இதன் உள்ளடக்கம் 4 பகுதிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது , முதல் பகுதி #பள்ளிக்கல்வி , அதில் 8 பிரிவுகள் உள்ளன. அதில் #முதல்பிரிவு பற்றி இந்தப் பதிவில் எழுதுகிறேன்.
i)#ஆரம்பகாலக்குழந்தைபராமரிப்பும்கல்வியும் : கற்றலுக்கான அடித்தளம்
இரண்டாவது பக்கத்திலேயே ஆரம்பித்து விடுகிறது ,ECCE இன் முதலீடு என்பது நல்ல , ஒழுக்கமான , சிந்தனை மிக்க , ஆக்கப்பூர்வமான மனிதராக குழந்தைகள் வளர சிறந்த வாய்ப்பை வழங்குவதற்கே என …
இந்தியாவில் கடுமையான கற்றல்
நெருக்கடி நிலவுவதாகவும் தொடக்கப் பள்ளியில் சேரும் குழந்தைகள் அடிப்படைத் திறன்களான எண் , எழுத்து கற்பதில் தவறிவிடுகின்றனர் எனவும் கூறியுள்ளது ,
மேம்பட்ட கற்றல் விளைவு சமத்துவம் ,நீதி , வேலை வாய்ப்பு போன்றவற்றிற்காக ECCE இருக்க வேண்டுமாம் .
ஒரு குழந்தை வளர்ச்சி குறித்த அடிப்படைக் கல்வி மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் அதற்கான ஆசிரியர் தயார்படுத்துதல் குறித்தும் பேசுகிறது.
NCERT இப்பருவக் குழந்தைகளுக்கு பாடத்திட்டம் உருவாக்கும் என்பதுடன் பலப்படுத்தப்பட்ட , விரிவுபடுத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் இக்குழந்தைப் பருவக் கல்வி வழங்கப்படும் என்று குறிப்பிடுகிறது எனில் , அந்த பலப்படுத்தப் பட்ட கல்வி நிறுவனங்கள் என்பவர்கள் யார் ?என்ற கேள்வி நம்முள் எழுகிறது .
இந்தியாவில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள எண்ணற்ற சிறப்பு மிக்க மரபுகள் ECCE இன் பாடத்திட்டத்திலும் கற்பித்தலிலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றால் ….? என்ன மரபுகள் என்பது புரியவில்லை. மரபு என்றாலே அறிவியல் அடிபட்டுப் போகிறதே.
அதை விட முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது , கலாச்சாரம் , குடும்பங்களின் பாரம்பரியப் பங்கு , முன்னோடிகள் தந்த பாரம்பரியப் பண்புகளைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கத் தவறியக் கடமையை நிறைவேற்றத் தேவையான வகையில் கொள்கைகள் வகுக்க வேண்டுமாம் ,
இங்கு ஒரு புறம் நம் சமுதாயம் குடும்பக் கட்டமைப்புகளில் உள்ள பிற்போக்குத்தனங்களை மாற்ற வேண்டும் என முற்போக்கு சிந்தனைகளுக்காகப் போராடி வரும் நிலையில் , இந்தக் கல்விக் கொள்கை 3 வயதிலிருந்தே குழந்தைகளை மரபிற்குள் அழுத்தி விடத் துடிகிறது.
அதே போல , எண்கள் , எழுத்துகளைக் கூட, 3 வயது சிறு குழந்தைகளுக்குக் கற்பித்தலில்
தாய் மொழியிலோ அல்லது மற்ற எந்த மொழியிலோ எப்படித் தொடர்பு கொள்வது என்பதைச் சொல்வதிலிருந்து, நாம் புரிந்து கொள்ள வேண்டும் , தாய் மொழிவழிக் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வில்லை என ..
திரும்பத் திரும்ப பல இடங்களில் பாரம்பரியம் பற்றி வருகிறது. இந்தியாவின் மிகச் சிறந்த எண்ணற்றப் பாரம்பரியங்களை
ECCE இல் விரிவாக ஒருங்கிணைப்பட்டுள்ளது என்றால் ….
பாரம்பரியத்திற்கு கல்வியில் இவ்வளவு அழுத்தம் தேவையா எனவும் நாம் சிந்திக்க வேண்டும் .
அதே போல அங்கன் வாடிகளும் தொடக்கப் பள்ளிகளும் ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது , இது இனிமேல் வருவது போலத் தோன்றவில்லை ,
தமிழக அரசு ஏற்கனவே இதை இந்தக் கல்வியாண்டில் கொண்டு வந்து விட்டது என்பதை நாம் இதோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
தரமிக்க தொடக்க நிலைக் குழந்தமைக்கல்வியில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு அனைவருக்கும் சாத்தியமாக்குவது என்பதைக் கூர்ந்து பார்த்தால் , குழந்தைப் பருவத்தையே தேர்விற்குள் கொண்டு வர இக்கொள்கை முயலுகிறதே எனக் கோபம் வருகிறது .
இந்த மழலையர் கல்வி MHRD யின் கீழ் வரும் என்றும் , மழலையர் கல்வியும் தொடக்கப் பள்ளியும் ஒன்றிணைக்கும் திட்ட அறிக்கை தயாரித்து , நடைமுறைப்படுத்த நிதி ஒதிக்கீடு செய்யவும் 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் , மகளிர் குழந்தைகள் நல அமைச்சகம் , நலவாழ்வு ,குடும்ப நல அமைச்சகம் , மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகிய துறைகள் இணைந்து ஒரு சிறப்புக் குழு அமைத்து (1.3) …. எனக் குறிப்பிட்டிருப்பது , ஏற்கனவே எல்லாம் தயார் , யாருடைய கருத்துக்கும் இடமின்றி இவை நடக்கப் போகின்றது, 6 மாதங்கள் 2019 இல் முடிவடைந்த நிலையில் இதைத் தாமதப் படுத்த மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
கற்றல் கருவிகள் செலவு குறித்து பேசப்படுகிறது. எந்தெந்த விதமான கற்றல் கருவிகள் என இதில் ஒரு பட்டியல் தரப்பட்டிருக்கு , நாடு தழுவி ஒரே பாடத்திட்ட , புத்தக கற்பித்தல் வரும் போது இவற்றின் தயாரிப்பு சில நிறுவனங்களின் வளர்ச்சிக்கானதாக இருந்து குழந்தைகளின் படைப்பாற்ற லுக்கு இடமில்லா சூழலை உருவாக்கி , கல்வியில்
மீண்டுமொரு வணிகமய சூழலை நம் கண் முன்னே நிறுத்தும் அபாயம் உள்ளது.
முன்பருவ மழலையர் பள்ளி ஆசிரியர்கள் தயாரிப்பு பற்றிக் கூறியுள்ளதைப் பார்க்கையில் , நிச்சயமாக புற்றீசல் போல தனியார் துறையில் பயிற்சி நிறுவனங்கள் உருவாகி , ஆசிரியரை உருவாக்கும் முயற்சியில் அசுர வேகத்தில் இயங்க ஆரம்பிக்கும்.
ஒரு புறம் மக்கள் வேலை வாய்ப்பை மனதில் கொண்டு எவ்வளவு பணம் செலவழித்தும் இப்படிப்பைத் தேர்வு செய்து , அரசுப் பள்ளி வேலைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் சூழல் உருவாகும்.
இந்த இலவச மற்றும் கட்டாய முன் மழலையர் கல்வியை கல்வி உரிமைச் சட்டத்துடன் இணைப்பது குறித்தும் பேசுவதோடு , இந்த ECCE ஐ வைக்குள் கொண்டு வருவது பற்றிப் பேசியுள்ளது ,
சேவை என்றால் புரியவில்லை .. மேலும் உலக நாடுகளில் பெரும்பாலான முன்னேறிய நாடுகளிலும் குழந்தையின் கற்றல் வயது இந்த 3 வயதில் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை நாமறிவோம் , குழந்தை உளவியலுக்கு எதிரானதாகவும், பாடத்திட்டம் , கற்பித்தல் கட்டமைப்பு தேர்ச்சி முதலிய சொற்கள் குழந்தைப் பருவத்தையே கேள்விக் குறியாக்கும் வன்முறையாகவும் தோன்றுகிறது.
அதோடு , மேலும் ஒரு ஏற்றத்தாழ்வு மிக்கக் கல்வியைத் தர பலமான அடித்தளம் போடுவதை மழலைக் கல்வியிலேயே உறுதி செய்வ தாகவும் தோன்றுகிறது.
இதைத் தயாரித்தக் குழுவில் யாரும் குழந்தைப் பருவத்தை அனுபவித்து வந்ததில்லையா எனவும் கேட்கத் தோன்றுகிறது. , எங்குமே விளையாட்டு முறைக் கல்வி என்று கூட அழுத்தம் தரப்படவில்லை.
(ECCE – Early Childhood Care and Education
NCERT- National Council of Educational Research and Training)
நன்றி: தோழர். உமா