான அளவிற்குத் தீவிரமாக இருக்கும் சில விலக்குகள் உள்ளன. குறிப்பாக, உயர்கல்வி வாய்ப்புகள் பற்றிய அறிவு இல்லாமை, உயர்கல்வியைத் தொடர்வதற்கான பொருளாதார வாய்ப்பு, நிதிக் கட்டுப்பாடுகள், சேர்க்கை செயல்முறைகள், புவியியல் மற்றும் மொழித் சார்ந்த தடைகள், பல உயர் கல்வித் திட்டங்களின் மோசமான வேலைவாய்ப்பு நிலை , மற்றும் பொருத்தமான மாணவர் ஆதரவு வழிமுறைகள் இல்லாமை ஆகியவை இதில் அடங்கும்.
14.4. இந்த நோக்கத்திற்காக, உயர்கல்விக்குக் குறிப்பிட்ட கூடுதல் நடவடிக்கைகள் ,அனைத்து அரசாங்கங்களும் உயர் கல்வி நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
14.4.1. அரசாங்கங்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
(a) சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான(SEDG) கல்விக்குப் பொருத்தமான அரசாங்க நிதியை ஒதுக்குதல்
(b) சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான (SEDG) அதிகமான சேர்க்கை விகிதத்திற்கு (GER) தெளிவான இலக்குகளை அமைத்தல்
(c) உயர் கல்வி நிறுவனங்களின் (HEI) சேர்க்கையில் பாலினச் சமநிலையை மேம்படுத்துதல்
(d) எளிதான அணுகுதலை மேம்படுத்தும் வகையில், உயர் இலட்சிய மாவட்டங்களிலும் மற்றும் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் அதிகம் இருக்கும் சிறப்புக் கல்வி மண்டலங்களிலும் உயர்தர உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுதல் வேண்டும்.
(e) உள்ளூர் / இந்திய மொழிகளில் அல்லது இருமொழிகளில் கற்பிக்கும் உயர்தர உயர் கல்வி நிறுவனங்களை (HEI களை ) உருவாக்கி ஆதரித்தல்.
(f) பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில், சமூக பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு அதிக நிதி உதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல்
(g) சமூக பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் ஊக்கத்தொகைகள் சென்றடையச் செய்யும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்த வேண்டும்.
(h) சிறந்த பங்கேற்பு மற்றும் கற்றல் விளைவுகளுக்கான தொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்கி ஆதரித்தல்
14.4.2. உயர்கல்வி நிறுவனங்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
(a) உயர்கல்வியைத் தொடருவதற்கான நிதிச்சுமை மற்றும் கட்டணங்களைக் குறைத்தல்
(b) சமூக–பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு அதிக நிதி உதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல்
(c) சமூக பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் ஊக்கத்தொகைகள் சென்றடையச்செய்யும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்த வேண்டும்.
(d) சேர்க்கை செயல்முறைகளை அனைவரையும் உள்ளடக்கியதாகச் செய்வது
(e) பாடத்திட்டத்தை அனைவருக்குமானதாக ஆக்குதல்
(f) உயர்கல்வித் திட்டங்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரித்தல்
(g) இந்திய மொழிகளிலும், இருமொழிகளில் கற்பிக்கப்படும் கூடுதல் பட்டப்படிப்புகளை உருவாக்குதல்
(h) அனைத்துக் கட்டிட வசதிகளும் சக்கர நாற்காலி மற்றும் மாற்றுத்திறனாளிகளினால் அணுகக்கூடியவையாக உறுதிசெய்தல்
(i) பின்தங்கிய கல்வி பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை உடன் இணைப்பதற்கான பாடத்திட்டங்களை உருவாக்குதல்
(j) இதுபோன்ற அனைத்து மாணவர்களுக்கும் சமூக–உணர்வுசார் மற்றும் கல்விசார் ஆதரவு, பொருத்தமான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல்
(k) பாலின–அடையாளப் பிரச்சினை குறித்து ஆசிரியர், ஆலோசகர் மற்றும் மாணவர்களின் உணர்திறனை உறுதிப்படுத்தவும் இதுகுறித்து பாடத்திட்டங்கள் உட்பட உயர் கல்வி நிறுவனங்களின் அனைத்து அம்சங்களிலும் சேர்த்தல்
(l) பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரான அனைத்து விதிகளையும் கண்டிப்பாக அமல்படுத்துதல்
(m) மேலே சொன்ன திட்டங்கள் மட்டுமின்றி, குறிப்பாக சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களின் பங்கேற்பினை அதிகரிக்கும் வண்ணம் நிறுவன மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதல்.
15. ஆசிரியர் கல்வி
15.1. அடுத்தத் தலைமுறையைக் கட்டமைக்கும் பள்ளி ஆசிரியக் குழுக்களை உருவாக்குவதில் ஆசிரியர் கல்வி மிக முக்கியப் பங்காற்றுகிறது. சிறந்த வழிகாட்டிகளின் துணையுடன் பல பாடப்பிரிவுகளின் மீதான சிறப்பறிவும், நன்னெறிப் பண்புகளையும் மதிப்புகளையும் செயல்முறைகளின் வாயிலாகப் பயில்வதே ஆசிரியரைத் தயார்ப்படுத்துதல் ஆகும். ஆசிரியர்கள் இந்தியாவின் விழுமியங்கள், மொழிகள், நெறிமுறைகள் மற்றும் பழங்குடி மரபுகள் உட்பட அனைத்து மரபுகள் ஆகியவற்றில் வலுவான அடித்தளம் பெற்றிருப்பது அவசியம் ஆகும். இதனுடன் கல்வி மற்றும் கற்பிக்கும் முறைகளில் உள்ள சமீபத்திய முன்னேற்றங்களையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
15.2. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி ஜே.எஸ். வர்மா கமிஷனின் (2012) அறிக்கையின் மூலம், 10,000-த்துக்கும் மேற்பட்ட தனித்து இயங்கும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தரமான ஆசிரியர் கல்வியைத் தருவதற்கு எந்தவொரு கடுமையான முயற்சியும் எடுக்காமல் இருப்பதுடன், பணத்திற்காகப் பட்டத்தை விற்கும் விற்பனை நிலையங்களாகவே செயல்படுவது தெரிய வந்துள்ளது. இவ்வாறான முறைகேடுகளைத் தடுக்கவும் ஆசிரியர் கல்வியில் அடிப்படை தரத்தை உறுதி செய்யவும் இதுவரை மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் யாவும் எந்தவொரு பலனையும் தரவில்லை. அதற்கு மாறாக அவை கல்வித்துறையில் சிறப்பான வளர்ச்சிகளையும் புதுமையான கண்டுபிடிப்புகளையும் தடுக்கவே செய்திருக்கின்றன. நேர்மை, நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் உயர் தரத்தை ஆசிரியர் கல்வி முறையில் மீட்டெடுக்க, கல்வித்துறையிலும் அதன் ஒழுங்கு நடவடிக்கை முறைகளிலும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து புத்துயிரூட்டுதல் அவசரத் தேவையாக உள்ளது.
15.3. கற்பித்தல் தொழிலின் மரியாதையை மீட்டெடுக்கத் தேவையான ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அளவை மேம்படுத்த, அடிப்படை கல்வித் தர நிர்ணயங்களைப் பூர்த்தி செய்யாத தரமற்ற மற்றும் செயலாற்றாத ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்குக் குறைகளைக் களைய ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படும். கொடுக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் குறைகளைக் களையாத நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஒழுங்குமுறை ஆணையத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படும். 2030 ஆம் ஆண்டிற்குள், கல்வி ரீதியாகச் சிறந்த, பன்முகத்தன்மை வாய்ந்த, ஒருங்கிணைக்கப்பட்ட ஆசிரியர் கல்வித் திட்டங்கள் மட்டுமே நடைமுறையில் இருப்பதற்கு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
15.4. ஆசிரியர் கல்விக்குப் பல்துறை சார்ந்த உள்ளீடுகள், உயர்தரப் பாடத்திட்ட உள்ளடக்கங்கள் மற்றும் கற்றல்-கற்பித்தல் முறைகள் ஆகியவைத் தேவைப்படுவதால், அனைத்து ஆசிரியர் கல்வித் திட்டங்களும் ஒருங்கிணைந்த பன்முகம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். இதைச் செயல்படுத்துவதற்காக அனைத்துப் பல்துறை சார்ந்த பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் கல்வியியல் துறையை நிறுவி கல்வியின் பல்வேறு கூறுகளில் அதிநவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுடன், உளவியல், தத்துவம், சமூக அறிவியல், நரம்பியல், இந்திய மொழிகள், கலை, இசை, வரலாறு, இலக்கியம், உடற்கல்வி, அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பிற துறைகளுடன் இணைந்து B.Ed. பட்டப்படிப்பையும் வழங்கும். மேலும் 2030ஆம் ஆண்டிற்குள் தனியாக இயங்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக பல்துறை சார்ந்த பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த நான்கு வருட B.Ed. ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பினை வழங்கும்.
15.5. பல்துறை சார்ந்த உயர்க்கல்வி நிறுவனங்களால் (HEIs) வழங்கப்படும் ஒருங்கிணைந்த நான்கு வருட B.Ed. ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பானது 2030 ஆம் ஆண்டிற்குள் பள்ளி ஆசிரியர் தேர்வுக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக்கப்படும். இந்த நான்கு வருட B.Ed. ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பானது முழுமையான இரு பெரும் இளங்கலைப் பட்டப்படிப்பினை உள்ளடக்கி இருக்கும். ஒன்று ஆசிரியர் பயிற்சி சார்ந்து தற்போது வழங்கப்படும் இரண்டு வருட B.Ed. இளங்கலைப் பட்டப்படிப்பு. மற்றொன்று பல்துறை சார்ந்த இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு. இதில் மொழி, வரலாறு, இசை, கணிதம், கணினி அறிவியல், வேதியியல், பொருளாதாரம், கலை, உடற்கல்வி போன்ற அனைத்தும் அடங்கும். அதிநவீன கற்றல் – கற்பித்தல் முறைகளுக்கு அப்பால், ஆசிரியர் கல்வியில் சமூகவியல், வரலாறு, அறிவியல், உளவியல், குழந்தைப்பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு, இந்தியாவின் மதிப்புகள் / நெறிமுறைகள் / கலை / மரபுகள் மற்றும் பலவும் உள்ளடங்கி இருக்கும். ஒருங்கிணைந்த நான்கு வருட B.Ed. ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பினை வழங்கும் உயர்க்கல்வி நிறுவனங்கள் (HEIs) அனைத்தும் இரண்டு வருட B.Ed. ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பினை வழங்கலாம். ஏற்கனவே ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இந்த இரண்டு வருட B.Ed. ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பில் சேரலாம். இதைத்தவிர உயர்க்கல்வி நிறுவனங்கள் ஏதேனும் ஒரு துறையில் நான்கு வருட இளங்கலைப் பட்டம் முடித்தவர்களுக்கு ஒரு வருட B. Ed ஆசிரியர் பட்டப்படிப்பினை வழங்கலாம். முதன்மையான மாணவர்களை ஆசிரியர் பயிற்சிக்கு தேர்வு செய்ய தூண்டும் வகையில் 4 வருட, 2 வருட, 1 வருட B .Ed பட்டப்படிப்பினைத் தேர்வு செய்யும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும்.
15.6. ஆசிரியர் கல்வி சார்ந்த பட்டப்படிப்பினை வழங்கும் உயர்க்கல்வி நிறுவனங்கள் (HEIs), கல்வியியல் சார்ந்த துறைகளிலும் சிறப்புப் பாடங்களிலும் தேவையான அளவு வேறுப்பட்ட நிபுணர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு உயர்க்கல்வி நிறுவனமும் (HEI) அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். அங்கு பணியாற்றும் சில ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், சமூக சேவை, வயது வந்தோர் கல்வி மற்றும் தொழிற்கல்வி போன்ற பிற நடவடிக்கைகளிலும் பங்கேற்க வேண்டும்.
15.7. ஆசிரியர் கல்விக்கான சீரான தரத்தை உறுதி செய்ய, அனைத்து ஆசிரியர் கல்வி சார்ந்த பட்டப்படிப்புக்கான சேர்க்கையும் தேசியத் தேர்வு முகமையினால் நடத்தப்படும் தகுதி மற்றும் திறனாய்வு தேர்வுகள் மூலமாக செய்யப்படும். மேலும் இத்தேர்வுகள் நாட்டின் மொழியியல் மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும்.
15.8. கல்வியியல் துறைகளில் பன்முகத்தன்மையோடு கூடிய ஆசிரியர்களை பணியமர்த்துவதே தலையாய நோக்கமாக இருத்தல் வேண்டும். அதே சமயம் கற்பித்தல்/துறைசார்/ஆராய்ச்சி அனுபவம் ஆகியவையும் முக்கியமானப் பங்கை வகிக்கும். பள்ளிக்கல்வியோடு நேரடி தொடர்புடைய உளவியல், குழந்தைகள் மேம்பாடு, மொழியியல், சமூகவியல், தத்துவம், பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கல்வி, கணிதக் கல்வி, சமூக அறிவியல் கல்வி மற்றும் மொழிக் கல்வி போன்ற பலவாறான பாடங்களில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கல்வியியல் துறைகளில் பணியமர்த்தப்படுவர். இவ்வாறான பாடங்களில் தகுதியுள்ள கல்வியியல் துறையில் ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்கள் தக்கவைக்கப்படுவர். ஆசிரியர் கல்வியில் பல்துறை சார்ந்த ஆசிரியர்களை அதிகரிக்கவும் கருத்தியல் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் பயனுள்ளதாக அமையும்.
15.9. Ph.D. எனப்படும் முனைவர் பட்டப்படிப்பில் புதிதாகச் சேர்வோர் அனைவரும் பயிற்சிக் காலத்தில் அவர்கள் தேர்ந்தெடுத்த Ph.D. பாடத்துடன் தொடர்புடைய கற்பித்தல் / கல்வி / கற்றல்-கற்பித்தல் முறை / எழுத்து சார்ந்த மதிப்புரு அடிப்படையிலான பாடப்பிரிவுகளிலும் (credit-based) தேர்ச்சி பெற வேண்டும். பல ஆராய்ச்சி மாணவர்கள் துறைசார் வல்லுநர்களாகவோ அல்லது பொதுப் பிரதிநிதிகளாகவோ / அவர்கள் தேர்ந்தெடுத்தத் துறைகளின் தொடர்பாளர்களாகவோ பணியமர்த்தப்படுவார்கள் என்பதால் கற்றல்-கற்பித்தல் சார்ந்த நடைமுறைகள், பாடத்திட்டங்களை வடிவமைத்தல், நம்பகமான மதிப்பீட்டு முறைகள், தகவல் தொடர்பு மற்றும் பலவற்றை முனைவர்களிடம் வெளிக்கொணர்வது முனைவர் பட்டப்படிப்பில் உறுதி செய்யப்படும். மேலும் Ph.D. மாணவர்கள் உதவி ஆசிரியராகவும் மற்ற கல்வியியல் சார்ந்த நடவடிக்கைகளில் பணியாற்றவும் ஒரு குறைந்தபட்சக் கால நிர்ணயம் செய்யப்படும். இவற்றை உறுதிப்படுத்த நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் Ph.D. பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.
15.10. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு தொழில்சார் தொடர்ச்சிக்கான மேம்பாட்டை வழங்க கல்வி நிறுவனங்களின் தற்போதைய ஏற்பாடுகளும் முயற்சிகளும் தொடரும். மேலும் இந்த ஏற்பாடுகள் யாவும் தரமான கல்விக்கான செறிவூட்டப்பட்ட கற்பித்தல்–கற்றல் செயல்முறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலப்படுத்தப்பட்டு கணிசமாக விரிவுபடுத்தப்படும். ஆசிரியர்களின் ஆன்லைன் வழி பயிற்சிக்கு SWAYAM / DIKSHA போன்ற தொழில்நுட்பத் தளங்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் தரமான பயிற்சித் திட்டங்கள் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்குக் குறுகிய காலத்திற்குள் கொண்டு செல்லப்படும்.
15.11. சிறப்பான மூத்த / ஓய்வுபெற்ற ஆசிரியக் குழுக்களின் துணையுடன் வழிகாட்டுதலுக்கான ஒரு தேசிய பணிக்குழு நிறுவப்படும். அந்த ஆசிரியக் குழுக்களில் இந்திய மொழிகளைக் கற்பிக்கும் திறன் உள்ளவர்களும், பல்கலைக்கழகம்/கல்லூரிகளுக்குக் குறுங்கால மற்றும் நெடுங்கால வழிகாட்டுதலைத் தரத் தயாராக இருப்பவர்களும், தொழில்சார் துணையாக இருப்பவர்களும் அடங்குவார்கள்.
16. தொழிற்கல்வியை மறுவடிவமைத்தல்
16.1 12-வது ஐந்தாண்டு திட்ட (2012-2017) மதிப்பீட்டின் படி 19-24 வயதுடைய இந்தியத் தொழிலாளர்களில் வெகு குறைவான (5%த்துக்கும் குறைவான) எண்ணிக்கையிலேயே முறையான தொழிற்கல்வி பெற்றிருக்கின்றனர். ஆனால் இது அமெரிக்காவில் 52 சதவிகிதமாகவும், ஜெர்மனியில் 75 சதவிகிதமாகவும் தெற்கு கொரியாவில் அதிகபட்ச அளவாக 96 சதவிகிதமாகவும் உள்ளது. தொழிற்கல்வியைப் பரவலாக இந்தியாவில் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தையே இந்த எண்ணிக்கை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
16.2 குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் தொழிற்கல்வி பெறுவதற்கு முதன்மையான காரணம் – தொழிற்கல்வி முறையானது 11-12 வது வகுப்புகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களையும் 8-ம் வகுப்பு அல்லது அதற்கு மேலுள்ள வகுப்புகளில் இடைவிலகும் மாணவர்களையும் மட்டுமே முன்னர் கவனம் செலுத்தியதே ஆகும். மேலும், 11-12 வது வகுப்பில் தொழிற்கல்விப் பாடத்தோடு தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்க்கல்வியிலும் அதே பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க சரியான வரையறுக்கப்பட்ட பாதைகள் அமைக்கப்படவில்லை. பிரதான உயர்கல்விக்கான சேர்க்கை அளவுகோல்களும் அவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவும் இல்லை. இதனால், தொழிற்கல்வி பயின்றோர் வழக்கமான பாடத்திட்டத்தில் பயின்றோருடன் பயிலத் தடையாக இருக்கிறது. 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசியத் திறன் தகுதிக் கட்டமைப்பின் (NSQF) மூலம் தான், தொழிற்கல்வி பாடப்பிரிவினைப் பயின்றோருக்கு மற்ற மாணவர்களோடு சேர்ந்து முன்னேற பெரும் தடையிருப்பதை அறிய முடிந்தது.
16.3 தொழிற்கல்வியானது முதன்மையான கல்வித் திட்டத்தில் கற்கவியலாத மாணவர்களால் மட்டுமே பயிலப்படுவதாகவும், முதன்மைக் கல்வியை விடத் தரம் தாழ்ந்ததாகவும் கருதப்பட்டு வருகின்றது. இந்த வகையான பார்வை தான் மாணவர்கள் எடுக்கும் முடிவுகளுக்குத் தடையாகவும் இருக்கின்றது. எனவே, தொழிற்கல்வியை மறுவடிவாக்கம் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் தொழிற்கல்வியைப் பற்றிய புதிய பார்வையை மாணவர்களிடம் உருவாக்குதில் தீவிரமாக அக்கறைக் காட்ட வேண்டும்.
16.4 தொழிற்கல்வியுடன் இணைந்துள்ள சமூக அந்தஸ்து படிநிலையைக் களைந்து, தொழிற்கல்வியை முதன்மைக் கல்வியோடு ஒருங்கிணைக்கும் பணியைப் படிப்படியாக எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் மேற்கொள்வதே இந்தக் கொள்கையின் குறிக்கோள் ஆகும். தொழிற்கல்வி சார்ந்த பயிற்சிகளை நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளிலேயே ஆரம்பிப்பதால், தரமான தொழிற்கல்வியை உயர்க்கல்வியோடு சுமூகமாக இணைக்க முடியும். இதனால் ஒவ்வொரு குழந்தையும் குறைந்தபட்சம் ஒரு தொழிலையாவது கற்றல் உறுதி செய்யப்படும் மற்றும் பல்வேறு தொழில்களை அறிமுகப்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்படும். தொழிற்கல்வியின் மூலம் இந்தியக்கலை மற்றும் கைவினைத் தொழில்களின் முக்கியத்துவமும் தொழிலாளர்களின் கண்ணியமும் வலியுறுத்தப்படும்.
16.5 2025-க்குள் கற்பவர்களில் 50% நடுநிலைக்கல்வி, உயர்நிலைக் கல்வி மூலம் தொழிற்கல்வியில் பயிற்சி பெற்றிருப்பார்கள். இதற்காகத் தெளிவான செயல்திட்டம் இலக்குகளோடு வடிவமைக்கப்படும். இது நிலையான வளர்ச்சி இலக்கு 4.4 (SDG)-உடன் ஒருங்கிணைந்து இந்திய மக்கள்தொகையின் ஆற்றல் வளத்தை உணர்த்தும் வகையிலும் இருக்கும். மொத்தச் சேர்க்கை விகிதத்தை (GER) கணக்கிடும்போது தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் சேர்த்துக் கணக்கிடப்படும். அறிவு சார்ந்த கல்வியும் தொழிற்கல்வியும் ஒன்றாக இணைந்து வளரும். வரும் பத்தாண்டுகளில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி படிப்படியாகக் கற்பிக்கப்படும். இதற்காக மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் தொழிற்துறை பயிற்சி நிறுவனங்கள், தொழில் நுணுக்கங்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனங்கள், உள்ளூர் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்துப் பணியாற்றும். பள்ளிகளில் திறன் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு அவ்வசதியற்ற பிற பள்ளிகளும் அவற்றைப் பயன்படுத்துமாறு ஏற்பாடு செய்யப்படும். உயர்க்கல்வி நிறுவனங்கள் தொழிற்கல்வியைச் சொந்தமாகவோ அல்லது தொழில் நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் மூலமாக ஒன்று சேர்ந்தோ அளிக்க வேண்டும். 2013-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கல்வி இளங்கலைப் பட்டப்படிப்புகள் தொடர்ந்து நீடிக்கும். அதே சமயம், மற்ற இளங்கலைப் பட்டப்படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு, குறிப்பாக நான்கு வருடப் பல்துறை சார்ந்த இளங்கலைப் பட்டப்படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் பட்டம் பெற வாய்ப்புக் கிடைக்கும். உயர்க்கல்வி நிறுவனங்கள் மென்திறன் உள்பட பல்வேறு திறன்களில் குறுகிய காலச் சான்றிதழ் படிப்புகள் வழங்க அனுமதிக்கப்படும். லோக் வித்யா, அதாவது இந்தியாவில் உருவாக்கப்பட்ட முக்கியமான தொழில்கள் சார்ந்த அறிவுத் திறன்கள் தொழிற்கல்வி படிப்புகள் மூலம் அனைவருக்கும் கிடைக்க வழி செய்யப்படும். திறந்த மற்றும் தொலைதூரக் கல்வியின் மூலம் தொழிற்கல்வி வழங்குதல் குறித்தும் ஆராயப்படும்.
16.6 தொழிற்கல்விப் பாடமானது அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் வரும் பத்தாண்டுகளில் படிப்படியாகக் கற்பிக்கப்படுமாறு ஒருங்கிணைக்கப்படும். எந்தவிதத் தொழிற்கல்வியைப் பயிற்றுவிப்பது என்பது திறன் பகுப்பாய்வின் மூலமும் உள்ளூரிலுள்ள வாய்ப்புகளைக் கண்டுணர்தல் மூலமும் அறியப்படும். MHRD-யானது தேசியக் குழு ஒன்றை அமைத்து தொழிற்கல்வி வல்லுநர்களையும் அமைச்சகங்களின் பிரதிநிதிகளையும் தொழில் நிறுவனங்களோடு இணைந்து தொழிற்கல்வியின் ஒருங்கிணைப்பு அமைப்பை (NCIVE) நிறுவி இதன் முயற்சிகளை மேற்பார்வை செய்யும்.
16.7 முதலிலேயே துவங்கிய தனிப்பட்ட நிறுவனங்கள் சரியாக வேலை செய்யக்கூடிய மாதிரிகள் மற்றும் நடைமுறைகளை வகுப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை NCIVE வடிவமைத்த வழிமுறைகள் மூலம் மற்ற நிறுவனங்களோடு பகிர்ந்து தொழிற்கல்வியின் உச்சத்தைத் தொட உதவ வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களும் பல்வேறு மாதிரிகள், மதிப்பீடுகள் மூலம் தொழிற்கல்வியைப் பயிற்சித்துப் (பரீட்சித்து) பார்க்க வேண்டும். உயர்க்கல்வி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களோடு இணைந்து இளம் நிறுவனங்களை அதனுடைய தொடக்க காலங்களில் ஆதரிக்கும் மையங்களை உருவாக்க வேண்டும்.
16.8 ஒவ்வொரு தொழிலுக்கும் வேலைத்திறனுக்கும் விரிவான வகையில் தேசியத் திறன் தகுதி கட்டமைப்பு ஒழுங்கமைக்கப்படும். மேலும், இந்தியத் தரநிலையானது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பினுடைய தொழில்களின் சர்வதேச வகைப்பாட்டோடு ஒன்றாகச் சீரமைக்கப்படும். முன்கற்றலுக்கான அடிப்படை அங்கீகாரத்தை இந்தக் கட்டமைப்பு தரும். இதன் மூலம், முறைசார் அமைப்பில் இருந்து இடைநீங்கியவர்களின் நடைமுறை அனுபவம், கட்டமைப்பின் பொருத்தமான மட்டத்துடன் சீரமைக்கப்பட்டு ஒருங்கிணைப்படும். இந்த மதிப்புரு அடிப்படையிலான கட்டமைப்பு முதன்மை கல்விக்கும் தொழிற்கல்விக்கும் இடையே இருக்கும் இயக்கத்தை எளிதாக்கும்.
17. அனைத்துத் துறைகளிலும் தரமான கல்விசார் ஆராய்ச்சியை ஊக்குவிக்க ஒரு புதிய தேசிய ஆராய்ச்சி நிறுவனம்
17.1 ஒரு அளப்பரிய மற்றும் மிகச்சிறந்த பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், நிலைநிறுத்துவதிலும், சமுதாயத்தை மேம்படுத்துவதிலும், ஒரு தேசத்தை இன்னும் அதிக உயரங்களை அடையத் தொடர்ந்து ஊக்குவிப்பதிலும் அறிவு உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சி முக்கியமானவை. இன்னும் சொல்லப்போனால் உலகின் வளம் வாய்ந்த நாகரீகங்களை கொண்ட (இந்தியா, மெசொப்பொத்தோமியா, எகிப்து மற்றும் கிரீஸ் போன்ற) நாடுகளும் நவீன சகாப்தத்திற்கு வித்திட்ட (அமெரிக்கா, ஜெர்மனி, இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற ) நாடுகளும் வலுவான அறிவார்ந்த சமூகங்களாக மாறியதற்கு முக்கிய காரணமாக விளங்கியது இந்த நாடுகளின் அறிவுசார் செயல்பாடுகளாலும் , பொருள் சார்ந்த பங்களிப்பினாலும் கலை , அறிவியல், மொழி , பண்பாடுகளிலும் நாகரிகங்களை வளர்ந்ததே ஆகும். இந்த செயல்பாடுகள் தங்கள் சொந்த நாகரிகங்களை மட்டுமல்லாது உலகமெங்கும் உள்ள நாகரீகங்களையும் மேம்படுத்தியது
17.2 இன்று உலகில் நிகழும் விரைவான மாற்றங்களால் (எ.கா., பருவநிலை மாற்றம் , மக்கள் தொகை இயங்கியல் மற்றும் மேலாண்மை, உயிரித் தொழில்நுட்பம், விரிவடைந்துவரும் டிஜிட்டல் சந்தை, கற்கும் கருவியியலின் (Machine learning) வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு) ஒரு வலுவான ஆராய்ச்சிச்சூழல் முன்னெப்போதையும் விட தற்போது தேவைப்படுகிறது. இந்த முற்றிலும் புதுமையான துறைகளில் இந்தியா ஒரு தலைசிறந்த நாடாக மாற வேண்டும். மேலும் அதன் பரந்த திறமைத் திறனை மேம்படுத்தி வரவிருக்கும் ஆண்டுகள் மற்றும் தசாப்தங்களில் மீண்டும் ஒரு முன்னணி அறிவுச் சமூகமாக மாற, தேசத்திற்கு அதன் ஆராய்ச்சி திறன்களின் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் மற்றும் வெளியீடு முழுவதும், தேவைப்படும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் இன்று, ஒரு தேசத்தின் பொருளாதார, அறிவுசார், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றத்திற்கு ஆராய்ச்சியின் அவசியம் / தேவை முன்பைவிட அதிகமாக உள்ளது.
17.3 ஆராய்ச்சியின் இந்த முக்கியத்துவம் இருந்தபோதிலும், இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு முதலீடு, தற்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.69% மட்டுமே, அமெரிக்காவில் 2.8%, இஸ்ரேலில் 4.3% மற்றும் தென் கொரியாவில் 4.2% ஆகும்.
17.4 சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம்,, தரமான கல்வி மற்றும் உடல் ஆரோக்யம் , மேம்பட்ட போக்குவரத்து, காற்றின் தரம், எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற, இந்தியா இன்று எதிர்கொள்ள வேண்டிய சமூக சவால்கள், அணுகுமுறைகள் மற்றும் தீர்வுகளைச் செயல்படுத்த உயர்மட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தேவைப்படுவது மட்டுமல்லாமல், சமூக அறிவியல் மற்றும் மானுடவியல், மற்றும் தேசத்தின் பல்வேறு சமூக–கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் பரிமாணங்கள் பற்றிய ஆழமான புரிதலும் தேவைப்படுகின்றது. இந்தச் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தினை வெளியிலிருந்து இறக்குமதி செய்தல் கூடாது. ஒரு நாட்டின் சுய ஆராய்ச்சியை நடத்துவதற்கான திறன், அது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் ஆராய்ச்சிகளை மாற்றியமைத்து ஏற்றுக்கொள்ள உதவும்.
17.5 மேலும், ஒரு நாட்டின் சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மட்டுமல்லாமல் அந்த நாட்டின் அடையாளம், மேம்பாடு, ஆன்மீக / அறிவுசார் திருப்தி மற்றும் படைப்பாற்றல் ஆகியவை அதன் வரலாறு, கலை, மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மூலம் ஒரு முக்கிய வழியில் அடையப்படுகின்றன. கலை மற்றும் மானுடவியல் ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் இணைதல், ஒரு தேசத்தின் முன்னேற்றத்திற்கும் தெளிந்த இயல்புக்கும் மிகவும் முக்கியமானது.
17.6 இந்தியாவில் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள், குறிப்பாக உயர் கல்வியில் ஈடுபட்டுள்ளவை முக்கியமானவை. ஆராய்ச்சி மற்றும் அறிவுருவாக்கத்தில் வலுவான கலாசாரம் உள்ள சூழல்களில் தான் உயர் கல்வி மட்டத்தில் சிறந்த கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகள் நிகழ்கின்றன என்பதை வரலாறு முழுவதும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் சான்றுகள் காட்டுகின்றன; மேலும், உலகின் மிகச் சிறந்த ஆராய்ச்சிகள் பன்முகத்தன்மை கொண்ட பல்கலைக்கழக அமைப்புகளிலேயே நிகழ்ந்துள்ளன.
17.7 அறிவியல் மற்றும் கணிதம் முதல் கலை மற்றும் இலக்கியம் வரை, ஒலிப்பு மற்றும் மொழிகள், மருத்துவம் மற்றும் வேளாண்மை வரையிலான துறைகளில் ஆராய்ச்சி மற்றும் அறிவு உருவாக்கும் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தை இந்தியா கொண்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டில், இந்திய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை வழிநடத்த இது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் .ஒரு வலுவான மற்றும் தெளிந்த அறிவு சமுதாயமாகவும், உலகின் மூன்று பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும் இந்தியாவை வலுவடையச் செய்ய இது உதவும்.
17.8 எனவே, இந்தக் கொள்கை இந்தியாவில் ஆராய்ச்சியின் தரம் மற்றும் அளவை மாற்றுவதற்கான ஒரு விரிவான அணுகுமுறையை உருவாக்குகிறது. விஞ்ஞான முறை மற்றும் விமர்சனப் பார்வைக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிக் கல்வியில் உறுதியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, விளையாட்டு மற்றும் கண்டுபிடிப்பு அடிப்படையிலான கற்றல் பாணிக்குக் கொண்டு செல்லப்படும். மாணவர்களின் நலன்களையும் திறமைகளையும் அடையாளம் காண்பது, பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியை ஊக்குவித்தல், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் பன்முக இயல்பு மற்றும் முழுமையான கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல், இளங்கலை பாடத்திட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் Internship(வேலை வாய்ப்பு)சேர்ப்பது, சரியான விளைவைக் கொடுக்கும் ,ஆசிரியத் தொழில் மேலாண்மை அமைப்புகள் ஆகியவை மற்றும் பள்ளிகளில் தொழில் ஆலோசனை அளித்தலும் அடங்கும். மேற்சொன்ன அம்சங்கள் அனைத்தும் நாட்டில் ஒர் ஆராய்ச்சி மனநிலையை வளர்ப்பதற்கு மிகவும் முக்கியமானவை.
17.9 இந்த பல்வேறு கூறுகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டியெழுப்புவதற்கும், அதன் மூலம் தேசத்தில் தரமான ஆராய்ச்சியை உண்மையிலேயே வளர்ப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும், இந்தக் கொள்கை ஒரு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை (NRF) நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. என்.ஆர்.எஃப் இன் மிக உயர்ந்த குறிக்கோள், நமது பல்கலைக்கழகங்கள் வழியாக ஆராய்ச்சி கலாச்சாரத்தை ஊடுருவிச் செல்வதாகும். குறிப்பாக, என்.ஆர்.எஃப் தகுதி அடிப்படையிலான ஆனால் சமமான மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சி நிதியின் நம்பகமான தளத்தை வழங்கும், சிறந்த ஆராய்ச்சிக்குப் பொருத்தமான ஊக்கத்தொகை மற்றும் அங்கீகாரம் மூலம் நாட்டில் ஆராய்ச்சி கலாச்சாரத்தை வளர்க்க உதவுகிறது, மேலும் முக்கிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஆராய்ச்சி திறன் தற்போது குறைவாக உள்ள மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் ஆராய்ச்சியை விதையிட்டு வளர்க்கவும் உதவும். NRF அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சிக்குப் போட்டித்தன்மையுடன் நிதியளிக்கும். வெற்றிகரமான ஆராய்ச்சி அங்கீகரிக்கப்படும், மேலும் பொருத்தமான இடங்களில், அரசு நிறுவனங்களுடனும், தொழில் மற்றும் தனியார் / பரோபகார நிறுவனங்களுடனும் நெருக்கமான தொடர்புகள் மூலம் செயல்படுத்தப்படும்.
17.10 தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST),அணுசக்தித் துறை (DAE), உயிர் தொழில்நுட்பத் துறை (DBT), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), இந்திய மருத்துவ ஆராய்ச்சி (ICMR), இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR), மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC), மற்றும் பல்வேறு தனியார் மற்றும் பரோபகார நிறுவனங்கள் ஆகியவை அவற்றின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப சுயதீனமாக ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும். ஆயினும், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (NRF) (என்.ஆர்.எஃப்) மற்ற நிதி நிறுவனங்களுடன் அறிவியல், பொறியியல் மற்றும் பிற கல்விக்கூடங்களுடன் இணைந்து செயல்படும். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (NRF) என்.ஆர்.எஃப் அரசாங்கத்திலிருந்து சுயதீனமாக, சுழலும் ஆளுநர் குழுவால் நிர்வகிக்கப்படும், இக்குழு பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களைக் கொண்டு அமைக்கப்படும்.
17.11 NRF தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மை நடவடிக்கைகள் பின்வருமாறு:
(a) அனைத்து வகையான மற்றும் அனைத்துத் துறைகளிலும் போட்டி, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட மானியத் திட்டங்களுக்கு நிதியளித்தல்;
(b) ஆராய்ச்சி தொடர்பான ஆராய்ச்சிகளில் ஆரம்பக்கட்டங்களில் இருக்கும் கல்வி நிறுவனங்களில், குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆராய்ச்சி தற்போது ஆரம்பக் கட்டத்தில் இருக்கும், அத்தகைய நிறுவனங்களின் வழிகாட்டுதலின் மூலம் விதையிட்டு(வித்திட்டு) வளர்க்கவும் மற்றும் ஆராய்ச்சிக்கு உதவுதல்;
(c) ஆராய்ச்சியாளர்கள் , அரசாங்கங்கள் மற்றும் தொழில்துறையின் தொடர்புடைய கிளைகளுக்கு இடையேயான ஒரு பாலமாக செயல்படுதல் , இதனால் ஆராய்ச்சி அறிஞர்கள் மிக அவசரமான தேசிய ஆராய்ச்சிச் சிக்கல்களைத் தொடர்ந்து அறிந்துகொள்வதுடன், கொள்கை வகுப்பாளர்களும் சமீபத்திய ஆராய்ச்சி முன்னேற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வார்கள் ;இதை கருத்தில் கொண்டு கொள்கை வகுத்தலிலும் இந்த முன்னேற்றங்களை கொண்டு வர அனுமதித்தல் ;
(d) சிறந்த ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அங்கீகரித்தல்
18. உயர்கல்விக்கான ஒழுங்குமுறை விதிகளை மாற்றி அமைத்தல்
18.1 உயர் கல்வியின் விதிமுறைகளை ஒழுங்குபடுத்தல் கடந்த பத்து ஆண்டுகளாக மிகக் கடுமையான போக்கில் உள்ளது. பல விதிகளை மிகக் குறைந்த விளைவுடனே ஒழுங்குபடுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இயந்திரத்தன்மை மற்றும் அடிமைத்தனம் போன்ற இயல்புகளைக் கொண்ட இவ்வொழுங்கு முறை அமைப்பானது பரவலான சில அடிப்படைப் பிரச்சனைகளான கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிகாரத்தன்மை குறிப்பிட்ட அமைப்புகளிடம் தேங்கியிருந்தது போன்றவற்றால் இதனின் செயல்பாடுகள் முற்றுப்பெறாமலும் பொறுப்பற்றத் தன்மையுடனும் இருந்தது. உயர் கல்வித் துறையை புதுப்பிக்கவும் செழிப்பூட்டவும் இந்த ஒழுங்குமுறை அமைப்பினை மாற்றி அமைத்தல் மிகவும் அவசியமாகிறது.
18.2 மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உயர் கல்வி ஒழுங்கு முறை அமைப்பினை முறைப்படுத்துதல், அங்கீகாரம், நிதி மற்றும் தர நிர்ணய அமைப்பு ஆகியவற்றைத் தனித்து இயங்கக்கூடிய அளவில் சுய அதிகாரமுள்ள அமைப்புகளால் நிர்வகிக்கப் படுமாறு மாற்றியமைக்கப்படும். இவையெல்லாம் இவ்வொழுங்கு முறை அமைப்பினை சமநிலைப் படுத்தவும், சிக்கல்களைக் குறைக்கவும், அதிகாரத்தன்மை ஒரே அமைப்பில் தேங்கிவிடாமலிருக்கவும் வழிவகை செய்கிறது. இப்புதிய நான்கு செயல்பாடுகளைச் செய்யக்கூடிய நான்கு புதிய கட்டமைப்புகள் தனித்து இயங்கினாலும் பொதுவான இலக்குகளை நோக்கி ஒத்துழைப்புடன் செயல்படும். இந்த நான்கு புதிய கட்டமைப்புகளும் தனித்தனிப் பிரிவென்றாலும் HECI என்னும் ஒரு குடையின் கீழ் இயங்கும்.
18.3 HECI யின் கீழ் முதல் பிரிவானது தேசிய உயர் கல்வி ஒழுங்குமுறை சபையாகும் (NHERC – National Higher Education Regulatory Council). இது பொதுவான அமைப்பாக இயங்குவதோடல்லாமல், சட்டம் மற்றும் மருத்துவக் கல்வியை தவிர்த்து, ஆசிரியப் பயிற்சி மற்றும் இன்னபிற உயர்கல்விக்கான பொதுவான ஒரே ஒழுங்குமுறை அமைப்பாகச் செயல்படுவதன் மூலம் இதுவரை இயங்கி வந்த பலதரப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் தேவையற்ற சுழல் முயற்சிகளை நீக்குகின்றது. NHERC ஒரு தனிப்பட்ட அமைப்பாக இயங்குவதற்கு இதுவரை செயல்பட்டு வந்த பலதரப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளை மறுபரிசீலனை செய்ய நேரிடும். ஒரு ‘இலகுவான ஆனால் இறுக்கமான‘ மற்றும் வசதியான முறையில் ஒழுங்குபடுத்த NHERC அமைக்கப்படும்; அதாவது நிதி நிகழ்தகவு, நல்லாட்சி மற்றும் அனைத்து நிதி, தணிக்கை, நடைமுறைகள், உள்கட்டமைப்பு பற்றிய முழு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பொது சுய வெளிப்பாடு , ஆசிரிய / ஊழியர்கள், படிப்புகள் மற்றும் கல்வி முடிவுகள் போன்ற சில முக்கியமான விஷயங்கள் மிகவும் திறம்படக் கட்டுப்படுத்தப்படும்.. இதுகுறித்து புதுப்பிக்கப்பட்டத் துல்லியமான அனைத்துத் தகவல்களும் NHERCயின் பொது வலைத்தளத்திலும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுதல் வேண்டும். வழங்கப்பட்ட தகவல்களில் பயன்பாட்டாளர்கள் ஏதேனும் குறைகளோ அல்லது புகார்களையோ எழுப்பினால் அவை உடனடியாக NHERC-யின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுத் தீர்வு காணப்படும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்படத் தோராயமாகத் தேர்வு செய்யப்பட்ட சில மாணவர்களிடம் குறிப்பிட்ட இடைவேளையில் நிகழ்நிலை கருத்துகள் கோரப்பட்டு தகவல்களின் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படும்.
18.4 இத்தகைய ஒழுங்கு முறைகள் இயங்குவதற்கான முதன்மை வழிமுறை தரநிர்ணயம் அல்லது அங்கீகாரமாகும். HECIயின் இரண்டாவது பிரிவாகத் தர நிர்ணய அமைப்பாக விளங்கக்கூடிய ‘தேசியத் தர நிர்ணயச் சபை’ (NAC – National Accreditation Council) விளங்கும். தர நிர்ணயம் அல்லது அங்கீகாரம் வழங்குவதற்கு முதன்மை அடிப்படை விதிமுறைகளாய் பொது சுய வெளிப்பாடு, சிறந்த ஆளுகை மற்றும் நற்பலன்கள் (பண்புகள்) ஆகியவை முன்னிறுத்தப்படும். தரமதிப்பீடானது NACயின் மேற்பார்வையில் இயங்கும் பலதரப்பட்ட அமைப்புகளால் வழங்கப்படும். இவ்வாறு தரமதிப்பீடு வழங்குவதற்கான உரிமையை NAC சில அமைப்புகளுக்கு வழங்கும். சுருக்கமாக அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தரம், தன்னாட்சி, சுய நிர்வாகம் ஆகியவற்றிற்கான அளவுகோல்களை நிர்ணயிக்கும். அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் IDP மூலம் உயர்ந்தபட்சத் தரமதிப்பீட்டினை அடுத்த 15 ஆண்டுகளில் அடைவதனால் சுய நிர்வாகம் செய்யக்கூடிய மற்றும் பட்டமளிக்கத் தகுதி பெற்ற நிறுவனங்களாக மாற்றி அமைக்கப்படும். நீண்ட கால ஓட்டத்தில் தற்போதுள்ள உலகளாவிய நடைமுறையின்படி தரமதிப்பீடு என்பது ஈரிணையான செயல்முறையாக மாறும்.
18.5 HECI யின் மூன்றாவது பிரிவாக உயர் கல்வி மானியச் சபை (HEGC – Higher Education Grants Council) செயல்படுவதன் மூலம், கல்வி நிறுவனங்கள் அளிக்கக்கூடிய IDP திட்டங்களுக்கும் உயர்கல்விக்குமான நிதி மற்றும் கடனுதவி வெளிப்படைத் தன்மையோடு அளிக்கப்படும். HEGCயிடம் உதவித் தொகைகளைப் பிரித்துத் தருதல், உயர்கல்வி நிறுவனங்களில் பல்துறை சார்ந்தத் தரமான நிகழ்வுகள் மற்றும் மேம்பாட்டிற்கான நிதியை உருவாக்குதல் முதலிய பொறுப்புகளும் வழங்கப்படும்..
18.6 HECI யின் நான்காவது பிரிவாக பொதுக் கல்விச் சபை (GEC – General Education Council) செயல்படும். இதன் மூலமாக வடிவமைக்கப்பட்ட உயர்கல்வி திட்டங்களுக்கான நற்பலன்கள் அல்லது முடிவுகள், பட்டதாரி எனக் குறிப்பிடப்படுவதற்கான பண்புக்கூறுகள் வரையறுக்கப்படும். GEC யால் உருவாக்கப்படும் தேசிய உயர் கல்வித் தகுதி கட்டமைப்பு (NHEQF – National Higher Education Qualification Framework) மற்றும் தேசியத் திறன் தகுதி கட்டமைப்புடன்(NSQF – National Skills Qualifications Framework ) இணைந்து செயல்படுவதன் மூலம் தொழில்முறை கல்வியை உயர்கல்வியுடன் ஒருங்கிணைத்தல் சாத்தியப்படும். பட்டையப் படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் சான்றிதழ் கல்வி ஆகிய உயர்கல்விக்கான நற்பலன்கள் அல்லது முடிவுகள் NHEQF ஆல் விவரிக்கப்படும். 21ஆம் நூற்றாண்டுக்கு தேவையான அனைத்துத் திறன்களையுடைய மாணவர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, GECயானது கல்வி பயிலும் மாணவர்களுக்கு துறை சார்ந்தத் திறன்களைச் சோதனை செய்யும்.
18.7 தற்போது நடைமுறையிலுள்ள இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் (ICAR – Indian Council for Agricultural Research), கால்நடை மேம்பாட்டுக் கழகம் (VCI – Veterinary Council of India), தேசிய ஆசிரியர் பயிற்சிக் கழகம் (NCTE – National Council for Teacher Education), கட்டிடக்கலைக் கழகம் (கோ CA – Council of Architecture), தேசியத் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக் கழகம் (NCVET – National Council for Vocational Education and Training) ஆகியவை தொழிற்கல்வித் தர நிர்ணய அமைப்புகளாக (PSSB – Professional Standard Setting Bodies) செயலாற்றும். மேற்கண்ட அமைப்புகள் உயர்கல்வி வளர்ச்சிக்காக முக்கிய பங்காற்றுவதுடன் GECயின் உறுப்பினர்களாகவும் இணைந்து செயலாற்றும். இவ்வமைப்புகள் தொடர்ந்து கல்வித் தரத்தினை உயர்த்தவும், பயிற்றுவித்தல் மற்றும் ஆராய்ச்சி இரண்டினையும் ஒருங்கிணைத்துச் செயல்படவும் வழிவகை செய்யும். துறை சார்ந்த கல்விக்கான தரமான பாடத்திட்டங்களைத் தயார் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடும். எல்லா உயர் கல்வி நிறுவனங்களும் தங்களால் வகுக்கப்பட்ட கல்வித் திட்டங்கள் எந்தளவிற்குத் தர நிர்ணயத்தோடு ஒத்துப்போகின்றது என்பதனையும் தேவைப்பட்டால் உதவி கோரவும் PSSBயின் உதவியினை நாடும்.
18.8 இவ்வாறான வடிவமைப்பின் மூலம் பல்வேறு அமைப்புகளுள் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் களையப்படும். உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதல்லாமல் மிக அவசியமான சில விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தப்படுகின்றதா என்பதினை இவ்வடிவமைப்பு உறுதி செய்யும். அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பொறுப்புடன் செயல்படுவது உறுதி செய்யப்படும். இதில் பொது மற்றும் தனியார்க் கல்வி நிறுவனங்களுக்கு இடையே எவ்விதப் பாகுபாடும் காட்டப்படாது.
18.9 இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்கனவே இருக்கக்கூடிய கட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு முற்றிலும் வேறு வகையான பரிணாமத்திற்கு மாற முற்படும். இப்புதிய ஒழுங்குமுறைத் திட்டத்தில் HECI யின் மேற்பார்வையில் வரக்கூடிய அனைத்துப் பிரிவும் தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட அர்த்தமுள்ள பங்கினை வகிக்கும்.
18.10 ஒழுங்குமுறைக்கான சுயாதீன அமைப்பாகச் செயல்படும் (NHERC) , அங்கீகாரம் (NAC), நிதி (HEGC) மற்றும் கல்வித்தர நிர்ணயம் (GEC), மற்றும் இவற்றுக்கு குடையாகச் செயல்படும் (HECI) நிறுவனமும் தொழில்நுட்ப துணை கொண்டு மனித இடைமுகம் இல்லாமல் வெளிப்படையாகச் செயல்படும். இதன் அடிப்படை தொழில்நுட்பம் சார்ந்து வெளிப்படையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அடிப்படை விதிகளையும், தரநிலைகளையும் உயர் கல்வி நிறுவனங்கள் உறுதி செய்யும் விதத்தில் விதிமீறல்களுக்கு தண்டனை முறைகளும் வகுக்கப்படும். HECI அதன் குடையின் கீழ் இயங்கும் நான்கு துறைகளுக்குள் எழும் விவாதங்களைத் தானே நிவர்த்தி செய்யும். HECI ல் நான்கு துறைகளும் சுயதீன தனி அமைப்புகளாக இயங்கும். இவை சிறந்த நிபுணத்துவம் கொண்ட, பொதுநலம் சார்ந்து இயங்கும் பின்புலம் கொண்டவர்களைக் கொண்டு இயங்கும். HECI தானே ஒரு சுயாதீன தனி அமைப்பாகச் செயல்படும். இதில் உயர்கல்வி சார்ந்த பொதுச் சிந்தனை கொண்ட நிபுணர்கள் உள்ளனர், இவர்கள் HECI சிறந்த விதத்தில் செயல்படுவதை மேற்பார்வையிட்டு உறுதி செய்வார்கள் . HECI யின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ப சிறந்த செயல்திட்டங்கள் வகுத்து முடிவுகள் எடுக்கப்படும்.
18.11 புதிய தரமான HEIகளை அமைப்பது ஒழுங்குமுறை ஆட்சியால் மிகவும் எளிதாக்கப்பட்டு, பொதுநல நோக்கம் மற்றும் நீண்ட கால நிதி ஸ்திரத்தன்மையுடன் கூடிய சிறந்தத் தரமான நிறுவனங்கள் உறுதி செய்யப்படும்.. மத்திய மாநில அரசுகளின் துணையுடன் தங்கள் நிறுவனங்களை விரிவாக்கி அதிக பட்ச மாணவர்களை எல்லாப் பாடத்திட்ட வகைகளிலும் சேர்க்கச் சிறந்த முறையில் செயல்படும். உயர்தரமான கல்வி எல்லோரையும் சென்று சேரும் வண்ணம் பொதுநலன் கொண்டவர்களுடன் கூட்டு முயற்சியாகவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.
கல்வி வணிகமயமாவதைக் கட்டுப்படுத்துவது
18.12 பல அடுக்கு சோதனை முறைகள் கல்வி வணிகமயமாக்குவதை எதிர்கொள்ளவும், தடுக்கவும் உதவும். இவையே இந்த ஒழுங்குமுறை அமைப்பின் முதன்மைப் பணியாக இருக்கும். எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே வகையான தரநிர்ணயங்கள் வழங்கப்பட்டு, ‘லாப நோக்கற்ற’ நிறுவனங்களாக நடத்தப்படும். உபரி வருமானம் இருந்தால் அது மீண்டும் கல்வித்துறையிலேயே முதலீடு செய்யப்படும். வணிகரீதியான் அனைத்துச் செயல்பாடுகளும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களின் குறை தீர்ப்புக்குத் தகுந்த முறைகளும் செயல்படுத்தப்படும். NAC வழங்கும் அங்கீகார முறையும் அதற்குத் தகுந்தது போல் செயல்படும். NAC அங்கீகரிக்கும் இந்த முக்கிய பரிமாணங்களை NHERC அதன் ஒழுங்குமுறை செயல்பாட்டுக்கு வழிகாட்டுதலாக எடுத்துக்கொள்ளும்.
18.13. அனைத்து HEIகளும் – பொது மற்றும் தனியார் – ஒர் ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் இணையாக நடத்தப்படும். ஒழுங்குமுறை அமைப்பானது கல்வியில் தனியார் உபகார முயற்சிகளை ஊக்குவிக்கும். தனியார் HEIகளை உருவாக்கும் சட்டமன்ற சட்டங்களை வரைவதற்கு பொதுவான தேசிய வழிகாட்டுதல்கள் நிறுவப்படும். இந்த பொதுவான குறைந்தபட்ச வழிகாட்டுதல்கள் மூலம் தனியார் HEIகள் நிறுவுவதற்கான அனைத்துச் சட்டங்களும் வடிவமைக்கப்பட்டு, தனியார் மற்றும் பொது HEIகளுக்கான பொதுவான தரநிலைகள் செயல்படுத்தப்படும். இந்தப் பொதுவான வழிகாட்டுதல்கள் நல்லாட்சி, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு, கல்வியின் விளைவுகள் மற்றும் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கும்..
18.14. கட்டண நிர்ணய மேம்பட்ட விதிகள் மூலம் பொது நலனில் அக்கறை மற்றும் கொடையாண்மை நோக்கம் கொண்டுள்ள தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். உள்கட்டமைப்பு வசதிகளுக்கேற்றவாறு சான்று/அங்கீகாரம் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்கள், தங்களது அதிகபட்சக் கட்டண வரம்பினை நிர்ணயிக்க வெளிப்படையான வழிமுறைகள் உருவாக்கப்படும். இதனால் எந்தவொரு தனிப்பட்ட நிறுவனத்திற்கும் பாதிப்பு ஏற்படாது, அனுமதிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விதிகளுக்குட்பட்டு தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டங்களுக்குத் தகுந்தாற்போல கட்டணங்களை நிர்ணயித்துக்கொள்ள இது வழிவகை செய்யும். கணிசமான அளவில் தங்கள் மாணவர்களுக்கு இலவசக் கல்வி மற்று கல்வி உதவிகளை வழங்குவதற்குத் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
19. உயர்கல்வி நிறுவனங்களுக்கான திறமையான ஆளுமையும் தலைமைத்துவமும்.
19.1 பயனுள்ள ஆளுமையும், திறம்பட்ட தலைமைப் பண்புமே சிறப்பான மற்றும் புதுமைகள் புகுத்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழிவகுக்கும். நிறுவனங்களின் உறுதியான சுயஆளுமை மற்றும் மிகச்சிறந்த திறமைகளுடைய நிறுவனத் தலைவர்களின் நியமனமுமே இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களின் பொதுவான அம்சமாகும்.
19.2 அடுத்த 15 ஆண்டுகளில் படிப்படியாக, பொருத்தமான முறையில் நிர்ணயிக்கப்படும் தர அங்கீகாரம் மற்றும் தன்னாட்சி தர நிர்ணயத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் சிறப்பான மற்றும் புதுமைகள் புகுத்திய தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்களாக மாற எத்தனிக்கும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் சிறப்பானதாகவும், அதன் தலைவர்கள் சிறப்புத் தகுதிகள் உள்ளவர்களாக இருக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பொருத்தமான தர அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் உயர் மற்றும் நிரூபித்த தகுதிகளுடைய, நிறுவனத்தின்பால் உறுதியான அர்ப்பணிப்பும் உடைய நபர்களைக் கொண்ட ஆளுநர் குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழு எவ்வித வெளித் தாக்கமோ, தலையீடோ இல்லாமல் அந்நிறுவனத்தின் தலைவரை நியமிக்கவும் திறமையான நிர்வாக முடிவுகளை எடுக்கவும் முழு அதிகாரம் வழங்கப்படும். அதிகப்படியான சட்டத்தின் மூலம் பழைய சட்டத்தில் உள்ள முரணான விதிகளைக் களையலாம் மற்றும் அவை நிர்வாகக் குழுவின் அமைப்பு, நியமனம், இயக்க முறைகள், விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள், பொறுப்பு ஆகியவற்றை விளக்குவதாகவும் இருக்கும். ஆளுநர் குழுவின் நிபுணர் குழு அக்குழுவுக்கான புது உறுப்பினர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்வார்கள். அத்தேர்வின் போது அவர்களின் பங்குகளும் பரிசீலித்துக் கருத்தில் கொள்ளப்படும். 2035 ஆம் ஆண்டுக்குள் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் ஊக்கப்படுத்தப்பட்டு, ஆதரிக்கப்பட்டு, வழிகாட்டப்பட்டு தன்னாட்சி அதிகாரம் பெற்றுச் செயல்பட வழிவகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
19.3 ஆளுநர் குழுவே பங்குதாரர்கள் தொடர்புடைய ஆவணங்களின் வெளிப்படைத் தன்மைக்கு பொறுப்பாவார்கள். அவர்களே தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை சபை வழியாக இந்திய உயர்கல்வி ஆணையம் கட்டாயப்படுத்தும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
19.4 கல்வியில் சிறந்து விளங்கி, தலைமைப் பண்பு மற்றும் நிர்வகிக்கும் திறனோடு சிக்கலான நிலைமையை கையாளும் திறமையுடைய நபர்களுக்கே தலைமைப் பொறுப்பு மற்றும் நிறுவன தலைமைப் பொறுப்பு வழங்கப்படும். உயர்கல்வி நிறுவனத்தின் தலைவர்கள், அரசியலமைப்பையும் நிறுவனத்தின் நோக்கையும் இணைப்பதை வெளிப்படுத்தி, உறுதியான சமுதாய அர்ப்பணிப்பு, குழுப்பணியில் நம்பிக்கை, பன்முகத்தன்மை, வேறுபட்ட நபர்களுடன் பணியாற்றும் திறன் மற்றும் நேர்மையான கண்ணோட்டமும் கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட தலைவர்களின் தேர்வு கடுமையானதாகவும், நடுநிலையோடும், தகுதி மற்றும் திறன் அடிப்படையிலானதாகவும் ஆளுனர் குழுவின் சிறந்த நிபுணர் குழுவால் நடத்தப்படும். பதவி காலத்தின் ஸ்திரத்தன்மை நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு முக்கியம் என்றாலும் தலைமை மாற்றம் வேண்டியபோது அதனை மிக கவனமாக திட்டமிட்டு நிறுவனத்தின் நல செயல்பாடுகள் உறுதிபடுத்தப்பட வேண்டும்; அத்தலைமை மாற்றம் இடைவெளி இன்றி உடனுக்குடன் நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தலைமைப் பொறுப்பினை எதிர் காலத்தில் ஏற்க தகுதியானவர்களை கணித்து முன்காட்டியே அவர்களை அதற்காக தயார்ப்படுத்த வேண்டும்.
19.5 அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் போதுமான நிதி, சட்டம் இயற்றும் அதிகாரம் மற்றும் படிப்படியாகத் தன்னாட்சி உரிமை வழங்குவதன் மூலம் அவை உள்ளூர் சமூகத்துடன் ஈடுபடவும், தங்கள் அமைப்பை மேம்படுத்திக் கொள்ளவும், நிதியை பொறுப்புடன் கையாளவும் முடியும். ஒவ்வொரு நிறுவனமும் தாங்களே தங்களின் குழு உறுப்பினர்கள், நிறுவன தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்தத் தொடங்கி, அச்செயல்முறையை மதிப்பிட்டு, இலக்கினை அடைவதன் மூலம் மேலும் பொது நிதி பெறுவதற்கு வழிவகுக்கும்.
பகுதி III. இதர முக்கிய கவனப்பகுதிகள்
20. தொழிற்கல்வி
20.1 தொழிற்கல்வியில் வல்லுநர்களை உருவாக்கும் முயற்சிக்கு உறுதுணையாக, பொதுமக்களுக்கான முக்கியத்துவம், தொழில் தர்மம், துறைசார்ந்த கல்வி & செயல்பாட்டுமுறைக்கான முக்கியத்துவமுள்ள கல்வி, இவையனைத்தையும் உள்ளடக்கிய கல்விமுறை அவசியமாகும். மேலும், இக்கல்விமுறையானது இடைநிலை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சிந்தனைகள், தொழில் சார்ந்த கலந்துரையாடல்கள், ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றை ஊக்குவிக்கவேண்டும். இந்தக்குறிக்கோளை அடையவேண்டுமென்றால் தொழிற்கல்வியானது, குறிப்பிட்ட ஒரு தனித்துறையோடு மட்டும் முடிந்துவிடக்கூடாது.
20.2. இதனால் தொழிற்கல்வியானது, உயர்கல்வியை முழுமைப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான அங்கமாகிவிட்டது. எனவே தற்சார்பு விவசாயப் பல்கலைக்கழகங்கள், சட்டம் சார்ந்த பல்கலைக்கழகங்கள், மருத்துவப் பல்கலைக்கழகங்கள், தொழிற்கல்விப் பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர துறைகளுக்கான தற்சார்பு பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் இனி பல்துறைக் கல்விகளுக்கான கல்விக்கூடங்களாக மாற்றுவதற்கான குறிக்கோள்கள் நிர்ணயிக்கப்படும். தொழிற்கல்வி அல்லது இதரகல்விகளை வழங்கும் அனைத்துக் கல்விக்கூடங்களும், இனி அனைத்து துறைகளுக்குமான கல்வியையும் தொய்வில்லாமல் வழங்கும் கல்விக்கூடங்களாக 2030ம் ஆண்டுக்குள் மாற்றுவதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
20.3 விவசாயக்கல்வி தொடர்புடைய அனைத்துத்துறைகளும் புதுப்பிக்கப்படும். விவசாயம் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் இந்திய அளவில் 9% சதவிகிதமாக இருந்தாலும், ஒட்டுமொத்த உயர்கல்விக்கான மாணவர்சேர்க்கையுடன் ஒப்பிடும்போது 1% சதவிகித மாணவர்களே விவசாயம் தொடர்புடைய உயர்கல்விகளில் சேர்கிறார்கள். எனவே விவசாய உற்பத்தியை அதிகரிக்க, திறன் வாய்ந்த தொழில்நுட்பப் பணியாளர்களையும், பட்டதாரிகளையும் உருவாக்க விவசாயம் சார்ந்த கல்விகளின் திறனும் தரமும் கட்டாயம் மேம்படுத்தப்படும். இத்துடன் துறைசார் ஆராய்ச்சிகளும், சந்தைப்படுத்துதலுக்கான தொழில்நுட்பங்களும், செயல்முறைகளும் உட்படுத்தப்படும். விவசாயம் மற்றும் கால்நடைத்துறைகளுக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்க பொதுக்கல்விமுறையில் பல திட்டங்கள் கூர்ந்து கவனித்து அதிகரிக்கப்படும். விவசாயக்கல்வியினை திட்டமிடுதலில், அடுத்தக்கட்டமாக திறமையான வல்லுநர்களை உருவாக்குதல், நம் நாட்டின் பாரம்பரியமுறைகள் மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை உட்புகுத்துதல் உட்பட அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும். மேலும் மாறிவரும் நிலத்தின் தன்மைகள், சுற்றுச்சூழல் மற்றும் வானிலை மாற்றங்கள், வளர்ந்து வரும் நம் மக்கள்தொகையின் உணவுத்தேவைகள் என அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும். விவசாயக்கல்வியைக் கற்றுத்தரும் கல்விக்கூடங்கள் நேரடியாக அந்தந்தப்பகுதிகளின் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் அமைக்கப்படும். சுற்றுச்சூழலைப் பேணுகின்ற வகையிலும், தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் வகையிலும், விவசாயக் தொழில்நுட்பப்பூங்காக்கள் அமைக்கப்படும்.
20.4. இனிவரும் நாட்களில் சட்டப்படிப்புகள் சர்வதேசத்தரத்தில் அமையவேண்டும், சிறந்த முறைகளை உள்வாங்கும் வகையிலும், தாமதிக்காமல் நீதி வழங்கத்தேவையான புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கும் வகையிலும் அமையவேண்டும். அதே நேரத்தில், நமது நாட்டின் சட்டதிட்டங்களையும், நீதிப்பண்புகளையும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தன்மைகளையும், மனித உரிமைகளையும் கருத்தில் வைத்து தேசிய மறுகட்டமைப்பை ஜனநாயக முறைப்படி முன்னெடுக்கவேண்டும். சட்டப்படிப்புகளின் பாடத்திட்டங்களில், சமூக மற்றும் கலாச்சாரம் சார்ந்த விளக்கங்களும், தரவுகள் சார்ந்த வகையில், சட்டம் தொடர்பான வரலாற்றுச்சிந்தனைகளுடன், நீதிக்கான நியதிகள், சட்டவியலுக்கான பயிற்சி மற்றும் இன்னபிற தேவையான அனைத்து விளக்கங்களும் சேர்க்கப்படும். சட்டக்கல்வியை வழங்கும் மாநிலங்கள் எதிர்கால வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளைக் கருத்தில்கொண்டு இருமொழிக்கொள்கையைப் பின்பற்றவேண்டும். இருமொழிக்கொள்கையில் முதலாவதாக ஆங்கிலமும், இரண்டாவதாக அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியும் இருக்கவேண்டும்.
20.5 மருத்துவம் & சுகாதாரத்துறை கல்வியானது அதன் கட்டமைப்பு, வடிவமைப்பு மற்றும் அதன் பட்டதாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பான எதிர்பார்ப்புகளுக்கான கல்வித் திட்டங்கள் இவற்றை பொறுத்து மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆரம்ப சுகாதார பராமரிப்பு மையங்கள் மற்றும் இரண்டாம் கட்ட சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கேற்றவாறு மருத்துவ மாணவர்கள் குறித்த கால இடைவெளியில். நன்கு வரையறுக்கப்பட்ட காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவார்கள். மக்களுக்கு பல்வேறு மருத்துவ முறைகளுக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கேற்றவாறு, நமது மருத்துவ கல்வி திட்டமானது அனைத்துத் துறைகளுடன் ஒருங்கிணைந்த வகையில் செயல்படுத்த வேண்டும். அலோபதி மருத்துவக்கல்வியில் ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளின் (AYUSH) அடிப்படை புரிதல் பற்றிய கல்வியும் அதே போல் ஆயுஷ் பாடத்திட்டத்தில் அலோபதி பற்றிய அடிப்படை பாடத்திட்டமும் பயிற்றுவிக்கப்படும். அனைத்து வகையான மருத்துவ படிப்புகளிலும் நோய்தடுப்பு & சமூக மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
20.6. தொழிற்கல்வியானது பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டிடக்கலை, நகர திட்டமிடல், மருந்தகம், உணவக மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பம் போன்றவற்றில் பட்டம் மற்றும் டிப்ளோமா படிப்புகளை உள்ளடக்கியது, அவை இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியமானவை. இந்தத் துறைகளில் திறன்வாய்ந்த மனிதவளத்திற்கான அதிக தேவை இருக்கும் என்பது மட்டுமல்லாமல், இந்தத் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியைத் தூண்டுவதற்கு தொழில் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையில் நெருக்கமான ஒருங்கிணைப்பு தேவைப்படும். மேலும், மனித முயற்சியினால் தொழில்நுட்பத்தின் செல்வாக்கு தொழில்நுட்பக் கல்வி மற்றும் பிற துறைகளுக்கும் இடையிலான குழப்பங்களை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தொழில்நுட்பக் கல்வி பலதரப்பட்ட தொழில் கல்வி நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்குள் வழங்கப்படுவதுடன் மற்ற துறைகளுடன் ஆழமாக ஈடுபடுவதற்கான வாய்ப்புகளில் புதுமையான கவனம் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும். இந்தியாவாவில் செயற்கை நுண்ணறிவு (AI), 3-D எந்திரம், பெரிய தரவு பகுப்பாய்வு (Big Data) மற்றும் இயந்திரக் கற்றல், மரபணுவியல், உயிர் தொழில்நுட்பவியல், நானோ தொழில்நுட்பம் , நரம்பியல், உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வாழ்க்கைக்கான முக்கியமான பயன்பாடுகளை தரக்கூடிய துறைகளில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக இளங்கலை கல்வியியல் துறைகள் இணைக்கப்படும்.
21. வயதுவந்தோர் கல்வி மற்றும் வாழ்நாள் முழுமைக்குமான கற்றல்
21.1 அடிப்படைக் கல்வியறிவு, கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை தொடர்வதற்கான வாய்ப்பு எல்லா குடிமக்களுக்கும் அடிப்படை உரிமையாக பார்க்கப்படவேண்டும். கல்வியறிவு மற்றும் அடிப்படைக் கல்வி , தனிநபர், குடியுரிமை, பொருளாதாரம் மற்றும் வாழ்நாள் கற்றலுக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. அவ் வாய்ப்புகளைக் கொண்டு , தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியாகவும் ஒருவர் முன்னேற முடியும். கல்வியறிவு மற்றும் அடிப்படைக் கல்வி ஊக்க சக்தியாக செயல்பட்டு, சமூகம் மற்றும் நாட்டின் அனைத்து வளர்ச்சி முயற்சிகளையும் வெற்றியடையும் வாய்ப்பினையும் பெரிதும் மேம்படுத்துகிறது.
21.2 இதற்கிடையில், கல்லாதவர்களின் சிக்கல்கள் கீழ்வருமாறு இருக்கின்றன : அடிப்படையான பணப் பரிவர்த்தனைகளை செய்வதில் சிரமம்; வசூலிக்கப்பட்ட விலைக்கு ஏற்ற பொருட்களின் தரம் மற்றும் அளவை ஒப்பீடு செய்யும் திறன் இல்லாமை ; வேலை, கடன் மற்றும் இதர சேவைகளுக்காக விண்ணப்பிக்க தேவையான படிவங்களை பூர்த்தி செய்ய இயலாமை ; செய்திகளில் வெளிவரும் பொதுமக்களுக்கான சுற்றறிக்கைகளையும் கட்டுரைகளையும் புரிந்து கொள்ள இயலாமை; தம் வணிகத்துக்கு தொடர்பான மின்னஞ்சல்களை அனுப்ப இயலாமை ; இணையம் மற்றும் மற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தம் வாழ்க்கையையும் தொழிலையும் மேம்படுத்த இயலாமை; சாலைகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு உத்தரவுகள் மற்றும் மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு உத்தரவுகளையும் மற்ற தளங்களின் வழிகாட்டுதல்களை புரிந்து கொள்ள இயலாமை ; தம் குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவி செய்ய இயலாமை; இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி அறிந்து கொள்ள இயலாமை; இலக்கியப் படைப்புகளைப் புரிந்து ரசித்து பாராட்டும் திறன் இல்லாமை; கல்வியறிவை சார்ந்து இயங்கும் நடுத்தர மற்றும் அதிக திறனை எதிர்பார்க்கும் துறைகளில் வேலைவாய்ப்பைத் தொடர இயலாமை; மேற்சொன்ன பட்டியலின் திறன்கள் அனைத்தையும், வயதுவந்தோர் கல்வியில் புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் மட்டுமே அடைய முடியும்.
21.3 . அரசியல் மற்றும் பல்வேறு நிறுவனக் கட்டமைப்புகளின் விருப்பம், சரியான திட்டமிடல், தேவையான நிதி உதவி , கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூகமும் ஈடுபாட்டுடன் பாடுபடுவதே இந்த வயது வந்தோர்க்கான கல்வித் திட்டம் வெற்றியடைய வழிவகுக்கும் என இந்தியா மற்றும் உலகளவில் நடந்தேறிய பல்வேறு கள ஆய்வுகளும் பகுப்பாய்வுகளும் பறைசாற்றுகின்றன. வெற்றிகரமான கல்வியறிவு திட்டங்கள் வயது வந்தோருக்கான கல்வியறிவை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் இருக்கும் குழந்தைகளிடையேயும் கல்விக்கான தேவையை அதிகரித்து சமூகத்தில் நேர்மறையான ஒரு மாற்றத்திற்கு வழி வகுக்கிறது. 1988 இல் தொடங்கப்பட்ட தேசிய எழுத்தறிவுத் திட்டம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களின் ஈடுபாடு மற்றும் மக்களின் ஆதரவிலுமே இயங்கி வந்தது. இந்த திட்டம் 1911 – 2011 காலகட்டத்தில் தேசிய எழுத்தறிவு சதவிகிதத்தை அதிகப்படுத்தியதோடு பெண் கல்வியிலும் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. மேலும் அன்றைய சமூக பிரச்சினைகளைப் பற்றிய உரையாடல்களும் விவாதங்களும் நடைபெற வழிவகுத்தது.
21.4 வயது வந்தோரின் கல்விக்கான வலுவான மற்றும் புதுமையான அரசாங்க முயற்சிகள் சமூக ஈடுபாடு மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புடன், 100% கல்வியறிவு என்னும் இலக்கை துரிதமாக அடைய ஏதுவாக இருக்கும்.
21.5. முதலாவதாக, வயது வந்தோருக்கான ஒரு சிறந்த கல்வி திட்ட கட்டமைப்பை, NCERTயின் வயது வந்தோருக்கான கல்விக்கென புதிதாக மற்றும் ஆதரவுடன் கூட்டப்பட்ட அமைப்பு உருவாக்கும். இது தற்போதைய கட்டமைப்புடன் ஒன்றி, கல்வியறிவு, கணிதம், அடிப்படைக் கல்வி, தொழில்திறன் மற்றும் பலவற்றிற்கான சிறந்த கட்டமைப்பாய் உருவாகும். தெளிவாகவரையறுக்கப்பட்ட அடைவுகளைக்கொண்ட குறைந்தது ஐந்து திட்டங்கள் இந்த புதிய கல்வித் திட்ட கட்டமைப்பில் அடங்கியிருக்கும்.
அ) அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணறிவு.
ஆ) அத்தியாவசியமான் வாழ்க்கைத் திறன்கள் ( பொருளாதார கல்வியறிவு, டிஜிட்டல் கல்வியறிவு, வணிகத் திறன், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும், குழந்தை பராமரிப்பும் கல்வியும், குடும்ப நலன் )
இ) தொழில் திறன் மேம்பாடு ( உள்ளுர் வேலைவாய்ப்பை பெறும்பொருட்டு)
ஈ) அடிப்படை கல்வி (ஆயத்த , நடுநிலை மற்றும் இரண்டாம் நிலை)
உ) தொடர்கல்வி (கலை, அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு, அதிமுக்கிய வாழ்க்கைத்திறன்களான இன்ன பிற தலைப்புகள் அல்லதுஉள்ளூர் கற்றலுக்கான தலைப்புகள் )
குழந்தைகளுக்கான கற்பித்தல் கற்றல் முறைகள் மற்றும் உபகரணங்களைவிட வயது வந்தோருக்கான கற்பித்தல் கற்றல் முறைகள் மற்றும் உபகரணங்கள் மாறுபட்டிருக்குமென்பதை இக்கல்வி திட்ட கட்டமைப்பு நினைவில் கொண்டிருக்கும்.
21.6, இரண்டாவதாக, விருப்பமுள்ள வயதுவந்தோர் அவர்களுக்கான கல்வி மற்றும் வாழ்நாள் கற்றலை தொடர ஏதுவான உள்கட்டமைப்பு உறுதிசெய்யப்படும். பள்ளி வகுப்புகள் முடிந்த பின்பு பள்ளி வளாகத்தையும் பொது நூலகத்தையும் வயது வந்தோரின் கல்விக்காகவும், மற்ற சமூகக் கூடல்களுக்காகவும், முன்னேற்றம் தரும் திட்டங்களுக்காகவும், தொழில்நுட்ப உபகரணங்களுடன் (ICT-equipped) கூடிய அறைகளாக மாற்றப்படும். பள்ளி, உயர்கல்வி, வயது வந்தோருக்கான கல்வி, தொழிற்கல்வி மற்றும் சமூகம் சார்ந்த தன்னார்வ திட்டங்கள் என அனைத்திற்கும் பள்ளியின் கட்டமைப்பை பகிர்வதனால் இடம் மற்றும் மனித வளத்தை சிறப்பாக கையாள முடியும். மேலும் ஐந்து வகையான கல்வி முறைக்கு ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கும். இந்த காரணங்களுக்காக, HEI மற்றும் தொழிற்பயிற்சி மையங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களுடன் வயதுவந்தோர் கல்வி மையங்களையும் இணைக்கலாம்.
21.7 மூன்றாவதாக, வயது வந்தோருக்கான கல்வி பாடத்திட்ட கட்டமைப்பில் சொல்லப்பட்ட ஐந்து வகையான கல்வியை, வயது முதிர்ந்த கற்பவர்களுக்கு ஏற்றவாறு நடத்துவதற்கு பயிற்றுவிப்பாளர்கள் /கல்வியாளர்கள் தேவைப்படுவர். வயது வந்தோர் கல்வி மையங்களில் கற்றல் வழிமுறைகளை தொடங்கவும்,ஒருங்கிணைத்து நடத்தவும் மற்ற தன்னார்வ பயிற்றுவிப்பாளர்களுடன் ஒருங்கிணைக்கவும், இந்த பயிற்றுவிப்பாளர்களுக்கு தேசிய, மாநில மற்றும் மாவட்டங்களுக்கு ஏற்றவாறு ஆதரவு தரும் நிறுவனங்களால், பயிற்சி அளிக்கப்படும். HEI இன் தகுதியான உறுப்பினர்கள் ,தங்களின் உள்ளூர் சமூகத்துடன் இணைந்து ஒரு சிறிய பயிற்சியை அளிக்கவோ, தன்னார்வ வயது வந்தோருக்கான கல்வியறிவு பயிற்றுவிப்பாளராக தொண்டு செய்யவோ, ஒருவருக்கு மட்டுமேயான தன்னார்வ ஆசிரியராகவும் தொண்டு செய்வதே நாட்டின் அத்தியாவசியமான சேவையாக அங்கீகரிக்கப்படும். வயது வந்தோருக்கான கல்வியறிவு மற்றும் கல்விக்காக மாநில அரசு தனியார்த் தொண்டு நிறுவனங்களுடனும் மற்ற சமூகம் சார்ந்த நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படும்.
21.8 நான்காவதாக, வயது வந்தோருக்கான கல்வியில் சமூக உறுப்பினர்களின் பங்களிப்பும் இருக்குமாறு உறுதிசெய்யப்படும். தங்கள் சமூகத்தில் பயணிக்கும் சமூகப் பணியாளர்கள் ஆலோசகர்கள் மூலம், பதிவு செய்யப்படாத மாணவர்கள் மற்றும் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத மாணவர்கள் பற்றிய கணக்கெடுத்து அவர்களை பங்கேற்க வைக்க வலியுறுத்தப்படும். கற்பவர்களாகவோ, ஆசிரியர்களாகவோ இருக்க விருப்பம் கொள்ளும் பெற்றோர்கள், இளம்பருவத்தினர் பற்றிய விவரங்களையும் சேகரிக்க வலியுறுத்தப்படும். சமூகப் பணியாளர்கள் உள்ளூரில் உள்ள வயதுவந்தோர் கல்வி மையங்களுடன் தொடர்பு கொண்டு பணிபுரிய வேண்டும். வயது வந்தோருக்கான கல்வி வாய்ப்புகள் பற்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் பரவலாக விளம்பரமாகவோ அறிவிப்புகளாகவோ விளம்பரப்படுத்தப்படும்.
21.9 ஐந்தாவதாக , நம் சமூகம் மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்க, புத்தகங்களை அனைவருக்கும் கிடைக்கும் படியாகவும் அனைவரும் எடுத்துப் படிக்கும்படி ஏதுவாகச் செய்ய வேண்டும். அனைத்துச் சமூகம் கல்வி சார்ந்த நிறுவனங்கள் பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது நூலகங்கள் அனைத்திற்கும் மாணவர்களின் எல்லா விருப்பத்திற்கு ஏற்பவும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பவும், புத்தகங்கள் கிடைக்க இந்தக் கொள்கை வழிவகை செய்யும். சமூக பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பகுதிகள் மற்றும் அனைத்துக் கிராமப்புற பகுதிகளுக்கும் புத்தகங்கள் அணுக கூடியதாகவும் மலிவு விலை கொண்டதாகவும் அமைய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும். அனைத்து இந்திய மொழிகளில் வெளிவரும் புத்தகங்களின் தரத்தையும் அதன் கவரும்தன்மையையும் மேம்படுத்த பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் உத்திகளை வகுக்கும். இணையவழியில் புத்தகங்களைப் பெற, டிஜிட்டல் நூலகங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சமூக மற்றும் கல்வி நிறுவனங்களில் சிறப்பான நூலகங்களை எடுத்து நடத்திட போதுமான நூலக ஊழியர்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களுக்கு பொருத்தமான வேலை பற்றிய பாதைகளையும் CPD உருவாக்க வேண்டும். தற்போது உள்ள நூலகங்களை வலுப்படுத்துவது, கிராமப் புற நூலகங்களை அமைப்பது, பின்தங்கிய பகுதிகளில் வாசிப்பு வரையறைகளை அமைப்பது, இந்திய மொழிகளில் வாசிப்பு உபகரணங்கள் பரவலாகக் கிடைக்கச் செய்வது, குழந்தைகள் நூலகம், நடமாடும் நூலகம் அமைப்பது, தேசிய அளவில் சமூக புத்தக கிளப்புகளை நிறுவி பல்வேறு பாடத்திட்டத்தில் புத்தகங்களை அறிமுகப்படுத்துவது, கல்வி நிறுவனங்கள் மற்றும் நூலகங்களுக்கு இடையில் அதிக ஒத்துழைப்பு வளர்ப்பது போன்ற நடவடிக்கைகளும் இத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும்.
21.10 இறுதியாக மேற்கூறிய முயற்சிகளை வலுப்படுத்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். தரமான தொழில்நுட்பத்தாலான செயலிகள், ஆன்லைன் புத்தகங்கள், செயற்கைக்கோள் சார்ந்த தொலைக்காட்சி சேனல்கள், ICT பொருத்தப்பட்ட நூலகங்கள் மற்றும் வயதுவந்தோர் கல்வி மையங்கள் போன்ற பலவும் அரசு மற்றும் பரோபகார முயற்சிகள் மூலமும், பொதுமக்கள் உதவி , மற்றும் பல்வேறு போட்டிகளின் மூலமாகவும் நிறுவப்படும்.
22. இந்திய மொழிகள், கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துதல்
22.1 இந்திய நாடு ஒரு விலைமதிப்பற்ற புதையல் போன்ற கலாச்சாரத்தை கொண்ட நாடாகும். இந்தக் கலாச்சாரமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வளர்ச்சியடைந்து, கலை, இலக்கியப்படைப்புகள், பழக்கவழக்கங்கள், மரபுகள், மொழியியல் வெளிப்பாடுகள், கலைப்பொக்கிஷங்கள், பாரம்பரியத் தளங்கள் மற்றும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இந்த செழிப்பான கலாச்சாரத்தில் தினமும் பங்கேற்று, களிப்புற்றுப் பயனடைகிறார்கள். சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு வருகை தருவது, இந்திய விருந்தோம்பலை அனுபவிப்பது, இந்தியாவின் கைவினைப்பொருட்கள் மற்றும் கையால் நெய்யப்பட்ட துணிகளை வாங்குவது, இந்தியாவின் பாரம்பரிய இலக்கியங்களைப் படித்தல், யோகா பயிற்சி மற்றும் தியானம் செய்தல், இந்தியத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, இந்தியாவின் தனித்துவமான விழாக்களில் பங்கேற்பது, இந்தியாவின் மாறுபட்ட இசை மற்றும் கலையைப் பாராட்டுதல் மற்றும் இந்தியப் படங்களைப் பார்ப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்தக் கலாச்சார மற்றும் இயற்கை வளம் தான் இந்தியாவின் சுற்றுலா முழக்கத்தின் படி இந்தியாவை “Incredible India” என்று மாற்றுகிறது. இந்தியாவின் கலாச்சாரச் செல்வத்தைப் பாதுகாப்பதும் ஊக்குவிப்பதும் நாட்டின் அதிமுக்கிய முன்னுரிமையுள்ள செயலாகக் கருதப்பட வேண்டும், ஏனெனில் இது நாட்டின் அடையாளத்திற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் உண்மையிலேயே முக்கியமானது.
22.2 இந்தியக் கலை மற்றும் கலாச்சாரத்தின் மேம்பாடு தேசத்திற்கு மட்டுமல்ல, தனிநபருக்கும் முக்கியமானது. குழந்தைகள் வளர்வதற்கு முக்கியமான திறன்களில் ஒன்றாகக் கலாச்சார விழிப்புணர்வு மற்றும் அதன் வெளிப்பாடு கருதப்படுகிறது. அது அவர்களுக்கு என்று ஒர் அடையாளத்தையும், தங்களுக்கு உரிமையானது என்கிற உணர்வையும், அத்துடன் பிற கலாச்சாரங்கள் மற்றும் அடையாளங்களைப் பாராட்டுவதற்கும் உதவுகிறது. தங்கள் சொந்தக் கலாச்சார வரலாறு, கலைகள், மொழிகள் மற்றும் மரபுகள் பற்றிய வலுவான உணர்வையும் அறிவையும் வளர்ப்பதன் மூலமே குழந்தைகளிடம் ஒரு நேர்மறையான கலாச்சார அடையாளத்தையும் சுயமரியாதையையும் உருவாக்க முடியும். எனவே, கலாச்சார விழிப்புணர்வும், அதன் வெளிப்பாடும் தனிநபர் மற்றும் சமூக நல்வாழ்வுக்கு முக்கியமான பங்களிப்பு ஆற்றும்.
22.3 கலாச்சாரத்தை வழங்குவதற்கான ஒரு முக்கிய ஊடகமாகக் கலைகள் அமைகின்றன. கலைகள் – கலாச்சார அடையாளம், விழிப்புணர்வு மற்றும் சமூகங்களை மேம்படுத்தி வலுப்படுத்துவது தவிர – தனிநபர்களின் அறிவாற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான திறன்களை மேம்படுத்துவதற்கும் தனிப்பட்ட மகிழ்ச்சியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது என்பது நன்கு அறியப்பட்டவையாகும். அனைத்து வகையான இந்தியக் கலைகளையும் ஆரம்பப் பள்ளிக் கல்வி முதல் கல்வியின் அனைத்து மட்டங்களில் உள்ள மாணவர்களுக்கும் வழங்கிட முக்கிய காரணங்களாக, தனிநபர்களின் மகிழ்ச்சி / நல்வாழ்வு, அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் கலாச்சார அடையாளம் போன்றவையே உள்ளன.
22.4 மொழி, கலை மற்றும் கலாச்சாரத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் உலகத்தை குறித்து வெவ்வேறு பார்வைகள் உள்ளது. இதனால் ஒரு மொழியின் கட்டமைப்பானது அதனைப் பேசும் நபர்களின் கருத்துருவாக்கத்தைத் தீர்மானிக்கிறது. குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் மக்கள் அவரது குடும்ப உறுப்பினர்களிடம், அதிகாரிகளிடம், நண்பர்களிடம் மற்றும் அந்நியர்கள் உட்பட மற்றவர்களுடன் பேசும் விதத்தை மொழிகள் பாதிக்கின்றன, மேலும் உரையாடலின் தொனியைப் பாதிக்கின்றன. ஒரு பொதுவான மொழியைப் பேசுபவர்களிடையே உள்ள உரையாடல்களில் உள்ளார்ந்த தொனி, அனுபவத்தின் கருத்து மற்றும் பரிச்சயம் போன்றவை அவர்களுடைய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு மற்றும் பதிவு ஆகும். எனவே, கலாச்சாரம் நம் மொழிகளில் இணைக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், நாடகங்கள், இசை, திரைப்படம் போன்ற வடிவங்களை மொழி இல்லாமல் முழுமையாகப் பாராட்ட முடியாது. கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும், ஒரு கலாச்சாரத்தின் மொழிகளைப் பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டும்.
22.5 துரதிர்ஷ்டவசமாக, இந்திய மொழிகள் அவற்றின் சரியான கவனத்தையும் கவனிப்பையும் பெறவில்லை, கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் இந்தியா 220க்கும் மேற்பட்ட மொழிகளை இழந்துள்ளது. யுனெஸ்கோ 197 இந்திய மொழிகளை ‘அருகி வரும் மொழிகள்’ என்று அறிவித்துள்ளது. குறிப்பாக பல்வேறு எழுத்துகளற்ற மொழிகள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன. அத்தகைய மொழிகளைப் பேசும் ஒரு பழங்குடி அல்லது சமூகத்தின் மூத்த உறுப்பினர்(கள்) காலமானால், இந்த மொழிகள் பெரும்பாலும் அவர்களுடன் அழிந்து போகின்றன; பெரும்பாலும், இந்த உயரிய தொன்மையான மொழிகள் / கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளைப் பாதுகாக்க அல்லது பதிவு செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அல்லது முன்னெடுப்புகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
22.6 மேலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘அருகி வரும்‘ அழிந்து போகக் கூடிய மொழி பட்டியல்களில் இல்லாத இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையின் 22 இந்திய மொழிகள் கூட, பல முனைகளில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றன. இந்திய மொழிகளின் கற்பித்தல் மற்றும் கற்றல் ஒவ்வொரு மட்டத்திலும் பள்ளி மற்றும் உயர் கல்வியுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். மொழிகள் பொருத்தமானதாகவும், துடிப்பானதாகவும் இருக்க, அம்மொழிகளில் உயர்தரக் கற்றல் மற்றும் பாடநூல்கள், செய்முறைப்புத்தகங்கள், காணொளிகள், நாடகங்கள், கவிதைகள், நாவல்கள், பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சுப் பொருட்களின் நிலையான முன்னேற்றம் இருக்க வேண்டும். மொழிகளுக்கும் நிலையான அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகள் இருக்க வேண்டும். அவற்றின் சொற்களஞ்சியங்கள் மற்றும் அகராதிகள் பரவலாகப் பரப்பப்பட வேண்டும், இதனால் இந்த மொழிகளில் உள்ள தற்போதைய சிக்கல்கள் மற்றும் கருத்துக்கள் திறம்பட விவாதிக்கப்படும். உலகெங்கிலும் உள்ள நாடுகளில், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், ஹீப்ரு, கொரிய மற்றும் ஜப்பானிய போன்ற மொழிகளில் கற்றல் பொருட்கள், அச்சுப் பொருட்கள், உலக மொழிகளிலிருந்து முக்கியமான நூல்களை மொழிபெயர்த்தல் மற்றும் தொடர்ந்து சொற்களஞ்சியங்களைப் புதுப்பித்தல் போன்ற செயல்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இருப்பினும் இந்தியா இதுவரை இது போன்ற கற்றல் மற்றும் அகராதிகளின் மூலம் மொழியை புதுப்பித்துக் கொள்வதிலும், தனித்தன்மையாக விளங்கச் செய்வதிலும் சுணக்கம் கொண்டு இருக்கிறது.
22.7, பல்வேறு நடவடிக்கைகள் கூடுதலாக எடுக்கப்பட்ட போதிலும், இந்தியாவில் திறமையான மொழி ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மொழி கற்பித்தலும் மிகவும் அனுபவமிக்க கற்பித்தலாக இருக்க வேண்டும் மற்றும் கற்பித்தலில் மொழி இலக்கியம், சொல்லகராதி உபயோகம் மற்றும் இலக்கணம் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல், மொழியின் உரையாடல் மற்றும் உரையாடல் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உரையாடலுக்கும் கற்பித்தல்–கற்றலுக்கும் மொழிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட வேண்டும்.
22.8 மொழிகள், கலைகள் மற்றும் கலாச்சாரத்தைப் பள்ளிக் குழந்தைகளிடையே வளர்ப்பதற்கான பல முயற்சிகள் 4 ஆம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளியின் அனைத்து மட்டங்களிலும் இசை, கலைகள் மற்றும் கைவினைப்பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது; பன்மொழி கற்றலை ஊக்குவிக்க மூன்று மொழிக் கொள்கையை முன்கூட்டியே செயல்படுத்துதல்; பொருந்தும் இடங்களில் தாய்மொழி / உள்ளூர் மொழியில் கற்பித்தல்; அதிக அனுபவமிக்க மொழி கற்றலைச் செயல்படுத்துதல்; உள்ளூர் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பிற நிபுணர்களை பல்வேறு பாடங்களில் முதன்மை பயிற்றுநர்களாக நியமித்தல்; பழங்குடியினர் மற்றும் பிற உள்ளூர் சம்பந்த பாடங்கள் உள்ளிட்ட பாரம்பரியமான இந்திய அறிவை பாடத்திட்டங்களில் சேர்ப்பது , மானுடவியல், அறிவியல், கலை, கைவினைப்பொருட்கள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட அனைத்தையும் துல்லியமாகச் சேர்ப்பது; குறிப்பாக மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர் கல்வியிலும் உள்ள பாடத்திட்டங்கள் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான பாடங்களை சமநிலையோடு தேர்வு செய்து , தங்களது சொந்தப் படைப்புகள், கலை, கலாச்சார மற்றும் கல்விப் பாதைகளை உருவாக்கிக் கொள்ளலாம்.
22.9 பின்வரும் முக்கிய முயற்சிகளைச் செயல்படுத்த, உயர் கல்வி மட்டத்திலும் அதற்கு அப்பாலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதலாவதாக, மேலே குறிப்பிட்டுள்ள பல படிப்புகளை உருவாக்க மற்றும் கற்பிக்க, சிறந்த ஆசிரியர் குழு உருவாக்கப்பட வேண்டும். இந்திய மொழிகள், ஒப்பீட்டு இலக்கியம், படைப்பு எழுத்து, கலை, இசை, தத்துவம் போன்றவற்றில் வலுவான துறைகள் மற்றும் திட்டங்கள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படும். மேலும் இந்தப் பாடங்களில் 4 ஆண்டு B.Ed. இரட்டைப் பட்டங்கள் உருவாக்கப்படும். இந்தத் துறைகள் மற்றும் திட்டங்கள் தரம் வாய்ந்த மொழி ஆசிரியர்களை உருவாக்குவதோடு கலை, தத்துவம், இசை, எழுத்து போன்ற துறைகளிலும் ஆசிரியர்களை உருவாக்கும். நாடு முழுவதும் இத்தகைய ஆசிரியர்களின் தேவை இந்தத் திட்டங்களை நிறைவேற்ற நிச்சயம் தேவை. இந்த அனைத்துப் பகுதிகளிலும் தரமான ஆராய்ச்சிக்கு NRF நிதியளிக்கும். உள்ளூர் இசை, கலை, மொழிகள் மற்றும் கைவினைப்பொருட்களை மேம்படுத்துவதற்கும், மாணவர்கள் தாங்கள் படிக்கும் கலாச்சாரம் மற்றும் உள்ளூர் அறிவைப் பற்றி அறிந்திருப்பதை உறுதி செய்வதற்கும் சிறந்த உள்ளூர் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் கவுரவ ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுவார்கள். ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் ஒவ்வொரு பள்ளி அல்லது பள்ளி வளாகமும் கூட, கலை, படைப்பாற்றல் மற்றும் பிராந்தியத்தின் / நாட்டின் உயரிய பொக்கிஷங்களை மாணவர்களுக்கு வெளிப்படுத்த, வளாகத்திலேயே கலைஞர்களை பணியமர்த்திட வேண்டும் (Artist(s) -in – Residence).
22.10 அணுகல் மற்றும் மொத்தச் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதற்காகவும், அனைத்து இந்திய மொழிகளின் வலிமை, பயன்பாடு மற்றும் உயிர்ப்பை மேம்படுத்துவதற்காகவும், உயர் கல்வி நிறுவனங்களை அதிகரித்தல் மற்றும் உயர் கல்வியில் அதிகமான திட்டங்களை அதிகரித்தல் தாய்மொழி / உள்ளூர் மொழியை ஒரு கற்பித்தல் ஊடகமாகப் பயன்படுத்துதல், மற்றும் / அல்லது இருமொழியாகத் திட்டங்களை வழங்குதல் முதலியன மேற்கொள்ளப்படுகிறது. தனியார் உயர் கல்வி நிறுவனங்களும் இந்திய மொழிகளைக், கற்பித்தல் ஊடகமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் மற்றும் / அல்லது இருமொழி திட்டங்களை வழங்குவார்கள். இருமொழியாக வழங்கப்படும் நான்கு ஆண்டு B.Ed இரட்டை பட்டப்படிப்புகளும் இதற்கு உதவும், எ.கா. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் விஞ்ஞானத்தை இருமொழியாகக் கற்பிக்க அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க உதவும்.
22.11. மொழிபெயர்ப்பு மற்றும் பொருள்விளக்கம், கலை மற்றும் அருங்காட்சியக நிர்வாகம், தொல்லியல், கலைப்பொருள் பாதுகாப்பு, வரைவியல் வடிவமைப்பு மற்றும் வலைத்தள வடிவமைப்பு ஆகியவற்றில் உயர்தரத் திட்டங்கள் மற்றும் பட்டங்கள் உயர் கல்வி அமைப்புக்குள் உருவாக்கப்படும். இதன் மூலம் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் பல்வேறு இந்திய மொழிகளில் உயர்தர உபகரணங்களை மேம்படுத்தவும், கலைப்பொருள்களைப் பாதுகாக்கவும், அருங்காட்சியகங்கள், பாரம்பரிய அல்லது சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கத் தகுதி வாய்ந்த நபர்கள் உருவாக்கப்படுவார்கள். இதன்மூலம் சுற்றுலாத் துறையும் பரவலாக வலுப்பெறும்.
22.12. இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை குறித்த அறிவை, கற்பவர்கள் நேரடியாக உள்ளீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்தக் கொள்கை அங்கீகரிக்கிறது. அதாவது மாணவர்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்வது போன்ற எளிய செயற்பாடுகளையும் இது உள்ளடக்குகிறது. இதனால் சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் கிடைப்பது மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் அறிவையும் பன்முகத்தன்மை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றைப் புரிந்துகொண்டு பாராட்ட வழி வகுக்கும்.
இந்தத் திசையில், “ஒன்றே பாரதம் ஒப்பில்லா பாரதம்” முனைப்பின் கீழ் நாடு முழுவதும் 100 சுற்றுலாத் தலங்கள் கண்டறியப்பட்டு. அந்த இடங்களைப் பற்றிய புரிதல் மேம்படும் நோக்கில், கல்வி நிறுவனங்கள் மாணவர்களை அந்தத் தலங்களுக்கு அனுப்பி அதன் வரலாறு, அறிவியல் பங்களிப்பு, பண்பாடு, பூர்வீக இலக்கியம் மற்றும் அறிவு போன்றவற்றைக் கற்க வழி செய்யப்படும்.
22.13. உயர் கல்வியில் கலை, மொழி மற்றும் மனிதவியல் பற்றிய இதுபோன்ற திட்டங்கள் மற்றும் பட்டங்கள் இந்தத் தகுதிகளத் திறம்படப் பயன்படுத்தக்கூடிய உயர்தர வேலைவாய்ப்புகளுடன் உருவாக்கப்படும். நூற்றுக்கணக்கான கல்விக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், கலை காட்சியகங்கள் மற்றும் பாரம்பரியத் தளங்கள் திறம்படச் செயல்படத் தகுதி வாய்ந்த நபர்களின் தேவை உள்ளது. பொருத்தமான தகுதி வாய்ந்த நபர்களால் இந்தப் பணிகள் நிரப்பப்படுவதால், மேலும் கலைப்பொருள்கள் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும். மெய்நிகர் அருங்காட்சியகங்கள் / இணைய அருங்காட்சியகங்கள், காட்சியகங்கள் மற்றும் பாரம்பரியத் தளங்கள் உள்பட, கூடுதல் அருங்காட்சியகங்கள் நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியாவின் சுற்றுலாத் துறைக்கும் பங்களிக்கக்கூடும்.
22.14. மேலும், உயர்தரக் கற்றல் உபகரணங்கள் மற்றும் பிற முக்கியமான எழுத்து மற்றும் பேச்சுவழி உபகரணங்கள் பொதுமக்களுக்கு இந்திய மற்றும் பிற நாட்டு மொழிகளிலும் கிடைக்கப்பெற மொழிபெயர்ப்பு மற்றும் பொருள் விளக்கம் செய்யும் முயற்சிகளை இந்தியா துரிதமாக விரிவுபடுத்தும். இதற்காக, இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் பொருள் விளக்க நிறுவனம் (I.I.T.I) நிறுவப்படும். அத்தகைய நிறுவனம் நாட்டிற்கு உண்மையிலேயே முக்கியமான சேவையை வழங்கும், அத்துடன் ஏராளமான பன்மொழி மற்றும் பாடப்பொருள் வல்லுநர்களையும், மொழிபெயர்ப்பு மற்றும் பொருள் விளக்க நிபுணர்களையும் பணியில் அமர்த்தப்படும். இது அனைத்து இந்திய மொழிகளை ஊக்குவிக்க உதவும். IITI தனது மொழிபெயர்ப்பு மற்றும் பொருள் விளக்க முயற்சிகளுக்கு உதவத் தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்தும். IITI இயற்கையாகவே காலத்துடன் வளரக்கூடும். மேலும் இதன் தேவை மற்றும் தகுதி நிறைந்த எண்ணிக்கைகள் அதிகரிக்கும்போது மற்ற ஆய்வுத் துறைகளுடன் ஒத்துழைப்பதை எளிதாக்க உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இது நிறுவப்படும்.
22.15. கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகளில் பெரும் பங்களித்த சமஸ்கிருத மொழியை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வரையறுக்கப்பட்ட ஒற்றை வழியில் அல்லாமல், பள்ளிகளின் வாயிலாகவும் பயிற்றுவிக்கப்படும். மும்மொழி பாடத்திட்டத்தில் ஒரு மொழியாக மட்டுமன்றி உயர்கல்வியிலும் பயிற்றுவிக்கப்படும். வெறுமனே மொழிப்பாடமாக மட்டுமன்றி புதுமையான சுவாரசியமான வழிகளில் இது மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்படும். உதாரணத்திற்குக் கணிதம், வானியல் (சோதிடம்), தத்துவவியல், மொழியியல், நாடகம், யோகா போன்ற பாடங்களின் வாயிலாகப் பயிற்றுவிக்கப்படும். இம்முறையிலான கல்விக்கொள்கையின் மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் பொழுது சமஸ்கிருத பல்கலைகழகங்கள் பல துறை சார்ந்த பாடங்களை/ படிப்புகளைப் பயிற்றுவிக்கும் நிறுவனங்களாக உருமாறும். சமஸ்கிருதத் துறையானது மொழியைப் பயிற்றுவித்தலுடன் உயர்கல்வித்துறையில் சமஸ்கிருத அடிப்படையிலான அறிவுத்திட்டத்தினை செயல்படுத்துதல் வலுப்படுத்துதலில் ஈடுபடும். மாணவர்கள் விரும்பும் பட்சத்தில் சமஸ்கிருதமானது ஒருவகை புனிதத்துவம் மிக்க பல்வேறு படிப்புகளைக் கற்றுக்கொடுக்கும் துறையாகச் செயல்படத் துவங்கும். அதிக அளவிலான சமஸ்கிருத ஆசிரியர்கள் 4 வருட ஒருங்கிணைந்த பல்துறை கல்வி & மொழி சார்ந்த பி.எட் பட்டம் பெறுவதன் மூலம் நாடு முழுவதும் தெளிவான வரையறுத்த திட்டமிடல் மூலம் பணியமர்த்தப் படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்..
22.16 இதுபோலவே இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் அனைத்துச் செம்மொழிகள் மற்றும் இலக்கியங்களிலும் இதுவரையில் கவனிக்கப்படாத கையெழுத்துப் பிரதிகளை (manuscript) ஒருங்கிணைக்க, பாதுகாக்க, கற்க, மொழியாக்கம் செய்ய அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்படும். நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரித் துறைகளில், சமஸ்கிருத மற்றும் அனைத்து இந்திய மொழிகளும் இருக்கும் வகையில் மேம்படுத்தப்படும். நிறையப் புதிய மாணவர்களுக்கு போதுமான பயிற்சி வழங்கப்படும்; குறிப்பாகக் கையெழுத்துப் பிரதிகளுக்கும், வேறு பாடங்களுக்கு இருக்கும் தொடர்பை அறிந்துகொள்ள, அதிகமான எண்ணிக்கையில் பயிற்சி அளிக்கப்படும். தற்போது உள்ள செம்மொழிக் கல்வி நிலையங்களின் தன்னாட்சி தொடரும் வகையில் பல்கலைக் கழகங்களோடு இணைக்கப்படும். இதன் மூலமாகப் பல்கலைக் கழகங்களில் உள்ள, வலுவான மற்றும் ஆழமான பல்துறை பாடத்திட்டங்களில் பேராசிரியர்கள் வேலை செய்யவும், மாணவர்களுக்கு பயிற்சியும் கிடைக்கும். அதேபோல தற்போது உள்ள மொழிக்கான பல்கலை கழகங்களிலும் பல்துறை பாடத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். எங்கெங்கு தேவை உள்ளதோ அங்கு இளங்கலை கல்வியியல் மற்றும் மொழிக்கான (B.Ed) இரட்டைப் பட்டப் படிப்பு வழங்கப்படும். இது திறமை மிகுந்த, செறிந்த, மொழிப் பேராசிரியர்களை உருவாக்க உதவும். இவற்றோடு மொழிகளுக்கான புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கவும் முன்மொழியப்படும். பல்கலைக் கழக வளாகத்தில் பாலி, பார்சியன், ப்ராக்ருத மொழிகளுக்குத் தேசிய நிறுவன கழகங்களும் (National Institute) அமைக்கப்படும். இதேபோல இந்தியக் கலை, கலை–வரலாறு, இந்திய வரலாறு–இலக்கியம்–தத்துவம்–பண்பாடு (Indology) இவற்றுக்கான கல்வி நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும் அமைக்கப்படும். இதில் ஆராய்ச்சியில் ஈடுபட அனைத்து உதவிகளும் தேசிய ஆராய்ச்சி மன்றத்தால் (NRF -National Research Forum) செய்யப்படும்.
22.17. பாரம்பரிய, பழங்குடியின மற்றும் அருகிவரும் மொழிகள் உள்பட அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாத்து ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் புதிய வீரியத்துடன் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சிகளில் தொழில்நுட்பம் மற்றும் பெருந்திரள் வழி பெறுதலுடன் மக்களின் விரிவான பங்கேற்பு முக்கியப் பங்கு வகிக்கும்.
22.18. கால இடைவெளியில் தொடர்ச்சியாக சமீபத்திய அகராதிகளை வெளியிட, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு மொழிக்கும் கல்விக் கூடங்கள் நிறுவப்படும். சமீபத்திய கருத்துகளுக்கு எளிமையான அதேசமயம் துல்லியமான பொருளடக்கத்தைத் தீர்மானிக்கத் தலைசிறந்த அறிஞர்கள் மற்றும் மொழிசார்ந்த பேச்சாளர்கள் அதில் இடம்பெறுவார்கள். (உலகெங்கிலும் உள்ள பல மொழிகளின் வெற்றிகரமான முயற்சிகளுக்கு ஒப்பானது) முடிந்தவரை பொதுவான சொற்களை ஏற்க முயற்சிக்கும் இந்த அகராதிகளை உருவாக்க, கல்விக்கூடங்கள் பிற கல்விக்கூடங்களிடம் கலந்தாலோசிக்கும், சில தருணங்களில் பொது மக்களிடமிருந்தும் கருத்துகளைக் கேட்கும். கல்வி, இதழியல், எழுத்து, பேச்சுருவாக்கம் மற்றும் இவற்றுக்கு அப்பாற்பட்டும் பயன்படும் வகையில் இந்த அகராதிகள் பரவலாகப் பரப்பப்படும். மேலும் அவை இணையத்திலும், புத்தகவடிவிலும் கிடைக்கப் பெறச் செய்யப்படும். எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளுக்கான இந்தக் கல்விக்கூடங்கள் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து அல்லது அவர்களது ஒத்துழைப்புடன் மத்திய அரசால் நிறுவப்படும். இதேபோல், அதிகம் பேசப்படும் பிற இந்திய மொழிகளுக்கான கல்விக்கூடங்களும் மத்திய மற்றும்/அல்லது மாநில அரசுகளால் நிறுவப்படலாம்.
22.19. அருகிவரும் மற்றும் அனைத்து இந்திய மொழிகளின் வளமான கலை மற்றும் கலாச்சாரங்களை பாதுகாக்கும் நோக்கில், இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகள் மற்றும் அதுசார்ந்த கலை மற்றும் கலாசாரங்கள் இணையம் சார்ந்த தளங்கள் மூலம் ஆவணப்படுத்தப்படும். மக்கள் அவர்களது மொழியைப் பேசுவது (குறிப்பாக வயதில் பெரியவர்கள்), கதைகள் சொல்வது, கவிதை வாசிப்பது, நாட்டுப்புறப் பாடல்கள், நடனங்கள், நாடகங்கள் அரங்கேற்றுவது மற்றும் மேலும் பலவற்றினுடைய காணொளிகள், அகராதிகள், ஒலிப்பதிவுகள் மற்றும் பலவற்றை இந்தத் தளம் உள்ளடக்கியிருக்கும். இந்தத் தளங்களில் பொருத்தமான விஷயங்களைச் சேர்ப்பதற்கான இதுபோன்ற முயற்சியில் பங்களிக்குமாறு, நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதுபோன்ற தளங்களை வளமாக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் ஆய்வுக் குழுக்கள் பரஸ்பரமாகவும், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தரப்புகளுடனும் இணைந்து பணியாற்றும். இதுபோன்ற பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆய்வுத் திட்டங்களுக்கு (எடுத்துக்காட்டு: வரலாறு, தொல்லியல், மொழியியல் உள்ளிட்டவை) தேசிய ஆய்வு நிறுவனத்திலிருந்து நிதியளிக்கப்படும்
22.20 உள்ளூர் ஆசிரியர்களின் மூலமோ அல்லது கல்வி நிறுவனங்கள் மூலமோ இந்திய மொழிகள், கலை மற்றும் பண்பாடு கற்கும் அனைத்து வயதினருக்கும் உதவித்தொகை வழங்கும் முறை நிறுவப்படும். தொடர்ச்சியாக உபயோகிக்கப்படும், கற்பிக்கப்படும், கற்றுக் கொள்ளப்படும் இந்திய மொழிகளை மட்டுமே, இதுபோல வளர்த்து எடுக்கப்படும் முயற்சிகள் தொடரும். அனைத்து இந்திய மொழிகளிலும் ஆகச்சிறந்த பாட்டு மற்றும் உரைநடைகளுக்கான பரிசு போன்ற ஊக்கத்தொகைகள் வழங்கப்படும். இந்தப் பரிசுகள் துடிப்பான மற்றும் விதவிதமான பாடல், புதினம், புனைவல்லாத புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், இதழியல் மற்றும் இதர வகையான இந்திய மொழி சார்ந்த திறமைகளுக்கும் நிறுவப்படும். வேலை வாய்ப்பிற்கான மற்றுமொரு தகுதியாக ‘இந்திய மொழிகளில் சிறந்து விளங்குபவர்கள்‘ என்ற தகுதி சேர்க்கப்படும்.
23. தொழில்நுட்பப் பயன்பாடும் ஒருங்கிணைவும்
23.1. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களிலும் வானியல் போன்ற இதர அதிநவீனத் துறைகளிலும் இந்தியா உலக அளவில் தலைமை வகிக்கிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் முழு தேசத்தையும் கணினித் தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்பட்ட சமூகமாகவும் அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்றியமைத்துள்ளது. இந்த மாற்றத்திற்குக் கல்வி முக்கிய பங்காற்றப்போகிறது என்றாலும், கல்விச் செயல்பாடுகளும் விளைவுகளும் மேம்படுவதற்குத் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றப்போகிறது. ஆகவே, தொழில்நுட்பத்திற்கும் கல்விக்குமான உறவு எல்லா நிலைகளிலும் இருவழிப்பாதையாகவே இருக்கும்..
23.2 தொழில்நுட்ப அறிவுடைய ஆசிரியர்கள் மற்றும் தொழில்முனைவோரின் (மாணவத் தொழில்முனைவோர் உட்பட) கற்பனைத்திறனையும் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியையும் பார்க்கும் பொழுது ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. கல்வியின் மீது தொழில்நுட்பம் பல்வேறு வகையில் ஆதிக்கம் செலுத்தப்போகிறது. இதன் ஒரு சிறு பகுதியை மட்டுமே இன்று நம்மால் காண முடிகிறது. செயற்கை நுண்ணுணர்வு (Artificial Intelligence), இயந்திரக் கற்றல் (Machine Learning), ப்ளாக் செய்ன் கட்டச்சங்கிலி (Block Chain), ஸ்மார்ட் போர்டுகள், கையடக்கக் கணினி இயந்திரங்கள், மாணவர் வளர்ச்சிக்கான கணினிசார் மதிப்பீட்டுத் தேர்வுகள் போன்ற தொழில்நுட்பங்களும், இதரக் கல்விக்கான மென்பொருட்களும் வன்பொருட்களும் மாணவர்கள் பள்ளியில் எதை கற்கின்றனர் என்பதை மட்டுமல்லாமல் எவ்வாறு கற்கின்றனர் என்பதையும் மாற்றியமைக்கும். ஆகையால், இந்தத் தொழில்நுட்பங்களும் மேலும் பலவும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் – தொழில்நுட்பக் கோணத்தில் மட்டும் அல்லாது கல்வித்துறையின் கோணத்திலும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.
23.3 கல்வியின் பல அம்சங்களை மேம்படுத்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் ஒன்றிணைப்பதும் ஏற்றுக்கொள்ளப்படும். இந்தக் தொழில்நுட்ப குறுக்கீடுகள் அளவிடப்படுவதற்கு முன்னர் தொடர்புடைய சூழல்களில் கடுமையாகவும் வெளிப்படையாகவும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. தேசியக் கல்வி தொழில்நுட்ப மன்றம் (National Educational Technology Forum) என்ற சுயதீன அமைப்பு உருவாக்கப்படும். கற்பித்தல், மதிப்பீட்டு முறைகள், திட்டமிடுதல், நிர்வாகம் போன்ற (பள்ளி மற்றும் உயர்கல்வி) துறைகளில் தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்துவதைக் குறித்த யோசனைகளைச் சுதந்திரமாகப் பகிர்ந்துகொள்வதற்கான களமாக இவ்வமைப்பு அமையும். கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கும், மாநில / மத்திய அரசுகளுக்கும் மற்றும் இன்னபிற பங்குபற்றாளர்களுக்கும், அண்மை தகவல்கள், ஆய்வுகள், சிறந்த செயல்முறைகள் ஆகியவற்றைப் பகிர்வதன் மூலமாகத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், பரவலாக்குதல் மற்றும் பயன்பாடு குறித்த முடிவுகளை எடுக்க உதவுவதே NETFன் குறிக்கோள். இவ்வமைப்பின் செயல்பாடுகள்:
அ.தொழில்நுட்பம் சார்ந்த இடையீடுகளுக்கு, ஆதாரங்களின் அடிப்படையிலான சுயாதீனமானஅறிவுரைகளை மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு வழங்குதல்
ஆ. கல்வி தொழில்நுட்பம் சார்ந்த அறிவார்ந்த மற்றும் நிறுவனமயமான திறன்களை வளர்த்தெடுத்தல்
இ. இத்துறையின் எதிர்கால செல்திசை குறித்து ஆய்ந்தறிதல்
ஈ. ஆய்வுகளுக்கும் புத்தாக்கங்களுக்குமான புதிய திசைகளை வரைவு செய்தல்
23.4 வேகமாக மாறிவரும் கல்வி தொழில்நுட்பத்துறையில் பொருந்தியிருக்க, கல்வி தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் / பயன்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து தகவல்களை பெற்று, பல்வேறுபட்ட ஆய்வாளர்களைக் கொண்டு அவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதை NEFT தொடர்ந்து செய்யும். துடிப்புமிக்க அறிவுப்புலத்தையும் செயல்பாட்டு முறைகளையும் வளர்த்தெடுக்கும் விதமாக பல்வேறு தேசிய மற்றும் பிராந்தியக் கலந்துரையாடல்கள், பயிலரங்குகள் போன்றவற்றை நடத்தி தேசிய மற்றும் பன்னாட்டுக் கல்வி தொழில்நுட்ப ஆய்வாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் பயிற்சியாளர்களின் கருத்துகளைக் கேட்டறியும்.
23.5 கற்பித்தல் – கற்றல் மற்றும் மதிப்பீட்டு முறைகள், ஆசிரியர்களை தயார்ப்படுத்துதல், கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்துதல், கல்வித்துறையின் திட்டமிடுதல், மேலாண்மை மற்றும் (மாணவர் சேர்க்கை, வருகைப்பதிவு, மதிப்பீடுகள் உள்ளிட்ட) நிர்வாக செயல்முறைகளை மேம்படுத்துவதற்காகவே தொழில்நுட்பத்தின் இடையீடு பயன்படுத்தப்படும்.
23.6 மேற்குறிப்பிட்ட அனைத்து நோக்கங்களுக்காக பல்வேறு வகையான கல்விசார் மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு எல்லா நிலையிலுமான மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும். இந்த மென்பொருட்கள் முக்கியமான இந்திய மொழிகளனைத்திலும் உருவாக்கப்படும். இவற்றைத் தொலைதூரத்தில் இருக்கும் மாணவர்களும் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தக்கூடிய வண்ணம் அமைக்கப்படும். கற்றல்–கற்பித்தலுக்கான உள்ளடக்கங்களின் மின்வடிவம் வட்டார மொழிகளில் மாநில அரசுகளாலும், NCERT, CIET, CBSE, NIOS போன்ற அமைப்புகளாலும் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு DIKSHA தளத்தில் பதிவேற்றப்படும். இந்தத் தளத்தினை ஆசியர்களின் பணித்திறன் மேம்பாட்டிற்கும் பயன்படுத்தலாம். DIKSHA போன்ற கற்றல் தொழில்நுட்ப முன்னெடுப்புகளை பரவலாக்கும் விதமாக CIET அமைப்பு பலப்படுத்தப்படும். கற்றல்–கற்பித்தல் செயல்முறைகளில் மின் உள்ளடக்கங்களைப் பயன்படுத்துதற்குத் தேவையான உபகரணங்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். DIKSHA/SWAYAM போன்ற தொழில்நுட்பத்தாலான கற்றல் இயங்குதளங்கள் எல்லாப் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிலையங்களுடன் ஒன்றிணைக்கப்படும். பயனர்கள் உள்ளடக்கத்தை மதிப்பிட்டு விமர்சிக்கும் வசதியினை வழங்கப்படும். இதன் மூலம், உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களால் பயனர்களுக்கு இலகுவான, தரமான உள்ளடக்கத்தை உருவாக்க உதவும்.
23.7 கல்வி அமைப்பை உருமாற்றக்கூடிய வளரும் தொழில்நுட்பங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். 1986/1992 தேசியக் கல்வித் திட்டத்தை உருவாக்கும் பொழுது இணையம் இத்தனைப் பெரிய உருமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக் கணிப்பது கடினமாக இருந்தது. மின்னல் வேகத்தில் உருவாகும் மாற்றங்களை எதிர்கொள்வதில் நம் இன்றைய கல்வி அமைப்பு சிரமப்படுகிறது. இது போட்டி நிறைந்த இன்றைய உலகில், தனிமனித அளவிலும் தேசிய அளவிலும் நமக்குப் பெரும் பின்னடைவாக இருக்கிறது. உதாரணமாக, தகவல்களையும் செய்முறை அறிதல்களிலும் கணினிகள் மனிதர்களை வெகுவாக விஞ்சிவிட்ட நிலையில், நமது கல்விமுறை மாணவர்களின் மேல் இத்தகைய தகவல்களை பெரும்சுமையாகச் செலுத்துகிறது. இதனால் அவர்களது மேம்பட்ட திறன்களைக் கற்பித்தல் தடைப்படுகிறது.
23.8 கேள்விக்கு அப்பாற்பட்ட பெருமாற்ற தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) முப்பரிமாண/ஏழு பரிமாணத் தோற்ற மெய்மை (3D/7D Virtual Reality) – வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவின் முன்கூற்றிற்கான (AI based Prediction) செலவு குறையக் குறைய, AIகளால் தேர்ச்சிபெற்ற சில பணிகளை துறை நிபுணர்களை விடவும் விரைவாகவும் துல்லியமாகவும் செய்ய முடியும். இதன் மூலம் மருத்துவர்கள் போன்ற நிபுணர்களுக்கு உதவியாக இருக்கவியலும். பணியிடத்தில் AIயின் பெருமாற்ற சாத்தியம் மிகத்தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சவாலை நம் கல்வி அமைப்பு விரைவாக எதிர்கொள்ள வேண்டும். NETFன் நிரந்தரப் பணிகளில் ஒன்று: இது போன்ற புதிதாகத் தோன்றும் தொழில்நுட்பங்களை அவற்றின் சாத்தியங்கள் மற்றும் பெருமாற்றத்திற்கான உத்தேசமாகக் கால அளவு கொண்டு வகைப்படுத்தி, அவற்றை அவ்வப்போது மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அளிக்க வேண்டும். இந்தத் தகவல்களைக் கொண்டு, “கல்வித்துறையின் எதிர்வினையைக் கோரும்” வளரும் துறைகளை மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும்.
23.9 மனிதவள மேம்பாட்டுத்துறை இவ்வாறாக அங்கீகரித்ததும் தேசிய ஆய்வு மையம் (National Research Foundation) இத்தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வுகளைத் துவக்கவோ துரிதப்படுத்தவோ செய்யும். செயற்கை நுண்ணறிவைப் பொருத்தவரை, NRF, ஒரு மும்முனை அணுகுமுறையைப் பின்பற்றலாம் : (அ) அடிப்படை AI ஆய்வுகளை விரிவாக்குதல் (ஆ) பயன்பாடு சார்ந்த ஆய்வுகளை வளர்த்தெடுத்து பயன்பாட்டிற்குக் கொண்டுசெல்வது. (இ) AIயின் உதவிக்கொண்டு சுகாதாரம், வேளாண்மை, தட்பவெப்ப மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் பன்னாட்டு ஆய்வு முயற்சிகளை முன்னேற்றுதல்.
23.10 உயர்கல்வி நிலையங்களின் பணி பெருமாற்றத்தொழில்நுட்பங்கள் சார்ந்த ஆய்வுகளில் முக்கிய பங்காற்றுவதோடு மட்டும் முடிவதல்ல. இவற்றிற்கான பாடத் திட்டங்கள் மற்றும் பாட நூல்களின் முதன்மை வடிவத்தை உருவாக்குவதிலும் அதிநவீனத் துறைகளுக்கான இணையவழி வகுப்புகளை உருவாக்குவதிலும் தொழில்முறை கல்வி போன்ற துறைகளில் இவற்றின் தாக்கத்தை அளப்பதிலும் உயர்கல்வி நிலையங்களின் பங்கு அளப்பரியது. ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம் போதுமான முதிர்ச்சியை அடைந்ததும், ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கொண்ட உயர்கல்வி நிலையங்கள், பரவலாகக் கற்பிக்கவும் பணிக்கு தயார்ப்படுத்தும் பயிற்சி உள்ளிட்ட திறன் மேம்பாடுகளை முன்னெடுக்கவும் சரியான இடங்களாக அமையும். உருமாற்றத் தொழில்நுட்பங்கள் சில பணிகளைத் தேவையற்றதாக்கிவிடும். ஆகையால் வேலைவாய்ப்பினை உருவாக்கி, தக்கவைக்க திறம் மேம்பாடு, திறம் நீக்கம் ஆகியவற்றிற்கான அணுகுமுறைகள் திறன்வாய்ந்ததாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். இது போன்ற பயிற்சிகளை அளிக்கும் துணை நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அந்தந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இவை திறன் மற்றும் உயர்கல்வி கட்டமைப்புகளுடன் ஒன்றிணைக்கப்படும்.
23.11 பல்கலைக்கழகங்கள், இயந்திரக் கற்றல் போன்ற அடிப்படை துறைகளிலும், AI + “X” (AIயுடன் மற்றொரு துறை) போன்ற பல்துறை களங்களிலும் மருத்துவம், வேளான்மை, சட்டம் போன்ற துறைகளிலும் முனைவர் மற்றும் முதுநிலைப் பட்ட படிப்புகளை வழங்கும். அவை SWAYAM போன்ற இயங்குதளங்களிலும் படிப்புகளை உருவாக்கி வழங்கலாம். துரிதமாகச் சென்று சேர, உயர்கல்வி நிலையங்கள் இணையவழி படிப்புகளை வழமையான கற்பித்தலுடன் இணைத்து இளங்கலை மற்றும் தொழிற்கல்வி பாடங்களை வழங்கலாம். செயற்கை நுண்ணுணர்வு பணிகளில் உதவக்கூடிய குறைந்த திறன் பணிகளுக்கான (தகவல் குறிப்புரை, பட வகையாக்கம் மற்றும் பேச்சினை படியெடுத்தல் போன்றவை) பயிற்சிகளை உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கலாம். பள்ளி மாணவர்களுக்கு மொழியினை கற்பிக்கும் முயற்சி இந்திய மொழிகளுக்கான இயற்கை மொழி கணினியியலுடன் பொருத்தமாக இணையும்.
23.12 சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அதிகமாகிக் கொண்டு இருப்பதால் பள்ளிப்படிப்பிலும், தொடர் கல்வியிலும், இத்தகைய தொழில்நுட்பங்களினால் ஏற்படும் வேண்டாத விளைவுகள் மற்றும் அதைப்பற்றின விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். இந்த விழிப்புணர்வு பொதுஜன மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்வது அவசியமாகும். NETF மற்றும் MHRD யினால் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் என்று அடையாளப்படுத்தப் பட்ட தேவையில்லாத தொழில்நுட்பங்களினால் ஏற்படும் விரும்பத்தகாத நிகழ்வுகள் மற்றும் ஒழுக்கநெறி பிரச்சினைகள் பற்றிய அறிவும், கலந்துரையாடல்களும் பள்ளியில் ஏற்படுத்தப்படும். இது சம்மந்தமாகத் தயாரிக்கப்பட்ட விதிமுறை கையேடு தொடர் கல்வியில் அளிக்கப்படும்.
23.13 AI தொழில்நுட்பத்திற்குத் தரவு மிக முக்கியமானது. தரவு கையாளுதல் மற்றும் தரவு பாதுகாப்பு முக்கியமாகத் தனியுரிமை பிரச்சனைகள், சட்டம், தரநிலை மதிப்பு ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியமாகிறது. AI தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செயல்படும் விதம், அதனால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகள் பற்றிய அறிவை ஊட்டுவது அவசியமாகிறது. ஆகவே, இது சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கும். நம் வாழும் முறையை மாற்றும் விதமான விரும்பத்தகாத தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நம் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை மாற்றம் பெறுகிறது. சுத்தம், மறுசுழற்சி ஆற்றல், நீர் பாதுகாப்பு, நிலையான விவசாயம், சூழல் பாதுகாப்பு, பசுமை முனைப்புகள் ஆகியவையும் கல்வியில் முன்னுரிமை பெறும்.
24. இணைய மற்றும் டிஜிட்டல் கல்வி: தொழில்நுட்பத்தின் சமமான பயன்பாட்டினை உறுதி செய்தல்
24.1 புதிய சூழல்கள் மற்றும் யதார்த்தங்களுக்கு புதிய முயற்சிகள் தேவைப்படுகின்றன. எப்பொழுதெல்லாம் பாரம்பரிய மற்றும் ஆசிரியர் வழி கற்றல் சாத்தியமில்லாத சூழல் மற்றும் தற்போது உள்ள சர்வதேச அளவில் பெரும் தொற்று பரவும் சூழலில் மாற்று வழியில் தரமான கல்வியைத் தரத் தயாராக உள்ளோம். தேசியக் கல்விக் கொள்கை 2020 தொழில்நுட்பம் சார்ந்த கல்வியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் அதே நேரத்தில், அதிலுள்ள சாத்தியமான அபாயங்களையும் ஒப்புக்கொள்ள வேண்டும். கவனமாகத் திட்டமிடுதலிலும் மற்றும் முன் பரிசோதனை ஆய்வுகள் கொண்டு மேற்கண்ட ஆபத்துகளைத் தொழில்நுட்பக் கல்வியில் களைய வேண்டும்.
இடையில், ஏற்கனவே உள்ள கல்வி தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் தரமான கல்வியை தற்போது மற்றும் எதிர்காலச் சவால்களைச் சமாளிக்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டும்.
24.2 இருப்பினும், டிஜிட்டல் இந்தியா பிரச்சாரம் மற்றும் மலிவு விலையில் கணினி சாதனங்கள் கிடைப்பது போன்ற ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் டிஜிட்டல் பிளவு நீக்கப்படாவிட்டால் ஆன்லைன் / டிஜிட்டல் கல்வியின் நன்மைகளை மேம்படுத்த முடியாது. ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் கல்விக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சமபங்கு தொடர்பான கவலைகளை போதுமான அளவில் நிவர்த்தி செய்வது முக்கியம்.
24.3 பயனுள்ள ஆன்லைன் கல்வியாளர்களாக இருக்க ஆசிரியர்களுக்குப் பொருத்தமான பயிற்சியும் வளர்ச்சியும் தேவை. ஒரு பாரம்பரிய வகுப்பறையில் ஒரு நல்ல ஆசிரியர் தானாகவே ஆன்லைன் வகுப்பறையிலும் ஒரு நல்ல ஆசிரியராக இருப்பார் என்று கருத முடியாது. கற்பிதத்தில் தேவைப்படும் மாற்றங்களைத் தவிர, ஆன்லைன் மதிப்பீடுகளுக்கும் வெவ்வேறு அணுகுமுறை தேவைப்படுகிறது. ஆன்லைன் சூழலில் கேட்கக்கூடிய கேள்விகளின் வகைகள், நெட்வொர்க் மற்றும் மின் தடைகளைக் கையாளுதல் மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகளைத் தடுப்பது உள்ளிட்ட அளவிலான ஆன்லைன் தேர்வுகளை நடத்துவதில் ஏராளமான சவால்கள் உள்ளன. கலை / அறிவியல் நடைமுறை போன்ற சில வகையான படிப்புகள் / பாடங்களில் ஆன்லைன் / டிஜிட்டல் கல்வி இடத்தில் வரம்புகள் உள்ளன, அவை புதுமையான நடவடிக்கைகளுடன் ஓரளவுக்குக் கடக்கப்படலாம். மேலும், ஆன்லைன் கல்வி அனுபவ மற்றும் செயல்பாட்டு அடிப்படையிலான கற்றலுடன் கலக்கப்படாவிட்டால், அது கற்றலின் சமூக, பாதிப்பு மற்றும் கற்றலுக்கான மன/உளச் செயல்பாட்டின் பரிமாணங்களில் மட்டுப்படுத்தப்பட்ட கவனம் செலுத்தி திரை அடிப்படையிலான கல்வியாக மாறும்.
24.4 வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் மற்றும் எதிர்நோக்கும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை பள்ளியிலிருந்து உயர்கல்வி வரை கொண்டு செல்லப் பின்வரும் முன்னேற்பாடுகள் இந்தக் கொள்கையின் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது:
- இணையக் கல்விக்கான பரிசோதனை ஆய்வுகள்:
NETF, CIET, NIOS, IGNOU, IITs, NITs போன்ற பொருத்தமான நிறுவனங்கள் தொடர்ச்சியான பரிசோதனையை ஆய்வுகளை ஒருபக்கம் நடத்தி அறியும்போது, அதற்கு இணையாகக் கல்வியுடன் இணையக் கல்வியை ஒருங்கிணைக்கும் போது ஏற்படும் பயன்கள் மற்றும் எதிர்மறைகளையும் கற்றல் தொடர்புடைய பகுதிகளில் மாணவர்கள் கருவிகளுக்கு அடிமையாதல் போன்றவை தவிர்க்கவும், மின் உள்ளடக்கங்களின் வடிவங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இத்தகைய பரிசோதனை ஆய்வு முடிவுகள் பொதுவில் பகிரப்படும் மற்றும் தொடர்ச்சியான மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும்.
- டிஜிட்டல் கட்டமைப்பு:
இந்தியாவின் அளவு, பன்முகத்தன்மை, சிக்கலான தன்மை மற்றும் சாதன ஊடுருவலுக்குத் தீர்வு காண, பல தளங்கள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றால் பயன்படுத்தக்கூடிய கல்வித் துறையில் திறந்த, இயங்கக்கூடிய, உருவாகக்கூடிய, பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றங்களுடன் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் காலாவதியாகாமல் இருப்பதை இது உறுதி செய்யும்.
- இணையக் கற்பித்தல் மற்றும் கருவிகள்:
ஏற்கனவே அமைந்துள்ள மின் கற்றல் தளங்களான SWAYAM, DIKSHA ஆகியவை நன்கு கட்டமைக்கப்பட்ட பயன்படுத்த, எளிதான, திறனுடன் கற்பவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் வகையில் ஆசியர்களுக்கு அளிக்கப்படும். கற்பித்தல் கருவிகளான இணைய வழி வகுப்புகள் நடத்த இருவழி காணொளி மற்றும் இருவழி(ஆடியோ) கேட்டல் ஆகியவை இன்றைய காலத்தில் தேவைப்படுகிறது.
- உள்ளடக்க உருவாக்கம் டிஜிட்டல் களஞ்சியம் மற்றும் பரப்புதல்:
பாட நெறிகளை உருவாக்குதல், கற்றல் விளையாட்டுகள் மற்றும் உருவகப்படுத்துதல்கள், ஆக்மென்ட் ரியாலிட்டி (augmented reality) மற்றும் மெய்நிகர் ரியாலிட்டி (virtual reality) உள்ளிட்ட உள்ளடக்கத்தின் டிஜிட்டல் களஞ்சியம், பயனர்களின் செயல்திறன் மற்றும் தரம் குறித்த மதிப்பீடுகளுக்கான தெளிவான பொது அமைப்புடன் உருவாக்கப்படும். . இந்தியக் கலை மற்றும் கலாச்சாரம் தொடர்பான பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் போன்ற வேடிக்கையான அடிப்படையிலான கற்றலுக்காக, தெளிவான இயக்க வழிமுறைகளுடன் பல மொழிகளில் உருவாக்கப்படும். மாணவர்களுக்கு மின் உள்ளடக்கத்தைப் பரப்புவதற்கான நம்பகமான காப்பு அம்சங்கள் வழங்கப்படும்.
- டிஜிட்டல் தொடர்பான பிரச்சினைகள்:
இன்றும் குறிப்பிட்ட அளவு மக்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் அணுக இயலாததாக இருக்கும் நிலையில், ஏற்கனவே உள்ள மக்கள் ஊடகமான, தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வானொலி போன்றவற்றின் உதவியுடன் ஒளிபரப்பு செய்யப்படும். இத்தகைய கல்வி நிகழ்வுகள் பல மொழிகளிலும், மாணவர்கள் தேவைக்கேற்ப 24/7 மணி நேரமாகக் கிடைக்கும் அனைத்து மொழிகளிலும் உள்ளடக்கம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். டிஜிட்டல் உள்ளடக்கம் ஆனது ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கற்றல் மொழியில் கிடைக்க முடிந்த அளவு ஏற்பாடு செய்யப்படும்
- மெய்நிகர் ஆய்வகங்கள்:
அனைவருக்கும் சமமான, தரமான, நடைமுறை மற்றும் சோதனை அடிப்படையிலான கற்றல் அனுபவங்களுக்கு தற்போது மின் கற்றல் தளங்களான DIKSHA, SWAYAM மற்றும் SWAYAMPRABAK ஆகியவற்றில் மெய்நிகர் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உள்ளடக்கத்துடன் கூடிய கைக்கணினி போன்ற சாதனங்கள் பரிசீலிக்கப்பட்டு உருவாக்கப்படும்.
- ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் ஊக்கத்தொகை:
கற்போரை மையமாகக் கொண்டு ஆசிரியர்கள் கடுமையான பயிற்சி பெறுதல் மற்றும் இணையக் கற்பித்தல் கருவிகள் பயன்படுத்தி உயர்தரமான இணைய உள்ளடக்கத்தை உருவாக்குபவர் ஆக மாற வேண்டும். உள்ளடக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் செயலில் மாணவர் ஈடுபாட்டை எளிதாக்குவதில் ஆசிரியரின் பங்குக்கு முக்கியத்துவம் இருக்கும்.
- இணைய மதிப்பீடு மற்றும் தேர்வுகள்:
முன்மொழியப்பட்ட தேசிய மதிப்பீட்டு மையம் அல்லது பராக்(PARAKH), பள்ளி வாரியங்கள், என்.டி.ஏ(NTA) மற்றும் பிற அடையாளம் காணப்பட்ட அமைப்புகள் போன்ற பொருத்தமான அமைப்புகள், திறன்கள், போர்ட்ஃபோலியோ, ரப்ரிக்ஸ்(Rubrics), தரப்படுத்தப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் மதிப்பீட்டுப் பகுப்பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கிய மதிப்பீட்டுக் கட்டமைப்பை வடிவமைத்துச் செயல்படுத்தும். 21 ஆம் நூற்றாண்டின் திறன்களை மையமாகக் கொண்ட கல்வி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மதிப்பீட்டுக்கான புதுமையான வழிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
9.நெகிழ்வான கற்றல் மாதிரிகள்:
டிஜிட்டல் கற்றல் மற்றும் கல்வியை ஊக்குவிக்கும் அதே வேளையில், நேருக்கு நேர் கற்றலின் முக்கியத்துவம் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெவ்வேறு பாடங்களுக்கான பொருத்தமான நகலெடுப்பிற்காகக் கலப்பு கற்றலின் வெவ்வேறு பயனுள்ள மாதிரிகள் அடையாளம் காணப்படும்.
- தர நிர்ணயம்:
இணைய டிஜிட்டல் கல்வி குறித்த ஆய்வுகள் உருவாகும்போது, NETF மற்றும் பொருத்தமான அமைப்புகள், உள்ளடக்கத்தின் தரம், தொழில்நுட்பம் மற்றும் ஏனைய ஆன்லைன் / டிஜிட்டல் கற்பித்தல்–கற்றலுக்கான கற்பித்தல் ஆராயப்படும். இந்தத் தர நிலைகள் மாநிலங்கள், பள்ளி வாரியம், மின் கற்றலுக்கான வழிகாட்டுதலை உருவாக்கும்.
24.5 உலகத் தரம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, கல்வி டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் திறன் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப ஒரு பிரத்தியேக அலகு உருவாக்குதல்
கல்வியில் தொழில்நுட்பம் ஒரு பயணம். அது ஒரு இலக்கு அல்ல. பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பைத் திட்டமிடுவதற்கும் கொள்கை நோக்கங்களைச் செயல்படுத்துவதற்கும் திறன் தேவை. நோக்கத்திற்காக ஒரு பிரத்தியேக அலகு, டிஜிட்டல் உள்கட்டமைப்பைக் கட்டமைத்தல், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை பள்ளி மற்றும் உயர் கல்வி ஆகிய இரண்டின் மின் கல்வித் தேவைகளைக் கவனிக்க அமைச்சகம் உருவாக்கப்படும். தொழில்நுட்பம் விரைவாக உருவாகி வருவதாலும், உயர்தர மின் கற்றலை வழங்க வல்லுநர்கள் தேவைப்படுவதாலும், ஒரு துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பு தீர்வுகளை உருவாக்க ஊக்குவிக்கப்பட வேண்டும், இது இந்தியாவின் அளவு, பன்முகத்தன்மை, சமபங்கு போன்ற சவால்களைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், விரைவான மாற்றங்களுக்கு ஏற்ப உருவாகிறது தொழில்நுட்பம், ஒவ்வொரு வருடமும் அதன் அரை ஆயுளைக் குறைக்கிறது. எனவே, இந்த மையம் நிர்வாகம், கல்வி, கல்வி தொழில்நுட்பம், டிஜிட்டல் கல்வி மற்றும் மதிப்பீடு, மின்–ஆளுமை போன்ற துறைகளில் இருந்து நிபுணர்களைக் கொண்டிருக்கும்.
பகுதி IV. செயல்படுத்துதல்
25. மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுவை (CABE) வலுப்படுத்தல்
25.1 இந்தக் கொள்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்குத் தேவைகளாகக் கருதப்படுவது தொலைநோக்கு சிந்தனை, நிலையான நிபுணத்துவம் அமையப் பெறுவது மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தேசிய, மாநில, நிறுவன மற்றும் தனிப்பட்ட மட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கை. ஆகையால் இந்தக் கொள்கை மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுவை (CABE) பலப்படுத்த மற்றும் அதிகாரத்தை வலுப்படுத்தப் பரிந்துரை செய்கிறது, மேலும் கல்வி மற்றும் கலாச்சார வளர்ச்சி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் ஆலோசனைகள் வழங்கி சிக்கல்களை ஆராயும் சக்திமிக்க மன்றமாகச் செயல்படும். இந்த மாற்றி வடிவமைக்கப்பட்ட மற்றும் புத்தாக்கம் பெற்ற CABE, நாட்டின் கல்விமுறையை மேம்படுத்துதல், புதுமைகளை வெளிக்கொண்டு வருதல், மதிப்பாய்வு செய்தல், மற்றும் மாற்றி அமைத்தல் போன்ற பொறுப்புகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துடனும், அதனைத் தொடர்புடைய மாநில கல்வித் துறை உடனும் நெருக்கமாக இணைந்து செயல்படுத்தும்
இது கல்வித்துறை சார்ந்த கட்டமைப்பினை உருவாக்கித் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து நீண்ட காலத் தொலைநோக்கு சிந்தனையை அடைய வழி வகுக்கும்.
25.2.கல்வி மற்றும் கற்றலில் கவனத்தை மீட்டெடுக்க மனிதவள மேம்பாட்டுத அமைச்சகம் ’கல்வி அமைச்சகம்’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.
26. கல்விக்கான நிதி அளிப்பு : அனைவரும் அணுகக்கூடிய மற்றும் தரமான கல்வி
26.1 ஒரு சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு இளைய தலைமுறைக்கு உயர்தரமான கல்வியைக் கொடுப்பதைவிட மிகச்சிறந்த முதலீடு வேறு எதுவும் இருக்க முடியாது என்பதனை கல்விசார் முதலீட்டைக் குறிப்பிடத்தக்க வகையில் அதிகப்படுத்துவதன் மூலமாக இக்கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. எதிர்பாரா விதமாகக் கல்விக்கான பொதுச் செலவினங்கள் 1968-ம் ஆண்டு கல்விக் கொள்கையின் படியும் திருத்தி அமைக்கப்பட்ட 1986ஆம் ஆண்டு கல்விக் கொள்கையின் படியும் மறு உறுதி செய்யப்பட்ட 1992 ஆம் ஆண்டு கல்விக் கொள்கையின் படியும் பரிந்துரைக்கப்பட்ட அளவான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% சதவீதத்தை இன்னும் எட்டவில்லை. இந்தியாவில் தற்போதைய கல்விக்கான மத்திய மாநில அரசுகளின் பொதுச் செலவினங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 4.43% சதவீதமாக (2017-18 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு அளவீட்டின்படி) இருக்கிறது மற்றும் 2017-18 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரக் கணக்கீட்டின்படி அரசின் மொத்தச் செலவினங்களில் ஏறத்தாழ 10 சதவீதம் மட்டுமே கல்விசார் முதலீடுகளுக்குச் செலவிடப்பட்டிருக்கிறது. மற்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையானது மிகக் குறைந்த அளவே ஆகும்.
26.2 கல்வியின் குறிக்கோளில் சிறந்து விளங்குவதற்காக நாட்டிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் பலதரப்பட்ட நன்மைகளை அளிப்பதற்காக இந்தக் கல்விக் கொள்கை மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளால் தொலைநோக்குப் பார்வையுடன் எவ்வித ஐயப்பாடுகளுக்கும் இடமின்றி கல்விக்கான பொது முதலீட்டில் கணிசமான அதிகரிப்பிற்கு முழு ஒப்புதல் அளிக்கிறது. கல்வித்துறையில் அரசு சார் முதலீட்டைப் பரிந்துரைக்கப்பட்ட அளவான 6 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படும். இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார, சமூக, கலாச்சார, அறிவுசார் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் உயர்தரமான மற்றும் சமமான பொதுக்கல்வி முறையை அடைவதற்கு இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
26.3 குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்களுக்கு சமத்துவ உயர்தரக் கல்வியை நோக்கிய அனைத்து முக்கிய முயற்சிகளுக்கும் மற்றும் உலகளாவிய அணுகுமுறை, கற்றல் வளங்கள், ஊட்டச்சத்து ஆதரவு, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு, போதுமான எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், ஆசிரியர்களின் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துக் கல்வியின் முக்கிய காரணிகளுக்கும் மற்றும் முன்னெடுப்புக்களுக்கும் நிதி உதவி அளிக்கப்படும்.
26.4 உள்கட்டமைப்பு மற்றும் வளங்களுடன் முதன்மையாகத் தொடர்புடைய ஒரு முறை செலவினங்களுக்குக் கூடுதலாக, இந்தக் கொள்கை ஒரு கல்வி முறையை வளர்ப்பதற்கான நிதியுதவிக்கான பின்வரும் முக்கிய நீண்டகால உந்துதல் பகுதிகளை அடையாளம் காட்டுகிறது:
- உலகத்தரம் வாய்ந்த மழலையர் நலக்கல்வியின் விரிவாக்கம்
- அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவை உறுதி செய்தல்
- பள்ளி வளாகங்கள்/ கூடங்களில் போதுமான மற்றும் பொருத்தமான வளங்களை வழங்குதல்
- உணவு மற்றும் ஊட்டச்சத்து வழங்குதல் (காலை மற்றும் மதிய உணவு)
- ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர்களின் தொடர்ச்சியான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கு முதலீடு செய்தல்
- கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தர மேம்பாட்டிற்காக மறுசீரமைத்தல்
- ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல்
- தொழில்நுட்பம் மற்றும் நிகழ்நிலை கல்வியின் விரிவான பயன்பாடு.
26.5 இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது ஒதுக்கப்படக் கூடிய குறைந்த அளவிலான கல்விசார் முதலீடுகளும் கூட மாவட்ட மற்றும் நிர்வாக அளவில் சரியான சமயத்தில் செலவிடப் படாமல் இருப்பது அந்த நிதிகளின் நோக்கம் கொண்ட இலக்குகளை அடைவதற்கு இடையூறாக இருக்கிறது. எனவே, பொருத்தமான கொள்கை மாற்றங்களால் கிடைக்கக்கூடிய நிதிகளைப் பயன்படுத்துவதில் செயல்திறனை அதிகரிக்க வேண்டும். நிதி ஆளுகையும் மற்றும் நிர்வாகமும் நிதானமான, சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான தடைகளற்ற பணப்புழக்கம் மற்றும் அவற்றின் பயன்பாட்டுடன் கவனம் செலுத்தும்; நிர்வாக செயல்முறைகள் பொருத்தமான முறையில் திருத்தப்பட்டு நெறிப்படுத்தப்படும், இதனால் விநியோகிக்கும் வழிமுறையானது அதிக அளவு செலவிடப்படாத நிலுவைகளுக்கு வழிவகுக்காது அரசாங்க வளங்களைத் திறம்படப் பயன்படுத்துவதற்கும், நிதிகளை நிறுத்துவதைத் தவிர்ப்பதற்கும் GRF, PFMS மற்றும் ‘Just in Time’ விதிகள் இக்கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும் நிறுவனங்களால் பின்பற்றப்படும்.மாநிலங்கள் / உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செயல்திறன் அடிப்படையிலான நிதியளிப்புக்கான வழிமுறை வகுக்கப்படும். இதேபோல் சமூக பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குழுக்களுக்காக (SEDGs) ஒதுக்கப்பட்ட நிதிகளின் உகந்த ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டிற்கு திறன்மிக்க வழிமுறைகள் உறுதி செய்யப்படும். இப்புதிய பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை கொள்கையானது பொறுப்புகளைத் தெளிவாக வரையறுத்தல் , வெளிப்படையான சுயத் தகவல் பகிர்தல், நிறுவனங்களுக்கு அதிகாரம் மற்றும் சுயாட்சி வழங்கல், சிறந்த மற்றும் தகுதி வாய்ந்த நிபுணர்களைத் தலைமை பதவிகளுக்கு நியமிப்பது ஆகியவற்றின் மூலம் மிகவும் எளிதாக, விரைவாக மற்றும் வெளிப்படையான நிதியைப் பெற உதவும்.
26.6 கல்வித்துறையில் புத்துணர்ச்சி, செயலில் முன்னேற்றம் , தனியார்ச் சார்ந்த கல்வி அறப்பணி நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கவும் இக்கொள்கை கோருகிறது. குறிப்பாக பொது நிதி ஒதுக்கீட்டிற்கும் மேலாக கல்விசார் தேவைகளை மேம்படுத்தத் தனியார்க் கொடை நிதி திரட்டுவதற்கு எந்த ஒரு பொது நிறுவனமும் முயற்சிகளை எடுக்க முடியும்.
26.7 கல்வியை வணிகமயமாக்குவது தொடர்பான விடயங்கள் பல தொடர்புடைய முனைகளின் மூலம் கொள்கையால் கையாளப்பட்டுள்ளன, அவற்றுள்: நிதி, நடைமுறைகள், பாட நெறி மற்றும் நிரல் வழங்கல்கள் மற்றும் கல்வி முடிவுகள் ஆகியவற்றின் முழு பொது சுய வெளிப்பாட்டைக் கட்டாயப்படுத்தும்‘ எளிமையான ஆனால் இறுக்கமான’ ஒழுங்குமுறை அணுகுமுறை; பொதுக் கல்வியில் கணிசமான முதலீடு; மற்றும் பொது மற்றும் தனியார் அனைத்து நிறுவனங்களின் நல்லாட்சிக்கான வழிமுறைகள். இதேபோல், ஏழை அல்லது தகுதியான பிரிவுகளைப் பாதிக்காமல் அதிகச் செலவு மீட்புக்கான வாய்ப்புகளும் ஆராயப்படும்.
27. செயல்படுத்துதல்
27.1 எந்தவொரு கொள்கையின் செயல்திறனும் அதன் செயல்பாட்டைப் பொறுத்தது. இத்தகைய செயலாக்கத்திற்குப் பல முன்முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் தேவைப்படும் அதற்கு அனைத்து அமைப்புகளும் ஒத்திசைந்து சரியான திட்டமிடுதலுடன் செயல்படவேண்டும். எனவே, இந்தக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கல்விக்கான மத்திய ஆலோசனைக்குழு , யூனியன் மற்றும் மாநில அரசுகள், கல்வி தொடர்பான அமைச்சகங்கள், மாநில கல்வித் துறைகள், வாரியங்கள், தேசிய ஆய்வு அமைப்பு, பள்ளி மற்றும் உயர் கல்வியின் ஒழுங்குமுறை அமைப்புகள், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு, பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவை காலக்கெடு மற்றும் மறு ஆய்வுக்கான திட்டத்துடன் , கல்வியில் ஈடுபட்டுள்ள இந்த அனைத்து அமைப்புகளிலும் திட்டமிடல் மற்றும் ஒத்திசைவின் மூலம் ஒருங்கிணைந்து செயல்பட்டு இக்கல்விக் கொள்கை அதன் கருத்தும் நோக்கமும் பிசகாமல் செயல்படுத்தப்படும்.
27.2 கீழ்க்கண்ட விதிகளைப் பின்பற்றி இக்கல்விக் கொள்கையானது செயல்படுத்தப்படும். முதலாவதாக இக்கல்விக் கொள்கையின் கருத்தையும் நோக்கத்தையும் செயல்படுத்துவது கடினமான ஒரு காரியமாக இருக்கக் கூடும். இரண்டாவதாகக் கல்விக் கொள்கையின் முன்னெடுப்புகளை ஒவ்வொரு கட்டமாகச் செயல்படுத்துவது மிக முக்கியம். கொள்கையின் ஒவ்வொரு கட்டமும் பல்வேறு படிநிலைகளையும் ஒவ்வொரு படிநிலையும் அதற்கு முந்தைய படி வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மூன்றாவதாக முன்னுரிமை அடிப்படையில் கல்விக் கொள்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் சரியான வரிசை முறையில் உறுதி செய்வது முக்கியமானது. மிக முக்கியமான மற்றும் அவசர நடவடிக்கைகள் முதலில் எடுக்கப்படுவதன் மூலம் வலுவான அடித்தளத்தை உருவாக்க முடியும். நான்காவதாக, செயல்படுத்துவதில் விரிவான நடைமுறை முக்கியமாக இருக்கும்; இந்தக் கொள்கை ஒன்றோடொன்று இணைந்திருப்பதால், பகுதிகளாக அல்லாமல் ஒரு முழுமையான நடைமுறை மட்டுமே விரும்பிய குறிக்கோள்கள் அடையப்படுவதை உறுதி செய்யும். ஐந்தாவது, கல்வி என்பது தொடர் நிகழ்வாக இருப்பதால், அதற்குக் கவனமான திட்டமிடல், கூட்டு கண்காணிப்பு மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் இணைந்து செயல்படுத்தல் தேவைப்படும். ஆறாவதாக மனிதவளம், உள்கட்டமைப்பு மற்றும் நிதி போன்ற தேவையான வளங்களைச் சரியான நேரத்தில் கொடுப்பதன் வாயிலாக மத்திய மற்றும் மாநில அளவில் கல்விக் கொள்கையைத் திருப்தியாக நிறைவேற்ற இயலும். இறுதியாக அனைத்து முயற்சிகளும் திறம்படச் செயல்படுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு இணைநிலை படிகளுக்கு இடையேயான இணைப்புகளைக் கவனமாகப் பகுப்பாய்வு செய்து மதிப்பாய்வு செய்வது அவசியம். இது மழலையர் கல்வி சார்ந்த மற்றும் கல்வி உள்கட்டமைப்பு அமைத்தல் போன்ற சில குறிப்பிட்ட செயல்களின் ஆரம்ப முதலீட்டையும் உள்ளடக்கும், அவை வலுவான தளத்தை உறுதி செய்வதற்கு இன்றியமையாததாக இருக்கும், மேலும் அனைத்து அடுத்தடுத்த திட்டங்கள் மற்றும் செயல்களுக்கும் முன்னேற்றம் நல்குவதாக இருக்கும்.
27.3 கொள்கையின் குறிக்கோள்களை அடைவதற்கும் மேற்கண்ட கொள்கைகளுக்கு இணங்க இந்தக் கொள்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் விரிவான செயல்படுத்தல் திட்டங்களை உருவாக்க மத்திய மற்றும் மாநில அளவில் பாடவாரியாக நிபுணர் குழு, தொடர்புடைய அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து அமைக்கப்படும். ஒவ்வொரு செயலுக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு ஏற்ப, கொள்கையின் செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்த வருடாந்திரக் கூட்டு மதிப்புரைகள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD ) மற்றும் மாநிலங்களால் அமைக்கப்பட்ட நியமிக்கப்பட்ட குழுக்களால் நடத்தப்படும், மேலும் மதிப்புரைகள் மத்தியக் கல்வி ஆலோசனைக்குழுவுடன் பகிரப்படும். 2030-40 ம் ஆண்டுகளில் இந்தக்கல்விக் கொள்கை முழு அளவில் செயல்படுத்தப்பட்டு இருக்கும், அதைத் தொடர்ந்து மற்றொரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.
*********
28. பயன்படுத்தப்பட்ட சுருக்கங்களின் பட்டியல்
ABC Academic Bank of Credit
AI Artificial Intelligence
AC Autonomous degree-granting College
AEC Adult Education Centre
API Application Programming Interface
AYUSH Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy
B.Ed. Bachelor of Education
BEO Block Education Officer
BITE Block Institute of Teacher Education
BoA Board of Assessment
BoG Board of Governors
BRC Block Resource Centre
B.Voc Bachelor of Vocational Education
CABE Central Advisory Board of Education
CBCS Choice Based Credit System
CBSE Central Board of Secondary Education
CIET Central Institute of Educational Technology
CMP Career Management and Progression
CoA Council of Architecture
CPD Continuous Professional Development
CRC Cluster Resource Centre
CWSN Children With Special Needs
DAE Department of Atomic Energy
DBT Department of Biotechnology
DEO District Education Officer
DIET District Institute of Education and Training
DIKSHA Digital Infrastructure for Knowledge Sharing
DSE Directorate of School Education
DST Department of Science and Technology
ECCE Early Childhood Care and Education
EEC Eminent Expert Committee
GCED Global Citizenship Education
GDP Gross Domestic Product
GEC General Education Council
GER Gross Enrolment Ratio
GFR General Financial Rule
HECI Higher Education Commission of India
HEGC Higher Education Grants Council
HEI Higher Education Institutions
ICAR Indian Council of Agricultural Research
ICHR Indian Council of Historical Research
ICMR Indian Council of Medical Research
ICT Information and Communication Technology
IDP Institutional Development Plan
IGNOU Indira Gandhi National Open University
IIM Indian Institute of Management
IIT Indian Institute of Technology
IITI Indian Institute of Translation and Interpretation
ISL Indian Sign Language
ITI Industrial Training Institute
M.Ed. Master of Education
MBBS Bachelor of Medicine and Bachelor of Surgery
MERU Multidisciplinary Education and Research Universities
MHFW Ministry of Health and Family Welfare
MHRD Ministry of Human Resource Development
MoE Ministry of Education
MOOC Massive Open Online Course
MOU Memorandum of Understanding
- Phil Master of Philosophy
MWCD Ministry of Women and Child Development
NAC National Accreditation Council
NAS National Achievement Survey
NCC National Cadet Corps
NCERT National Council of Educational Research and Training
NCF National Curriculum Framework
NCFSE National Curriculum Framework for School Education
NCFTE National Curriculum Framework for Teacher Education
NCIVE National Committee for the Integration of Vocational Education
NCPFECCE National Curricular and Pedagogical Framework for Early Childhood Care and Education
NCTE National Council for Teacher Education
NCVET National Council for Vocational Education and Training
NETF National Educational Technology Forum
NGO Non-Governmental Organization
NHEQF National Higher Education Qualifications Framework
NHERC National Higher Education Regulatory Council
NIOS National Institute of Open Schooling
NIT National Institute of Technology
NITI National Institution for Transforming India
NPE National Policy on Education
NPST National Professional Standards for Teachers
NRF National Research Foundation
NSQF National Skills Qualifications Framework
NSSO National Sample Survey Office
NTA National Testing Agency
OBC Other Backward Classes
ODL Open and Distance Learning
PARAKH Performance Assessment, Review and Analysis of Knowledge for Holistic development
PCI Pharmacy Council of India
PFMS Public Financial Management System
Ph.D Doctor of Philosophy
PSSB Professional Standard Setting Body
PTR Pupil Teacher Ratio
R&I Research and Innovation
RCI Rehabilitation Council of India
RPWD Rights of Persons with Disabilities
SAS State Achievement Survey
SC Scheduled Caste(s)
SCDP School Complex/Cluster Development Plans
SCERT State Council of Educational Research and Training
SCF State Curricular Framework
SCMC School Complex Management Committee
SDG Sustainable Development Goal
SDP School Development Plan
SEDG Socio-Economically Disadvantaged Group
SEZ Special Education Zone
SIOS State Institutes of Open Schooling
SMC School Management Committee
SQAAF School Quality Assessment and Accreditation Framework
SSA Sarva Shiksha Abhiyan
SSS Simple Standard Sanskrit
SSSA State School Standards Authority
ST Scheduled Tribe(s)
STEM Science, Technology, Engineering, and Mathematics
STS Sanskrit Through Sanskrit
SWAYAM Study Webs of Active Learning for Young Aspiring Minds
TEI Teacher Education Institution
TET Teacher Eligibility Test
U-DISE Unified District Information System for Education
UGC University Grants Commission
UNESCO United Nations Educational, Scientific and Cultural Organization
UT Union Territory
VCI Veterinary Council of India
****
அனைவரின் சார்பாக,
விழியன்
ஆகஸ்ட் 03,2020
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Really we appreciate your team for this tedious work of translating NEP 2020… KUDOS TO ALL THOSE WHO INVOLVED IN THIS MARVELLOUS WORK..
சிறந்த பணி, மொழி மாற்ற உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👌👌👏👏👍👍
நன்றி நன்றி மிக்க நன்றி உங்க குழுவிற்கு 🙌🙌..
அவசியமான ஒன்று சரியான நேரத்தில் வெளி வந்திருப்பது மகிழ்ச்சி, மக்கள் படிக்க வேண்டும்
Your timely and thoughtful gesture of this Tamizh translation is Highly commendable. My heartiest appreciations and thanks to the entire team of friends who were so committed to work together in getting this translated and get to the public view.
Keep up your great service, as always!!
தமிழை வளர்க்க உதவிய என் அன்பு நிறைந்த சொந்தக்களுக்கு நன்றி