கல்வி என்பது எப்போதுமே அதிகாரத்துடன் உறவு கொண்டிருப்பதாகவே இருந்திருக்கிறது.
ஒரு சமூகத்தில் யார் அதிகாரத்தைக் கைக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் கல்வியின் விளைவுகளையும், உள்ளடக்கங்களையும் தீர்மானிக்கிறார்கள் என்கிறார் பாவ்லோ ஃபிரெய்ரே.
தற்சமயம் மத்தியில் ஆளக்கூடிய மோடி அரசாங்கத்தால் தேசிய கல்விக்கொள்கை 2020 வெளியிடப்பட்டுள்ளது. மிகத்தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மயக் கொள்கைகள் தேசிய கல்வி கொள்கையிலும் பிரதிபலிப்பது ஏதோ எதேச்சையாக அல்ல. தாராளமயமாக்கல் கொள்கையின் தீவிரமான அமுலாக்க முயற்சி கல்வியிலும் திட்டமிட்டு நடக்கிறது.
எந்த ஒரு அரசும் கல்விக் கொள்கையை உருவாக்கும் போது தன்னுடைய வர்க்க நலனை அடிப்படையாகக் கொண்டுதான் தயாரிக்கிறது. இதனையே வரலாறு நெடுகிலும் கல்வி வழங்கப்படுகிற முறை எடுத்தியம்புகிறது. எதிர்கால வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கான மிக முக்கியமான அம்சமாக கல்விக் கொள்கை அமைந்துள்ளது. நாளைய சமூகத்தை கட்டமைக்க சாதனமாக உள்ள கல்வியை வேலைவாய்ப்பு சந்தை, வர்க்க நலன் என்பதோடு ஆளும் வர்க்கம் பின்னிப் பிணைந்துள்ளது.
காலந்தோறும் கல்விக் கொள்கை…
நாம் வாழும் சமூகத்தின் பொருளாதார அடிப்படையே கல்வியின் போக்கையும், வாய்ப்பையும் தீர்மானிக்கிறது. ஆளூம் வர்க்கத்தின் நலனான கொள்ளை லாபத்திற்காகவும், உழைப்பு சந்தைக்கு தேவையான பணியாளர்களை தயார் செய்கின்ற வேலையை அரசுகளின் கல்வி கொள்கைகள் செவ்வனே நிறைவேற்றி வருகிறது.
குருகுலக் கல்வி முறை
கல்வி கற்பதற்கான அவசியத்தை எல்லா நீதி நூல்களும் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.
ஆனால் கல்வி முறை என்பது அத்தகைய தன்மையில் வடிவமைக்கப்படவில்லை என்பது விசித்திரமானது. குருகுலக் கல்வி முறையில் தமது முன்னோர்களிடமிருந்து கற்ற பாரம்பரியக் கல்வியை ஆசிரியர் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார். குருகுலத்தில் அனுமதிக்கும் முன்னர் அவனது குலம், பிறப்பு, சிறப்பியல்புகள் ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இதில் யார் படிக்கலாம்? என்ன படிக்கலாம்? என்பதை தீர்மானிப்பதில் சாதிய படிநிலை முழு ஆதிக்கத்தை செலுத்துகிறது.
இதனால் உயர் சாதியினரும், ஆளும் வர்க்கத்தினரின் வாரிசுகளும் மட்டுமே கல்வி பயில்வதற்கான வாய்ப்பையும் சூழலையும் பெறுகின்றனர். இக் கல்விமுறை வேத கலாச்சாரமும், பண்பாட்டையும் கற்றுத்தர கூடிய இடமாக இருந்துள்ளன. தொழில் கல்விக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்திய சமூகம் பின்பற்றி வந்த சாதிய பாகுபாட்டை பாதுகாக்கக்கூடிய முறையிலேயே குருகுலக்கல்வி அடிப்படையில் அமைந்துள்ளது. சத்வ குணம் கொண்டவரே ஆசிரியராக இருக்க முடியும் என்று சாதியை மையப்படுத்தியே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்து பிறக்கும்போதே தொழிலோடு பிறக்கிறார். எனவே எல்லோருக்கும் கல்வி தேவையில்லை என்ற புரிதலும் பயிற்றுவிக்கப்படுகிறது.
பெளத்த கல்வி
இந்தியாவில் பெளத்த கல்வி என்பது இருந்து வந்துள்ளது. இக்கல்வி முறை பெளத்த மதக் கோட்பாடுகளையும், தொழில் கல்வியையும் வழங்கியுள்ளது. பெளத்தமத கல்வி முறையில் சாதி, மத பேதமற்ற எல்லோருக்கும் கல்வி என்ற வகையில் நடைபெற்று உள்ளது ஆனாலும் புத்தரின் கொள்கைப்படி பெண்கள் ஆண்களுக்கு கீழாக மதிக்கப்பட்ட மையால் ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று சின்னங்களாக வல்லபி,நாளந்தா போன்ற பௌத்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. இக்கல்வியிலும் சிறிய பிரிவினரே கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.
சமணக்கல்வி
கல்விச் சாலைகளை பள்ளி என்று குறிப்பிடுகிறோம். பள்ளி என்பது சமண பள்ளிகளையே குறிக்கிறது. இது கற்றல் நடைபெற்ற இடங்களை குறிப்பதற்காக சமணர்கள் பயன்படுத்திய வார்த்தையாகும். இந்திய சமூகத்தில் சமணக்கல்வி ஒரு பன்முக தன்மை வாய்ந்ததாக உள்ளது.
வீடுபேறு அடைவதையே சமணர்கள் வாழ்க்கையின் நோக்கமாக கொண்ட னர்.
இவர்களது கல்வியும் அதனை நோக்கி வழிப்படுத்துவதாகவே அமைந்தது.
துறவிகள் மட்டுமல்லாது துறவிகள் மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் கல்வியை போதித்துள்ளனர்.
சமணக்கல்வி 10 ஒழுக்கங்களை போதித்ததுடன் ஆன்மிகம் கல்வியாக மட்டுமின்றி,
மொழி,கணிதம், வானசாஸ்திரம், அறிவியல், வானியல், இயற்பியல், உளவியல், ஆய்வியல், வாழ்விய,தர்க்கவியல் போன்றவற்றையும் கற்றுத் தந்துள்ளனர். இதில் கருத்துக்களை ஆராய்ந்து உண்மை தன்மைகளை கொண்டு வருகிற ஆக்கவியல் கல்வியாக அமைந்துள்ளது. கல்வியில் விவாதத் திறன், திரும்ப கூறுதல், வேறுபாடுகள், ஒப்பிட்டறிதல், பகுத்தறிவு என்று ஏட்டுக் கல்வியாக மட்டும் அமையாது. மன, புலன் பயிற்சியையும் உள்ளடக்கியது.
இஸ்லாமியக் கல்வி முறை
இந்தியாவில் இஸ்லாமிய ஆரம்ப கல்வியை புகட்டும் நிறுவனங்கள் மக்தாபுகள், உயர் கல்வி நிறுவனங்களாக மதரசா எனப்படும். பாடத்திட்டங்கள் என்பது மதச் சார்புடைய கல்வி, உலக வாழ்க்கைக்கான கல்வி என இரண்டு பிரிவாக அறிவு புகட்டப்பட்டது. கல்வி முறையில் மாணவர்களுக்கு தண்டனையும் இருந்துள்ளது. இஸ்லாமிய மன்னர்கள் பெண் கல்விக்கு ஆதரவு அளித்துள்ளனர் இதனால் அரச பரம்பரை மகளிர் கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நிலப்பிரபுத்துவ காலம்
பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து உருவான கல்வி முறையும், ஆய்வு முறையும், விவாதங்களும், உலகத்தை பார்வையும், கண்டுபிடிப்புகளும், அறிவியல் ரீதியாக மனித சிந்தனையை வளர்த்தெடுத்தது. இந்த வளர்ச்சி சமூக அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இது பதினெட்டாவது நூற்றாண்டுகளுக்கு பின்பு நிலப்பிரபுத்துவ முறையை தகர்ப்பதில் அறிவியல் முக்கியமான பங்கினை வகித்தது. அதிகாரத்தை மன்னர்களிடமிருந்து உற்பத்தி மையங்களுக்கு மாற்றியதுடன் , நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு அடித்தளத்தை உருவாக்கி கொடுத்தது
காலனிய பிரிட்டிஷ் காலத்தில்..
இந்திய நாட்டில் வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் நாட்டை ஒட்டுமொத்தமாக தன்னுடைய அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இந்தியாவின் நிர்வாகத்திற்கும் வர்த்தக கம்பெனிகளுக்கும் தேவையான குமாஸ்தாக்களை தங்கள் நாட்டிலிருந்து தருவிப்பதை விட தேர்ந்தெடுத்து பயிற்சி அளிப்பது மலிவாக முடியும் என்பதை முதலிலேயே உணர்ந்தனர். இதன் விளைவாக இந்திய கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் பிறந்தது என்று அறிஞர் டி டி கோசாம்பி குறிப்பிடுகிறார். இந்தியவில் கல்வி கொண்டு வருவதற்கான ஆங்கிலேயர்களின் நோக்கத்தை அறியலாம். இதனால் அவர்கள் அன்னியர்களை விட வேகமாக வேலைகளை கற்றுக் கொண்டது மட்டுமன்றி நாணயமாகவும் திறமையாகவும் பணியாற்றினர். இந்திய சமூகத்தை நவீனமாக மாற்றவோ அல்லது அறிவியல் தொழில் நுட்பத்தை கற்றுத் தருவதற்காகவோ ஆங்கிலேய கல்வி முறை என்பது உருவாக்கப்படவில்லை. தனக்கு தேவையான பணியாளர்களை உருவாக்குவதற்கான திட்டமிட்ட ஏற்பாடுதான் காலனியாதிக்க கல்வியாகும். இக்காலத்தில் கல்விக்கான பல்வேறு குழுக்கள், சட்டங்கள் உருவாக்கப்பட்டது.ஆனாலும் இவர்களின் நோக்கம் காலனியாதிக்கத்தை நலனையே மையப்படுத்திய அமைந்தது.
சோவியத் கல்வி முறை
மாமேதை லெனின் தலைமையில் உருவான சோசலிச சோவியத் புரட்சி கல்வித் துறையில் மகத்தான மாற்றங்களை உருவாக்குவதற்கு வித்திட்டது. 1920 ஆம் ஆண்டு கல்விக்கான மக்கள் கமிஷன் உருவாக்கபட்டு லூனசார்ஸ்கி, குரூப்ஸ்கயா பக்ரோவ்ஸ்கி ஆகியோர் தலைமையில் இயங்கியது. 1897-ம் ஆண்டு 9 வயதிலிருந்து 49 வயது வரை படித்தவர்களின் எண்ணிக்கை ஆண்களில் 28.4 சதவிகிதமும் பெண்களில் 16.6 சதவீதம் இருந்தது. சோவியத் யூனியனின் சில பகுதிகளில் குறிப்பாக தஜகஸ்தானில் 2.3 சதவீதம் என்ற அளவிற்கு தான் கல்வி அறிவு இருந்தது.
இந்நிலையில்தான் இளைஞர்களை படியுங்கள் என்று லெனின் அறை கூவி அழைத்தார். அத்துடன் போல்ஷ்விக் கட்சி புதிய பொதுக்கல்வி முறையை ஒழுங்குபடுத்துவதில் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டது.
- கற்றுக் கொள்பவர்கள் பரந்த கல்வி அறிவை பெற்றாக வேண்டும்.
- விவசாயம் மற்றும் தொழிலை உயர்த்திட, தொழில்நுட்ப கல்வி பயின்றவர்களே உருவாக்கிட, சோசலிச சோவியத்தை உயர்தொழில் நுட்ப நிலைக்கு வளரச் செய்வது…
- வேலைகளைச் செய்ய திட்டவட்டமான விஞ்ஞான அறிவு மனிதனுக்கு தேவை…
- விஞ்ஞானத்தையும், தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி உற்பத்தி திறனை உயர்த்துவது…
- அறிவைப் பெற்று சுயேச்சையாக வளர்த்தெடுப்பது…
ஆகிய விஷயங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது . இக்கொள்கை அனைவருக்கும் கல்வியை கொண்டு சென்றது.
அது மட்டுமல்லாமல் 1934 ஆம் ஆண்டு கல்வி நிலையத்தில் படித்து நிறைவு செய்யும்போது கல்விச் சான்றுகளுடன் வேலைவாய்ப்புக்கான உத்தரவு வழங்கப்பட்டது.
கல்விக் கொள்கை உருவாக்க பட்ட 15 ஆவது ஆண்டில் இதனை சோசலிசம் தான் சாத்தியமாக்கியது. அனைவருக்கும் கல்வி என்பது மட்டுமல்ல. அனைவருக்கும் வேலை என்பதையும் சோசலிச சமூகமே உருவாக்கித் தந்தது.
பாசிச – நாசிச கல்வி முறை…
தேசிய அரசு எனும் கருத்தாக்கம் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலுக்கான ஒரு கருவியாகும். இச் சூழலில் முசோலினியின் இத்தாலிக்கும் ஹிட்லரின் ஜெர்மனிக்கும் இடையே கல்வி முறையில் உள்ள பொதுத் தன்மைகளை பார்க்க முடியும். இக்கல்விமுறையின் உருவாக்கம் என்பது தத்துவம், கருப்பொருள், பாடத்திட்டம், நடைமுறைப்படுத்துதல், ஆகிய பலவற்றில் பொதுத்தன்மை உள்ளது. தேசிய அரசுகளை உருவாக்க ஹிட்லர், முசோலினி இருவருக்கும் கல்வியை முதன்மையான கருவியாக கொண்டு உருவாக்குவதற்கு எத்தனித்துள்ளனர்.
இப் பாசிஸ்டுகள் முன்வைக்கும் கல்வி முறையில் நாட்டுப்பற்று, இனப் பெருமை, வலிமை, ஆண்மை, வீர நாயக பண்பு, ஆகியவற்றை உள்ளடங்கி இருக்கிறது பாசிஸ்ட் அரசுகளின் கல்விக் கொள்கைகள் என்பது கல்வியை மையப்படுத்துவதற்கும், பாடப்புத்தகங்களை தயாரிப்பதற்கும், ஒழுங்காற்று முறைகளை மேற்கொள்வதற்கும் வலுவான பொதுத் தன்மைகள் உள்ளது.
இந்த முசோலினி, ஹிட்லர் அரசின் இப் பொதுத்தன்மையை மத்திய மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 பிரதிபலிக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கல்விக்கொள்கையில் கல்விமுறையை மத்திய அரசின் கீழ் மையப்படுத்திடுவதற்கும், பாடத்திட்டத்தை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், ஏராளமான ஒழுங்காற்று அமைப்புகளை உருவாக்குவதற்கும் விரிவான திட்டமிடுதலை கொண்டுள்ளது. இது இயல்பிலேயே பாசிச ஆர் எஸ் எஸ்ஸின் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய பிஜேபி அரசாங்கம் உருவாகியுள்ள கல்விக்கொள்கை என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது. “கலாச்சார ரீதியாக உயர்ந்த” என்று உயர்த்திப் பிடிக்கிற மாண்புகளை கற்றுக் கொடுப்பதற்கான தீவிர திட்டங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது . அதன் முன்னுரையிலேயே “பழமையான, நிரந்தரமான, இந்திய ஞானம் மற்றும் சிந்தனை ஆகியவற்றின் பலமான பாரம்பரியமே, இந்தக் கொள்கையை உருவாவதற்கான வழிகாட்டும் விளக்காக இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பின் இந்திய கல்வி…
வீரம் தெரிந்த காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மகத்தான விடுதலையை நாடு பெற்றது. நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில் ” நம் கனவு நனவாகப் போகிற தருணத்தில் உள்ளோம் “. இன்னும் பத்தாண்டு காலத்தில் அனைவருக்கும் கல்வி என்பது எட்டும் என பிரதமர் நேரு பேசினார். சுதந்திரம் அடைந்தபின் கல்வித்துறையில் பல்கலைக்கழக கல்விக்குழு ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டு சிறந்த வாழ்க்கை அமைய வேண்டுமாயின், சிறந்த தரமான கல்வியினை பள்ளியில் வழங்க வேண்டும் என்பதில் துவங்கி பல அம்சங்களை பரிந்துரைத்தது. விடுதலைப் போராட்டத்தின் உத்வேகம் சில முயற்சிகளை உருவாக்கியது.
1952- 53 ஆம் ஆண்டில் டாக்டர் லட்சுமண முதலியார் தலைமையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது கல்வி குழு தனது அறிக்கையில் கல்வி முறை ,வளர்ச்சி, குறை ,நிறைகளை குறிப்பிடப்பட்டது. சிறந்த குடிமகனை உருவாக்குதல், தொழில் திறன், தலைமை பண்பை வளர்த்தல் ஆகிய முதன்மைக் குறிக்கோளாக கொண்டது. இதிலும் சில முயற்சிகள் இருந்தது.
கோத்தாரி கல்வி குழு…
1964ஆம் ஆண்டு டாக்டர் கோத்தாரி தலைமையில் புதிய கல்விக் குழு உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. 12 சிறு குழுக்களாக பணிகளை மேற்கொண்டது. இதுதவிர 7 செயற் குழுக்களும் நியமனம் செய்யப்பட்டனர். இக்கொள்கை விரிவான முறையிலே உருவாக்கப்பட்டதாகும். இன்றைக்கும் இந்த கல்விக் கொள்கையில் உருவாக்கப்பட்ட பல அம்சங்கள் அமுலாக்கப்படவில்லை. கல்வி என்பது சமூக முன்னேற்றத்திற்கான சேவையாகும். இத்தகைய பிரதான குறிக்கோள் என்பது எட்டப்படாமல் நீடித்து வருகிறது. இக்கொள்கை அமல் ஆக்குவதற்கு பிரதானமான தேவை நிதி ஒதுக்கீடாகும்.
அந்த நிதியை ஒதுக்குவதற்கு ஆளுகின்ற அரசும், அதன் வர்க்கமும் தயாராக இல்லை.
இன்றைக்கும் புதிய கல்விக் கொள்கையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோத்தாரி கமிஷன் கல்வி குழுவின் பரிந்துரை முன்வைக்கின்றனர்.
கடந்த 6 ஆண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி அரசாங்கமும் இதனை அமலாகவில்லை. ஏனெனில் ஆளும் வர்க்கத்தின் விருப்பமாக எல்லோருக்கும் கல்வி என்பது இல்லை .
தாராளமய சூழலில் கல்வி
உலகில் உருவான புதிய மாற்றம் தாராளமயமாக்கல் கொள்கைகள் ஆகும். கல்வி என்பதை வியாபாரப் பொருளாக நவீன ஏகாதிபத்திய உலகமய, தாராளமய கொள்கைகள் கொண்டு வந்தது. இக்கொள்கைகளின் அடிப்படை முதலாளித்துவ லாப வெறி என்பதை மறைக்க முடியாது. இதனை மையப்படுத்தி 1986ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை என்பது உருவாக்கப்பட்டது. இதில் தொழில்நுட்பமும், நிர்வாக கல்வியும் புதிய அம்சங்களாக கொண்டுவரப்பட்டது.
இத்தனை கல்விக்கொள்கையில் நாட்டில் தொடர்ந்து அமலாக்கப்பட்ட பிறகும்கூட கல்வியில் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பையும், சூழலையும் உருவாக்கித் தரவில்லை.
எனவே கல்வி உரிமைச் சட்டம் 2009 உருவாக்கப்பட்டது. இச் சட்டத்திலும் ஏராளமான குறைபாடுகள் உண்டு.
ஆனாலும் இந்திய விடுதலையின் நோக்கமாக கல்வியில் வாய்ப்பு அனைவருக்குமாக கிடைக்காத நிலையே நீடிக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டும், கல்விக்கான வரி என்பது கூடுதலாக வசூலிக்கப்பட்டும் எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய ஒன்றாக கல்வி மாறவில்லை. இதற்கு ஆளும் அரசுகளின் நவ தாராளமயமாக்கல் கொள்கை மிக முக்கியமான காரணமாகும்.
இந்திய சிந்தனையாளர்கள் புத்தர், திருவள்ளுவர், காந்தி, தாகூர், அம்பேத்கர், பெரியார், பாரதி உள்ளிட்ட பல தலைவர்கள் கல்வி சார்ந்த சிந்தனைகளை முன்வைத்துள்ளனர்.
இந்தியக் கல்விமுறை என்பது ஒவ்வொரு காலத்திலும் பல்வேறு தன்மைகளை கொண்டதாகவே இருந்து வந்துள்ளது. ஒரே முறையோ, ஒரே வடிவமோ எக்காலத்திலும் பின்பற்றப்படவில்லை.
இது பன்முகத் தன்மை இருந்து வந்துள்ளது.
போலி முழக்கம்…
இந்தியாவின் இருபத்தியாராம் நூற்றாண்டில் முதல் கல்வி கொள்கை என்ற கவர்ச்சிகரமான முழக்கத்தை முன் வைக்கின்றனர். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக அல்ல. இக்கல்வி கொள்கை “வேலை தருபவர்களை உருவாக்குவதுதான்” நோக்கம் என பிரதமர் மோடி அவர்கள் அறிவித்திருக்கிறார். நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.
தொழில் புரட்சியின் நான்காம் கட்டமாக வர்ணிக்கப்படுகிறது இதற்கு தேவையான பணியாளர்களை உற்பத்தி செய்வதற்கு அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டியுள்ளது.
அதைத்தான் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக மோடி அரசும் தற்சமயம் மேற்கொண்டு வருகிறது.
இக் கல்விக்கொள்கையில் அறிவுசார் தளங்களில் உலகம் மிக விரைவான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. பெரும் தரவு, இயந்திர வழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, உள்ளிட்ட அம்சங்களை முன்வைக்கிறது. இக்கொள்கையில் தனித்திறன் தேவையில்லாத பல்வேறு பணிகள் இயந்திரங்களால் செய்யக் கூடியதாக மாறிவிடும் என்று குறிப்பிடுவதுடன்,
அறிவியல், சமூக அறிவியல் மானுடவியல் , கணிதம், கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் ஆகியவற்றின் பல்துறை கூட்டு திறன்கொண்ட பணியாளர்களுக்கான தேவை அதிக அளவு ஏற்படும் என்று முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளனர்.
அதனடிப்படையில் தேசிய அரசு மற்றும் ஏகாதிபத்திய அரசு ஆகிய இரண்டிலும் உள்ள கொள்கை உருவாக்க அடிப்படையில் தனது அரசு உரிமை அதிகாரம், மேலாதிக்கம் ஆகியவற்றை பயன்படுத்தி 2030-2040 வருடங்களில் உள்ள எதிர்கால உழைப்பு சந்தையின் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஏற்றவகையில் வடிவமைத்துள்ளனர்.
புதிய சூழலில் வேலைவாய்ப்பு…
உலகம் முழுவதும் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏராளமான மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இதனால் வேலைவாய்ப்பு மிகுந்த நெருக்கடி உள்ளதாக மாறியுள்ளது
2014ஆம் ஆண்டு பில்கேட்ஸ் அவர்கள் ” தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், தற்சமயம் பணியாற்றக்கூடிய தொழிலாளர் திறன்களின் தேவை என்பது தற்போது உள்ளதை விட எதிர்காலத்தில் குறைந்த திறன் கொண்டவர்களாக இருந்தால் போதுமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன் முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க் “தொழில்நுட்ப வேலையின்மை என்பது 21 ஆம் ஆண்டில் உலகத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்”. இத்துடன் தானியங்கி மயமாக்கம், இயந்திர மனிதர்களுடைய வருகை, செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், பெரும் தரவு ஆகியவற்றின் காரணமாக வேலைவாய்ப்பு மேலும் மேலும் சுருங்க கூடியதாகும்.
இப்போது உள்ள வேலையில் 75 சதவீதத்தை வெட்டி குறைப்பதாகும் அமையும் என மதிப்பிடப்படுகிறது தற்சமயம் உள்ள வேலைகளில் 47% எதிர்காலத்தில் காணாமல் போய்விடும்.
தொடர்ந்து செய்யக்கூடிய ஓரே மாதிரியான வேலையை செய்வது எனில் அவ்வேளை எதிர்காலத்தில் இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள்.
உலகமயம் உருவாக்கிய தகவல் தொழில்நுட்ப யுகம் பயன்பாடு என்பதையும் தாண்டி தொழில்நுட்ப புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உருவாக்கும். இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பணியாற்றக்கூடியவர்களை (tele migration) அதிகரிக்கும். இத்துடன் தொழில்நுட்ப வளர்ச்சியால் வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள், விற்பனை பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பணிகளை செயற்கை நுண்ணறிவு, தானியங்கி இயந்திர மனிதர்களின் துணையோடு செய்வதற்கான முறையில் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. இதனால் தொழில் நுட்பம் வேலை வாய்ப்பை விட வேகமாக வளர்ந்து வருகிறது.
இயந்திர மனிதர்களின் வருகை…
இயந்திர மனிதர்களின் வருகை மற்றும் தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகள் இல்லாத எதிர்காலத்திற்கான சவாலாக மாறியுள்ளது. இது குறித்து 1858ஆம் ஆண்டு காரல்மார்க்ஸ் தன்னுடைய அரசியல் பொருளாதாரத்திற்கான ஓரு கருத்துரையில் எனும் நூலில் “இயந்திர பொறியமைவிற்கு தொழிலாளி உயிருள்ள ஒரு உதிரி இணைப்பாக மாறி விடுகிறார்”.
இந்நிலையில் அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களின் வளர்ச்சியில், எதிர்கால வேலைவாய்ப்பு சந்தைக்கு எத்தகைய திறன் வாய்ந்த மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்? அதனை எப்படி உருவாக்குவது? என்பதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கை என்பது முன்வைக்கப்படுகிறது.
ஒருபுறம் பல்வேறு திறன்களை கொண்ட வல்லுனர்களையும், மறுபக்கம் குறைந்த திறன்களை மட்டும் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களையும் உருவாக்குவதற்கு ஏற்ப கல்விக் கொள்கை என்பது சந்தையின் தேவையை ஒட்டி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு சுகாதார பணியாளர்கள், தரவு ஆய்வாளர்கள், தகவல் பொறியாளர்கள் மற்றும் நிரலாளர்கள், இணைய பாதுகாப்பு படையினர், விற்பனை ஆலோசகர்கள், இயந்திர மனிதர்களை பராமரிக்க மற்றும் நிரலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாற்று ஆற்றல்துறை வல்லுனர்கள், ஓவியர்கள், பொருட்களை வடிவமைப்பவர்கள், உருவாக்குவது மற்றும் விற்பனை செய்பவர்கள், ஆன்மீக ஆற்றுபடுத்துவர்கள் ஆகியோர் சந்தைக்கு தேவைப்படுகின்ற பன்முகத் திறன் வாய்ந்த பிரிவினர்கள் ஆவார்.
சுதந்திரம் பெற்ற போது ஐடிஐ, அதன்பின்னர் பாலிடெக்னிக்,தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளையும் உருவாக்கியது. தற்சமயம் ஆளும் அரசு பல்துறை கூட்டு திறன்கொண்ட பணியாளர்களை பயிற்றுவிக்க கூடிய ஐஐடியை கட்டுவதற்கு தான் முக்கியத்துவம் தருகிறது.
இதிலிருந்து கல்விக்கொள்கை நடைபாதை எதை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பளிச்சென வெளிப்படுத்துகிறது.
கற்பித்தல் முறை…
இன்றைய புதிய சூழலில்
என்ன கற்பது?
எப்படி கற்பது?
யாருக்காக கற்பது?
அம்சங்கள் முன்னுக்கு வந்துள்ளன.
இதனை மையமாகக் கொண்டு பார்த்தால் “எங்கிருந்தாலும் மூலதனத்தின் தேவைகளுக்கு அந்த நபரை சித்தப்படுத்துவதற்கான உரிய கல்வியை வழங்கும்” என்ற பேரா.பிரபாத் பட்நாயக் கூறுகின்றது பொருத்தமாக அமைகிறது.
எனவேதான் இக்கொள்கையை அமுலாக்குவதற்கு அதிகாரம் கூடுதலாக தொழிற்படுகிறது. ஆரம்பத்தில் கருத்து கேட்க மறுத்த அரசாங்கம் வலுவான நிர்ப்பந்தங்களும், போராட்டங்களும் எழுந்த பின் கருத்து கேட்க வந்தது
ஆனால் கேட்ட ஒட்டுமொத்த கருத்துக்களையும் புறக்கணித்துவிட்டு பாராளுமன்றத்தில் கூட விவாதிக்காமல் அமல்படுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கையில் பிரதானமான குறைபாடு என்பது எல்லாரையும் உள்ளடங்கிய கல்விக் கொள்கையாக இல்லாமல் பல்வேறு பிரிவினரையும் வெளியே தள்ளுகிறதாக அமைந்துள்ளது. இதனால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்ற குரல் வலுவாக எதிரொலிக்கிறது. குருகுல கல்வி முறையை போல தொழில் கல்வியை கொண்டு வரவும் இக்கொள்கை தீவிரமாக அமுலாக்கப்படுகிறது . எதிர்கால வேலை வாய்ப்பு சந்தைக்கு தேவையான குறைந்த தொழிலாளர்களை வழங்குவதற்கான முறையிலேயே ஏராளமான தேர்வுகளை கொண்ட வடிகட்டி முறை உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வு என்பது மாணவர்களை மதிப்பீடு என்பதற்கு மாறாக கல்வியில் இருந்து வெளியேற்ற ஏற்படாக மாற்றுகிறது.
கற்றல் என்பது எப்படி?
கற்றல் என்று வரும்போது இரண்டு வழிகளை முன்மொழிகிறது. ஒன்று ஆசிரியர் மூலமாகவும், மற்றொன்று மெய்நிகர் வழியாகவும் வழி காட்டுகிறது. முதல் வழிமுறைதான் கல்வி சமுக பகிர்வை எதிர்கால தலைமுறைக்கு வழங்கும். ஏற்றத்தாழ்வு மிக்க இந்திய சமூக அமைப்பில் நவீன தொழில்நுட்ப முறையில் கற்கும் மெய்நிகர் வகுப்பறை (virtual classroom) என்பது பாரபட்சம் ஆனதாகவும், பாகுபாடு நிறைந்ததாகவும் அமைந்திருக்கும். எனவே இதில் புறக்கணிப்பு தான் மிகுந்திருக்கும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எதிர்கால வேலைவாய்ப்புக்கு ஏற்ற முறையில் கல்விக் கொள்கையை உருவாக்குவது, கல்விக் கொள்கைகள் முலம் கல்வித்துறையில் உருவாகும் வேலைவாய்ப்புகளை பரீசிலிப்பதும் முக்கியமான இரண்டாவது அம்சமாகும்.
கல்வியில் வேலைவாய்ப்பு…
உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய துறையில் கல்வித்துறையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கல்விக் கொள்கையின் வாயிலாக 6 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிதி ஒதுக்கீடு இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது . ஆனால் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகளில் இதுவரை சரி பாதி அளவு கூட ஒதுக்க வில்லை என்பதுதான் நிதர்சனமாகும். நிதி ஒதுக்கீடு இல்லாமல் இக்கொள்கை அமல்படுத்த முடியாது.
எனவே அரசு தனியார் கூட்டு பற்றி பேசுகிறார்கள் இதனால் பெரும் பகுதி மக்களுக்கு எவ்விதமான பலனும் ஏற்படப்போவதில்லை. தனியார்கள் பங்களிப்பு என்று வரும்போது இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி பறிக்கப்படும் என்பதுதான் எதார்த்தமான நிலை ஆகும்.
இக்கல்விக் கொள்கையின் மூலமாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் என்பது ஒன்று “தன்னார்வலர்கள்” காவல்துறையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மூலமாக சேவாபாரதி சார்ந்தவர்கள் செயல்பட்டதை போல தான் இருக்கும். கல்வி வழங்க தன்னார்வலர்கள் இந்த பணிகளில் ஈடுபடுவார்கள்.
தனியார் லாபம் பெற உத்தி…
அரசு கல்வி நிலையங்களில் உள்ள வளங்களை தனியார் பள்ளிகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மாற்றாக, தனியார் பள்ளி ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் ஒரு குறைந்த நேரம் பணியாற்றுவார்கள் என்பது போன்ற அம்சங்கள் புதிய பணியிடங்களை மறுப்பதாகும். மறுபுறம் அரசின் வளங்களை பயன்படுத்தி கொண்டு தனியார் நிறுவனங்கள் தன்னுடைய லாபத்தை பெருக்கிக் கொள்வதற்கான ஏற்பாடாகும்.
இதற்கு மாறாக அரசு நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பள்ளி கல்வி முறையை பலப் படுத்துவதன் மூலமாக ஏராளமான ஆசிரியர் பணியிடங்களை கல்வித் துறையிலே உருவாக்க முடியும். பள்ளிக்கல்வி 1:20, கல்லூரி கல்வி 1:12 இன்று வரையறை செய்து பணியிடங்களை உருவாக்கினால் கல்வியின் அடித்தளம் வலுவாகவும், ஆழமான கற்றல் நடவடிக்கையும், திறன் வளர்ப்பையும் மேற்கொள்ள முடியும். தற்சமயம் உள்ள நிதி ஒதுக்கீட்டில் ஒரு சதவீதம் உயர்த்தினாலேயே 50 லட்சம் வேலைவாய்ப்புகளை கல்வித்துறையில் உருவாக்க முடியும்.கடந்த சில ஆண்டுகளின் முயற்சியில் கேரளாவில் 5 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருக்கி விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இத்துடன் கல்விமுறையை 10 +2 +3 என்று இருப்பதை 5+3+3+4 முற்றிலும் மாற்றியமைப்பது, கல்வி வளாகம் அமைப்பது போன்றவை ஆசிரியர் பணியிடங்களை உருவாக்குவதை தவிர்ப்பதற்கான அம்சங்களே ஆகும். இந்த அம்சம் கல்வி வளர்ச்சியிலும், கல்வி துறையிலுள்ள வேலைவாய்ப்பிலும் மிகப்பெரிய பின்னடைவாக அமையும். புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக சமஸ்கிருத ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலான எண்ணிக்கையில் உருவாக்கப்படும். யாருக்கு பலன் என்பதை வெட்டவெளிச்சமாக அறியமுடியும்.
அதேபோல இக்கல்வி கொள்கை முன்வைக்கக்கூடிய மெய்நிகர் வகுப்பறை என்பது தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தும் வாய்ப்பினை உருவாக்கும். கடந்தகாலங்களில் கல்வியின் வாயிலாக கிடைக்கப்பெற்ற வேலை வாய்ப்புகளும்,
இக் கொள்கையினால் மறுக்கப்பட்டு பின்னோக்கி இழுத்து செல்லும் நிலைமை உருவாகும்.
இன்றைய தேவை
ஒரு நாட்டின் எதிர்காலத்தை வகுப்பறை தீர்மானிக்கும் என்பார்கள். எல்லோருக்கும் கல்வி கற்பதற்கான சமமான வாய்ப்பை உருவாக்குவதற்கும், அதன்மூலம் சிந்தனை ரீதியாகவும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். எல்லோருக்கும் விஞ்ஞானபூர்வமான, இலவசமான கல்வி கிடைப்பதற்கு முழு முயற்சியும் தேவையாகிறது. மனிதவளம் செழிப்புள்ள நமது நாட்டில் அதனை கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக வளர்த்தெடுத்து, சமூகத்தின் சகல பகுதியினரும் வளமான வாழ்க்கை வாழ்வதற்கான கல்விக் கொள்கையை இன்றைய தேவையாகும். சுதந்திர போராட்ட காலத்தில் உருவான விடுதலை வீரர்களின் கனவு நனவாக இக்கொள்கை தேசிய கல்வி கொள்கை 2020 ஒருபோதும் உதவாது.
எனவே தான் , மத்திய மோடி அரசாங்கம் உருவாகியுள்ள இக்கல்வி கொள்கை என்பது ஆலால விஷம் தோய்ந்த கொடும் அறிக்கையாகும்.