தேசிய கல்விக் கொள்கை (National Education Policy): பொய் சொல்லும் ஒன்றிய அரசு! - பி.எம் ஸ்ரீ (PM SHRI) திட்டம் | சிக்க்ஷா

தேசிய கல்விக் கொள்கை: பொய் சொல்லும் ஒன்றிய அரசு! – ஆயிஷா இரா. நடராசன்

*பொய் சொல்லும் ஒன்றிய அரசு!

இன்று தேசிய அளவில் முக்கியமான ஒரு விவாதம் கிளப்பி விடப்பட்டுள்ளது. நன்றி தமிழக எம்பிக்கள்!

இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும்..

தேசிய கல்விக் கொள்கை எனும் மக்கள் விரோத வர்ணாசிரமக் கல்விக் கொள்கை குறித்த விழிப்புணர்வு இப்போதாவது இந்தியா முழுவதும் ஏற்பட்டால் நல்லது..

தற்போதுள்ள சூழலில் வரிந்து கட்டிக்கொண்டு தமிழக அரசை மிகக் கேவலமாக பேசுகின்ற தமிழகத்தினுடைய எதிர்கட்சிகளை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது..

பேரறிஞர் அண்ணா இருந்திருந்தாலே முன்மொழிக் கொள்கையை ஆதரித்திருப்பார் என்றெல்லாம் பேசுகிறார்கள்..

ஒன்றிய அரசுக்கு ஆதரவாக இல்லாமல் போனால் என்ன ஆகும் என்கின்ற தொடை நடுங்கிகளாக இவர்கள் இருக்கிறார்கள்..

இந்த விஷயத்தில் நாம் தமிழக அரசை பாராட்டியே ஆக வேண்டும்

மத்தியில் அவர்கள் கொண்டு வருகின்ற இந்த கல்விக் கொள்கையினால் இந்தியாவில் ஏற்கனவே கல்வி அழிந்து கொண்டிருக்கிறது பீகார் மாநிலத்தில் 2 கோடி குழந்தைகள் கல்வியை விட்டு வெளியேறி விட்டன..

என்ன செய்வது என்று தெரியாமல் வங்காள ஆட்சி இன்றைக்கு விழி பிதுங்கி நிற்கிறது.

இன்னும் யுஜிசி -யின் தற்போதைய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டால் கல்லூரி கல்வி என்பது கூட பெரிய கனவாக தான் மாறப்போகிறது..

ஏற்கனவே இருக்கின்ற நல்ல கல்வியை முடிவுக்கு கொண்டு வந்து பழையபடி கல்வியை யார் யாருக்கு தரவேண்டும் என்கிற வரையறையை உருவாக்குவது தான் புதிய கல்வித் திட்டத்தின் சதி.. என்பதை நாம் எளிதில் அம்பலப்படுத்த முடியும்..

எல்கேஜி, யுகேஜி குழந்தைகளின் பாட புத்தகத்தில் கூட மோடி தான் பக்கத்துக்கு பக்கம் சிரித்துக் கொண்டிருக்கிறார்

ஆர்எஸ்எஸின் நூற்றாண்டான இந்த ஆண்டில் எப்படியாவது வர்ணாசிரமக் கல்வியை கொண்டு வர வேண்டும் என்கின்ற தீவிர முனைப்போடு அவர்கள் களத்தில் குதித்திருக்கின்ற பொழுது இந்தியா முழுவதும் ஸ்டாலின் ஒருவர் தான் நம்பிக்கை கூறியவர் ஆக தெரிகிறார்…

இப்போது நாம் விஷயத்திற்கு வருவோம்..

ஏற்கனவே பல தோழர்கள் இதைக் குறிப்பிட்டு விட்டார்கள் இருந்தாலும் இதை திரும்ப சொல்வதில் தவறில்லை இன்னும் பல நூறு பேருக்கு புரிய வைப்பதில் தயக்கம் இல்லை..

முதலில் மத்திய அரசினுடைய புதிய கல்விக் கொள்கை எத்தகைய சரத்துகளைக் கொண்டு அறிமுகம் செய்யப்படுகிறது என்று பாருங்கள்

இது பாராளுமன்றத்தில் வைத்து பேசப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட கல்வி கொள்கை அல்ல

1968 லும்..1986 லும் அறிமுகம் செய்யப்பட்ட தேசிய கல்விக் கொள்கைகள் பாராளுமன்றத்தில் வைத்து பேசப்பட்டு அங்கே மக்கள் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிமுகம் ஆயின..

அப்போது கூட தமிழ்நாடு முன்மொழிக் கொள்கைகளை ஆதரிக்கவில்லை..

தமிழ்நாட்டில் அதை கண்டிப்பாக நீங்கள் அமல்படுத்த வேண்டும் என்று நிதி ஆதாரங்களை நிறுத்தியதாக இதுவரை வரலாறு இல்லை..

சத்துணவு திட்டம் முதல் லேப்டாப் வழங்கும் திட்டம் வரை பல தமிழக மக்களின் தார்மீக ஆதரவு பெற்ற கல்வித் திட்டங்களை இந்தியா முழுவதும் அவர்கள் காப்பி அடித்தது தான் வரலாறு..

இப்போது கூட முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்த காலை உணவுத் திட்டத்தை யாரெல்லாம் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடு

தமிழும் ஆங்கிலமும் கற்றுக்கொண்டு இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு தெரியும் இரு மொழி கொள்கை எத்தனை பெரிய வெற்றி என்று…

உலக வங்கி நான்காவது முறை கொடுக்கப்பட்ட அத்தனை பணத்தையும் வாங்கிக் கொண்ட மத்திய அரசு இன்றைக்கு தார்மீக முறையில் நமக்கு வரவேண்டிய அந்த தொகையை கொடுக்காமல் அரசியல் செய்து கொண்டு ஆனால் அரசியல் நாம் தான் செய்கிறோம் என்று நம் மீது பழி போடுகிறது

என்ன நடந்திருக்கிறது என்பதை பாருங்கள்..

தோழர் பிரின்ஸ் மற்றும் ஷாஜகான் போன்றவர்களின் சொற்களை எடுத்து பெரும்பாலும் அப்படியே தருகிறேன்

ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்குப் பள்ளிக் கல்விக்காகத் தர வேண்டிய பணத்தைத் தர மறுக்கிறது என்பதுதான் இப்போதைய சர்ச்சையின் தொடக்கம்.

ஒன்றிய அமைச்சர் என்ன சொல்கிறார்? – தேசிய கல்விக் கொள்கைப்படி மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் தருவோம் என்கிறார்.

தமிழ்நாடு அரசு இதை ஏற்க முடியாது என்கிறது.

ஏற்கெனவே ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்ன தமிழ்நாடு அரசு இப்போது மறுக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார் ஒன்றிய அமைச்சர். அதற்கான ஒரு கடிதத்தையும் காட்டுகிறார். ஏற்கெனவே ஏற்றுக் கொண்ட நீங்கள், தேசியக் கல்விக் கொள்கை குறித்த பததியை மட்டும் நீக்கி விட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயார் செய்திருக்கிறீர்கள் என்கிறார்.

இரண்டு கடிதங்களும் பேஸ்புக்கில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவரவர் அவரவருடைய அரசியல் சார்பு நிலைக்கேற்ப ஒன்றிய அமைச்சரை / திமுக அரசைச் சாடுகிறார்கள்.

இந்த விஷயத்தைக் கொஞ்சம் பின்னோக்கியும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒரு காலத்தில் சர்வ சிக்க்ஷா அபியான் என்று ஒன்று இருந்தது தெரியும் இல்லையா? பிறகு நடுநிலைக் கல்விக்காக மத்யமிக் சிக்க்ஷா அபியான் வந்தது. ஆசிரியர் கல்விக்காக ஒரு திட்டமும் இருந்தது.

இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக சமக்ர சிக்க்ஷா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது ஒன்றிய அரசு. அதாவது, மழலையர் முதல் ப்ளஸ்டூ வரையான எல்லாவற்றுக்கும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டம்.

இது 2018இல் அறிமுகமானது. இதற்கான நிதி ஒன்றியம் – மாநிலம் இரண்டும் 60 : 40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும்.

இந்த சமக்ர சிக்க்ஷா திட்டத்தின்படியான பணம்தான் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்குத் தந்து கொண்டிருந்தது.

2022இல் புதிதாக தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருகிறது ஒன்றிய அரசு.

சமக்ர சிக்க்ஷா திட்டத்தில் பி.எம் ஸ்ரீ என்றொரு திட்டத்தை அறிவிக்கிறது. அதாவது, PM Schools for Rising India. (மழலையர் பருவத்திலிருந்தே பள்ளி மாணவர்கள் மனங்களில் மோடியின் படத்தை திணிப்பதற்காகத்தான் பி எம் என்ற பெயர். அது இருக்கட்டும்)

பி.எம் ஸ்ரீ திட்டம் என்பது என்ன?

ஒன்றிய அரசின்கீழ் / மாநில அரசின்கீழ் / யூனியன் பிரதேச அரசுகளின்கீழ் / உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் – என எல்லா வகைகளிலும் இயங்கிக் கொண்டிருக்கிற பள்ளிகளிலிருந்து 14500 பள்ளிகள் தேர்வு செய்யப்படும். அந்தப் பள்ளிகளில் எல்லா வசதிகளும் செய்யப்படும்.

ஆமாம்… ஏற்கெனவே கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா என்றெல்லாம் பள்ளிகள் இருக்கின்றனவே… பிறகு எதற்கு இப்படி புதிதாக பள்ளிகள் என்று நீங்கள் கேட்கக்கூடாது.

ஏனென்றால், இவர்களுடைய வழக்கமே ஏற்கெனவே இருப்பதை ஆட்டையைப் போட்டு பெயர் மாற்றுவது. பல மாநிலங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு பி.எம் ஸ்ரீ முன்னொட்டு சேர்க்கப்பட்டு விட்டது. சரி அதுவும் இருக்கட்டும்.

சமக்ர சிக்க்ஷா திட்டத்தின்கீழ் வந்து கொண்டிருந்த பணம்தான் தமிழ்நாடு அரசுக்குச் சேர வேண்டியது என்பதைப் பார்த்தோம்.

பி.எம் ஸ்ரீ திட்டம் வந்ததும், தமிழ்நாடு அரசு ஒரு கடிதம் எழுதுகிறது. State of Tamil Nadu is very keen to sign the MoU for establishing the PM Shri Schools in the state. In this regard, a State Level Committee headed by School education secretary has been constituted. Based on the recommendations of the committee, the MoU for establishing PM Shri schools will be signed by the State.

அதாவது, பி.எம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு ஆவலாக இருக்கிறது. இது குறித்து பரிசீலிக்க கல்வித்துறைச் செயலர் தலைமையில் ஒரு கமிட்டி நிறுவப்பட்டுள்ளது. அந்தக் கமிட்டியின் பரிந்துரைப்படி, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். எனவே, 2023-24க்கு சேர வேண்டிய பணத்தை அனுப்பவும்.

திமுக அரசை குற்றம் சொல்கிறவர்கள் இதைத்தான் கையில் எடுக்கிறார்கள். கையெழுத்துப் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு, பிறகு மாட்டேன் என்று சொல்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

ஒன்றிய அமைச்சரும் இதைத்தான் சொல்கிறார். மார்ச் 15ஆம் தேதி எழுதிய கடிதத்தில் பி.எம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுகிறேன் என்று சொன்னது தமிழ்நாடு அரசு. அதன்படி ஒன்றிய கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்த வரைவை அனுப்பியது. தமிழ்நாடு அரசு, அதில் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்துவோம் என்கிற பத்தியை நீக்கிவிட்டு வரைவை அனுப்பியிருக்கிறது. –
இதுதான் ஒன்றிய அமைச்சரும் பாஜகவினரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

இங்கேதான் கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.
– தமிழ்நாடு அரசு பி.எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று சொல்லவே இல்லை.
– அதற்காக ஒரு கமிட்டி போடுகிறோம். அந்தக் கமிட்டி என்ன சொல்கிறதோ அதன்படி ஒப்பந்தம் போடுகிறோம் என்றது.
– அதன்படி, பி.எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்கிறோம். ஆனால் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திருத்தி அனுப்புகிறது.
– ஒன்றிய அரசு அனுப்பிய புரிந்துணர்வு ஒப்பந்தம் வரைவு ஒப்பந்தம்தான். வரைவு என்றாலே அது பரிசீலிக்கப்பட்டு மாற்றப்படக்கூடியது.
– ஆக, தமிழ்நாடு அரசு அந்த வரைவைப் பரிசீலித்து, தேசியக் கல்விக் கொள்கை பத்தியை நீக்கி விட்டு வரைவைத் திருப்பி அனுபபுகிறது.

இதில் எந்தத் தவறோ குழப்பமோ இல்லையே?
பி.எம் ஸ்ரீ திட்டம் என்பதை தேசிய கல்விக் கொளகையின் படித்தான் நடத்தியாக வேண்டும் என்று ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்?

தேசிய கல்விக் கொள்கை மாநிலக் கல்விக் கொள்கையைவிட சிறப்பானதா?
சிறப்பாகப் பயன் தந்திருக்கிறதா?
தமிழ் நாடு அரசு பின் பற்றுகிற கல்விக் கொள்கையினால் தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களைவிட பின்தங்கி விட்டதா?
இல்லையே?
இன்னும் சொல்லப்போனால், கல்வி உள்பட பல துறைகளிலும் – ஏன், அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு அரசு முன்னிலைதானே வகிக்கிறது?
பிறகு எதற்கு நாம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும்?

ஏன் ஏற்கச் சொல்கிறார்கள் என்றால், இந்தியைத் திணிக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வித்திட்டம் என்ற ஏகபோகத்தைத் திணிக்கவே இந்த முயற்சி. பள்ளிக் கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து ஒன்றிய அரசுப் பட்டியலுக்கு மாற்றிக் கொள்வதற்கான முதல் படி இது.

தமிழ்நாடு அரசின் 2024 மார்ச் மாதக் கடிதத்தில் we are keen to sign என்பதை சற்றே மாற்றி எழுதியிருக்கலாம் தான். ஆனாலும் அதில் அப்படி ஏதும் பெரிய சறுக்கலோ தவறோ கிடையாது.

பி.எம் ஸ்ரீ திட்டத்தின்படி பள்ளிகளை அமைப்பதை ஏற்கிறோம் – ஆனால் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் – மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் – இதுதான் தமிழ்நாடு அரசின் நிலைபாடு.

பி.எம் ஸ்ரீ திட்டம் எமக்குத் தேவையில்லை. சமக்ர சிக்க்ஷா திட்டத்தின்படி மாநில அரசுக்கு சேர வேண்டிய பணத்தைக் கொடு என்று கேட்க வேண்டும். மாநில அதிகாரத்தில் உள்ள விஷயம் குறித்து மாநிலங்களை நிர்ப்ந்திக்க ஒன்றிய அரசுக்கு உரிமை கிடையாது என்று வழக்குத் தொடுக்க வேண்டும்.

ஏனெனில் கல்வி தற்போது பொது பட்டியலில் உள்ளது.. பாராளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் அல்வா கொடுத்தது உண்மை என்றால்.. அதாவது உண்மையிலேயே எல்லா மொழிகளின் மீதும் அவர்களுக்கு தேசப்பற்று இருக்கிறது என்பது உண்மை என்றால் அவர்கள் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்..

நாங்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி தர முயற்சிப்பது மொழிவேற்பாளர்களையோ அல்லது நீங்கள் நினைப்பது போல குலத்தொழில் செய்பவர்களையோ அல்ல..

சர் சி வி ராமன் முதல் சுந்தர் பிச்சை வரை பல்வேறு அறிஞர்களையும் மாமனிதர்களையும் உருவாக்கிய எங்கள் கல்வியை நீங்கள் பின்பற்றுங்கள்..

தமிழகத்தினுடைய எதிர்க்கட்சிகளுக்கு இப்போது அடையாளம் இல்லை.. கல்வி விஷயத்தில் மக்களுக்கு துரோகம் செய்ய அவர்கள் தயாராகிறார்கள் என்றால் ஒருபோதும் அவர்களை வரலாறு மன்னிக்காது.. இந்த விஷயத்தில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று நம் தமிழ் குழந்தைகளின் கல்வியை காப்பாற்றி தக்க வைக்க ஒன்றிய அதை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும

இதுதான் தமிழகத்தின் ஒட்டுமொத்த கல்வியாளர்களின் ஒரே வேண்டுகோள்

-ஆயிஷா இரா நடராசன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. Mr.A.Muthukumar

    புதிய கல்வி கொள்கை குறித்த தங்களின் கருத்து அவசியமான ஒன்றுதான் சார். உயர்கல்வி நிறுவனங்களில் புதிய பாடத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இது குறித்து அரசின் நிலைப்பாடு மற்றும் கல்வியாளர்களின் நிலைப்பாடுகள் குறித்தும் அறிய ஆவர்த்தையும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது சார். நன்றி

  2. த.தேவராஜ்.

    புதிய கல்விக்கொள்கை குறித்த தங்களின் கட்டுரை அருமை தமிழ் மாணவர்களுக்கான பாதகங்கள் தெளிவு படுத்த பட்டுள்ளன. அருமையான திறனாய்வு. பணி தொடர வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *